விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Monday, 31 December 2012

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும்

மாற்றங்கள் விருப்பமல்ல, விதி! விதிகளுக்கு முரணான விருப்பங்கள் நிராகரிப்பிற்குள்ளாகும்!
தர்மபுரி நாயக்கன் கொட்டாயில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பாமகவின் வன்னிய ஆதிக்கசாதி வெறியாட்டத்தைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகளின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு ”பாமகவின் சாதிவெறியும் புரட்சிகர அமைப்புகளின் தோல்வியும்”, என்ற கட்டுரையை கீற்று இணைய தளத்தில் வெளியிட்டார். இதில், இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியாட்டத்தில் மகஇக-வைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்து கொண்டதாக அபாண்டமாக பழி சுமத்தியிருந்தார்.
தன் மீதான விடுதலைச் சிறுத்தைகளின் குற்றச்சாட்டை மறுத்து மகஇக குழும இணைய தளமான வினவு வாதாடியது. இதையொட்டி நாங்கள் “தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்கள்” மற்றும் “சாதி வெறியாட்டங்களும் புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்” என்ற கட்டுரைகளை கீற்றில் வெளியிட்டிருந்தோம்.
மகஇக மீதான அபாண்டமான பழியை, அப்பட்டமான பொய்யை எவ்வித கூச்சமும், நெருடலும் இன்றி வன்னி அரசு கூறியுள்ளதற்குக் காரணம், அந்த அமைப்பின் மீது விடுதலைச் சிறுத்தைகளுக்குள்ள தனிப்பட்ட பகையினால் அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான வெறுப்பு, ஆத்திரம் ஆகியவைகள்தான் இதற்குக் காரணம். தர்மபுரி நிகழ்வுகளுக்குப் பின்னரும் பாமகவோடு இணக்கமானப் போக்கை கடைபிடிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான போதாமையைக் கொண்டிருந்தாலும், அதை எதிர்த்து தொடர்ந்தும் போராடிவரும் கம்யூனிச அமைப்புகள் மீது வெறுப்பை கக்கியுள்ளார்கள்.
விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத அரசியலுக்கு அடித்தளமான தாழ்த்தப்பட்டவர்களை, கம்யூனிச அமைப்புகளும் தமது செயல்பாட்டுக்கான அடித்தளமாக கொண்டிருப்பதுதான் மார்க்சியத்தின் மீதான இவர்களின் பகைமைக்கான அடிப்படையாகும்.
மகஇக குழும அமைப்புகளும் பிழைப்புவாத அமைப்புகளாக மாறிய பிறகு சாதி, தீண்டாமையையும் தமது தேவைக்காக பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் என்பதை, அதற்கான வலுவான ஆதாரங்களுடன் நாங்கள் கட்டுரையாக வெளியிடும் வரை விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள வேறுஎந்த அமைப்பிற்கும் இந்த உண்மை தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை.
ஏனென்றால், சாதி, தீண்டாமையை தனது பிழைப்புவாதத்திற்கு பயன்படுத்தும் மகஇக‍வின் வழிமுறை விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது வேறு எவருமோ புரிந்து கொள்ளும், தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவைகள் பலவீனமான வடிவங்களைக் கொண்டதல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
அப்படியே இந்த உண்மை நாங்கள் அம்பலப்படுத்துவதற்கு முன்பே, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தெரிந்திருந்தாலும் கூட அதற்காக மகஇக குழும அமைப்புகளிடம் மட்டுமே இவர்கள் பகைமை பாராட்டுவதுதான் நேர்மையான, நாணயமான செயலாக இருக்க முடியும்.
தமக்குக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் மகஇக-குழும அமைப்புகள் புரட்சிகர அமைப்புகள் இல்லை என்பதை அரசியல், சித்தாந்த ரீதியாகவும் நடைமுறையிலும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தாங்கள் மக்கள் நலனை நேசிப்பவர்கள் என்பதையும், சாதி, தீண்டாமையை ஒழிப்பதற்கான அரசியலையும், வழிமுறைகளையும் கொண்டவர்கள் என்பதையும் நிறுவியிருக்க வேண்டும்.
ஆனால், இதற்கு நேர்முரணானவர்கள் தாங்கள் என்பதைத்தான் மகஇக அமைப்பின் மீது அபாண்டமாக பழி சுமத்தியதன் மூலமும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்ததின் மூலமும் நிரூபித்துள்ளனர். அதோடு தனது பிழைப்புவாத நலன்களுக்காக நாங்கள் எப்படிப்பட்ட இழிவான செயலையும் செய்யத் தயங்காதவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளனர்.
 எமது கட்டுரைகள் கீற்றில் வெளிவருவதற்கு முன்னர் போர் முரசு கொட்டிக்கொண்டிருந்த வன்னி அரசும், வினவும் கட்டுரை வெளிவந்த பின்னர் வாயை இறுக மூடிக்கொண்டனர். ஆனால் சில வாசகர்கள் எமது கட்டுரைகளின் மீது தமது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் தம்முடையதை மட்டுமல்ல, தம்மைச் சார்ந்தவர்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற வாசகர் அழுத்தமான பதிவு ஒன்றை அளித்துள்ளார்.
”ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தால் இந்த இயக்கத்தின் செயல்பாட்டை, ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்தில் அதன் தேவையை மறுக்க முடியாது. மற்ற பிழைப்புவாத கட்சிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளின் தேர்தல் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் மறுபுறம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது” என்றும்,
“ஒரு புறம் அருவறுக்கத்தக்க பிழைப்பு அரசியல் இருந்தாலும் மறுபுறம் ஒரு மாற்றத்தை விடுதலைச் சிறுத்தைகள் செய்துள்ளது. வெறும் பொருளியல் அடிப்படையிலான இந்திய சமூகத்திற்குப் பொருந்தாத மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதால் ஏற்படும் நடுநிலை பிழைகள் நீங்கள் காண்பது” என்ற தனது கருத்தின் மூலம் தமது மற்றும் சித்தாந்த ரீதியாக தன்னைச் சார்ந்தோர் அனைவரின் கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மேலாதிக்கம் செலுத்திவந்த பார்ப்பனிய சமூக அமைப்பு என்றென்றைக்கும் மாற்ற முடியாதது என்றுதான் கருதப்பட்டது. பார்ப்பனிய சமூக அமைப்பினால் காலம், காலமாக ஆதாயம் அடைந்தவர்கள் சமூக மாற்றம் தவிர்க்கவியலாத ஒன்றாகிய பின்னரும் அதை இன்றுவரை ஏற்க மறுத்தே வருகின்றனர்.
•             இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடித்த பார்ப்பனிய கல்விக்கு மாற்றாக மெக்காலே கல்வி முறையை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தபோது, பார்ப்பனக் கும்பல் அதை ஏற்க மறுத்தது. இந்த எதிர்ப்பு தனது நலன்களுக்குப் பயன்படாது என்று புரிந்துகொண்டவுடன் மெக்காலே கல்வி முழுவதையுமே தனதாக்கிக் கொள்ள முயன்றது.
•             அரசு எந்திரத்தோடு தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தம்மால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு, இப்போதும் கல்வி கற்கும் உரிமையை இல்லாமல் செய்வதற்கு முயன்று பார்த்தது.
•             இந்தியாவிலும், இலங்கையிலும் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டபோது தண்டவாளங்களைப் பெயர்த்தார்கள். அதையும் மீறி ரயில் வந்த போது கல்லால் அடித்தார்கள் ஆதிக்கசாதி வெறியர்கள்.
•             பள்ளு, பறைகள் தொட்டால் தீட்டு, நாடானைக் கண்டாலே தீட்டு என்றும் இச்சாதிப்பெண்கள் இடுப்பிற்கு மேல் துணி உடுத்தி தமது மார்பகங்களை மறைத்துக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் கோரத் தாண்டவமாடியவர்கள் அவற்றில் மாற்றம் வருவதையும் ஏற்க மறுத்தனர். பின்னர் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பதையும், ரயில், பேருந்துகளில் பயணிப்பதையும், செருப்பணிவதையும்,சைக்கிள் ஓட்டுவதையும் ஏற்க மறுத்து அடம்பிடித்தனர்.


ஆனால், இந்த விருப்பங்களில் எதிலும் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு மாறாக தோல்வியை மட்டுமே சந்தித்தனர். அன்று முதல் இன்று வரை எப்போதுமே, எங்குமே ஆதிக்கச்சாதிகள் - சமூக,பொருளாதாரம் உட்பட எந்த ஒரு துறையானாலும் – தனக்கு ஆதாயம் தரக்கூடிய எதுவும் மாறாமல் அப்படியே நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றன.
ஆதிக்க சாதிகளின் மேற்கண்ட விருப்பத்திற்கு மாறாக, இவர்களால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களோ இவைகள் மாற வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட விருப்பங்களே அதை நிறைவேற்றித் தந்துவிடுவதில்லை. ஈராயிரம் ஆண்டுகளாக ஆதிக்க சக்திகளின் விருப்பங்கள் தொடர்ந்து நிறைவேறியதற்கு எது காரணமாக இருந்ததோ, அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பங்கள், நிறைவேறாமல் இருந்ததற்கும் காரணமாக இருந்தது.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் இன்றும் அப்படியே தொடர்ந்தாலும் இவைகள் ஏறத்தாழ நூற்றுஐம்பது ஆண்டுகளாக படிப்படியாக தோல்வியையே சந்திக்கின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களோ, ஆதிக்க சாதிகள் தம்மீது செலுத்தும் ஒடுக்குமுறைகள் முற்றாக ஒழிய வேண்டும் என்று விரும்பினாலும் இவர்களின் இந்த விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் முற்றாக தோல்வியடையாமல் அவைகள் தொடர்வதற்கு எது காரணமோ, அதுவே தாழ்த்தப்பட்ட மக்களின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறாமல் இருப்பதற்கும் காரணமாகும்.
அன்று முதல் இன்று வரை எங்கேயும், எப்போதும் மனித விருப்பங்கள் எதுவாயினும் அவைகளில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், நிகழாவிட்டாலும் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மாற்றங்கள் மாறாத உண்மைகளாகிவிட்டன.
உண்மையிலேயே சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள், தமது இந்த விருப்பங்கள் நிறைவேறுவதற்கும்,செயல்வடிவம் பெறுவதற்குமான - அடித்தளத்தை உருவாக்குவதற்கான - திட்டத்தையும், வழிமுறைகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அவைகள் நிறைவேறும். இதுவல்லாது இவ்விருப்பங்கள் எவ்வளவு நியாயமானதாயினும் அவைகள் நிறைவேறுவதற்கான அடித்தளம் உருவாகும் வரை அவைகள் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்கும்.
ஆதிக்க சாதிகளின் விருப்பங்கள் விதிகளுக்கு முரணாக இருப்பதால்தான் அவைகள் படிப்படியாக சமூக வளர்ச்சிக்கு ஏற்ப தோல்வியைச் சந்திக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உற்பத்தித் துறையில் மாற்றம் நிகழாமல் தடுத்துவந்த தடைக்கல்லை ஆங்கிலேயர்கள் அகற்றி உற்பத்தியில் புதிய மாற்றத்தை திணித்தபோதே ஆதிக்க சாதிகளின் தோல்விகளும் தவிர்க்க இயலாதவைகளாகிவிட்டன. ஆனாலும் இந்த உண்மைகளை ஆதிக்க சாதிகள் ஒப்புக்கொள்ளாமல் இருப்பதற்கும், இந்த விருப்பங்கள் மீண்டும், மீண்டும் முளைவிடுவதற்கும் ஏற்ற அடித்தளம் இன்னமும் நீடிப்பதே காரணமாகும்.
தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டால் தீட்டு, அவர்கள் தமது தெருக்களில் நடந்தால் தீட்டு. இந்தத் தீட்டை போக்குவதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் காலடி தடத்தை அழிக்க அவர்களின் இடுப்பிற்கு பின்னால் பனை ஓலையை கட்டி இழுத்துவரச் செய்தும், அவர்களின் எச்சில் தரையில் படாமல் இருக்க கழுத்தில் கலயத்தை கட்டிவரவும் நிர்பந்தித்தனர். இவைகளை மீறியவர்களை அடித்து உதைத்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினர். சில தருணங்களில் கொலையும் கூட செய்து அச்சுறுத்தினர்.
அதன் பிறகு சமூக வளர்ச்சியின் விளைவாக, தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி தெருக்களில் நடமாடுவது தவிர்க்கவியலாத செயலாக மாறியபோது அவர்களை தொட்டுவிட்டால் அந்தத் தீட்டைப் போக்க மாட்டுத்தொட்டியின் 'அதி சுகாதாரமான' நீரை தலையில் தெளித்துக் கொண்டனர். பின்னர் அதுவும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்ட பின்னர் எவனும் தமது தோல்விக்காக தூக்கு கயிற்றை தெரிவு செய்து கொள்ளவில்லை!
இன்று தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் சாப்பிடுவது கூட தீட்டில்லை என்றாகிவிட்டது. இந்த மாற்றங்களின் தொடர்ச்சி, வளர்ச்சி தான் சாதிமறுப்புத் திருமணங்கள்.
சமூக நடவடிக்கைகளில் தாழ்த்தப்பட்டோரையும், பெண்களையும் வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருந்ததன் மூலமே சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை செயல்படுத்த முடிந்தது.
இனி அப்படி செய்ய முடியாது என்றாகி அவைகள் தவிர்க்கவியலாத, இயல்பான அன்றாட நிகழ்வுகளாகி விட்ட பின்னர் சாதியையோ, தீண்டாமையோ, பெண்ணடிமைத்தனத்தையோ முந்தைய வடிவில் அப்படியே பாதுகாக்கவும் முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையை தெரிவு கொள்வதையும், காதலிப்பதையும், தடுத்து நிறுத்திவிடவும் முடியாது.
மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் உட்பட எதிலும் சாதி பார்க்க முடியாது. ஆணும், பெண்ணும் தமது வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்து கொள்ள சாதி பார்க்க முடியாது, தேவை இல்லை என்று கருதுவது என்பதும் சரியானதுதான். முன்னதை சாதிவெறி பிற்போக்காளர்களால் தடுக்க முடியாததைப் போன்றே, பின்னதையும் என்னதான் அச்சுறுத்தினாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஆதிக்க சாதி வெறியர்கள் தமது பிற்போக்குத் தனத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வளவு கொடூரமான, கோரமான வழிமுறைகளைக் கையாள்கிறார்களோ, அது அவர்களின் பலத்தின், நியாயத்தின் வெளிப்பாடல்ல. அது அவர்களின் பலவீனத்தின் வெளிப்பாடு.
எனவே சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் புறம்பான இவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவுவது என்பது தவிர்க்கவியலாதவைகளாகும்.
இவர்கள் தமது பிற்போக்குத்தனத்தைப் பாதுகாக்க எந்த ஆயுதத்தை தேர்வு செய்கிறார்களோ, அதுவே அவர்களின் தோல்வி, அழிவு ஆகியவற்றுக்கான தேர்வுமாகும்.
ஏனென்றால் இவர்கள் தடுக்க நினைப்பது தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல, இதனூடாக சமூக வளர்ச்சியையும், முன்னேற்றத்தையுமே தடுக்க முனைகிறார்கள்.
எனவே யாருடைய வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முனைகிறார்களோ அவர்கள் சமூக வளர்ச்சியின், முன்னேற்றத்தின் பிரதிநிதிகள். எனவே இவர்கள் தமது எதிர் வினையாற்றல்களின் ஊடாக ஆதிக்க சாதிவெறியர்களுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள்.
சமூக வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் தவிர்க்கவியலாத இந்த சங்கிலித் தொடர் நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் பலத்தரப்பட்ட பிரிவினர் தமது பங்களிப்பை செலுத்துவது தவிர்க்கவியலாதது ஆகும்.
வன்னிய ஆதிக்க சாதிவெறி பிற்போக்குத்தனத்திற்கு எதிரான விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பும், பாத்திரமும் இத்தகையதேயாகும்.
                                                                                                                                தொடரும்....

Tuesday, 18 December 2012

ஆதிக்க சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்

'தாழ்த்தப்பட்டோர் - பல வண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தோம். அதில், "ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகள், நெசவாளிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆளும் கும்பலுக்கு எதிராக வெறுப்பும், ஆத்திரத்தையும் கொண்டுள்ளனர். ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் வெறுப்பும், ஆத்திரமும் கொள்வதற்கு எது காரணமாக உள்ளதோ அதே காரணம்தான் பாமக உட்பட அனைத்து சாதிவெறி அமைப்புகள், பிழைப்புவாதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கும், அவர்களிடமிருந்து விலகி நிற்பதற்கும் காரணமாக அமைகிறது. மேற்கண்ட இருதரப்பினருக்கும் ஏற்படும் நெருக்கடி ஒரே புள்ளியில் இருந்துதான் துவங்குகிறது. இதன் காரணமாகத்தான் பாமக ராமதாஸ் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு எதைத் தீர்வாக முன்னெடுக்கிறாரோ, அதுவே ஆளும் வர்க்கங்களின் நெருக்கடியை தீர்ப்பதற்குமான தீர்வாகவும் அமைகிறது. இதன் காரணமாக இவ்விரு பிரிவினரும் ஒன்றிணைந்து செல்வதும் தவிர்க்கவியலாத செயல்" என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.
dalith_colony_643
இக்கட்டுரையை படித்த செல்வன் என்ற வாசகர் “ ஐயோ.. படிக்க படிக்க தலை சுத்துதே.. எவனும் யோக்கியன் இல்லே – நு மக்களுக்கும் தெரியும். எந்தக் கழகமானாலும், கட்சியானாலும், தலைவரானாலும், அது புரட்சிகரமா இருந்தாலும் சரி, புரட்சி இல்லாம இருந்தாலும் சரி. அடுத்த சம்பவம் நடக்குற வரைக்கும் தர்மபுரிய வெச்சு ஓட்ட வேண்டியதுதான் ”, என்று தனது எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார்.
 சில வாசகர்கள் எமது கட்டுரையில் உள்ள செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் மகஇக குழும அமைப்புகளும் இப்படித்தானா என்று எண்ணும்போது மிகுந்த வேதனையாக உள்ளது என்றும் தொலைபேசி வாயிலாக எம்மோடு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
 மற்றொரு வாசகர், தங்களின் கட்டுரை ஒட்டுமொத்தமாக புரட்சிகர அமைப்புகளின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துவதைப் போன்று உள்ளது. எனவே கட்டுரையை வேறு வகையில் எழுதியிருக்கலாமோ என்று கருதுகிறேன் என்று கூறினார்.
 மொத்தத்தில் தமிழகத்தில் செயல்படும் ஒரே புரட்சிகர அமைப்பு தாங்கள்தான் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் மகஇக குழுமம், கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் இலக்கில் குறிப்பிடும் எதையுமே சாதித்து விடவில்லை. ஆனாலும் இந்த அமைப்பாவது இருக்கிறதே என்று ஆறுதல் பல தரப்பிலும் இருப்பதையும், அதுவும் இப்போது இல்லாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கமும் மேற்கண்ட வாசகர்களின் கருத்துகளில் வெளிப்படுவதையும் நாங்கள் உணர்கிறோம்.
 ஆறுதலை மட்டுமே தரக்கூடிய தன்மையை கொண்டிருக்கிற அமைப்பைக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் பல்வேறு அநீதிகளை எதிர்கொள்வதோ, இவைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி முறியடிப்பதோ, அதிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ சாத்தியமே இல்லை. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளின் மூலம் ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயலை மூடி மறைக்கவும், மக்களை சாந்தப்படுத்தவுமே முடியும்.
 மகஇக குழும அமைப்புகளின் இலக்கும் மக்களைத் திரட்டுவதோ, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் இலக்கு முன்னணியாளர்களை வென்றெடுப்பது மட்டுமே!
 இப்படி வென்றெடுக்கும் நபர்களைக் கொண்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றை விற்பனை செய்வது, பேருந்துகளில் மக்களுக்குப் புரியாத, விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களைப் பேச வைப்பது (இப்படிப் பேசுபவர்களே தாங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சநாளில் ஓடி விடுவது என்பது வேறு கதை) ஆகியவைதான். இவைகளை செய்வதும் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதற்காகத்தான். இப்படி வென்றெடுக்கும் முன்னணியாளர்களை சமூக யதார்த்தத்திற்குப் புறம்பானவர்களாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும், தாங்கள் உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் மாற்றுவதுதான். அதாவது அவர்களை சிந்தனை ரீதியாக காயடிப்பதுதான் இவர்களின் நாற்பதாண்டு கால புரட்சிகர சாதனை!
 மேலே கண்ட சாராம்சத்தை உடைய இந்த அமைப்பின் தன்மையைக் கொண்டுதான், இது புரட்சிகர அமைப்பு அல்ல என்பதையும் சமரச, சீர்திருத்தவாத அமைப்பாக சீரழிந்து போன இவர்கள், பிழைப்புவாத சகதியில் மூழ்குவதும் தவிர்க்க வியலாத ஒன்றாகி விட்டது. எனவே தான் தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி வெறியை எதிர்கொள்ள இப்போதைய நிலையில் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் ஏதும் இல்லை என்பதையே வரையறுத்துக் கூறியுள்ளோம்.
 இப்படி நாங்கள் வரையறுத்துள்ளதாலேயே தமிழகத்தில் புரட்சிகர சக்திகள் உருவாவதற்கான அடிப்படை இல்லை என்பதோ, இனியும் உருவாகாது என்பதோ இதன் பொருளல்ல. அதே வேளையில் புரட்சிகர அமைப்புகள் இனி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை தர்மபுரி நிகழ்வு நம் கண்ணத்தில் அறைந்தாற் போன்று நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
 நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஒன்றுபட்ட நக்சல்பரி இயக்கம் பின்னர், மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்டுகள் செயல்பட்டவரைதான் தாழ்த்தபட்டோருக்கு எதிரான வன்னிய சாதிவெறி வெளிப்படமால் இருந்துள்ளது. இதற்கு மேலே கண்ட நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களில் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் இருந்ததும், அதிலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்பதுதான் ஆதிக்க சாதி வெறி வாலை சுருட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது. இதை, இந்த சம்பவத்தைப் பற்றி நேரடி கள ஆய்வு செய்துள்ள அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
 நக்சல்பரி புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை மட்டுமே பெருமளவு சார்ந்துள்ளது. தம்மை மேல்சாதி என்றுக் கருதிக் கொள்வோரில் முன்னணியாளர்களை மட்டுமே இவர்களால் வென்றெடுக்க முடிந்துள்ளது. இது நமக்கு புலப்படுத்தும் செய்தி என்னவென்றால் மேல்சாதிகள் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் மக்களைத் திரட்டுவதில் புரட்சிகர அமைப்புகள் தோல்வியையேச் சந்தித்துள்ளன என்பதைத்தான்.
 இந்தத் தோல்வி சமவெளிப்பகுதி மக்களை வென்றெடுப்பதில் நக்சல்பரி இயக்கங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக வேறொரு வகையில் புரிந்துகொள்ளப்படுகிறது. இதை இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக, புரட்சிகர சக்திகள் அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.
 இந்த உண்மையை புரட்சிகர அமைப்புகள் ஒப்புக்கொண்டாலும், இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியோ, இதை எப்படி மாற்றுவது என்பதைப் பற்றியோ ஏதும் கூறுவதுமில்லை, விவாதிப்பதுமில்லை. இதற்கு இந்திய சமூக வரலாறு பற்றிய புரிதலோ, கண்ணோட்டமோ இவர்களுக்கு இதுவரை இல்லாததுதான் காரணமாகும்.
 உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் உற்பத்தித் துறையில் ஏற்படும் வளர்ச்சியும், முன்னேற்றமும் இந்திய மக்களின் சிந்தனையிலும் அதே அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இங்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சியும், முன்னேற்றமும் தவிர்க்கவியலாத சமூக வளர்ச்சியின் தேவையில் இருந்து ஏற்பட்டதா என்பதை இவர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. தவிர்க்க வியலாத சமூக வளர்ச்சி தேவையிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவைகள் மக்கள் செயல்பாடுகளின் விளைவாக அவர்களின் சிந்தனா முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை அனைத்து மாற்றங்களும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து சமூகத்தின் மீது திணிப்பவைகளே ஆகும். ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப உற்பத்தியில் திணிக்கும் மாற்றங்களில் மக்களின் பங்களிப்பு, செயல்பாடு ஏதுமில்லாததால், உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் அதே அளவிற்கு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதில்லை.
 மக்களின் சிந்தனா முறையில் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தை மக்கள் தமது செயல்பாடுகளின் ஊடாக – போராட்டங்களின் ஊடாக – கொண்டு வந்திருக்க வேண்டும்.
 மக்கள் தாங்கள் புதிதாக உருவாக்க விரும்பும் மாற்றங்களை, இதற்கு முந்தைய சமூக அடித்தளத்தின் மூலம் ஆதாயம் அடையக் கூடியவர்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே உருவாக்க முடியும்.
dharmapuri_attack_426
 இந்தப் போராட்டம் உற்பத்தியில் மட்டுமல்ல, இதைப் பாதுகாக்க ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள பண்பாடு, நாகரீகம், கலை, கலாச்சாரம் உட்பட அனைத்தையும் எதிர்த்து முறியடிப்பது என்பதோடு இவைகளுக்கு மாற்றாக தமது நலன்களுக்கு ஏற்ப புதியனவற்றையும் உருவாக்கிக் கொள்வதாகும்.
 இப்படியான ஒரு அனுபவத்தை இந்தியச் சமூகம் இதுவரை தனது வரலாற்றில் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. எனவே தான் உற்பத்தியில் எவ்வளவு பெரிய வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் கருவிகளில் ஏற்படும் மாற்றமாக மட்டுமே உள்ளது. இவைகள் திணிப்பின் ஊடாக உருவாக்கப்படுவதால், அதை திணிப்பவர்களின் நலனை உள்ளடக்கிய அளவிற்கு மட்டுமே முந்தைய பண்பாடு, நாகரீகம் உட்பட அனைத்திலும் மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவைகள் தவிர்க்கவியலாத வடிவ மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள் இன்று அனைத்து சாதியினரோடும், பேருந்து, ரயில்களில் சமமாக பயணம் செய்வது, பள்ளிக் கல்லூரிகளில் கல்வி கற்பது, அரசுத்துறைகளில் வேலைபார்ப்பது, செருப்பணிவது உட்பட அனைத்து உரிமைகளும் ஆதிக்க சாதிகள் தமது மனமாற்றத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனமுவந்து அளித்தவைகள் அல்ல.
 தவிர்க்கவியலாத சமூகத் தேவையும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான, வீரம் செறிந்த போராட்டங்களின் ஊடாகவும் வென்றெடுத்தவைகளே ஆகும்.
 சாதி, தீண்டாமையை சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் முன்பு திணித்து, தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கியவர்கள், இனி அது சாத்தியமில்லை என்பதால், அவைகளை தன்னளவில் – எல்லையை- சுருக்கிக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றனர்.
 தமது நலன்களுக்கு உகந்த வகையில் தாழ்த்தப்பட்டோரை சமூக செயல்பாடுகளில் ஈடுபட சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்கும் ஆளும் வர்க்கம், சாதி, தீண்டாமையை ஆதிக்கசாதிகள் தன்னளவில் கடைப்பிடிப்பதை பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கிறது. இதன் வாயிலாக தமக்கெதிராக மக்கள் ஒன்று திரள்வதைத் தடுத்து, தனது நலனை முழு அளவில் பாதுகாத்துக் கொள்கிறது.
 ஆனால் இந்தியாவில் உள்ள நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களோ, வாழ்நிலையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சிய இயங்கியலை யந்திர கதியாக புரிந்து கொண்டு, அதை சமூகத்தின் மீது திணிப்பதையே தமது செயல்பாடாகக் கொண்டுள்ளனர்.
 இந்திய சமூக வளர்ச்சி பற்றிய செழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே மார்க்சிய இயங்கியலை இங்கு சமூக மாற்றத்திற்கான கோட்பாடாக பயன்படுத்த முடியும். இவர்களால் மட்டுமே இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் – சமவெளிப்பகுதியில் உள்ள மக்களையும் - திரட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும்.
 சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் திரட்டுவதற்கான புரிதலையோ, வழிமுறையையோ கொண்டிராத புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் செயல்பாடுகளை வைத்துதான், தாங்கள் செயல்படும் காலம் வரை சாதிவெறியர்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக மட்டுமே முடக்கி வைக்க முடியும் என்பதைத்தான் தர்மபுரி நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.
 ஆதிக்க சாதிகளில் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதால் மட்டுமே ஆதிக்க சாதி வெறியை முறியடித்துவிட முடியாது. நாயக்கன் கொட்டாயில் தமிழ்வாணன், சித்தாநந்தன், பச்சியப்ன் போன்ற முன்னணியாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதும் அவர்கள் தமது மௌனம், ஒதுங்கிக்கொள்ளல் மூலம் வன்னிய சாதிவெறிக்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்கள் என்பதும்தான் நடந்துள்ளது.
 கீற்று இணையதளத்தில் 'வன்னிய சாதி வெறி சொல்வது என்ன?' என்ற கட்டுரையில் “ஆதிக்கசாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடமும் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், கட்டவிழ்த்து விடவேண்டும்”, என்று தோழர் குணா குறிப்பிட்டுள்ளார்.
 இப்படி ஆதிக்க சாதிகளிடமும் அமைப்பு பலம்பெற என்ன திட்டம் உள்ளது என்பதைக் கூறவில்லையே என்று தோழர் குணாவிடம் வாசகர் சுதிர் மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கான பதில் தோழர் குணாவிடம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள எந்த ஒரு புரட்சிகர அமைப்பிடமும் இல்லை என்பதுதான் உண்மை.
 இந்தியாவில் உள்ள அனைத்து புரட்சிகரக் குழுக்களும் ஆதிக்க சாதிகளில் உள்ள ஒன்றிரண்டு முன்னணியாளர்களை தாங்கள் வென்றெடுப்பதையே முன்னுதாரணமாகக் கருதி இதே போன்று ஆதிக்க சாதிகளில் உள்ள பெரும்பான்மை மக்களையும், உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் திரட்டிவிட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை தொடரும் வரை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நமது நாட்டில், சமூக மாற்றம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.
 புரட்சிகர இயக்கங்கள் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களையே பெருமளவு சார்ந்து தமது செயல்களைத் தொடரமுடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகள் தமக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் புரட்சியாளர்கள் தோள்கொடுக்கிறார்கள் என்பதால்தான் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.
dalith_colony_646
 தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைவதற்கு எது காரணமாக அமைகிறதோ, அதே காரணம்தான் ஆதிக்க சாதிகளை புரட்சிகர அமைப்புகளிடமிருந்து விலகி நிற்கவும் வைக்கிறது.
 கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவெங்கும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஏறத்தாழ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தமது உயிரையே பறிக்கும் அவலத்திற்கு எதிராக இம்மக்களை அமைப்பாக்கவோ, போராட வைக்கவோ புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் இயலவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் இவர்களை சாதிவெறியர்களால் அமைப்பாக திரட்ட முடிகிறது. இந்த அளவிற்கு இம்மக்களின் சிந்தனாமுறை - அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிந்தானா முறை - மிகவும் பிற்போக்கானதாக உள்ளதையும், இப்படிப்பட்ட நிலையிலும் இவர்களை தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராக அமைப்பாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையே இது நமக்கு உணர்த்துகிறது.
தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராகப் போராடும்போதுதான், தமது நலன்களுக்கு எதிரானவர்களையும், ஆதரவானவர்களையும் மக்களால் உணர்ந்து கொள்ளவும், இதன்மூலம் இவர்களின் சிந்தனைத்திறனை ஜனநாயக தன்மை உடையதாக மேம்படுத்த‌வும் முடியும்.
 இப்படி ஆதிக்க சாதிகளின் ஜனநாயக உணர்வு மேம்படுமேயானால் தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுடன் போராட்டக் களத்தில் இணைவதற்கு தடைக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.
 தம்மை மேல்சாதி என்று கருதும் மக்களை அமைப்பாக்குவதற்கும், இதன் ஊடாக இம்மக்களின் சிந்தனையை ஜனநாயகப் பூர்வமாக்குவதற்குமான உள்ளடக்கத்தை உடைய திட்டத்தையும், வழி முறைகளையும் உருவாக்க வேண்டும்.
 இக்கட்டுரையில் நாங்கள் கூறியுள்ள கருத்துகளும், 'தாழ்த்தப்பட்டோர் பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ள கருத்துகளும் யதார்த்தமான உண்மையான விவரங்களில் இருந்து கிடைக்கும் விடைகளேயாகும். இப்படி நாங்கள் உண்மைகளை பதிவு செய்வது பலருக்கும் சலிப்பையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குவது போலத் தோன்றினாலும் இப்படிபட்டவர்கள் இந்த சமூக யதார்த்தத்தை மூடிமறைப்பதால், இதுவரை ஏற்பட்டுள்ள, இனி எதிர்காலத்தில் ஏற்படப்போகிற எதிர்றை விளைவுகள் நமக்கு பெரும் இன்னல்களையும், அழிவையுமே தரப் போகிறது என்பதை உணர்வார்களேயானால், தமது அவநம்பிக்கை சிந்தனா முறையை மாற்றிக் கொள்வார்கள். இவைகளை முறியடிப்பதற்கான வழிமுறைகளைக் காண முற்படுவார்கள்.
 இதற்கு மாறாக நிலவுகிற சமூக யதார்த்தத்தை மூடி மறைக்க முயலும் செயல்பாடுகள் அனைத்தும் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கவும், பிழைப்புவாதிகளின் அடித்தளத்தை செழுமைப்படுத்துவதற்கும் பயன்படும்.
 நாம் விவாதிக்கும் சமூக சிக்கல்கள் எதுவானாலும், அவைகளை உண்மையிலேயே தீர்த்து சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைய விரும்புகிற புரட்சிகர அமைப்புகள், தனிநபர்கள், குழுக்கள் எவராயினும் அதற்குரிய தீர்வுகளை, உரிய வழிமுறைகளைக் கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திரட்டி, சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக உள்ள தடைக்கற்களை உடைக்க வேண்டியதே இன்றைய உடனடிக் கடமையாக ஆக்கிக்கொள்ள வேண்டும்!


தொடர்புடைய கட்டுரைகள்:

9.தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்!

Tuesday, 11 December 2012

தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்!

நவம்பர் 7 - இது உலகில் முதன் முதலாய் ரசியாவில் கம்யூனிச புரட்சி வெற்றி பெற்ற நாள். இந்த உலக புரட்சி தினத்தில் தம்புரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை வன்னிய சாதி வெறியர்கள் தீ வைத்து கொளுத்தி கொண்டாடி இருக்கிறார்கள். நவ.7 என்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நத்தம் காலனி மக்கள்  திருவிழாவாக கொண்டாடிய தினம். இந்த தினத்தை இந்த ஆண்டு வன்னிய சாதி வெறியர்கள் தமது திருவிழாவாக கொண்டாடியுள்ளனர்.
     
இந்த சம்பவத்தை ஒட்டி இன்று வரை தமிழகம் முழுவதும் பலதரப்பிலும்  வாதப்பிரதி வாதங்கள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பாமக மற்றும் வன்னிய சங்கத்தின் செயல் திட்டம் வெற்றி பெற்றுள்ளதோடு ஆளும் வர்க்கங்களின் செயல் திட்டமும் இந்த சாதி வெறிக்கும்பல் மூலம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

        வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பிரச்சனையை கையில் எடுத்த பாமக ராமதாஸ், இதன் மூலம் தமது சாதியின் செல்வாக்குள்ள ஒரேத்தலைவராகவும், அமைப்பாகவும் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் செல்வாக்கு செலுத்தி வந்தார்.

ramadoss_thirumavalavan_640 

vinavu_300

     வன்னியர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறியதும் தனது சாதிமக்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தனது தலைமையில் ஆட்சியை  கைப்பற்றுவது என்பதை முன்னிறுத்தினார்.

     வன்னியர்கள் தமது பிறவி எதிரியாக கருதும் தாழ்த்தப்பட்டவர்களோடு ராமதாஸ் அரசியல் ரீதியாக கூட்டுவைத்து ஆட்சியை பிடிப்பது என்ற தந்திரத்தை கையாண்டார். இதற்காக திருமாவளவன் கட்சியோடு தமிழ்தேசியம் என்றப்பெயரில் ராமதாஸ் நாடகமாடினார். இதனால் எந்தப்பயனும் ஏற்படவில்லை. இந்த நாடகத்தை ராமதாசும், திருமாவளவனும் நடத்தினாலும் இதை இரு சாதி மக்களும் நம்பவில்லை, ஏற்கவில்லை.  இதன் காரணமாக ராமதாசின்  செல்வாக்கு வன்னிய சாதி மக்களிடம் வெகுவாக சரிந்தது. இந்தக்  கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாமல்  மண்ணைக் கவ்வியது. இங்கு மட்டுமல்ல வட மாவட்டங்களில் எங்குமே தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற நிலை உருவானது.

     மேற்கண்ட நிலையோடு பண்ருட்டி வேல்முருகன் கட்சியிலிருந்து பிரிந்து கடலூர் மாவட்டத்தில் பெருமளவிலான வன்னிய சாதியினரை தனது ஆதரவாளராக மாற்றிவிட்டதும் ராமதாசுக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான்  தான் ஏற்கனவே கடைபிடித்து வந்த  தமிழ் தேசியம்,  தாழ்த்தப்பட்டவர்களோடு கூட்டணி என்ற தந்திரத்தை மாற்றிக் கொண்டு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதிகளின் கூட்டணி என்ற புதிய செயல் தந்திரத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளார்.

     அனைத்து ஆதிக்க சாதிகளின் வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகியுள்ள வன்கொடுமை தடுப்புச் 
சட்டத்தை எதிர்ப்பது என்ற பெயரில் ஆதிக்க சாதிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

     இப்படி  ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதிகளின் கூட்டணி தமிழகத்தில் வன்கொடுமைகள் நிகழ்வுகள் நடப்பதற்கு காரணமே தமது சாதிப்பெண்களை தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்  காதலித்து திருமணம் செய்து கொள்வதால்தான்  என்று புதிய விளக்கமளித்துள்ளனர். தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளை கொளுத்தியது, ஆதிக்க சாதிகளின் கூட்டணியை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியது ஆகியவற்றின் மூலம் தமது செயல் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைவைரையும் அன்றாடம் பேசவைக்கும் ஒன்றாக மாற்றியுள்ளார். இதன் மூலம் தமது சாதியினர் அனைவரின் கவனத்தையும் தன்னை நோக்கி திருப்பி தான் நினைத்ததை சாதித்துள்ளார்.

     அதோடு மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயம், நெசவு, ஆகியவற்றின் அழிவு, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றால் மக்களிடையே உருவாகியுள்ள வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றால் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

     இவ்விரு நெருக்கடிகளையும் திசைதிருப்பும் வழிமுறையை ராமதாஸ் கையாள்வதால் இது ஆளும் கும்பலின் ஆசியை மட்டுமல்ல ஆதரவையும் பெற்றுள்ளது. எனவே தற்போது ராமராஸ் கையெடுத்துள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் விரிவாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
     எவரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மேற்கண்ட நிகழ்வுகள் தொடரப்போவது தவிர்க்க வியலாத ஒன்றாக ஆகிவிட்ட பின்னர்  இதனால் பாதிப்படையப்போகும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவிர்க்க வியலாமல் தம்மை தற்காத்துக்கொள்ள களத்தில் நிற்கப் போகிறார்கள். இதுதான் ஆதிக்க சாதிகளுக்கும் அத்தியாவசியத் தேவையாகும்.

     இது ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக தன்னை அறிவித்துக்கொள்ளும் விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகளுக்கும் தேவையாக உள்ளது.

     வன்னிய சாதி வெறிதான் பாமக அரசியலுக்கான அடித்தளம். இந்த சாதி வெறியை சார்ந்த செயல்பாடுகள் தான் தாழ்த்தப்பட்ட அமைப்புகளின் அரசியல் அடித்தளமாகும்.

     கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமக தனது தலைமையில் வன்னிய சாதி வெறியை வெளிப்படையாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்காதது, விடுதலை சிறுத்தைகளின் அரசியல் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துவிட்டது. எனவே இப்போதைய நிலை இவர்களுக்கும் ஆதாயம் தரக்கூடியதாகும். எப்போதுமே எந்த ஒரு தாழ்த்தப்பட்ட அமைப்பும் சாதி வெறிக்கு எதிரான, சாதி ஒழிப்புக்கான சுயமான, ஆக்கபூர்வ திட்டம் எதையும் கொண்டிருந்ததில்லை. இந்த அவலநிலை காரணமாக இந்த அமைப்புகளை ஆதிக்க சாதி வெறி அமைப்புகளின் நடவடிக்கைகள் மட்டுமே இயக்குகிறது.

     இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் அமைப்புதான். இந்த அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தையும் தீர்மானிப்பது பாமக தான்.

     80களில் பாமக இடஒதுக்கீடு என்ற பெயரில் சேரிகளை கொளுத்தி, தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி கொன்று, காயப்டுத்திய போது விடுதலை சிறுத்தைகள் அதற்கெதிராக செயலாற்றினர். பாமகவை எதிர்த்ததுடன், சில இடங்களில் திருப்பியும் தாக்கினர்.

     பின்னர் பாமக தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டு தமிழனவாதத்தின் அடிப்படையிலான தந்திரத்தை கையாண்டபோது அதையே தமது திட்டமாக திருமா பின்பற்றினார்.

     பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் மேல்மட்ட தலைவர்கள் மத்தியில் மட்டுமே போலியான ஒப்புறவு நாடகம் நடைபெறுவதையும், இது இரு சாதி மக்களிடையே எவ்வித  ஐக்கியத்தையும் உருவாக்கவில்லை, உருவாக்காது என்று ஜனநாயக வாதிகள் அனைவரும் சுட்டிக்காட்டிய போதும் திருமா இதை நிராகரித்து தொடர்ந்து ராமதாசுக்கு வால்பிடித்தார்.

     இப்போது பாமக ராமதாஸ் ஆதிக்கசாதி கூட்டணி தந்திரத்தை உருவாக்கி திருமாவை இப்போதும் தனக்கு வால்பிடிக்க வைத்துள்ளார்.இந்நிலையில்  பாமகவின் ஆதிக்கசாதி வெறியை எதிர்கொள்ள உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கவோ அவர்களுடன் கரம் கோர்க்கவோ, உதவவோ ஜனநாயக, புரட்சிகர சத்திகள் தமிழ்நாட்டில் உள்ளனவா என்பதை இனி பார்ப்போம்.

     ஆதிக்க சாதி வெறியை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவர்களோடு களத்தில் நிற்கவும் அமைப்பாக்கப்பட்ட ஜனநாயக சக்திகள் தமிழகத்தில் ஏறத்தாழ ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அமைப்பாக்கப்படாத தனிநபர்கள் தான் ஜனநாயக சத்திகளாக உள்ளனர். இவர்கள் அமைப்பாக்கப்படாததன் விளைவாக இவர்களின் ஆதரவு என்பது நடைமுறையற்றதாகவே உள்ளது. இவர்களால் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் ஆகியவற்றில் கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றின் மூலம் கருத்துரீதியாக மட்டுமே ஆதரவு வழங்க முடியும். எனவே இவைகளால் குறிப்பிடும்படியான பயன்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை. அடுத்து எஞ்சியிருப்பது புரட்சிகர அமைப்புகள் தான்.

     தமிழகத்தை பொருத்தவரை நக்சல்பரி புரட்சிகர அமைப்பு என்று தன்னை மகஇக குழும அமைப்புகள் கூறிக் கொள்கின்றன.தமிழகத்தில் இவைகள்தான் குறிப்பிட்ட அளவிற்கு அமைப்பாக செயல்படுகின்றன. குறிப்பிடும்படியான வேறு புரட்சிகர அமைப்புகளின், குழுக்களின் செயல்பாடுகள் ஏதுமில்லை.

     இப்படிப்பட்ட சூழலில் தான் தர்மபுரி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்னிய சாதி வெறி தாக்குதலுக்கு எதிராக பாமகவின் சாதி வெறியும், புரட்சிகர குழுக்களின் பிழைப்பு வாதமும் என்ற கட்டுரையை விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு கீற்று, விடுதலை ஆகிய இணைய தளங்களில் வெளியிட்டுள்ளார்.

     அதில் பாமக வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்து கொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்”, என்று மகஇக மீதும் ஒட்டுமொத்த நக்சல்பரி இயக்கங்கள் மீதும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

     இக்குற்றச்சாட்டை மகஇக வின் இணைய தளமான வினவு மறுத்துள்ளதோடு அதற்கான ஆதாரங்கள் தருமாறு சவால்விட்டுள்ளது.

     இந்த சவாலுக்கு பதிலளித்துள்ள வன்னி அரசு இது குறித்து நத்தம் சேரியை சேர்ந்த பொடா பழனிச்சாமி என்கிற தோழர் மற்றத் தோழர்களுடன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் புரட்சிகர இயக்கமான மஜஇக மாநிலச் செயலாளர் தமிழ்வாணன் அவர்களை சந்தித்து முறையிடுகிறார்கள். அவரோ தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரிகையும் செய்துவிட்டு விவசாய பிரச்சனை குறித்து அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் போய் தோழர் சித்தானந்தம் அவர்களை பாருங்கள், என்று நழுவிக் கொள்கிறார்.மஜஇக விலிருந்து (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) பிரிந்து மஜஇஅ (மக்கள் ஜனநாயக இளைஞர் அமைப்பு) என்கிற புதிய புரட்சிகர அமைப்பை நடத்தி வருகிறார் தோழர் சித்தானந்தம், இதே போல் மக்கள் யுத்தக் கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பச்சியப்பன் அவர்களிடமும் முறையிடுகின்றனர். அவரும்  சாக்குப்போக்கு சொல்லி கழன்று கொள்கிறார். நத்தம் சேரி தாக்குதலுக்கு தமைலமை தாங்கிய பாமகவை சேர்ந்த வி.சி மதியழகனின் உறவினர்கள்தான் இந்த சித்தானந்தமும், பச்சியப்பனும். இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர்  அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வன்னியர் மக.இக.வைச் சேர்ந்தவர்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

     இதை மறுத்துள்ள வினவு, வன்னி அரசு குறிப்பிடும் அண்ணாநகர் என்பது முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி அங்கு வன்னியர்கள் யாரும் இல்லை. கிருஷ்ணன் என்பவரும் இல்லை. வன்னி அரசு பொய்மேல் பொய் சொல்வதாக கூறியுள்ளது. முதுபெரும் நக்சல்பரி இயக்க போராளியும், தற்போது விவிமுவில் செயல்படுபவருமான தோழர் ஆம்பள்ளி முனிராஜ் மூலம் வினவு வன்னி அரசுக்கு சவால் விட்டுள்ளது.

     மேலே கண்டவாறு வன்னி அரசுக்கும், வினவுக்கும் இடையே நடைபெற்றுள்ள காரசார விவாதங்களில் இருந்தும், நாங்கள் விசாரித்த வகையிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான  நாயக்கன் கொட்டாய் வன்னிய சாதி வெறி தாக்குதலில் மகஇக அமைப்பிற்கும் அதன் குழும அமைப்பான விவமுவிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

     ஏனென்றால் தர்மபுரி மாவட்டத்தில் மகஇக அமைப்பே இல்லை.இந்த மாவட்டத்தில் செயல்படும் அமைப்பான விவிமு தோழர்களில் 95% பிறப்பால் தாழ்த்தப்பட்ட தோழர்களே ஆவர். அதோடு இத்தோழர்கள் உணர்வுபூர்வமாகவே சாதி தீண்டாமைக்கு எதிராக போராடும்  களப்போராளிகள்.

     எனவே வன்னி அரசு மகஇக அமைப்பு மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தின்னியத்தில் தாழ்த்தப்பட்டவரை மலம் தின்ன வைத்த ஆதிக்க சாதி வெறியர்களிடமும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை என்ற கிராமத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை உயிரோடு எரித்துக் கொன்ற வன்னிய சாதி வெறியர்களிடமும் பேரம் பேசி தனது சொந்த சாதியின் நலனையே காட்டிக் கொடுத்த அப்பட்டமான பிழைப்பு வாதிகளான விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் வன்னி அரசுகள் மகஇக மீது குற்றம் சாட்ட எந்த அருகதையும் இல்லாதவர்கள். இந்த லட்சணத்தில் அந்த அமைப்பின் மீது ஆதாரம் அற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை கூறுவது இவர்களுக்கு புதிதாக இழப்பு எதையுமே ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் இப்படியான பொய்க்குற்றச்சாட்டுகள் மகஇகவின் பிழைப்புவாதத்தை மூடி மறைக்கவும், அந்த அமைப்பின் மீது அனுதாபத்தை உருவாக்கவுமே பயன்படும்.

 அதே நேரத்தில் மகஇக  குழும அமைப்புகள் தமது பிழைப்புவாதத்திற்கு  மார்க்சிய சித்தாந்தம், ஆதிக்க சாதிவெறி ஆகியவற்றை பயன்படுத்துவதை வன்னி அரசுகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவைகள் பலவீனமான வடிவத்தை கொண்டதல்ல. ஏனென்றால் இதை அந்த அமைப்புகளில் பல பத்தாண்டுகளாக செயல்படும் அதன் உறுப்பினர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிக உயரிய நயவஞ்சக வடிவத்தை கொண்டதாகும்.

     இவைகளை உரிய ஆதாரங்களுடன் நாங்கள் சூறாவளி இணையத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம். மகஇக குழும தலைமையின் சீர்திருத்தவாதத்தை சமச்சீர் கல்வி விவகாரம், ராஜீவ் கொலைவழக்கு மூவர் தூக்கு விவகாரங்த்திலும், மனித உரிமை பாதுகாப்பு மைய  மாநில ஒருங்கிணைப்பாளர் சொத்துக்குவிப்பை நியாயப்படுத்திய விவகாரத்திலும், அதன் ஆதிக்க சாதி கண்ணோட்டத்தை, செயல் பாட்டை தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடும் போராட்டத்தை வன்னிய சாதிய போராட்டமாக நடத்தியது, பள்ளி மாணவன் பாரத் படுகொலையை ஒரு சாதிக்குள் நடந்ததாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டது. சாதிக்கு ஏற்பத்தான் புத்தி இருக்கும் என்பதால் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றுக்கூறி தன்னை விட மேல்சாதி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபரை கண்டிக்காமல் அவருக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொருப்பு கொடுத்துள்ளது, சாதி மறுப்பு தம்பதிகளுக்கு ஆலோசனை மட்டும் கொடுங்கள் மேற்கொண்டு நேரடியாக உதவ வேண்டாம் என்று உத்தரவிட்டது ஆகியவற்றின்  மூலம் வெளிப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியுள்ளோம்.

     எமது மேற்கண்ட அம்பலப்படுத்துதல்களுக்கு மகஇக குழுமம்  இதுவரை வாயே திறக்கவில்லை. அதற்கு மாறாக சென்னையில் உள்ள தனது கைத்தடி ஒன்றின் மூலம் கைப்பேசி வாயிலாக எமக்கு கொலை மிரட்டல் மட்டுமே விடுக்க முடிந்தது.

          பாமக அப்பட்டமான வன்னிய சாதி வெறியை கொண்டு பிழைப்பு நடத்தும் அமைப்பு என்பதும், விடுதலை சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் திணிக்கப்படும் வன்கொடுமையை பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் அமைப்பு என்பதும்  அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மையாகும்.

     ஆனால் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமோ  அதிஉயர் நயவஞ்சக வடிவத்தை கொண்டதாகும்.தனது பிழைப்புவாதத்திற்கு ஆதிக்க சாதி வெறியையும் பயன்படுத்துபவர்கள்தான் இவர்கள்.இவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுவர்களில் மட்டுமே உதவ முடியும்.தமிழகத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் நேரடியாக உதவ முடியாது.நடைமுறைப்படுத்த முடியாத ஆலோசனைகளை மட்டுமே சுவர்களின் மூலம் இவர்களால் தானமாக வழங்க முடியும். எனவே வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலை எதிர்கொள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவவோ, அவர்களுடன் கரம் கோர்க்கவோ தமிழகத்தில் புரட்சிகர சக்திகளும் ஏதுமில்லை!

     ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் தமது சொந்த பலத்தின் மூலம் மட்டுமே இப்போதைக்கு வன்னிய சாதிவெறித் தாக்குதலை எதிர்கொள்ள முடியும். இதன் காரணமாக பல்வேறு இழப்புகளை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திப்பது என்பதும் தவிர்க்க வியலாத ஒன்றே ஆகும்!


தொடர்புடைய கட்டுரைகள்:
1. காயடிக்கும் கட்சி      
2.
சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி
3 .சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1
4.
சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2
5 வினவின் ரசிகர்கள் யார்? தோழர் ரெட்மீரா அவர்களுக்கான எமது பதில்.
6. சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3
7. முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4
8. சமச்சீர்கல்வி: புஜ+புக+வினவு=கலவை சித்தாந்தம்
9. இன்னமும் இங்கதான் புடுங்கினுக்கிறாரா?
10. தவளை தன் வாயால் கெடும் ...!
11. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..
 
12.
ஆதிக்கச் சாதி கண்ணோட்டம்: பிடிபட்டது வினவு-ம.க.இ.க கும்பல்
- விவசாயிகள் விடுதலைப் பேரவை, தமிழ்நாடு. தொடர்புக்கு: 9842529188, moodakizhavan@gmail.com
     

Sunday, 2 December 2012

மோடி - ராஜபக்சே – ராமதாஸ்!

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களை குறிவைத்து, அவர்களிடம் நயவஞ்சகமாக பேசி, அவர்களை காதல் வலையில் விழவைத்து, பின்னர் திருமணம் என்று ஒன்றை செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து பெண்வீட்டாரிடமிருந்து பொருள்களை வாங்கிவா, பணம் வாங்கி வா என்று கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்”.  

    மேலே கண்ட கூற்றுக்கு சொந்தக்காரர் பாமக டாக்டர் ராமதாஸ். கடந்த 26.11.12 அன்று நெய்வேலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தான் இப்படிக் கூறியுள்ளார்.

   இவர் மேற்கண்ட வாறு பேசிய மறுநாளே  கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள கிராமமான  பாச்சார பாளையத்தில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளை பாமகவினர் தீ வைத்து எரித்துள்ளனர்.



     டாக்டர் ராமதாஸ் இதே பேட்டியில்  தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தில் தமது கட்சிக்கு கடுகளவு கூட சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றுள்ள சம்பவத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லை என்று கூறுவாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

     தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்ற சமுதாயத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து நயவஞ்சகமாக பேசி, காதல் வலையில் விழவைப்பதாகவும், இந்தச் செயலை சில தலித் அமைப்புகள் ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.  இதன் மூலம் தனது சாதியான வன்னிய சாதியின் நலனை மட்டுமல்ல, அனைத்து ஆதிக்க சாதி நலனிற்காகவும் தான் குரல் கொடுப்பதாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

     தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது இப்படி பொத்தாம் பொதுவாக ராமதாஸ் குற்றச்சாட்டை கூறியிருக்கிறாரே தவிர, அதற்கான ஆதாரம் எதையும் அவர் வெளியிடவில்லை.

     தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் எவ்வளவு காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் சாதி மறுப்பு திருமணங்கள் எவ்வளவு, இவற்றில் தோல்வியில் முடியும் திருமணங்கள் எவ்வளவு, இதற்கு என்னக் காரணம், தலித் இளைஞர்கள் சம்பந்தப்படாத காதல் திருமணங்கள் தோல்வி அடைகிறதா, இல்லையா, அப்படி தோல்வி அடைந்தால் அதற்கு என்னக் காரணம், தோல்வி அடையாவிட்டால் என்னக் காரணம், சாதி மறுப்பு அல்லாத ஒரே சாதியில் நடைபெறும் காதல் திருமணங்கள் எவ்வளவு, அவற்றில் தோல்வி அடையும் திருமணங்கள் அதற்கான காரணங்கள் இப்படி அடுக்கடுக்கான வினாக்களும், அவற்றிற்கான பதில்கள், ஆதாரங்கள் எதையுமே கூறாமல் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமே மற்ற சாதி பெண்களை  காதலிப்பதை போன்றும், அவைகள் தோல்வியில் முடிவதைப் போன்றும் பேசியுள்ளார்.

     பொதுவில் நமது நாட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களை காட்டிலும் காதல் திருமணங்கள் அதிக அளவில் தோல்வியில் முடிகிறது என்பது நடைமுறை உண்மையாகும்.

     இதற்கு காதலர்கள் காதலிக்கும் போது காமம் அல்லாத பிற வாழ்க்கைப் பற்றிய விவகாரங்களில் பெரும்பாலும் கவனம் ஏதும் செலுத்துவதில்லை. இப்படி நடைபெறாதன் விளைவாக திருமணத்திற்கு பின்னர் நடைமுறை வாழ்க்கையில் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமைகள் உச்ச நிலைக்கு சென்று இத்திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.

     குறிப்பாக காதலிக்கும் பெண்கள் மற்றப் பெண்களை காட்டிலும் ஜனநாயக உணர்வில் மேம்பட்டவர்கள். பெரும்பாலும் காதலிக்கும் போது ஆண்கள், பெண்களின் உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கின்றனர்.பெண்ணடிமைத் தனத்தை திணிக்கின்றனர்.
     இதோடு காதல் தம்பதியினரை பெரும்பாலான உறவுக்காரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தம்பதிகளிடையே எழும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கோ, அல்லது சமசரப்படுத்துவதற்கோ யாரும் முன்வராததும் காதல் திருமணங்கள்  மணமுறிவை நோக்கி  விரைவாக சென்று விடுகின்றன.

     அதே நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் பெரும்பாலானவை வரதட்சனை பிரச்சனையாலேயே  மணமுறிவை சந்திக்கின்றன.ராமதாசோ சாதி மறுப்புத் திருமணங்கள்தான் வரதட்சணைப் பிரச்சனையால் பிரிகின்றன என்கிறார்!

     ஆனால், பாமக ராமதாசோ இவைகள் எதையும் கணக்கில் கொள்ளவே மறுக்கிறார். சாதிமறுப்பு திருமணங்கள் மட்டுமே தோல்வி அடைவது போலவும் தாழ்த்தப்பட்டவர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மட்டுமே வரதட்சணை கொடுமைக்கு ஆளாவது போலவும் கயிறு திரிக்கிறார்.

     இதன் தொடர்ச்சியாக 3.11.12 அன்று தர்மபுரியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்  வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அதில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளார்.
   
     வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ராமதாஸ் கூறினாலும் உண்மையில் அந்தச் சட்டத்தையே நீக்கிவிடவேண்டும் என்பதுதான் ராமதாஸ் பேச்சின் உள்ளடக்கம்.  இந்த கோரிக்கை ராமதாசின் கோரிக்கை மட்டுமல்ல தமிழகம் முழுக்க உள்ள சாதி வெறி அமைப்புகளின் கோரிக்கையாகும்.

     உண்மையில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். அன்றாடம் தமிழகத்தில் குறைந்தது ஆயிரம் பேர் மீதாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுக்க முடியும். தாழ்த்தப்பட்டோரை இழிவுப்படுத்துவது ஆதிக்க சாதிகளின் அன்றாட பண்பாடாக உள்ளது. ஆனால் மிகவும் அபூர்வமாகத்தான் இந்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

     பாமக ராமதாஸ் கூறுவது போல இந்தச்சட்டம் காவல் துறையோடு கூட்டு வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட விவகாரங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி தொடுக்கப்படும் வழக்குகள் பெரும்பாலும் சாட்சி பிறழ்வுகளின் மூலம் தோல்வியடைய செய்யப்படுகின்றன. அல்லது வழக்குகள்  நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே காவல் நிலையங்களிலேயே சமரசப்படுத்தப்டுகின்றன. இப்படி நடப்பதற்கு  பேரங்களே காரணமாக உள்ளது. உண்மையில் இந்த வழக்குகள் சாதி வெறியர்களை தண்டிப்பதற்கு பதில் போலிசு மற்றும் விடுதலை சிறுத்தை அமைப்பில் உள்ள பிழைப்பு வாதிகளின் பைகளை நிரப்புவதற்கே பயன்படுத்தப்படுகின்றன.

    எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தடுக்கப்பட்டு உண்மையிலேயே சாதி வெறியர்கள் அனைவரின் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்கள் இச்சட்டத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.

     ராமதாசின் வாதப்படியே இந்தச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதால் தேவையில்லை என்றால்  இந்திய அரசியல் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களும் தவறாகத்தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவைகள் அனைத்தையுமே நீக்கிவிடமுடியுமா?

     உண்மையில் இப்படி நீக்கிவிட வேண்டும் என்பதுதான் சாதி வெறியர்களின் விருப்பமுமாகும். ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் இப்போது ஆதிக்கசாதி பெண்களை திருமணம் செய்ய துணிகிறார்கள் என்றால் அதற்கு மாறிப்போன சமூக, பொருளாதார வாழ்வும் அதற்கு ஏற்ப  உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுமே காரணமாகும். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி,வேலை வாய்ப்பு உட்பட அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடிகிறது. ஆதிக்க சாதி பெண்களை காதலிக்கவும், திருமணம் செய்து கொள்ளவும் முடிகிறது. எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமைகளை பறிக்க வேண்டும். அப்போதுதான் இவைகளை தடுக்க முடியும்.

     ஆனால் இதை வெளிப்படையாக கூறமுடியாமல் தான் சுற்றி வளைத்து பேசுகிறார்கள். சாதிமறுப்பு திருமணங்களை காரணம் காட்டி தாழ்த்தப்பட்டோர் இந்த சட்டங்களை பயன்படுத்தி சேர்த்த செல்வத்தை அழித்து ஆனந்தமடைகின்றனர்.

     நாட்டில் பெரும்பான்மையினர் ஆதிக்க சாதிகள்தான். தாழ்த்தப்பட்டோர் சமூக சமத்துவம் பெறுவதை அனைத்து சாதி வெறியர்களும் எதிர்க்கிறார்கள். வெளிப்படையாக தீர்மானங்களும் நிறைவேற்றுகிறார்கள். சரியோ, தவறோ தாங்கள் கடைபிடிக்கும் சாதிய பண்பாட்டில் சாதி வெறியர்கள் உறுதியாக இருந்தால் அதாவது தாழ்த்தப்பட்டோரை தமக்கு சம்மாக ஏற்க முடியாது என்பதில் ஊறுதியாக இருந்தால் அதுதான் நியாயம் என்று இவர்கள் கருதினால் தாழ்த்தப்பட்டோருக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக போராட வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட பூர்வ உரிமைகளை மறுதலிக்க வேண்டும்.

     இதை நடைமுறையில், அரசுப்பணிகளில் மேலதிகாரிகளாக உள்ள தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் கீழே, பணிபுரிவதை ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் ஏற்கக் கூடாது. அதாவது அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றக் கூடாது அல்லது அரசு வேலைகளை தூக்கியெறிந்து அரசுக்கு நெருக்கடி தரலாம்!

     பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் அனைத்து சாதியினரோடும் சமமாக தாழ்த்தப்பட்டவர்கள் பயணம் செய்வதை எதிர்த்துப் போராடலாம். இதை சாதிக்க இவற்றில் பயணம் செய்வதை ஆதிக்க சாதிகள் புறக்கணிக்கலாம்.

     தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்பதும், பொருளீட்டுவதும் தான் மேல்சாதி பெண்களை காதலிக்கவும், திருமணம் செய்யவும் காரணமாக அமைவதால் தர்மபுரி போன்ற நிகழ்வுகளில் பாமக கடைபிடித்துள்ள சொத்துக்களை சேதப்படுத்துவது என்பதோடு நிறுத்திவிடாமல் நாடு முழுக்கச் செய்து தாழ்த்தப்பட்டோர் சொத்து சேர்க்கும் உரிமையையே சட்டப்படி தடுக்கும் வகையிலான நிர்பந்தத்தை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தலாம்!

     இதே போன்று பள்ளிக், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை படிக்கவிடாமல் தமது சாதி மாணவர்களை கொண்டு அடித்து விரட்டுவதை தொடர் இயக்கமாக நடத்தலாம். இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி தாழ்த்தப்பட்டோரின் கல்வி உரிமையையும் பறித்துவிடலாம்!

    இப்படிப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம்தான் சாதிமறுப்பு திருமணங்களை முற்றாக தடுக்க முடியும். எனவே இதை செய்வதற்கு பாமக ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிகளையும் ஒருங்கிணைத்து  வழி நடத்தலாம்!

     இப்போதுள்ள இந்த சமூக கட்டமைப்பிற்கு மாற்றாக ராசராசன் கால ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று அறிவிக்கலாம். இதன் மூலம் அனைத்து ஆதிக்க சாதிகளையும் எளிதாக கவரமுடியும்.

     எனவே இதை சாதிப்பதற்கு, இந்த அபூர்வ திறமை படைத்த மனிதரான ராமதாசை அனைத்து ஆதிக்க சாதிகளும் தமது தலைவராக ஏற்றுக் கொண்டு செயல்பட முன்வரவேண்டும்.

     குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகள் நிகழ்த்திய மோடி, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த ராசபக்சே ஆகியோருக்கு இணையானவர் ராமதாஸ்.ஏனேன்றால் மோடியும்,ராசபக்சேவும் குஸராத்திலும்,இலங்கையிலும் நடந்த படுகொலை சம்பவங்கள் அனைவரும்அறிந்த உண்மை என்றாலும் இவைகளில் தமக்கு துளி கூட சம்பந்தமில்லை என்றுதான் இன்றுவரை கூறிவருகின்றனர்.இதையேதான் தர்மபுரியில் நாயக்கன்கொட்டாய் விவகாரத்திலும் அச்சுபிசகாமல் தமது பங்காளிகளான மோடி,ராசபச்சே ஆகியோரின் வார்த்தைகளை அப்படியே ஒப்பிக்கிறார். அவரை மட்டும் தலைவராக ஏற்றுக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை அவருக்கு ஆதிக்க சாதிகள் வழங்குமேயானால் தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்களின் கனவுகளை சத்தியமாக அவர் நிறைவேற்றி வைப்பார்!

     தான் நினைத்ததை சாதிக்க  எதை வேண்டுமானாலும் செய்யும் துணிவு படைத்தவர் அவர்! இதனால்  தான் தமது சாதி பெண்களின்  மானத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆதிக்கசாதி பெண்களின் மானத்தையும் பகடைக்காயாக பயன்படுத்தி தாழ்த்தப்பட்டோரின் ஆதிக்கத்தை முறியடிக்க புறப்பட்டுள்ளார் அவர்.

        அதாவது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு மேல்சாதி பெண்களை மயக்கி, காதல்வயப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கூறுகிறார் ராமதாஸ்.

     சாதிமறுப்பு திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தர்மபுரியை காட்டி எச்சரிக்கும் ராமதாஸ், தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடம் அறிவிழந்து மயங்கும் தமது சாதி பெண்களின் நிலைக்கு தீர்வு எதையும் கூறவில்லை.

     இப்படி கூறாதது தற்செயலான  ஒன்றல்ல, தமது சாதிப் பெண்களின் இந்தச் செயல்தான் தம்மை பலப்படுத்திக் கொள்ள ராமதாஸ் எடுத்துள்ள  அதாவது தமது சாதி பெண்களின் மானத்தை அடமானம் வைத்துதான் தனது அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்ள அவர் முனைகிறார்.

     தமது சாதி பெண்களின் மானத்தை வைத்து பகடையாடும்  ராமதாசின் தொழில் மருத்துவமா,வேறு ஏதாவது இருக்குமோ என்று குழப்பமாக உள்ளதா? எதைச் செய்தால் என்ன? அதன்மூலம் ஆதாயம் அடைந்தால் சரி!

தமது சாதிப்பெண்களை வைத்து அரசியலில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள கருதும் ராமதாஸ் தமது சாதிப்பெண்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த மேல்சாதிப்பெண்களையும் இழிவுபடுத்தியுள்ளார்.இவ்வளவு வெளிப்படையாக,துணிவாக ராமதாசை தவிர வேறு யாரும் பெண்களை வைத்து அரசியல் தொழில் நடத்திக்கொண்டே அவர்களை இழிவுப்படுத்தி,கொச்சைப்படுத்துவதோடு இவைகளை வெளிப்படையாக ,பகிரங்கமாகவும் அறிவிக்கவும் முடியுமா என்ன?!