ஆரிய வருகையும்,போரும் ஆரிய வெற்றியும் விந்திய மலைக்கு வடக்குப்பகுதியில் நடந்தேறியது என்பதையும்,பார்ப்பனியம் ஆரியத்தின் மற்றும் பூர்வகுடி மக்களின் பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய புதிய வடிவம் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.இன்றைய வட இந்தியப்பகுதிகளில் ஆரியர்கள் வெற்றியாளர்கள் என்பதால் ஆரிய-பார்ப்பனிய பண்பாடு பூர்வகுடி மக்களுக்கு தேவையாக இருந்தாலும்,இல்லாவிட்டாலும்,விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவைகள் அவர்கள் மீது நிர்பந்தமாக திணிக்கப்பட்டது.
4.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
ஆனால் விந்திய மலைக்கு தெற்கில் பார்ப்பனர்கள் ஊடுருவல்வாதிகள் என்பதால் நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றையே தமது அணுகுமுறைகளாக கொண்டிருந்தார்கள் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.
வட இந்தியப்பகுதிகளில் ஆரிய வெற்றி,பூர்வகுடி மக்களுடான இனக்கலப்பு,ஆரிய மேலாண்மையின் கீழ் பூர்வக்குடி மக்களின் பண்பாட்டு கூறுகளில் தமது நலன்களையும் உள்ளடக்கிய பார்ப்பனிய பண்பாட்டு முறைகளை உருவாக்கி, அதைக் கொண்டு சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய பண்பாட்டு எதிர்ப்பாளர்களையும் முறியடித்து சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டிய செழுமையான அனுபவம் ஆகியவற்றை ஆரிய பார்ப்பனர்கள் பெற்றுக் கொண்ட பின்னர்தான் தென்னிந்தியப்பகுதிகளில் ஊடுருவினர்.
செழுமையான அனுபவங்களோடு ஊடுருவியதால் வட இந்திய நிலைமைகளோடு ஒப்பிடும்போது புதிய பகுதி முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் அதற்கேற்ப தமது அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வதில் பெரும் சிரமம் அவர்களுக்கு ஏதும் ஏற்படவில்லை.
பெரும்பான்மை மக்களிடையே பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் முதலில் ஆதரவை பெற முடியாவிட்டாலும் பார்ப்பனியம் ஆட்சியாளர்களுக்கு மிகச்சிறந்த அரசத் தந்திர முறையாக இருந்ததால் அவர்களிடையே செல்வாக்கு பெற்றது.
பார்ப்பனியம் ஆட்சியாளர்களிடையே செல்வாக்கு பெறுதல் என்ற நடைமுறை தென்னிந்தியப் பகுதிகள் முழுவதுமே ஏறத்தாழ ஒரே சீரான முறையில் நடந்தேறியதுஆனால் செல்வாக்கு பெறும் தன்மை மக்களிடையே ஒரே சீராக அமையவில்லை.இது ஏற்றத்தாழ்வான போக்கையே கொண்டிருந்தது.
இந்த ஏற்றத்தாழ்வு அந்தந்த பிரதேசங்கள் அல்லது வட்டாரங்களின் சமூக,பொருளாதார,நாகரீகம்,மொழிவளம் இவற்றின் தேவை ஆகியவற்றை பொருத்து அமைந்தது.மேற்கண்ட தேவையின் அடிப்படையில் பார்ப்பனிய நிலைநாட்டலும் வேறுபட்டு இருந்தது.
தென்னிந்திய பகுதிகள் முழுக்கவே திராவிட இனக்குடும்பத்தை சேர்ந்த மக்களே ஆவர். ஆனால் ஒரே இனக்குடும்பத்தை சேர்ந்தவர்களாயினும் வட்டார அளவில் சமூகம், பொருளாதாரம், நாகரீகம், மொழி ஆகிய துறைகளில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே நிலவியது. இந்த ஏற்றத்தாழ்வும் இதன் மேம்பாட்டிற்கான தேவை எந்த அளவிற்கு இருந்ததோ அந்த அளவிற்கு பார்ப்பனீயம் நிலைபெறும் தன்மையும் வேறுபட்டிருந்தது.
அதிலும் மொழி, சமூக, பொருளாதாரம், நாகரீகம் ஆகியவற்றின் செழுமையின் வெளிப்பாடு என்பதால் அதற்கேற்பவே மொழியின் வளர்ச்சி அமைந்திருந்தது. எனவே பார்ப்பனியம் முதலில் ஆட்சியாளர்களிடமும் இவர்களின் ஊடாக மொழியிலும் மேலாதிக்கம் பெறத்தொடங்கியது. இதன் அடிப்படையில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது தென்னிந்திய புதியநிலைமைகளுக்கு ஏற்ப புதிய வடிவிலான பார்ப்பனிய பண்பாடு படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்குப் பெறத்தொடங்கியது.
திராவிட மொழிக்குடும்பத்தின் பல்வேறு வட்டார வழக்குகளில் தமிழ் தவிர்த்த ஏனைய வழக்குகள்,அவற்றின் வளர்ச்சியின் போதாமை,தேவைக் காரணமாக பார்ப்பன,சமஸ்கிருதம் அவற்றில் ஊடுருவி ஆக்கிரமித்தது.இந்த ஊடுருவலுக்கு பின்னரே திராவிட மொழிக்குடும்ப வட்டார வழக்குகளில் இன்று நாம் அறியும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஆகியவை உருப்பெற்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன் இம்மொழிகள் பல்வேறு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன.
ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபட்ட நிலையுடன் தமிழ் விளங்கியது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னரே பிற திராவிட வட்டார வழக்குகள் ஒரு மொழியாக உருபெற்றதைப் போன்றல்லாமல், தமிழ் பார்ப்பன ஊடுருவலுக்கு வெகுகாலத்திற்கு முன்பே தனிச்சிறப்பான தன்னிறைவான வளர்ச்சியடைந்து செழுமைப்பெற்றிருந்தது.
நாம் ஏற்கனவே பார்த்தது போன்று மொழியின் உருவாக்கம் வளர்ச்சி என்பது சமூகம்,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.இதன் படி தமிழ் மொழியின் செழுமை இம்மொழி பேசப்பட்ட பகுதியின் சமூக,பொருளாதார நாகரீக வளர்ச்சியின் அடையாளமாகும்.
எனவே,இன்று தமிழகம் என்று அறியப்படும் பகுதியில் பார்ப்பனியமும்,சமஸ்கிருதமும் இவ்வாட்டாரப் பகுதிகளில் செழுமைப்படுத்த வேண்டிய தேவையின்மையால் இவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியவில்லை.அதிலும் தமிழில் அதியுயர்ந்த இலக்கண செழுமை காரணமாக பார்ப்பன சமஸ்கிருதம் எள் முனையளவுக்குக் கூட இதில் நுழைய முடியவில்லை.
ஆட்சியாளர்கள் மக்களை பிரித்தாள பார்ப்பனிய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட அவர்களும் சமஸ்கிருதத்தை தமிழில் நுழைக்க வேண்டிய தேவையேதும் எழவில்லை.அந்த அளவிற்கு தமிழ் மிகச்சிறப்பான,உன்னதமான வளர்ச்சியை கொண்டிருந்தது.
அதே நேரத்தில் விந்திய மலைக்கு தெற்கில் திராவிட இனமக்கள் வாழ்ந்த பகுதிகளில் பார்ப்பனியம் ஊடுறுவிய போது, அது முதலில் ஆட்சியாளர்களிடமும்,பின்பு சமூக பண்பாட்டு,மொழி ஆகியவற்றின் தேவையை பொருத்து படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்கு பெறத்தொடங்கியது.
ஆனால் தமிழகத்திலோ,இது ஏனைய திராவிட வட்டார பகுதிகளில் நடந்தேறியதைப்போன்று அந்துணை எளிதாக அமையவில்லை.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பார்ப்பனிய சமஸ்கிருதம் முழு முற்றான தேவையின்மையால் நிராகரிக்கப்பட்டது.இதே போன்று சமூக,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பார்ப்பனியத் தேவை ஏதும் எழவில்லை.ஆனாலும் கூட சங்க காலத்தில் மன்னர்களுக்கு மக்களை பிரித்தாள வேண்டிய தேவைக் காரணமாக அவர்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு,அதை சமூகத்தின் மீது நிர்பந்தமாக திணிக்க முயன்றனர்.
இப்படி பார்ப்பனியத்தை திணிக்க முயன்ற ஒவ்வொரு சமயத்திலும் அதை சமூகம் நிராகரித்தது.இவ்வாறு சமூகம் எந்த அளவிற்கு எதிர்த்து நிராகரித்து முறியடித்ததோ அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்கள் மீது நிர்ப்பந்தமாக ஒடுக்குமுறைகள் மூலம் பார்ப்பனியத்தை திணிக்க முயன்றனர்.இந்த ஒடுக்குமுறை எந்த அளவில் இருந்ததோ ,அந்த அளவிற்கு அதை எதிர்கொள்ளும் திறனும் தமிழ்சமூகத்திற்கு இருந்தது.
இந்த எதிர்ப்பாற்றல் அதன் செழுமையான வளர்ச்சியின் காரணமாக தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் சீராக அமைந்திருந்தாலும் அவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இல்லை.இதுவும் அந்தந்த வட்டார வாழ்வியலின் அங்கங்களாகவும் அதற்கேற்ப வேறுபட்டவைகளாகவும் இருந்தது.இது ஒரே சீரான பொதுமையாக்கப்பட்ட வாழ்வியல் முறையை உள்ளடக்கிய பார்ப்பனியத்தை எதிர்க்கொள்வதற்கு போதுமானதாக இல்லை.இந்த வகையில் அதற்கான தேவை இப்போது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டது.
தொடரும்……..
தொடர்புடைய கட்டுரைகள்:
1.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1
2.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I
3.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II
4.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
(களப்பிரர்கள் காலம் கிபி 3-6)




.jpg)


