பறையர்
எனும் சாதியை சேர்ந்த இளவரசன், வன்னிய சாதியை சேர்ந்த திவ்யா என்றப் பெண்ணை கடந்த
ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த அவமானத்தை!
தாளமுடியாத திவ்யாவின் தந்தை நாகராஜன் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தற்கொலை
செய்து கொண்டார்.
இதற்கு
பழிவாங்கும் வகையில் அடுத்த சிலமணி நேரங்களில் எப்போதும் தயார்நிலையில்
கட்டப்பட்ட்டுள்ள வன்னியப்படையினர்! நாயக்கன் கொட்டாய் உட்பட மூன்று பறையர்
சேரிகளை முழு முற்றாக உயிர்சேதம் இன்றி தீக்கிரையாக்கினர். இது தமிழகம் எங்கும்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமக தனது இழந்த செல்வாக்கை மீட்க
இவ்விவகாரத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி கொண்டது.

ஆனாலும்
இளவரசன்-திவ்யா தம்பதியினரை பிரிக்க
முடியவில்லை. இதனால் சட்டபூர்வ தந்திரத்தை கையாண்டு திவ்யாவை வெளியே கொண்டுவர
திவ்யா தாயாரின் மூலமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த தந்திரம் உளவியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவமுடையது என்ற
அடிப்டையில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வைத்தனர்.
அவர்கள்
எதிர்பார்த்தது போன்றே தாயும், மகளும் சந்தித்ததும், உரையாடியதும் திவ்யாவிடம்
படிப்படியான உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. இறுதியாக தனது கணவருடன் தான்
சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று திவ்யா அறிவித்தார்.
இதைத்
தொடர்ந்து கடந்த ஜீலை 4-ம் தேதி இளவரசனின் இறந்த உடல் தர்மபுரி ரயில் பாதை அருகே
கிடந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீஸ் இளவரசனின் பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல்
ரகசியமாக உடலை ஜீலை 5-ம் தேதி அதிகாலையில் பிரேத பரிசோதனை செய்தது. போலீசின் இந்த
நடவடிக்கை இளவரசனின் சாவுபற்றிய சந்தேகத்தை அவரின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும்
தீவிரப்படுத்தியது. இதனால் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு இளவரசனின்
நண்பர் ஏ.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை ஆய்வு
செய்ய ஏழு மருத்துவர்கள் அடங்கிய குழுவை
உயர்நீதிமன்றம் அமைத்தது.
இந்தக்
குழுவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் இருவர், சென்னை
மருத்துவக்கல்லூரி மருத்துவ நிபுணர் ஒருவர், சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி
மருத்துவ நிபுணர் ஒருவர் மற்றும் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கைள்
மூவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் ஜீலை - 9 அன்று உயர்நீதிமன்றத்தில்
இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்தபோது எடுத்த வீடியோ பதிவை பார்த்தனர்.
இதையடுத்து இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஏழுபேரும் தனித்தனியாக தமது
கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை உயர்நீதி மன்றத்திற்கு வழங்கினர். இப்படி
வழங்கப்பட்ட அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருந்தன.
இதனால்
மருத்துவத்துறையின் தடயவியல் துறை மருத்துவர்கள் இருவரை கொண்ட குழுவை
உயர்நீதிமன்றம் அமைத்தது. இதில்
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியின் தடயவியல்
துறைத்தலைவர் டாக்டர் தங்கராஜ், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல்
துறை மருத்துவர் டாக்டர் பி.சம்பத்குமார் ஆகியோரை உயர்நீதிமன்றம் நியமித்தது.
இவர்கள் மறு பிரேத பரிசோதனை அவசியமா என்பதை இளவரசனின் சடலத்தை நேரில் ஆய்வு செய்து
ஜீலை 10 – அன்று ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதன்படி
மருத்துவ தடயவியல் நிபுணர்கள் இருவரும ஜீலை 11-ம் தேதி தர்மபுரிக்கு நேரில்
சென்று, இளவரசனின் உடலை பார்த்துவிட்டு, மறுநாள் ஜீலை 12ம் தேதி தமது அறிக்கைகளை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்விரு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று
மாறுபட்ட கருத்துகளையே உள்ளடக்கியிருந்தது. டாக்டர் தங்கராஜ் மறு பிரேத பரிசோதனை
தேவை இல்லை என்றும் டாக்டர் சம்பத்குமார்
தேவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதன்
காரணமாக வேறுவழியே இல்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பேர்
ஜீலை 13-ம் தேதி இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஜீலை- 12
அன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழகம்
என்ற இந்த மாநிலத்தில் எட்டுகோடிக்கும் அதிகமான மக்கள் வாழுகின்றனர். இங்கே
ஏராளமான உலகப்புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களும், மருத்துவ மனைகளும் உள்ளன. ஆனால்
இறந்து போன ஒருவரின் உடலை ஆய்வு செய்து, சாவு எப்படி நிகழ்ந்தது என்பதை
கண்டுபிடிக்க இங்குள்ள எந்த மருத்துவருக்கும் தகுதியில்லை! என்று டெல்லி மருத்துவர்களுக்கு
அந்தப் பொறுப்பை வழங்கிய உயர்நீதிமன்றம்!
எவ்வளவு
சிறந்த, உயர்ந்த மருத்துவ நிபுணர்களாக இருந்தாலும் மருத்துவரீதியாக அவர்களின்
திறன் சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றாலும், சமூக ரீதியாக அவர்கள் ஒவ்வொருவரும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு
சாதியில் பிறந்தவர்கள். சாதியாக வாழ்பவர்கள். சாதிய சமூக கட்டுமானங்களுக்கு
உட்பட்டவர்கள். எனவே இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் சமூக ரீதியாக சந்தேகத்திற்கு
அப்பாற்பட்டவர்கள் இல்லை.
டெல்லி
எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் இது பொருந்தும். ஆனாலும் கூட இளவரசனின் பெற்றோரும்,
அவரைச் சார்ந்தோரும் டெல்லி மருத்துவர் குழுவின் ஆய்வுக்கு ஒப்புக்கொண்டது என்பது
அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் அல்ல.
வேறு
என்ன செய்ய முடியும்! பிரச்சனை ஏதோ ஒரு முடிவுக்கு வந்துதானே தீரவேண்டும். அப்படியானால் இதுவும்
ஒருவகையான சமரசம்தான். இந்நிலை இப்பிரச்சனைக்கு மட்டுமல்ல எல்லா பிரச்சனைகளுக்கும்
பொது அம்சமாகும்.
இந்நிலை
இந்திய சமூக கட்டமைப்பின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும்.இளவரசனின் சாவில் அவரின்
பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகம் பாதிக்கப்பட்டவர்களின் பலவீனமான உணர்வு என்று கூறி
யாரும் தப்பித்துக் கொள்ளமுடியாது. இப்படி
சந்தேகிப்பதற்கான அனைத்து சமூக அடிப்படையும் இந்நாட்டில் நிலவுவதை வெளிநாட்டினர்
வேண்டுமானால் அறியாதவர்களாக இருக்கலாம். இந்நாட்டில் பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள், வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய
வம்சாவளியினருக்கும் கூட இது மிகத்தெளிவாகவே தெரியும்.
ஏனென்றால்
சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளும், வேறுபாடுகளுமே இந்துக்களின் சமூக
வாழ்க்கையாகும்.
சட்டங்கள்
வேண்டுமானால் சமத்துவம், ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் அவைகளுக்கும்
தெரியும் இவைகள் வெறும் ஏட்டுச்சுரக்காய்கள் என்பது.
”உடற்கூறு சோதனை தவறாக நடந்தது என்று நாங்கள்
சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும் நியாயமற்ற ஒரு கோரிக்கையை மனுதாரர்
வலியுறுத்தவில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது ஒடுக்கப்பட்ட
மற்றும் விளிம்புநிலை மக்களில் ஒருவருடைய நீதிக்கான அழுகுரல் என்பதால், நீதி காப்பாற்றப்பட
வேண்டும் என்பதற்காக, இந்த மனுகுறித்து ஒரு வரையறை வரைக்கும் நீதிமன்றம்
பரிசீலிக்க வேண்டியுள்ளது”.
இது
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாகும். நீதிபதிகளின் இந்தக் கருத்து
இந்தியச் சமூகத்தின் அவலத்தை படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளது.
அப்படியானால்
ஜனநாயக உணர்வுடைய தனிமனிதர்கள் கூட இங்கே எவருமில்லையா? என்றக் கேள்வி எழுப்பப்படலாம்.
அதற்கான அடிப்படையே போதுமான அளவிற்கு இல்லபாதபோதும் – வளராத போதும், இல்லவே இல்லை
என்று முற்றாக மறுதலித்து விடமுடியாதுதான். இப்படிப்பட்டவர்கள் கடலில் கரைத்த
பெருங்காயமாக உள்ளனர் என்பதுதான் கண்கூடான உண்மையாகும்.
இந்தச் சமூகத்திற்கு ஏனிந்த அவநிலை?
இன்று
இந்தியா என்றுள்ள இந்த நாடு ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களால் வலுக்கட்டாயமாக ஒட்டபட்டது
என்பதை நாம் அறிவோம். இப்படி அவர்கள் தமது ஆயுத பலத்தின் மூலம் ஒருங்கிணைத்த
இந்தியா அவர்கள் வெளியேறிய பின்பு இரண்டாக உடைக்கப்பட்டது.
பார்ப்பனியத்தை
– சாதியத்தை – வாழ்க்கை முறையாகக் கொண்ட பெரும்பான்மை மக்கள் கூட்டத்திற்கு மாறாக
வாழ்ந்தவர்களை, இந்துத்துவத்திற்கு மாற்றானவர்களை இஸ்லாத்தை கடைபிடித்தவர்களை பாகிஸ்தான் என்று
வெட்டிவிடப்பட்டனர். சாதியத்தை கடைபிடித்தவர்கள் பெரும்பான்மையாக கொண்டவர்களை
கொண்டநாடு இந்துக்களின் இந்தியாவாக பிரிக்கப்பட்டது.
இன்றைய
இந்திய மக்களைப் போன்றே ஆரம்ப காலங்களில் பார்ப்பனிய- சாதியத்தை வாழ்க்கையாக
கொண்டிருந்தவர்களும், பழங்குடி மக்களிடையே நிலவிய கொடிய பகைமையை முடிவுக்கு
கொண்டுவந்து அவர்களிடையே ஒற்றுமையை சாதிக்க உருவாக்கப்பட்ட ஏகக்கடவுள் தத்துவமான
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களும், இதன் மூலம் தமது பார்ப்பனிய பந்தத்தை அறுத்துக்
கொண்டவர்களுமான முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தப்பகுதியும் பார்ப்பனிய –
சாதிய- பண்பாட்டுக்கு எதிரானவர்களுமானவர்களை பாகிஸ்தான் என்று வெட்டிவிடப்பட்டது.
பார்ப்பனிய
– சாதியத்தை தமது வாழ்க்கை முறையாக கொண்ட மக்களைக் கொண்டப்பகுதிகளின் இந்தியாவாக
ஆனது.
இந்தியா
என்றழைக்கப்படும் இந்த நாடு பல்வேறு மொழிகள் பேசும் மக்களைக்கொண்ட மாநிலங்களை
உள்ளடக்கியது. பேசுகிற மொழி, உணவு, பழக்கவழக்கங்கள் பண்பாடு, நாகரீகம் அனைத்திலும்
ஒவ்வொரு மாநில மக்களுக்கிடையிலும் எண்ணிலடங்கா வேறுபாடுகள் நிலவினாலும், இவைகள்
அனைத்திற்குமான பொதுவான ஆன்மாவாக விளங்குவது பார்ப்பனியமே - சாதியமேயாகும். இது
ஒன்றுதான் வேற்றுமையில், ஒற்றுமை காணவைக்கும் பொதுப்பண்பாகும்.
இந்து
என்ற மதம் உண்மையில் சாதிகளின் கூட்டணியே ஆகும். இதுதான் இந்தியா என்ற
கூட்டணிக்கும் அடித்தளமும், ஆதாரமுமாகும்.
எனவே
இந்தியா என்ற இந்தக்கட்டமைப்பு இருப்பதற்கும், நீடிப்பதற்கும் சாதியே பொது
அடிப்படையாக திகழ்கிறது.
சாதிகள்
என்ற ஒன்று இல்லாதிருந்தால் இந்தியா என்ற கட்டமைப்பை வெள்ளையர்களால் முழுமையாக
அல்லது இன்றைய வடிவில் உருவாக்கி இருக்க முடியாது.
எது
இங்கே, ஒருமொழி பேசும் மாநில அளவிலான பரப்பில் கூட உறுதியான கட்டமைப்புடைய
நாடு-அரசு உருவாவதை தடுத்ததோ அதுவேதான் இந்தியா என்ற நாட்டை உருவாக்க
ஆங்கிலேயர்களுக்கு உதவியது. இது ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களுக்கு மட்டுமல்ல
இந்நிலபரப்பிற்குள் படையெடுத்து வந்து கொள்ளையிட்டவர்கள், ஆக்கிரமித்து ஆண்டவர்கள்
அனைவருக்கும் உதவியது. அதுதான் பார்ப்பனியம் – சாதியம் ஆகும்.
சாதிகள்
இல்லாவிட்டால் இந்தியா இல்லை. இந்தியா இருக்க வேண்டுமானால் சாதிகள் உயிர் வாழ்ந்து
கொண்டே இருக்க வேண்டும்!
இதைத்தான்
இந்நிலப்பரப்பை ஆண்ட அனைவரும் அன்றுமுதல் இன்றுவரை செய்துவருகின்றனர். இந்தியா
என்ற இந்நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஆண்ட அனைத்து அந்நியர்களும் பார்ப்பனியத்தை தமது
அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான மிக்ச்சிறந்த அடித்தளமாக கண்டுகொண்டு அதனை பாதுகாத்தனர்.
பார்ப்பனியம்-சாதியம் உருவானதிலிருந்து இன்று வரை சாதிதான் இந்தியாவின் ஆன்மாவாக விளங்குறது என்றாலும்,
இது இல்லாத ஒருக்காலமும் இந்நிலப்பரப்பில் இருக்கவே செய்தது.
பார்ப்பனியத்தின்
மூலவர்களான ஆரியர்கள் இத்துணைக்கண்டத்திற்குள் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததை வரலாறு காட்டுகிறது. அன்று இங்கே வாழ்ந்த மக்கள்
பெரும்பான்மையினர் சிறு,சிறு குழுக்களாக பூர்வகுடி இனக்குழுக்களாக வாழ்ந்து
வந்தனர். இம்மக்கள் குழுக்கள் முற்றிலும் தமது வாழ்வுக்கான ஆதாரமான உணவை காடுகளில்
சேகரித்துக் கொண்டிருந்தனர். இதனாலேயே இக்குழுக்கள் தமக்கிடையே பகைமையை
அடிப்படையாகக் கொண்டிருந்தன.இந்தக் குழுக்களுக்கு பெண்களே தலைமைகளாக இருந்தனர்.
ஆனால்
இந்நிலப்பரப்பிற்கு வெளியில் இருந்து வந்தவர்களோ தமது வாழ்க்கைக்கான ஆதாரமாக
கால்நடைகளையே நம்பியிருந்தனர். அதாவது ஆண்களே இவர்களின் தலைவர்களாக செயல்பட்டனர்.
இவர்களின் இந்த சமூக அமைப்பு இங்கு வாழ்ந்த பூர்வகுடி மக்களை விட முன்னேறிய சமூக
கட்டமைப்பை உடையதாக இருந்தது.
இதனால்
தாம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவில் சிறு, சிறு குழுக்களாகவும்,
தமக்கிடையே விரோத மனப்பான்மை உடையனவாகவும் இருந்தது ஆகிய கூறுகள் பூர்வகுடிகளில்
தோல்வியையும், வந்தேறிகளின் வெற்றியையும் தவிர்க்கவியலாதவைகளாக ஆக்கின.
தமது
வெற்றிக்கு அடிப்படையாக இருந்த பூர்வகுடி இனக்குழு மக்களுக்கிடையிலான பகையும்,
விரோதத்தையும் ஒவ்வொரு சிறு வேறுபாட்டு கூறுகளையும் நீடித்து, நிலைநிறுத்துவதுலேயே
தமது வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதன்
அடிப்படையிலேயே ஒவ்வொரு பூர்வகுடி இனக்குழு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதியாக அவற்றின்
சில தனித்தன்மைகளுக்கு ஏற்ப நிலைநிறுத்தப்பட்டன.
இப்படி
நாங்கள் கூறுவது பலருக்கும் எம்மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தலாம்.
இப்படிபட்டவர்கள் அவசரப்பட வேண்டாம்.
சாதி தோன்றுவதற்கான
மூலத்தை நாங்கள் குறிப்பிட்டோமே தவிர அது மட்டுமே, அது முழுமை அடைவதற்கு முழு
முற்றான காரணம் என்றுக் கூறவில்லை. இவைகள் விரிவாக்கப்பட்டதற்கும், வளர்வதற்கும்
இன்னும் பல்வேறு அம்சங்களும் உள்ளன என்பதையும் நாங்கள் மறுக்க வில்லை.
எது
எப்படியாயினும் பூர்வகுடி இனக்குழு கூறுதான் சாதிக்கான மூலம் என்பதுதான் நமது
கவனத்திற்குரியது. இந்த இனக்குழு பண்புதான் இன்றுவரை சாதிகள் ஒன்றின் மீது
காட்டும் பகைமை உணர்வுக்கான அடிப்படையாகும்.
அதே
நேரத்தில் தமிழகத்தின் தன்மை இதிலிருந்து சற்று வேறுபட்டது. அதாவது இன்றைய வட
இந்தியப் பகுதிகளுக்கு ஆரியர்கள் வந்து பார்ப்பனர்களாக உருமாறிய பின்பு சுமார்
1500 ஆண்டுகளுக்கு பின்னர்தான் தமிழகத்திற்கு வந்தனர். இக்காலகட்டம் தமிழ்ச்சமூகம்
தந்தைவழிச் சமூகமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக மாறும் இறுதிக்
கட்டத்தில் இருந்தது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும்
பூர்வகுடி இனக்குழு சமூகத்தின் பண்புகள் முழுமுற்றாக மறைந்துவிடவில்லை என்பது
பார்ப்பனிய – சாதிய – கட்டமைவை புகுத்துவதற்கு முழுமுற்றான தடையாகவும் இல்லை.
தமிழகத்தின்
இந்த தண்மைதான் வட இந்தியாவிலிருந்து தமிழகத்தை வேறுபடுத்துகிறது. இது தான்
களப்பிரர் கால பார்ப்பனிய எதிர்ப்பாகவும், பின் நாளில் பெரியார் தலைமையிலான
திராவிட இயக்க சிந்தனை போக்காகவும் வெளிப்பட்டது.
அதே
நேரத்தில் தமது ஆட்சியை பாதுகாக்க களப்பிரர்கள் பின் நாளில் பார்ப்பனியத்தை
தழுவிக் கொண்டனர். இதுவே இவர்களின் வீழ்ச்சிக்கும் அடிப்படையானது.
களப்பிரர்
கால பிற்பகுதியில் தொடங்கி, பின்னர் ஆண்ட அனைத்து ஆட்சிகளிலும்
பார்ப்பனியம்-சாதியம் இங்கே நிலைநாட்டப்பட்டது. சாதியம் சமூக வாழ்வாக
மாற்றப்பட்டு விட்டாலும் பார்ப்பன தலைமைக்கு எதிரான தன்மை இங்கே நீடித்து
நிலைத்துவிட்டதன் வெளிப்பாடுதான் திராவிட இயக்கங்கள்.
எது
எப்படியாயினும் தமிழகத்திற்கென்று சிலத் தனித்தன்மையான கூறுகள் இருந்தாலும்
இதுவும் பூர்வகுடி இனக்குழு அடிப்படையிலான கூறுகளை முற்றாக இழந்துவிடவில்லை.
இன்றைய உலகில்
உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பூர்வகுடி இனக்குழுக்களாக இருந்தவர்கள்
தான். இவற்றுக்கிடையிலான போராட்டங்களும், போர்களும் ஒன்று மற்றொன்றை வெற்றி
கொள்வது, அழிப்பது என்பதாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் இவைகள் இணைப்பாகவும் மாறி
பெரும் மக்கள் சமூகங்களாக உருவெடுத்தன.
இப்படி
உருவான மக்கள் சமூகம் தமது வாழ்க்கைப் போராட்டத்தின் காரணமாக வாழ்வின்
பெரும்பான்மை அம்சங்களில் – அதாவது உணவு, உடை, மொழிபண்பாடு, கலாச்சாரம்
ஆகியவற்றில் – நெருங்கிய பிணைப்பை உடையவர்களாக உருவெடுத்தனர்.
எந்த
அளவுக்கு வாழ்க்கை தேவைகளுக்கான உற்பத்தியில் இவர்கள் முன்னேற்றம் கண்டனரோ, அந்த
அளவிற்கு அவர்களுக்கிடையே சமூக உறவுகளும் நெருக்கமடைவது தவிர்க்க வியாலாததாகியது.
இப்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பங்கிடுவதில் இம்மக்களிடையே வேறுபாடுகளும்,
ஏற்றத்தாழ்வுகளும் தவிர்க்க வியலாதவனவையாக விளங்கினாலும், அது முந்தைய பூர்வகுடி
இனக்குகு சமூகத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, முன்னேறிய சமூக வடிவத்தை
கொண்டதாக அமைந்தது.
இப்படி
உருவெடுத்த, வளர்ந்த மக்கள் சமூகங்களே இன்றைய உலகின் நாகரீக சமூகங்களாக, நாடுகளாக
உருவாகியுள்ளன.
இதற்கு
நேர்மாறான வரலாற்றை உடையது இந்திய சமூக வரலாறு.
பூர்வகுடி
இனக்குழுச் சமூகத்தில் இயல்பான வளர்ச்சி
நிகழ்வதற்கு முன்பாகவே அவைகள் தடுக்கப்பட்டுவிட்டதுடன் பூர்வகுடி இனக்குழு
கூறுகளுக்கு புதிய வடிவிலான சாதியக் கூறுகள் புகுத்தப்பட்டு அவைகள் நிலை
நிறுத்தப்பட்டன.
இப்படி
நிலைநிறுத்தப்பட்ட, இயல்பான சமூக வளர்ச்சி தடுக்கப்பட்ட – பூர்வகுடி இனக்குழு
இயல்புடன் கலக்கப்பட்ட பார்ப்பனிய –
சாதியகூறுகள்தான் இந்நாட்டு மக்களின் குறுகிய, பின்தங்கிய சிந்தனா முறைக்கும்,
செயல்பாட்டுக்குமான அடிப்படையாக ஆதாரமாக விளங்குகிறது.
இந்த
பூர்வகுடி இனக்குழு – காட்டுமிராண்டி – சமூகத்தின் இந்திய வடிவமாகிய சாதிகள்
நீடிக்கும் வரை, இந்நாட்டில் ஒன்றுபட்ட சமூக உணர்வு தோன்றுவது சாத்தியமில்லாத
ஒன்றாகவே நீடிக்கும்.
காட்டுமிராண்டி
இனக்குழு – பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இளவரசன்களின் செயல்கள் சகித்துக் கொள்ள
முடியாதவைகள். இந்தியாவின் உயிர்மூச்சு நீடிப்பதற்காக இளவரசன்கள் தமது இறுதிமூச்சை
இழந்துகொண்டேதான் இருப்பார்கள்........!
1.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1
2.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-2
3.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-3 (சங்ககாலம்)
4.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I
5.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II
6.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
7.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-4 (சங்ககாலம்- களப்பிரர்கள் காலம்)
8.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-5 (அண்ணாவின் பரிணாமம் ஜெயா))