“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற நிலை தமிழக விவசாயிகளுக்கு எப்போது ஏற்பட்டது என்பதைப்பற்றி நாம் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.சென்றப் பகுதி-II- ல் சங்ககாலத்தில் விவசாயம் பற்றி ஆய்வு செய்தோம்.அதன் அடிப்படையில் இப்பழமொழி சங்ககாலத்தில் உருவாகவில்லை என்பதைப் பார்த்தோம்.
சங்ககாலத்திற்கு பின்னர் கிபி.3 ம் நூற்றாண்டிலிருந்து 6 ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டுள்ளனர்.களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புர செப்பேடுகள் கிடைக்கும் வரை நாம் அறியாமல் இருந்தோம்.இச்செப்பேடுகள் கிடைக்கும் வரை களப்பிரர் காலம் இருண்டகாலம் என்றே வரலாற்றில் கூறப்பட்டு வந்தது.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டிருந்தாலும் அவர்கள் ஆண்டார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லாமலே இருந்தது.அப்படி சான்றுகள் இல்லாமல் போனது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வல்ல,நன்கு திட்டமிட்டு மூர்க்கமாக அவைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதைத்தான் மேற்கண்ட செப்பேடுகள் மற்றும் பார்ப்பன இலக்கியங்களில் உள்ள செய்திகளிலிருந்தும் நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
சங்ககால தொடக்க காலத்தில் தமிழ்ச்சமூகம் சாதியற்ற சமூகமாகவே இருந்தது.வட இந்தியாவில் ஆரிய வருகையும்,பூர்வகுடி மக்களுடனான அவர்களின் போர், வெற்றி, இனக்கலப்பு நால்வருணக்கோட்பாடு, சாதியத்தின் வளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன.இந்த பார்ப்பனியத்தை எதிர்த்து சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய மதங்கள் வட இந்தியாவில் தோன்றின.வட இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு முன்னர் மதங்கள் தோன்றவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
வட இந்தியாவில் பார்ப்பன நால்வருண-சாதியத்தை-பார்ப்பனியத்தை எதிர்த்து சமண,பவுத்த சமயங்கள் தோன்றின.ஆனால் இம்மதங்கள் தமிழகத்தில் பார்ப்பன வருகைக்கு முன்னரே வந்துவிட்டன.சாதியற்ற சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் சாதிய இழிவை எதிர்த்து உருவான சமயங்களான சமணமும்,பவுத்தமும் செல்வாக்கு எதையும் பெறமுடியவில்லை.
இதன் பின்னர் தமிழகத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள் மிக விரைவில் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆனார்கள்.பார்ப்பனியம் அரச மதமாக உருப்பெற்றது.எந்த அளவிற்கு சாதியம் சமூகத்தை சிதைக்க ஆரம்பித்ததோ அந்த அளவிற்கு அதை எதிர்த்த சமணமும்,பவுத்தமும் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கியது.இந்த வளர்ச்சி தான் களப்பிரர்கள் தோன்றுவதற்கான அடிப்படைகளாக அமைந்தது.களப்பிரர்கள் தமிழகத்தை ஆளத்தொடங்கிய நிகழ்வு என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த பெரும்பான்மை மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.
ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி,மு.ராகவய்யங்கர்,டி.வி.சதாசிவ பண்டாரகத்தார்,டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார்,எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் ஆகியோர் இன்று வரை அதிலும் வேள்விகுடி செப்பேடு,தளவாய்புர செப்பேடு ஆகிய ஆவணங்கள் கிடைத்த பின்னருங்கூட அவர்கள் தமிழர்கள் அல்லர் கருநாடகத்தில் இருந்து தமிழகத்தின் மீது போர்தொடுத்தவர்கள் என்றும் அன்னியர்கள் என்றும்,அவர்களின் ஆட்சி இருண்டகாலம் என்றும் கூசாமல் புளுகுகின்றனர்.இதில் மயிலைசீனு வேங்கடசாமி அவர்கள் களப்பிரர்கள் அன்னியர்கள் என்று கூறினாலும் அவர்கள் ஆட்சி இருண்டகாலம் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கணட ஆய்வாளர்களின் நூல்களிலும்,வேள்விக்குடி மற்றும்தளவாய்புர செப்பேடுகளில் உள்ள செய்திகளை தொகுத்து பார்க்கும் போது களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட,நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் அது இருண்டகாலமா, இல்லையா என்பதை இப்போது பார்ப்போம்.
(அ).கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று மேலே கண்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் களப்பிரர்கள் ஆட்சிகாலத்தில் தான்..........
1.வளையாபதி
2.சீவகசிந்தாமணி
3.குண்டலகேசி
4.சிலப்பதிகாரம்
5.மணிமேகலை
ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும்,பதிணென்கீழ்கணக்கு நூல்களும்,நாலடியார் போன்ற நூல்களும் இன்னும் பல ஆயிரக்கணக்கான நூல்களும் உருவாகி உள்ளன.
மேலே கண்ட விவரங்களில் இருந்து நாம் பார்க்கிற போது களப்பிரர்கள் ஆட்சிகாலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக திகழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.இவர்கள் காலத்தில் சமண.பவுத்த நூல்கள் மட்டுமல்ல சைவ சமய நூல்களும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன.அதை இயற்றிய புலவர்களுக்கும் எல்லாவகையான உதவிகளையும் களப்பிரர்கள் செய்துள்ளனர்.
(ஆ).களப்பிரர்கள் தமது கொடியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் சின்னங்களான கயல்,வில்,புலி ஆகிய சின்னங்களையே பொறித்திருந்தனர்.தமக்கென தனித்த அடையாளம் எதையும் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
(இ).சங்ககால ஆட்சியாளர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட கடல் கடந்த வணிகத்திற்கு மாற்றாக களப்பிரர்கள் ஆட்சியில் விவசாயமே மிகமுக்கிய தொழிலாக ஊக்குவிக்கப் பட்டது.
இதைப்போன்ற பல தகவல்களை தமது நூல்களில் எழுதிவிட்டு களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் இருந்தே இவர்களின் நேர்மையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.
இவ்வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் தமது பார்ப்பன மூதாதையரின் பணியையே அதாவது பார்ப்பனியத்திக்கு எதிரான களப்பிரரை எந்த வெஞ்சினத்தோடு அழித்தொழித்து ஆனந்த கூத்தாடினார்களோ அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட பார்ப்பன ஆய்வாளர்களும் தமது பணியை தொடர்ந்துள்ளனர்.முழுமுற்றான மூடனும்,அயோக்கியனும் மட்டுமே களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறமுடியும்.இப்படி களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறும் இவர்கள் மூடர்களா அல்லது அயோக்கியர்களா என்று கூறுவதற்கு இதற்கு மேலும் ஆய்வுகள் தேவையில்லை.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறுவதற்கு இவர்கள் மொழியியல் ஆதாரங்கள் என்று சிலவற்றை கூறினாலும் அவைகள் அனைத்தும் மிகவலுவான ஆதாரங்கள் என்று எற்க இயலாது.ஏன் என்றால் களப்பிரர்கள் காலம் பொற்காலம் என்பதற்கு வெளிப்படையான விவரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை எதைப்பற்றியுமே எவ்வித மறுப்பும் கூறாமல் அவைகளை தமது நூல்களில் எழுதிக்கொண்டே முடிவை மட்டும் இருண்ட காலம் என்று கூறும் இவர்களின் மொழியியல் ஆதாரங்கள் எவ்விதத்திலும் நம்பதகுந்தவைகள் அல்ல.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறும் இவர்கள்,அவர்கள் தமது தாய்மொழியை வளர்ப்பதற்கு எதும் செய்தார்களா என்பது பற்றி எதும் கூறவில்லை.அதே நேரத்தில் அவர்கள் பாலி,பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு ஊக்கம் அளித்ததாக கூறுகிறார்கள்.இவ்விரு மொழிகளுக்கும் ஆதரவு தந்தது.அவர்கள் கன்னடர்கள் என்று நிருபிப்பதற்கான ஆதாரமாக எப்படி கூற முடியும்?
மேற்கண்ட மொழிகள் சமண,பவுத்தம் உருவான பகுதிகளின் மொழிகள் ஆகும்.இந்த சமயங்களை பரப்புவதற்கு தமிழகத்துக்கு வந்த துறவிகளின் தேவைக்காக அவைகளுக்கு களப்பிரர்கள் ஆக்கமும்,ஊக்கமும் தந்திருப்பார்கள் என்பது தான் பொருத்தமான,ஏற்புடைய காரணமாக இருக்கமுடியும்.
ஆகவே களப்பிரர்கள் அன்னியர்கள் என்று இவர்கள் கூறுவது எதார்த்தமான ஒரு வரலாற்றுச்செய்தியை,நிகழ்வை பதிவு செய்வது என்ற நோக்கத்துக்காக அல்ல. அவர்களை தமிழர்களின எதிரிகள் என்று கொச்சைப்படுத்தி,இழிவுப்படுத்தும் நோக்கத்துக்காகத்தான் என்பதை நேர்மையான எவரும் எளிமையாக கூறிவிட முடியும்.
மேலும் பூர்வகுடி இனம் என்ற அடிப்படையில் தமிழ்மொழி பேசுவோரும் கன்னடம் பேசுவோரும் ஒரே திராவிட பூர்வகுடி இனக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.இன்றைய நவீன தேசிய இனம் என்ற அடிப்படையில் தான் தமிழர்களும்,கன்னடர்களும் இருவேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்கள்.
திராவிட மொழிக்குடும்பம் என்ற அடிப்படையில் இவ்விரு மொழிகளுக்கிடையில் பல்வேறு வார்த்தைகள் ஒன்றாய் இருப்பது தவிர்க்கவியலாதது ஆகும்.இன்றைய தமிழகம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்மொழி ஒரு பொது மொழியாக பொதுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்றும் கூட வட்டாரமொழிகள் இருக்கவே செய்கிறது.இதில் ஒரு வட்டாரமொழியை இன்னொரு வட்டாரத்தில் இருக்கும் மக்கள் புரிந்துகொள்வது சிரமம் என்பதை நாம் அறிவோம்.தமிழ்மொழியை பொருத்த வரை அதன் இலக்கண மற்றும் வார்த்தை வடிவத்திற்குள் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவி வளப்படுத்த தேவை ஏதும் இன்றி தமிழ்மொழி எல்லா வளங்களையும் கொண்டிருத்தது.ஆனால் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என்று இன்று அறியப்படும் அன்றைய திராவிட இனக்குடும்ப வட்டாரமொழிகள் போதிய வளர்ச்சி அடையாத வளம் குறைந்த அவைகளின் தேவைகள் தான் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவதற்கான வாய்ப்பாகவும் தேவையாகவும் அமைந்துவிட்டது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னர் தான் இம்மொழிகள் இன்றைய வடிவில் உருப்பெற்று எழுந்துள்ளன.இதன் பின்னரே இவைகள் இன்றைய பெயரிலும்,வடிவத்திலும் விளங்குகின்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன்னர் திராவிட இனக்குடும்ப வட்டார மொழிகள் என்ற வகையில் ஒரு வட்டாரத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை இன்னொரு வட்டாரத்தில் புழக்கத்தில் இருப்பது அதிசயமானதொரு நிகழ்வல்ல.ஆக இந்த வார்த்தைகளை கொண்டே களப்பிரர்கள் தமிழர் அல்லாத அன்னியர் என்று இவர்கள் கூறுவது எவ்வளவு நேர்மையற்ற செயல் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.ஆனால் தமிழ்மொழியோடு எந்த ஒட்டும் உறவும் இல்லாத சமஸ்கிருதமும்,ஆரிய பார்ப்பனர்களும் அன்னியர்கள் என்று இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.இது ஒன்றே இந்த பார்ப்பன வரலாற்று ஆய்வாளர்களின் நேர்மையின்மைக்கு தக்க சான்றாகும்.
தமிழை வளப்படுத்துவதற்கு பார்ப்பன ,சமஸ்கிருத மொழியின் தேவைஇல்லாத காரணத்தால் தான் தமிழ்மொழி தனித்துவமாக நிமிர்ந்து நின்றது.பார்ப்பன பண்பாட்டு ஊடுருவல் இல்லாத வரை தமிழ்ப் பண்பாடும் உயர்ந்து நின்றது.பார்ப்பனியம் ஆளுவோரின் தேவைக்கான பண்பாடாக,மதமாக உருவெடுத்த போது தான் பார்ப்பனப் பண்பாடை மறுத்த மக்களின் ஆட்சியாக களப்பிரர்கள் ஆட்சி உருவெடுத்தது. இந்த ஆட்சி மூன்று நூற்றாண்டு நீடிக்கவும் செய்தது.பார்ப்பனியத்தை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சிகண்ட தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனியத்தை எற்றுக்கொணட ஆட்சி எற்ப்பட்டது எப்படி என்பதற்கான மிகதெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதும் இல்லை.கிடைத்திருக்க கூடிய சில தகவல்களை வைத்து பார்க்கும் போது அதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளமுடியும்.
களப்பிரர்கள் ஆட்சி, பார்ப்பனியம் மக்களை சாதியாக கூறுபோட்டு இழிவுபடுத்துவதற்கு எதிராக உருவானது.களப்பிரர்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களாகவே நீடித்துள்ளனர்.தமது செழிப்பான வாழ்வுக்கும் அரசியல் மற்றும் படைத்திரட்டலுக்கும் தேவையான எல்லா வளங்களையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும்,பண்பாட்டிற்கும் முற்றாக தடைவிதிக்கப்படவும் இல்லை.இதன் மூலம் அவர்கள் களப்பிரர்களை வெல்வதற்குரிய அனைத்து மூலவளங்களையும் பெற்று இருந்தனர்.அவர்களிடம் இல்லாத ஒரு வளம் மக்கள் மட்டுமே!
ஆனால் பிற்கால களப்பிர அரசர்களில் சிலர் பார்ப்பன சைவ சமயத்தை பின்பற்றியுள்ளனர்.இது அவர்கள் பார்ப்பனியத்தை-சாதியத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் ஆகும்.பார்ப்பனியம் அரச மதமாக படிப்படியாக உயர்ந்துவிட்டிருந்தது.அதே நேரத்தில் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியில் பார்ப்பனியத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சியை தூக்கி எறிந்து களப்பிரர்கள் ஆட்சியை கண்ட மக்கள்,பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்துக்கு எதிராக சமண,பவுத்தத்தை தழுவிக்கொண்டனர்.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் சமண,பவுத்த சமயங்களின் அறம் சார்ந்து வாழ்ந்த மக்கள் சங்காலத்திய தமது போர்த்திறனை இப்பொது இழந்துவிட்டிருந்தனர்.
இப்படிப் பட்ட சமூக சூழலில் தான் களப்பிர மன்னர்கள் சிலரின் பார்ப்பன மயம், பாண்டிய மன்னர் பரம்பரை வாரிசுகளின் எழுச்சி, பார்ப்பனர்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,மக்களின் சமண,பவுத்த அறம் சார்ந்த வாழ்வு ஆகிய அனைத்தும் சேர்ந்து களப்பிரர்கள் ஆட்சியை அதன் சுவடே இல்லாமல் துடைத்தெறிவதற்கு அடிப்படைகளாக இருந்துள்ளது.
இன்றையை இலங்கை தமிழ்மக்களை காட்டிக்கொடுத்த டக்ளஸ் தேவானந்தா,கருணா,கே.பி போன்றவர்கள் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தூக்கிப் போட்ட பதவிகளை கவ்விகொண்டு சொகுசாக வாழ்வதைப் போன்று அக்காலத்தில் பார்ப்பனியத்துக்கு அடிபணிந்த சில களப்பிர அரசர்கள் சிற்றரசர்களாக தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர் என்ற செய்தியும் வரலாற்றில் காணக்கிடக்கிறது!
ஆக மொத்தத்தில் களப்பிரர்கள் ஆட்சிபற்றி நமக்கு கிடைத்துள்ள ஒட்டு மொத்த தகவல்களையும் வைத்து ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது பார்ப்பனக்கும்பல் கூறுவதை போன்று களப்பிரர்கள் காலம் இருணடகாலம் இல்லை என்பது தெளிவாகிறது.
களப்பிரர்கள் ஆட்சி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் விளைவு என்ற அடிப்படையில் மொழி,பண்பாட்டுத்தளத்தில் மட்டும் அல்ல, பொருளாதார தளத்திலும் பெரும்பான்மை மக்களின் தொழிலான விவசாயம் களப்பிரர்கள் காலத்தில் செழிப்பாக வளர்க்கப்பட்டுள்ளது.ஆகவே “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி களப்பிரர்கள் காலத்தில் உருவாவதற்கான அடிப்படை எதும் இல்லை என்பது தெளிவாகிறது!
11.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III களப்பிரர்கள் காலம்
மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
(களப்பிரர்கள் காலம் கிபி 3-6) மீள்பிரசும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
தொடர்புடைய கட்டுரைகள்:
11.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III களப்பிரர்கள் காலம்
