விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பிற்போக்கு. Show all posts
Showing posts with label பிற்போக்கு. Show all posts

Thursday, 3 January 2013

பாலியல் வக்கிரம் : முற்போக்குகளும், பிற்போக்குகளும் ஓரணியில்......!

புதுதில்லி மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு இறந்துபோனார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பாகிஸ்தான் உடனான எல்லை பிரச்சனை மற்றும் அந்நாட்டுடனான, கிரிக்கெட் விளையாட்டு ஆகியவற்றில்தான் நாடே ஒன்றுபட்டு நிற்கும்! அந்த வரிசையில் இப்போது மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்கார விவகாரமும் சேர்ந்துள்ளது.




பாரதிய ஜனதா கட்சி முதல் கம்யூனிச கட்சிகள் வரை  பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று ஒருமித்து குரல் கொடுக்கிறார்கள். நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஊடகங்களும் அன்றாடம் இதைப்பற்றிய செய்தியையே, மிக முக்கியமான ஒன்றாக கருதி வெளியிடுகின்றன. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் இதை நோக்கியே திருப்பியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில்தான் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மேலும்  அதிகரித்துவிட்டன என்றும் செய்திகளை  பரப்புகின்றனர்.
வேறு எப்போதும்  இல்லாத அளவுக்கு தற்போது அன்றாடம் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் போலீசால் பதிவு செய்யப்படுகிறது. இது பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

ஆனால் ஆட்சியாளர்களும், ஊடகங்களும் நன்கு திட்டமிட்டே பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், நாட்டில் மக்களிடையே ஏற்பட்டுள்ள கருத்தோட்டங்களுக்கு நேர் எதிராக, தமது வக்கிரச் செயலை தீவரப்படுத்தியுள்ளதைப் போன்ற நிலையை  ஏற்படுத்தி வருகின்றனர்.  உண்மையில் பாலியல் குற்றச் செயல்கள் இப்போது உள்ள நிலையில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறையவேச் செய்யும். இது நாள் வரை நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் போலீசின் முந்தைய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மிகச் சிறிய அளவு மாற்றத்தின் விளைவுதான், தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டதை போன்ற தோற்றமாகும்.கடுமையான சட்டங்கள் தேவை என்ற கோரிக்கைக்கு வலுசேர்க்கவே இப்படிச்செய்யப்படுகிறது.

எந்த ஊடகங்கள் பாலியல் வக்கிரங்களே இப்போது நாட்டு மக்கள் விவாதிப்பதற்கான முக்கிய பொருளாக ஆக்கியுள்ளனவோ, அதே ஊடகங்கள்தான் பாலியல் வக்கிரங்கள் அதிகரிப்பதற்கான கூறுகளை சமூகத்தில் பரப்புகின்றன.  இத்திருப்பணிக்கு இவர்கள் சூட்டிக்கொள்ளும் பெயர் தொழில் தர்மம்.

தமது தொழில் தர்மத்தின்படி யாரிடமிருந்து தமது கல்லாவை நிரப்பிக்கொண்டு, இச்சேவையை செய்கிறார்களோ, அவர்களை மறந்தும் கூட இவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு நேர்மாறாக சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று முழங்குகிறார்கள்.

இதைப் போன்ற சூழல்கள் ஏற்படும் போதெல்லாம், இவர்கள் மறவாமல் செய்யும் ஒரு வேலை  இதுவாகத்தான் இருக்கிறது.
நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாதது தான் இப்படிப்பட்ட 
குற்றங்கள் பெருகுவதற்கு காரணங்களா?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு என்றே பெண்கள் வன்கொடுமைச்சட்டம் ஏற்கனவே உள்ளதே அது என்னவாயிற்று?
இந்தச் சட்டத்தை எத்துனைபேர் மீது இதுவரை பயன்படுத்தி, தண்டனைப் பெற்றுத் தந்துள்ளார்கள்?

பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முற்பட்டால்,  முதலில் இதை போலீஸ் துறையின் மீதுதான் பயன்படுத்த வேண்டும்! நாட்டில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்னணி பாத்திரம் வகிப்பவர்கள் போலீசார்தான். இந்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்களும் இவர்கள்தான்.

இப்படிப்பட்ட போலீஸ் இச்சட்டத்தை பயன்படுத்துமா? இது மட்டுமல்ல இப்படிப்பட்ட சட்டங்களை பயன்படுத்துவதில் இவர்களுக்கு வலுவான நிர்ப்பந்தங்களும் உள்ளது. இதை ஏற்படுத்துபவர்கள் ஆட்சியாளர்கள்.
ஆட்சியின் உறுதித்தன்மைக்கும், நற்பெயருக்கும் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டியது ஆட்சியாளர்களுக்கு அவசியமான தேவையாகும்.
இதன் காரணமாக குற்றங்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டும்படி இவர்கள் போலீஸ் துறைக்கு உத்தரவிடுகின்றனர். இதன் மூலம் போலீஸ் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகிய இருவரின் சிந்தனையும், செயல்பாடும் ஒன்று கலந்து விடுகின்றன. தமக்கு வழங்கப்படும்  இலக்குக்கு மேல் போலிசு வழக்குகளை பதிவு செய்வதில்லை. அவைகள் வேறு பிரிவுகளில் சாதாரண வழக்குகளாகவோ அல்லது சட்டத்திற்கு வெளியில் சமரசப்படுத்தவோப்படுகின்றன.

எந்த அளவிற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படுகிறதோ, அந்த அளவிற்கு அதை கொண்டு வருபவர்களின், நடைமுறைப்படுத்துபவர்களின் பழிவாங்கும் மற்றும் பேரம் பேசும் ஆற்றலும் அதிகரிக்கிறது.

போலீசுக்கும்,  இவர்களின் கூட்டாளிகளுக்கும்,எஜமானர்களுக்கும் ஆகாதவர்களை பழிவாங்குவதற்கும், மிரட்டுவதற்கும் தேவையான கருவியாகத்தான்  இப்படிப்பட்ட சட்டங்கள் உருமாற்றப்படுகின்றன.
எப்படிப்பட்ட கடுமையான  சட்டங்களை உருவாக்கினாலும் அவற்றை,  அவைகளை நடைமுறைப்படுத்தும்  அமைப்புகளே தோல்வி அடைய செய்து விடுகின்றன.

ஒரு வேளை இப்படிப்பட்ட சட்டங்களை சரியான வகையில் நடைமுறைப்படுத்தினாலும் குற்றங்களை முற்றாக தடுத்து விடவும் முடியாது. இதற்கு மாறாக குற்றங்களின் வடிவங்கள் மட்டுமே மாறிப்போகும்.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இவைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என கோருபவர்கள் இவ்விரு பிரிவினரின் சொல்லும், செயலும் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை நமது இந்தியச் சமூகம் ஜனநாயக சமூகம் இல்லை என்பதைத்தான். 

எனவே மொத்த சமூகத்தின் சிந்தனையும் ஜனநாயக பூர்வமாக உயர்த்துவதற்கு தேவையான செயல்பாடுகளே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்களை மட்டுமல்ல, இதைப்போன்ற அனைத்து குற்றச்செயல்களையும் தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும்.