நடப்பு சம்பாப்பருவ நடவுப்பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது.இந்த ஆண்டிற்கான நெல்கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது.மோட்டாரகம் கிலோவுக்கு ரூ 11.30 சன்னரகம் ரூ 11.80 என்றும் அறிவித்துள்ளது.இந்த விலை போதுமானது அல்ல என்று விவசாய சங்கப் பிரதிநிகள் வழக்கம் போல கூறியுள்ளனர்.
மேலே கண்ட அம்சங்களை கொண்டு திட்டமிட்டால்
நடப்பு சம்பா பருவத்தில் 1 ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ 14.500/- வரை செலவாகிறது.அதாவது 1 கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ6.70 செலவாகிறது.உற்பத்தி செலவை விட தமிழக அரசு மோட்டா ரகத்திற்கு ரூ4.60,சன்னரகத்திற்கு ரூ5.10 என்றும் கூடுதலாக விலை தருகிறது.ஆனால் விவசாயிகள் சார்பில் பேசுவோர் ஒரு குவிண்டாலுக்கு ரூ 2100/- ரூபாயாவது தந்தால் தான் கட்டுபடியாகும். நடப்பு விலைவாசி உயர்வில் குவிண்டால் ரூ1130/- என்பது கட்டுபடி ஆகாது என்று கூறியிருக்கிறார்கள்.அதாவது கிலோவுக்கு ரூ21.00என்று விலை கேட்கிறார்கள்.
இந்தியாவில் இன்றைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கைக்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்தான்.ஆனால் விவசாயிகளை தவிர வேறு எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், தமது உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியாகும் விலைகேட்டு அரசாங்கத்திடம் கெஞ்சுவதில்லை.தமது உற்பத்தி பொருளுக்கான விலையை தாமே தீர்மானிக்கும் உரிமையை சட்டபூர்வமாகவே பெற்றுள்ளனர்.ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அரசும்,தனியாரும்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.அவர்களிடம் விவசாயிகள் கையேந்தி நிற்கிறார்கள்.
விவசாய உற்பத்தியில் விவசாயி தனது சொந்த நிலத்திலேயே கொத்தடிமையாக உழல்கிறான்.மேலும் கடன்காரனாகவும் திட்டமிட்டு ஆக்கப்படுகிறான்.தனது சொந்த குடும்ப உழைப்பு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மட்டுமே கூலியாட்களுக்கு தர வேண்டிய கூலியை தான் பெற்றுக்கொண்டு சில ஆண்டுகள் சமாளிக்கிறான்.சொந்த உழைப்பு இல்லாதவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே நிலத்தை விற்றுவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.
சொந்த உழைப்பில் விவசாயம் செய்யும் விவசாயி கூட கடனை தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலமே அடைக்கிறான்.இதற்கு எதற்கும் வசதியில்லாத விவசாயி தற்கொலையை தேர்ந்தெடுக்கிறான்.தமிழகத்து விவசாயிகளோ நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் விற்றுவிட்டு விவசாயத்திலிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.
இதையும் மீறி விவசாயம் செய்யும் விவசாயி,விவசாயம் அல்லாத வழிகளில் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவது,ஆடு,மாடு வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயத்தில் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு என்றாவது ஒருநாள் நல்லகாலம் பிறக்காதா? என்று காத்திருக்கிறான்.மொத்தத்தில் உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற விவசாயி தன்னையே இழக்கிறான்.
நடப்பு பருவத்தில் உற்பத்தி செலவை விட 1 கிலோவுக்கு கூடுதலாக விலையை அரசு தந்தும் கூட இது போதுமானது அல்ல என்று விவசாயிகள் கூறுவது சரியா? என்றுதான் சாதாரணமாக எல்லோரும் நினைக்கிறார்கள்.
விவசாயத்தில் ஆண்டு முழுவதும் ஈடுபடும் விவசாயிக்கு சம்பளம் வேண்டும் என்பதோ,நிலவாடகை,நடப்பு பருவ செலவுக்கு ஆகும் தொகைக்கு அதாவது மூலதனத்திற்கான வட்டி,ஆழ்துளை கிணறு தோண்ட செலவழிக்கப்படும் மூலதனத்தை திரும்ப எடுத்தல்,அதற்கான வட்டி,ஆழ்துளை கிணறு மின்சாதனங்கள் பராமரிப்பு இவை அனைத்திற்கு பிறகு லாபம் ஆகிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.விவசாயத்தை தவிர ஏனைய அனைத்து தொழில்களிலும் இந்த அம்சங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
மேலே கண்ட அம்சங்களை கொண்டு திட்டமிட்டால்
2011 சம்பா பருவ நெல்சாகுபடிக்கான செலவு விவரம்.
1 | .நாற்றங்கால் ஏர் | 500 |
நாற்றங்கால் அண்டை வெட்ட 1ஆள் | 150 | |
நாற்றங்கள் ஒழுங்கு செய்ய 1ஆள் | 150 | |
விதை நெல் 45 கிலோ | 900 | |
உரம் | 110 | |
2 | நடவு வயல் ஏர் | 2000 |
நாற்று பறிக்க | 1400 | |
அடியுரம் 2 மூட்டை | 1400 | |
நடவு ஆள் கூலி | 1680 | |
அண்டை வெட்ட 6 ஆள் | 900 | |
3 | மேலுரம் | 900 |
4 | களை பறிக்க | 1400 |
5 | மருந்தடிக்க | 1000 |
6 | அறுவடை செலவு (1 ½ மணி நேரம்,இயந்திரம் மூலம் | 2000 |
மொத்தம். | 14,620 |
7 | விவசாயி கூலி | 10000 |
8 | நில வாடகை | 9000 |
9 | மூலதன வட்டி(5 மாதம்) | 725 |
10 | ஆழ்துளை கிணறு மூலதனத்தை திரும்ப எடுத்தல் | 2000 |
11 | ஆழ்துளை கிணறு மூலதன வட்டி 1 போகம் | 1000 |
12 | ஆழ்துளை கிணறு பராமரிப்பு | 1000 |
13 | லாபம் 20% (மிக குறைந்த லாப விகிதம் இது) | 1861 |
14 | மொத்தம் | 40206 |
மேற்கண்ட பட்டியல் அடிப்படையில் பார்த்தால் ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ40,206/- வரை செலவாகிறது.இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று நடப்பு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பவர்கள் கூறலாம்.
இதோடு மட்டுமல்ல விவசாய விலை பொருட்கள் விலை ஏறினால் மக்கள் எப்படி அவற்றை வாங்கி சாப்பிட முடியும்.இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விடும் என்று தேசபக்தி பொங்க குரல் எழுப்புகிறார்கள்.இவர்களிடம் நாம் கேட்போம் தேசம், நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அதாவது 80 கோடி பேர் விவசாயிகள்.இந்த 80 கோடி விவசாயிகளின் அழிவு நாட்டின் அழிவில்லையா?
சரி ஒரு கிலோ சன்னரக நெல்லின் விலை ரூ 11.80.ஒன்றரை கிலோ நெல்லில் 1 கிலோ அரசியை பெறமுடியும்.அப்படியானால் ஒரு கிலோ அரிசிக்கு தேவையான நெல்லின் விலை ரூ17.70 ஆகிறது.ஆனால் ஒரு கிலோ சன்னரக அரிசியின் விலை கடையில் ரூ40 வரை விற்கிறது.நெல்லை விவசாயிடமிருந்து விலைக்கு வாங்கி அதை அரிசியாக மாற்றி விற்கும் இடைத்தரகர்கள் நெல்லை அரிசியாக்கும் செலவு போக ஒரு கிலோவுக்கு ரூ20 வரை லாபம் பெறுகிறான்.
ஆனால் நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயி ஒரு பருவத்தில் 1 ஏக்கரில் மோட்டாரகத்தில் ரூ 6300/-ம் சன்னரகத்தில் ரூ4806/-ம் நட்டமடைகிறான்.ஆகவே விவசாயத்திலிருந்து ஒரு பைசா கூட வருமானம் பெறாத விவசாயி தனது குடும்பத்திற்கான உணவு,கல்வி,மருத்துவம்,திருமணம்,மொய்,திருவிழாக்கள் அனைத்திற்கும் கடன் வாங்கித்தான் செலவழிக்கிறான்.இப்படிப்பட்ட கடன்கள் வட்டியும் அசலும் சேர்ந்து நான்கைந்து ஆண்டுகளில் நிலத்தை விற்றுத்தான் அடைக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடுகிறது.
முதலாளித்துவ உற்பத்தி மிகுநிலை பெற்றுள்ள ஒரு சமூகத்தில்,அதன் ஆதிக்கத்தில் விவசாயம் செய்யும் விவசாயி முதலாளித்துவ முறையில் தனது உற்பத்தியை திட்டமிடக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
உணவுப்பொருட்களின் விலை உயர்வு பற்றி நியாயமாக அரசிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.விவசாயி எவ்வளவு நட்டமடைந்தாலும்,உணவு பொருட்களின் விலை குறைவாகவா விற்கிறது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவக்கற்ற அரசுகள்தான் குற்றவாளிகள்!
உண்மையிலேயே நாட்டின் மீதும்,நாட்டு மக்கள் மீதும் அக்கறையுள்ளோர் உணவுப்பொருள் விநியோகம் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்றுதான் குரல் எழுப்ப வேண்டும்.உணவு பொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களை அகற்றப்பட வேண்டும்.
மேலும் விவசாயிகள் பெயரில் உரக்கம்பெனி முதலாளிகளுக்கும்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது என்றப்பெயரில் இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க வழங்கப்படும் மானியங்களிலிருந்து,மேலும் பல்வேறு வகையில் தரப்படும் மானியங்கள் அனைத்தையும் உணவுப் பொருளுக்கு ஒருமுகப்படுத்தி வழங்கினால்,இப்போது உள்ள உணவுப்பொருட்களின் விலையை விட பாதிவிலையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியும்.
ஆகவே விவசாயிகளுக்கு, தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்ற வாதத்தில் துளியும் உண்மை இல்லை என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.
மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டிய கடமை அரசினுடையது என்பது தவிர்க்கவியலாத விதியாகும்.ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அரசு செயல்படுகிறது.உணவு பொருட்கள் அனைத்தையும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கிறது.இதுநாள் வரை இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான சிறு இடைத்தரகர்கள் பெற்றுவந்த லாபத்தை ஒருசில பன்னாட்டு பகாசூர கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிட்டு,இருக்கும் இந்திய அரசு விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும்,நாட்டுமக்களுக்கும் ஆழக்குழித் தோண்டுகிறது,துரோகம் இழைக்கிறது.இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் தேவை மட்டுமல்ல,கடமையுமாகும்!
(மீள் பிரசுரம்)
