முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
வினவும் அதன் தோழமை அமைப்புகளும் சமச்சீர் கல்வி விடயத்தில் அதிலும் இவ்வமைப்பின் மூன்று ஊடகங்கள் ஒவ்வொன்றும் தமக்கிடையியே மட்டுமல்ல,தமக்குள்ளேயே முரண்பட்ட கருத்துகளை வைத்துள்ளன என்பதை கூர்ந்து பார்த்தபோது தான் இவைகள் பாட்டாளிவர்க்க அமைப்புகள்தானா?,ஏன் இந்த தடுமாற்றம் ஆகிய ஐயங்களை எமக்குள் ஏற்படுத்தியது.தமது முரண்பாடுகளையும்,தவறுகளையும் ஏனையோர் சுட்டுக்காட்டுகிறார்களா இல்லையா, என்பதைவிட தமது கருத்துகள் தவறானவை என்று தெரியவந்தால் யாரும் சுட்டிக்காட்டுவதற்கு முன்பே தனது தவறான கருத்துகளுக்காக சுயவிமர்சனம் ஏற்பது தான் தனிமனிதர்களாயினும்,ஒரு அமைப்பாயினும் பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தால் வழிநாடத்துபவர்களின் அனுகுமுறையாக இருக்கமுடியும். ஆனால் இந்த அமைப்புகளோ தமக்கிடையில் மட்டுமல்ல தமக்குள்ளோயே எதிரும்,புதிருமான கருத்துகளை முன்வைத்துக்கொள்கின்றன.இதன் மூலம் தமது அமைப்பின் உறுப்பினர்களை மட்டுமல்ல, சமூகத்திலுள்ளவர்களையும் ஏமாளிகளாகவே பார்க்கின்றனர்.இந்த வரிசையில் நாம் முதலில் புதிய ஜனநாயகத்தையும்,இவ்விதழ் தனக்குள்ளேயே எப்படி முரண்பட்டு நிற்கிறது என்பதை இனி பார்ப்போம்
2010 ஜீன் இதழில் தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை பற்றி….
“சட்ட பூர்வமானது,கல்விக்கட்டணக் கொள்ளை”,என்ற தலைப்பில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளது.
”தவறை எதிக்க துணியாத,நியாயத்திற்காக போராட விரும்பாத தன்னலம்,இந்த தன்னலமும்,ஆங்கில வழிக்கல்வின் மீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும்தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது”, என்றும்,
”கல்வி வள்ளல்கள நடத்திவரும் கட்டணக்கொள்ளையை சட்டம் போட்டு தடுத்துவிட முடியும் என்பது ,கடப்பாறையை முழுங்கிவிட்டு,சுக்குக் கசாயம் குடிப்பது போன்றது.அரசுப்பள்ளிகளையும்,கல்லுரிகளையும் தரமாக நடத்தக் கோருவதும்,தாய்மொழி வழியாக ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை கொடுக்க கோருவதும்தான்,இப்பிரச்சனைக்கு ஒரேத்தீர்வு,மாற்று.தனியார்மய மோகத்தாலும்,ஆங்கிலவழிக்கல்வி மீது இருக்கும் குருட்டுத்தனமான பக்தியின் காரணமாகவும் நடுத்தர வர்க்கம் இவ்வுண்மையை புரிந்துகொள்ள மறுக்கிறது.இதனை புரிந்து கொண்டு கல்வி தனியார்மயமாவதை எதிர்த்து போராடாத வரை இக்கட்டணக்கொள்ளை என்ற சிலுவையை அவ்வர்க்கம் சுமந்துதான் தீரவேண்டும்”, என்று தெளிவாகவும்,முரணற்ற வகையிலும் எழுதிய புஜ இதே விடயங்களில் இப்போது என்ன கருத்து,
”சமச்சீர் கல்வி ரத்து
தனியார் பள்ளிக் கட்டண கொள்ளைக்கு
ஜே! ஜே!! என்றக்கட்டுரையில்
”அரசுப்பள்ளிகளிலும்,தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப்பாடதிட்டமும்,பொதுபாடநூல்களும் போதிக்கப்பட்டால்,தனியார் பள்ளிகளுக்கு அநியாயமன கல்விக்கட்டணம் எதற்கு செலுத்த வேண்டும் என்றக்கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்து அவர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்”,என்று 2011 ஜீலை புஜ இதழில் எழுதி தனக்குள்ளே முரண்பட்டு நிற்கிறது.தமது நிலைப்பாடுகளை தமது உறுப்பினர்களால் ஒப்பிட்டு பார்க்க இயலாது என்பதால் தான் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று புஜ ஆசிரியர்குழு கருதுமானால் அதற்காக நாங்கள் மீண்டும் ஒரு முறை அதிர்ச்சியடைந்துவிடமாட்டோம்.ஆனால் புஜ இதழ் இவர்களின் உறுப்பினர்களுக்கு மட்டுமா கொடுக்கிறார்கள்.எங்களை போன்றவர்களுக்கும் அல்லவா தருகிறார்கள்! தாம் சார்ந்துள்ள தமிழ்ச்சமூகம் முழுவதின் ஒப்பீட்டு திறன்களையும் தாங்கள் மழுங்கடித்துவிட்டதாக இவர்கள் கருதுகிறார்களா?
மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பு உறுப்பினர்களின் புரிதலுக்காக,இதற்கு முன்னர் சற்று விரிவாக கருத்துகளின் சுருக்கமான வடிவத்தை கீழேத்தருகிறோம்.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு காரணமும்,அதை தடுப்பதற்கான வழிமுறை என்றும் 2010 ஜீன் இதழில்……
”பெற்றோர்களின் ஆங்கில வழி கல்வி மீதான முட்டாள்தனமான மோகம்”,
”தனியார்மய மோகம்,ஆங்கில வழி கல்வி மீது இருக்கும் குருட்டுத்தனமான பக்தியும்”,என்று எழுதியது.
ஆனால் 2011 ஆண்டு ஜீலையில் அதே இதழ் கூறுவதை கேளுங்கள்.
”அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே விதமான பாடத்திட்டம்,பாடநூல்கள் போதிக்கப்பட்டாலே தனியார் கல்விக்கட்டணம் ஒழிந்துவிடும்”,என்கிறது.
தனியார் கல்விக்கட்டண கொள்ளையை தடுக்க சென்ற 2010 ஜீனில் இவர்கள் எழுதியக்காரணம் சரியானதா? அல்லது 2011 ஜீலையில் கூறும் காரணம் சரியானதா? ஒன்று சரியென்றால் மற்றொன்று தவறாகத்தானே இருக்க முடியும்?ஒருவேளை இவர்களின் அகராதியில் இரண்டுமே சரியான காரணமா?
பெற்றோர்களின் ஆங்கில வழிக்கல்வி மீதான முட்டாள்தனமான மோகமும்”,சமச்சீர் கல்வி போதிக்கப்பட்டால் ஒழித்துவிடுமா? அது எப்படி?
சமச்சீர் கல்வி என்பதே இவர்கள் குறிப்பிடுவது போன்று பொதுப்பாடநூல் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படுவதுதான்.கற்பிக்கப்படும் பாடம் ஆங்கிலமா,தமிழா என்பது அல்ல?
சமச்சீர் கல்வியானாலும் அவைகள் மெட்ரிக்பள்ளிகளில் ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படும்.ஒரேவிதமான பாடத்திட்டம்,பாடநூல்கள் வந்துவிட்டாலும் அது மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலத்திலும்,அரசு பள்ளிகளில் தமிழிலும் தானே கற்பிக்கப்படும்.இதன் மூலம் பெற்றோர்களிடன் ஆங்கில வழி கல்வி மீது இருக்கும் குருட்டுத் தனமான பக்தி”.எப்படி ஒழிந்துவிடும் எனபதை புதிய ஜனநாயகமும் அதன் தோழமை அமைப்புகளுமே நமக்கு விளக்க வேண்டும்.
இவர்கள் குறிப்பிடுவதைப் போன்று அரசுப்பள்ளிகளிலும்,தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப்பாடத்திட்டம்.பொதுப்பாட நூல்கள் போதிக்கப்பட்டால்,தனியார் பள்ளிகளுக்கு அநியாயமாக கல்விக்கட்டணம் எதற்காக செலுத்தவேண்டும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுவது இருக்கட்டும்!சமச்சீர் கல்விக்காக விண்ணுக்கும்,மண்ணுக்கும் இடையே எகிறி,எகிறி குதிக்கும் உங்கள் அமைப்புகளின் உறுப்பினர்களிடம் முதலில் அந்த உணர்வு ஏற்பட்டு விட்டதா?இந்த உணர்வு வந்த உங்கள் உறுப்பினர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து மாற்றுச்சான்றிதழ் திருப்பப்பெற்று அரசு தமிழ்ப்பள்ளிகளில் சேர்த்துவிட்டுள்ளனர் என்பதை சொல்ல முடியுமா உங்களால்? நீங்கள் ஊருக்கு உபதேசிப்பது இருக்கட்டும்! முதலில் உங்கள் தோழர்களிடம் உள்ள ஆங்கில வழி மோகம்,தனியார்மய மோகம்,ஆங்கிலவழி கல்வி மீதிருக்கும் குறுட்டுதனமான பக்தி ஆகியவற்றுக்கு எதிராக போராடுங்கள்.இவைகளெல்லாம் உங்கள் தோழர்களிடம் இல்லையேன்றால்.சம்ச்சீர் கல்வி வந்துவிட்டால் பொது பாடத்திட்டம்,பொது பாடநூல்கள் போதிக்கப்பட்டாலே.தனியாருக்கு எதற்காக அநியாயமாக கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவர்களால் ஏன் யோசிக்க முடியவில்லை என்றாவது கூறுங்கள்?
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது குழந்தையை தமிழ் வழியில் சேர்த்துவிட்டு,தனது குழந்தை எங்கு படித்தாலும் நன்றாகவே படிக்கும் என்று கூறி தனது நேர்மையை நிருபித்தாரே! அந்த நேர்மை உங்களில் எத்தனை பேருக்கு வந்தது என்பதை மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.
நாட்டில் குழந்தைகள் சமச்சீர் கல்வி பெறுவது இருக்கட்டும் முதலில் உங்கள் அமைப்புகளில் உள்ள தோழர்களுக்கு சமச்சீரான சிந்தனையை போதியுங்கள்!
சமூகத்தில் உள்ள சராசரி மனிதர்களைவிட-சமச்சீர் கல்விக்காக போராட முன்வராத,அதை புரிந்து கொள்ளாத-அந்த வகையில் சமச்சீர் கல்விக்காக போராடுகின்ற உங்கள் உறுப்பினர்களில் எத்துனைபேர் நேர்மையானவர்கள்?அப்படி நேர்மையிருந்தால் அவர்கள் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் சேர்த்திருக்கலாமே?
உங்கள் அமைப்புகளில் வர்க்க அடிப்படையில் தான் ஏழைகள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளிலும்,வசதி படைத்தோர் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளிலும் தான்,படிக்க வைக்கின்றனர்.சமச்சீர் கல்விக்காக உச்சநீதிமன்றம் சென்று போராடி வெற்றி பெற்ற நீங்கள் வழக்கு வெற்றி பெற்ற பிறகாவது உங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் சேர்த்திருக்கலாமே? சமச்சீர் கல்விக்காக போராடி புர்ரச்சிகர சிந்தனையை சமூகத்தில் நீங்கள் கொண்டு வருவது இருக்கட்டும்.முதலில் உங்கள் அமைப்புகளில் உள்ள பணக்கார உறுப்பினர்களுக்கு போதியுங்கள்.எல்லாம் தெரிந்த உங்கள் பணக்கார உறுப்பினர்களே தமது பிள்ளைகளை தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படிக்கவைக்க முன்வராத போது சமச்சீர் கல்விக்காக போராடாத,சமச்சீர் கல்வி என்றால் இன்னமும் புரிந்துகொள்ளாத மனிதர்களான நாட்டின் பெரும்பானமை மக்கள் தமது பிள்ளைகளை தமிழ் வழி அரசுப்பள்ளியில் சேர்ப்பார்கள் என்று இன்னமும் நீங்கள் காதில் பூ சுற்ற நினைக்கிறீர்கள்.எதையாவது சொல்லி தொலையட்டும் என்பது தான் 09.08.11 வரையிலான மக்களின் கருத்து ஆகும்.சமச்சீர் கல்வியில் பார்ப்பன ஜெயாவின் பிடிவாதமும்,அகம்பாவமும்தான் ஜெயாவுக்கு எதிரான கருத்தாக உருவெடுத்துள்ளது.ஒருவேளை உங்கள் நிலைபாட்டின்படி தனியார்ப்பள்ளி முதலாளிகளின் கல்வி கொள்ளையை ஆதரித்து,நீதிபதிகள் சமச்சீர்கல்வியை தடை செய்திருந்தால் இந்த தீர்ப்புக்கு எதிராக நீங்கள் மேல் முறையீடு செய்துவிட்டு தெருவிற்கு வந்திருந்தால் போகிற,வருகிற பெற்றோர்களில் நூற்றுக்கு தொன்னூறு பேர் நீங்கள் மேல்முறையீடு செய்தற்காகவே உங்களை கல்லாலேயே அடித்திருப்பார்கள்.
மக்களிடையே இன்று ஜெயாவுக்கு எதிராக உள்ள கோபம் நாளை கருணாநிதிக்கு ஓட்டாக மாறப்போகிறது.ஒரு வேளை அந்த கோபம் உங்களுக்கு எதிராக மக்களிடையே வந்திருந்தால்.அது கல்லடியாக மாறியிருக்கும்.இதுதான் உங்கள் நிலைப்பாட்டிற்குள் நிறைந்துள்ள முரண்பாட்டின் இயல்பான விளைவாகும்.
சமச்சீர் கல்வி கார்ப்ரேட் மூலதனத்தின் தேவை என்பதால்தான் அது சமச்சீர் கல்விக்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பாய்,நீதிபதிகளின் வழியாய் வெளிப்பட்டு,அதன் மூலம் மக்களிடையே ஜெயாவுக்கு எதிரான கருத்தாய் உருவாகி கருணாநிதிக்கு ஓட்டாய் மாறப்போகிறது.நீங்கள் கூறுவதை போன்று சமச்சீர்கல்வி தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிரானதாக இருந்திருந்தால் அது நீதிபதிகளின் தீர்ப்பாய் வெளிவந்து மக்களிடையே அது ஜெயாவுக்கு ஆதரவான நிலையையும்,உங்களுக்கு எதிரானதாகவும் மாறி இருக்கும்.உங்களின் காலம் கார்ப்ரேட் முதலாளித்துவம் உங்களை காப்பாற்றி விட்டது.உங்களை மட்டுமா, உங்கள் ஆதரவாளர்களான எங்களையும் அல்லவா அது,காப்பாற்றி விட்டது! எங்களுக்கு நல்ல காலம்தான் போங்கள்.
இந்த நல்ல காலம் உங்களுக்கு எத்தனை மாதம் என்பதுதான் இப்போதைய அடுத்த பிரச்சனை,ஆனாலும் முதலில் இருந்த கல்லடி ஆபத்து இப்போது உங்களுக்கு ஏற்படாது,ஏனென்றால் ,கருமம் ஏதோ ஒரு புத்தகம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிட்டதே என்ற திருப்தியில் தனியார் கல்விக்கட்டணம் குறையும் என்ற உங்களின் ஆருடம்,புவி ஈர்ப்புவிசைக்கு எதிராக மனிதர்களை அந்தரத்தில் இருத்துவேன் என்ற நித்யானந்தாவின் ஆருடத்தை போன்று பொய்த்துப்போனாலும் கல்லடியாய் மாறாது,ஆனால் இனி உங்களின் நிலைப்பாடுகள்,கணிப்புகளுக்கு உங்கள் ஆதரவாளர்கள் இடையே மதிப்பு இருக்காது.இன்னமும் நீங்கள் புரட்சிகர சக்திகள்தான் என்றால்,இப்போதாவது யோசித்து பாருங்கள் உங்களின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்காக பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள்.சீர்திருத்த பாதையில் இருந்து,புரட்சிகர பாதைக்கு திரும்புங்கள்.
இதை நீங்கள் செய்ய மறுத்தால் பார்ப்பன ஜெயா,கருணாநிதி என்ற இருவரோடு நீங்கள் மூன்றாவது சக்தியாக மாறுவதை நோக்கிதான் பயணிக்க வேண்டியிருக்கும்.மூன்றாவது சக்தியாக மாற நீங்கள் முடிவெடுத்து விட்டால் விஜயகாந்த்,டாக்டர் ராமதாஸ்,தொல்.திருமா ஆகிய அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிவிடுவீர்கள்.
அது,எப்படியப்பா,எங்கள் ஆருடம் பொய்த்து போய்விட்டதே! பிறகு எப்படி எங்களை மக்கள் மூன்றாவது சக்தியாக ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நுட்பமான சந்தேகத்தை உங்களின் ‘ஏழர’ போன்ற ரசிகர்கள் மூலம் வெளிப்படுத்தலாம்.அந்த அளவுக்கு கூட எதற்கு உங்களுக்கு சிரமம் தருவானே,அப்படி ஒரு சிரமமே இல்லாமல் இப்போதே அதையும் நாங்களே சொல்லிவிடுகிறோம்.தனியார் கல்வி கட்டணம் குறைந்துவிடும் என்ற ஆருடம் பொய்த்து போனதால்,மொத்த பெற்றோர்களில் உங்கள் கணக்குப்படியே வெறுமனே 2% மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே அதுவும் இப்போது உங்கள் பிரச்சாரத்தில் மயங்கி ஏமாந்து உங்கள் பெற்றோர் சங்கத்தில் செர்ந்திருக்கிறார்களே,அவர்களிடம் மட்டுமே ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.அப்படிப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை எத்தனை பத்துபேர் என்பது எங்களை விட உங்களுக்கு தானே துல்லியமாக தெரியும்.என்னைய பெரிதாய் மிரட்டுகிறாய் உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய எங்களால் புரட்சி தலைவியையே தோற்கடித்த எங்களால், இதை சமாளிக்கத்தெரியாதா என்கிறீர்களா! அதுவும் உண்மை தான்.நித்தி,ஜெயா போன்று அதை பற்றி சிறிது காலம் வாயை மூடிக்கொண்டாலே அவன்,அவன் மறந்துவிட்டு போகிறான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்
என்னப்பா சென்ற மூன்று கட்டுரைகளை ஒரு மாதிரியாக எழுதிவிட்டு,இதை ஒரு மாதிரியாக எழுதுகிறார்களே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்வது! இதை யாருக்கு எழுதுகிறோமோ அவர்களுக்கு சென்று சென்று சேரவேண்டுமே! அதனால்தான் அவர்களுக்கு புரிகிற மொழியில்,புரிகிற பாணியில் எழுத வேண்டியிருக்கிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்,சித்தாந்த நிலைப்பாடுகளை இவ்வளவு எளிமையாகவும்,எழுத முடியுமா? என்கிறீர்களா? வேறென்ன செய்வது தமது சமூக அடித்தளம் அப்படியாயிற்றே! இதனால்தான் ஆடுற மாட்டை,ஆடிக் கறக்கனும்,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும் என்று மெட்ரிக் பள்ளிகளில் படிக்காத எமது முட்டாள் பாட்டன்மார்கள் ஒரு பழமொழியை எங்களை போன்று மெட்ரிக்பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்க்காத,முட்டாள் பேரண்களுக்கு சொல்லிவிட்டு வேறு சென்றிருக்கிறார்கள்.ஒன்று அப்படி இருக்கனும்,இல்லனா இப்படி இருக்கனும் இரண்டுமே இல்லாம மூன்றாவது ஒன்னா! நாங்க இருக்க விரும்பல அதனாலதா நாங்க எங்களுக்கு தெரிந்தவகையில் இப்படி இருக்கிறோம்.
சரி! நமது வழமையான ஏனைய மூன்று கட்டுரைகளின் பாணிக்கு,சிறிது திரும்புவோம்.மா-லெ-மா என்பது சமூகவிஞ்ஞானம்,இந்த விஞ்ஞானம் ஒரு போதும் தோற்காது.அதே நேரத்தில் இந்த விஞ்ஞானம் மனிதர்களால் மிகச்சரியாக பிரயோகிக்கப் படாவிட்டால்,வெற்றியும் பெறாது.ஆகவே,மா-லெ-மா வின் வெற்றி அதன் அடிப்படையில் அமைப்பாக்கப்பட்ட மக்கள் சக்தியின் மூலமே சாத்தியம் ஆகும்.பூமி தட்டை என்று கூறுவது மிகவும் எளிமையானது அதற்கு நிரூபணம் எதும் தேவையில்லை.ஆனால், பூமி உருண்டை என்று சொல்பவர்கள் தாம் கூறியதை நிரூபணம் செய்யாமல் சென்றுவிட முடியாது.அதை ஆதாரத்துடன் நிரூபித்தாக வேண்டும்.இதற்கு உட்கார்ந்த இடத்திலேயே,உட்கார்ந்துகொண்டு மூளையை மட்டுமே பயன்படுத்த முடியாது உழைத்தாக வேண்டும்.முளையால் மட்டுமல்ல உடலாலும்! உழைக்க தயங்குபவன் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகளைத்தான் கட்ட வேண்டியிருக்கும்.இதை தொடர்ந்தும் ஆபத்தின்றி செய்ய வேண்டுமானால்,இதை கேட்டுக்கொண்டு இருப்பவர்கள்,கேள்விக்கேட்காமல் இருக்க வேண்டும்.அதற்கு அவர்களை முட்டாள்களாகவே வைத்திருக்க வேண்டும்.
எந்த மக்களை வென்றெடுத்து புதிய ஜனநாயக புரட்சியை நடத்தப்புறப்பட்டீர்களே,அந்த பாதையில் நீங்கள் எடுத்த சீர்திருத்தவாத பாதை உங்களை,உங்களுக்கு எதிராகவே நிறுத்திவிட்டது.இன்னமுமா உங்களுக்கு புரியவில்லை! சமச்சீர்கல்வி விவகாரத்தில் சந்தர்ப்பவாத,சீர்திருத்தவாத நிலைப்பாடு,மா-லே-மா விற்கு விரோதமானதே என்று!
தோழர்களே குறுக்குவழியில் பயணப்பட்டு நிலவுகிற சமூக அமைப்பிலேயே ஆட்சியை கூட பிடித்துவிடலாம்.ஆனால் அதன் மூலம் புரட்சியை சாதித்து விட முடியாது,முப்பதாண்டுகளாய் முரணற்று சிந்திக்க முடிந்த உங்களால் இப்போது ஏன் இந்த தடுமாற்றம் முரண்பாடுகளின் மூட்டைகளாய் மாறிப்போனீர்களே ஏன்? பிடிவாதம் பிடிக்காதீர்கள் உங்களின் பிடிவாதத்திற்கும் பார்ப்பன ஜெயா-வின் பிடிவாதத்திற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.விமர்சனமும்,சுயவிமர்சனமும் கம்யுனிஸ்டுகளின் இரு கண்கள் அதுவே நம்மை,நமது பாதையில் தெளிவாய் போக வழிகாட்டும் ஒளிவிளக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள் தோழர்களே மீண்டும் ஒன்றாய் பயணிப்போம்…..
தொடரும்……………
புரட்சிகர வாழ்த்துகளுடன்
சூறாவளி நிர்வாகக்குழு.