விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label விடுதலைச்சிறுத்தை. Show all posts
Showing posts with label விடுதலைச்சிறுத்தை. Show all posts

Tuesday, 29 January 2013

சாதி ஒழிப்புக்கு கம்யூனிசமே காலத்தின் கட்டாயம்

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 4
இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட இயலாத போதாமையைக் கொண்டுள்ளன. இந்தப் போதாமையே இவைகளை வலது, இடது விலகல்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் செயல்படும் மகஇக குழும அமைப்புகள் வலது விலகலுக்கு ஆட்பட்டு சீர்திருத்த பிழைப்புவாதக் கும்பலாக சீரழிந்து போய்விட்டதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
 இந்திய புரட்சிகர அமைப்புகளின் போதாமை மார்க்சிய சித்தாந்தத்தின் போதாமை அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்காதது, எந்திர கதியாக அதைப் புரிந்து கொண்டு சமூகத்தின் மீது திணிக்க முயலும் அமைப்புகளின் போதாமையைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
ramadoss_thirumavalavan_340மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை, இந்தியாவின் தனித்தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் திறன் மார்க்சிய அமைப்புகளுக்கு இல்லாவிட்டாலும், மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானம், ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் பல்வேறு செயல்களின் ஊடாக சமூக வளர்ச்சி என்ற வடிவில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு நிறைவேறுகிறது.
சமூக வளர்ச்சி ஆளும் வர்க்கங்களின் தேவை, நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப எந்த அளவிற்கு தடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு சாதியும், தீண்டாமையும் உயிர்வாழவே செய்யும். இந்திய சமுதாயத்திற்கு மார்க்சிய சித்தாந்தம் பொருந்தாது என்ற கருத்தின் உள்ளடக்கம், இந்திய சமுதாயத்திற்கு வளர்ச்சி என்பதும் பொருந்தாது என்பதே ஆகும்.
இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத சித்தாந்தம் மார்க்சியம் என்றால், அது உருவான அதே ஐரோப்பிய சமூகத்தில் உருவான ஜனநாயகம் மட்டும் இந்திய சமுதாயத்திற்குப் பொருந்துமா?
 தலித் அமைப்புகள் தமது பிழைப்புவாத தேவையிலிருந்து, எந்த ஜனநாயகத்தை இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் என்கிறார்களோ, அதை தமது ஆதிக்க சாதி வெறி தேவையிலிருந்து - மார்க்சியம் மட்டுமல்ல, ஜனநாயகமும் - பொருந்தாது என்கின்றனர் ஆதிக்க சாதியினர்.
ஜனநாயகம் காய் என்றால் மார்க்சியம் கனியாகும். பிழைப்புவாதம் என்ற மசக்கையிலிருந்து காயின் புளிப்பே மேலானது என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்பினர். ஆதிக்க சாதி வெறிப் போதையால் கல்லீரலையே இழந்து போன ஆதிக்க சாதி வெறியர்கள் காய் உருவாகவே விடமாட்டோம் என்கிறார்கள்.
 சமூக வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில் இவ்விருவருக்கிடையே அளவு ரீதியான வேறுபாடே உள்ளது. பண்பு ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். இந்த ஒற்றுமைதான் திருமாவளவனையும், ராமதாசையும் ஒன்றிணைக்கிறது.
எமது இதற்கு முந்தைய கட்டுரைகளை, மார்க்சிய விரோதம் என்ற லகானை மாட்டிக் கொண்டுள்ள சிலர், மார்க்சியம் வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டம் உடையது என்று முத்திரை குத்தியுள்ளனர். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக் கொள்ளுமாம். இதே போன்றுதான் மார்க்சிய விரோதப் பூனைகளும் கருதிக்கொள்கின்றன.
வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் இப்போது தர்மபுரியில் மட்டுமல்ல, அன்று 80களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார இலக்குகளையே குறிவைத்து தாக்கி அழித்தார்களே இந்நடவடிக்கைக்கு காரணம் என்ன?
அன்று 90 - களில் வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் பதிலடியாக ஆதிக்க சாதி வெறியர்களின் பொருளாதார இலக்குகள் மீது குறிவைத்துத் தாக்கினார்களே இந்நடவடிக்கையின் உள்ளடக்கம் என்ன?
ஒருவரின் பொருளாதார வளங்களைத் தாக்கினால், அது அவரின் சமூக பண்பாடு, கலாச்சாரம் உட்பட அனைத்திலும் சிந்தனா ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் இதைச் செய்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திற்கும், அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தமது பிழைப்புவாதத் தேவையிலிருந்து முன்னுக்குப்பின் முரணாக பிதற்றித் திரிகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளித்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு – திண்ணியம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை காட்டிக் கொடுத்து காசாக்கிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது என்பவர்களுக்கு மார்க்சியம் பொருந்தாத சித்தாந்தம்தான்!
 தன் அளவிலான நலனே ஜனநாயகம் என்ற சித்தாந்தம் தானே விழுப்புரம், கண்டமங்கலம் அருகிலுள்ள பள்ளி நேலியனூரில் அருந்ததியரைக் காதலித்த பறையர் சாதிப் பெண் கோகிலாவை, அப்பெண்ணின் பெற்றோரே கொலை செய்ய வைத்துள்ளது. நாங்கள் பெற்ற பெண்ணை கொலை செய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நியாயம் பேசவும் வைத்திருக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் பறையர் சாதி அமைப்பு என்பதால் தானே, இந்த அநீதியைப் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. சிறுத்தைகளின் ஜனநாயக சவடால்கள் பறையர் சாதிக்கு மட்டும்தானா?
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பள்ளி மாணவன் பாரத்தை படுகொலை செய்த விடுதிக்காப்பாளர், காவலர், சமையல்காரர் ஆகிய மூவரையும் வழக்கில்லாமல் பாதுகாத்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.
கொலையுண்ட மாணவனும், கொலை செய்த குற்றவாளிகளும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொலையுண்ட மாணவன் ஏழை என்பதால் தானே கொலையாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் பாதுகாத்தனர்! ஒரே சாதியானாலும் ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது தானே விடுதலைச் சிறுத்தைகளின் நீதி!
தனது சொந்த சாதி மக்களில் ஒரு சிலரின் நலனை மட்டுமே பிரதிபலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், ஆதிக்க சாதி வெறியை முறியடிப்பார்கள் என்று நம்புவது கேழ்வரகில் நெய்வடியும் கதை தான்!
ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இடஒதுக்கீடே தீர்வு என்றார்கள். அதை அடைந்த பின்னரும் அவைகள் தீர்ந்தபாடில்லை. அதற்கு மாறாக அவைகள் விவசாயத்தின் அழிவு, விவசாயிகளின் தற்கொலை என்ற வடிவில் சமூகத்தை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இப்போதும் இந்த அழிவை தடுப்பதற்கு மாறாக அதை திசை திருப்பி தீவிரப்படுத்தும் வழிமுறைகளைத்தான் ராமதாஸ் தலைமையிலான ஆதிக்க சாதி வெறிக் கும்பல் கையிலெடுத்துள்ளது. இந்த திருப்பணியைத்தான் ஆதிக்கச்சாதி வெறிக்கும்பலால் செய்யவும் முடியும்!
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் சாதி தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் இவைகளுக்கு உள்ள வரலாற்று பாத்திர வரம்பினாலும், சமூக அழிவை- பெரும்பான்மை மக்களை சாதி கடந்து அணிதிரட்டும்- தடுக்கும் நடவடிக்கைகளில் பாத்திரமாற்றவும் முடியாது.
நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்டுவதில் போதாமையைக் கொண்டிருந்தாலும், தனது இயலாமைக்கான காரணங்களை பரிசீலனைக்குட்படுத்தி, மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்பு தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து, ஆளும் வர்க்கங்களால் உண்டாக்கப்படும் சமூக அழிவை தடுக்கும், காக்கும் தமது ஆற்றலையும், திறனையும் புரட்சியாளர்கள் விரைவில் நிரூபித்துக் காட்டுவார்கள்.

Wednesday, 9 January 2013

பாமக‍-வின் ஆதிக்கசாதிவெறி அரசியலின் பின்னணி என்ன?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 3
ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை வாய்ப்பைப் பெற்று பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அதோடு ஏராளமான தாழ்த்தப்பட்டவர்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இவர்களில் பெரும்பாலோர் தமது முன்னோர்கள் செய்த விவசாய கூலி வேலைகளை கைவிட்டு நகர்ப்புறங்களில் வேலைதேடிக் கொண்டனர். இவ்வேலை வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் கிராமப்புற விவசாய கூலி வேலையை விட மேம்பட்ட தன்மை உடையவைகளாயினும் பெரும்பாலும் பார்ப்பனிய எல்லைகளை கடந்தது அல்ல. எவை எல்லாம் கடினமானதும் ஆதிக்க சாதிகளால் இழிவானவைகளாகவும் கருதுப்படுகின்றனவோ அவைகளே தாழ்த்தப்பட்டவர்களுக்கான வேலைகளாக அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. இப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புகளும் இந்த வறையறுப்பை முற்றாக நிராகரித்தவைகள் அல்ல. இவ்வரம்புகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தன.
குறிப்பாக மனித மலத்தை மனிதனே அகற்றும் வேலைகள் நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக்கானது. அரசின் அனைத்து துறைகளிலுமே துப்புறவு பணிகள், இட ஒதுக்கீடு இல்லாமலேயே முழுமையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டன. ஆயினும் இவ்வேலைவாய்ப்புகள் கிராமப்புற வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது அதிக கூலியைத் தரக்கூடியனவாக ஆகும். இதுவும் பலரை பொருளாதார ரீதியாக மேம்பட வைத்தது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகமே உணர்வு ரீதியான மேம்பாட்டை சிறிது சிறிதாக அடைய ஆரம்பித்தது.
anbumani_ramadoss_gkmani_guru
தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு கிராமப்புற ஆதிக்க சாதிகளை சார்ந்திருப்பதை தவிர்த்தன் மூலமும், மற்றும் நவீன கல்வியின் ஊடாகவும் தமது உணர்வுளை எந்த அளவிற்கு மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனரோ, அந்த அளவிற்கு சாதி, தீண்டாமைக்கு எதிராக போராடுபவர்களாகவும் உருவெடுத்தனர்.
 ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களில் வளர ஆரம்பித்தன. சாதி தீண்டாமைக்கு எதிரான தமது போராட்டத்தில் சட்டபூர்வ வாய்ப்புகளையும் பயன்படுத்த துவங்கினர். அரசு எந்திரம் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான கட்டமைப்பானாலும், பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துவதில், பாதுகாப்பதில் ஆதிக்க சாதி வெறியர்கள் கோரும், விரும்பும் வடிவில் ஏற்பதோ, நடைமுறைபடுத்துவதோ அதன் நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதால் தாழ்த்தப்பட்டவர்களை அதன் வரம்பிற்கு உட்பட்டு ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி தாழ்த்தப்பட்டோர் தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை போராட்டங்களின் ஊடாக முறியடிக்கவும் செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி, தீண்டாமைக்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடும் ஆதிக்க சாதிகளிடையே சகிக்க இயலாதவைகளாக மாறின. இதை முறியடிப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதிகள் கிராம அளவிலான தாக்குதலை மேற்கொண்டாலும், அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதை அவர்களால் தடுக்க இயலவில்லை. இந்த வெற்றிகளை ஆதிக்க சாதிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டன.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியைத்தான் பாமக அமைப்பாக்கியது. இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விட்டதாகவும், தங்களை மதிப்பதில்லை என்றும், நாமும் முன்னேற வேண்டுமானால் நமக்கும் தனியே இடஒதுக்கீடு வேண்டும் என்றும், இதுவே வன்னிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மாமருந்தாகவும் காட்டி சாதி வெறியூட்டியது.
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்றப் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி, தமது கண்களை உறுத்திய அவர்களின் குடியிருப்புகளை தீ வைத்து எறித்து சூறையாடி, அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கோரத்தாண்டிவமாடியது. பல பத்தாண்டுகளாக தாங்கள் அடக்கி வைத்திருந்த ஆதிக்க சாதி வெறியை இதன் மூலம் தணித்துக் கொண்டனர்.
ஆனாலும் இவைகளின் ஊடாகவும் ஆதிக்க சாதி வெறிக் கும்பல் எதிர்மறை விளைவுகளையே சந்தித்தது. இவர்களின் செயல்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் எழுச்சி பெறச் செய்ததே அல்லாமல் அடங்கிப் போக செய்யவில்லை.
வன்னிய ஆதிக்கசாதி வெறியூட்டல் செயல்பாடுகளின் மூலம் வன்னிய மக்களிடையே வலுவான அரசியல் சக்தியாக மாறிய பாமக தலைமை, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அரசியல் பேரங்கள் மூலம் பெருமளவிலான பொருளாதார ஆதாயங்களை அடைந்தது. அதோடு வன்னிய ஆதிக்க சாதி வெறியின் அடையாளமான பாமக, திருமாவளனோடு அரசியல் கூட்டு என்று கூறி – அது நயவஞ்சகமானதானாலும் – தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதி வெறிக் நடவடிக்கைகளை தொடராதது ஆகியவைகளினால் பாமக மீது வன்னிய சாதியினரிடையே அவநம்பிக்கை படிப்படியாக வளர காரணங்களாக அமைந்தன. இதனோடு தமக்கான இட ஒதுக்கீட்டை அடைந்து விட்ட பின்னரும் கூட, தமது வாழ்வாதார பிரச்சனைகள் தீரவில்லை என்பதையும், அவைகள் மேலும் தீவிரம் அடைந்து வருவதையும் அனுபவ ரீதியாக வன்னிய சாதியினர் உணரவும் ஆரம்பித்தனர்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தும் வேலைக்கு மாறாக, தனது குடும்ப பொருளாதார நலன்களை அதிகரித்துக் கொள்வதே ராமதாசின் பிரதான வேலையாக மாறியது. தன்னைத் தவிர தனது குடும்பத்தினர் எவரையும் கட்சி பொருப்புகளுக்கு கொண்டு வரமாட்டேன் என ஆரம்பத்தில் சவடால் அடித்த ராமதாஸ், மகன் அன்புமணியை தனது வாரிசாக கட்சியில் நிலைநாட்டினார். அவரின் இப்படியான செயல்பாடுகள் பாமக - வில் குழுச்செயல்பாட்டை தீவிரமாக்கியது.
தமது நடவடிக்கைகளை எதிர்க்க துவங்கிய பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் ஆகியோரை கட்சியிலிருந்து ராமதாஸால் இலகுவாக ஒதுக்கி விட முடிந்தது. ஆனால் ராமதாசுக்கு எதிரான வன்னிய சாதியினரின் கோபம் வேல்முருகன் வடிவில் வெடித்துச் சிதறியது. வன்னிய சாதியில் கணிசமானோர் வேல்முருகனோடு சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே, தமிழகத்தின் எந்த ஒரு இடத்திலும் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற அளவிற்கு பலவீனமைடைந்திருந்த பாமக, வேல்முருகனின் வெளியேற்றத்தினால் மேலும் பலவீனமாகியது.
இந்த இக்கட்டான சூழலில்தான், வன்னிய சாதி மக்களிடம் தான் இழந்து போன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட, கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியை பாமக மீண்டும் கையிலெடுத்துள்ளது.
இதற்கு முன்னமே வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்தி தோல்வி கண்டிருந்த பாமக, மீண்டும் அதை கையிலெடுத்திருக்கிறது. தனது இந்தச்செயல் தற்கொலைக்கு ஒப்பானது என்று பாமக தலைமைக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் பாமக உயிர் வாழ இதைத் தவிர அதற்கு வேறுவழியுமில்லை!
கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனோடு நயவஞ்சக நாடகமாடி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதன் செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாலும், அதன் தலைமை போராடும் குணத்தை இழந்து பிழைப்புவாத கும்பலாக மாறி விட்டதாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து உடனடி எதிர்தாக்குதல் சாத்தியமில்லை என்று பாமக தலைமை உறுதியாக நம்புகிறது. இதனால் தான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தனது செயல்பாடு எதிர்காலத்தில் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் கூட, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி அதை தெரிவு செய்து விட்டது.
தன்னுடைய இந்த செயல்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் எதிர் விளைவுகளை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி வெறி அமைப்புகளுடனும் பாமக கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் அறிக்கை போர் நடத்தும் அளவிற்கு மட்டுமே திறன் படைத்தவைகளாக இருப்பதும், பாமகவின் தற்போதைய நிலையை ஆளும் கும்பலும் தனது தேவையின் காரணமாக ஆதரிப்பதும் போன்ற காரணங்களால் தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய ஆதிக்க சாதி வெறியை தனித்து நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற யதார்த்தமான உண்மைகளைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் பதிவு செய்திருந்தோம்.
தொடரும்.....

Tuesday, 8 January 2013

 விடுதலைச் சிறுத்தைகளிடம் தலித்துகள் நம்பிக்கை இழந்தது ஏன்?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 2
வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வை அமைப்பாக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடு சாதி, தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தவிர்க்கவியலாத வரலாற்றுப் பாத்திரமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், தமது செயல்பாட்டின் ஊடாக, விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி தீண்டாமைக்கு எதிரான உணர்வை மேலும் மேம்படுத்தியது. இதனால் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு மிக்க அமைப்பாகவும் அது திகழ்ந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் கொண்டே வருகின்றனர். இந்த ஆதிக்க சாதிவெறி பார்ப்பனியமாக அமைப்பாக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல் தளம் கிராம அளவிலானதாக சுருங்கி இருந்தது.
thirumavalavan_ramadoss_500
ஆனால் வன்னிய ஆதிக்க சாதி வெறி பாமக - வினால் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் எல்லை பரந்து விரிந்த போது, இதற்கு முன்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து சட்டப்பூர்வமாக கிடைத்த வாய்ப்புகள், உரிமைகளினால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த வாழ்வாதார நலன்களை பல இடங்களில் அமைப்பாக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறி, தனது கோரப்பசிக்கு இறையாக்கிக் கொண்டது.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் போராடி முறியடிக்காவிட்டால், தாங்கள் உயிர் வாழக்கூட முடியாது என்ற நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த உணர்வை அமைப்பாக்கி, வன்னிய ஆதிக்க சாதிவெறிக்கு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சில இடங்களில் பதிலடி தந்தனர் விடுதலைச் சிறுத்தைகள். இந்த எதிர்தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியதே ஆயினும் காலம், காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தி இருமாந்திருந்த வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கும்பலுக்கு, இது முற்றிலும் புதியது என்பதால் இதை எதிர்கொள்ள முடியாமல் அது திணறியது, அஞ்சி நடுங்கியது.
 தமது இந்த சிறு எதிர்வினையாற்றலைக்கூட எதிர்கொள்ள வக்கற்ற ஆதிக்கசாதிவெறி கும்பலின் பலவீனத்தை அறிந்து கொண்டதால், ஏற்பட்ட உற்சாகம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே காட்டுத்தீயாய் பற்றிப் பரவியது பட்டி, தொட்டியெங்கும் விடுதலைச் சிறுத்தைகளாக அவர்கள் தம்மை அமைப்பாக்கிக் கொண்டனர்.
 இதன் காரணமாக வன்னிய ஆதிக்க வெறியின் அடையாளமான பாமக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தனது செயல்பாடு தற்கொலைப்பாதை என்பதை உணர ஆரம்பித்தது. இந்த உணர்வின் வெளிப்பாடுதான், பாமகவை தாழ்த்தப்பட்ட மக்களோடு அரசியல் ரீதியான கூட்டு என்ற நயவஞ்சக நாடகத்தை நடத்த வைத்தது. அமைப்பாக்கப்பட்டு மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறித்தாக்குதல் வடிவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு முந்தைய கிராம அளவிலானதாக சுருக்கிக் கொண்டது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது நயவஞ்சக நாடகத்தில் திருமாவளவனை பங்கேற்க வைத்ததன் மூலம், ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாடாக திகழ்ந்த விடுதலை சிறுத்தைகளை தனது பாத்திரத்தை கைவிட வைத்தது.
தமது செயல்பாட்டுக்கான தளத்தை கைவிட்டதும் வேறொரு ஆதாயத்தை அதாவது அரசியல் கட்சிகளோடு தேர்தல் கூட்டு என்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு பெற்றுத்தந்தது. இதன் மூலம் சிறுத்தைகள் பொருளாதார ஆதாயங்களை அடைந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே தம‌து செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்த பொருளாதார ஆதாயங்கள் பெருமளவில் அரசு எந்திரத்தோடு ஏற்பட்ட உறவின் மூலம் கிடைத்தது . இது படிப்படியாக வளர்ந்து அரசு எந்திரத்திற்கான தரகு வேலை பார்ப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் பிரதான வேலையாக, அலுவலாக மாறிப்போனது.
 சாராம்சத்தில் இது விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகமாகும். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து மேலும், மேலும் தனிமைப்பட்டு அவர்களிடையே செல்வாக்கை இழக்க ஆரம்பித்தனர்.
மக்கள் நலன்களைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடுவதற்கும், தம்மை அர்பணித்துக் கொள்வதற்கு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புகளுக்கும் உரிமை உண்டு. மக்கள் நலனை பாதிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை.
 சாதி தீண்டாமையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெடும்பயணத்தில் வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுப்பது என்பதோடு விடுதலைச் சிறுத்தைகளின் பாத்திரம் நிறைவு பெற்று விட்டது. இந்த அளவில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு தாழ்த்தப்ப‌ட்ட மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியும் இருந்தார்கள்.
 இந்த வரம்பிற்கு மேல் சாதி தீண்டாமை ஒழிப்பில் சிறுத்தைகள் பங்காற்றவும் முடியாது.
ஆதிக்க சாதி வெறித் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினையாற்றல் நடவடிக்கையின் உள்ளடக்கம் பெருமளவில் தற்காப்பு என்பதே ஆகும், இதுவே சாதி தீண்டாமையை ஒழித்து விடாது.
 சாதி, தீண்டாமை நீடிப்பதற்கான அடிப்படையை சமுக மாற்றத்தின் மூலமே அகற்ற முடியும், இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே தனித்து நின்று சாதித்து விடமுடியாது. இதை சமுகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஒருங்கிணைப்பின் முலமே அடைய முடியும்.
 விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், சாதி தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆதிக்க சாதி வெறியை கட்டுப்படுத்துதல் என்ற வகையிலான பாத்திரமே ஆற்ற முடியும்.
இது நிலவுகிற சமுக அமைப்பிற்கு உள்ளேயே ஆற்றும் பாத்திரமாகும். ஆகவே இது சாராம்சத்தில் நிலவுகிற சமுக அமைப்பை ஏற்கும் சீர்திருத்த நடவடிக்கையே ஆகும். நிலவுகிற சமுக அமைப்பை தூக்கி எறியாத சீர்திருத்த நடவடிக்கையின் உள்ளடக்கம், சாதி இருக்க சாதியினால் எழும் விளைவுகளை கட்டுபடுத்துவது என்பதே. அதாவது சாதியின் செயல்பாட்டு வடிவத்தை மாற்றுவதாகும்.
சாதிகள் இருக்கும் வரை அதன் பிரிக்க முடியாத அங்கமான தீண்டாமையும் நீடிக்கவே செய்யும். அவைகள் வடிவ மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் சாதி தீண்டாமை ஒழிப்பில் தமது வரலாற்றுப் பாத்திரத்தை தாண்டித் செயல்பட முனையும் செயல்பாடுகள் அனைத்தும் அவர்களைத் தவிர்க்கவியலாமல் பிழைப்புவாத புதைகுழிக்குள்தான் தள்ளிவிடும்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளின் பிழைப்புவாதத்திற்கான அடித்தளம் அவர்களின் அரசியல் பாதையில் தான் கருக்கொண்டுள்ளது.
எந்த ஒரு அமைப்பினதும், குழுவினதும் பிழைப்புவாதமும் தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளிலிருந்து உருவாவதில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாதமும் திருமாவளவன் என்ற தனி மனிதரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது எமது கண்ணோட்டமோ, கருத்தோ அல்ல. உண்மையிலேயே, மனப்பூர்வமாக தங்கள் சமூக நலன்களுக்காக பாடுபட வேண்டும், அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கூட, இவர்களின் இந்த விருப்பமே அதை நிறைவேற்றிவிடாது. அதற்கு மாறாக தாங்கள் அடைய விரும்பும் இலக்கும், அதை அடைவதற்கு அவர்கள் தெரிவு செய்து கொள்ளும் வழிமுறைகளுமே இதைத் தீர்மானிக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக தாம் தொடர வேண்டும் என திருமாவளவன் கருதியிருந்தால், வன்னிய ஆதிக்க சாதிவெறி அமைப்பான பாமக ராமதாசுடன் ஒப்புர‌வு நாடகமாடியிருப்பாரா?
வன்னிய ஆதிக்க சாதி வெறியால் அன்றாடம் பல்வேறு வடிவங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, இருசாதி மக்களிடையே எவ்வித ஒப்புர‌வும் ஏற்படாதபோது ராமதாசும், திருமாவளவனும் ஒப்புர‌வு கொண்டாடியதை தமது விருப்பத்திற்கு மாறானது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதியதில் என்ன தவறு இருக்கிறது?
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த கருத்தைத்தானே இப்போதுமட்டுமல்ல அப்போதும் எங்களைப் போன்றோர் வெளிப்படுத்தினோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கிய அங்கீகாரத்தை, தேர்தல் பங்கேற்பு, அரசியல் கட்சிகளோடு கூட்டு என்று அவர்கள் வரம்பு மீறி தவறாகப் பயன்படுத்திய போதே, இது உங்களை பிழைப்புவாத புதை சேற்றில் தள்ளிவிடும் என்று பலரும் எச்சரித்தபோது, இதை ஏற்க மறுத்து, 'போராட்டங்களினால் மேல்சாதி மக்களோடு பகையும், வழக்குகளுமே வந்து சேர்கிறது. அதற்கு மாறாக அவர்களோடு இணைந்து நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தால்தான் சாதி, தீண்டாமையைக் கட்டுப்படுத்த முடியும்' என்று தானே தமது செயலை நியாயப்படுத்தினார்கள்.
ஆதிக்க சாதி அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டாலும், மக்களிடம் தாம் இழந்த செல்வாக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதி வெறியை தூண்டுவதன் மூலம் மீண்டும் நிலை நாட்டி விட முடியும் என்பதை தர்மபுரி நிகழ்வின் ஊடாக பாமக நிரூபித்துள்ளது.
இதை எங்களைப் போன்றோர் அன்றே கூறி எச்சரித்தோமே, அதை ஏன் திருமாவளவன்கள் ஏற்கவில்லை?
'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டமுடைய' எங்களால் கூற முடிந்ததை, 'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் சித்தாந்த அடிப்படையைக்' கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தடுத்தது எது?
தொடரும்...
தொடர்புடைய கட்டுரைகள்:

Monday, 31 December 2012

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும்

மாற்றங்கள் விருப்பமல்ல, விதி! விதிகளுக்கு முரணான விருப்பங்கள் நிராகரிப்பிற்குள்ளாகும்!
தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பாமகவின் வன்னிய ஆதிக்கசாதி வெறியாட்டத்தைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ”பாமகவின் சாதிவெறியும் புரட்சிகர அமைப்புகளின் தோல்வியும்”, என்ற கட்டுரையை கீற்று இணைய தளத்தில் வெளியிட்டார். இதில், இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியாட்டத்தில் மகஇக-வைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்து கொண்டதாக அபாண்டமாக பழி சுமத்தியிருந்தார்.
தன் மீதான விடுதலைச் சிறுத்தைகளின் குற்றச்சாட்டை மறுத்து மகஇக குழும இணைய தளமான வினவு வாதாடியது. இதையொட்டி நாங்கள் “தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்கள்” மற்றும் “சாதி வெறியாட்டங்களும் புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்” என்ற கட்டுரைகளை கீற்றில் வெளியிட்டிருந்தோம்.
மகஇக மீதான அபாண்டமான பழியை, அப்பட்டமான பொய்யை எவ்வித கூச்சமும், நெருடலும் இன்றி வன்னி அரசு கூறியுள்ளதற்குக் காரணம், அந்த அமைப்பின் மீது விடுதலைச் சிறுத்தைகளுக்குள்ள தனிப்பட்ட பகையினால் அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான வெறுப்பு, ஆத்திரம் ஆகியவைகள்தான் இதற்குக் காரணம். தர்மபுரி நிகழ்வுகளுக்குப் பின்னரும் பாமகவோடு இணக்கமானப் போக்கை கடைபிடிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான போதாமையைக் கொண்டிருந்தாலும், அதை எதிர்த்து தொடர்ந்தும் போராடிவரும் கம்யூனிச அமைப்புகள் மீது வெறுப்பை கக்கியுள்ளார்கள்.
விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத அரசியலுக்கு அடித்தளமான தாழ்த்தப்பட்டவர்களை, கம்யூனிச அமைப்புகளும் தமது செயல்பாட்டுக்கான அடித்தளமாக கொண்டிருப்பதுதான் மார்க்சியத்தின் மீதான இவர்களின் பகைமைக்கான அடிப்படையாகும்.
மகஇக குழும அமைப்புகளும் பிழைப்புவாத அமைப்புகளாக மாறிய பிறகு சாதி, தீண்டாமையையும் தமது தேவைக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் என்பதை, அதற்கான வலுவான ஆதாரங்களுடன் நாங்கள் கட்டுரையாக வெளியிடும் வரை விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள வேறுஎந்த அமைப்பிற்கும் இந்த உண்மை தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை.
ஏனென்றால், சாதி, தீண்டாமையை தனது பிழைப்புவாதத்திற்கு பயன்படுத்தும் மகஇக‍வின் வழிமுறை விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொள்ளும், தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவைகள் பலவீனமான வடிவங்களைக் கொண்டதல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
அப்படியே இந்த உண்மை நாங்கள் அம்பலப்படுத்துவதற்கு முன்பே, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தெரிந்திருந்தாலும் கூட அதற்காக மகஇக குழும அமைப்புகளிடம் மட்டுமே இவர்கள் பகைமை பாராட்டுவதுதான் நேர்மையான, நாணயமான செயலாக இருக்க முடியும்.
தமக்குக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் மகஇக-குழும அமைப்புகள் புரட்சிகர அமைப்புகள் இல்லை என்பதை அரசியல், சித்தாந்த ரீதியாகவும் நடைமுறையிலும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாங்கள் மக்கள் நலனை நேசிப்பவர்கள் என்பதையும், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான அரசியலையும், வழிமுறைகளையும் கொண்டவர்கள் என்பதையும் நிறுவியிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கு நேர்முரணானவர்கள் தாங்கள் என்பதைத்தான் மகஇக அமைப்பின் மீது அபாண்டமாக பழி சுமத்தியதன் மூலமும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்ததின் மூலமும் நிரூபித்துள்ளனர். அதோடு தனது பிழைப்புவாத நலன்களுக்காக நாங்கள் எப்படிப்பட்ட இழிவான செயலையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளனர்.
 எமது கட்டுரைகள் கீற்றில் வெளிவருவதற்கு முன்னர் போர் முரசு கொட்டிக்கொண்டிருந்த வன்னி அரசும், வினவும் கட்டுரை வெளிவந்த பின்னர் வாயை இறுக மூடிக்கொண்டனர். ஆனால் சில வாசகர்கள் எமது கட்டுரைகளின் மீது தமது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் தம்முடையதை மட்டுமல்ல, தம்மைச் சார்ந்தவர்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற வாசகர் அழுத்தமான பதிவு ஒன்றை அளித்துள்ளார்.
”ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தால் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை, ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்தில் அதன் தேவையை மறுக்க முடியாது. மற்ற பிழைப்புவாத கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் மறுபுறம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது” என்றும்,
“ஒரு புறம் அருவறுக்கத்தக்க பிழைப்பு அரசியல் இருந்தாலும் மறுபுறம் ஒரு மாற்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் செய்துள்ளது. வெறும் பொருளியல் அடிப்படையிலான இந்திய சமூகத்திற்குப் பொருந்தாத மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் ஏற்படும் நடுநிலை பிழைகள் நீங்கள் காண்பது” என்ற தனது கருத்தின் மூலம் தமது மற்றும் சித்தாந்த ரீதியாக தன்னைச் சார்ந்தோர் அனைவரின் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேலாதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனிய சமூக அமைப்பு என்றென்றைக்கும் மாற்ற முடியாதது என்றுதான் கருதப்பட்டது. பார்ப்பனிய சமூக அமைப்பினால் காலம், காலமாக ஆதாயம் அடைந்தவர்கள் சமூக மாற்றம் தவிர்க்கவியலாத ஒன்றாகிய பின்னரும் அதை இன்றுவரை ஏற்க மறுத்தே வருகின்றனர்.
•             இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்த பார்ப்பனிய கல்விக்கு மாற்றாக மெக்காலே கல்வி முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தபோது, பார்ப்பனக் கும்பல் அதை ஏற்க மறுத்தது. இந்த எதிர்ப்பு தனது நலன்களுக்குப் பயன்படாது என்று புரிந்துகொண்டவுடன் மெக்காலே கல்வி முழுவதையுமே தனதாக்கிக் கொள்ள முயன்றது.
•             அரசு எந்திரத்தோடு தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தம்மால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு, இப்போதும் கல்வி கற்கும் உரிமையை இல்லாமல் செய்வதற்கு முயன்று பார்த்தது.
•             இந்தியாவிலும், இலங்கையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டபோது தண்டவாளங்களைப் பெயர்த்தார்கள். அதையும் மீறி ரயில் வந்த போது கல்லால் அடித்தார்கள் ஆதிக்கசாதி வெறியர்கள்.
•             பள்ளு, பறைகள் தொட்டால் தீட்டு, நாடானைக் கண்டாலே தீட்டு என்றும் இச்சாதிப்பெண்கள் இடுப்பிற்கு மேல் துணி உடுத்தி தமது மார்பகங்களை மறைத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் கோரத் தாண்டவமாடியவர்கள் அவற்றில் மாற்றம் வருவதையும் ஏற்க மறுத்தனர். பின்னர் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பதையும், ரயில், பேருந்துகளில் பயணிப்பதையும், செருப்பணிவதையும்,சைக்கிள் ஓட்டுவதையும் ஏற்க மறுத்து அடம்பிடித்தனர்.


ஆனால், இந்த விருப்பங்களில் எதிலும் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு மாறாக தோல்வியை மட்டுமே சந்தித்தனர். அன்று முதல் இன்று வரை எப்போதுமே, எங்குமே ஆதிக்கச்சாதிகள் - சமூக,பொருளாதாரம் உட்பட எந்த ஒரு துறையானாலும் – தனக்கு ஆதாயம் தரக்கூடிய எதுவும் மாறாமல் அப்படியே நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றன.
ஆதிக்க சாதிகளின் மேற்கண்ட விருப்பத்திற்கு மாறாக, இவர்களால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களோ இவைகள் மாற வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட விருப்பங்களே அதை நிறைவேற்றித் தந்துவிடுவதில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளின் விருப்பங்கள் தொடர்ந்து நிறைவேறியதற்கு எது காரணமாக இருந்ததோ, அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பங்கள், நிறைவேறாமல் இருந்ததற்கும் காரணமாக இருந்தது.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் இன்றும் அப்படியே தொடர்ந்தாலும் இவைகள் ஏறத்தாழ நூற்றுஐம்பது ஆண்டுகளாக படிப்படியாக தோல்வியையே சந்திக்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களோ, ஆதிக்க சாதிகள் தம்மீது செலுத்தும் ஒடுக்குமுறைகள் முற்றாக ஒழிய வேண்டும் என்று விரும்பினாலும் இவர்களின் இந்த விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் முற்றாக தோல்வியடையாமல் அவைகள் தொடர்வதற்கு எது காரணமோ, அதுவே தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறாமல் இருப்பதற்கும் காரணமாகும்.
அன்று முதல் இன்று வரை எங்கேயும், எப்போதும் மனித விருப்பங்கள் எதுவாயினும் அவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மாற்றங்கள் மாறாத உண்மைகளாகிவிட்டன.
உண்மையிலேயே சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள், தமது இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்கும்,செயல்வடிவம் பெறுவதற்குமான - அடித்தளத்தை உருவாக்குவதற்கான - திட்டத்தையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அவைகள் நிறைவேறும். இதுவல்லாது இவ்விருப்பங்கள் எவ்வளவு நியாயமானதாயினும் அவைகள் நிறைவேறுவதற்கான அடித்தளம் உருவாகும் வரை அவைகள் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்கும்.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் விதிகளுக்கு முரணாக இருப்பதால்தான் அவைகள் படிப்படியாக சமூக வளர்ச்சிக்கு ஏற்ப தோல்வியைச் சந்திக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உற்பத்தித் துறையில் மாற்றம் நிகழாமல் தடுத்துவந்த தடைக்கல்லை ஆங்கிலேயர்கள் அகற்றி உற்பத்தியில் புதிய மாற்றத்தை திணித்தபோதே ஆதிக்க சாதிகளின் தோல்விகளும் தவிர்க்க இயலாதவைகளாகிவிட்டன. ஆனாலும் இந்த உண்மைகளை ஆதிக்க சாதிகள் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கும், இந்த விருப்பங்கள் மீண்டும், மீண்டும் முளைவிடுவதற்கும் ஏற்ற அடித்தளம் இன்னமும் நீடிப்பதே காரணமாகும்.
தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டால் தீட்டு, அவர்கள் தமது தெருக்களில் நடந்தால் தீட்டு. இந்தத் தீட்டை போக்குவதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் காலடி தடத்தை அழிக்க அவர்களின் இடுப்பிற்கு பின்னால் பனை ஓலையை கட்டி இழுத்துவரச் செய்தும், அவர்களின் எச்சில் தரையில் படாமல் இருக்க கழுத்தில் கலயத்தை கட்டிவரவும் நிர்பந்தித்தனர். இவைகளை மீறியவர்களை அடித்து உதைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினர். சில தருணங்களில் கொலையும் கூட செய்து அச்சுறுத்தினர்.
அதன் பிறகு சமூக வளர்ச்சியின் விளைவாக, தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி தெருக்களில் நடமாடுவது தவிர்க்கவியலாத செயலாக மாறியபோது அவர்களை தொட்டுவிட்டால் அந்தத் தீட்டைப் போக்க மாட்டுத்தொட்டியின் 'அதி சுகாதாரமான' நீரை தலையில் தெளித்துக் கொண்டனர். பின்னர் அதுவும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்ட பின்னர் எவனும் தமது தோல்விக்காக தூக்கு கயிற்றை தெரிவு செய்து கொள்ளவில்லை!
இன்று தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் சாப்பிடுவது கூட தீட்டில்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றங்களின் தொடர்ச்சி, வளர்ச்சி தான் சாதிமறுப்புத் திருமணங்கள்.
சமூக நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்டோரையும், பெண்களையும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்ததன் மூலமே சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை செயல்படுத்த முடிந்தது.
இனி அப்படி செய்ய முடியாது என்றாகி அவைகள் தவிர்க்கவியலாத, இயல்பான அன்றாட நிகழ்வுகளாகி விட்ட பின்னர் சாதியையோ, தீண்டாமையோ, பெண்ணடிமைத்தனத்தையோ முந்தைய வடிவில் அப்படியே பாதுகாக்கவும் முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு கொள்வதையும், காதலிப்பதையும், தடுத்து நிறுத்திவிடவும் முடியாது.
மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் உட்பட எதிலும் சாதி பார்க்க முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்ள சாதி பார்க்க முடியாது, தேவை இல்லை என்று கருதுவது என்பதும் சரியானதுதான். முன்னதை சாதிவெறி பிற்போக்காளர்களால் தடுக்க முடியாததைப் போன்றே, பின்னதையும் என்னதான் அச்சுறுத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆதிக்க சாதி வெறியர்கள் தமது பிற்போக்குத் தனத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வளவு கொடூரமான, கோரமான வழிமுறைகளைக் கையாள்கிறார்களோ, அது அவர்களின் பலத்தின், நியாயத்தின் வெளிப்பாடல்ல. அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு.
எனவே சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் புறம்பான இவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவுவது என்பது தவிர்க்கவியலாதவைகளாகும்.
இவர்கள் தமது பிற்போக்குத்தனத்தைப் பாதுகாக்க எந்த ஆயுதத்தை தேர்வு செய்கிறார்களோ, அதுவே அவர்களின் தோல்வி, அழிவு ஆகியவற்றுக்கான தேர்வுமாகும்.
ஏனென்றால் இவர்கள் தடுக்க நினைப்பது தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல, இதனூடாக சமூக வளர்ச்சியையும், முன்னேற்றத்தையுமே தடுக்க முனைகிறார்கள்.
எனவே யாருடைய வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முனைகிறார்களோ அவர்கள் சமூக வளர்ச்சியின், முன்னேற்றத்தின் பிரதிநிதிகள். எனவே இவர்கள் தமது எதிர் வினையாற்றல்களின் ஊடாக ஆதிக்க சாதிவெறியர்களுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள்.
சமூக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தவிர்க்கவியலாத இந்த சங்கிலித் தொடர் நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் பலத்தரப்பட்ட பிரிவினர் தமது பங்களிப்பை செலுத்துவது தவிர்க்கவியலாதது ஆகும்.
வன்னிய ஆதிக்க சாதிவெறி பிற்போக்குத்தனத்திற்கு எதிரான விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பும், பாத்திரமும் இத்தகையதேயாகும்.
                                                                                                                                தொடரும்....