விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label அதிகாரவர்க்கம். Show all posts
Showing posts with label அதிகாரவர்க்கம். Show all posts

Wednesday, 27 February 2013

ஊழல், முறைகேடு - இந்திய சமூகத்தின் பாரம்பரியம்!

வான் உலங்கு ஊர்தி – எலிகாப்டர்- வாங்குவதில் மீண்டும் ஓர் ஊழல் அம்பலமாகி இருக்கிறது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அடங்கிய மிக முக்கிய அரசுத்தலைவர்களின் பயன்பாட்டிற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து வான் உலங்கு ஊர்தி வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தில்தான் இது நடைபெற்றுள்ளது. இத்தாலியின் ஃ பின் மெக்கனிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் – மிருந்து 12 வான் உலங்கு ஊர்தியை பெற கடந்த 2010-ம் ஆண்டு ரூ 3600 கோடிக்கு இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இப்படி லஞ்சம் தந்த இத்தாலி நிறுவனத்தின் தலைவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இதன் பின்னர் தான் இந்தச் செய்தி இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது.
தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் நிலவும் கடுமையான போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதற்கு கமிஷன் – லஞ்சம் – கொடுப்பது என்பது முதலாளித்துவ நிறுவனங்களின் வழமையான நடவடிக்கையாகும். அதிலும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூடுதலான லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெறுகின்றன.
தரமான பொருட்களை வாங்குவதன் மூலம் குறைவான லஞ்சம் கிடைக்கிறது என்பதால்தான் தரம் குறைந்த பொருட்களை வாங்கி கூடுதலான ஆதாயம் அடைகின்றனர் இந்திய அதிகார வர்க்கத்தினர்.
இந்திய அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தான் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதா, இல்லையா என்பதைவிட கூடுதல் லஞ்சம் கிடைக்குமா, இல்லையா என்பதிலிருந்து தான் ஒப்பந்தம் செய்து கொள்வதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பவர்கள்.
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குபவர்களுக்கு கமிஷன் என்றப்பெயரால் லஞ்சம் கொடுப்பது என்பது அவைகளின் இயல்பான நடவடிக்கையாகும். இது கமிஷன் என்றப்பெயரில் சட்டப்படியே அங்கீரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இப்படி இருக்கும் போது இத்தாலி நிறுவனத்தின் தலைவர் லஞ்சம் கொடுத்தார் என்று எதற்காக கைது செய்யப்பட வேண்டும்? என்ற நியாயமான கேள்வி எழவே செய்கிறது.
இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை நிறுவனத்தின் இடைத்தரகர்களாக செயல்படுவர்களுக்கே வழங்கப்படும். பொருளை கொள்முதல் செய்பவர்களுக்கு நேரிடையாக தரப்படுவதில்லை. இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் செல்கிற போதுதான் அது லஞ்சமாக கருதப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் இப்படி கூடுதலாக கமிஷன் – லஞ்சம் – வழங்கப்படுவது தனியார் நிறுவனங்களில், அதன் உரிமையாளரின் ஒப்புதலின் பேரிலேயே வழங்கப்படுவதால் அவைகள் வெளியே வருவதில்லை. இப்படிப்பட்ட நிகழ்வுகள் பொருளைப் பெற ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளின் அரசியல் ரீதியான காரணங்களினாலேதான் பெரும்பாலும் வெளிவருகின்றன.
ஆனால் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனமோ இத்தாலி அரசு நிறுவானமாகும். இதனால் ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் இத்தாலி அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவுடனான ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு வெளியே வந்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மேல் கமிஷன் தொகை கைமாறியதுதான் குற்றமாக வெளியே வந்துள்ளது.
பாவம், இத்தாலி நிறுவனத்தின் தலைவருக்கு விவரம் புரியவில்லைபோலும்! தனக்கு புரியாத ஒன்றைப்பற்றி அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டிருந்தால், அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக கமிஷன் தந்ததாக ஆவணங்களில் பதிவு செய்து தனது நாட்டு அரசிடமிருந்து அவர் பாராட்டையும் பெற்றிருக்கலாம்!
இத்தாலியில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டுள்ள கூடுதல் தொகை லஞ்சம் என கூறப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் இந்நிகழ்வு இந்தியாவில் எப்படிப்பட்ட விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது? அதிலும் மக்கள் மத்தியில் என்றால் அப்படி எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், இதை பல பத்திரிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன.
மக்களின் உணர்வே மரத்துப் போய் விட்டதாக அங்கலாய்க்கின்றனர். இப்படி ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வும், உணர்ச்சியும் கூட உயிரோட்டமானதா என்றால் இல்லவே, இல்லை என்பது மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.
ஊடகங்கள் தமது தொழில் காரணமாகவே இவைகளை வெளிப்படுத்துவதும், அங்கலாய்ப்பதும் நடக்கிறதே தவிர உண்மையான உணர்வின் வெளிப்பாட்டால் அல்ல. லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றின் ஒரு அங்கம்தான் ஊடகங்களும்! இவைகளை கட்டித் தழுவிக் கொள்ளாமல் ஒரு கணம் கூட இவைகளால் உயிர் வாழமுடியாது!
இந்திய ஊடகங்களின் அன்றாட செயல்பாடுகள் மட்டுமல்ல, அதன் உரிமையாளர்களின் இன்றைய இருப்பே முறைகேடுகளின் ஊடாக அடைந்தவைகளே ஆகும். இந்திய நிறுவனங்களின் இருப்பு மட்டுமல்ல, இந்திய மக்கள் ஆகபெரும்பான்மையினரின் இருப்பும் முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இதில் சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே அளவு ரீதியான வேறுபாடு உள்ளதே தவிர, பண்பு ரீதியான வேறுவாடு ஏதுமில்லை.
இந்தியசமூகம் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான அதிர்வலைகள் எழுவதற்கான உள்ளடக்கத்தை வாழ்வியல் முறையாக கொண்டதல்ல. மாறாக அதில் தனது பங்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏக்கத்தை எப்போதுமே கொண்டதே ஆகும். இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் அரசு அதிகாரிகளுக்கு இடையிலும், அரசுகளுக்கு இடையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையிலும், மக்கள் ஒவ்வொருவருக்கு இடையிலும் முறைகேடுகள் பற்றிய சிந்தனாமுறை எழுகிறது. இதன் காரணமாகத்தான் ஊழல், முறைகேடுகள் இந்திய சமூகத்தில் பெருத்த அதிர்வலைகளை உருவாக்குவதில்லை.
இதில் ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட அதிர்வலைகளும் தற்போது நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது. சமூகம் முழுமைக்கும் இது பொதுமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்போம் என்பதுதான் அந்தப் பொதுமையாகும். இந்த பொதுமையான உணர்வும் அதன் அடிப்படையிலான செயல்பாட்டு வடிவமும் இந்திய சமூகத்தில் எப்படி நிலை நாட்டப்பட்டது? அதற்கான கூறுகளும், வாய்ப்புகளும் இச்சமூகத்திற்கு எங்கிருந்து எப்படி கிடைத்தன போன்ற ஐயங்களுக்கான விடையை இனி பார்ப்போம்!
இன்றைய இந்திய சமூகத்தின் மேல்நிலையில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் – உள்ளிட்டவர்களாயினும், நடுத்தர பிரிவினர் ஆயினும், ஏன் தொழிலாளிகள், தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், வரை ஆகப்பெரும்பான்மையினர் இந்த விநாடி வரை சிந்தனையால் மட்டுமல்ல, நடைமுறையிலும் மேல் சாதிகளாக வாழ்பவர்கள்தான்.
இந்த மேல்சாதி என்ற தகுதி இவர்கள் தமது தகுதி, திறமையின் ஊடாக பெற்றவையா? இல்லை. இது பிறப்பின் அடிப்படையில் கிடைப்பதாகும். இது இந்தியாவில் மனிதர்கள் உருவான காலத்திலிருந்தே நிலவிக் கொண்டிருக்கும் ஓர் பண்பாடா என்றால் நிச்சயம் இல்லை! இந்திய சமூகத்தில் சாதியும் அதன் அடிப்படையான வேறுபாடுகளும் இல்லாத காலமும் ஒன்று இருக்கவே செய்தது. கடந்த இரண்டாயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத்தான் சாதியும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் இச்சமூகத்தில் வேரூன்றி உள்ளது.
ஆரிய வருகை, பூர்வகுடி மக்களுடனான போராட்டம், அதில் அவர்களின் வெற்றி, இனக்கலப்பு, வெற்றியாளர்களின் மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், இதை எதிர்த்த பூர்வகுடி மக்களின் போராட்டம், இதில் பெரும்பான்மையினர் காட்டிக்கொடுத்தல், இதற்கு கைமாறாக அடைந்த வாழ்வுதான் நாம் மேலே அவதானித்த ஆகப்பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.
பூர்வகுடி மக்களில் பெரும்பான்மையானர் தனது சமூகத்தின் ஒரு பகுதியினரை பகுதி, பகுதியாக, சிறுக, சிறுக வெற்றியாளனுக்கு காட்டிக்கொடுத்து அடைந்த வாழ்வாதாரம் தான், இன்றுவரை எப்படிப்பட்ட வரலாற்றுச் சூழலிலும் நீடித்து, நிலைப்பெற்று ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகிறது. வாழ்க்கைக்கான அடிப்படையாகவே இவைகள்தான் திகழ்வதால்தான் ஒற்றுமைக்கான கூறுகள் இச்சமூகத்தில் மிகவும் அரிதான ஒன்றாக ஆகிவிட்டுள்ளது.
முதலாளித்துவ கூறுகள் குறைவாக இருந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்குள்ளேயான ஒற்றுமைக் கூறுகள் ஒப்பீட்டளவில் மேலானதாக இருந்தது. சாதிகளுக்கிடையில் மேல், கீழ் அடிப்படையில் ஓர் தொடர்பையும், இயக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆனால் இன்றோ ஒற்றுமைக்கான கூறுகள் அனைத்து மட்டங்களிலும் ஏறத்தாழ அறுந்தே போயுள்ளது. இப்போது சாதிகளிலேயே கடைநிலை தீண்டத்தகாத சாதிகளுக்கு எதிராக மட்டுமே ஒற்றுமைக்கான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டுள்ளது. இதுவும் கூட சிந்தனா ரீதியான ஒற்றுமையே வலிமையானதாகும். இதுதான் நடைமுறை ரீதியாக, ஒதுக்குதல் என்பதைவிட ஒதுங்கிக்கொள்ளல் என்பதை வலுவாக கடைபிடிக்க வைக்கிறது. இது சில நேரங்களில் மட்டுமே நேரடி நடவடிக்கையாக மாறுகிறது.
மேல் சாதிகள் என்று தம்மை நம்பக்கூடிய இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையினோரை ஒருங்கிணைக்கும் ஒரே ஒரு கூறு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சிந்தனையும், செயல்படுகளுமே ஆகும்.
இவர்களுக்கிடையில் பிற அனைத்து அம்சங்களிலும் ஒற்றுமைக்கான கூறுகள் இல்லவே, இல்லை. ஒற்றுமையின்மைக்கான கூறுகள் மட்டுமே மேலும், மேலோங்கி வருகிறது. மேலும் இது எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் வெளிப்பாடுகள் குழுச்செயல்பாடுகளாக சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.
முதலாளித்துவ நுகர்வு பண்பாடு எந்த அளவிற்கு சமூகத்தில் பெருக்கெடுக்கிறதோ அந்த அளவிற்கு ஒற்றுமை இன்மைக்கான கூறுகள் இங்கு வீரியமடைகின்றன.
இவைகள் இன்று சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டுள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக நிலைநிறுத்ப்பட்டுள்ளது.
முறைகேடுகள் இச்சமூகத்தின் பிரிக்க வியலாத, ஓர் அங்கமாக அன்றாட, இயல்பான நிகழ்வாக மாறிப்போனதற்கான அடிப்படையே, இச்சமூகத்தின் வாழ்வியல் முறையாகவே காட்டிக்கொடுத்தல் என்பதை கொண்டிருப்பதால்தான். லஞ்சம், ஊழல், முறைகேடுகளும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல்தான் என்பதை உணரும் போதுதான் மேலே கண்ட உண்மையையும் புரிந்து கொள்ளமுடியும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தனது மூதாயர்களின் காட்டிக் கொடுத்தல், அதன் அடிப்படையிலான வாழ்வியல் ஆகியவற்றை இச்சமூகம் குற்றமாக, இழிவாக கருதாத வரை, இச்சமூகத்தில் போபோர்ஸ், பேர்பாக்ஸ், 2G, வான் உலங்கு ஊர்தி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாகவே நீடிப்பதை எவராலும் தடுத்து விடமுடியாது!

Thursday, 13 September 2012

கூடங்குளம் : உயிர் வாழ ஒன்று சேர்வோம்!

              தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும் மக்கள், போலீசின் கடுமையான  தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.




     போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார் போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

     சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.  நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத் தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை  காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம் மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர். தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில் முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை செய்கின்றன.

     போராட்டக்குழு தலைவர் தன்னை  காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து சென்றுள்ளார்.

     இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு,  கைதாவது என்பது வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இருந்தது.

     கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை. அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது முட்டுச்சந்தில்  சிக்கிக் கொண்டுவிட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு, முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள்  அனுமதிக்க போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன் உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.

     இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட வழிமுறையை  தொடரப் போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின் இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற  தன்மையைத்தான்  கோருகிறது. கடல் தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.

     போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.

     அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம் வட்டார மக்களின்,  அதிலும் மீனவ மக்களின் போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும் முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.

     ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும் அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

     தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன. மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத  புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப்  போனது.மொத்தத்தில் இவர்கள் தமது இயலாமையை, சமவெளிப்பகுதியில் வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”, என்கின்றனர்.

     இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை  ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி  மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.

     இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு மாற்று ஏதுமில்லை.

     ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல. இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்  நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும். மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில் நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.

     எனவே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது.  இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள் மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

     தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும் மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன் ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.


     எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம் செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

Friday, 30 September 2011

அதிகார வர்க்கம் இருக்கும் வரை,வாச்சாத்திகளும் இருக்கும்!

கால தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.1992-ம் ஆண்டில் வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது ஏவி விடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் பயங்கரவாத, பாலியல் தாக்குதல்களுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர்தான் செத்தவன்களை போக உயிரோடு இருக்கும் 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதில் 198 பேருக்கு உடனடியாகவே பிணை வழங்கப்பட்டு சிறைக்குச் செல்லாமல் 17 பேர் மட்டுமே சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

வாச்சாத்தி பழங்குடி கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது. வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்திய 269 பேரும் தமிழக அரசின் வனத்துறை,காவல்துறை,வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள்தான். இந்த பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட 269 பேரில் எவனும் மக்களுக்கு எதிராக இப்படிபட்ட அநியாயத்தை செய்ய மாட்டேன் என்று எதிர்ப்போ,மறுப்போ தெரிவிக்கவில்லை.அந்த அளவிற்கு கடைமை உணர்ச்சி! இவர்களில் எவனிடமும் நம் சொந்த மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதும் இருக்கவில்லை.ஈழத்தமிழர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கும்,சிங்கள ராணுவத்திற்கும்,இந்த அயோக்கியர்களுக்கும் அடிப்படையில் எந்த ஒரு வேறுபாடுமில்லை.


அரசு வேலையில் சேரந்தவுடனே, தான் சராசரி மனிதன் என்பதையே முற்றாக மறந்துவிடுகிறார்கள் என்பதைதான் மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.எந்த மக்களின் வரிப்பணத்தில் இவர்கள் சம்பளம் வாங்குகிறார்களோ அந்த மக்களைத்தான் இவர்கள் தமது பொது எதிரியாக கருதும் அளவிற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.இப்படி இவர்களை பயிற்றுவிப்பது யார்?


இவ்வளவு பெரிய பயங்கரவாத, பாலியல் தாக்குதலை இந்த அளவுக்கு திட்டமிட்டு,இவ்வளவு பேரை திரட்டி செய்ய முடிகிறது என்றால்,இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு மட்டுதான் இது பற்றி தெரியுமா? இவர்களின் மேலதிகாரிகளுக்கு இது பற்றி எதுவுமே தெரியாதா? அப்போது இருந்த அரசுக்கும் தெரியாதா?இவர்களுகெல்லாம் தெரியாமல்தான்,இவர்களுக்கு உடன்பாடு இல்லாமல்தான்,இவர்களின் அனுமதி இல்லாமல்தான் இப்பயங்கரவாத பாலியல்தாக்குதல் நடத்தப்பட்டது என்றால் இவர்களை பாதுகாக்க இவர்களின் உயர் அதிகாரிகளும்,அரசாங்கமும் முயன்றது எதற்காக? இப்படி இவர்களை பாதுகாக்க முயன்றது குற்ற நடவடிக்கையா இல்லையா? இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை, யார் கொடுப்பது?
இப்படிப் பட்ட சம்பவங்கள் வாச்சாத்தியோடு முடிந்துவிட்டதா அல்லது முடிந்துவிடுமா? அண்மையில் பரமக்குடியில் இதே  போன்ற திட்டமிட்ட தாக்குதல் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டதே! அது எந்த வகையான தாக்குதலாம்? இது மட்டுமா அன்றாடம் ஒவ்வொரு போலிசு நிலையத்திலும் சிறிதும்,பெரிதுமான சட்டத்திற்கு புறம்பான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துவருகின்றனவே அவைகளை இந்த தீர்ப்பு தடுத்துவிடுமா?

ஒவ்வொரு அரசு அலுவலகமும்  மக்கள் விரோத கூடாரமாகத்தானே திகழ்கின்றன.இலஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகத்திலாவது எந்த ஒரு காரியத்தையாவது மக்கள் சாதித்துவிட முடியுமா? லஞ்சம் கொடுப்பது என்பது நடுத்தர,மேட்டுக்குடி கும்பலை பொருத்தவரை அவர்களின் வாழ்வையே சிதைத்துவிடும் அளவுக்கு பெரிய விவகாரமில்லை.ஆனால் ஒருநாள் வருவாய் 20 ரூபாய் மட்டுமே பெரும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு இந்த லஞ்சம் சதாரண விவகாரமா?உடல் நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் கொடுக்க முடியாதவர்கள் அங்கேயே துடிதுடித்து செத்துபேகிறார்களே இதற்கும் வாச்சாத்திக்கும் என்ன வேறுபாடு உள்ளது! வாச்சாத்தி பயங்கரவாத பாலியல் தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின், மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கும் இதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

மொத்தமாக பார்த்தால் அதிகாரவர்க்க கும்பலே மக்கள் மீது அணுதினமும் தனது வெறுப்பையும்,ஆத்திரத்தையும் கொட்டி தீர்க்கிறது.மக்களை பழிவாங்குகிறது.இவைகள் அனைத்தும் தனி மனித பண்புகளோ,குற்ற செயல்களோ அல்ல.இது இந்த கட்டமைப்பின் பண்பாகும்.அது வெளிப்படும் விதத்தில்,வடிவத்தில்தான் வேறுபாடு உள்ளதே தவிர,அதன் சிந்தனா முறையில் எவ்வித மாற்றமும், வேறுபாடும் இருப்பதில்லை.ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி பிடிபட்டு விடுவதால் அந்த அலுவலகத்தில் லஞ்சம் அன்றோடு ஒழிந்துவிடுவதில்லை.அதற்கு நேர்மாறாக பிடிபட்டவனுக்கு திறமையில்லை என்று ஏளனம் செய்யப்பட்டு மேலும்,மேலும் நுட்பமாக, முன்னிலும் தீவிரமாக லஞ்சம் தலைவிரித்தாடி மக்களை பழிவாங்குகிறது.

ஆகவே இப்படி பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நாம் அகமகிழ்ந்து போவதற்கு எதுவுமில்லை! மக்களுக்கு விரோதமாக மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே, சட்டப்படி பயிற்றுவிக்கப்படுகின்ற அதிகாரவர்க்க கும்பல் இருக்கும்வரை இப்படிபட்ட தாக்குதல்கள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்!

சட்டமன்ற,நாடாளும் மன்ற உறுப்பினர்கள் முதல் அரசுத்துறையில் பணி புரியும் அனைவரும் மக்களால் தேர்ந்தேடுக்க படுபவர்களாகவும்,அவர்கள் தவறு இழைக்கும் போது திருப்பி அழைக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப் படுபவர்களாகவும் ஆக்கப்பட வேண்டும்.மொத்தத்தில் அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் கைகளுக்கு வரவேண்டும்.இப்போது இருக்கும் அனைத்து அதிகார அமைப்புகளும் குழிதோண்டி புதைக்கப் பட வேண்டும்.இது நடக்காத வரை வாச்சாத்திகளை எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்புகளாலும் தடுத்து விட முடியாது! 

Tuesday, 6 September 2011

சமச்சீர்கல்வி:நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

சமச்சீர்கல்வி விவகாரத்தில் வினவும் அதன் தோழமை அமைப்புகளும்,எப்படியெல்லாம் முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது என்பதையும் சீர்த்திருத்த புதைகுழியில் சிக்கிகொண்டுள்ளது என்பதையும் பாகம்-4 வரை எழுதியுள்ளோம்.இறுதியாக புதிய ஜனநாயகம் இதழ் தமது தோழமை அமைப்பான மக இக-வின் புதிய கலாச்சாரத்தோடும் மட்டுமல்ல தனக்குள்ளேயே  முரண்பட்டு நிற்கிறது என்பதை சென்றத் தொடரில் எழுதியிருந்தோம்.சமச்சீர்கல்வி….!கார்ப்ரேட்மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக்கும்பலுக்கு விழுந்த அடி! என்ற எமது முதலாவது கட்டுரையில் “ஜெ தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் காலாகாலமும் தாம் அனுபவித்துவரும் சுகபோகங்கள்,இனிஎக்காலத்திலும் கேள்விகளுக்கு இடமில்லாமல் தொடரவேண்டும் என்ற பேராசை,அகம்பாவம் அதன் கண்ணை மறைக்க கார்ப்பரேட் மூலதனத்துடன் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியுள்ளது.இப்படி மண்ணைக் கவ்வுவது ஒன்றும் பார்ப்பனக்கும்பலுக்கு புதியது அல்ல.காலனி ஆட்சிகாலத்திலேயே,தான் காலாகாலமும் அனுபவித்து வந்த மனுதரும குலக்கல்விக்கு எதிரான,ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த மெக்கலே கல்வி முறையை எதிர்த்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் காலனி ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மெக்காலே கல்வியை தன்னால் தடுத்து நிறுத்த முடியாது,என்று தெரிந்தவுடன் தான் கீழே விழுந்த அதே வேகத்தில்,மெக்காலே கல்வியை தனதாக்கிகொண்டது.தற்போதும் பார்ப்பனக்கும்பல் சமச்சீர்கல்வியை எதிர்த்து மண்ணைக் கவ்வினாலும்,கீழே விழுந்த அதே வேகத்தோடு அதை தமதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்”,என்று எழுதியிருந்தோம்.நாங்கள் எமது கட்டுரையில் மாக்சிய இயங்கியலின் அடிப்படையில் முன்னறிந்து கூறிய படியே ஜெயா தலைமையிலான பார்ப்பன கும்பல், ”சமச்சீர்கல்வியை தான் எதிர்க்கவில்லை என்றும்,அது தற்போது தரமற்றதாக அதாவது அப்பாடநூல்கள் தரமற்றவைகளாக உள்ளன.அதை மேம்படுத்தவே சமச்சீர்கல்வி நடைமுறையை இவ்வாண்டு தான் நிறுத்திவைத்ததாகவும் ஆனாலும் சமச்சீர்கல்வியை இந்தகல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால்,எனது அரசு இந்த ஆண்டே அதை நடைமுறைப்படுத்தும். சமச்சீர்கல்வி என்பது பொது பாடநூல்கள் மட்டுமல்ல,அதற்கு தேவையான அடிப்படைகட்டுமான வசதிகள்,மற்றும் ஏனைய வசதிகளை உருவாக்கித் தரவேண்டும்,இந்த அடிப்படையான வசதிகளை இந்த ஆண்டே உருவாக்க எனது அரசு ஏனைய துறைகளை காட்டிலும் கல்வித்துறைக்கு கூடுதல் நிதியாக ரூபாய் 1082.75 கோடியை ஒதுக்கியுள்ளதாக”, தற்போது நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார்.





இந்த நிதியைக்கொண்டு அரசுப்பள்ளிகள் அனைத்திலும் கூடுதல் வகுப்பறைகள்,கழிப்பறை வசதி,குடிநீர்வசதி,சுற்றுச்சுவர் ஆகியவை உருவாக்கப்படும்,ஆசிரியர்பற்றாக்குறையை போக்க 30,036 புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்,மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வைபோக்க ஒரேமாதிரியான புத்தகப்பைகள்,கணித உபகரணப்பெட்டி வழங்கப்படும்.இதோடு மாணவர்களுக்கு தனியார்பள்ளிகளை போன்று செயற்கைகோள் உதவியுடன் கணிணி மூலம் கற்பிக்கப்படும்.மாணவர்களின் சிந்தனைத்திறனை மேம்படுத்த பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும்.மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க கல்விமுறை முப்பருவமாக மாற்றம் செய்யப்படும்”, என்று மிகவும் ஆரவாரமாக அறிவித்துள்ளார்.
மேற்கண்ட அறிவிப்புகள் மூலம் சமச்சீர்கல்வியை ரத்து செய்து, உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பள்ளிகள் திறந்து இரண்டு மாத காலமாக புத்தகமே இல்லாமல் பள்ளிக்கு சென்று வந்த,மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரிடமும்,தான் சம்பாதித்துக் கொண்ட வெறுப்பை இல்லாமல் செய்துவிடுவதோடு,சமச்சீர் கல்வி நடைமுறையை தமதாக்கி கொள்ளவும்,அதனால் கிடைக்கும் அனைத்து நலனையும் தமதாக்கி கொள்ளவும் முயற்சிக்கிறார்.

இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் தான் அனுபவித்து வரும் சுகபோகங்களுக்கு பாதகம் வராமல் தடுத்துவிடுவதோடு,சமச்சீர்கல்வி மூலமும் தமது நலன்களைக் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.என்னதான் சமச்சீர்கல்வி மூலம் அனைத்து மாணவர்களும்,ஒரேவிதமான கல்வியை பெற்றாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க போதுமான ஆசிரியர்களை நியமித்தாலும்,அப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்களை,அவர்களை தெரிவுசெய்யும் போது அதிகாரவர்க்கத்தின் மூலம் அவர்களுக்கு தரப்படும் சிரமங்கள் மூலம், அதாவது நியமனம் செய்யப்படுகின்ற ஆசிரியர்கள் தாங்கள் நியமனம் பெறுவதற்காக அரசின் செல்வாக்குள்ள நபர்களின் சிபாரிசு,அதிகாரவர்க்கத்தின் மூலம் அளிக்கும் லஞ்சம் ஆகிய நிர்வாக ரீதியான வழிமுறைகள், புதிதாக நியமிக்க படும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 4000 இருந்து 5000 வரை மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பும்,புதிய ஆசிரியர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையும் முற்றாக துடைத்தெரிந்து விடும்.இதனால் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கும் திறன் தற்போது நிலவுவதைக்காட்டிலும் மேம்படுவதற்கான அடிப்படை ஏதுமில்லை.

ஏற்கனவே அரசின் ஏனைய துறைகளைப் போன்று கல்வித்துறையும் லஞ்சம்,ஊழல் முறைகேடுகள் ஆகியவற்றின் மூலம் முற்றாக சீரழிந்து கிடக்கிறது.இதில் ஆசிரியர்களையும் அதிலும் குறிப்பாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பொருப்பை ஒப்படைத்து,இவர்களிடமே பணமும் தந்து,கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்படுகிறது.இதனால் இவர்கள் பள்ளி தலைமையாசிரியர் என்பதை விட ஒப்பந்ததாரராகவே உருமாற்றப்படுகின்றனர்.இவர்கள் ஏனைய ஒப்பந்ததாரர்களிடம் உள்ள கேடுகெட்ட அனைத்து பண்புகளையும் பெற்றுவிடுகின்றனர்.இப்படிப்பட்ட தலைமையாசிரியர்கள் பள்ளிகளில் கற்பிக்கும் பணிகளில் இருந்து முற்றாக ஒதுங்கிவிடுவது பள்ளிக்கட்டிட்டம் கட்டுவதில் ஊழல் செய்து சம்பாதிப்பது ஆகிய செயல்கள் ஏனைய ஆசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,அவர்களிடம் உள்ள அரைகுறை சமூக அக்கறையையும் ஒன்றுமில்லாமல் செய்து அவர்களின் கற்பிக்கும் ஆர்வத்தையும்  ஒன்றும் இல்லாமல் செய்துவிடுகிறது.இது மட்டுமல்ல மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டத்திற்கு வழங்கும் நிதியை ஊராட்சிமன்றத்தலைவர் மற்றும் தலைமையாசிரியரின் பெயர்களில் கூட்டுக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இப்பணத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு பங்கை தந்துவிட்டு,ஏனையப் பணத்தை கையாடல் செய்வது தான் இவர்களின் முழுமுற்றான பணியாகவும் இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிகாரவர்க்கமும்,சமூகத்தில் வசதிபடைத்தோரும் முழுக்கவே தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே படிக்கவைக்கின்றனர்.இதனால் அரசுப் பள்ளிகளை சீரழிப்பதில் அதிகாரவர்க்கத்திற்கும்,ஆட்சியாளர்களுக்கும் எவ்வித தயக்கமும் இருக்காது,ஆகவே பார்ப்பன ஜெயா கும்பல் ஆரவாரமாக அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்துமே மக்களை திசைதிருப்பும் தந்திர நடவடிக்கைகளே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டதாலேயே, அதை படிக்கும் நமது பிள்ளைகளுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாக நாம் கருதிக்கொள்ளக்கூடாது.இப்போது உள்ளது போலவேதான் நிலைமைகள் அப்படியேத் தொடரும்.உயர்கல்வி கற்பது அரசு வேலைவாய்ப்புகளை பெறுவது ஆகியவை முழுமுற்றாக பணத்தால்தான் தீர்மாணிக்கப்படும்.நாயோடு உடன் பிறந்தது அதன் வால் என்றால் இந்த சமூக அமைப்போடு உடன் பிறந்தது ஊழலும்,லஞ்சமும் ஆகும்.நாய் உயிரோடு இருக்கும் வரை அதன் வால் ஆடுவதை எப்படி நம்மால் தடுத்து நிறுத்த முடியாதோ, அதே போன்றுதான் நிலவுகிற இந்த சமூக அமைப்பு இருக்கும் வரை லஞ்சம்,ஊழல் ஆகியவற்றை எவராலும் ஒழித்துவிட முடியாது.

உண்மையிலேயே லஞ்ச,லாவண்யமற்ற ஒரு சமூகத்தை நீங்கள் விரும்பினால்,அதற்கு தற்போது நிலவும் இந்த சமூக அமைப்பு முற்றாக துக்கியெறியப்பட்டு,அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்கள் குழுக்களுக்கு வரவேண்டும்.சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அரசின் நிர்வாக பணிகளுக்கு தேவையான பணியாளர்கள் முதற்கொண்டு அரசின் அனைத்து அங்கங்களுக்குமான பணியாளர்கள் அனைவருமே உழைக்கும் மக்களால்தான் தெரிவு செய்ய படவேண்டும்.இவர்கள் தவறு இழைக்கும் போது அவர்களை திருப்பி அழைக்கும் அதிகாரமும் உழைக்குமக்கள் குழுக்களுக்கு இருக்க வேண்டும்.இதுதான் மட்டுமே லஞ்சத்தையும்,ஊழலையும் தற்போது சமூகத்தில் நிலவும் அனைத்து அநீதிகளையும் களைவதற்கான ஒரேமாற்று வழிமுறையாகும்.இதை சாதிப்பதற்கு தேவை புதிய ஜனநாயக புரட்சி.வாருங்கள் உழைக்கும் மக்களே புதியதொரு சமூக அமைப்பை உருவாக்க ஒன்று சேருவோம்! போராடுவோம் வாருங்கள்!  



தொடர்புடைய கட்டுரைகள்:
                      



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

6.முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4