சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும்,அதன் தோழமை அமைப்புகளும்-5
”பூனை சிவப்பாக இருந்தா என்ன,கருப்பா இருந்த என்ன,எலியை புடிச்சா சரி”
சென்றத் தொடரில் புதிய ஜனநாயகம் இதழ் தனது தோழமை இதழான புதிய கலாச்சாரத்தோடு
மட்டுமல்ல,தனக்குள்ளேயே முரண்பட்டு நின்றதைப் பற்றி பார்த்தோம்.இந்தத் தொடரில் புதிய ஜனநாயகமும் புதிய கலாச்சாரமும் தங்களுக்கிடையே எப்படி எதிரும்,புதிருமாக நிற்கின்றன என்பதை பார்ப்போம்.
பார்ப்பன ஜெயா சமச்சீர் கல்வியை ரத்துசெய்ததை பற்றி ஏப்ரல்-ஜீலை 2011 புதிய கலாச்சாரம் இதழில்
சமச்சீர்கல்வி ரத்து
கல்வியை கார்ப்பரேட் மாயமாக்கும் சதி!
என்று தலைப்பிட்டு தலையங்கம் எழுதியுள்ளது.கல்வியை கார்ப்பரேட்மயமாக்கத்தான் சமச்சீர்கல்வியை ஜெயா ரத்து செய்துவிட்டதாக கூறுகிறது.இதற்கு ஆதாரமாக இந்திய கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா,முகேஷ் அம்பானி ஆகியோர் 2001 பாஜக ஆட்சியில் வெளியிட்ட அறிக்கையையும்,அசோசெம் என்ற முதலாளிகள் சங்கம் ”தனியார் பல்கலைக்கழகங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களாக கருதி,அவற்றை வழமையான சட்டங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று கூறியதையும் காட்டுகிறது.
புதியகலாச்சாரம் ஆதாரமாக காட்டும் பிர்லா,முகேஷ் அம்பானி அறிக்கை இவ்விருவரின் விருப்பம் சார்ந்த அறிக்கையாகும்,இந்த அறிக்கையின் மூலம் இவ்விருவரும் இந்தியம் சமூகம் சார்ந்த விடயத்தில் தமது மூடத்தனத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.அசோசெம் என்ற முதலாளிகளின் சங்கம் தமது வர்க்கத்தின் தேவை மற்றும் விருப்பத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.அசோசெம் முதலாளிகளின் சங்கம் பல்கலைகழக அளவிலேயே தனது நலன்களை உருவாக்கிகொள்ளும் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அரசுபள்ளிகளை மத்திய,மாநில அரசுகள் தங்களால் இயன்ற அளவு புறக்கணித்தும் நிர்வாக சீர்கேடுகள்மூலமும் சீரழித்தும்விட்டுள்ளன.இப்படி இவர்கள் சீரழிப்பதற்கு சமூகத்தில் உள்ள மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கில மெட்ரிக் பள்ளிகளில் படிக்கவைக்கின்றனர்.இதன் காரணமாக அரசுப் பள்ளிகளை சீரழிப்பதில் ஆட்சியாளர்களுக்கும்,அதிகாரவர்க்கத்துக்கும் சங்கடம் ஏதுமில்லை.சமூகத்தில் எவ்வளவு பேரால் முடியுமோ அவ்வளவு பேர் தனியார் ஆங்கில மெட்ரிக் பள்ளிகளுக்கு ஏற்கனவே சென்றுவிட்டனர்.இனி புதிதாக இவர்களோடு சேர்ந்து கொள்ள எவருமில்லை என்ற நிலைமைதான் இந்திய சமூகத்தின் எதார்த்த பூர்வமான தன்மையாக உள்ளது.
புலியை பார்த்து பூனையும் சூடுபோட்டுக்கொண்டதை போன்று கீழ்மட்ட அரசு ஊழியர்கள் நடுத்தர விவசாயிகளில் சிலர் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டு அடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே, அதை தொடர முடியாமல் தமது பிள்ளைகளை மீண்டும் அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்து வருவதும் இயல்பாகவே நடக்கிறது.
மேற்கண்ட விவரங்கள் நமக்கு உணர்த்துவது,இப்போது தனியார் ஆங்கில மெட்ரிக் பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்க்கும் வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டனர்.இனி இந்த எண்ணிக்கை கூடுவதற்கான வாய்ப்புகள் மிக,மிக குறைவு என்பதேயாகும்.
தனியார் ஆங்கில மெட்ரிக் பள்ளிகளில்,தமது பிள்ளைகளை சேர்த்துள்ள நடுத்தரவர்க்கத்தின் ஒரு பிரிவே மாதா,மாதம் பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக படாத, பாடுபடுவதையும் நாம் பார்த்தே வருகிறோம்.புதிய கலாச்சாரமே தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள,தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் படிப்பதாகவும் இது மொத்த மாணவர்களில் 98 விழுக்காடு என்றும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் 2,72,000 பேர் மட்டுமே அதாவது 2 சதவீத மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற விவரத்தையும் எழுதியுள்ளது.நாட்டிலேயே ஆங்கில மோகம் அதிகமாக பீடித்துள்ள மாநிலங்களில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது. இங்கேயே இரண்டு சதவீதம் பேர் மட்டுமே தனியார்-ஆங்கிலப் பள்ளிகளில் தமது பிள்ளைகளை படிக்க வைக்க முடிகிறது.ஏனைய மாநிலங்களில் தீவிரமாக ஆங்கில மோகத்தை உருவாக்கினாலும் கூட,தமிழகத்தை விட கூடுதலாக ஆங்கிலவழி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து விடாது
மத்திய,மாநில அரசுகள் தற்போது இலவசக்கல்வி வழங்கும் போதே ஏராளமான மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமலும்,அப்படியே சென்றாலும் இடையிலேயே நின்றுவிடும் அவலமும் நடைபெற்றே வருகிறது.இந்த நிலைமை தமிழகத்தை விட,வட இந்திய மாநிலங்களில் மிகவும் அதிகம்,மேற்கண்ட சமூக நிலைமைகளில் இருந்துதான் மத்திய அரசு இதுவரை 8-ம் வகுப்புவரை இருந்த கட்டாயக்கல்வியை 12-ம் வகுப்புவரை நீட்டித்திருக்கிறது.சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயக்கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிவித்துள்ளார்.
ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையுமே தனியார்மயமாக்கிவிட்டால், புதிய கலாச்சாரமே குறிப்பிடும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 98 விழுக்காட்டு மாணவர்களில் 90 விழுக்காட்டுப் பேர் கல்வியே கற்கமுடியாத சூழலே ஏற்படும்.ஏற்கனவே தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் 2 விழுக்காட்டு மாணவர்களோடு தவிர்க்கவியலாமல்,மேலும் 8 விழுக்காட்டு மாணவர்கள் சேர்ந்தாலும் கூட நாட்டில் கல்விகற்போரின் எண்ணிக்கை 10 விழுக்காடு என்ற அளவில் மட்டுமே இருக்கும்.
மேலும் கடந்த இருபது ஆண்டுகளாக,தனியார்மய,தாராளமய,உலகமய கொள்கைகள் நாட்டில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் இந்திய சமூகத்தில் ஆகப் பெரும்பான்மை மக்களான விவசாயிகளையும்,உழைக்கும் மக்களையும் ஓட்டாண்டிகளாக ஆக்கிவிட்டது.இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் தமது சொந்த ஊர்களில் வாழமுடியாமல் குடும்பத்தோடு நகரங்களை நோக்கி ஓடுவது, ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகிறது.இதனால் நகரப்புறங்களில் பெரும் சமூக நெருக்கடி ஏற்படுகிறது.இதை தவிர்ப்பதற்காகத்தான் மத்திய அரசு நூறுநாள் வேலைத்திட்டத்தை கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துகிறது.
தனியார்மய கொள்கைகளால் வாழ்விழந்து வரும் மக்களின் கோபத்தை திசைதிருப்பும் வகையில்தான், இலவச அரிசி,இலவச ஆடு,மாடு ஆகியவற்றோடு ஏழைகளின் நுகர்வு ஆசையை தணிக்க இலவச தொலைக்காட்சி பெட்டி மிக்சி,கிரைண்டர் ஆகியவற்றை தமிழகத்தில் அரசுகள் வழங்குகின்றன.
எந்த ஒரு சமூக அமைப்பும் தனக்குத் தேவையான பணியாளர்களையும்,ஊழியர்களையும் உருவாக்குவதற்காக மட்டுமே மக்களுக்கு கல்வி என்பதை தருவதில்லை.நிலவுகிற சமூக அமைப்பை நியாயப்படுத்தி, நிலைப்படுத்திகிற நோக்கத்தையும் உள்ளடக்கியதே கல்வியாகும்.ஆகவே குறைந்தது ஆரம்பக்கல்வி வரையிலாவது மக்களுக்கு தருவது நிலவுகிற சமூக அமைப்பில் தவிர்க்கவியலாத தேவைகளில் இருந்து கட்டாயமாகிறது.இதையும் கணக்கில் கொண்டுதான் கட்டாயக்கல்வியை எட்டாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையிலானதாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.மேற்கண்ட சமூக நோக்கத்தை,தேவையை மறுத்து ஒரு அரசு ஆரம்பக்கல்வியை கூட மக்களுக்கு இலவசமாக அளிக்க மறுக்குமேயானால் குறிப்பிட்ட அந்த அரசு தனது தலையில் மட்டுமல்ல நிலவுகிற சமூக அமைப்பின் தலையிலும் மண்ணை அள்ளிக்கொட்டிக்கொள்ளும் செயலாகவே முடியும்.இதனால் ஆளும்வர்க்கங்கள் ஒரு போதும் இச்செயலை செய்ய துணியாது. அதே நேரத்தில் உயர்கல்வி அனைத்தையும் தனியார்மயமாக்குவதிலும் அதற்கு எவ்வித தயக்கமும் இருக்காது.
மேற்கண்ட உண்மையான,சரியான,எதார்த்தமான,சமூக நோக்கிலான காரணங்களை மக்களுக்கு தருவதுதான் மா-லெ-மா சித்தாந்தங்களின் அடிப்படையில் செயல்படும் அமைப்புகளின் அடிப்படை பண்பாக இருக்க முடியும்.இதற்கு மாறாக உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தந்து மக்களை பீதியூட்டுவது,பயமுறுத்துவது ஆளும்வர்க்கங்களின் நலன்களுக்கு தேவையான தவிர்க்கவியலாத குணாம்சமாகும்.இந்த குணாம்சத்திற்குத் தான் சாணக்கியத்தனம் என்று பெயர்.இந்த சாணக்கியத் தனத்தைதான் புதிய ஜனநாயகமும்,புதிய கலாச்சாரமும் எவ்வித தயக்கமும், கூச்சமும் இன்றி செய்து வருகின்றன.இதன் மூலம் மேற்கண்ட அமைப்புகள் ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக உருமாறி வருவதை நமக்கு உணர்த்துவதோடு இந்த அமைப்புகள் நிறுவனமயமாகி வருவதையும் நமக்குக் காட்டுகிறது.
இதை நமக்கு செம்மையாக எடுத்து கூறும் வகையில்தான் சமச்சீர்கல்வி விடயத்தில் எமது விமர்சனங்களுக்கு அவ்வமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் அணுகுமுறையும்,எமது விமர்சனங்களின் மீதான இந்த அமைப்புகளின் கண்ணோட்டமும்,நடைமுறையும் உணர்த்துகின்றன.எனவே இவ்வமைப்புகள் இவற்றை அறியாமையினால் அல்ல,தமது வர்க்க இயல்பிலிருந்துதான் அதற்குபொருத்தமாக சிந்திக்கவும்,செயல்படவும் செய்கிறார்கள்.
கல்வியை கார்ப்பரேட் மயகாக்கத்தான் சமச்சீர்கல்வியை பார்ப்பன ஜெயா ரத்து செய்தார் என்றால் சமச்சீர்கல்வியை கொண்டு வந்த கருணாநிதி,அதை உறுதிசெய்த உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கல்விகார்ப்பரேட் மயமாவதை தடுக்கத்தான் சமச்சீர்கல்வியை கொண்டுவந்தார்கள் என்று பொருளாகிறது.
அப்படியானால் ஒப்பீட்டளவில் இந்த அமைப்புகளோடு நோக்கும் போது கருணாநிதியும்,உயர்நிதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகளுமே தீவிரமான புரட்சியாளர்களாக ஆகிவிடுகின்றனர்.புதிய கலாச்சாரம் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கத்தான் ஜெயா சமச்சீர் கல்வியை ரத்து செய்ததாக எடுத்துள்ள முடிவின் மூலம் நிலவுகிற சமூக அமைப்பிலேயே மக்கள் தமது பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் உருவாக்குகிறது.சமச்சீர்கல்வி விவகாரத்தில் மட்டுமல்ல,தில்லை விவகாரத்தில் போர்க்குணமான போராட்டங்களை சமூகத்தில் நடத்தும் அதே வேளையில்,நீதிமன்றத்திலும் வழக்குகளை நுட்பமான சட்ட அறிவுடன் நடத்தினால் வெற்றி நிச்சயம் என்பதைதான் இவர்கள் நமக்கு போதிக்கிறார்கள்.இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் தான் சமச்சீர்கல்வி விவகாரத்திலும் செயல்பட்டனர்.தான் கையாளும் மேற்கண்ட நடைமுறைதான் சரியானது என்பதை காட்டும் வகையில்தான் ராஜிவ் கொலையில் மூவரின் தூக்குதண்டனையை எட்டுவாரகாலத்துக்கு நிறுத்திவைத்துள்ள, சென்னை உயர்நீதிமன்ற விவகாரத்திலும் கூட சமூகத்தில் நடைபெற்ற போர்க்குணமான போரட்டங்களும்,ராம்ஜெத்மலானி போன்ற சட்ட வல்லுனர்களின் நுட்பமான சட்ட அறிவும் இணைந்த இந்த கலவைதான் தூக்குதண்டனையை 8-வாரகாலத்துக்கு நிறுத்திவைப்பதற்கான அடிப்படை என வினவு ”மூவர் தூக்கு மக்களின் போராட்டத்துக்கு வெற்றி”என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் உள்ளடக்கி எழுதியுள்ளது.இந்த கலவை சித்தாந்தத்தை முன்மாதிரியாகக் கொண்டு எந்த விவகாரத்தில் செயல்பட்டாலும் வெற்றி நிச்சயம் என்று மக்களுக்கும் போதிக்கிறார்கள்.இந்தக் கலவை சித்தாந்தத்தைதான் மாக்சியத்தின் பெயரால் மக்கள் மீது இவர்கள் திணிக்கமுயல்கிறார்கள்.இதுவே புரட்சிகர சித்தாந்தம் என வீதிகளில் முழங்குகின்றனர்.இந்த கலவை சிந்தாந்தம் உலகிற்கு ஒன்றும் புதியதல்ல.இதுதான் அதிகாரவர்க்க முதலாளித்துவத்தின் அதிகார பூர்வ சிந்தாந்தமாகும்.இதைதான் தோழர் ஸ்டாலினுக்கு பிறகு ரஷ்யாவிலும்,தோழர் மாவோவுக்கு பிறகு சீனாவிலும் அதிகார வர்க்க பாதையாளர்கள் கையாண்டு அந்நாடுகளை சீரழித்தனர்.இந்த சித்தாந்தத்தைதான் சீனாவில் தோழர் மாவோவுக்கு பின்னர் ஆட்சியையும்,கட்சியையும் கைப்பற்றி அதிகாரவர்க்க பாதையின் மூலம் அவற்றை சீரழித்த துரோகி டெங்-சியாவோ-பிங் “பூனை கருப்பாய் இருந்தால் என்ன,சிவப்பாய் இருந்தால் என்ன? எலியை பிடித்தால் சரி”,என்று தனது துரோகச்செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டான். இதை போன்றுதான் இவ்வமைப்புகள் தமது சீர்த்திருத்தவாத பாதையை நியாயப்படுத்தி வருகின்றன.
சமச்சீர்க்லவி நடைமுறைக்கு வந்துவிட்டால்,அது கல்வி கார்ப்பரேட் மயமாவதை தடுத்துவிடும் என்பதுதான் முதன்மையான கூறாக காட்டுகிறது புதிய கலாச்சாரம். மக இக தனது இந்த நிலைப்பாட்டின் மூலம் தற்போது புற்றீசல் போல கிராமப்புறங்கள் வரை முளைத்து நிற்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் அப்படியே இருக்கும் என்று அர்த்தப்படுத்துகிறது.அதே நேரத்தில் புதிய கலாச்சாரத்தின் தோழமை இதழான புதிய ஜனநாயகமோ,”அரசு பள்ளிகளிலும் ,தனியார் பள்ளிகளிலும் ஒரே விதமான பொது பாடத்திட்டமும்,பொது பாடநூல்களும் போதிக்கப்பட்டால் தனியார்பள்ளிகளுக்கு அநியாயமான கல்விக்கட்டணம் எதற்கு செலுத்தவேண்டும்? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்து அவர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்”,என்று சம்ச்சீர்கல்வி ரத்து தனியார் பள்ளி கட்டணக்கொள்ளைக்கு ஜே! ஜே!!” என்ற கட்டுரையில் எழுதியுள்ளது.அதாவது சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்தால் அது தற்போதைய ஆங்கில பள்ளிகளை ஒழித்துவிடும் என்கிறது,ஆனால் புதிய கலாச்சாரமோ சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய தனியார் ஆங்கிலப் பள்ளிகள் ஒழியாது என்கிறது.இப்படி புதிய ஜனநாயகமும்,புதியகலாச்சாரமும் ஒழிந்துவிடும்,ஒழிந்துவிடாது என்று எதிரும்,புதிருமாக நின்று கொண்டு லாவணி பாடுகிறார்கள்.இப்படி லாவணி பாடுவதை ஒப்பிட்டு புரிந்து கொள்ளும் திறன் தமது அமைப்புகளில் உள்ள அணிகளிடம் மட்டுமல்ல,சமூகத்தில் உள்ள எவருக்கும் இல்லை என்றும் கருதுகின்றனர் போலும்!
சமச்சீர்கல்வி ஆளும்வர்க்க அதாவது கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து,விரிந்த தேவைகள் காரணமாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.புதிய ஜனநாயகமும்,புதிய கலாச்சாரமும் வரையறுப்பது போன்று சமச்சீர்கல்வி நடைமுறைக்கு வந்தால் அது கார்ப்பரேட் மயத்தை தடுத்துவிடும்,தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை தடுத்துவிடும் எனபவைகள் ஒருபோதும் நடைபெறப் போவதில்லை.இவர்கள் மா-லெ-மா சித்தாந்தத்தையே தமக்கான வழிகாட்டி சிந்தாந்தமாக கொண்டு செயல் படுவதாக கூறிக்கொள்வது வெறும்வார்த்தை பிரயோகம் மட்டுமே என்பதைதான், இவர்களின் மேற்கண்ட நிலைப்பாடுகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.இந்த அமைப்புகளின் இந்த சிந்தனாமுறைக்கு, ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவின் பிரதிநிதிகளாய் இவர்கள் இருப்பதுதான் இதற்கு காரணமாகும்.இதை மேலும் உறுதிபடுத்தும் வகையில்தான் ராஜிவ் கொலையில் மூவரின் தூக்கு தண்டனையை 8-வார காலத்துக்கு நிறுத்திவைத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு விவகாரத்திலும் தம்மை இவர்கள் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை ”மக்கள் போரட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என்று குதூகலமாக எழுதியுள்ளது வினவு.மூவரின் தூக்கு தண்டனை விவகாரத்தில் தமிழகம் கொந்தளிப்பதை,கொந்தளிப்பு பரவுவதை தடுப்பதற்கும்,இதன்மூலம் போராடுபவர்களை தற்காப்பு நிலைக்கும் சென்னை உயர்நீதி மனறத்தின் தீர்ப்பு தள்ளிவிட்டுள்ளது.அதோடு ஈழத்தை ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றும்,பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் காரணமான குற்றவாளியான ராஜிவை, இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டவர்கள் கொன்றது கிரிமினல் குற்றமல்ல, அது ஒரு அரசியல் நடவடிக்கை என்பது மக்களுக்கு ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகளாலும்,தமிழினத் தலைவர்கள் என்போராலும் முற்றாக மூடிமறைக்கப் படுகிறது.இம்முவரின் தூக்கை எதிர்த்து வாதாடிய வழக்கறிஞர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தித்தான் அதாவது சட்டத்துக்கு உட்பட்டுதான் விடுவிக்க கோருகிறார்கள்.இந்த சட்ட நடைமுறைகளுக்கு நேரெதிராகத்தான் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன.இந்த இடைக்கால தீர்ப்பை வழங்கியதன் மூலம் சட்டத்திற்கு புறம்பான போராட்டங்களை இனி நடத்தினால் அதுவே அம்மூவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். எனவே இனி சட்டத்திற்கு உட்பட்ட, போர்குணமற்ற சட்டம்,ஒழுங்குக்கு பிரச்சனை ஏற்படுத்தாத போராட்டங்களையே நடத்தவேண்டும் என்ற தற்காப்பு நிலைக்குதான் இதுவரை போர்க்குணமாக போராடியவர்களையும் தள்ளிவிட்டுள்ளது.
அதோடு, இந்த 8 வார கால அவகாசத்தின் மூலம் இந்திய ஆளும்வர்க்கங்கள், இந்தியாவின் தெற்காசிய பிராந்திய வல்லரசு நலன்களுக்கு-இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்கு-எதிரான, தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த தன்மானம் , சுயமரியாதை, நாகரீகம், பண்பாடு, பார்ப்பன எதிர்ப்பு ஆகியவற்றையும் தூக்கி எறிந்து விடு என்றுதான் இடைக்கால தீர்ப்பின் மூலம் நிபந்தனை விதித்துள்ளது.ஆனால் வினவோ மக்கள் போரட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுவதோடு, சுயமுரண்பாடாக ”போர்க்குணமான போராட்டங்களையும் நடத்த வேண்டும்”, என்று எழுதுகிறது.இறுதி தீர்ப்பு என்னவாகுமோ என்ற தவிப்பில் உள்ளவர்கள் போர்க்குணமாக போராட வேண்டுமென்பது சுயமுரண்பாடு மட்டுமல்ல வெற்றுச்சவடாலும் ஆகும்.
இதற்கு மாறாக, இந்திய ஆளும்வர்க்கங்கள் நமக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிராகரித்துவிட்டு, இந்திய அரசு ஈழப்போராட்டத்தை எந்த இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக அழித்தொழித்தோ, அந்த முதலாளிகளின் நிறுவனங்களை தமிழகத்தில் செயல்படவிடாமல் நாம் தடுக்க வேண்டும்,அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை புறக்கணிக்கவும் வேண்டும்,என்பதை மக்களிடையே கொண்டு சென்றால்தான் அது முரனற்ற வகையில் மக்களை போர்க்குணமான போராட்டங்களை நடத்த ஊக்குவிக்கும்.
ஆனால் வினவும் அதன் தோழமை அமைப்புகளும் ஆளும்வர்க்கத்தின் ஒருப்பிரிவின் பிரதிநிகளாய் இருந்து சிந்திக்கவும்,செயல்படவும் செய்வதால் இவர்களால் ஒருபோதும் இப்படி முரணற்ற வகையில் இனி சிந்திக்கவோ,செயல்படவோ முடியாது என்பதைத்தான், இவர்களின் அடுத்தடுத்த நிலைப்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.
அரசியல்,சித்தாந்த ரீதியாக இதை இவர்களுக்கு புரிய வைத்து மீண்டும் இவர்களை மா-லெ-மா புரட்சியாளர்களாக கொண்டு வரவேண்டும் என்ற எமது நோக்கம் நிறைவேறாது என்பதைத்தான் விமர்சனம்,சுயவிமர்சனமற்ற அவர்களின் மெளனம் நிரூபிக்கிறது.
இவர்களின் இந்த மெளனம் இவர்கள் கம்யூனிச புரட்சியாளர்கள் என்ற நிலையிலிருந்து வழுவி விட்டனர் என்பதையே நமக்கு உணர்த்துகிறது.இதற்காக இவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவர்களின் இந்த மெளனம் இனி இதை இணையத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதையும்,வரலாறு எமக்கு இட்டுள்ள இப்பணியை எப்படி மேற்கொள்வது என்பதை நாங்கள் தற்போது ஆய்ந்து வருகிறோம்.இப்பணி ஆகக்கூடிய விரைவில் தொடங்கும் என இணையதள வாசகர்களுக்கு அறியத்தருகிறோம்!
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
சூறாவளி நிர்வாகக்குழு
தொடர்புடைய கட்டுரைகள்:
2..சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1
