விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Friday, 30 September 2011

அதிகார வர்க்கம் இருக்கும் வரை,வாச்சாத்திகளும் இருக்கும்!

கால தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.1992-ம் ஆண்டில் வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது ஏவி விடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத, பாலியல் தாக்குதல்களுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர்தான் செத்தவன்களை போக உயிரோடு இருக்கும் 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதில் 198 பேருக்கு உடனடியாகவே பிணை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லாமல் 17 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி பழங்குடி கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்திய 269 பேரும் தமிழக அரசின் வனத்துறை,காவல்துறை,வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இந்த பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட 269 பேரில் எவனும் மக்களுக்கு எதிராக இப்படிபட்ட அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று எதிர்ப்போ,மறுப்போ தெரிவிக்கவில்லை.அந்த அளவிற்கு கடைமை உணர்ச்சி! இவர்களில் எவனிடமும் நம் சொந்த மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதும் இருக்கவில்லை.ஈழத்தமிழர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும்,சிங்கள ராணுவத்திற்கும்,இந்த அயோக்கியர்களுக்கும் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.


அரசு வேலையில் சேரந்தவுடனே, தான் சராசரி மனிதன் என்பதையே முற்றாக மறந்துவிடுகிறார்கள் என்பதைதான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.எந்த மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்களோ அந்த மக்களைத்தான் இவர்கள் தமது பொது எதிரியாக கருதும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.இப்படி இவர்களை பயிற்றுவிப்பது யார்?


இவ்வளவு பெரிய பயங்கரவாத, பாலியல் தாக்குதலை இந்த அளவுக்கு திட்டமிட்டு,இவ்வளவு பேரை திரட்டி செய்ய முடிகிறது என்றால்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுதான் இது பற்றி தெரியுமா? இவர்களின் மேலதிகாரிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதா? அப்போது இருந்த அரசுக்கும் தெரியாதா?இவர்களுகெல்லாம் தெரியாமல்தான்,இவர்களுக்கு உடன்பாடு இல்லாமல்தான்,இவர்களின் அனுமதி இல்லாமல்தான் இப்பயங்கரவாத பாலியல்தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இவர்களை பாதுகாக்க இவர்களின் உயர் அதிகாரிகளும்,அரசாங்கமும் முயன்றது எதற்காக? இப்படி இவர்களை பாதுகாக்க முயன்றது குற்ற நடவடிக்கையா இல்லையா? இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை, யார் கொடுப்பது?
இப்படிப் பட்ட சம்பவங்கள் வாச்சாத்தியோடு முடிந்துவிட்டதா அல்லது முடிந்துவிடுமா? அண்மையில் பரமக்குடியில் இதே  போன்ற திட்டமிட்ட தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டதே! அது எந்த வகையான தாக்குதலாம்? இது மட்டுமா அன்றாடம் ஒவ்வொரு போலிசு நிலையத்திலும் சிறிதும்,பெரிதுமான சட்டத்திற்கு புறம்பான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவருகின்றனவே அவைகளை இந்த தீர்ப்பு தடுத்துவிடுமா?

ஒவ்வொரு அரசு அலுவலகமும்  மக்கள் விரோத கூடாரமாகத்தானே திகழ்கின்றன.இலஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலாவது எந்த ஒரு காரியத்தையாவது மக்கள் சாதித்துவிட முடியுமா? லஞ்சம் கொடுப்பது என்பது நடுத்தர,மேட்டுக்குடி கும்பலை பொருத்தவரை அவர்களின் வாழ்வையே சிதைத்துவிடும் அளவுக்கு பெரிய விவகாரமில்லை.ஆனால் ஒருநாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெரும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு இந்த லஞ்சம் சதாரண விவகாரமா?உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் அங்கேயே துடிதுடித்து செத்துபேகிறார்களே இதற்கும் வாச்சாத்திக்கும் என்ன வேறுபாடு உள்ளது! வாச்சாத்தி பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின், மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கும் இதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

மொத்தமாக பார்த்தால் அதிகாரவர்க்க கும்பலே மக்கள் மீது அணுதினமும் தனது வெறுப்பையும்,ஆத்திரத்தையும் கொட்டி தீர்க்கிறது.மக்களை பழிவாங்குகிறது.இவைகள் அனைத்தும் தனி மனித பண்புகளோ,குற்ற செயல்களோ அல்ல.இது இந்த கட்டமைப்பின் பண்பாகும்.அது வெளிப்படும் விதத்தில்,வடிவத்தில்தான் வேறுபாடு உள்ளதே தவிர,அதன் சிந்தனா முறையில் எவ்வித மாற்றமும், வேறுபாடும் இருப்பதில்லை.ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்டு விடுவதால் அந்த அலுவலகத்தில் லஞ்சம் அன்றோடு ஒழிந்துவிடுவதில்லை.அதற்கு நேர்மாறாக பிடிபட்டவனுக்கு திறமையில்லை என்று ஏளனம் செய்யப்பட்டு மேலும்,மேலும் நுட்பமாக, முன்னிலும் தீவிரமாக லஞ்சம் தலைவிரித்தாடி மக்களை பழிவாங்குகிறது.

ஆகவே இப்படி பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நாம் அகமகிழ்ந்து போவதற்கு எதுவுமில்லை! மக்களுக்கு விரோதமாக மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே, சட்டப்படி பயிற்றுவிக்கப்படுகின்ற அதிகாரவர்க்க கும்பல் இருக்கும்வரை இப்படிபட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்!

சட்டமன்ற,நாடாளும் மன்ற உறுப்பினர்கள் முதல் அரசுத்துறையில் பணி புரியும் அனைவரும் மக்களால் தேர்ந்தேடுக்க படுபவர்களாகவும்,அவர்கள் தவறு இழைக்கும் போது திருப்பி அழைக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப் படுபவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும்.மொத்தத்தில் அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் கைகளுக்கு வரவேண்டும்.இப்போது இருக்கும் அனைத்து அதிகார அமைப்புகளும் குழிதோண்டி புதைக்கப் பட வேண்டும்.இது நடக்காத வரை வாச்சாத்திகளை எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்புகளாலும் தடுத்து விட முடியாது! 

Thursday, 29 September 2011

ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

இன்றளவும் நாட்டின் பெரும்பாண்மை மக்களுக்கு அதாவது 70 சதவீதம் மக்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்.நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் உணவளிப்பவர்கள் விவசாயிகள். நாட்டிலுள்ள எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த வெற்றியை தீர்மாணிப்பது விவசாயிகளின் வாக்குகள்தான். ஆனால் விவசாயிகளைப் பற்றி அரசியல் கட்சிகளும்,அதிகாரவர்க்கங்களும் கிள்ளுக்கிரையாகவே பார்த்துவருகின்றனர்.

நாட்டில் உள்ள அனைத்து ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளும் அயோக்கியர்களின் கூடாரமே என்பதை மக்கள் அனைவருமே அறிவர்.தங்களால் அன்றாட வாழ்வுக்கே அல்லல்படும் தங்களால் இவர்களை எதிர்த்து போராட முடியாது என்றே பெரும்பான்மை மக்கள் எண்ணுகின்றனர்.இந்த இவர்களின் சிந்தனை இயல்பாக அவர்களின் வாழ்நிலைகளில் இருந்து வந்துவிடவில்லை.அதை அரசியல் கட்சிகளும்,ஆளும் வர்க்கங்கள் ,அதிகாரவர்க்கம் ஆகியோர் திட்டமிட்டே மக்களின் மனங்களில் பதியவைத்துள்ளனர்.

ஒட்டுச்சீட்டு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல,புரட்சிகர சவடால் அடித்தவர்களும், மக்களுக்கு துரோகம் இழைத்து ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறுகிற போக்கு இந்திய புரட்சிகர வரலாற்றில் அடிக்கடி நிகழ்வதும், மக்களின் அவநம்பிக்கையை உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது,ஆனால் அதே நேரத்தில் உண்மையான புரட்சிகர ஜனநாயக சக்திகள் கிடைக்கும் போதேல்லாம் மக்கள் தமது இயல்பான போர்க்குணத்தை வெளிக்காட்டியே வருகின்றனர்.பெரும்பாலும் இந்த போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் அநீதிகளுக்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.இப்படிப்பட்ட போராட்டங்கள் அன்றாட பொருளாதார கோரிக்கைகளாகவே உள்ளன.

விவசாயத்தை ஆளும்வர்க்கங்கள் நன்கு திட்டமிட்டே சிதைத்து வருவதற்கு எதிரானதாக, பிரச்சனையை தீர்ப்பதற்கான நேரடியான கோரிக்கைகளையோ முழக்கங்களையோ புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்வைப்பதில்லை.தமது வெவ்வேறு திட்டத்தின் ஊடாக விவசாயத்தையும்,விவசாய பிரச்சனைகளையும் தொட்டுவிட்டு செல்லுகின்றனர்.இவைகள் விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில் கொண்டதாக இருப்பதில்லை.ஆகவே விவசாயிகள் இவர்களை நேர்மையானவர்களாக மதித்தாலும் தமது பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக பார்ப்பதில்லை.இதற்கு மாறாக இப்படிப்பட்ட விவசாய அமைப்புகளில் உள்ளவர்களின் செயல்களைப் பார்த்து அனுதாபப்படவே செய்கின்றனர்.ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் விவசாய அமைப்புகளில் இருந்தாலும், தாங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வைக்காத அதே நேரத்தில் தாங்களும் ஏனைய அரசியல் கட்சியினரைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறாமல் நொடிந்து போவதால் மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கையை விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொள்வதால்தான், இவர்களைப் பார்த்து மக்கள் அனுதாபப்படுகின்றனர்.இந்த அனுதாபத்தைதான் இவர்களும் அப்பாவித்தனமாக மக்கள் வழங்கும அங்கீகாரமாக, ஆதரவாக பாமரத்தனமாக கருதிக்கொள்கின்றனர்.நாளடைவில் விவசாயிகள் தமது அமைப்பில் இணைய முன்வராததை ஏனென்று ஆய்வுக்கு உட்படுத்தாமல்,விவசாயிகளை விவரமற்றவர்களாகவும்,பிற்போக்குவாதிகளாகவும் கருதிக்கொண்டு, இவர்கள் எந்த ஒரு போராட்டத்திற்கும் வரமாட்டார்கள் என்ற இயங்கியலுக்கு புறம்பான முடிவுக்கு வருவதோடு தாமும் விரக்தி அடைந்துவிடுகின்றனர்.

இதன் மூலம் விவசாயிகளின் அன்றாட பிரச்சனைகளைக் கூட பேசுவதற்கோ,போராடுவதற்கோ ஆளில்லாமல் போகிறது.இது ஆளும் வர்க்கங்களுக்கு மிகுந்த தைரியத்தை தந்து, விவசாயிகளுக்கு எதிராக எந்தவிதமான சிரமங்களாயினும்,துரோகமாயினும் அதை தருவதற்கும், இழைப்பதற்கும் தயங்குவதே இல்லை!
இது நாள் வரை விவசாயிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் விவசாயிகளின் பெயரில், மக்களின் வரிப்பணத்தை உரக்கம்பெனி முதலாளிகளுக்கு அளித்த மத்திய அரசு,தற்போது அந்த மானியத்தை நிறுத்திவிட்டது.அதற்கு மாறாக உரத்திற்கான விலையை முதலாளிகளே உயர்த்திக்கொள்ளலாம் என முதலாளிகளின் கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது.அரசு, உரக்கம்பெனி முதலாளிகளுக்கு மானியம் தந்த போதே அவர்கள் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளையடித்தனர்.அப்படி கொள்ளை அடித்த நிறுவனங்களுக்கு இனி அதைப் பற்றி சொல்லித்தரவா வேண்டும்!
சென்றாண்டு சம்பா பருவத்தில் 50 கிலோ டி.ஏ.பி உரம் ரூபாய் 585-க்கு விற்பனை செய்யப்பட்டது நடப்பு சம்பா பருவத்தில் அதிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டை உருவாக்கி இந்த ஆண்டோ அதே டி.ஏ.பி உரம் ரூ 825-க்கு விற்கிறார்கள்.இதனால் நடப்பு சம்பா பருவத்திலேயே இந்த வகை உரத்தின் விலை ரூபாய் 1000  வரை உயர வாய்ப்புள்ளது.விலை உயர்வு மட்டுமல்ல உரத்தின் மணி மற்றும் தழைச்சத்தின் அளவு 18:46 என்ற அளவில் இருந்து 16:44 என்ற அளவாக குறைத்தும் இரட்டிப்பு வழிகளில் உரமுதலாளிகள் கொள்ளை அடிக்க ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள்.

உரத்தட்டுப்பாடு,மின்தடை,மழை,வெள்ளம்,பூச்சி,நோய்,டீசல் விலை உயர்வு என ஆயிரம் பிரச்சனைகளைச் சந்தித்து,சமாளித்து நெல்லை உற்பத்திச் செய்து விற்பனைக்குக் கொண்டு சென்றால்,ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் தமக்கிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு போட்டியை தவிர்த்து விடுகின்றனர்.இதனால் தற்போதைய குறுவை சாகுபடியில் நெல் கிலோவுக்கு ரூபாய் 7 மட்டுமே விலை போகிறது,ஆனால் அரிசியோ கிலோவுக்கு ரூபாய் 30 விற்கிறது.ஒப்பீட்டு அளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விட, கூடுதல் விலை கிடைக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடப்பு குறுவை பருவத்தில் பெரும்பாலானவை திறக்கப்படாதது,நெல் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

ஆனால்,அதே நேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்க வெளிநாட்டு,உள்நாட்டு முதலாளிகளை மத்திய,மாநில அரசுகள் உருவுகின்றன,சலுகைகளை வாரி இறைக்கின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,தனியாக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,இலவசமாக தண்ணீர்,மின்சாரம் அனைத்தையும் அள்ளித்தருகின்றனர்.சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி பெற்ற 37 நிறுவனங்கள் அவற்றை இன்னும் அமைக்காததால்,அவர்கள் அவற்றை அமைக்க கால அவகாசத்தை நீட்டித்து வாலாட்டுகின்றனர் ஆட்சியாளர்கள்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 5-10 ஆண்டுகள் சலுகை என்று அறிவித்தாலும்,இந்த சலுகை காலம் முடிந்தவுடன் தமது நிறுவனங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு  வேறு புதிய பெயர்களில்  தொடர்ந்து இலவச சலுகைகளை அனுபவிக்கின்றனர்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் உள்நாட்டு,வெளிநாட்டு முதலாளிகள் அரசின் சலுகைகளை பெறுவதற்காகவே தொழில் தொடங்கி கொள்ளை அடிக்கின்றனர்.தனியே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசிடம் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் அரசின் மூலம் தமக்கு கிடைத்த நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்றுவிடுவதும் நடந்தே வருகிறது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் நாட்டிற்கு எந்தவிதமான லாபமும் இல்லை.இந்த மண்டலங்களில் இந்திய அரசின் சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது.இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களால் கொலையே செய்யப்பட்டாலும், நாம் நமது  நாட்டின் சட்டப்படி கேட்க முடியாது! இதுதான் இந்தியா வல்லரசு ஆகும் லட்சணமாம்! நம்புங்கள்!

ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளோ,அதிகாரவர்க்க கும்பலோ சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்திச் செய்யப்படும் பொருளையா அன்றாடம் தமது பசிக்கு தின்கிறார்கள்? அல்லது அம்முதலாளிகள் சாப்பிட்டுவிட்டு  பேளும் பீயை தின்கிறார்களா? இவர்கள் அதையும் செய்ய தயங்க மாட்டார்கள் மானம் கெட்டவர்கள்!

ஆனால்,நாம் நமது வாழ்வை இந்த நாய்களுக்கு பலிகொடுக்க முடியாது!

ஆகவே, விவசாயத்தை பாதுகாப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்!! நாட்டை பாதுகாப்போம்!!! வாரீர்!  

தொடர்புடைய பதிவுகள்:





5.ஊழல்:கயவாணி அண்ணா ஹசாரேவும், நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கையும்... !




Tuesday, 27 September 2011

மின் உற்பத்தி:அணு உலைகள் வேண்டாம்! மாற்று இருக்கிறது!

கூடங்குளம்:ஆறப்போடுஅணைந்துவிடும்…! கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? ஆகிய இரு தலைப்புகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.இப்போராட்டம் அவ்வட்டார மக்களின் போராட்டமாகவும்,ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை வேடிக்கை பார்ப்பது,பரபரப்பான செய்தி அல்லது நாட்டின் தேவைக்கு அணுமின்சாரத்தை விட்டால் வேறு என்ன வழியிருக்கிறது, என்கிற அடிப்படையில் அணுமின்சார உற்பத்தியை ஆதரிக்கும் மெத்தப்படித்த மேதாவிகளிடம் கருத்து நிலவுகிறது.

மின்சாரம் இன்றி இனி நம்மால் வாழமுடியுமா? என்கிற அளவுக்கு நமது வாழ்நிலை மாறிவிட்டுள்ளது.மீண்டும் பழைய காலத்திற்கே திரும்பவும் முடியாது.ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் முக்கிய தாதுப் பொருளான நிலக்கரியின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.நீர் மின்சாரம் மழைக்காலத்தில் மட்டுமே தமிழகத்தை பொருத்தவரை பலன் தரக்கூடியதாக உள்ளது.காற்றாலை மூலமான மின்சாரம் மிகவும் குறைந்த அளவிற்கே கிடைக்ககூடிய வளமாகவும் உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் அணுமின்நிலையங்கள் மூலம் தான் நமது நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறமுடியும் என்பதுதான் ஆட்சியாளர்கள் மற்றும் இதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பிகளின் மூலம் அனுப்பும் போது வீணாவது,தரமற்ற மின் வினியோக எந்திரங்களால் வீணாவது,மின் திருட்டு,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவது ஆகியவற்றின் மூலமும் தமிழக மின்வாரியம் பல்லாயிரம் கோடி இழப்பில் இயங்கிவருகிறது.

ரஷ்யாவின் செர்னேபில்.ஜப்பானின் புகிஷிமா அணு உலைகளின் விபத்துக்குப் பின்னர் உலகம் முழுக்கவே அணுமின்நிலையங்களை முற்றாக மூடுகிற திட்டத்தை பிரான்ஸ் உட்பட பல நாடுகள் வெளியிட்டுவருகின்றன.அதோடு மாற்று மின்உற்பத்திக்கான ஆய்வுகளை தொடங்கிவிட்டுள்ளன.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகளில் ஆக்கபூர்வமாக செயல் பட்டு வருகின்றன.ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ நமது அணு உலைகள் அனைத்தும்  மிகவும் பாதுகாப்பானவை என மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.

யுரேனியம் அணு தொழில்நுட்பத்தை விட,தோரியத்தை அடிப்படையாக கொண்ட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை, தமது ஆண்டை அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து கைவிட்டுவிட்டு அமெரிக்கவின் மிகவும் பின் தங்கிய,அரதப்பழசான யுரேனிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு 123 என்ற ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது மன்மோகன்சிங் தலைமையிளான கும்பல்.உலக தோரிய இருப்பில் நமது நாட்டில்தான் 70 சதவிதம் தோரியம் உள்ளது என்பதை நாம் சிறிது நினைத்து பார்த்தாலே நமது ஆட்சியாளர்களின் தேசத்துரோகம் பளிச்சென நமக்கு புரிந்துவிடும்.யுரேனியமோ,தோரியமோ இவை இரண்டுமே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவைதான். அப்படியானால் மின் தேவைக்கு மாற்று ஏதுமில்லையா? இருக்கிறது! ஆனால் அவற்றை செயல் படுத்தும் ஆர்வமோ,ஆற்றலோ நமது தேசத்துரோக ஆட்சியாளர்களுக்கு சிறிதுமில்லை.

தற்போது ஏனோ,தானோ என்று செய்யப்படும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்,கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தற்போது பெய்யும் மழைநீரில் 90 விழுக்காட்டுக்கும் மேல் கடலில்தான் கலக்கிறது.இந்த நீர் அனைத்தையும் சேமித்து, அதன் மூலம் சிறு,சிறு நீர் மின்நிலையங்கள் மூலமும் நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் தயாரிக்க முடியும்.
மழைநீரை சேமிப்பதன்  மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு,பாசனத்திற்காக நிலத்தடி நீரை விவசாயிகள் சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துவிடவும் முடியும்.இதோடு ஏராளமான மின்சாரத்தையும் சேமிக்க முடியும் .


முதலாளித்துவ உற்பத்தி என்பதே நுகர்பொருள் உற்பத்திதான். இதை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள் உற்பத்தியாக மாற்றுவதன் மூலமும்,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவதை தடை செய்வதன் மூலமும் மிகப்பெரிய அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின் உற்பத்தியை புதிய,ஆபத்தற்ற தொழில்நுட்பத்தை கொண்டு செய்தல்.மின்சாரத்தை வினியோகிக்கும் போது ஏற்படும் மின் இழப்பை சரி செய்தல்,விவசாயத்திற்கு இயற்கையில் இருந்து பாசன வசதியை ஏற்படுத்துதல்,பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவச,சலுகை விலையில் மின்சாரம் தருவதை நிறுத்துதல்,நுகர்பொருள் உற்பத்திற்கு மாற்றாக அத்தியாவசிய தேவைக்கான உற்பத்தியாக தொழில்துறை உற்பத்தியை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் மின்பற்றாகுறை என்ற சொல்லையே நாட்டில் இருந்து தூக்கியெறிய முடியும்.நமக்கு தேவையான மின்சாரம் அனைத்தையும் இயற்கை வளத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாமல்,இயற்கை வளங்களில் இருந்தே மின்சாரம் தயாரித்து,மின் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடையவும் முடியும்.

(ஜப்பான் - ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி படுகொலை செய்த படங்கள்.முதல் படம் குண்டு வீச்சுக்கு முன்பு எடுக்கப்பட்டது.இரண்டாவது படம் குண்டு வீச்சுக்கு பின்பு எடுக்கப்பட்டது.)

ஆனால், இவைகளை பற்றியெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாளர்களான நமது ஆட்சியாளர்களிடம் நாம் ஒருபோதும் எதிர்பாக்க முடியாது.பெரும்பான்மை உழைக்கும்  மக்களுக்கான புதிய சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இவைகளை சாதிக்க முடியும். அதற்கு சமூக மாற்றத்திற்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவோம்! நம்மையும் நமது எதிர்கால தலைமுறையையும் மொத்தத்தில் மனித குலத்தையே பாதுகாப்போம்!     

தொடர்புடைய கட்டுரைகள்:

1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!


2. கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? 

Monday, 26 September 2011

கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா?

அன்மையில் புகுஷிமாவில் நிகழ்ந்த அணுவிபத்து, ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்து உலகெங்கும் அணு உலைகளை மூடிவது குறித்த அறிவிப்புகள் மற்றும் விவாதங்களை எழிப்பியுள்ளது.ஆனால் இந்திய ஆட்சியாளர்கள் உலக நாடுகளின் சிந்தனைக்கு நேர்மாறாக, இந்தியாவில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று மக்களை நம்ப சொல்கிறார்கள்.கூடங்குளம் அணுமின்நிலையத்தையும் விரைவில் திறக்கும் மும்முறத்திலும் உள்ளது.

அணு உலைகள் மேற்கத்திய எல்லையை கடந்து இந்திய எல்லையை தொட்டவுடன்,எப்படி புதிய பாதுகாப்பு பரிமாணம் பெற்றுவிடுகிறது என்பதுதான் புரியாத,புதிராகவுள்ளது.அந்தப் புதிரின் விடைதெரிந்த கூடங்குளம் மக்கள் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.அணு உலைகளின் தோற்றம் என்பதே அழிவுக்கானதுதான்
இப்போது அணு உலை விபத்தால் பாதிப்புக்குள்ளான ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் ஹிரோசிமா,நாகசாகியில் அமெரிக்கா போட்ட அணு குண்டுகளால் அழிக்கப்பட்ட நாடு.இந்த படுகொலைகளின் பின்னர்தான் அணுதொழில் நுட்பம் மிகவும் ஆபத்தானது என்பதை உலகம் அறிந்துகொண்டது.இதன் பின்னர்தான் அணுசக்தியை ஆக்க பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முகாந்திரத்தில் அணுகுண்டு செய்வதற்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டு,கொசுறுவாக மின்சாரம் தயாரிப்பதாக மக்களிடையே கூறிவருகின்றனர்.

வெடிகுண்டு தயாரித்து வந்த மாண்சான்டோ இரண்டாம் உலக போருக்கு பின்னார்,விலை போகாத தனது சரக்கை விவசாய இடுபொருட்களாக மாற்றி விற்பனை செய்கிறது.மனிதன் வேதனையில் வெளியிடும் கண்ணீர் முதல் குழந்தைகள் குடிக்கும் தாய்பால் வரை அனைத்தையும் விற்று காசாக்கும் முதலாளித்துவத்தில்,அணுப் பொருள் தேக்கத்தை மட்டும் அனுமதிப்பார்களா என்ன?

உலக மேலாதிக்க போட்டியில் அன்றைய மேல்நிலை வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தன்னுடைய அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவுக்கு தந்து சில அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.இந்த ஒப்பந்தம் போட்டதற்கு பின்னர்தான் செர்னோபில் உலை உலை விபத்து ஏற்பட்டது.இந்த அணு உலை விபத்தால் ரஷ்யா மட்டுமல்ல அண்டை நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பாதிப்புகளின் விளைவுகள் தலை முறைத்தலைமுறையாக தொடரப்போகிறது.அதே ரஷ்ய தொழிட்நுட்பத்தில் கட்டிவரும் கூடங்குளம் அணு உலை மட்டும் மிகவும் பாதுகாப்பானது என்று இந்திய ஆட்சியாளர்கள் சாதிக்கிறார்கள்.


உலக மேலாதிக்க போட்டியில் இருந்து தற்காலிகமாக ரஷ்ய மேல்நிலை வல்லரசு விலக, உலகின் ஒரே தாதாவான அமெரிக்க இந்தியாவை தனது நம்பகமான அடிமையாக தெரிவு செய்துள்ளது.உலகில் எங்கும் விலை போகாத தனது அணு உலைகளை விசுவாசமான இந்திய அடிமையின் தலையில் கட்டி, இந்த அணு உலைகளால் உருவாகும் அணுகுண்டுகள் மூலம் மற்ற ஆசிய நாடுகளை மிரட்டி,ஆசிய சந்தையை தனது அடிமையின் மூலம் கட்டுப்படுத்த 123 ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளது.
எசமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பூசும் முதல் ஆளாக, தானே இருக்க வேண்டும் என்று ஒபாமாவை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற மன்மோகன், போபாலில் உங்களின் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் உயிரிழந்தவர்களுக்கு சில ஆயிரமே தந்ததைப் போன்று, இந்த அணு உலையால் அணுவிபத்து ஏற்பட்டு எத்தனை ஆயிரம் உயிர்கள் போனாலும், சில ஆயிரம் ரூபாய்களை தந்துவிடலாம் என, அணுவிபத்து காப்பீட்டு மசோதா நிறைவேற்ற முற்பட்டு விசுவாசமாக வாலாட்டியது.




நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீட்டு எண் 10 சதம் எட்டினால்,நாட்டில் பாலாறும்,தேனாறும் ஓடும் என்று ஆரவாரமாக அறிவித்து,அதற்கு தடையாய் மின்சாரம் இருக்க கூடாது என அணுமின் மற்றும் அனல் மின்நிலையங்களை கட்ட முனைகிறார்கள். ஆனால் நாட்டில் நாள் ஒன்றுக்கு மக்கள் வெறுமனே 20 ரூபாய்தான் சம்பாதிக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியிடும் இதே அரசு தான்,முன்னேற்றம் என்பதை முதலாளிகளின் முன்னேற்றம் என்பதை சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள்.இதை தமது வாழ்நிலையில் உணர்ந்த மக்கள்,விலைவாசி உயர்வால் தினம்,தினம் சாகும் தங்களை ,தங்களின் வாழ்வாதரமான மீன்பிடிதொழிலையும் அணுகழிவுகளை கடலில் கலக்கவிட்டு, பாழ்படுத்தி அணுக்கதிர் வீச்சால் நோயாளிகளாகவும்,அணு உலை விபத்தால் தங்களை முழு பிணமாகவும் ஆக்க நினைக்கும் அரசின் சதிக்கு எதிராகத்தான் கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.


இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் இருக்கும் ஊழலுக்கு எதிரான உணர்வை அன்னாஹசாரே போராட்டத்தின் மூலம்,எதற்கும் உதவாத சட்டத்தை இயற்றி மழுங்கடிக்க முயற்சிப்பதை போன்று,ராஜிவ் கொலை குற்றவாளிகள் என்று சித்தரிக்கப்படும் மூவரின் துக்குக்கு எதிரான தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை,ஒரு ஒண்ணுக்கும் உதவாத தமிழக சட்டமன்ற தீர்மானம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற  இடைக்கால தடை மூலம் முடக்கியதை போன்று, இந்த போராட்டமும் வெறும் ஆறுதலாக,போராட்டத்தின் நோக்கத்திற்கு உதவாத,தமிழக அமைச்சரவை தீர்மானம் மூலம் நிறைவுக்கு வந்திருக்கிறது.

போராட்ட குழு நண்பர்கள் அணு உலையின் தீமைகளை மக்களிடம் எடுத்து சொல்லி,ஆதரவு திரட்டி,கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரும் கோரிக்கையினை முன்வைத்து போராடி இருக்கிறார்கள்.ஆனால் இது மட்டுமே இந்த பிரச்சனையை  முடிவுக்கு கொண்டு வரும் வாய்பில்லை என்பதை மேதா பட்கர்,ஐரோம் சர்மிளா போன்றவர்களின் போராட்டங்களின் மூலம் படிப்பினையை பெற்று,இந்த அணு உலை அமைப்பதன் நோக்கத்தை மக்களிடம் விளக்கி,  ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு கொல்லிவைக்கும் விதமாக,சிறப்பு பொருளாதார மண்டலங்களை நோக்கியும்,பன்னாநாட்டு நிறுவனங்களை நோக்கியும் அணிவகுக்க செய்வதன் மூலம், இந்த போராட்டத்தினை இறுதி வெற்றியை நோக்கி முன்னேற செய்ய முடியும்.

இந்த அணு உலைகளினால் உருவாகும் அணுகுண்டு இந்தியா எனும் அடியாளின் பலத்தை உயர்த்தி, ஆசிய நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை விரிவு படுத்தத்தான் என்ற உண்மையை படித்த சில அறிஞர் பெருமக்கள் வேண்டுமானால் மறுக்கலாம்,ஆனால் அனுதினமும் மின்வெட்டு தினசரி உணவுக்காக அல்லல்படும் உழைக்கும் மக்கள் இதை மறுக்க மாட்டார்கள்.இதை புரட்சிகர ஜனநாயக சக்திகள் புரிந்து கொண்டு ,இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்,பன்னாட்டு மற்றும் இந்நாட்டு கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களின்  கொள்ளையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் மக்களின் பசி பட்டினிக்கு காரணமான கார்ப்பரேட் முதலாளித்துவத்தை விரட்டியடித்து,நமது மக்களையும்,விவசாய நிலங்களையும் பாதுகாக்க,ஒரு வாய்ப்பாகவும், அங்கு கடைசிவரை கொண்ட நோக்கத்தில் வெற்றியடைய போராடும் பண்புடைய,புரட்சிகர,ஜனநாயக் சக்திகள் இல்லாத வெற்றிடத்தையும் இட்டுநிரப்ப முடியும்! 
                                                            -கிராமத்தான்
தொடர்புடைய கட்டுரைகள்:

1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!



Friday, 23 September 2011

கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!

கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக அவ்வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.இந்த போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்களும் ஆதரவு தந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட போலிஸ் தடைவிதிக்கும் அளவுக்கு போராட்டம் பரவ ஆரப்பித்தது.

தமிழக முதல்வர் ஜெயா கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது. ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏற்கவில்லை.முதல் நாள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிய ஜெயா மறுநாளே பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரட்டக்குழுவினருக்கு அழைப்புவிடுத்து பேசினார்.அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு போராட்ட குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அமைச்சரவைக்கூட்டத்தை 21.09.2011 அன்று கூட்டிய ஜெயா போராட்டக்குழு கோரியபடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இதனால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர் மக்கள்.



ஜெயா அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறுதான் கோரியுள்ளார்.மேற்குவங்கம்,ஹரிபூர் அணுமின்நிலையத்தை அம்மாநில முதல்வர் நிராகரித்ததை போன்று நிராகரிக்கவில்லை.அப்படி நிராகரிப்பதற்கான தார்மீக பலம் ஜெயாவிற்கோ முன்னால் முதல்வர் கருணாநீதிக்கோ சிறிதுமில்லை.ஏனேன்றால் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள் இருவருமே. மக்கள் ஏற்கும் வரை அணுமின்நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியதன் மூலம் இனி மத்திய,மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்குமாறு மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர்.போராட்டக்குழு மற்றும் மக்களிடையே துரோகிகளை உருவாக்கி போராட்டத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகளையும் செய்வார்கள். ஏதோ ஒரு வகையில் ஒருமுறை மக்களை சமாதானப் படுத்திவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்வதை தடுத்துவிட முடியும்,என்று தான் மத்திய,மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கும். போராட்டக்குழுவில் உள்ளவர்கள் ”எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது தானே தவிர, மாநில அரசுக்கு எதிரானது அல்ல”, என்று கூறியிருப்பதிலிருந்தே மாநில அரசின் மீது தங்களுக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.மாநில முதல்வரின் கருத்தோ அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தான்.எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதை மாநில அரசு விரும்பாது. அதற்கு மாறாக அவ்வட்டார மக்களை அணுமின்நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறுஇடத்தில் குடியமர்த்துவது போன்ற செயல்களில் தான் மத்திய அரசின் உதவியோடு செய்ய முற்படும்.இதையும் மீறி போராட்டம் நடத்தும் அளவிற்கு போராட்டக்குழுவிற்கு ஆற்றல் இல்லை என்பதைத்தான் அவர்களின் அண்மைய அணுகுமுறைகள் வெளிப்படுத்துகிறது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து அணுகதிர்வீச்சினால் அந்நாட்டு மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.உலகம் முழுவதுமே அணுமின்நிலையங்கள் பாதுகப்பற்றது என்பது மட்டுமல்ல,அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி அளவும் மிகவும் குறைவானதே!

உலகம் முழுவதிலும் உள்ள அணுமின்நிலையங்கள் மின்சார உற்பத்திக்கென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவைகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதே முழுமையான உண்மையல்ல. அணு மின்நிலையங்களால்  சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்,உலகம் முழுவதிலுமே அதனால் ஏற்படும் பாதகமே கூடுதலாகும். இதனால்தான் உலகம்முழுவதிலுமே அணுமின்நிலையங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்குதான் அணு உலை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும்,இங்கு ரஷ்யாவின் அணுக்கழிவுகளை கொண்டுவந்து சேமித்து வைப்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமுள்ளது. இந்த அணுமின்நிலையத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் பற்றி மிகக்குறைந்த அளவிற்கே மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாதிப்புகளோ மிகக்கடுமையானதாகவும், தலைமுறை,தலைமுறையாக நீடிக்ககூடியதாகவும் இருக்கும்.அணுமின்நிலையங்களால் நிலம்,காற்று,நீர் ஆகியவை வெப்பமடைகிறது.அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அற்றுப்போகும்.இவைகளை பற்றிய முழு பரிமாணங்களை கூட ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டுள்ள அளவிற்கு தமிழக மக்கள் உணரவில்லை என்பதே உண்மையாகும்.இதனால் தான் இப்போராட்டம் ஒருவட்டார பகுதியின் போராட்டமாக வெளிப்படுகிறது.தமிழகத்தின் ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை கூடங்குளம் சம்பந்தமான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான செய்தி மட்டுமேயாகும்.

ஆட்சியாளர்களை பொருத்தவரை ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பரில் செயல்பட தயாராக உள்ள ஒரு திட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதாகத்தான் இருக்கும்.தமிழக அமைச்சரவை ”மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு” தீர்மானம் நிறைவேற்றி  இருந்தாலும்,உண்மையில் இது இந்த விடையத்திற்காகத்தான் இயற்றாப்பட்டதாக நாம் முற்றிலும் நம்பிவிட முடியாது.மத்திய அரசை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து கொள்வதற்கான ஒரு தந்திரமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம்,என்பதையும் நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.ஏனேன்றால் இந்த அணுமின்நிலைய விவகாரத்தில் ஜெயா அரசுக்கு மத்திய அரசுக்கு மாற்றான கருத்தேதும் இல்லை,அதே பொன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபரும் ஜெயா இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்
ஈழ இறுதிக்கட்ட போரின் போது இந்திய நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது,அதே போன்று  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள,உள்ளாட்சித்தேர்தலை கணக்கில் கொண்டுதான் ஜெயா அரசு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பார் என்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈழமக்கள் மீதான தாக்குதலை மிகவும் மூர்க்கமாக நடத்தியதை போன்றே, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீதும் ஜெயா அரசு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் நிராகரித்துவிட முடியாது.ஆனால் இதை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதையை போராட்டக்குழுவிற்கு இல்லை என்பதே உண்மையாகும்.இதை எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் தலைமைக்கு மட்டுமே உண்டு.இப்படி போராட்டம் நடத்தப் பட்டால் மட்டுமே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி சொல்லும்!

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, 20 September 2011

தவளை தன் வாயால் கெடும் ...!

எமது சென்ற காயடிக்கும் கட்சி என்ற கட்டுரைக்கும்,”சமச்சீர் கல்வி :முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனதுவினவும் அதன் தோழமை அமைப்புகளும் என்ற தொடர் விமர்சனக்கட்டுரைக்கும் பல்வேறு நண்பர்கள்,பதிவர்கள்,தோழர்கள் கருத்துகளையும்,விமர்சனங்களையும், கூறியிருந்தீர்கள். அதற்கு தற்போது விடையளிக்கின்றோம்.

1.ஹைதர் அலி.
”வினவுக்கு எதிராக எழுத வேண்டும் என்ற வரட்டுத்தனம் உங்கள் பதிவுகளில் தெரிகிறது”.என்று கூறி இருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக எழுதுங்கள் விவாதிப்போம்!

2.வலிப்போக்கன்.
பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்களில் எங்களின் பங்களிப்பும் உள்ளதை ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.பிரச்சனை அதுவல்ல.நந்தவனத்தில் ஒர் ஆண்டி,அவன் ஆறேழு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தானடி ஒரு தோண்டி,அதை கூத்தாடி,கூத்தாடி போட்டுடைத்தாண்டி”,என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.இதைப்போன்று பல ஆயிரம் பேர் ரத்தம் சிந்தி,உயிர் துறந்து ,பல்வேறு தியாகங்களால் வளர்த்த அமைப்பை அதிகாரவர்க்கத்துக்கு பலி கொடுப்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.இப்படி செய்வதுதான் உண்மையாகவே பாட்டாளிவர்க்க விடுதலையை நேசிப்போரின் கடமை.
இணையத்தளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒரே பதிவாக அல்லாமல் எமது விமர்சனங்களை பலப் பிரிவுகளாக வெளியிடவேண்டியதாகிறது.இதைத்தான் நீங்கள் அவர்களை சுற்றி,சுற்றி வருவதாக கூறுகிறீர்கள்.அவர்கள் உங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பது அவர்களின் பாட்டாளிவர்க்க தன்மையை வெளிப்படுத்தவில்லை.இதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்!

3.கதிர்நிலவன்.
எமக்கு அரசியல், சித்தாந்தம் கற்பித்த தோழர் மூடக்கிழவனைப் பற்றி நாங்கள் எமது கட்டுரையில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.அவர் சார்ந்துள்ள அமைப்பு அவரை சூறாவளியில் எழுதக்கூடாது என்று தடைவிதித்ததால் அவர் சூறாவளியில் எழுதவில்லை.ஆனால் நாங்கள் மீண்டும் சூறாவளியை இயக்க ஆரம்பித்த பின்னர், தமது பகுதியில் நடந்த இருப்போராட்டச்செய்திகளை சூறாவளியில் வெளியிடுமாறு அனுப்பிவைத்தார்,அச்செய்திகள் இரண்டையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

நாங்கள் அமைப்பின் ஆதரவாளராக வெளியில் இருந்துதான் ஆதரவளித்தோம்,இப்போது நாங்கள் உங்கள் அமைப்பை ஆதரிக்கவில்லை என்பது எமது தொடர்கட்டுரைகளில் நாங்கள் எழுதியதிலிருந்து கூடவா உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை?
தோழர் மூடக்கிழவன் தற்போது உங்கள் அமைப்பில் எந்த நிலையில் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியாது.எமக்கு அரசியல்,சித்தாந்தம் போதித்த தோழர் மூடக்கிழவன் தற்போது,தமது அமைப்பில் உட்கட்சி போராட்டம் நடத்துவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.அண்மையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய போது கூட உங்கள் அமைப்பினர் தரவிரும்புவதாக கூறிய பொருளாதார ரீதியான உதவியை அவர் நிராகரித்துவிட்டார்,என்பதில் இருந்துதான் மேற்கண்ட முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்.அதே நேரத்தில் அவரின் இருதய அறுவை சிகிச்சைக்கு நாங்கள் அளித்த பொருளாதார உதவியை ஏற்றுக்கொண்டார் என்பதில் இருந்துதான், அவர் எம்மையும்,உங்கள் அமைப்பின் மீதான எமது விமர்சனங்களையும்,ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனவும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


விவிமு போராட்ட லேபில்களை நாங்கள் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறீர்கள்,அது என்னவென்று குறிப்பாக கூறுங்கள்!


வினவி-ல்இருந்து நாங்கள் எடுத்து மறுபிரசுரம் செய்த செய்திக்கட்டுரை விருத்தாசலம் விவிமு செய்தி என்பதையும் அதை சூறாவளியில் வெளியிடுமாறு தோழர் மூடக்கிழவன் எமக்கு வேண்டுகோள் வைத்தார் என்பதால் தான், அச்செய்தியை நாங்கள் மறுபிரசுரம் செய்தோம்.
விருத்தாசலம் வட்டார விவிமு கல்விக்கான மக்களின் உரிமை,விருத்தாசலத்தில்நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை,என்ற கட்டுரையை நாங்கள் 22.06.2011 அன்று சூறாவளியில் வெளியிட்டோம்.இதே செய்தியை செங்கொடி,பறையோசை ஆகியோர் தமது இணையதளத்திலும்,டாக்டர் ருத்ரன் அவர்கள் தனது முகநூலில்(face book) எழுதிய கட்டுரை ஒன்றிலும் கோடிட்டுகாட்டியிருந்தார்,ஆனால் வினவோ இந்தச் செய்தியை வெளியிடவில்லை.புதிய ஜனநாயகமும் தான் வெளியிட்ட கட்டுரையில், உண்ணாவிரதத்தின் மூலம் தனியார் ஆங்கில பள்ளிகளுக்கான கல்விக்கட்டண நிர்ணயக்குழுக்களின் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராச பாண்டியன் குழு அளித்த பரிந்துரைகள் மற்றும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரியும்,தமிழகத்தில் நடத்தப்பட்ட உண்ணாவிரதங்கள் பற்றி எழுதப்பட்டிருந்த விமர்சனங்களை தவிர்த்துவிட்டுத்தான் அச்செய்தியை வெளியிட்டிருந்தது.ஆனால் செங்கொடி,பறையோசை இணையதளங்களும்,சூறாவளியும் விருத்தாசலம் விவிமு-வினர் அனுப்பிய செய்தியை முழுமையாக வெளியிட்டிருந்தோம்.மேற்கண்ட செய்தியை அரைகுறையாக வெளியிட்ட புதிய ஜனநாயகம்,அதை முழுமையாகவே வெளியிடாத வினவு ஆகியோர்களின் செயல்களைப் பற்றி உங்களால் அவர்களை கேள்விகேட்கமுடியுமா?


அமைப்பின் பலதோழர்கள் இணையதளம் ஆரம்பித்தது போன்றுதான் நாங்களும் தோழர் மூடக்கிழவனுக்கு இணையதளம் ஆரம்பித்துத் தந்தோம்.ஆனால் சூறாவளியோ வினவின் ரசிகராக இருந்துவிசில் அடிக்காமல் விவிமு-விற்கும், விவசாயிகளுக்கும் எப்படிப்பட்ட செய்திகள் தேவையோ அதை மட்டுமே ஆக்கப்பூர்வமாக எழுதி வெளியிட்டு வந்தார்.”உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி எந்த காலத்தில் உருவானது என்பதை சங்காலத்தில் இருந்து தொடங்கி களப்பிரர் காலம் வரை  முன்று ஆய்வுக்கட்டுரைகளை, மல்லாந்து துப்பினால் மார்பில்” என்ற கட்டுரைகளின் மூலம் எழுதி வெளியிட்டு வந்தார்.அந்த கட்டுரைக்கு தமிழ்மணம் நடத்திய போட்டியில் பரிசும் கிடைத்தது.


விருத்தாசலம் பகுதி தோழர்கள் மட்டுமே சூறாவளிக்கு தமது பகுதி போராட்டச்செய்திகளை அனுப்பிவைத்தனர்.அதைத்தான் சூறாவளியில் நாங்கள் அப்போதும்,இப்போதும் வெளியிட்டு வருகிறோம்.பிற பகுதி தோழர்களும் தமது பகுதி செய்திகளை எங்களுக்கு அனுப்பிவைத்தால் அவைகள் அரசியல்,சித்தாந்த ரீதியாக சரியாக இருக்குமேயானால்.அவற்றையும் வெளியிட நாங்கள் இப்போது கூட தயாராகவே இருக்கிறோம்.


அது சரி! எங்களை இப்படி கேள்விகேட்கும் நீங்கள், உங்கள் அமைப்பில் சுமார் ஐம்பது பேர்வரை இணையதளம் நடத்துகிறீர்களே? அவர்கள் உங்கள் பல்வேறு பகுதி அமைப்புகளின் செய்திகளை தமது இணையதளங்களில் வெளியிடுகிறீர்களா என்ன? அது பற்றி இதுவரை  நீஙகள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா?

விருத்தாசலம் வட்டாரத்தில் நடக்கும் போராட்ட செய்திகளை,அவர்கள் மண்டபத்தில் வைத்து எழுதுகிறார்களா? வெறு எங்கு வைத்து எழுதித்தருகிறார்கள் என்பதை இன்னமும் உங்கள் அமைப்பில் இயங்கிவரும் விருத்தாசலம் வட்டார விவிமு தோழர்களிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.இப்போதும் உங்களோடு இணைந்து செயல் படும் ஒருவட்டார பகுதியின் தோழர்களையே,இவ்வளவு தரக்குறைவாக உங்களால் எழுத முடிகிறது என்றால்,எங்களை எவ்வளவு வன்மத்தோடு பார்ப்பீர்கள் என்பதை அரசியல்,சித்தாந்த ரீதியாக ஏற்கனவே நாங்கள் கணித்தே வைத்துள்ளோம்.உங்களின் கருத்துகள் அனைத்தையும்,உங்களின் தனிப்பட்ட கருத்தாக நாங்கள் கருதவில்லை.நீங்கள் சார்ந்துள்ள வினவு மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் கருத்தாகவே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.இந்த அளவுக்கு ஒரு வட்டார பகுதி தோழர்களை நீங்கள் இழிவாக எழுதிய பின்னரும் கூட, விருத்தாசலம் விவிமு தோழர்கள்தான் இந்த அமைப்பில் தாங்கள் தொடர்ந்தும் இருப்பதை பற்றிய முடிவை  எடுக்க வேண்டும்.


வலிப்போக்கன்,கதிர்நிலவன் ஆகியோர் எம்மிடம் எழுப்பியுள்ள கேள்விகள் மூலம் வினவும் அதன் தோழமை அமைப்புகளும் கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்த கண்ணோட்டம்தான் அதிகாரவர்க்கத்தின் இயல்பான கண்ணோட்டம் ஆகும்,சோவியத் மற்றும் சீன சோசலிச குடியரசுகளில் பொருளுற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமூக உடைமைகளாக ஆக்கப்பட்டு இருந்தன,இவற்றை சோவியத்தில் தோழர் ஸ்டாலினுக்கு பின்னரும்,மக்கள் சீனத்தில் தோழர் மவோவிற்கு பின்னரும் கட்சியையும்,ஆட்சியையும் கைப்பற்றிய அதிகாரவர்க்க பாதையாளர்கள்,அதிகாரவர்க்க உடைமையாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக உருமாற்றம் செய்தனர்.அவர்களின் சீடர்களாகிய நீங்களும் அப்படித்தான் தங்களை கேள்விகளுக்கும்,விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக கருதிக்கொள்கிறீர்கள்.உங்களது அதிகாரவர்க்க மனோபாவத்தை இதன் மூலம் மீண்டும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு எமது நன்றியை உரித்தாக்குகிறோம்.


4.கடவுள்.
சமச்சீர்கல்வியால் தனியார்  பள்ளிகளில் கல்விக்கட்டணம்,குறையாது என்பதற்கான பதிலை எமது முதலாவது கட்டுரையான சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற கட்டுரையிலேயே மிகத்தெளிவாக எழுதியுள்ளோம்.அக்கட்டுரையையும் அதனோடு தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்.உங்களது கேள்விகளுக்கான விடை அவற்றில் நீங்கள் பெறலாம்.


புரட்சி,புரட்சிக்கு பின்னால் அமையும் சமூக அமைப்பு ஆகியவற்றின் மீது நக்சல்பாரி அமைப்பின் நிலைப்பாடே ,எமது நிலைப்பாடாகும்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பாக விளங்கிய மக இக சார்ந்த அமைப்பின் நிலைப்பாடே எமது நிலைப்பாடாகும்,இந்த நிலைபாடுகளுக்கு விரோதமாகத்தான் இந்த அமைப்புகள் தற்போது செயல் படுகின்றன என்பதே எமது விமர்சனமாகும்.


நாங்கள் தற்போதைய  சமூக சூழலில் மேற்கண்ட நிலைபாடுகளில் ஏதேனும் மாற்றம் தேவையா என்பதைப் பற்றி இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டும்.


எமது சென்ற கட்டுரையில்”இந்த அமைப்புகள் பற்றி நாங்கள் கட்டுரை எழுதுவதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவில்லை.கட்டுரைகளின் வளர்ச்சிப் போக்கில்தான் ஆய்வு செய்தோம்.இதனால்தான் இந்த அமைப்புகளைப் பற்றி எமது ஆரம்பக்கட்டுரைகளில்,அரசியல்,சித்தாந்த ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதே நேரத்தில்,இந்த அமைப்புகளிடம் தோழமை ரீதியான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தோம்”, என்று எழுதியுள்ளோம்.இந்தகட்டுரையும் இது தொடர்புடைய ஏனைய கட்டுரைகளையும் கவனமாக வாசியுங்கள்! நன்றி!..

தொடர்புடைய கட்டுரைகள்:
                      


3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2




Saturday, 17 September 2011

காயடிக்கும் கட்சி

வினவு இணையதளம்,புதிய ஜனநாயகம்,புதிய கலாச்சாரம் ஆகிய ஊடகங்கள்,மற்றும் இவைகளின் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக் கழகம்,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,பெண்கள் விடுதலை முன்னணி,மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் எதிரும்.புதிருமான நிலைப்பாடுகளை கொண்டிருந்தன என்பதையும் ,இந்த நிலைப்பாடுகள் மூலம் மேற்கணட அமைப்புகள் சீர்த்திருத்த வாத பாதையில் மூழ்கிவிட்டன என்று “சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும்,அதன் தோழமை அமைப்புகளும்”என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியிருந்தோம்.

மேற்கண்ட கட்டுரைகளை ஆரம்பம் முதல் இறுதிவரை கவனமாக வாசித்தர்களுக்கு ஒரு விடயம் தெளிவாக தெரிந்திருக்கும்.இந்த அமைப்புகளை பற்றி நாங்கள் கட்டுரை எழுதுவதற்கு முன்பே முழுமையாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரவில்லை.கட்டுரைகளின் போக்கில் தான் ஆய்வு செய்தோம்.இதனால்தான் இந்த அமைப்புகளை பற்றி எமது ஆரம்ப கட்டுரைகளில், அரசியல் சித்தாந்த,ரீதியாக உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் அதே நேரத்தில், இந்த அமைப்புகளிடம் தோழமை ரீதியான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியிருந்தோம்.ஆனால் வளர்ச்சிப் போக்கில்தான், இந்த அமைப்புகள் அதிகாரவர்க்க பாதையாளர்களாக மாறிவிட்டிருந்ததை எம்மால் உறுதி செய்து கொள்ள முடிந்தது.ஆகவே இவர்களிடம் எமது ஆரம்பக் கட்ட அணுகுமுறை எவ்வித தாக்கத்தையும்,விளைவையும் ஏற்படுத்தாது என்பதையும்,அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரான விளைவுகளையே எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் உணர்ந்தோம்.ஆளும்வர்க்கத்தின் ஒரு அங்கமாக மாறிப்போயுள்ள இவர்களை, மக்கள்மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் நாங்கள் வர வேண்டியதாகியது.

அதே நேரத்தில் இப்பணியை நாங்கள் செய்யும் போது,அதிகார வர்க்க பாதையாளர்களான, இவர்களின் எம்முடனான அணுகு முறை அவ்வர்க்கத்திற்கே உரிய வகையில்,நேர்மையற்ற முறையில் தான் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்.இதை சமச்சீர் கல்வி விவகாரத்தில் இவர்களை அம்பலப்படுத்தும் போது, இவர்கள் எம்முடன் கையாண்ட விமர்சனம்,சுயவிமர்சனமற்ற மெளணம் என்ற நேர்மையற்ற அணுகுமுறையிருந்தே உறுதின் செய்து கொண்டுள்ளோம்.இதுதான் அதிகாரவர்க்க பாதையாளர்களின் இயல்பு என்பதையும் நமக்கு அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

சோவியத் ஒன்றியம்,மக்கள் சீனம் ஆகியவற்றை கைப்பற்றிய அதிகாரவர்க்கப் பாதையாளர்கள் செய்த முதல் வேலையே கட்சியில் இருந்த உண்மையான, பல லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கட்சியில் இருந்தே நீக்குதல்,சிறையில் அடைத்தல்,கொலை செய்தல் ஆகியவற்றின் மூலம் தமக்கு எதிர்ப்பில்லாத ஆபத்தற்ற சூழலை உருவாக்கிக் கொண்டதுதான்.இதை இவர்கள் எந்தளவிற்கு உறுதி செய்துகொண்டார்களோ,அந்த அளவிற்குதான் கட்சியிலும்,ஆட்சியிலும் அதிகாரவர்க்க முதலாளித்துவத்தை புகுத்தினர்.இந்த வரலாற்று பின்னணியிள் அடிப்படையையும் கணக்கில் கொண்டுதான்,இவர்களை பற்றிய அடுத்தடுத்த முடிவுகளுக்கு வந்தோம்.


அதிகாரவர்க்க பாதையாளர்கள் தமது வர்க்க இயல்புக்கு ஏற்பத்தான் நடந்து கொள்ளுவார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில், இவர்களின் நேர்மையற்ற அணுகுமுறை ஒன்றை இப்போது சுட்டிக்காட்டுகிறோம்.இந்த அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியே இணைய தளம் நடத்தி வருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இவர்களை இணையதளம் நடத்த அனுமதிக்கும் இவர்கள், சூறாவளியின் முன்னால் ஆசிரியர் மூடக்கிழவன் சூறாவளி இணையத்தை நடத்தக்கூடாது என ஒருதலைபட்சமாக  தடை விதித்துள்ளனர்.இதற்கு இவர்கள்,”அமைப்பு சார்பில் அதிகார பூர்வமாக ’வினவு’ இணையதளத்தை நடத்தும் போது,அமைப்பில் உள்ள தோழர்கள் ஆளாளுக்கு,தனித்தனியே இணைய தளம் நடத்தக்கூடாது”, என்று கூறித்தான் தோழர் மூடக்கிழவனுக்கு தடைவித்துள்ளனர்.ஆனால் மற்றவர்களுக்கு இப்படி தடைவிதிக்கப்படவில்லை.இந்தத்தடைஒருதலைபட்சமானது,ஓரவஞ்சனையானது என்று மட்டுமே, எம்மால் அப்போது கருத முடிந்தது.இப்போதுதான் இது அதிகாரவர்க்க போக்கில் விதிக்கப்பட்ட தடை என்பதை எங்களால் , புரிந்து கொள்ள முடிகிறது.இப்படி நாங்கள் இவர்களை ,அரசியல்,சித்தாந்த ரீதியாக அதிகாரவர்க்க பாதையாளர்கள் என்று நிரூபித்திருந்தாலும்,எமது இந்த நிரூபணமும்,அம்பலப்படுத்தல்களும்,இவர்களுக்கு குறிப்பிடும்படியான இழப்பு எதையும் ஏற்படுத்திவிடாது.ஏனேன்றால் தமது நிலைப்பாட்டிற்கு ஏற்பத்தான் இவர்கள் தமது அணிகளையும் உருவாக்கியிருப்பார்கள்.இவர்களின் அதிகாரவர்க்க பாதையை எதிர்த்துப் போராடும் உண்மையான,நேர்மையான கம்யூனிஸ்டுகளை இவர்கள் தமது ரஷ்ய,சீன ‘காம்ரேடுகள்’ பாணியில் ஒடுக்கியிருப்பார்கள்.எமது அம்பலப்படுத்துதல்கள் மூலம் கேள்வி எழுப்புவோரையும் இப்படியே கையாள்வார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

இறுதியாக நாங்கள் எழுதிய கட்டுரையில் ’கலவை சித்தாந்தம்’ என்று குறிப்பிட்டு எழுதியிருந்தோம்.”அப்படி என்றால் என்ன வென்று தெளிவாக கூறுங்கள்”, என்று சிலத்தோழர்கள் எம்மிடம் கேட்டிருந்தனர்.மேற்கண்ட அமைப்பினர் குறிப்பாக ,புதிய ஜனநாயம்,புதிய கலாச்சாரம் ஆகியவை ஒரே அமைப்பின் இரு ஊடகங்களாக இருந்தாலும் இவைகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் எதிரும்,புதிருமான நிலைப்பாட்டை கொண்டிருந்ததை நாம் அறிவோம்.இப்படி இவர்கள் இருவேறு  நிலைப்படுகளை கொண்டிருந்தாலும்,இது இவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.இது இவர்களுக்கு இடையிலான வேலைப்பிரிவினை.கம்யூனிஸ்டு கட்சியின் பெயரால்,முதலாளித்துவத்தின் ஒரு வடிவமான அதிகார வர்க்க முதலாளித்துவத்தை நிலைநாட்டுவது தான் இவர்களின் வேலையாகும். சொத்துடைமை வர்க்கத்துக்கான ஜனநாயகத்தை அனைவருக்குமான ஜனநாயகம் என்றுக் கூறி ,உழைக்கும் மக்கள் மீது சர்வாதிகாரம் செலுத்தும் நயவஞ்சக முறைக்கு மாறாக,சொத்துடைமை வர்க்கத்துக்கு உயிர்வாழும் உரிமையை தவிர, ஏனைய ஜனநாயக உரிமைகளை வெளிப்படையாக மறுத்து,சமூகத்தின் ஆகப்பெரும்பான்மையான மக்களாகிய பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமே ஜனநாயகம் என்று வெளிப்படையாக அறிவிக்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை தமது அதிகாரவர்க்க நலனை பாதுகாக்க அதிகாரவர்க்க முதலாளித்துவ சர்வாதிகாரமாக உள்ளடக்கத்தில் நடைமுறைப்படுத்தினார்கள்.சோசலிச பொருளாதாரத்துக்கு மாற்றாக உற்பத்தியில் முதலாளித்துவ கூறுகளை புகுத்தினர்.இதை கம்யூனிஸ்டு கட்சியின் பெயராலேயே கம்யூனிச சித்தாந்த வார்த்தைகளை பயன்படுத்தியே செய்ததால் இவர்களை அனைவராலும் அடையாளம் காணமுடியாமல் போனது.  வெளிப்படையான முதலாளித்துவ நடவடிக்கைகளையும் பாட்டாளி வர்க்க மற்றும் ,நாட்டின் நலனுக்காகவே செய்வதாகவும்,இதனால் விரைவான முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்  என்று மயக்கியதாலும்,சித்தரித்ததாலும் கட்சி அணிகளிடையேயும்,மக்களிடையேயும் எதிர்ப்பு வராமல் தவிர்த்தனர்.

இதைத்தான் சீனத்தில் அதிகாரவர்க்க துரோகியான டெங்சியாவோ பிங் ”பூனை கருப்பாய் இருந்தால் என்ன சிவப்பாய் இருந்தால் என்ன எலியை பிடித்தால் சரி”, என்று தனது அதிகாரவர்க்க கோட்பாட்டிற்கு நியாயம் கற்பித்துக்கொண்டான் என்பதை சென்ற கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியிருந்தோம்.டெங்கின் வாரிசுகளான வினவும் அதன் தோழமை அமைப்புகளும் தமது பாட்டனின் கோட்பாட்டு ஒளியில் சட்டத்துக்குட்பட்ட போர்க்குணமான போராட்டங்களை சமூகத்தில் நடத்துவதோடு, மதிநுட்பம் வாய்ந்த சட்ட அறிவுடன் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துவது என்ற கலவை சித்தாந்தத்தை கையாண்டு வருகின்றனர் என்பதையும், அதை நியாயப்படுத்தி வருகின்றனர் என்பதையும்,இதை இவர்கள் புரட்சியின் பெயராலேயே செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே எமது தொடர் கட்டுரைகளில் அம்பலப்படுத்தியிருக்கிறோம்.இவர்களின் இந்த கலவை சித்தாந்தத்தின் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு கிடைத்த நீதிமன்ற வெற்றிகளை காட்டி, தம்மை போலவே தமது அணிகளையும் மாற்றிவிடுகின்றனர்.இதற்கு எதிராக ஒன்றிரண்டு எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை தமது நயவஞ்சகமான்,ஓரவஞ்சனையான அணுகுமுறையின் மூலம் ஒடுக்கிவிடுகின்றனர்.

 ரஷ்ய,சீன கம்யூனிச கட்சிகளை புரட்சிக்கு பின்னர்தான் அதிகாரவர்க்க பாதையாளர்ளால் கைப்பற்ற முடிந்தது.ஆனால் இந்தியாவிலோ கம்யூனிச கட்சி பிறக்கும் போதே போலி கம்யூனிச கட்சியாகத்தான் பிறந்தது.இந்த போலி கம்யூனிச கட்சியை முறியடித்துத்தான் நக்சல்பரி போராளிகள் உண்மையான கம்யூனிச கட்சியை கட்டினர்.அதையும் கூட சாரு மஜும்தார் தலைமையிலான கும்பல், தனிநபர் அழித்தொழிப்பு என்ற பாதையின் மூலம் சீரழித்தது.இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட பல்வேறு குழுக்கள்தான், தனித்தனியே புரட்சிகர குழுக்களை மீளக்கட்டமைத்தன. அப்படி உருப்பெற்ற ஒரு குழுதான் வினவும் அதன் தோழமை அமைப்புகளும், இந்தக் குழுவையும் இப்போது அதிகாரவர்க்க பாதையாளர்கள் கைப்பற்றிவிட்டனர்.

தமிழகத்தை பொருத்தவரை சமூகத்தில் உள்ள ஆகப் பெரும்பான்மையான முன்னணியாளர்களை இந்த அமைப்பினர் தான் வென்றெடுத்துள்ளனர்.இப்போது இந்த முன்னணியாளர்களும் ஏறத்தாழ காயடிக்கப்பட்டுவிட்டனர்.இந்த காயடிப்பிலிருந்து தப்பித்தவர்களில் எமது குழுவும் ஒன்றாகும், எங்களை போன்றே மேலும் பலர் அங்கு இருப்பார்கள் என்பது நிச்சயம்.அவர்கள் அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கு எதிராக எம்மோடு அவர்கள் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.
இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றை பார்க்கும் போது சலிப்பும்,அவநம்பிக்கையுமே பலருக்கும் தோன்றினாலும், இவைகள் இதற்கு தீர்வாகாது,இந்த சலிப்பும், அவநம்பிக்கையும் அதிகாரவர்க்க பாதையாளர்களுக்கும்,போலி கம்யூனிசவாதிகளுக்கும் சாதகமாகவே அமைந்துவிடும்.ஆகவே இவர்களுக்கு எதிராக போராடி உண்மையான கம்யூனிச கட்சியை கட்டுவதுதான் ஒரே மாற்றுவழியாகும்.தமிழகத்தை பொருத்தவரை, ஒரே புரட்சிகர குழுவாக இருந்த வினவும் அதன் தோழமைகளும் அதிகாரவர்க்க பாதையாளர்களாக சீரழிந்துவிட்டாலும், இன்னமும் இந்தியாவில் உண்மையான புரட்சிகர அமைப்புகளும்,குழுக்களும் இருக்கவே செய்கின்றன.இவர்களிடம் சில பலவீனங்கள் இருந்தாலும்,அவைகள் அந்த அமைப்புகளை புரட்சிகர சக்திகளாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு பலம் வாய்ந்த காரணிகள் இல்லை என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.அப்படிப் பட்ட புரட்சிகர சக்திகளோடு ஐக்கியப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.ஆகவே முழு முற்றாக நம்பிக்கை இழப்பதற்கான சூழலோ அவசியமோ ஏதுமில்லை.

மக்கள் மத்தியில் நமது மாபெரும் ஆசான்களின் வழிகாட்டுதலின் படி களப்பணியாற்றுவதும் அதே நேரத்தில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே உள்ள சமூக அக்கறையுள்ள முன்னணியாளர்களை, அதிகார வர்க்க பாதையாளர்களாக சீரழிந்து விட்ட, மேற்கண்ட அமைப்பினரின் கைகளில் சிக்கி காயடிக்கப்படுவதை தடுப்பதும் எமது அவசர,அவசிய பணியாகும்.ஏனேன்றால் சமூக அக்கறையுள்ள முன்னணியாளர்கள் இல்லாமல் புரட்சிக்கு மக்களை அணி திரட்டுவது என்பது ஒரு போதும் சாத்தியமில்லை.ஆகவே எமது இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு, சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள்,சமூக மாற்றத்தை விரும்புவோர்,புரட்சியை நேசிப்போர் ஆகிய அனைவரும் ஆதரவும், ஒத்துழைப்பும் நல்குமாறும் எம்மோடு இணைந்து பணியாற்ற முன் வருமாறும் தோழமையுடன் கோருகிறோம்.

                           தோழமையுடன்
                     சூறாவளி நிர்வாகக் குழு. 


தொடர்புடைய கட்டுரைகள்:
                      



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2




   

Friday, 16 September 2011

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33 ! கொள்ளையடிப்பதை ம‌த்திய அரசு ஒப்புதல்!!


புது தில்லி, ஆக.23: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 23.37, ஆனால் அதற்கு விதிக்கப்படும் வரியோ ரூ. 40.33. இத்தகைய வரி விதிப்பு வேறெந்த நாட்டிலும் அல்ல. இந்தியாவில்தான் பொருளின் உற்பத்தி விலையை விட அதிக வரி விதிக்கப்படுகிறது.


அமெரிக்காவை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்தார்.
தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.70-க்கு விற்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 42.82 என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்.
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 41.81, இலங்கையில் ரூ. 50.30, வங்கதேசத்தில் ரூ. 44.80, நேபாளத்தில் ரூ. 63.24-க்கு விற்கப்படுகிறது.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவு என்று அவர் குறிப்பிட்டார். பிரான்ஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 94.97, ஜெர்மனியில் ரூ. 95.99, இங்கிலாந்தில் ரூ. 96.39, இத்தாலியில் ரூ. 96.79-க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு அதிகப்படியான வரி விதிப்பு முக்கியக் காரணமாகும். வரி விதிப்பின்றி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ஒரு லிட்டர் ரூ. 23.37-க்கு விற்பனை செய்ய முடியும்.
தில்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 41.29. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விடக் குறைவானதாகும். ஆனால் இலங்கை, வங்கேதசம் ஆகிய நாடுகளை விட அதிகமாகும்.
வரி விதிப்பின்றி ஒரு லிட்டர் டீசலை ரூ. 24.90-க்கு விற்பனை செய்ய முடியும்.
அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 45.84. பிரான்ஸில் ரூ. 69.87, ஜெர்மனியில் ரூ. 72.54, இங்கிலாந்து ரூ. 82.93, இத்தாலியில் ரூ. 74 விலையில் விற்பனையாகிறது. பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 46.70, நேபாளத்தில் ரூ. 45.38, இலங்கையில் ரூ. 34.37, வங்கதேசத்தில் ரூ. 27.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொது விநியோக முறையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 14.83-க்கு விற்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் இது மிக மிகக் குறைவான விலையாகும். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 44.06, இலங்கையில் ரூ. 24.67, வங்கதேசத்தில் ரூ. 45.38-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விலை (14.2கி.கி) ரூ. 399. இது பாகிஸ்தானில் ரூ. 757.04, இலங்கையில் ரூ. 863.40, வங்கதேசத்தில் ரூ. 469.24, நேபாளத்தில் ரூ. 819.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நன்றி: தினமணி