இது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மனங்களில் உள்ள கோபத்தை, குமுறலை வெளிப்படுத்திய விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரொட்டி.இதை தமிழ்நாடு, கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் நகரில் ஒன்றுவிடாமல் கிழித்தும், மேய்ந்தும் உள்ளனர் போலிஸ் பாதுகாப்புடன் திமுக காலிகள்.
சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்றுக் கருதுவதை போன்று,சுவற்றில் ஒட்டியதை கிழித்துவிட்டால் மக்கள் மனங்களில் உள்ளதையும் கிழித்துவிட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களா? அல்லது விலை உயர்வை எவனும் பேசகூடாது என்று மக்களை எச்சரிக்கிறார்களா? நிச்சயம் அவர்கள் நம்மை மிரட்டுகிறார்கள்.ஏனென்றால் தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிமெண்ட்,இரும்பு கம்பெனிகளை கருணாநிதி குடும்பம் வளைத்துப் போட்டுவிட்டது.இப்பொருட்களின் விலை உயர்வால் கருணாநிதி குடுமபத்திற்கும்,முதலாளிகளுக்கும் கோடி கோடியாய் கொட்டுகிறது.இதனால் தான் அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள குடிசைகள் அனைத்தையும் கல்வீடாக்குவேன்.அதன்படி முதற்கட்டமாக மூன்று இலட்சம் குடிசைவாசிகளுக்கு தலா,ரூ.75,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் கலைஞர்.ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழுத கதையை போன்று கலைஞரின் கதை,வசனத்தை நம்பி மக்களும் தமது குடிசைகளை பிரித்துப் போட்டனர்.இத்திட்டத்தில் அரசு முன்பணம் ஏதும் தராது என்று அறிவித்துவிட்டதால் கடன் வாங்கி மக்கள் வேலையை தொடங்கினர்.வேலையை தொடங்கியவுடன் கட்டுமானப் பொருட்களின் விலைகள்,இரண்டுமடங்குக்கும் மேலாக உயர்ந்துவிட்டது.இதனால் இருந்த குடிசைகளையும் இழந்துவிட்டு,கல்வீட்டை கட்டவும் முடியாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள்.கட்டுமான பொருடகளின் விலை உயர்வைப் பற்றி கலைஞர் தனது மேல்வாயையும்,கீழ்வாயையும் பொத்திக்கொண்டு மவுனம் சாதிக்கிறார்!
இரண்டொரு நாட்களில் பருவமழையும் துவங்கப் போகிறது.இருந்த குடிசையும் இழந்துவிட்டு தவிக்கும் மூன்றுலட்சம் ஏழைகளின் மனக்குமுறல் தான் அந்த சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். .சரி,கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கோபப்படுவார்கள், அதனால் வரும் தேர்தலில் தமக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என்று முத்தமிழையும் வித்தவ(க)ருக்கு தெரியாதா? தெரியும்.அதனால் தான் தனது கட்சியினரை ஓர் ஆய்வு செய்யச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறாராம் கருணாநிதி.கழக கண்மணிகள் ஆய்வு செய்ததில், மக்கள் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 1500/- எதிர்பார்ப்பதாகவும்,மேலும், நாம் நல்லது செய்தால் மட்டும் மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டுவிடமாட்டார்கள்.பணம் தான் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் என்று உறுதியாக முடிவுக்கும் வந்து அதை தலைமைக்கும் அறிவித்துள்ளனராம்! இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறார் கலைஞர்.ஒன்று இலவச திட்டங்களால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது. இரண்டு மக்கள் மற்றும் அரசுப் பணத்தை தமது,மற்றும் பிற முதலாளிகளின் ஆலைகளுக்கு திருப்பி, விலையை உயர்த்தி கோடி,கோடியாய் கொள்ளையடிக்கிறார்கள்.
இப்படி கொள்ளையடித்த பணத்தின் ஒருப்பகுதியை மக்களிடம் விட்டெறிந்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என்பது இவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை! இந்த நம்பிக்கை தான் விலை உயர்வை இவர்களை நியாயப்படுத்த வைக்கிறது.கவலைப்படாமல் தூங்கவைக்கிறது.இந்தக் கோட்பாடு ஒருக்கட்சிக்கு மட்டும் சொந்தமில்லை.இந்தியா முழுக்க உள்ள ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது கோட்பாடாக வரித்துக் கொண்டிருப்பது இதைதான். விதையொன்று போட்டு, சுரையொன்றா முளைக்கும்?
வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை மாற்றிக்கொண்டால் மட்டும் அதன் அடித்தளம் மாறியாவிடும்? இயக்கும் ஆளை மாற்றிவிட்டால் கழுதை, குதிரையாகவா மாறிவிடும்? இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.இதை குழிதோண்டி புதைக்காமல் இதற்கு தீர்வு எதும் இல்லை.

