விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கருத்துமுதல்வாதம். Show all posts
Showing posts with label கருத்துமுதல்வாதம். Show all posts

Tuesday, 25 October 2011

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ

மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? -தோழர் மாவோ
மனிதனின் சரியான கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா?இல்லை மூளையில் இயல்பாக உள்ளனவா? இல்லை.அவை சமுதாய நடைமுறையிலிருந்து மட்டும் தோன்றுகின்றன; உற்பத்திக்கான போராட்டம்,வர்க்க போராட்டம்,அறிவியல் ஆய்வு என்ற மூவகை நடைமுறையிலிருந்து வருகின்றன.


மனிதனின் சமுதாய வாழ்வே அவனது சிந்தனையை நிர்ணயிக்கின்றது.முன்னேறிய வர்க்கத்தின் பண்பாக விளங்கும் சரியான கருத்துகள் ஒருகால் மக்கள் திரளினால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும்,இக்கருத்து சமூகத்தை மாற்றுக்கின்றன.உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாயத சக்தியாக வடிவெடுக்கின்றன.




மக்கள்,தமது சமுதாய நடைமுறையில் பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டு,தமது வெற்றிகள்.தோல்விகள் இரண்டிலிருந்தும் செழுமையான அனுபவங்களைப் பெறுகின்றனர்.புறநிலை உலகத்தில் எண்ணற்ற தோற்றப்பாடுகள் மனிதனின் மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம்புலன்களுக்கும் ஊடாகச் சென்று,அவனுடைய மூளையில் பிரதிபலிக்கின்றன.ஆரம்பித்தில் அறிவு புலக்காட்சியாக இருக்கின்றன.போதிய அளவு புலக்காட்சி அறிவு தொகுக்கப்பட்டதும்,அதில் ஒரு பாய்ச்சல் நிகழ்ந்து அது பகுத்தறிவாக மாறுகின்றது.அதுவே கருத்துகள் என்று அழைக்கப்படுகின்றது.இது அறிதலின் ஒரு வளர்ச்சி போக்கு. இது அறிதலின் முழு வளர்ச்சி போக்கில் முதலாவது கட்டம்,அதாவது புறநிலை பருப்பொருளிலிருந்து அகநிலை உயர்வுக்கு செல்லுகின்ற,வாழ்நிலையிலிருந்து கருத்துகளுக்கு செல்லுகின்ற கட்டம் ஆகும்.(தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் உட்பட)ஒருவரின் உணர்வு அல்லது கருத்துக்கள் எல்லாம் புறநிலை யதார்த்த உலகை சரிவர பிரதிபலிக்கின்றனவா,இல்லையா என்பது இந்த கட்டத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இக்கட்டத்தில் அவை சரியானவையா,இல்லையா என்று நிச்சயிப்பதும் சாத்தியமாகாது.பின்னர்,அறிதலினுடைய வளர்ச்சிப் போக்கில் இரண்டாவது கட்டம்.அதாவது உணர்விலிருந்து மீண்டும் பருப்பொருளுக்கு கருத்துகளிலிருந்து மீண்டும் வாழ்வுக்கும் செல்லும் கட்டம் வருகின்றது.இந்தக் கட்டத்தில் தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் எல்லாம் எதிர்பார்த்த வெற்றியைத் தருகின்றனவா என்பதை நிச்சயிக்க,முதல் கட்டத்தில் ஈட்டப்பட்ட அறிவு சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கப்படுகின்றது.பொதுவாகச் சொன்னால்,எவை வெற்றி பெருகின்றனவோ அவை சரியானவை ; எவை தோல்வியடைகின்றனவோ அவை பிழையானவை ;குறிப்பாக இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்தில் இது உண்மையாகும்.சமுதாயப் போராட்டத்தில் முன்னேறிய வர்க்கத்தை பிரதிநிதித்துவ படுத்தும் சக்திகள் சில வேளையில் தோல்வியடைகின்றன;காரணம்,அவர்களுடைய கருத்துகள் தவறானவை என்பதல்ல; மாறாக ,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக்திகளின் சமநிலையில் தற்காலிகமாக முற்போக்கு சக்திகள் பிற்போக்கு சக்திகளைப் போல் அவ்வளவு பலம் பெற்றிருக்கவில்லை;எனவே அவை தற்காலிகமாக தோல்வியடைகின்றன.ஆனால் இன்றோ,நாளையோ அவை வாகை சூடுவது நிச்சயம்.அடுத்து,நடைமுறை சோதித்தல் மூலம் மனிதனுடைய அறிவில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்கின்றது.இந்த பாய்ச்சல் முன்னைய பாய்ச்சலிலும் பார்க்க முக்கியமானது.காரணம்,முதலாவது பாய்ச்சலில்,அதாவது பிறநிலை யதார்த்த உலகைப் பிரதிபலிக்கும் போக்கில் வகுக்கப்பட்ட கருத்துக்கள்,தத்துவங்கள்,கொள்கைகள்,திட்டங்கள் அல்லது வழிமுறைகள் ஆகியவற்றின் சரி பிழையை இந்த பாய்ச்சல் மட்டும் நிரூபிக்க முடியும்.இவை தவிர உண்மையை சோதித்தறியும் வழி வேறுகிடையாது.


பருப்பொருளிலிருந்து உணர்வுக்கும்,பின்னர் உணர்விலிருந்து பருப்பொருளுக்கும்,அதாவது நடைமுறையிலிருந்து அறிவுக்கும்,பின்னர் அறிவிலிருந்து நடைமுறைக்கும் சொல்லும் போக்கு திரும்பத் திரும்பப் பல தடவை நிகழ்ந்த பின்னர் மாத்திரம் ஒரு சரியான அறிவுக்கு வரக்கூடிய நிலை அடிக்கடி ஏற்படுகின்றது.இத்தகையது தான் அறிவு பற்றிய மார்க்சிய தத்துவம் அறிவு பற்றிய இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவம்.

Sunday, 9 October 2011

கழுதை தேய்ந்து……! (பொருளும்,சிந்தனையும்-2)

சென்றத் தொடரில் ஒரு பாட்டாளிவர்க்க அமைப்பின் செயல்பாடுகள், இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பதையும்,இயங்கியல் பொருள் முதல்வாதம் என்றால் என்ன என்பதை சுருக்கமாக எழுதியிருந்தோம்.இந்தத் தொடரில் தம்மை பாட்டாளிவர்க்க அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும்,மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும் கீழ்கண்ட விவகாரங்களில் இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் செயல்பட்டனவா என்பதை பற்றி இனி சுருக்கமாக பார்ப்போம்!

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவகாரத்தில் மக இக-வும் அதன் தோழமை அமைப்புகளும், எந்த விதமான ஒளிவும், மறைவும் இன்றி நேரடியாகவே அவற்றை நடமுறைப்படுத்தக் கோரி மாநிலமெங்கும் போராட்டங்களை, அதிலும் குறிப்பாக தமது 30 ஆண்டுகால வரலாற்றில் முதன் முறையாக, இந்த அமைப்புகளின் முதலாளித்துவ பிரிவான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மூலம் 48-மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.இதன் மூலம் இதுநாள் வரை தனியார்மயத்தை தாங்கள் எதிர்ப்பதாக கூறியது உண்மையல்ல என்பதை,தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை ஆதரித்ததின் மூலம் அறிவித்ததுடன்,தாங்கள் ஆளும்வர்க்கத்தின் ஒரு அங்கம்தான் என்பதையும் பறைசாற்றிக்கொண்டனர்.

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்திய போராட்டத்தை, இப்போதைய சமூக சூழலில் போராடுவதற்கு மக்கள் தயாரில்லை. தனியார் பள்ளிகளின் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையால் மக்கள் தனியார் பள்ளிகள் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.இந்தக் கட்டண நிர்ணயம் மக்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாக இருந்தாலும் வரம்பு மீறி கொள்ளையிட துடிக்கும் தனியார் பள்ளிகளின் பேராசைக்கு முற்று புள்ளி வைக்கும். ஆகவே இதை அடிப்படையாகக் கொண்டு போராடினால் இந்தப் போராட்டம் சட்டத்துக்கு புறம்பான போராட்டமாக அல்லாது சட்டத்திற்கு உட்பட்ட போராட்டமாக அமைந்து, இப்போராட்டங்களில் பெருமளவிலான  மக்களை பங்கேற்க வைக்க முடியும்.அதிலும் நடுத்தர பிரிவு மக்களை இந்த போராட்டத்தில் பங்கேற்கவைக்க அவர்கள் அச்சமடையாதிருக்கவே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதாக கூறிக்கொண்டனர்.

மேற்கண்ட கருத்துகள் அனைத்துமே இவர்களே தமக்கு ஏற்ப உருவாக்கிகொண்டவைகளே ஆகும்.இவர்களின் இந்த கருத்துகளுக்கு சமூக அடித்தளம் ஏதுமில்லை என்பதும் முற்றிலும் இவைகள் இவர்கள் உருவாக்கிகொண்ட கருத்தியல் கண்ணோட்டமே என்பதைத்தான் இப்போராட்டங்கள் நிரூபித்தன.

இவர்கள் நடத்திய உண்ணாவிரதங்களில் இவர்களைத்தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை.இந்த உண்ணாவிரத போராட்டங்கள் மூலம் இவர்கள் சாதித்தது தமது பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருப்பதற்கு பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெற்றுள்ள சலுகைதான்!
ஆகவே கல்வி கட்டண விவகாரத்தில் இவர்கள் கூறிய காரணங்கள் முற்றிலும் கருத்தியல் அடிப்படையிலானவையே!

சமச்சீர்கல்வி: ”சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்துவிடும்”, என்பது புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடாகும்.

“சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால் அது கல்வியில் கார்ப்பரேட் மயத்தை தடுத்துவிடும்”, என்பது புதியகலாச்சாரத்தின் நிலைப்பாடாகும்
”சமச்சீர்கல்வியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவது கருணாநீதி மீதான அவரின் காழ்ப்புணர்ச்சியே காரணம்”,என்பது வினவின் நிலைப்பாடாகும்.
இந்த ஒவ்வொரு நிலைப்பாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றி ஏற்கனவே எமது கட்டுரைகளில் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.ஆகவே அதைப்பற்றி இப்போது பரிசீலிக்கப்போவதில்லை.

சமச்சீர்கல்வி நடைமுறைக்குவந்தால், தனியார் பள்ளிகளிலும், அரசுப்பள்ளிகளிலும் ஒரே விதமான பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் பள்ளிகளுக்கு ஏன் அநியாயமாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று மக்கள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்ப்பார்கள் என்று தனது விரிவான கண்ணோட்டத்தையும் புஜ இதழ் எழுதியிருந்தது.

மேற்கண்ட விளக்கத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் தரமான பாடத்திட்டம் உள்ளது என்பதனாலேயே மக்கள் அதை நோக்கி செல்வதைப் போன்ற உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.

“தவறை எதிர்க்க துணியாத,நியாயத்திற்காக போராட விரும்பாத தன்னலம்,இந்த தன்னலமும் ஆங்கில வழி கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான மோகமும்தான் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு அடிப்படையாக இருக்கிறது”, என்று 2010-ஜீன் இதழில் புஜ எழுதியிருந்தது.

இவ்விரு நிலைப்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டையும் கூட ஏற்கனவே எழுதியுள்ளோம்.

ஆங்கில வழி கல்வி மீதான மக்களிம் மோகம் பற்றி 2010-ஜீன் புதிய ஜனநாயகம் இதழில்  மக்கள்மீது திணிக்கப்பட்ட, உண்மைக்கு புறம்பான கருத்துகளை அதே நேரத்தில் மக்கள் மனங்களில் எதார்த்தமாக இருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தது.மக்களிடம் உள்ள இந்த கருத்துக்கள் உண்மையல்ல.அதற்கான பொருளியல் அடிப்படை இல்லாவிட்டாலும் ஆளும்வர்க்கம் தனது கருத்தியல் கண்ணோட்டத்தை மக்கள் மனங்களில் திணித்துள்ளது.

ஆகவே இந்த திணிப்பு என்பது கருத்தியல் அடிப்படையிலானதேயாகும்.
ஆனால் 2011-ல் புதிய ஜனநாயகம் தனது சென்ற ஆண்டு நிலைப்பாட்டிற்கு எதிராக,முரணாக மக்களிடம் உள்ள ஆங்கில மோகம்,ஒரே விதமான கல்வி முறையின் மூலம் தகர்ந்துவிடும் என்கிறது.

இப்போது சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்து 2-மாதங்கள் ஆகிவிட்டன.ஆனால் புதிய ஜனநாயகத்தின் கருத்துப்படி ஒருவர் கூட தமது பிள்ளைகளை தனியார் ஆங்கில பள்ளிகளில் இருந்து, அரசுப்பள்ளிகளுக்கு மாற்றவில்லை.அதிலும் சமச்சீர் கல்விக்காக போராடிய இந்த அமைப்புகளின் உறுப்பினர்களே தமது பிள்ளைகளை தமிழ் வழியில் அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன் வரவில்லை.

சமச்சீர்கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டுவந்ததற்கான பொருளியல் காரணங்களை கூறாமல்,ஆளும்வர்க்கத்தின் ஒரு பகுதியாகமாறி ஆளும்வர்க்கங்களின் சார்பில் அவற்றின் கருத்தியல் கண்ணோட்டத்தையே , புதிய ஜனநாயகம் இதழ் வெளியிட்டது.

ஆனால் நாங்களோ சமச்சீர் கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டு வந்ததற்கான பொருளியல் அடிப்படையை பற்றி சமச்சீர்கல்வி:கார்ப்பரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பனக் கும்பலுக்கு விழுந்த அடி! என்ற கட்டுரையின் மூலம் சமச்சீர்கல்வி கொண்டு வந்த ஆளும்வர்க்கத்தின் பொருளியல் நோக்கத்தை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் தெளிவாக வரையறுத்து கூறினோம்.

இதே போன்றுதான் சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்தால் அது கல்வியில் கார்ப்பரேட் மயத்தை தடுத்துவிடும் என்று உண்மைக்கு புறம்பான நிலைப்பாட்டை புதிய கலாச்சாரம் வெளியிட்டது.இந்திய முதலாளிகள் சங்கம் பல்கலை கழக மட்டத்தில்தான் கார்ப்பரேட் மயத்தை கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.ஆனால் சமச்சீர்கல்வியோ 10-ம் வகுப்புவரைதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால் புதிய கலாச்சாரமோ மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு மக்களை பீதியூட்டி தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள முயற்சித்தது.ஆக புதிய கலாச்சாரத்தின் கருத்தும் உண்மைக்கு புறம்பான கருத்தியல் கண்ணோட்டமேயாகும்.

அடுத்து ராஜிவ் கொலையில் சென்னை உயர்நீதி மன்றம் மூவர் தூக்கை இடைநிறுத்தி அளித்த இடைக்காலத் தடையை “மூவர் தூக்கு: மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி”,என்று வினவு எழுதியது. அதோடு இந்த இடைக்காலத் தடை, நிரந்தர தீர்ப்பாக மூவரின் விடுதலையாக மாறவேண்டுமானால் தொடர்ந்து போர்க்குணமான போராட்டங்களை நடத்த வேண்டும் என்று இயங்கியலுக்கு புறம்பான கருத்தியல் அடிப்படையிலான கண்ணோட்டத்தை வெளியிட்டது.

இந்த இடைக்கால தீர்ப்பை வெற்றி என்று அறிவித்துவிட்ட பின்னர் அடுத்து இறுதி தீர்ப்பு என்னவாகுமோ,நம்முடைய போராட்டங்கள் இறுதி தீர்ப்புக்கு எதிராக போய்விடுமோ என்ற அச்சத்தையே, போராடியவர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தியுள்ளது.இதைத்தான் ஆளும்வர்க்கங்கள் இடைக்காலத்தீர்ப்பின் மூலம் சாதித்துள்ளன.

ஆனால் நாங்களோ மூவர்தூக்கை அடிப்படையாக வைத்து ஆளும்வர்க்கங்கள் சாதிக்க நினைக்கும் பொருளியல் நலன்களை பட்டியலிட்டு தெளிவுபடுத்தினோம்.இடைக்கால தீர்ப்பின் மூலம் நடப்பு போராட்டங்களை மட்டுமல்ல, இந்திய இலங்கை பொருளாதார ரீதியான  நிரந்தர ஒத்துழைப்பிற்கும் தமிழர்களிடமிருந்து எதிர்ப்புவராமல் பார்த்துக்கொள்வதும் ஆகும் என்பதை தெளிவாக வரையறுத்து கூறினோம்.

எனவே
1.தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணயம்.
2.சமச்சீர் கல்வி.
3.மூவர் துக்கு.
மேற்கண்ட மூன்று விவகாரங்களிலும் இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் சுவடுகூட இந்த அமைப்புகளின் இந்த நிலைப்பாடுகளில் வெளிப்படவில்லை.

இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு நேர்ரெதிராக கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தினுடையே இந்த அமைப்பினர் தமது நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர்.

மக இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நிலைப்பாடுகள் தத்துவார்த்த ரீதியாக கருத்துமுதல்வாத  முகாமை சேர்ந்தவை.இந்த அமைப்புகள் ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகளை போன்று பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போகட்டும்.நாம் வேண்டாம் என்று சொல்லவில்லை.ஆனால் இதை பாட்டாளிவர்க்கத்தின் பெயரில் செய்வதை முறியடிப்பதே எமது நோக்கமாகும்.

மா-லெ-மா பெயரில் ஆளும்வர்க்கத்தின்  நிலைப்பாடுகளை பாட்டாளிவர்க்கத்தின் நிலைப்பாடுகளாக சித்தரித்து சமூகத்தில் உள்ள முன்னணியாளர்களையும் ,மக்களையும் குழப்பும்,மயக்கும் இந்த அதிகாரவர்க்க கும்பலை முறியடித்து உண்மையான மா-லெ-மா  அமைப்பைக்கட்டி புரட்சியை முன்னெடுத்து செல்வதெ புரட்சியை நேசிக்கும் அனைவரின் கடமையும்,பணியுமாகும்!

தொடர்புடைய கட்டுரைகள்:



3.சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2







Friday, 7 October 2011

பொருளும்,சிந்தனையும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால்,ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்துகொண்டுள்ளது-தோழர் மாவோ.

இயற்கையில் உள்ள செல்வத்தை-சமூக செல்வத்தை மனிதர்கள் தங்களுக்கிடையில் எப்படி பகிர்ந்துகொள்கிறார்கள்,அவற்றின் மீதான அவர்களின் பங்கும் ,பங்களிப்பும் என்ன என்பதில் இருந்து மனித சமூகத்தில் நிலவும் மக்கள் தொகுதிகளே வர்க்கங்களாகும்.

சமூகத்தில், சமூக செல்வத்தில் மக்கள் தொகுதிகளுக்குள் நிலவும் பங்கும் பங்களிப்பும்தான் ஒருவர் எப்படி சிந்திவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.இதைத்தான் வாழ்நிலை என்கிறோம்.இங்கு வாழ்நிலை என்பது ஒரு மனிதன் சமூக உற்பத்தில் ஆற்றும் பங்கும், பங்களிப்புமேயாகும்,அதவது வர்க்கமேயாகும்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, இந்திய பூர்வகுடி மக்களோடு போரிட்டு வெற்றி,பூர்வகுடி மக்களுடனான இனக்கலப்பு ஆகியவற்றுக்கு  பின்னர்தான் நால்வருண கோட்பாட்டு அடிப்படையில் பார்ப்பன மதத்தை தோற்றுவித்தனர்.இந்த பார்ப்பனிய மதம் தோன்றுவதற்கு முன்னர் இந்தியாவில் மதங்கள் இருந்ததற்கான சான்றுகள் ஏதும் வரலாற்றில் இல்லை.இந்த நாள் வருண கோட்பாடு மக்களை கூறுபோட்டததுடன்.அவர்களை இழிவுபடுத்தக்கூடியதாகவும் இருந்தது.இதனால் இதை எதிர்த்த தத்துவமார்க்கங்கள் உண்டாயின. அவை வட இந்தியாவில் சாங்கியம்,சமணம்,பெளத்தம் ஆகியவைகள் தோன்றின.இந்த தத்துவப் பிரிவுகள் பார்ப்பனிய நால்வருண கோட்பாடுகளை மறுத்ததுடன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் அடிப்படையாக கொண்டிருந்தன.இவைகள் மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட பார்ப்பனியத்தை முறியடிக்கும் அளவுக்கு வலிமை பெற்றவைகளாக இல்லாதிருந்தன.

இத்தத்துவ மரபுகள் கருத்து அடிப்படையிலான ஆரம்பகால பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்டிருந்தன.இவற்றை விஞ்ஞான பூர்வமாக நிருபிக்க தேவையான அடிப்படைகளை கொண்டிருக்கவில்லை.இந்த பலவீனத்தின் காரணமாக பார்ப்பனிய கருத்து முதல்வாத தத்துவத்தை தமது ஆரம்ப நிலை பொருள்முதல்வாத தத்துவத்தால் வெற்றி கொள்ள இயலவில்லை.இதன் காரணமாக இத்தத்துவ புரிவுகள் நாளடைவில் கரைந்து ,தேய்ந்து போயின அல்லது அவைகள் காணடிக்கப்பட்டன.

இந்த நிலைமை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்குமே பொருந்தும் ஒரு பொது பண்பாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துவந்த இந்த தத்துவ போராட்டம் 18-ம் நூற்றாண்டில்தான் ஒரு முடிவுக்கு வந்தது.இந்நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட விஞ்ஞான கண்டுபிடுப்புகள் அதிலும் உடல் இயங்கியல் துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் கருத்து முதல்வாத தத்துவதற்கு ஆப்பறைந்தது.கருத்து முதல்வாத,பொருள்முதல்வாத தத்துவங்களுக்கிடையிலான மிக நீண்ட நெடிய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

தோழர் காரல் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் மாபெரும் பாய்ச்சலை இத்துறையில் கொண்டு வந்தது.

இந்த புரட்சிகரமான மாற்றம் விஞ்ஞான துறையில் மட்டுமல்ல,சமூகத்துறையில் வரலாற்றியல் பொருள்முதல்வாதமாகவும் தோழர் காரல் மார்க்சால் வளர்த்தெடுக்கப்பட்டது.

கருத்து முதல்வாதத்தை, இயங்கியல் பொருள்முதல்வாதம் தத்துவார்த்த ரீதியாக வெற்றி கொண்டு இருந்தாலும், விஞ்ஞான துறையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை முதலாளித்துவ வர்க்கம் தமது வர்க்க நலன்களுக்கு ஏற்ப மடைமாற்றிக்கொண்டன.இதனால் சமூகம் விஞ்ஞான பூர்வமான கண்டுபிடிப்புகள் மூலம் முழுமையாக மாற்றமடைவதை தடுத்து தனது வர்க்க நலன்களுக்கு ஏற்ப மட்டுமே  வரம்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தியது.இதன் மூலம் நவீன விஞ்ஞானத்தின் பலன்களை சமூகம் முழுமைக்கும் கிடைக்காமல்.சமூகத்தின் ஒரு சிறு கும்பல் மட்டுமே அனுபவிக்கும் ஒன்றாக வெட்டிச்சுருக்கியது.

இயங்கியல் பொருள்முதல்வாதம் போன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தனக்குத்தானே இயங்கி  மாற்றத்தை உருவாக்கிக் கொள்ள கூடிய தத்துவமல்ல.இதை மனிதர்கள்தான் தமது நடைமுறை மூலம் மாற்றத்துக்கு உட்படுத்த வேண்டும்.


ஆகவே உலகில் சமூக மாற்றத்தை விரும்பும் அனைவரும் தமக்கான வழிகாட்டி தத்துவமாக மார்க்சியத்தையே கைக்கொள்ள முடியும்.மார்க்சியத்தை தமது வழிகாட்டி தத்துவமாக ஏற்கும் அனைவரும் தமது ஒவ்வொரு நிகழ்வையும் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே பார்க்கும் கண்ணோட்டத்தை பெற்றிருக்க வேண்டும்,இப்படி பார்க்கும்  ஆற்றல் கொண்ட அமைப்புகள்தான் பாட்டாளிவர்க்க அமைப்புகளாக இருக்கமுடியும்.பொருளியல் காரணங்களை அடிப்படையாக கொள்ளாமல் கருத்தியலை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும், செயல்படும் அமைப்புகள் பாட்டாளிவர்க்க அமைப்புகள் அல்ல.அவைகள் சொத்துடைமை வர்க்கத்தின்-ஆளும்வர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் அமைப்புகளேயாகும்.

இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் மாற்றம் ஒன்றையே மாறாத உண்மையாக கொண்ட தத்துவமாகும்.இந்த தத்துவமே சமூக மாற்றத்தையும் தவிர்க்கவியலாத ஒன்றாகவே போதிக்கிறது.ஆகவே இந்த தத்துவம் அதாவது இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் எப்போதுமே பாட்டாளிவர்க்கத்தின் தத்துவமாக உள்ளது.


ஆனால் கருத்துமுதல்வாத தத்துவமோ இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கு நேர்மாறாக மாற்றத்தை நிராகரிக்கிறது.இதன் காரணமாக இந்த கருத்து முதல்வாத தத்துவம் சொத்துடைமை வர்க்கத்தின் – ஆளும்வர்க்கத்தின் தத்துவமாக உள்ளது.எனவேதான் ஒரு அமைப்பை பற்றி நாம் கணிக்கும் போதும்,அந்த அமைப்பை ஆய்வுக்கு உட்படுத்தும் போதும் அந்த அமைப்பின் எழுத்துபூர்வமான கொள்கை கோட்பாடுகளை மட்டுமே வைத்துகொண்டு அந்த அமைப்பின் வர்க்கத்தன்மையை தீர்மானிக்க கூடாது.அமைப்புகளின் சமூக பிரச்சனைகளின் மீதான கண்ணோட்டம்,கணிப்பு,நடைமுறை ஆகியவற்றை மிகவும் நுட்பமாக கூர்ந்து கவனித்து ஆய்வுக்குட்படுத்தித்தான் முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு பொருள் போலியானதா உன்மையானதா என்பதை அதன் வடிவத்தை வைத்து முடிவுக்கு வரக்கூடாது.அதன் உள்ளடக்கத்தை சோதிப்பதன் மூலம்தான் அது போலியானதா,உண்மையானதா என்பதை உறுதிசெய்ய முடியும்.

இதை போன்றுதான் தம்மை பாட்டாளிவர்க்க அமைப்புகள் என்று பலரும் கூறிக்கொண்டாலும் இந்த கூற்றை வைத்துக்கொண்டோ அல்லது அவர்களின் கவர்ச்சிகரமான வர்த்தைகளை வைத்துக்கொண்டோ நாம் முடிவுக்கு வரக்கூடாது.மா-லெ-மா என்கிற இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவ ஒளியில் பரிசீலனைக்கும்,ஆய்வுக்கும் உட்படுத்திதான் முடிவுக்கு வரவேண்டும்.

மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் தனியார் ஆங்கில பள்ளிக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர் கல்வி,ராஜீவ் கொலையில் தூக்குதண்டனை பெற்ற மூவர் விவகாரம் ஆகியவற்றில் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்தவாத புதைகுழியில் மூழ்கிவிட்டன என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் எமது தொடர் கட்டுரைகளின் மூலம் நிருபித்தோம்.இவர்கள் சீர்த்திருத்தவாத புதைகுழியில் சிக்கி முழ்கி போனதற்கு அந்த அமைப்புகளின் தலைமையை ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவான அதிகாரவர்க்கம் கைப்பற்றிவிட்டது என்பதையும் வரையறுத்து கூறினோம்.எமது இந்த நிரூபணங்களுக்கு பதில் கூறமுடியாத இந்த அமைப்புகளின் ஆதரவாளர்களில் சிலர் இதை உட்கட்சி போராட்டத்தின் மூலம் தீர்த்திருக்கலாம் என கற்பனையாக பேசுகின்றனர்.நாங்கள் இந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டது இந்த அமைப்புகளின் வெகுசன அரங்குகளின் ஆதரவாளர்கள் என்பதைதான்.அமைப்பிற்குள் எந்த வகையிலும் உள்ளே வராத நாங்கள் உட்கட்சி போராட்டத்தின் மூலம் இப்பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும் என்பதை இப்படி முன்மொழிபவர்கள்தான் கூற வேண்டும்.

ஆனால் உட்கட்சி போராட்டத்தை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தியும் எவ்வித தீர்வையும் முன்னேற்றத்தையும் நோக்கி எமது போராட்டம் நகரவில்லை என்றும் இதனால் நாங்கள் உட்கட்சி போராட்டம் என்ற எல்லையை தாண்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்றும் தோழர் மூடக்கிழவன் எமக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை படித்திருப்பீர்கள்.ஒரு பாட்டாளிவர்க்க அமைப்பில்தான் உட்கட்சி போராட்டம் என்ற வடிவம் ஆக்கப்பூர்வமான விளைவுகளையும்,தீர்வுகளையும் தரமுடியும்.ஆனால் பட்டாளிவர்க்க அமைப்பு என்று வார்த்தைகளில் மட்டும் கூறிக்கொள்ளும் அமைப்புகளிடம் இருந்து இப்படிப் பட்ட ஆக்கபூர்வமான விளைவுகள் ஏதும் ஏற்படாது என்பதைத்தான் தோழர் மூடக்கிழவனின் கடிதம் எமக்கு உணர்த்துகிறது.


இனி தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம்,சமச்சீர்கல்வி,மூவர் துக்கு ஆகிய விவகாரங்களில் மக இக சார்ந்த அமைப்புகளின் நிலைப்பாடுகளை இயங்கியல் பொருள்முதவாத கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வோம்.

                                தொடரும்……