விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label அணுமின்நிலையம். Show all posts
Showing posts with label அணுமின்நிலையம். Show all posts

Friday, 28 September 2012

மின்சாரம் சமூகத்தரத்திற்கான ஆதாரம்!


கூடங்குளம் போராட்டம் எப்போதெல்லாம் தீவிரம் அடைகிறதோ அப்போதெல்லாம், தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. உண்மையில் இப்போது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம்  வழங்கப்படுகிறது.
      
ஒரு நாளைக்கு ஏறத்தாழ இருபது மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டால் மொத்தத் தமிழகமும் செயலிழந்து போய் கிடக்கிறது. குறைந்தது குடிநீர் தேவையைக் கூட தற்போது வழங்கப்படும் மின்சாரத்தால் ஈடுசெய்ய இயலவில்லை.


      
தமிழகத்தின் கொங்குமண்டலத்தில் இயங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இப்போதைய மின் வெட்டால் தமது நூற்பு ஆலைகள் முற்றாக செயலிழந்துவிட்டது. ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு டீசல் விலை உயர்வு அமைந்து விட்டது என்று குமுறுகிறார்கள்.
     
 ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட விவசாயம் இந்த மின்வெட்ட்டால், மேலும் அழிந்துவிடப்போவதில்லை என்பதால் விவசாயிகள் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
      
 மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டாலும் ஒப்பாரி. புலம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போராட்டங்களைத்தவிர, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை காணவேண்டிய நிர்பந்தத்தை , ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அடிப்படையை கொண்ட போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்று கூட நடைபெறவில்லை.
     
 ஈழத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காரணமாக மின்சாரம் அம்மக்களுக்கு எட்டாக்கனியாகிப் போனதை நாம் அறிவோம். இன்னமும் கூட அங்கு மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
      
ஆனால் தமிழகத்திலோ ஈழத்தைப் போன்று போர் எதுவும் நடக்காமலேயே, மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக்கப்படுட்டு விட்டது!
     
  தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறை 6500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறைவாரியம் அறிவித்துள்ளது.
     
 கூடங்குளம் அணு உலை முழுமையாக இயங்க ஆரம்பித்தாலே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகும் என்கிறார்கள். அதிலும்  உலக அளவில் அணு உலை மின் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவில் 30 % -  40 % மட்டுமே ஆகும். அப்படியானால் கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கினாலும் கூட 400 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பரிசோதனை மட்டுமே நடைபெறப்போகிறது.
      
இதுதான் நிலைமையாக இருக்கும்போது கூடங்குளம்  செயல்பட ஆரம்பித்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்துவிடும் என்று பச்சையாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் கூச்சமும் இன்றி வெளிப்படையாக புளுகுகிறார்கள். அதிகார பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
      
இப்படிச் செய்வதன் மூலம் கூடங்குளம் மக்களுக்கு எதிராக தமிழக மக்களை  திசை திருப்ப பார்க்கிறார்கள். இவர்கள் தமது முயற்சியில் ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு நிலவுகிறது.
      
தற்போதைய மின்வெட்டைப்பற்றி மத்திய ஆட்சியாளர்கள் வாயே திறப்பதில்லை. மின்சாரம் மாநில அரசின்  பட்டியலில் உள்ளதால் அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வில்லை என்று மட்டுமே பெரும்பாலோர் கருதுகின்றனர். மின்சாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் என்றாலும், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிடமுடியுமா?
      
மின்பற்றாக் குறையால் ஒரு மாநிலம் செயலிழந்து  கிடக்கும்போது , அம்மாநில மக்களின் நலனில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்றால், இந்தியா என்ற கூட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட மாநிலம் உணர்வுபூர்வமாக இருக்க முடியுமா?
     
 மக்கள் நலன் என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கோ, மாநில ஆட்சியாளர்களுக்கோ எப்போதுமே  இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எனவே அந்த நிலையிலிருந்து இப்பிரச்சனையை நாம் பார்த்தால்  து நமது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
      
இவர்களுக்கு வேறொரு கோணத்தில் இந்த மின்பற்றாக்குறை அத்தியாவசியமானது என்பதால் அதன் மீது ஆட்சியாளர்களுக்கு  அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்.
      
அந்த  வகையிலும் எவ்வித வெளிப்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. இதைப்பார்க்கும் போது அவர்களுக்கு அக்கரையுள்ள குறிப்பிட்ட அந்தத் துறைக்கும், இந்த மின்பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
      
ஆட்சியாளர்களின் அக்கறையுள்ள அந்த துறை அந்நிய  முதலீட்டு துறையே ஆகும். தமிழகத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  தற்போதைய மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக்கணமே மத்திய ஆட்சியாளர்கள் அலறியிருப்பார்கள்.
      
ஆனால் அவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களும் இதுபற்றி  மூச்சுவிடவில்லை. இதிலிருந்தே பன்னாட்டு  நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
      
ஆனால் மின்பற்றாக் குறைபற்றி பேசுகிற ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் உட்பட யாருமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரத்தை பற்றி பேசுவதில்லை. இதிலிருந்தே ஆட்சியாளர்கள் மட்டுமல்ல . தங்க்ளை சமூக அக்றை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் அனைவருமே மக்களின் கவனத்தை உண்மைக்கு புறம்பான வழியிலேயே திசை திருப்புகின்றனர்.
     
 தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரத்தை தடுக்கப்போவதாக் கூறி பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத குழுக்கள் வாய்த்தவறி கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை தடுக்கப்போவதாக கூறுவதில்லை,
      
இனவாத குழுக்கள் மட்டுமல்ல தங்களை சர்வதேசவாதிகள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள் என்று  கூறிக்கொள்வோரும் கூட இதுபற்றி மக்களிடையே பேசுவதில்லை.
      
இப்படி நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், மக்களின் உயிராதாரமான பிரச்சனையில் உண்மைக்கு புறம்பாக நடந்து கொண்டு, மக்களுக்கு துரோகமிழைக்க முடிகிறது என்றால், இவைகளை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு உள்ளது என்பதின் வெளிப்பாடே ஆகும்.
     
 சமூகத்தின் இந்த உண்மையான நிலைக்கு ஏற்பத்தான் எல்லா அமைப்புகளும் நடந்து கொள்கின்றன. இந்த அடித்தளத்தில் இருந்துதான் அனைத்து அமைப்புகளும் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன.
      
ஆட்சியாளர்கள் தம்மை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும் தமது வாழ்வாதாரத்தை அழித்தாலும், அதற்கெதிராக போராடி அதை முறியடிப்பதற்கு மாறாக,அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்வது என்பதே இந்திய சமூகத்தின் பாரம்பரிய மரபாகும். இதுவே இன்றுவரையிலான  சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது  தற்போதைய மின்பற்றாக்குறையையும், அதை சமூகம்  எதிர் கொள்ளும் விதத்திலும் இயலாமையை மட்டுமல்ல, அது தனது தரத்தையும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
     
 எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற இந்த சிந்தனா  முறையின் தவிர்க்க வியலாத  விளைபொருள்தான் பிழைப்புவாதமாகும்.
     
 மொத்த சமூகத்தின் வாழ்வியலே பிழைப்புவாத அடித்தளத்தை கொண்டிருப்பதால் தான், இந்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அமைப்பும் பிழைப்பு வாத அமைப்புகளாகவே உருவெடுக்கினறன. சமூகத்தன்மையின் காரணமாக  பிழைப்புவாதம் முரணான, தவறான ஒன்றாக பார்க்கப்படுவதில்லை.
      
சமூகத்தின் இந்த அடித்தளத்தைப் பற்றிய வரையறை, கண்ணோட்டமில்லாத  அமைப்புகள் எதுவனாலும், அவைகள் எவ்வளவு தான் உணர்வுபூர்வமாக, தியாக மனப்பான்மை உடையவைகளாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே தங்களையே  அறியாமல், உணரமுடியாமல் பிழைப்பு வாதத்தையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
      
தம்மிடையே உள்ள இந்த தன்மையை உணராதவர்கள், குறிப்பிட்ட  காலத்திற்கு பின்னர் சமூகத்தின் மீது எழும் விரக்தி மனப்பாண்மை காரணமாக மிக எளிமையாக, வெளிப்படையான பிழைப்பு வாதிகளாக மாறிக் கொள்கிறார்கள்.
      
எனவே இந்திய சமூகத்தின் இந்த யதார்த்தமான நிலையை, சமூக அடித்தளத்தை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே சமூக மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை புரிந்து கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள் அனைவரும் பிழைப்புவாதிகளாக மாறுவது தவிர்க்க வியலாத நிகழ்வாகும்.
      
பிறக்கும் போது தெரியாவிட்டாலும் மூக்கு வெளுத்ததும் தெரிந்துவிடும் அது கழுதையா, குதிரையா என்பது!

Tuesday, 27 September 2011

மின் உற்பத்தி:அணு உலைகள் வேண்டாம்! மாற்று இருக்கிறது!

கூடங்குளம்:ஆறப்போடுஅணைந்துவிடும்…! கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? ஆகிய இரு தலைப்புகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.இப்போராட்டம் அவ்வட்டார மக்களின் போராட்டமாகவும்,ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை வேடிக்கை பார்ப்பது,பரபரப்பான செய்தி அல்லது நாட்டின் தேவைக்கு அணுமின்சாரத்தை விட்டால் வேறு என்ன வழியிருக்கிறது, என்கிற அடிப்படையில் அணுமின்சார உற்பத்தியை ஆதரிக்கும் மெத்தப்படித்த மேதாவிகளிடம் கருத்து நிலவுகிறது.

மின்சாரம் இன்றி இனி நம்மால் வாழமுடியுமா? என்கிற அளவுக்கு நமது வாழ்நிலை மாறிவிட்டுள்ளது.மீண்டும் பழைய காலத்திற்கே திரும்பவும் முடியாது.ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் முக்கிய தாதுப் பொருளான நிலக்கரியின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.நீர் மின்சாரம் மழைக்காலத்தில் மட்டுமே தமிழகத்தை பொருத்தவரை பலன் தரக்கூடியதாக உள்ளது.காற்றாலை மூலமான மின்சாரம் மிகவும் குறைந்த அளவிற்கே கிடைக்ககூடிய வளமாகவும் உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் அணுமின்நிலையங்கள் மூலம் தான் நமது நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறமுடியும் என்பதுதான் ஆட்சியாளர்கள் மற்றும் இதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பிகளின் மூலம் அனுப்பும் போது வீணாவது,தரமற்ற மின் வினியோக எந்திரங்களால் வீணாவது,மின் திருட்டு,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவது ஆகியவற்றின் மூலமும் தமிழக மின்வாரியம் பல்லாயிரம் கோடி இழப்பில் இயங்கிவருகிறது.

ரஷ்யாவின் செர்னேபில்.ஜப்பானின் புகிஷிமா அணு உலைகளின் விபத்துக்குப் பின்னர் உலகம் முழுக்கவே அணுமின்நிலையங்களை முற்றாக மூடுகிற திட்டத்தை பிரான்ஸ் உட்பட பல நாடுகள் வெளியிட்டுவருகின்றன.அதோடு மாற்று மின்உற்பத்திக்கான ஆய்வுகளை தொடங்கிவிட்டுள்ளன.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகளில் ஆக்கபூர்வமாக செயல் பட்டு வருகின்றன.ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ நமது அணு உலைகள் அனைத்தும்  மிகவும் பாதுகாப்பானவை என மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.

யுரேனியம் அணு தொழில்நுட்பத்தை விட,தோரியத்தை அடிப்படையாக கொண்ட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை, தமது ஆண்டை அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து கைவிட்டுவிட்டு அமெரிக்கவின் மிகவும் பின் தங்கிய,அரதப்பழசான யுரேனிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு 123 என்ற ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது மன்மோகன்சிங் தலைமையிளான கும்பல்.உலக தோரிய இருப்பில் நமது நாட்டில்தான் 70 சதவிதம் தோரியம் உள்ளது என்பதை நாம் சிறிது நினைத்து பார்த்தாலே நமது ஆட்சியாளர்களின் தேசத்துரோகம் பளிச்சென நமக்கு புரிந்துவிடும்.யுரேனியமோ,தோரியமோ இவை இரண்டுமே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவைதான். அப்படியானால் மின் தேவைக்கு மாற்று ஏதுமில்லையா? இருக்கிறது! ஆனால் அவற்றை செயல் படுத்தும் ஆர்வமோ,ஆற்றலோ நமது தேசத்துரோக ஆட்சியாளர்களுக்கு சிறிதுமில்லை.

தற்போது ஏனோ,தானோ என்று செய்யப்படும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்,கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தற்போது பெய்யும் மழைநீரில் 90 விழுக்காட்டுக்கும் மேல் கடலில்தான் கலக்கிறது.இந்த நீர் அனைத்தையும் சேமித்து, அதன் மூலம் சிறு,சிறு நீர் மின்நிலையங்கள் மூலமும் நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் தயாரிக்க முடியும்.
மழைநீரை சேமிப்பதன்  மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு,பாசனத்திற்காக நிலத்தடி நீரை விவசாயிகள் சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துவிடவும் முடியும்.இதோடு ஏராளமான மின்சாரத்தையும் சேமிக்க முடியும் .


முதலாளித்துவ உற்பத்தி என்பதே நுகர்பொருள் உற்பத்திதான். இதை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள் உற்பத்தியாக மாற்றுவதன் மூலமும்,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவதை தடை செய்வதன் மூலமும் மிகப்பெரிய அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின் உற்பத்தியை புதிய,ஆபத்தற்ற தொழில்நுட்பத்தை கொண்டு செய்தல்.மின்சாரத்தை வினியோகிக்கும் போது ஏற்படும் மின் இழப்பை சரி செய்தல்,விவசாயத்திற்கு இயற்கையில் இருந்து பாசன வசதியை ஏற்படுத்துதல்,பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவச,சலுகை விலையில் மின்சாரம் தருவதை நிறுத்துதல்,நுகர்பொருள் உற்பத்திற்கு மாற்றாக அத்தியாவசிய தேவைக்கான உற்பத்தியாக தொழில்துறை உற்பத்தியை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் மின்பற்றாகுறை என்ற சொல்லையே நாட்டில் இருந்து தூக்கியெறிய முடியும்.நமக்கு தேவையான மின்சாரம் அனைத்தையும் இயற்கை வளத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாமல்,இயற்கை வளங்களில் இருந்தே மின்சாரம் தயாரித்து,மின் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடையவும் முடியும்.

(ஜப்பான் - ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி படுகொலை செய்த படங்கள்.முதல் படம் குண்டு வீச்சுக்கு முன்பு எடுக்கப்பட்டது.இரண்டாவது படம் குண்டு வீச்சுக்கு பின்பு எடுக்கப்பட்டது.)

ஆனால், இவைகளை பற்றியெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாளர்களான நமது ஆட்சியாளர்களிடம் நாம் ஒருபோதும் எதிர்பாக்க முடியாது.பெரும்பான்மை உழைக்கும்  மக்களுக்கான புதிய சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இவைகளை சாதிக்க முடியும். அதற்கு சமூக மாற்றத்திற்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவோம்! நம்மையும் நமது எதிர்கால தலைமுறையையும் மொத்தத்தில் மனித குலத்தையே பாதுகாப்போம்!     

தொடர்புடைய கட்டுரைகள்:

1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!


2. கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? 

Friday, 23 September 2011

கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!

கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டத்துக்கு எதிராக அவ்வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 12.09.2011 அன்று முதல் 21.09.2011 வரை தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.இந்த போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்களும் ஆதரவு தந்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட போலிஸ் தடைவிதிக்கும் அளவுக்கு போராட்டம் பரவ ஆரப்பித்தது.

தமிழக முதல்வர் ஜெயா கூடங்குளம் அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது. ஆகவே மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஏற்கவில்லை.முதல் நாள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறிய ஜெயா மறுநாளே பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரட்டக்குழுவினருக்கு அழைப்புவிடுத்து பேசினார்.அணுமின்நிலைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு போராட்ட குழுவினர் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அமைச்சரவைக்கூட்டத்தை 21.09.2011 அன்று கூட்டிய ஜெயா போராட்டக்குழு கோரியபடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.இதனால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர் மக்கள்.



ஜெயா அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறுதான் கோரியுள்ளார்.மேற்குவங்கம்,ஹரிபூர் அணுமின்நிலையத்தை அம்மாநில முதல்வர் நிராகரித்ததை போன்று நிராகரிக்கவில்லை.அப்படி நிராகரிப்பதற்கான தார்மீக பலம் ஜெயாவிற்கோ முன்னால் முதல்வர் கருணாநீதிக்கோ சிறிதுமில்லை.ஏனேன்றால் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர்கள் இவர்கள் இருவருமே. மக்கள் ஏற்கும் வரை அணுமின்நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரியதன் மூலம் இனி மத்திய,மாநில அரசுகள் இத்திட்டத்தை ஏற்குமாறு மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுவர்.போராட்டக்குழு மற்றும் மக்களிடையே துரோகிகளை உருவாக்கி போராட்டத்தை பிளவுபடுத்துவதற்கான வேலைகளையும் செய்வார்கள். ஏதோ ஒரு வகையில் ஒருமுறை மக்களை சமாதானப் படுத்திவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்வதை தடுத்துவிட முடியும்,என்று தான் மத்திய,மாநில அரசுகள் திட்டமிட்டிருக்கும். போராட்டக்குழுவில் உள்ளவர்கள் ”எங்களது போராட்டம் மத்திய அரசுக்கு எதிரானது தானே தவிர, மாநில அரசுக்கு எதிரானது அல்ல”, என்று கூறியிருப்பதிலிருந்தே மாநில அரசின் மீது தங்களுக்குள்ள அச்சத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.மாநில முதல்வரின் கருத்தோ அணுமின்நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தான்.எனவே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதை மாநில அரசு விரும்பாது. அதற்கு மாறாக அவ்வட்டார மக்களை அணுமின்நிலைய பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறுஇடத்தில் குடியமர்த்துவது போன்ற செயல்களில் தான் மத்திய அரசின் உதவியோடு செய்ய முற்படும்.இதையும் மீறி போராட்டம் நடத்தும் அளவிற்கு போராட்டக்குழுவிற்கு ஆற்றல் இல்லை என்பதைத்தான் அவர்களின் அண்மைய அணுகுமுறைகள் வெளிப்படுத்துகிறது.

ஜப்பானின் புகுஷிமா அணுமின்நிலையம் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்து அணுகதிர்வீச்சினால் அந்நாட்டு மக்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.உலகம் முழுவதுமே அணுமின்நிலையங்கள் பாதுகப்பற்றது என்பது மட்டுமல்ல,அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி அளவும் மிகவும் குறைவானதே!

உலகம் முழுவதிலும் உள்ள அணுமின்நிலையங்கள் மின்சார உற்பத்திக்கென்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அவைகள் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு வேண்டிய மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.கல்பாக்கம் அணுமின்நிலையத்திலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதே முழுமையான உண்மையல்ல. அணு மின்நிலையங்களால்  சாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்,உலகம் முழுவதிலுமே அதனால் ஏற்படும் பாதகமே கூடுதலாகும். இதனால்தான் உலகம்முழுவதிலுமே அணுமின்நிலையங்களுக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

கூடங்குளத்தில் மின் உற்பத்திக்குதான் அணு உலை கட்டப்படுவதாக கூறப்பட்டாலும்,இங்கு ரஷ்யாவின் அணுக்கழிவுகளை கொண்டுவந்து சேமித்து வைப்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமுள்ளது. இந்த அணுமின்நிலையத்தால் ஏற்பட போகும் பாதிப்புகள் பற்றி மிகக்குறைந்த அளவிற்கே மக்களிடம் பரப்புரை செய்யப்பட்டுள்ளது.ஆனால் பாதிப்புகளோ மிகக்கடுமையானதாகவும், தலைமுறை,தலைமுறையாக நீடிக்ககூடியதாகவும் இருக்கும்.அணுமின்நிலையங்களால் நிலம்,காற்று,நீர் ஆகியவை வெப்பமடைகிறது.அணுக்கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அற்றுப்போகும்.இவைகளை பற்றிய முழு பரிமாணங்களை கூட ஜப்பான் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்கள் உணர்ந்து கொண்டுள்ள அளவிற்கு தமிழக மக்கள் உணரவில்லை என்பதே உண்மையாகும்.இதனால் தான் இப்போராட்டம் ஒருவட்டார பகுதியின் போராட்டமாக வெளிப்படுகிறது.தமிழகத்தின் ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை கூடங்குளம் சம்பந்தமான நிகழ்வுகள் ஒரு பரபரப்பான செய்தி மட்டுமேயாகும்.

ஆட்சியாளர்களை பொருத்தவரை ரூபாய் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பரில் செயல்பட தயாராக உள்ள ஒரு திட்டத்தை இடைநிறுத்த முடியாது என்பதாகத்தான் இருக்கும்.தமிழக அமைச்சரவை ”மக்கள் ஏற்கும் வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்தி வைக்குமாறு” தீர்மானம் நிறைவேற்றி  இருந்தாலும்,உண்மையில் இது இந்த விடையத்திற்காகத்தான் இயற்றாப்பட்டதாக நாம் முற்றிலும் நம்பிவிட முடியாது.மத்திய அரசை மிரட்டி பல்வேறு காரியங்களை சாதித்து கொள்வதற்கான ஒரு தந்திரமாகவும் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கலாம்,என்பதையும் நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது.ஏனேன்றால் இந்த அணுமின்நிலைய விவகாரத்தில் ஜெயா அரசுக்கு மத்திய அரசுக்கு மாற்றான கருத்தேதும் இல்லை,அதே பொன்று மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபரும் ஜெயா இல்லை என்பதையும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்
ஈழ இறுதிக்கட்ட போரின் போது இந்திய நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு போரை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு இலங்கை அரசை இந்தியா கேட்டுக்கொண்டது,அதே போன்று  தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள,உள்ளாட்சித்தேர்தலை கணக்கில் கொண்டுதான் ஜெயா அரசு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பார் என்பதற்கான சாத்திய கூறுகளே அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈழமக்கள் மீதான தாக்குதலை மிகவும் மூர்க்கமாக நடத்தியதை போன்றே, கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீதும் ஜெயா அரசு மூர்க்கமான தாக்குதலை தொடுப்பதற்கான வாய்ப்புகளை நாம் நிராகரித்துவிட முடியாது.ஆனால் இதை எதிர்கொள்ளும் ஆற்றல் இப்போதையை போராட்டக்குழுவிற்கு இல்லை என்பதே உண்மையாகும்.இதை எதிர்கொள்வதற்குரிய ஆற்றல் புரட்சிகர,ஜனநாயக சக்திகளின் தலைமைக்கு மட்டுமே உண்டு.இப்படி போராட்டம் நடத்தப் பட்டால் மட்டுமே கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றியை நோக்கி சொல்லும்!

தொடர்புடைய பதிவுகள்: