விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label உதயகுமார். Show all posts
Showing posts with label உதயகுமார். Show all posts

Sunday, 22 July 2012

சுப.உதயகுமார்:பிழைப்புவாத புதைசேற்றை நோக்கி...........

தமிழனின் வரலாற்றில் சென்ற நூற்றாண்டில் 1960 - களில் நடைபெற்ற இந்தி திணிப்பிற்கு எதிரான மொழிப்போர்தான் கிபி 6-ம் நூற்றாண்டுக்கு பின்னர்-களப்பிரர் ஆட்சிக்கு பின்னர்- தமிழர்களின்    வரலாற்றில் குறிப்பிடத்தக்க எழுச்சியாகும்.இதன் பின்னர் இடையில் ஏற்பட்ட தொய்வை முழுமையாக இல்லாவிட்டாலும்,குறிப்பிடத்தக்க அளவிற்கு போக்கிய எழுச்சிமிக்கப் போராட்டம் கூடங்குளம் போராட்டமாகும்.இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய சுப.உதயகுமார் நமது மதிப்பிற்குரிய மனிதராக திகழ்ந்தார் என்பது மிகையல்லை.

திரு.சுப.உதயக்குமார் அவர்கள் அண்மையில் தமிழரின் உடனடிக்கடமை என்றக்கட்டுரையின் மூலம் தமிழ்த் தலைவர்களுக்கு அறைகூவல் ஒன்றை விடுத்துள்ளார்.அதில் சமூக,பொருளாதார,அரசியல்,பண்பாடு ஆகியத்துறைகளில் தமிழ்ச்சமூகத்தின் பின்னடைவுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றை பற்றியும், இதற்கான காரணங்கள்,காரணமானவர்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.



தமிழனை சிந்திக்கவிடாமல், கேள்வி கேட்கவிடாமல், அடுக்குமொழி பேசி, அனாவசியமாக கடிதங்கள் எழுதி, குழாயடிச் சண்டை, குடும்பப்பகை போன்ற ஓர் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்துக்குள் நம்மைத் தள்ளி திமுகவும, அதிமுகவும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். வெற்று வார்த்தைகளையும், வீர வசனங்களையும் கேட்டு வீணாகிப்போன தமது தமிழினம், தமது எதிர்காலத்தைப் பற்றி கரிசனத்துடனும், கவனத்துடனும் அலசி ஆராயத் துவங்கிவிட்டது.

திராவிடம், பெரியாரியம், திமுக-அதிமுக கட்சிகளின் இன விரோதப் போக்கு, தமிழ் தேசியம், இந்த சித்தாந்தம் பேசுகிற அமைப்புகளின் இடையேயான சிறு சிறு வேறுபாடுகள், ஈழப் பிரச்சினையில் நமது நிலைப்பாடு பற்றியெல்லாம் ஒர் ஆரோக்கியமான அரசியல் விவாதம் நடக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, ஒலியை விட அதிக ஒளியை உருவாக்கும், உருவாக்கவேண்டும் என விரும்புவோம்”.

வெறுப்பு, கோபத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அரசியலை கேள்விக்குள்ளாக்குவதுபோல; இலவசம், லஞ்சம் மீது எழுப்பப்பட்ட பொருளாதாரத்தை எதிர்க்க முனைவதுபோல; பழம்பெருமை, வெளிவேடம் மீது நிறுவப்பட்ட கலாச்சாரத்தையும் நாம் மறுபரிசீலனை பண்ணியாகவேண்டும். திரைப்படங்களில் ஆபாசம், சின்னத்திரையில் சிறுமைத்தனம், பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது பாவிப்பது, பாலியல் கல்வி எதிர்ப்பு, மறுமணம் மறுப்பு, முதியோர் புறக்கணிப்பு என கலாச்சார அழிவுக்குள் புதைந்து கொண்டிருக்கிறோம்”.

1956-ம் ஆண்டு இந்தி மொழி நம்மீது திணிக்கப்பட்ட போது எப்படி வெகுண்டெழுந்து நமது மொழியுரிமையை,அடிப்படை தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள போராடி வென்றொமோ,அந்த மாதிரியான ஒரு நிலையில்தான் தமிழக மக்கள் இன்று நிற்கிறோம்”.

மேலே கண்டவாறு தமது கட்டுரையில் தமிழினத்தின் நிலையைப்பற்றிய தனது வரையறுப்பை,ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறையாக,” தமிழகத்தின் இளம் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை புறந்தள்ளி, மனமாச்சர்யங்களை ஒதுக்கி வைத்து, ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்காக உடனடியாக ஒன்று படவேண்டும். பொது செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அனைத்து தளங்களிலும் ஒரு புதிய தமிழ் சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைக்க முன்வர வேண்டும்”,என்று பரிந்துரைத்துள்ளார்.

தமிழ்ச்சமுகத்தின் முன் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் தமிழ் தலைவர்களுக்கிடையில் உள்ள சிறு,சிறு வேறுபாடுகள்தான் என வரையறுத்துள்ளார்.மொத்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ள அவலங்கள் அனைத்திற்கும் தமிழ்த்தலைவர்கள்தான் காரணம் எனக்கூறியுள்ளார்.தலைவர்கள்தான் இவ்வளவு அவலங்களுக்கும் ,இழிவுகளுக்கும் காரணம் என்றால் அதற்கான தண்டனையைப்பற்றி அவர் வாயே திறக்கவில்லை.வாய்த்திறக்காதது மட்டுமல்ல, அதற்கு நேர்மாறாக தலைவர்கள் தமக்கிடையில் உள்ள சிறு,சிறு வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று பரிந்துரைப்பது விசித்திரமான பரிந்துரை மட்டுமல்ல முற்றிலும் முரணான தீர்வுமாகும்.

தமிழினத் தலைவர்கள்தான் அவலங்கள் அனைத்திற்கும் காரணம்,அவர்கள்தான் இவைகள் அனைத்தையும் செய்கிறார்கள் என்றால் அது எப்படி சாத்தியமாகிறது.ஏறத்தாழ எட்டுகோடி மக்களைக்கொண்ட தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு மட்டுமே உள்ள தலைவர்கள், இந்த இனத்திற்கு எதிராக செயல்பட்டு, அதன் வளர்ச்சியை மட்டுமல்ல,அதன் வாழ்வையே கேள்விக்குள்ளாக்க முடிகிறது என்றால் அதனால் அழிவுக்குள்ளாக்கபடுகிற தமிழினம் அதற்கெதிராக ஏன் வினையாற்றவில்லை?

இந்தக் கேள்வியை திரு சுப.உதயக்குமார் அவர்கள் எழுப்பாமலேயே நழுவிக்கொள்கிறார். ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்தின் செயல்பாடுகளில் இருந்து, இந்தக்கேள்வியை எழுப்புவதற்கான தேவை,அவசியம் வாய்ப்பு அவருக்கு இல்லாவிட்டாலும் தனது சொந்த போராட்டத்தின் ஊடாகவே இக்கேள்வி எழுவதற்கான வாய்ப்பு அவருக்கு உள்ளது.

கோடிக்கணக்கான மக்களை ஒருசில தலைவர்கள் எனப்படுவோர் ஏமாற்றி அழிவுள்ளாக்க முடிகிறது என்றால்,அதை ஏற்பதற்கு உரிய பண்பு சமூகத்திற்கு இருக்கிறது என்பதுதான் அடிப்படையாகும்.

அவரின் கட்டுரையிலேயே கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு உலையை கேரளத்தில் அமைக்க முடியுமா?என்ற வினாவின் மூலம் தமிழினத்தின் அவலத்தைப்பற்றி குறிப்பிடும் அவர் அதற்கு மேல் சென்று கேரளத்தில் அமைக்க முடியாததற்கான காரணத்தைப்பற்றி விவாதிப்பதை தவிர்த்து விடுகிறார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், அவ்வட்டார மீனவ மக்களின் ஆதரவை பெற்ற அளவிற்கு ஏனையப்பிரிவு மக்களிடையே,அதிலும் குறிப்பாக நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறவில்லை.கூடங்குளத்திற்கு வெளியே உள்ள விவசாயிகளுக்கு இதுபற்றிய ஒரு கண்ணோட்டமே ஏற்படவில்லை.தமது அழிவைப்பற்றிய கண்ணோட்டமோ,செயல்பாடோ இல்லாத மக்களிடையே, கூடங்குளம் பிரச்சனையில் அதைப்பற்றிய கண்ணோட்டம் ஏற்படாதது அதிசயமான நிகழ்வல்ல.

கூடங்குளம் வட்டார மக்களிடம்-மீனவ மக்களிடம்-ஏற்படுத்தப்பட்ட எழுச்சி ஏனைய மக்களிடமும் தமிழகத்தின் பிறப்பகுதி மக்களிடமும் உருவாக்க முடியாததே கூடங்குளம் போராட்டம் பின்னடைவை சந்தித்ததற்கான அடிப்படையான காரணமாகும்.

கூடங்குளம் போராட்டம் வெற்றி பெறுவது என்பது போராட்டம் விரிவாக்கப்படுவதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை கூடங்குளம் : இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி என்றக்கட்டுரையிலேயே நாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

கூடங்குளம் போராட்டத்தை விரிவாக்க வேண்டியதன் அவசியத்தை போராட்டக்குழு குறிப்பிட்ட அளவிற்கு புரிந்து கொண்டிருப்பதாகவே, தமிழகம் தழுவிய அளவில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் கிடைத்த ஆதரவு சக்திகளைக் கொண்டு அவர்கள் நடத்திய பிரச்சாரங்களின் ஊடாக நாங்கள் புரிந்து கொண்டிருந்தோம்.ஆனால் இப்போராட்டத்தில் தமிழக மக்களின் விரிவான,ஆழமான பங்களிப்பு,பங்கேற்புதான் வெற்றிக்கான அடிப்படை என்பதை போராட்டக்குழு முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் தற்போது சுப.உதயகுமார் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து நமக்கு புலப்படுகிறது.

போராட்டக்குழுவின் இந்த அறியாமையும் எதிர்பாராதது அல்ல.ஆனால் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றத் தேவையை உணர்ந்து, அதை நோக்கி பயணிப்பதற்கு மாறாக,பிழைப்புவாத புதை சேற்றை நோக்கி போராட்டக்குழு சென்றுகொண்டிருப்பதையே திரு.சுப.உதயகுமாரின் தற்போதைய கட்டுரையின் சாரம் நமக்கு உணர்த்துகிறது.

தமிழினத்தலைவர்களுக்கு சுப.உதயக்குமார் அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் பிழைப்புவாத அடிப்படையைக் கொண்டது என்று எப்படிக்கூறலாம் என்று கேள்வி எழலாம்.அது எப்படி என்பதுப்பற்றி இனி சுருக்கமாக பார்ப்போம்.

சுப.உதயக்குமார் போன்ற தலைவர்களுக்கு தமிழினத்தின் நலன்களின் மீது உண்மையில்  எவ்வளவுதான் அக்கறை இருந்தாலும்,தமிழ்ச்சமூகத்தின் யதார்த்த்த்திற்கு மாறாக முன்வைக்கப்படும் முழக்கங்கள்,தீர்வுகளை தமிழ்ச்சமூகம் புரிந்துகொள்ளவோ,ஏற்கவோ வாய்ப்பில்லை.இதன் காரணமாக இம்முழக்கங்களும்,தீர்வுகளும் உண்மையில் தமிழ்ச்சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, வெற்று முழக்கங்களாகி விடுகிறது.
இதனால் இவைகள் முன்வைத்த,முன்வைக்கும் தலைமைகள் சோர்வடைகின்றன.இந்த சோர்வு சமூகத்தின் மீதான வெறுப்பாகவும்,அவநம்பிக்கையாவும் கருக்கொள்கிறது.பின்னர் இவைகள் தனிநபர் பயங்கரவாதமாகவும்,பிழைப்புவாதமாகவும் பிறப்பெடுக்கிறது.
இயக்கவியல் தத்துவத்தின் படி இவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாத உண்மையாகும்.

உலகில் உள்ள அனைத்து பொருள்களும் இடைவிடாது இயங்கிக்கொண்டும்,மாறிக்கொண்டும்தான் இருக்கின்றன.மாற்றத்துக்கு உள்ளாகாதது எதுவுமில்லை.இதன்படி தமிழினத்தலைவர்கள் தமிழினத்தின் வளர்ச்சிக்காக முன்வைத்த,முன் வைக்கும் முழக்கங்கள்,தீர்வுகள் முன்னோக்கி பயணிக்க வேண்டும் அல்லது அவைகள் பின்னோக்கி பயணிப்பது தவிர்க்கவியலாத விதியாகும்.அப்படி பின்னோக்கிய பயணத்தின் நடைமுறை வெளிப்பாடுகள்தான் தனிநபர் பயங்கரவாதமும்,பிழைப்புவாதமும் ஆகும்.

மொத்தத்தில் சமூக எதார்த்த நிலைமைகளுக்கு முரணாக முன்வைக்கபடும் முழக்கங்களும்,தீர்வுகளும் அவைகள் எவ்வளவுதான் நல்லெண்ணத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும்,அவைகள் சமூகத்தின் நிராகரிப்பிற்கும்,புறக்கணிப்பிற்கும் உள்ளாவதும், இதன் காரணமாக இவைகளை முன்வைத்த தலைமைச் சகதிகள் சோர்வடைந்து அவைகள் சமூகத்தின் மீதான வெறுப்பாகவும்,அவநம்பிக்கையாகவும் பரிணமிக்கின்றன.வெறுப்பு,அவநம்பிக்கை ஆகியவற்றின் நடைமுறை வடிவங்களாகத்தான் தனிநபர் பயங்கரவாதமும்,பிழைப்புவாதமும் ஆகும்.

மேலே நாம் பரிசிலித்த வகையில் எந்த ஒரு சமூக நலனுக்காவும் முன்வைக்கப்படும் முழக்கங்களும்,தீர்வுகளும் அச்சமூகம் பற்றிய வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையிலான செழுமையான அறிவை,புரிதலை தலைமைச்சக்திகள் பெற்றிருப்பது அடிப்படையான தேவையாகும்.தலைமைச்சக்திகளின் சமூக வளர்ச்சி பற்றிய செழுமையான அறிவின் அடிப்படையில், அவைகள் முன் வைக்கும் முழக்கங்களும்,தீர்வுகளுமே சமூகத்தின் உண்மையான உள்ளடக்கத்தை கொண்டவைகளாக இருக்க முடியும்.இவைகளின் மூலமே சமூக வளர்ச்சிக்கும்,மாற்றத்துக்குமான போராட்டங்களில், அதன் பங்கேற்பாளர்களாக, பங்குதாரர்களாக மக்களை அணிதிரட்ட இயலும். 

இந்த விஞ்ஞான பூர்வமான வரையறுப்பும், அதன் அடிப்படையிலான செயல்பாடுகளும் இல்லாத வரை எந்த  ஒரு அமைப்பாலும், குழுவாலும் தமிழ்மக்களை, அவர்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக அணிதிரட்டுவது என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்.

இப்போது தம்மை ஜனநாயக அமைப்புகள் என்றும் புரட்சிகர சக்திகள் என்றும் கூறிக்கொள்வோர் அனைவரும் தமிழ்ச்சமூகத்தின் யதார்த்தத்திற்கு புறம்பான முழக்கங்களையே மக்கள் முன்வைக்கின்றனர். இவர்கள் முன்வைக்கும் முழக்கங்கள் அனைத்தும் ஜனநாயக பூர்வமாக சிந்திக்கும் சமூகத்தின் முன்வைக்கக் கூடியவைகள்.

ஆனால் தமிழ்ச்சமூகமோ மிகவும் பின்தங்கிய வளர்ச்சியை, சிந்தனா முறையை கொண்ட  சமூகம் என்பதே யதார்த்த நிலையாகும்.

தற்போது சமூகத்தில் புழக்கத்தில் உள்ள விஞ்ஞான பூர்வமான கருவிகள், சாதனங்கள் ஆகியவற்றிலிருந்து தமிழ்ச்சமூகம்  ஜனநாயக பூர்வமாக சிந்திக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டதாகவே தம்மை தமினத்தலைவர்களாகவும்,புரட்சியாளர்களாகவும் கருதிக்கொள்வோர் அனைவரும் கற்பிதம் செய்து கொள்கின்றனர். விஞ்ஞான பூர்வமான கருவிகளின், சாதனங்களின் பயன்பாடே அச்சமூகத்தின்  சிந்தனா முறையிலும் அதே அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி சமூக மாற்றத்தை, வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான காரணியாக அமையும் என்று கருதும் இவர்களின் கண்ணோட்டமே இவர்களை இயக்குகிறது.

மேற்கண்ட கண்ணோட்டத்தின் மூலம் சமூக வளர்ச்சி பற்றிய இவர்களின் கண்ணோட்டமே இயக்கவியலுக்கு புறம்பானதும், எந்திரகதியானதும் ஆகும்.

ஒரு சமூகம் தாம் பயன்படுத்தும் விஞ்ஞான பூர்வமான கருவிகளை,சாதனங்களை இருவழிகளில் பெறுகின்றன

1.தமது சொந்த வினையாற்றல்களின் விளைவாக எட்டப்படும் வளர்ச்சியின் ஊடாக ஏற்படுத்திக் கொளவது முதலாவது வகை.

2 ஆதிக்கவாதிகள் தமது மேலாதிக்க நலன்களுக்காக திணிப்பின் ஊடாக உருவாக்குவது இரண்டாவது வகை.

ஒரு சமூகம் தனது செயல்பாடுகள், வினையாற்றல்களின் விளைவாக, எந்த அளவிற்கு சமூக வளர்ச்சியை எட்டுகிறதோ, அந்த அளவிற்கே அச்சமூக மக்களின் சிந்தனையிலும் அது மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆனால் இதற்கு மாறாக ஆதிக்க சக்திகள் தமது நலன்கள், தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியில் திணிக்கும் கருவிகளின் அடிப்படையிலான உற்பத்தி வளர்ச்சியில் அச்சமூகத்தின் செயல்பாடுகள், வினையாற்றல்கள் ஏதுமில்லாத போது, அது மக்களின் சிந்தனா முறையிலும் நேர்மறையான வளர்ச்சியை ஏற்படுத்தாது.

ஒரு சமூகம் தனது சொந்த வினையாற்றல்களின் வாயிலாக எட்டும் வளர்ச்சியிலிருந்துதான் சிந்தனாரீதியான வளர்ச்சியையும், மாற்றத்தையும் எட்டமுடியும்.

திணிப்பின் ஊடாக கிடைக்கும் கருவிகளின் வாயிலாக உருவாக்கப்படும் உற்பத்தி வளர்ச்சியில் இருந்து ஒருபோதும் இந்த வளர்ச்சியை அடைய முடியாது.

மேலே கண்ட வகையில்தான் நமது தமிழ்ச்சமூகம் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக  இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் திணிப்பின் ஊடான உற்பத்தி வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளன.
இன்று இந்தியாவிலுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தன்மீதான நவீன உற்பத்தி திணிப்பிற்கு, முந்தைய சமூக வளர்ச்சியின் சிந்தனாமுறை உள்ளடக்கத்தையும், திணிப்பின் ஊடாக பெற்ற சிந்தனா முறை உள்ளடக்கத்தையும் கலந்த கலவையையே தமது சிந்தனா முறையாகக் கொண்டுள்ளன.

தமிழ்ச் சமூகம்,  புராதன பொதுவுடைமைக் சமூகத்திற்கும், நிலபிரபுத்துவ சமூக வளர்ச்சிக்கும் இடைக்கட்டத்தில் அடைந்த மொழி, பண்பாட்டு வளர்ச்சியைத்தான்  இன்றளவும் உயர்த்திப்பிடிக்கிறது.தமிழ்சமுகத்தின் இந்த அடிப்படைதான் இன்றளவும் பார்ப்பன,சமஸ்கிருத எதிர்ப்பிற்கான அடிப்படையாக விளங்குகிறது.இவைகள் மேலும் வளர்வதற்கு தேவையான சமூக வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பாகவே,பார்ப்பனிய ஆசிய சொத்துடைமை வடிவமான பின்தங்கிய நிலபிரவுத்துவமும், 17-ம் நூற்றாண்டின் காலனிய ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்ட தரகு முதலாளித்துவ சமூக கட்டமைப்பும் தமிழ்ச்சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது.இதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் சங்ககாலத்திற்கு பிந்தைய இயல்பான சமூக வளர்ச்சி முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது.

சங்ககாலத்தில் தமிழ்ச்சமூகம் எட்டிய இயல்பான வளர்ச்சி காரணமாகத்தான் மொழியில் ஆகியவற்றில் இன்றளவும் பார்ப்பன, சமஸ்கிருத எதிர்ப்பை கொண்டுள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி எட்டப்பட்ட காலத்திற்கு பிந்தைய ஆசிய சொத்துடைமை வடிவம்,தரகு முதலாளித்துவம் ஆகியவை  ஆதிக்கவாதிகளால் திணிக்கப்பட்டதன் காரணமாக அதன் அடிப்படையிலான பண்பாட்டையும், சிந்தனா முறையையுமே தனக்கான  சிந்தனாமுறையாக தமிழ்ச்சமூகம் வரித்துக் கொண்டுள்ளது.

எந்த அளவிற்கு ஒரு சமூகத்தின் இயல்பான வளர்ச்சி  தடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு அந்த இடத்தை, இவ்வளர்ச்சியை தடுக்கும் ஆதிக்கவாதிகளின் சிந்தனா முறை ஆக்கிரமித்துக்கொள்கிறது. இதன் காரணமாக இன்றைய தமிழ்ச்சமூகத்தின் சிந்தனா முறை சமூக  அக்கறையற்ற அடிமைத்தனத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
தமிழ்சமூகத்தின் இப்போதைய வாழ்வியல் காரணமாக பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என்பதும் தற்போது முனை மழுங்கி அவைகளும் பிழைப்புவாதத்திற்கான கருவிகளாக மாற்றப்பட்டுவிட்டது.

வடஇந்தியாவிலுள்ள பூர்வகுடி இனங்கள் அனைத்தும் புராதன பொதுவுடைமை சமூகமாக இருந்த போதே ஆரியத்தால் வெற்றி கொள்ளப்பட்டது.தென்னிந்தியாவில் ஊடுருவிய பார்ப்பனியம் தமிழ் தவிர்த்த ஏனைய பூவர்குடி இனங்கள் அனைத்தையும், தான் ஊடுருவிய சிறிதுகாலத்திலேயே வெற்றிகொண்டது.ஆனால் தமிழ்ச்சமூகத்தை பார்ப்பனியத்தால் அவ்வளவு எளிதாக வெற்றிக்கொள்ள இயலவில்லை.தமிழ்ச்சமூகத்தை வெற்றிக்கொள்ள முடியாதது மட்டுமல்ல,அது அதனிடம் ஆரம்பத்தில் தோல்வியையும் தழுவியது.தமிழ்ச்சமூகம் பார்ப்பனியத்தை தூக்கியெறிந்த வெற்றியின் அடையாளம்தான் களப்பிரர் ஆட்சிகாலமாகும்.களப்பிரர் ஆட்சிக்கு பின்னரே தமிழ்ச்சமூகத்தின் மீது பார்ப்பனியம் ஆட்சியாளர்கள் மூலம் முழுமையாக திணிக்கப்பட்டது.ஆனாலும் தமிழின் செழுமையான வளர்ச்சி காரணமாக சமஸ்கிருத மொழியில் இருந்து தன்னை வளப்படுத்திக்கொள்வதற்கான தேவை எப்போதும் எழவேயில்லை.அதே நேரத்தில் ஆசிய சொத்துடைமை வடிவம் சங்ககாலத்தின் இறுதியில் இருந்து களப்பிரர்காலம் உட்பட 17-ம் நூற்றாண்டு வெள்ளையர் ஆட்சி காலம் வரை மிக நீண்ட காலமாக நடைமுறையில் இருந்ததால் தமிழ்ச்சமூகத்தின் பண்பாடாக பார்ப்பனியம் மாறிப்போனது.

தமிழ் தவிர்த்த ஏனைய பூர்வகுடி இனங்கள் அனைத்தும் பார்ப்பனிய மொழி,பண்பாடு ஆகிய இரண்டையும் தமது போதாமை காரணமாக ஏற்றுக்கொண்டன.ஆனால் தமிழ் இனமோ பார்ப்பன சமஸ்கிருத மொழியை நிராகரித்தாலும், அதன் பண்பாட்டை ஏற்றுக்கொண்டுவிட்டது.இதுதான் தமிழ் இனத்திற்கும் ஏனைய தேசிய இனங்களுக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாடாகும்.

மொத்தத்தில் இந்தியாவிலுள்ள தேசிய இனங்களில் தமிழ் தேசிய இனத்தை தவிர்த்த ஏனைய தேசிய இனங்கள் அனைத்தும் குறைந்த அளவிற்கு கூட இயல்பான சமூக வளர்ச்சியை எட்டவில்லை. குறைந்த அளவு சமூக வளர்ச்சியை அடைந்த ஒரே தேசிய இனம் தமிழ் தேசிய இனம் மட்டுமே.

மேலே கண்ட சமூக எதார்த்தத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் இச்சமூகங்களின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்காகவும் முன் வைக்கப்படும் முழக்கங்களாலும்,தீர்வுகளாலும் இந்தியாவில் உள்ள  எந்த ஒரு தேசிய இனத்திலும் மாற்றம் எதையும் உருவாக்கிவிடமுடியாது. மக்களின் சிந்தனா முறையை தமது சிந்தனாமுறையின் தரத்திற்கு உயர்த்தி விடவும் முடியாது.

சமூக அடித்தளத்திற்கு ஏற்பவே மக்களால் சிந்திக்கவும்,செயல்படவும் முடியும். இதற்கு முரணாக மக்கள் முன் வைக்கப்படும் அனைத்து முழக்கங்களும் தோல்வியை தழுவது விதிகளுக்கு முரணானது அல்ல.

எனவே சமூக அடித்தளத்தின் காரணமாக மக்களிடையே எழும் சிந்தனா முறைக்கு ஏற்ப வைக்கப்படும் முழக்கங்களும்,தீர்வுகளும்தான் இன்றைய சமூகத்தேவையாகும். இதுவே தலைமை சக்திகளின் தலையாய, அடிப்படையான பணியாகவும் அமைய வேண்டும்.இதனடிப்படையில் சுப.உதயக்குமார் தலைமையிலான குழு பரிசீலிக்க முற்படவேண்டும் என எமது வேண்டுகோளை இதன்மூலம் முன்வைக்கிறோம்.

தொடர்புடைய கட்டுரைகள்:









    

Wednesday, 22 February 2012

கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.

கூடங்குளம் அணு உலை நிலநடுக்கம்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களையும் தாங்கும் திறன் கொண்டது.ஆகவே இதனால் ஆபத்து ஏதுமில்லை என்று தமிழக அரசு அமைத்துள்ள வல்லுநர் குழு கூறியுள்ளது.இந்தக் கருத்து திட்டமிட்டே மத்திய அரசு,மாநில அரசு செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் அணு உலையினால் ஏற்படும் பாதிப்பு இயற்கை பேரிடர்களால் மட்டுமல்ல,இயற்கை பேரிடர் ஏற்படாவிட்டாலும், அணு உலையினால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைத்து தரப்பினரும் மூடி மறைத்து வருகின்றனர்.அதை அம்பலப்படுத்தும் வகையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு உதயக்குமார் எமக்களித்த நேர்காணலை மறுபிரசுரம் செய்கிறோம்.  



1. கூடங்குளத்தில் அணு உலை அமைக்கம் திட்டத்தை எந்த ஆண்டில் இருந்து எதிர்த்து வருகிறீர்கள்?என்ன,என்ன வடிவங்களில் எதிர்த்து போராடி வருகின்றீர்கள்?
1997-98 காலகட்டத்தில் இருந்து இந்த கூடங்குளத்திற்கு எதிரான ஒரு லிப்ட் சர்வ் வச்சிருந்த நான், கம்யுனிசம் வாட்ச் அன் கவர்னர் மானிட்டர் அப்படிங்கர ஒரு லிப்ட் சர்வ் அதுல கூடங்குளம் சம்பந்தமான செய்திகளை தொகுத்து ஒரு செய்தி மடல் மாதிரி தொகுத்து போட்டு கொண்டு இருந்தேன் அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.இத்திட்டம் தொடங்கப்பட்ட 1988-89 காலக்கட்டதிலேயே இதற்கு எதிராக நாகர்கோவிலில் பல முயற்சிகள் செய்து இருக்கிறோம்.பிறகு சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு,கோர்ப்பசோவ் பதவி இழந்த பிறகும்,ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அதற்கு பிறகு 1997-98 காலகட்டத்தில் இதற்கு எதிரான லிப்ட் சர்வில் செய்திகளை தொகுத்து போட்டுகொண்டு இருந்தேன்..பிறகு 2001-ல் திரும்பவும் நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த பிறகு 2001 நவம்பர் மாதம் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை மதுரையில்       தொடங்கினோம். இதில் இருந்து தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.
2.அணு உலையால் மீன்வளம் எந்தளவிற்கு பாதிக்கப்படும்?
மீன் வளம் எந்தளவுக்கு பாதிக்கிறது என்றால் அணு உலையின் மையப்பகுதியை கோர் என்று சொல்லுவார்கள்,அதை குளிர்விப்பதற்கு கடலில் இருந்து தண்ணீர் எடுப்பார்கள்.அந்த தண்ணீர் அணு உலையை சுற்றிவரும் போது சூடாகிவிடும்.பின்பு கடலில்  கொட்டுவார்கள்அப்படி கொட்டும் போது,அணு சக்தி துறை என்ன சொல்லுகிறது என்றால் தண்ணீர் 7 டிகிரி தான் சூடாகும் என்கிறது.கல்பாக்கத்தில் 12 டிகிரி தண்ணீர், சூடாகிறது.இந்த தண்ணீரை தொடர்ந்து 24 மணி நேரமும்,வாரத்தில் 7 நாட்களும்,வருடத்தில் 365 நாட்களும் முழுவதும் கடலில் கொட்டும் போது நிச்சயம் அது கடலில் மாற்றத்தை உண்டுபண்ணும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு இருக்கும்.அந்த தண்ணீரில் கதிர்வீச்சு அளவு குறைவாக இருக்கிறது என்று சொன்னாலும் சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் கொஞ்சம், கொஞ்சமாக சிறுக,சிறுக 60 ஆண்டுகளில் இதன் கதிர்வீச்சும் அதிகமாகிவிடும்.இந்த சூடான ,கதிர்வீச்சு கலந்த  தண்ணீர் 60 ஆண்டுகள் கடலில் விடுவதால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.கதிர்வீச்சால் கடலுக்கு ஆபத்தில்லை என்று சொல்லுவது பொய்.
அதே மாதிரி உப்பகத்தி ஆலை(Desalltation paln) 4 இடத்தில் வைத்துள்ளார்கள்,இதில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும் வெளிவரும்.இது 4 ஆலைகளில் இருந்தா அல்லது ஒரு ஆலையில் இருந்தா என்பது தெரியவில்லை.இப்படி ஒரு மணி நேரத்துக்கு 350 கண மீட்டர் உப்பும்,அமிலங்களும்,கழிவுகளும் உற்பத்தி செய்து இதையும் கொண்டு போய் கடலில் கொட்டினால்,இவைகள் கடலில் உப்பும்,அமிலத்தன்மையும் நிச்சயம் அதிகரிக்கும்.இதனால் இப்பகுதியில் உள்ள மீன் பிடி கிராமங்கள் மீன் பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படும்.அதாவது மீன் வளம் குறையும்,அப்படியே மீன் கிடைத்தாலும் நோய்வாய் பட்டு இருக்கும்.கல்பாக்கத்தில் உள்ள மீனவர்கள் சொல்கிறார்கள், ”எங்கள் பகுதியில் மின்வளம் குறைந்துவிட்டது பல வகையான மின்கள் கிடைப்பதில்லை”, என்று கூறுகிறார்கள்.அங்கு கல்விரால் மீன்கள் தான் கிடைக்கிறது,இதை மக்கள் விரும்பி சாப்பிடுவதில்லை,அப்படியே கிடைத்தாலும் அது நோய்வாய் பட்டு கிடைக்கிறது என்கிறார்கள்.ஆகையால் இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட ஆரம்பித்தால் இப்பகுதியில் உள்ள தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்ட மீன்பிடி தொழில் நிச்சயம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
3.அணு உலையால் விவசாயத் தொழிலில் என்ன,என்ன பாதிப்பு ஏற்படும்?
இதே மாதிரி தான்.கடலில் எப்படி இந்த கழிவுகளை கொண்டு போய் விடுகிறார்களோ,அதே மாதிரி தான்.அதாவது புகை போக்கிகளில் இருந்து ’ தொடர்ச்சியாக தினசரி வெளியேற்றுதல்’ என்ற முறையில் சாதாரணமாகவே கழிவுகள் வெளிவரும்.அதில் அயோடின்,சிசியம்,ஸ்ராந்தியம்,டெலோரியம் இந்த மாதிரியான கதிர்வீச்சு தன்மை கொண்ட தனிமங்கள் காற்றில் கரைந்து,மிதந்து கொண்டே இருக்கும்,அன்று காற்று எந்தப்பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் போய் இந்த கதிர்வீச்சு கணிமம் மண்ணில் போய் விழும்.கொஞ்சம் தப்பி வானத்துக்கு போகும்,அப்படி போவது கூட மேகங்களில் அமர்ந்திருந்து விட்டு மழை தண்ணீர் மூலம் மண்ணை அடைகிறது.இது போல தொடர்ந்து 60 ஆண்டுகள் நடைபெறும் போது மண்ணும் கதிர்வீச்சு தன்மையுள்ள மண்ணாகும்.இந்த மண்ணில் விளையும் பயிர்களும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.பசு மாட்டின் பால் கதிர்வீச்சால் பாதிக்கப்படும்.நாம் சாப்பிடும் காய்கறிகள்,பழங்கள் என அனைத்து உணவு பொருட்களும் இப்படி விஷமாகி போகும்.இதனால் நிச்சயம் விவசாயம் பாதிக்கப்படும்.
4.அணு சக்தி சுற்றுச் சூழலை எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்?
சுற்றுச்சூழல் என்று பார்க்கும் போது மேலே கூறியது போல், காற்று நாசமாகி போகிறது.காற்றில் கதிர்வீச்சு பொருள் மிதந்து வருகிறது.கடல் நாசமாகிப்போகிறது.நிலம் பாழாகிறது.நிலத்தடி நீர் பாழாகிறது.இப்படி ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாழாகிப் போகும்.
5.சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
இப்படி பாதிப்புக்கு உள்ளாகும் போது,இது 60 ஆண்டுகளுக்கு நம்  மண்ணும்,தண்ணீரும்,காற்றும்  தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கும்.இதனால் நமது உணவு சங்கிலி(food chain) ஆன உணவிற்குள்ளும் கதிர்வீச்சு போகும்.இதனால் நாம் உண்ணும் உணவு,காற்று,குடிக்கின்ற தண்ணீர் அனைத்தும் விஷமாகும்.இதனால் நிச்சயமாக பலவித நோய்கள் உருவாகும்.பலவிதமான நோய் என்று பார்க்கும் போது கதிர்வீச்சு நோய்(Radiational ill) முக்கியமானது.கதிர்வீச்சு என்று பார்க்கும் போது அது எல்லோர் உடலும் ஏற்றுக்கொள்ளாது.
அது வந்தால் எல்லோருக்கும் காய்ச்சல்,தலைவலி,வயிற்றுப்போக்கு வரும்.கதிர்வீச்சு அதிகமாகும் போது தோல் கருத்து புண்ணாகிப்போகும்.உடல் அளவில் பலமாக இருப்பவர்கள் நாளடைவில் கதிர்வீச்சின் தாக்கத்தால் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புற்று நோய் ஏற்படும்.இவர்களின் குழந்தைகள் புற்றுநோய்,மனவளர்ச்சி குறைபாடு,உடல் உறுப்புகள் குறைபாடு உடையவர்களாக பிறப்பார்கள்.
உதாரணமாக கைகால் குட்டையாக,விரல்கள் குட்டையாக அல்லது குறைவாக இருக்கும்.ரத்த புற்று நோய்,ஒருக்கண்ணோடு பிறக்கும்.இப்படி ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வாழ்வில் அமைதி,நல்வாழ்வு அனைத்தும் பாதிக்கப்படும்.
6.அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படும் சுற்றுச்சூழலை மீண்டும் சரி செய்ய முடியுமா?
செய்யலாம்,ஆனால் அது மிகவும் சிரமமானப் பணியாகும்.செர்னோபில் விபத்து நடந்து பக்கத்து நாடுகளான பெலுரு,லாட்வியா,எஸ்டோனியா போன்ற நாடுகளில் எல்லாம் கதிர்வீச்சு கழிவுகளின் படிவம் படிந்து, அந்த நாடுகளின் மண்வளம் பாழாகிவிட்டது.அதற்கு பல லட்சம் டாலர் செலவு செய்து அம்மண்ணை சுத்தம் செய்து, கதிர்வீச்சு இல்லாத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.
இப்போது ஜப்பானிலுள்ள புகுஷிமாவில் விபத்து நடந்து 9 மாதங்கள் ஆகப்போகிறது.அங்கு புவியின் மேலடுக்கு மண் நீக்கப்பட்டு கதிர்வீச்சு இல்லாத மண்ணாக்க முயற்சி செய்கிறார்கள்.ஆனால் இதற்கு மிகப்பெரிய பொருட் செலவு பிடிக்கும்.நம்மை போன்ற ஏழை நாடுகள் இது போன்ற தேவையற்ற செலவு செய்ய முடியாது.அப்படியே செய்தாலும் அது 100 சதவீதம் சுத்தமானதும் அல்ல.
7.மக்களை இந்த போராட்டத்தில் இவ்வளவு உணர்வு பூர்வமாக பங்கேற்க வைக்க
எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாண்டீர்கள்?
2001-ல் இருந்து கிட்டதட்ட ஒவ்வொரு மாதமும் கடலோர கிராமங்களுக்கு சென்று இளைஞர் அமைப்புகள்,பெண்கள் அமைப்புகள்,மீனவ சங்கங்கள்,விவசாய அமைப்புகளில் இந்த அணுமின்நிலையம் வந்தால் என்னென்ன ஆபத்துகள் வரும் என்பதைப்பற்றி பேசினோம்.அணுக்கதிர் வீச்சு என்றால் என்ன,அணுக்கரு பிளவு,சேர்ப்பு என்றால் என்ன,புற்றுநோய் இப்படி பல அடிப்படை தகவல்களை மக்களிடம் கொடுத்துள்ளோம்.இதை தொடர்பணியாக 11 ஆண்டுகள் செய்தோம்.இதன் மூலம் மக்களுக்கு அடிப்படை தகவல்கள் சென்று சேர்ந்தது.இவ்வாறு நடந்துகொண்டு இருக்கும் போதே புகுஷிமா அணு உலை விபத்து நடந்தது.இதனால் நாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று மக்கள் தெரிந்து கொண்டனர்.ஆகையால் நாங்கள் சொன்னது அனைத்தும் வெறும் சவடால் அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.மேலும் நாங்கள் வேறு ஆதாயத்துக்கோ,தேர்தலில் நின்று ஓட்டுவாங்குவதற்கோஅல்ல, என்று இதன் அடிப்படையில்தான் மக்கள் இந்த போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
மக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வது வேறெந்த ஆதாயங்களுக்கும் அல்ல.தமது சொந்த வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொள்வதர்குத்தான்.
8.இந்தப் போராட்டத்தில் மீனவ மக்கள் மட்டும் பங்கேற்கிறார்களா?விவசாயிகளும் பங்கேற்கிறார்களா?
மீனவ மக்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.இதற்கு காரணம் மீனவ மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொண்டவர்கள்.அவர்களுக்குத்தான் தெரியும்,இயற்கை கெட்டுப்போனால் தமது வாழ்வும் எதிர்காலமும் போய்விடும் என்று.அதனால்தான் அவர்கள் போராட்டத்தில் பெருமளவுன் பங்கேற்கிறார்கள்.
அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பத்தில் தவறாக நினைத்தார்கள்.பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இது மீனவர்களின் பிரச்சனை என்று எண்ணினார்கள்.குறிப்பாக,தலித்,முஸ்லிம் கிராமங்களுக்கு போனால் அவர்கள் தமது பிரச்சனையில்லை என கருதினர்.
புகுஷிமா அணு உலை விபத்திற்கு பிறகுதான் நமது,விவசாயமும் இதன் மூலம் தமது வாழ்வும் பாதிக்கப்படும் என்று உணர்ந்துகொண்டனர்.தாம் உற்பத்தி செய்யும் விலைபொருட்கள்,விலை போகாது அப்படியே போனாலும்,போதிய விலைகிடைக்காது,என்பதையும் உணர்ந்தனர்.
ஆனால் அணுசக்திதுறை 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை தருவோம்.பேச்சுப்பறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவருவோம்,இதனால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என்று பொய் சொன்னார்கள்.இது பொய் என்று மக்கள் உணர்ந்த பிறகு அணுசக்திக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவு கலந்துகொண்டார்கள்.
9.அணு உலை இயற்கை சீற்றத்தினால் மட்டும் பாதிப்பு ஏற்படுமா?மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படுமா?
மனித தவறுகளாலும் பாதிப்பு ஏற்படும்.செர்னேபில் அணு உலை விபத்து முழுக்க மனிதத் தவறுகளால் நடந்தது.
இந்திய உள்ள அணு உலைகளிலும் பல சிறு,சிறு விபத்துகள் மனிதத்தவறுகளால் நடந்துள்ளது.பெரும்பாலான விபத்துகள் மனிதத்தவறுகளால்தான் நடக்கிறது.
இந்தியாவில் அணு உலைகளில் இருந்து வெளியேறும் கன நீரை குடிநீரில் கலக்கவிட்டு,அதனால் என்ன,என்ன வியாதிகள் ஏற்படுகிறது,என்ன சோதனையும் நடந்துள்ளது.இந்தியாவில் மனிதத் தவறுகள் தெரியாமல் மட்டுமல்ல,தெரிந்தே திட்டமிட்டும் நடந்துள்ளது.
10.அணு உலையில் இயல்பாகவே விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா?
மனித தவறுகள்,இயற்கை சீற்றம் ஆகியவற்றோடு இயல்பாகவே விபத்துக்கள் நடக்கலாம் என்று இப்போது கூடங்குளத்தில் உள்ள விஞ்ஞானிகளும்,அதிகாரிகளும் சொல்கிறார்கள்.இப்போதே பல குழாய்கள் துருபிடித்துவிட்டது.ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்படும் உதிரிப்பாகங்கள் தரமற்றவைகளாக உள்ளன.இதனாலும் விபத்துக்கள் ஏற்படும்.மேலும்,இப்போதைய சோதனையின் போதே மனித கால் அளவு தடிமனான ஒயர்கள் எரிந்துவிட்டன என்று சொல்கிறார்கள்.இப்படி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.நன்றி!
-சூறாவளிக்காக இடிந்தகரையில் இருந்துமுகிலன்.

தொடர்புடைய கட்டுரைகள்:


1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!