விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label போலிகள். Show all posts
Showing posts with label போலிகள். Show all posts

Thursday, 1 July 2010

குட்டிய பாத்தா குதர, வளந்து முட்டிய பேத்தா கழுத!


வெள்ளிகிழமை (25.06.2010) இரவு மணி 10.30. இளம் பெண் ஒருவரை இருவர் அடித்து,உதைத்து தர,தரவென்று இழுத்துச்செல்கின்றனர்.அடிப்பவர்களைப் பாதுகாக்க காக்கிச்சட்டை அணிந்த அய்ந்து காவல் நாய்களும் உடன் சென்றன.அந்த அபலைப்பெண்ணின் அலறல் சத்தம் ஊரையே எழுப்பி விடுகிறது,நாங்களும் எழுந்து ஓடினோம்.மறித்தோம்! நீங்கள் யார்? எதற்காக இந்த பெண்ணை இழுத்து செல்லுகிறீர்கள்? என்று கேட்டோம்.
நாங்கள் போலீசு.....இந்தப் பெண்ணை ஒருவன் கடத்திவந்துவிட்டதாக,இந்த பெண்ணின் அப்பா புகார் கொடுத்துள்ளார் அதைப்பற்றி விசாரிக்கவே அழைத்துச் செல்கிறோம்”,என்றது போலிசு.
நீங்கள் போலிசாக இருக்கலாம். அதற்காக ஒரு பெண்ணை இரவு நேரத்தில் நீங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லமுடியாது. இது சட்டப்படி தவறான செயல் என்று நாங்கள் போலிசிடம் சுட்டிக்காட்டினோம்.பகல் நேரமாக இருந்தாலும் பெண் போலிசு இல்லாமல் எந்த ஒரு பெண்ணையும் நீங்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லமுடியாது. இதையும் மீறி நீங்கள் இந்தப் பெண்ணை இழுத்துச்செல்ல முற்பட்டால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தோம்.இதன் பிறகு இந்தப்பெண்ணை நாங்கள் இழுத்துச்செல்லவில்லை.அந்தப்பெண்ணின் உறவினர்கள் தான் இழுத்துச்செல்கின்றனர் என்று தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்திக்கொண்டது போலிசு.
உறவினர்களே ஆனாலும் சட்டப்படி வயதுவந்த ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லமுடியாது.இந்த சட்டவிரோத செயலை தடுக்க வேண்டிய போலிசு அதற்கு துணை போவது சட்டவிரோத செயலாகும்.அந்த பெண்ணை யாராவது கடத்தி வந்தார்களா என்று இப்பொழுதே நீங்கள் விசாரிக்க முடியும்.அதற்கு மாறாக யாரோ கடத்திவந்து விட்டதாக கூறும் நீங்கள் தான் இந்தபெண்ணை உண்மையாக கடத்த முயலுகிறீர்கள் என்று போலிசின் சமூகவிரோத செயலை நாங்கள் போட்டுடைத்தோம்
பின்னர் நாங்களே அந்தப்பெண்ணிடம் விசாரித்தோம்.அதற்கு அவர்என்னை யாரும் கடத்தி வரவில்லை.நான் எனது காதலனை மனப்பூர்வமாக விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்.எனது கணவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.நான் வன்னியச்சாதியை சேர்ந்தவள். எங்கள் காதலை எனது தந்தையும்,உறவினர்களும் ஏற்காமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்ததால் தான் நான் வீட்டை விட்டு வேளியே வந்து விட்டேன்.எனக்கு வயது 23,எனது கணவருக்கு வயது 26.எனது அப்பாவும் உறவினர்களும் சாதி வெறிப்பிடித்தவர்கள், இவர்களோடு நான் போகமாட்டேன்.இவர்களிடம் நீங்கள் எங்களை ஒப்படைத்தால் என்னையும்,எனது கணவரையும் இவர்கள் கொலை செய்து விடுவார்கள். ஆகவே எங்களை இவர்களிடம் ஒப்படைக்காதீர்கள் என்று ஊர் மக்களிடம் அந்த அபலைப்பெண் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில் எங்கள் வழக்கறிஞரும் அந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்தார்.
நாளைக் காலையில் இந்தப்பெண்ணை போலிசு நிலையத்தில் ஒப்படைப்பதாக உங்களில் யாராவது எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால்,இப்போது விட்டு செல்லுவதாக போலிசு ஆய்வாளர் எங்களிடம் கூறினார்.அப்போதைக்கு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆய்வாளர் கேட்டபடியே எழுதித்தந்தோம்.
போலிசு சென்றப் பின்னர் ஊர்மக்களும்,நாங்களும் தம்பதிகளை போலிசில் ஒப்படைப்பதில்லை என்று முடிவு செய்தோம்.அதன் படி இரவு நடந்த சம்பவத்தை உயர் போலிசு அதிகாரிகளுக்கு புகாராக அனுப்பிவிட்டு தம்பதிகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம்.தம்பதிகளை போலிசில் ஒப்படைப்பதில்லை என்ற எங்களின் முடிவை வழக்கறிஞர் மூலம் போலிசுக்கு தெரிவித்தோம். இதனால் ஆத்திரமடைந்த போலிசு எங்கள் மீதும் வழக்குப் போடுவதாக மிரட்டி வருகிறது.இந்த அக்கரமத்தை திருநாவலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு என்ற கழிசடை தான் தலைமையேற்று வழிநடத்துகிறது.ஆதிக்கசாதி வெறியர்களும்,போலிசும்,அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் ஆதிக்க சாதி வெறியோடு சுற்றி திரிவது அதிசயமான நிகழ்வல்ல. அப்படி இல்லாமல் இருந்தால் தான் அது அதிசயம்.ஆனால் முற்போக்கு,புரட்சி என்ற சொற்றொடர்களுக்குள் தமது சாதி வெறியை மூடிமறைத்துக்கொண்டு திரியும் சிலதுகளின் சாதி வெறியை அடையாளம் காண்பதில் தான் உண்மையாகவே சமூகமாற்றத்தை விரும்புகிறவர்களின் வெற்றி அடங்கியுள்ளது.இந்த நிகழ்வைப் பற்றி புரட்சியாளர்களின்(!) சார்பில் ஒரு புரட்சியாளர்(!) கூறியதை கீழே தொகுத்து தருகிறோம்
1.அந்த பையன் சரியில்லாத கேரக்டராமே, இப்படிப்பட்டவனுக்கா நீங்கள்
  உதவிசெய்கிறீகள்?
        2.இது உங்களுக்கு தேவையா?இதை உங்களால் சமாளிக்க முடியுமா?
3.அவர்களுக்கு உங்களால் எத்தனை நாளைக்கு பாதுகாப்பு தரமுடியும்?
4.இதனால் உங்களின் அமைப்பு பணிகள் பாதிக்காதா? உங்கள் அமைப்பு பணிகளை விட                                   
  இது அவ்வளவு முக்கியமானதா? இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம்?.
5.உங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு இவ்வளவு
  ஆபத்துகளையும்,பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நீங்கள் உதவிசெய்யவேண்டுமா?
இதைப் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை இவர்கள் எங்கள் முன் வைக்கிறார்கள்.இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என்று தான் எங்களுக்கு இவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.இதன் மூலம் தங்களது முற்போக்கு,புரட்சிகர முகமூடிகளை தாங்களே கிழித்தெரிந்துவிடுகிறோம் என்பதைப்பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.அந்த அளவிற்கு முற்போக்கு,புரட்சிகர சிந்தனைப்பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம் மிகவும் தரம்தாழ்ந்து கிடக்கிறது என்பதைத்தான் மேற்கண்ட வினாக்கள் நமக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட சாதிமறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை வாழவைப்பது மட்டுமே எங்களின் ஒரே கூறிக்கோளாக நாங்கள் வைத்திருக்கவில்லை.சாதி.தீண்டாமை மறுப்பை,எதிர்ப்பை எமது இலட்சியத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே நாங்கள் கருதுகிறோம்.இந்தியாவில் சமூகமாற்றத்தை விரும்புகிற,நிலவுகிற சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்க்கிற தனிநபர்களாயினும்,அமைப்புகளாயினும் அவர்கள் அனைவரும் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடாமல் சமூக மாற்றத்தை நோக்கிய பாதையில் எள் முனை அளவிற்கு கூட முன்னேறமுடியாது.சாதி,தீண்டாமை ஆகியவற்றில் வெற்றுப் பேச்சும்,நாடகமும்,முதலை கண்ணீரும் பார்ப்பனியத்தை வலுப்படுத்தவே உதவும் இது தெரிந்து தான் இந்த அரியப் பணியை இப்படிப்பட்ட முற்போக்குகளும்,புரட்சியாளர்களும்(!) செய்து வருகிறார்கள்.இதனால் தான் எங்களை போன்ற நடைமுறைவாதிகளை கண்டால் இவர்களுக்கு உடலெல்லாம் பற்றி எரிகிறது.
இந்தியாவில் எப்படிப்பட்ட பிற்போக்குத்தனமும்,மக்கள் விரோத கொள்கைகளும்,செயல்களும் பார்ப்பனிய உதவியில்லாமல் செயல்பட முடியாது.மேற்கண்ட எதனோடும் கூட்டு சேராமல் பார்ப்பனியம் உயிர்வாழவும் முடியாது.இதை ஏற்காதவர்கள் எவரும் தாங்கள் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளவும் முடியாது,அப்படி இவர்கள் கூறிக்கொண்டால் அது அப்பட்டமான பித்தலாட்டமே ஆகும்.இப்படிப்பட்ட கழிசடை முற்போக்குகளின் முகத்திரைகளை நாம் கிழித்தெரிந்து தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டாவிட்டால் நம்மால் நமது லட்சியத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது.இதில் ஏற்பட்ட,ஏற்படும் சறுக்கல்கள் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் முற்போக்கு,புரட்சிகர அமைப்புகளின் தோல்விகளுக்கு எது அடிப்படையாக இருந்ததோ அதுவே பார்ப்பனியத்தின் வெற்றிக்கான அடிப்படையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட நிகழ்வுகளில் எமது நடைமுறை செயல்கள் மற்றும் அதைப் பற்றிய கருத்துகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.இதைப்பற்றி தோழர்கள்,நண்பர்கள்,வாசகர்கள் தங்களது கருத்துகளையும்,எண்ணங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறும்,எங்களது பணிகளுக்கு ஆதரவு தருமாறும் தோழமையுடன் வேண்டுகிறோம்.