விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label பாமக. Show all posts
Showing posts with label பாமக. Show all posts

Tuesday, 16 July 2013

இளவரசனின் இறுதிமூச்சும்..... இந்தியாவின் உயிர்மூச்சும்.

                பறையர் எனும் சாதியை சேர்ந்த இளவரசன், வன்னிய சாதியை சேர்ந்த திவ்யா என்றப் பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த அவமானத்தை! தாளமுடியாத திவ்யாவின் தந்தை நாகராஜன் கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த சிலமணி நேரங்களில் எப்போதும் தயார்நிலையில் கட்டப்பட்ட்டுள்ள வன்னியப்படையினர்! நாயக்கன் கொட்டாய் உட்பட மூன்று பறையர் சேரிகளை முழு முற்றாக உயிர்சேதம் இன்றி தீக்கிரையாக்கினர். இது தமிழகம் எங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாமக தனது இழந்த செல்வாக்கை மீட்க இவ்விவகாரத்தை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி கொண்டது.


ஆனாலும் இளவரசன்-திவ்யா  தம்பதியினரை பிரிக்க முடியவில்லை. இதனால் சட்டபூர்வ தந்திரத்தை கையாண்டு திவ்யாவை வெளியே கொண்டுவர திவ்யா தாயாரின் மூலமாக முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த தந்திரம் உளவியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவமுடையது என்ற அடிப்டையில் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வைத்தனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போன்றே தாயும், மகளும் சந்தித்ததும், உரையாடியதும் திவ்யாவிடம் படிப்படியான உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. இறுதியாக தனது கணவருடன் தான் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று திவ்யா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஜீலை 4-ம் தேதி இளவரசனின் இறந்த உடல் தர்மபுரி ரயில் பாதை அருகே கிடந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீஸ் இளவரசனின் பெற்றோருக்கு கூட தெரிவிக்காமல் ரகசியமாக உடலை ஜீலை 5-ம் தேதி அதிகாலையில் பிரேத பரிசோதனை செய்தது. போலீசின் இந்த நடவடிக்கை இளவரசனின் சாவுபற்றிய சந்தேகத்தை அவரின் பெற்றோரிடமும், உறவினர்களிடமும் தீவிரப்படுத்தியது. இதனால் மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடுமாறு இளவரசனின் நண்பர் ஏ.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து பிரேத பரிசோதனையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்ய  ஏழு மருத்துவர்கள் அடங்கிய குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழுவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் இருவர், சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவ நிபுணர் ஒருவர், சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி மருத்துவ நிபுணர் ஒருவர் மற்றும் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கைள் மூவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

இவர்கள் ஜீலை - 9 அன்று உயர்நீதிமன்றத்தில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்தபோது எடுத்த வீடியோ பதிவை பார்த்தனர். இதையடுத்து இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஏழுபேரும் தனித்தனியாக தமது கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை உயர்நீதி மன்றத்திற்கு வழங்கினர். இப்படி வழங்கப்பட்ட அறிக்கைகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாக இருந்தன.

இதனால் மருத்துவத்துறையின் தடயவியல் துறை மருத்துவர்கள் இருவரை கொண்ட குழுவை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதில்  காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் தங்கராஜ், போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல் துறை மருத்துவர் டாக்டர் பி.சம்பத்குமார் ஆகியோரை உயர்நீதிமன்றம் நியமித்தது. இவர்கள் மறு பிரேத பரிசோதனை அவசியமா என்பதை இளவரசனின் சடலத்தை நேரில் ஆய்வு செய்து ஜீலை 10 – அன்று ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

இதன்படி மருத்துவ தடயவியல் நிபுணர்கள் இருவரும ஜீலை 11-ம் தேதி தர்மபுரிக்கு நேரில் சென்று, இளவரசனின் உடலை பார்த்துவிட்டு,  மறுநாள் ஜீலை 12ம் தேதி தமது அறிக்கைகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவ்விரு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துகளையே உள்ளடக்கியிருந்தது. டாக்டர் தங்கராஜ் மறு பிரேத பரிசோதனை தேவை இல்லை என்றும் டாக்டர் சம்பத்குமார்  தேவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன் காரணமாக வேறுவழியே இல்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பேர் ஜீலை 13-ம் தேதி இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஜீலை- 12 அன்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகம் என்ற இந்த மாநிலத்தில் எட்டுகோடிக்கும் அதிகமான மக்கள் வாழுகின்றனர். இங்கே ஏராளமான உலகப்புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களும், மருத்துவ மனைகளும் உள்ளன. ஆனால் இறந்து போன ஒருவரின் உடலை ஆய்வு செய்து, சாவு எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்க இங்குள்ள எந்த மருத்துவருக்கும் தகுதியில்லை! என்று டெல்லி மருத்துவர்களுக்கு அந்தப் பொறுப்பை வழங்கிய உயர்நீதிமன்றம்!
எவ்வளவு சிறந்த, உயர்ந்த மருத்துவ நிபுணர்களாக இருந்தாலும் மருத்துவரீதியாக அவர்களின் திறன் சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றாலும், சமூக ரீதியாக அவர்கள் ஒவ்வொருவரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு சாதியில் பிறந்தவர்கள். சாதியாக வாழ்பவர்கள். சாதிய சமூக கட்டுமானங்களுக்கு உட்பட்டவர்கள். எனவே இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் சமூக ரீதியாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கும் இது பொருந்தும். ஆனாலும் கூட இளவரசனின் பெற்றோரும், அவரைச் சார்ந்தோரும் டெல்லி மருத்துவர் குழுவின் ஆய்வுக்கு ஒப்புக்கொண்டது என்பது அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் அல்ல.

வேறு என்ன செய்ய முடியும்! பிரச்சனை ஏதோ ஒரு முடிவுக்கு  வந்துதானே தீரவேண்டும். அப்படியானால் இதுவும் ஒருவகையான சமரசம்தான். இந்நிலை இப்பிரச்சனைக்கு மட்டுமல்ல எல்லா பிரச்சனைகளுக்கும் பொது அம்சமாகும்.

இந்நிலை இந்திய சமூக கட்டமைப்பின் தவிர்க்கவியலாத விளைபொருளாகும்.இளவரசனின் சாவில் அவரின் பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகம் பாதிக்கப்பட்டவர்களின் பலவீனமான உணர்வு என்று கூறி யாரும்  தப்பித்துக் கொள்ளமுடியாது. இப்படி சந்தேகிப்பதற்கான அனைத்து சமூக அடிப்படையும் இந்நாட்டில் நிலவுவதை வெளிநாட்டினர் வேண்டுமானால் அறியாதவர்களாக இருக்கலாம். இந்நாட்டில் பிறந்து,வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் கூட இது மிகத்தெளிவாகவே தெரியும்.

ஏனென்றால் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளும், வேறுபாடுகளுமே இந்துக்களின் சமூக வாழ்க்கையாகும்.

சட்டங்கள் வேண்டுமானால் சமத்துவம், ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் அவைகளுக்கும் தெரியும் இவைகள் வெறும் ஏட்டுச்சுரக்காய்கள் என்பது.

உடற்கூறு சோதனை தவறாக நடந்தது என்று நாங்கள் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும் நியாயமற்ற ஒரு கோரிக்கையை மனுதாரர் வலியுறுத்தவில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களில் ஒருவருடைய நீதிக்கான அழுகுரல் என்பதால், நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்த மனுகுறித்து ஒரு வரையறை வரைக்கும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியுள்ளது”.

இது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாகும். நீதிபதிகளின் இந்தக் கருத்து இந்தியச் சமூகத்தின் அவலத்தை படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளது.

அப்படியானால் ஜனநாயக உணர்வுடைய தனிமனிதர்கள் கூட இங்கே எவருமில்லையா? என்றக் கேள்வி எழுப்பப்படலாம். அதற்கான அடிப்படையே போதுமான அளவிற்கு இல்லபாதபோதும் – வளராத போதும், இல்லவே இல்லை என்று முற்றாக மறுதலித்து விடமுடியாதுதான். இப்படிப்பட்டவர்கள் கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளனர் என்பதுதான் கண்கூடான உண்மையாகும்.

இந்தச் சமூகத்திற்கு ஏனிந்த அவநிலை?

இன்று இந்தியா என்றுள்ள இந்த நாடு ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களால் வலுக்கட்டாயமாக ஒட்டபட்டது என்பதை நாம் அறிவோம். இப்படி அவர்கள் தமது ஆயுத பலத்தின் மூலம் ஒருங்கிணைத்த இந்தியா அவர்கள் வெளியேறிய பின்பு இரண்டாக உடைக்கப்பட்டது.

பார்ப்பனியத்தை – சாதியத்தை – வாழ்க்கை முறையாகக் கொண்ட பெரும்பான்மை மக்கள் கூட்டத்திற்கு மாறாக வாழ்ந்தவர்களை, இந்துத்துவத்திற்கு மாற்றானவர்களை  இஸ்லாத்தை கடைபிடித்தவர்களை பாகிஸ்தான் என்று வெட்டிவிடப்பட்டனர். சாதியத்தை கடைபிடித்தவர்கள் பெரும்பான்மையாக கொண்டவர்களை கொண்டநாடு இந்துக்களின் இந்தியாவாக பிரிக்கப்பட்டது.

இன்றைய இந்திய மக்களைப் போன்றே ஆரம்ப காலங்களில் பார்ப்பனிய- சாதியத்தை வாழ்க்கையாக கொண்டிருந்தவர்களும், பழங்குடி மக்களிடையே நிலவிய கொடிய பகைமையை முடிவுக்கு கொண்டுவந்து அவர்களிடையே ஒற்றுமையை சாதிக்க உருவாக்கப்பட்ட ஏகக்கடவுள் தத்துவமான இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களும், இதன் மூலம் தமது பார்ப்பனிய பந்தத்தை அறுத்துக் கொண்டவர்களுமான முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தப்பகுதியும் பார்ப்பனிய – சாதிய- பண்பாட்டுக்கு எதிரானவர்களுமானவர்களை பாகிஸ்தான் என்று வெட்டிவிடப்பட்டது.

பார்ப்பனிய – சாதியத்தை தமது வாழ்க்கை முறையாக கொண்ட மக்களைக் கொண்டப்பகுதிகளின் இந்தியாவாக ஆனது.

இந்தியா என்றழைக்கப்படும் இந்த நாடு பல்வேறு மொழிகள் பேசும் மக்களைக்கொண்ட மாநிலங்களை உள்ளடக்கியது. பேசுகிற மொழி, உணவு, பழக்கவழக்கங்கள் பண்பாடு, நாகரீகம் அனைத்திலும் ஒவ்வொரு மாநில மக்களுக்கிடையிலும் எண்ணிலடங்கா வேறுபாடுகள் நிலவினாலும், இவைகள் அனைத்திற்குமான பொதுவான ஆன்மாவாக விளங்குவது பார்ப்பனியமே - சாதியமேயாகும். இது ஒன்றுதான் வேற்றுமையில், ஒற்றுமை காணவைக்கும் பொதுப்பண்பாகும்.

இந்து என்ற மதம் உண்மையில் சாதிகளின் கூட்டணியே ஆகும். இதுதான் இந்தியா என்ற கூட்டணிக்கும் அடித்தளமும், ஆதாரமுமாகும்.

எனவே இந்தியா என்ற இந்தக்கட்டமைப்பு இருப்பதற்கும், நீடிப்பதற்கும் சாதியே பொது அடிப்படையாக திகழ்கிறது.

சாதிகள் என்ற ஒன்று இல்லாதிருந்தால் இந்தியா என்ற கட்டமைப்பை வெள்ளையர்களால் முழுமையாக அல்லது இன்றைய வடிவில் உருவாக்கி இருக்க முடியாது.

எது இங்கே, ஒருமொழி பேசும் மாநில அளவிலான பரப்பில் கூட உறுதியான கட்டமைப்புடைய நாடு-அரசு உருவாவதை தடுத்ததோ அதுவேதான் இந்தியா என்ற நாட்டை உருவாக்க ஆங்கிலேயர்களுக்கு உதவியது. இது ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களுக்கு மட்டுமல்ல இந்நிலபரப்பிற்குள் படையெடுத்து வந்து கொள்ளையிட்டவர்கள், ஆக்கிரமித்து ஆண்டவர்கள் அனைவருக்கும் உதவியது. அதுதான் பார்ப்பனியம் – சாதியம்  ஆகும்.
சாதிகள் இல்லாவிட்டால் இந்தியா இல்லை. இந்தியா இருக்க வேண்டுமானால் சாதிகள் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்!

இதைத்தான் இந்நிலப்பரப்பை ஆண்ட அனைவரும் அன்றுமுதல் இன்றுவரை செய்துவருகின்றனர். இந்தியா என்ற இந்நிலப்பரப்பை ஆக்கிரமித்து ஆண்ட அனைத்து அந்நியர்களும் பார்ப்பனியத்தை தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான மிக்ச்சிறந்த அடித்தளமாக  கண்டுகொண்டு அதனை பாதுகாத்தனர்.

பார்ப்பனியம்-சாதியம் உருவானதிலிருந்து இன்று வரை சாதிதான் இந்தியாவின் ஆன்மாவாக விளங்குறது என்றாலும், இது இல்லாத  ஒருக்காலமும்  இந்நிலப்பரப்பில் இருக்கவே  செய்தது.

பார்ப்பனியத்தின் மூலவர்களான ஆரியர்கள் இத்துணைக்கண்டத்திற்குள் ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததை வரலாறு காட்டுகிறது. அன்று இங்கே வாழ்ந்த மக்கள் பெரும்பான்மையினர் சிறு,சிறு குழுக்களாக பூர்வகுடி இனக்குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இம்மக்கள் குழுக்கள் முற்றிலும் தமது வாழ்வுக்கான ஆதாரமான உணவை காடுகளில் சேகரித்துக் கொண்டிருந்தனர். இதனாலேயே இக்குழுக்கள் தமக்கிடையே பகைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தன.இந்தக் குழுக்களுக்கு பெண்களே தலைமைகளாக இருந்தனர்.

ஆனால் இந்நிலப்பரப்பிற்கு வெளியில் இருந்து வந்தவர்களோ தமது வாழ்க்கைக்கான ஆதாரமாக கால்நடைகளையே நம்பியிருந்தனர். அதாவது ஆண்களே இவர்களின் தலைவர்களாக செயல்பட்டனர். இவர்களின் இந்த சமூக அமைப்பு இங்கு வாழ்ந்த பூர்வகுடி மக்களை விட முன்னேறிய சமூக கட்டமைப்பை உடையதாக இருந்தது.

இதனால் தாம் நுழைந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அளவில் சிறு, சிறு குழுக்களாகவும், தமக்கிடையே விரோத மனப்பான்மை உடையனவாகவும் இருந்தது ஆகிய கூறுகள் பூர்வகுடிகளில் தோல்வியையும், வந்தேறிகளின் வெற்றியையும் தவிர்க்கவியலாதவைகளாக ஆக்கின.

தமது வெற்றிக்கு அடிப்படையாக இருந்த பூர்வகுடி இனக்குழு மக்களுக்கிடையிலான பகையும், விரோதத்தையும் ஒவ்வொரு சிறு வேறுபாட்டு கூறுகளையும் நீடித்து, நிலைநிறுத்துவதுலேயே தமது வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு பூர்வகுடி இனக்குழு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதியாக அவற்றின் சில தனித்தன்மைகளுக்கு ஏற்ப நிலைநிறுத்தப்பட்டன.
இப்படி நாங்கள் கூறுவது பலருக்கும் எம்மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தலாம். இப்படிபட்டவர்கள் அவசரப்பட வேண்டாம்.

சாதி தோன்றுவதற்கான மூலத்தை நாங்கள் குறிப்பிட்டோமே தவிர அது மட்டுமே, அது முழுமை அடைவதற்கு முழு முற்றான காரணம் என்றுக் கூறவில்லை. இவைகள் விரிவாக்கப்பட்டதற்கும், வளர்வதற்கும் இன்னும் பல்வேறு அம்சங்களும் உள்ளன என்பதையும் நாங்கள் மறுக்க வில்லை.

எது எப்படியாயினும் பூர்வகுடி இனக்குழு கூறுதான் சாதிக்கான மூலம் என்பதுதான் நமது கவனத்திற்குரியது. இந்த இனக்குழு பண்புதான் இன்றுவரை சாதிகள் ஒன்றின் மீது காட்டும் பகைமை உணர்வுக்கான அடிப்படையாகும்.

அதே நேரத்தில் தமிழகத்தின் தன்மை இதிலிருந்து சற்று வேறுபட்டது. அதாவது இன்றைய வட இந்தியப் பகுதிகளுக்கு ஆரியர்கள் வந்து பார்ப்பனர்களாக உருமாறிய பின்பு சுமார் 1500 ஆண்டுகளுக்கு பின்னர்தான் தமிழகத்திற்கு வந்தனர். இக்காலகட்டம் தமிழ்ச்சமூகம் தந்தைவழிச் சமூகமாகவும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகமாக மாறும் இறுதிக் கட்டத்தில் இருந்தது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் பூர்வகுடி இனக்குழு சமூகத்தின் பண்புகள் முழுமுற்றாக மறைந்துவிடவில்லை என்பது பார்ப்பனிய – சாதிய – கட்டமைவை புகுத்துவதற்கு முழுமுற்றான தடையாகவும் இல்லை.

தமிழகத்தின் இந்த தண்மைதான் வட இந்தியாவிலிருந்து தமிழகத்தை வேறுபடுத்துகிறது. இது தான் களப்பிரர் கால பார்ப்பனிய எதிர்ப்பாகவும், பின் நாளில் பெரியார் தலைமையிலான திராவிட இயக்க சிந்தனை போக்காகவும் வெளிப்பட்டது.

அதே நேரத்தில் தமது ஆட்சியை பாதுகாக்க களப்பிரர்கள் பின் நாளில் பார்ப்பனியத்தை தழுவிக் கொண்டனர். இதுவே இவர்களின் வீழ்ச்சிக்கும் அடிப்படையானது.

களப்பிரர் கால பிற்பகுதியில் தொடங்கி, பின்னர் ஆண்ட அனைத்து ஆட்சிகளிலும் பார்ப்பனியம்-சாதியம் இங்கே நிலைநாட்டப்பட்டது. சாதியம் சமூக வாழ்வாக மாற்றப்பட்டு விட்டாலும் பார்ப்பன தலைமைக்கு எதிரான தன்மை இங்கே நீடித்து நிலைத்துவிட்டதன் வெளிப்பாடுதான் திராவிட இயக்கங்கள்.

எது எப்படியாயினும் தமிழகத்திற்கென்று சிலத் தனித்தன்மையான கூறுகள் இருந்தாலும் இதுவும் பூர்வகுடி இனக்குழு அடிப்படையிலான கூறுகளை முற்றாக இழந்துவிடவில்லை.

இன்றைய உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு காலத்தில் பூர்வகுடி இனக்குழுக்களாக இருந்தவர்கள் தான். இவற்றுக்கிடையிலான போராட்டங்களும், போர்களும் ஒன்று மற்றொன்றை வெற்றி கொள்வது, அழிப்பது என்பதாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் இவைகள் இணைப்பாகவும் மாறி பெரும் மக்கள் சமூகங்களாக உருவெடுத்தன.

இப்படி உருவான மக்கள் சமூகம் தமது வாழ்க்கைப் போராட்டத்தின் காரணமாக வாழ்வின் பெரும்பான்மை அம்சங்களில் – அதாவது உணவு, உடை, மொழிபண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் – நெருங்கிய பிணைப்பை உடையவர்களாக உருவெடுத்தனர்.

எந்த அளவுக்கு வாழ்க்கை தேவைகளுக்கான உற்பத்தியில் இவர்கள் முன்னேற்றம் கண்டனரோ, அந்த அளவிற்கு அவர்களுக்கிடையே சமூக உறவுகளும் நெருக்கமடைவது தவிர்க்க வியாலாததாகியது. இப்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பங்கிடுவதில் இம்மக்களிடையே வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் தவிர்க்க வியலாதவனவையாக விளங்கினாலும், அது முந்தைய பூர்வகுடி இனக்குகு சமூகத்தன்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, முன்னேறிய சமூக வடிவத்தை கொண்டதாக அமைந்தது.

இப்படி உருவெடுத்த, வளர்ந்த மக்கள் சமூகங்களே இன்றைய உலகின் நாகரீக சமூகங்களாக, நாடுகளாக உருவாகியுள்ளன.

இதற்கு நேர்மாறான வரலாற்றை உடையது இந்திய சமூக வரலாறு.

பூர்வகுடி இனக்குழுச் சமூகத்தில் இயல்பான  வளர்ச்சி நிகழ்வதற்கு முன்பாகவே அவைகள் தடுக்கப்பட்டுவிட்டதுடன் பூர்வகுடி இனக்குழு கூறுகளுக்கு புதிய வடிவிலான சாதியக் கூறுகள் புகுத்தப்பட்டு அவைகள் நிலை நிறுத்தப்பட்டன.

இப்படி நிலைநிறுத்தப்பட்ட, இயல்பான சமூக வளர்ச்சி தடுக்கப்பட்ட – பூர்வகுடி இனக்குழு இயல்புடன்  கலக்கப்பட்ட பார்ப்பனிய – சாதியகூறுகள்தான் இந்நாட்டு மக்களின் குறுகிய, பின்தங்கிய சிந்தனா முறைக்கும், செயல்பாட்டுக்குமான அடிப்படையாக ஆதாரமாக விளங்குகிறது.

இந்த பூர்வகுடி இனக்குழு – காட்டுமிராண்டி – சமூகத்தின் இந்திய வடிவமாகிய சாதிகள் நீடிக்கும் வரை, இந்நாட்டில் ஒன்றுபட்ட சமூக உணர்வு தோன்றுவது சாத்தியமில்லாத ஒன்றாகவே நீடிக்கும்.

காட்டுமிராண்டி இனக்குழு – பார்ப்பனிய கண்ணோட்டத்தில் இளவரசன்களின் செயல்கள் சகித்துக் கொள்ள முடியாதவைகள். இந்தியாவின் உயிர்மூச்சு நீடிப்பதற்காக இளவரசன்கள் தமது இறுதிமூச்சை இழந்துகொண்டேதான் இருப்பார்கள்........!

தொடர்புடைய கட்டுரைகள்:
 
1.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1
2.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-2
3.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-3 (சங்ககாலம்)
4.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I
5.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II
6.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III 
7.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-4 (சங்ககாலம்- களப்பிரர்கள் காலம்)
8.தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-5 (அண்ணாவின் பரிணாமம் ஜெயா))

Friday, 8 February 2013

சாதிமறுப்பு திருமணங்கள் - ராமதாஸ் சமூகத்தின் மனசாட்சி?

"என் மகளை இழுத்துக்கிட்டு போயிட்டான்னு எவன் சொல்லுவான். இதுக்கின்னு ஒரு நீதிபதிய நியமித்து ரகசியமா கேட்க சொல்லுங்க..." இந்த ஒப்பற்ற கருத்துக்கு சொந்தக்காரர் 'தமிழ்க் குடிதாங்கி' டாக்டர் ராமதாஸ் அவர்கள் தான்!
கடந்த 27.1.13 அன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதுதான் மேற்கண்ட அரிய கருத்துகளை அவர் உதிர்த்துள்ளார்.
அனைத்து சமுதாய(!) தலைவர்கள் கூட்டத்தை தமிழகத்தில் பல இடங்களிலும் நடத்தி வரும் ராமதாஸ் சென்னையிலும் நடத்தியுள்ளார். இப்படி நடத்தப்படும் ஒவ்வொரு கூட்டத்திலும் 'பறையர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் தமது சாதிப்பெண்களை காதல் என்ற பெயரில் – ஜீன்ஸ் பேண்ட் போட்டு, மயக்கி இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறார்கள்; இந்த அநீதியைத் தடுக்க வேண்டும்; இப்படிப்பட்ட அநீதியை தட்டிக் கேட்டால், போலீசோடு கூட்டு சேர்ந்து கொண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எங்களை மிரட்டுகின்றனர்' என்று இக்கூட்டங்களில் விவாதிக்கின்றனர்.
                     காதல் நாடகத் திருமணங்களைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
                     இதற்கு பெண்களின் திருமண வயதை பதினெட்டிலிருந்து இருபத்து ஒன்றாக உயர்த்த வேண்டும். பெற்றோரின் சம்மதம் பெறாத திருமணங்கள் செல்லாது என்ற அம்சங்களுடன் கூடிய சட்டங்கள் கொண்டு வரப்படவேண்டும்.
                     வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வழக்கு நிரூபிக்கப்படாவிட்டால், வழக்குத் தொடுத்தவருக்கு தண்டனை வழங்கும் படியான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்
என்றெல்லாம் இந்தக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.
இப்படி நடத்தப்படும் கூட்டங்களையும், இதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும் ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகின்றனர். சட்டத்திற்கும், ஜனநாயத்திற்கும் விரோதமான இப்படிப்பட்ட கூட்டங்களை அரசு தடைசெய்ய வேண்டும் எனவும், சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடிய வகையில் பேசியும், தீர்மானம் நிறைவேற்றியும் வருகிற ராமதாசு மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இதர சாதியினருக்கும் இடையே பகையுணர்வை ராமதாஸ் தூண்டி வருவதாகவும், இதன் மூலம் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை அவர் திசை திருப்புவதாகவும், அவர்மீது குற்றச்சாட்டையும் சுமத்துகின்றனர்.
மேலே கண்ட குற்றச்சாட்டுகளை கடந்த பத்து ஆண்டுகளாக அவர் மீது யாரும் முன்வைக்கவில்லை. அதற்கு மாறாக அவர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இப்படி அவர் போற்றப்படுவதற்கு 'தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை தமிழகத்தின் முதல்வராக்குவேன்' என்று அவர் அறிவித்தது, தனது கட்சியில் தலித் ஏழுமலை, பொன்னுசாமி ஆகியோரை பாராளுமன்ற உறுப்பினர்களாக்கியது, திருமாவளவனோடு கூட்டு ஏற்படுத்திக் கொண்டது ஆகியவைகளே காரணமாகும்.
இவைகள் அனைத்தும் வன்னியன் ஆளவேண்டும் என்ற தனது கட்சியின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல் தந்திர நாடகங்களாகும். தனது கட்சியின் இலக்கை அடைவதற்கு தாழ்த்தப்பட்டோரை கிள்ளுக்கீரையாக பயன்படுத்த முயன்றதன் வெளிப்பாடுகளாகும்.
ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினராகவும், தமிழ்ச் சமூகத்தில் ஏறத்தாழ அதே விகிதத்தினராகவும் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.
வட தமிழகத்தில் ஏனைய சாதிகளோடு ஒப்பிடும்போது பெருமளவிலான எண்ணிக்கையில் உள்ள வன்னியர்கள், மொத்த மக்களில் கால்பங்கினராக வட தமிழகத்தில் உள்ள பறையர்களோடு கூட்டு ஏற்படுத்திக் கொண்டால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று பாமக கணக்கு போட்டது.
அதே வேளையில் தென்தமிழகத்தில் தாங்கள் பெருமளவில் இல்லாததால் தம‌து இலக்கிற்கு ஏற்ப தமிழகத்தை இரண்டாகப் பிரித்து இருமாநிலங்களை உருவாக்க வேண்டும் என்றும் பாமக கோரிக்கை வைத்தது.
ஆனால் ராமதாசின் இந்த தந்திரங்கள் அனைத்தும் பறையர்களால் மட்டுமல்ல, அவரின் சொந்த சாதியினராலும் நிராகரிப்பிற்கும், புறக்கணிப்பிற்கும் உள்ளானது. இப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகளின் காரணமாகத்தான் வடதமிழகத்தில் பாமக எந்த ஒரு தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெறமுடியாத அளவிற்கு பின்னடவை ஏற்படுத்தியது.
ராமதாஸ் வன்னிய சாதியினரிடையே செல்வாக்குப் பெறுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது இடஒதுக்கீடு போராட்டமே ஆகும்.
இந்த இடஒதுக்கீடு போராட்டத்தைக்கூட அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே நடத்தியிருந்தால் வன்னிய சாதியினரிடையே பெருமளவு ஆதரவை ராமதாஸ் பெற்றிருக்க முடியாது. அது ஒரு வரம்பிற்குட்பட்ட ஆதரவாக சுருங்கிப் போயிருந்திருக்கும்.
இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை மிக முக்கியமாக பறையர்களுக்கு எதிரான போராட்டமாக நடத்தியதுதான் வன்னிய சாதியினரை பெருமளவு ஈர்த்தது. வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு வன்னிய சாதியினரை ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கவும் செய்தது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது பாமகவின் பிறப்பும், அதன் வலிமையும் வன்னிய ஆதிக்கசாதி வெறியை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த யதார்த்தத்திற்கு புறம்பாகத்தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமகவின் – நாடகமாயினும் – செயல்பாடுகள் அமைந்திருந்தன.
இப்படி நாங்கள் கூறுவது மிகையானதாகக் கூட சிலர் கருதலாம். இப்படி கருதுவோருக்கு மேலும் ஒரு நடப்பு யதார்த்த உண்மையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஆதிக்க சாதியினர் எதற்கு முக்கியத்துவம் தருகின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்கு இது உதவியாக இருக்கும்.
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 2,56,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் மட்டுமல்ல தமிழகத்திலும் கூட விவசாயிகள் என்போரும் ஆதிக்க சாதியினர் என்போரும் வெவ்வேறான நபர்களில்லை. இவர்கள் இருவருமே ஒருவர்தான் என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், விவசாயம் செய்வது தற்கொலைப் பாதை என்பது தமிழகத்திற்கும் பொருந்துகின்ற‌ பொதுவான உண்மையாகும்.
தமது வாழ்வையே தற்கொலைப் பாதையில் தள்ளி விட்டுள்ள சக்திகளின் அக்கிரமமான செயல்களுக்கு எதிராக ஒன்று திரட்டப்பட முடியாதவர்களை, தமது வாழ்வோடு பின்னிப் பினைந்துள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மட்டுமே இவர்களை ஒன்று திரட்ட முடிகிறது. தனது சாதிக்குள்ளேயே தனது உடன் பிறந்தவர்களிடம் கூட ஒன்றுபடாமல், தனித்தனி அங்கங்களாக பிரிந்து கிடப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக மிக எளிதாக ஒன்று திரண்டு விடுகிறார்கள்.
இந்த யதார்த்தத்திற்குப் புறம்பாகத்தான் ராமதாஸ் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டார். ஆதிக்க சாதிவெறியின் இயல்பான போர்த் தந்திரம் முனை மழுங்கிப் போனதன் விளைவுதான் பாமக - வில் வேல்முருகன் போன்றோர் உருவாவதற்கும், வலிமை பெறுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ராமதாஸ் தலைமையை ஆட்டம் காணவும் வைத்தது.
இடைக்காலத்தில் தான் செய்த பிழையைத்தான் ராமதாஸ் தற்போது ஆதிக்கசாதி கூட்டமைப்பின் மூலம் சரி செய்து வருகிறார்.
எனவே வன்னிய ஆதிக்க சாதிவெறியை, வன்னிய சாதியிடம் ராமதாஸ் உருவாக்குகிறார் என்பது அரை உண்மையே ஆகும். வன்னிய சாதியிடம் இல்லாத ஒன்றை அவர் உருவாக்கவில்லை. அதற்கு மாறாக இயல்பிலேயே அச்சாதியிடம் உள்ள ஆதிக்க சாதி உணர்வை தூசிதட்டி, கூர்மைப்படுத்தி ஒருங்கிணைத்து வழிநடத்துவதுதான் ராமதாசின் திருப்பணியாகும். இது ராமதாசுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மையும் அல்ல. இதுவே அனைத்து ஆதிக்க சாதி அமைப்புகளின் தலைமைகளின் செயல்பாடுமாகும்.
சாதிவெறி, இன, மொழி வெறிகள், லஞ்சம், ஊழல் முறைகேடு உள்ளிட்ட அனைத்தையும் இந்தியச் சமூகத்தில் மிக இயல்பாக செய்ய முடிகிறது. என்றால், இது நமக்கு உணர்த்துவது. அவற்றை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு இருக்கிறது என்பதைத்தான்.
ஆனால் இப்படிப்பட்ட செயல்பாடுகள் குறிப்பிட்ட தனிநபர்களின் தீய சிந்தனையாக‌வும், செயல்களாகவும் காட்டப்பட்டு உண்மைக்குப் புறம்பாக பிரச்சனை திசை திருப்பப்படுகிறது. இதன்மூலம் இவைகள் தொடர்ந்து உயிர் வாழத் தேவையான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படி நாங்கள் வரையறுப்பதாலேயே மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டிருக்கிறது என்பது எமது நிலைப்பாடல்ல. மாற்றத்திற்கான கூறுகள் வலிமையான அளவில் இச்சமூகம் கொண்டிருப்பினும் அது மிகச்சிறிய அளவில் முனை மழுங்கிக் கிடைப்பதுடன் சிக்கலான வடிவைக் கொண்டதாகவும் உள்ளன என்பதுதான் எமது கண்ணோட்டமாகும்.
ஒரு சமூகத்தில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் அடைய விரும்புவோர் அச்சமூகத்தின் யதார்த்த உண்மைகளைப் புறக்கணித்தாலோ, அதைப் பற்றிய அறிவின்மையைக் கொண்டிருந்தாலோ அவர்களால் இலக்கை எட்ட முடியாது என்பதை அறிவுறுத்தவே இவற்றை சுட்டிக் காட்டுகிறோம்.
'வன்னியன் ஆளவேண்டும்' என்ற இலக்கை எட்டுவதற்கு வன்னியர், பறையர் கூட்டு என்ற தந்திரம் பயன்படாது என்பதோடு, அது தனது இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்ற இக்கட்டுதான் புதிய தந்திரத்தைக் கையாள ராமதாஸ் தலைமையிலான குழுவை நிர்ப்பந்தித்துள்ளது. இதைத் தவிர அதற்கு வேறு வழியுமில்லை.
முந்தைய தனது தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ள இவர்கள் இப்போது ஆதிக்க சாதிகளின் கூட்டணி என்ற புதிய தந்திரத்தைக் கையாண்டு தமது இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்கின்றனர்..
ராமதாஸ் தலைமையிலான குழுவினரின் இந்தப் புதிய தந்திரம் வன்னிய சாதியினரின் ஆதரவை மட்டுமல்ல, அனைத்து ஆதிக்க சாதியினரின் தார்மீக ரீதியான ஆதரவையும் பெற்றுள்ளது.
இப்படி கிடைத்துள்ள தார்மீக ரீதியான ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில்தான் காதல் நாடகம், வன்கொடுமை தடுப்புச்சட்ட எதிர்ப்பு ஆகியவைகளை ராமதாஸ் முன்னிறுத்துகிறார்.
இப்போது பாமக கையாளும் அனைத்து சமூக கூட்டமைப்பின் சென்னை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், காதல் நாடகம் என்ற தனது கூற்றுக்கு ஆதாரமாக, காதல் நாடகத்தில் ஒரு பெண்ணின் குடும்பத்திடமிருந்து ரூ.10 கோடியை - தம்பி தலைமையிலான - ஒரு கும்பல் பறித்து விட்டதாகவும், இந்த அவமானம் தாளாமல் அந்தப் பெண்ணும், அவரின் தாயாரும் அமெரிக்கா சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் 'தம்பியோடு' சேர்ந்து பல சாதிமறுப்புக் காதலர்களை பிரித்ததைப் பற்றியும், அப்போது புரண்ட கோடிகளைப் பற்றிய பட்டியலையும் அய்யா வெளியிட்டால் அவர் தனது வாதத்திற்கு அசைக்க முடியாத பலத்தை சேர்த்து விடமுடியும்.
இப்படி நாங்கள் குறிப்பிடுவது ராமதாசை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூட சிலர் குற்றம் சாட்டுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இப்படிப்பட்ட கருத்தும், கண்ணோட்டமும் உடையவர்கள், அவர் அப்படி நடந்து கொள்ளமாட்டார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இருப்பின் அவைகளை வெளியிடட்டும்.
நாங்கள் அவர் இதைப் போன்றச் செயல்களில் ஈடுபடுவதை தனது இயல்பான நடவடிக்கையாகக் கொண்டவர் என்பதை கீழே நாங்கள் தொகுத்துள்ள அவரின் நடவடிக்கைகளில் இருந்தே சுட்டிக் காட்டுகிறோம்.
• தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் ஜீன்ஸ் பேண்டில் மேல் சாதி பெண்கள் மயங்கி விடுகின்றனர்.
•இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 18 - லிருந்து 21 - ஆக உயர்த்த வேண்டும்.
• பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய திருமணமே செல்லும் என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
ஆகிய கருத்துகளை தொடர்ச்சியாக ராமதாஸ் வெளியிட்டு வருகிறார். இவைகளில் இரண்டு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளது.
1.                    வன்னியன் ஆள வேண்டும் என்ற இலக்கு, நோக்கத்திற்காக தனது சாதி உள்ளிட்ட ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சாதிப் பெண்களின் சிந்தனையையும், ஒழுக்கத்தையும் இழிவுபடுத்துவது, கேள்விக்குள்ளாக்குவது.
2.                    பெண்ணடிமைத்தனத்தை வேறெப்போதும் இல்லாத அளவிற்கு நிலைநாட்ட முற்படுவது.
தான் தெரிவு செய்து கொண்ட இலக்கை அடைவதற்கு தனது சொந்த சாதிப் பெண்களையே இழிவுபடுத்தி, அவர்களை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒருவர், சாதி மறுப்புக் காதலர்களை பிரிப்பதற்கு கையூட்டு பெறமாட்டார் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
வேறு யாருமே இழிவுபடுத்த முடியாத அளவிற்கு ராமதாசே தனது சாதிப் பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்த முடிகிறது என்றால் இதைக்கேட்டு அந்த சாதியினர் மட்டுமல்ல, மேல்சாதிகள் என்று தங்களை கூறிக்கொள்வோர், பெண்ணுரிமை பேசுவோர் கூட இதற்கு எதிராக குரல் கொடுக்கக் கூடத் தயாராக இல்லை என்பது ராமதாசின் கருத்துகளில் இவர்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்பதும், இச்சமூகமே அதற்குரிய ஏற்புத்திறனுடன் தான் உள்ளது என்பதற்கான ஆதாரமுமாகும். இதை மேலும் புரிந்து கொள்ள மற்றொரு அம்சத்தையும் கணக்கில் கொள்வது அவசியமாகும்.
தம்மை மேல்சாதியினர் என்றுக் கருதிக் கொள்வோர் ஒவ்வொருவரும் தங்களுக்கிடையே உருவாகும் தகராறுகளின்போது மிக இயல்பாக - கணவன், மனைவிக்கு இடையிலும், தாய்க்கும், பிள்ளைக்கும் இடையிலான தகராறுகளின் போதுகூட - தன்னைவிட கீழ்சாதி என்று கருதும் ஆண்களோடு தான் தகராறு செய்யும் பெண்ணை மிகவும் ஆபாசமாக தொடர்புபடுத்தி திட்டுவது மிகவும் சாதாரணமான, இயல்பான, அன்றாட நடவடிக்கையாக உள்ள‌து.
இது எதைக் காட்டுகிறது? ராமதாஸ் எந்த ஆயுதத்தை எடுத்துள்ளாரோ, அதை தனது சாதியிடமிருந்துதான் எடுத்துக் கொண்டுள்ளார் என்பதைத்தானே! இப்படிப்பட்ட தனது பேச்சு தனது சாதிப்பெண்களை,,சாதியை இழிவுப்படுத்தும் ஒன்றாக ஒருவர் கூட கருதவில்லை. அந்த அளவிற்கு அது அவர்களின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது.
இதை மொத்த சமூகமே இயல்பான பண்பாடாக கொண்டிருப்பதால்தான் ராமதாஸ் தனது சாதிப் பெண்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த கூட்டமைப்பில் உள்ள சாதிப்பெண்கள் அனைவரையுமே இழிவுபடுத்தவும், கொச்சைப்படுத்தவும் முடிகிறது.
பருவ வயதில் காதல் வயப்படுவது என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இயல்பான நிகழ்வாகும். இப்படி காதல் வயப்படுதலே காதலாக மாறிவிடுவதில்லை. இவர்களில் 100 - ல் ஒன்றிரண்டு மட்டுமே காதலாக, திருமணமாக வடிவெடுக்கிறது. இவையும் பெரும்பாலும் சொந்தக்காரர்கள், பெற்றோர் ஆகியோரால் இழிவுபடுத்தப்படுவதாலும், பட்டம் சூட்டும் செயல்களினாலுமே தான் காதல் வயப்படும் ஆணையே திருமணம் செய்ய மேல்சாதி இளம் பெண்களை நிர்ப்பந்திக்கிறது.
இது சாதியைச் சொல்லி இழிவுபடுத்தும், பெண்மையை இழிவுப்படுத்தும் செயல்களின் எதிர்வினையாகும். தற்போது ஆதிக்கசாதி கூட்டமைப்புகள் தமது சாதியினரின் இயல்பான, தனித்தனியான கொச்சைப்படுத்தும் செயல்பாட்டை ஒருங்கிணைத்து ஊடகங்களின் வழியாக செய்கின்றனர். தமது இந்த செயல்பாடு சாதிமறுப்பு காதலர்கள் உருவாவதை மிரட்டி தடுத்துவிடும் என்று நம்புகின்றனர்.
இவைகள் அதற்கே உரிய வகையிலும், அளவிலும் எதிர்வினையாற்றும் என்பதை வரலாறு விரைவில் இவர்களுக்கு நிரூபித்துக் காட்டும்.
ஒரு சமூகமே இப்படிப்பட்ட கருத்தை உள்ளடக்கமாக கொண்டிருப்பதால்தான் ராமதாஸ் போன்றோர் இக்கருத்துகளை வெளிப்படுத்தவும், சமூகத்தில் செல்வாக்குப் பெறவும் வாய்ப்பாக அமைகிறது என்பதை மூடி மறைக்க முயல்வது இக்கேடு கெட்டத்தனத்தை பாதுகாக்கவே பயன்படும் என்பதை எப்படி நிராகரிக்க முடியும்?
எனவே ராமதாஸ் தனது சொந்த ஆதாயத்திற்காகத்தான் ஒரு சமூகத்தையே தலைகீழாக மாற்றிவிடுகிறார் என்ற கருத்தும், வாதமும் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சாதிகளின் அமைப்புகளை தனது தலைமையின் கீழ் ஒருங்கிணைப்பதில் ராமதாசு வெற்றி பெற்றிருக்கலாம்.
ஆனால், இந்தக் கூட்டமைப்பின் மூலம் 'வன்னியன் ஆளவேண்டும்' என்ற தனது இலக்கை அவர் அடைந்து விடமுடியுமா? முடியும் என்றுதான் அவர் கருதுகிறார். தமிழகம் தழுவிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிக்க சாதி கூட்டமைப்பின் காரணமாக தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கையையும் அவர் வலியுறுத்த மாட்டார் என்பதும் இப்போது புலப்படுகிறது.
இப்போது மட்டுமல்ல, பார்ப்பனியம் தமிழகத்தில் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்தே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டமைப்பு இயல்பிலேயே இருந்துதான் வருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பு அடிப்படையில் முந்தையதில் இருந்து வேறுபட்டதல்ல.
அதே நேரத்தில் இது முந்தைய கிராம அளவிளான செயல்பரப்பிலிருந்து, மாநில அளவிலான செயல் பரப்பிலானதாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பதுதான் இதன் தனித்தன்மையாகும்.
இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மீது ஒடுக்குமுறையை செலுத்துவதற்கு, தனது செழுமையான அனுபவங்களை பாமக இக்கூட்டமைப்பிற்கு வழங்கும். இதனால் தாழ்த்தப்பட்டோர் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய வகையிலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நிர்பந்திக்கப்படுவதால் தாழ்த்தப்பட்டோர் இந்த இக்கட்டிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக ஆதிக்க சாதி கூட்டமைப்பின் வலுவான செயல்தளங்களாக உள்ள கிராமப்புறங்களிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகள் தவிர்க்க வியலாமல் மேலும் அதிகரிக்கச் செய்யும்.
தாழ்த்தப்பட்டோரின் இப்படியான நடவடிக்கைகள் கிராமப்புறங்களை அதிலும் விவசாயத்தை, அதன் அழிவை இறுதிகட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இதன் தவிர்க்கவியலாத விளைவாக ஆதிக்க சாதிகளாகவும் – விவசாயிகளாகவும் உள்ளவர்களின் வாழ்வை மேலும் இது அடித்தளமற்றதாக்கும்.
சாதிய கூட்டமைப்பு தாழ்த்தப்பட்டோரை ஒடுக்க ஆதிக்கச்சாதிகளுக்கு மேலும் வலுவைத் தரும் என்றாலும், இதுவே இவர்களின் வாழ்வை மேலும் கேள்விகுள்ளாக்கும் தன்மையை உள்ளடக்கியுள்ளது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
ஒட்டுமொத்தத்தில் இது தற்கொலைப் பாதை என்பதை இவர்கள் காண மறுக்கின்றனர்.
ஆதிக்க சாதிகளின் கூட்டமைப்பு தாழ்த்தப்பட்டோரை ஒடுக்குவதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் வேண்டுமானால் அவைகளுக்கு பயன்படலாம். 'வன்னியன் ஆளவேண்டும்' என்ற பாமகவின் கனவை நிறைவேற்ற பயன்படாது.
தாழ்த்தப்பட்டோர், இக்கூட்டமைப்பின் கண்ணோட்டத்தில் கீழ்சாதி. அதே நேரத்தில் இந்தக் கூட்டமைப்பில் உள்ள சாதிகளில் கண்ணோட்டத்தில் பார்த்தால் வன்னிய சாதி கீழ்சாதி!
தன்னைவிட ஒரு கீழ்சாதி நாட்டை ஆள பிற சாதிகள் ஒப்புக்கொண்டுவிட்டதாக ராமதாசும் – பாமக –வும் கருதுவார்களேயானால் அவர்களுக்கு நாம் இப்போதே நமது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.
- சூறாவளி ( moodakizhavan@gmail.com, தொடர்பு எண்:9842529188)

Tuesday, 29 January 2013

சாதி ஒழிப்புக்கு கம்யூனிசமே காலத்தின் கட்டாயம்

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 4
இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட இயலாத போதாமையைக் கொண்டுள்ளன. இந்தப் போதாமையே இவைகளை வலது, இடது விலகல்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் செயல்படும் மகஇக குழும அமைப்புகள் வலது விலகலுக்கு ஆட்பட்டு சீர்திருத்த பிழைப்புவாதக் கும்பலாக சீரழிந்து போய்விட்டதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
 இந்திய புரட்சிகர அமைப்புகளின் போதாமை மார்க்சிய சித்தாந்தத்தின் போதாமை அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்காதது, எந்திர கதியாக அதைப் புரிந்து கொண்டு சமூகத்தின் மீது திணிக்க முயலும் அமைப்புகளின் போதாமையைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.
ramadoss_thirumavalavan_340மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை, இந்தியாவின் தனித்தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் திறன் மார்க்சிய அமைப்புகளுக்கு இல்லாவிட்டாலும், மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானம், ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் பல்வேறு செயல்களின் ஊடாக சமூக வளர்ச்சி என்ற வடிவில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு நிறைவேறுகிறது.
சமூக வளர்ச்சி ஆளும் வர்க்கங்களின் தேவை, நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப எந்த அளவிற்கு தடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு சாதியும், தீண்டாமையும் உயிர்வாழவே செய்யும். இந்திய சமுதாயத்திற்கு மார்க்சிய சித்தாந்தம் பொருந்தாது என்ற கருத்தின் உள்ளடக்கம், இந்திய சமுதாயத்திற்கு வளர்ச்சி என்பதும் பொருந்தாது என்பதே ஆகும்.
இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத சித்தாந்தம் மார்க்சியம் என்றால், அது உருவான அதே ஐரோப்பிய சமூகத்தில் உருவான ஜனநாயகம் மட்டும் இந்திய சமுதாயத்திற்குப் பொருந்துமா?
 தலித் அமைப்புகள் தமது பிழைப்புவாத தேவையிலிருந்து, எந்த ஜனநாயகத்தை இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் என்கிறார்களோ, அதை தமது ஆதிக்க சாதி வெறி தேவையிலிருந்து - மார்க்சியம் மட்டுமல்ல, ஜனநாயகமும் - பொருந்தாது என்கின்றனர் ஆதிக்க சாதியினர்.
ஜனநாயகம் காய் என்றால் மார்க்சியம் கனியாகும். பிழைப்புவாதம் என்ற மசக்கையிலிருந்து காயின் புளிப்பே மேலானது என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்பினர். ஆதிக்க சாதி வெறிப் போதையால் கல்லீரலையே இழந்து போன ஆதிக்க சாதி வெறியர்கள் காய் உருவாகவே விடமாட்டோம் என்கிறார்கள்.
 சமூக வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில் இவ்விருவருக்கிடையே அளவு ரீதியான வேறுபாடே உள்ளது. பண்பு ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். இந்த ஒற்றுமைதான் திருமாவளவனையும், ராமதாசையும் ஒன்றிணைக்கிறது.
எமது இதற்கு முந்தைய கட்டுரைகளை, மார்க்சிய விரோதம் என்ற லகானை மாட்டிக் கொண்டுள்ள சிலர், மார்க்சியம் வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டம் உடையது என்று முத்திரை குத்தியுள்ளனர். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக் கொள்ளுமாம். இதே போன்றுதான் மார்க்சிய விரோதப் பூனைகளும் கருதிக்கொள்கின்றன.
வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் இப்போது தர்மபுரியில் மட்டுமல்ல, அன்று 80களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார இலக்குகளையே குறிவைத்து தாக்கி அழித்தார்களே இந்நடவடிக்கைக்கு காரணம் என்ன?
அன்று 90 - களில் வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் பதிலடியாக ஆதிக்க சாதி வெறியர்களின் பொருளாதார இலக்குகள் மீது குறிவைத்துத் தாக்கினார்களே இந்நடவடிக்கையின் உள்ளடக்கம் என்ன?
ஒருவரின் பொருளாதார வளங்களைத் தாக்கினால், அது அவரின் சமூக பண்பாடு, கலாச்சாரம் உட்பட அனைத்திலும் சிந்தனா ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் இதைச் செய்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திற்கும், அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தமது பிழைப்புவாதத் தேவையிலிருந்து முன்னுக்குப்பின் முரணாக பிதற்றித் திரிகின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளித்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு – திண்ணியம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை காட்டிக் கொடுத்து காசாக்கிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது என்பவர்களுக்கு மார்க்சியம் பொருந்தாத சித்தாந்தம்தான்!
 தன் அளவிலான நலனே ஜனநாயகம் என்ற சித்தாந்தம் தானே விழுப்புரம், கண்டமங்கலம் அருகிலுள்ள பள்ளி நேலியனூரில் அருந்ததியரைக் காதலித்த பறையர் சாதிப் பெண் கோகிலாவை, அப்பெண்ணின் பெற்றோரே கொலை செய்ய வைத்துள்ளது. நாங்கள் பெற்ற பெண்ணை கொலை செய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நியாயம் பேசவும் வைத்திருக்கிறது!
விடுதலைச் சிறுத்தைகள் பறையர் சாதி அமைப்பு என்பதால் தானே, இந்த அநீதியைப் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. சிறுத்தைகளின் ஜனநாயக சவடால்கள் பறையர் சாதிக்கு மட்டும்தானா?
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பள்ளி மாணவன் பாரத்தை படுகொலை செய்த விடுதிக்காப்பாளர், காவலர், சமையல்காரர் ஆகிய மூவரையும் வழக்கில்லாமல் பாதுகாத்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.
கொலையுண்ட மாணவனும், கொலை செய்த குற்றவாளிகளும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொலையுண்ட மாணவன் ஏழை என்பதால் தானே கொலையாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் பாதுகாத்தனர்! ஒரே சாதியானாலும் ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது தானே விடுதலைச் சிறுத்தைகளின் நீதி!
தனது சொந்த சாதி மக்களில் ஒரு சிலரின் நலனை மட்டுமே பிரதிபலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், ஆதிக்க சாதி வெறியை முறியடிப்பார்கள் என்று நம்புவது கேழ்வரகில் நெய்வடியும் கதை தான்!
ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இடஒதுக்கீடே தீர்வு என்றார்கள். அதை அடைந்த பின்னரும் அவைகள் தீர்ந்தபாடில்லை. அதற்கு மாறாக அவைகள் விவசாயத்தின் அழிவு, விவசாயிகளின் தற்கொலை என்ற வடிவில் சமூகத்தை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
இப்போதும் இந்த அழிவை தடுப்பதற்கு மாறாக அதை திசை திருப்பி தீவிரப்படுத்தும் வழிமுறைகளைத்தான் ராமதாஸ் தலைமையிலான ஆதிக்க சாதி வெறிக் கும்பல் கையிலெடுத்துள்ளது. இந்த திருப்பணியைத்தான் ஆதிக்கச்சாதி வெறிக்கும்பலால் செய்யவும் முடியும்!
விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் சாதி தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் இவைகளுக்கு உள்ள வரலாற்று பாத்திர வரம்பினாலும், சமூக அழிவை- பெரும்பான்மை மக்களை சாதி கடந்து அணிதிரட்டும்- தடுக்கும் நடவடிக்கைகளில் பாத்திரமாற்றவும் முடியாது.
நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்டுவதில் போதாமையைக் கொண்டிருந்தாலும், தனது இயலாமைக்கான காரணங்களை பரிசீலனைக்குட்படுத்தி, மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்பு தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து, ஆளும் வர்க்கங்களால் உண்டாக்கப்படும் சமூக அழிவை தடுக்கும், காக்கும் தமது ஆற்றலையும், திறனையும் புரட்சியாளர்கள் விரைவில் நிரூபித்துக் காட்டுவார்கள்.

Wednesday, 9 January 2013

பாமக‍-வின் ஆதிக்கசாதிவெறி அரசியலின் பின்னணி என்ன?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 3
ஒவ்வொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களில் சிலர் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு வேலை வாய்ப்பைப் பெற்று பொருளாதார ரீதியில் தம்மை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கினர். அதோடு ஏராளமான தாழ்த்தப்பட்டவர்களும் கல்வி கற்க ஆரம்பித்தனர். இவர்களில் பெரும்பாலோர் தமது முன்னோர்கள் செய்த விவசாய கூலி வேலைகளை கைவிட்டு நகர்ப்புறங்களில் வேலைதேடிக் கொண்டனர். இவ்வேலை வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் கிராமப்புற விவசாய கூலி வேலையை விட மேம்பட்ட தன்மை உடையவைகளாயினும் பெரும்பாலும் பார்ப்பனிய எல்லைகளை கடந்தது அல்ல. எவை எல்லாம் கடினமானதும் ஆதிக்க சாதிகளால் இழிவானவைகளாகவும் கருதுப்படுகின்றனவோ அவைகளே தாழ்த்தப்பட்டவர்களுக்கான வேலைகளாக அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்தன. இப்போது நகர்ப்புற வேலை வாய்ப்புகளும் இந்த வறையறுப்பை முற்றாக நிராகரித்தவைகள் அல்ல. இவ்வரம்புகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தன.
குறிப்பாக மனித மலத்தை மனிதனே அகற்றும் வேலைகள் நூறு விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக்கானது. அரசின் அனைத்து துறைகளிலுமே துப்புறவு பணிகள், இட ஒதுக்கீடு இல்லாமலேயே முழுமையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கே ஒதுக்கப்பட்டன. ஆயினும் இவ்வேலைவாய்ப்புகள் கிராமப்புற வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது அதிக கூலியைத் தரக்கூடியனவாக ஆகும். இதுவும் பலரை பொருளாதார ரீதியாக மேம்பட வைத்தது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமூகமே உணர்வு ரீதியான மேம்பாட்டை சிறிது சிறிதாக அடைய ஆரம்பித்தது.
anbumani_ramadoss_gkmani_guru
தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கு கிராமப்புற ஆதிக்க சாதிகளை சார்ந்திருப்பதை தவிர்த்தன் மூலமும், மற்றும் நவீன கல்வியின் ஊடாகவும் தமது உணர்வுளை எந்த அளவிற்கு மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனரோ, அந்த அளவிற்கு சாதி, தீண்டாமைக்கு எதிராக போராடுபவர்களாகவும் உருவெடுத்தனர்.
 ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்கசாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் செயல்பாடுகள் பல்வேறு வடிவங்களில் வளர ஆரம்பித்தன. சாதி தீண்டாமைக்கு எதிரான தமது போராட்டத்தில் சட்டபூர்வ வாய்ப்புகளையும் பயன்படுத்த துவங்கினர். அரசு எந்திரம் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாப்பதற்கான கட்டமைப்பானாலும், பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துவதில், பாதுகாப்பதில் ஆதிக்க சாதி வெறியர்கள் கோரும், விரும்பும் வடிவில் ஏற்பதோ, நடைமுறைபடுத்துவதோ அதன் நலன்களுக்கு உகந்தது அல்ல என்பதால் தாழ்த்தப்பட்டவர்களை அதன் வரம்பிற்கு உட்பட்டு ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்படி தாழ்த்தப்பட்டோர் தமக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை போராட்டங்களின் ஊடாக முறியடிக்கவும் செய்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி, தீண்டாமைக்கு எதிரான ஒவ்வொரு செயல்பாடும் ஆதிக்க சாதிகளிடையே சகிக்க இயலாதவைகளாக மாறின. இதை முறியடிப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதிகள் கிராம அளவிலான தாக்குதலை மேற்கொண்டாலும், அதையும் மீறி தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதை அவர்களால் தடுக்க இயலவில்லை. இந்த வெற்றிகளை ஆதிக்க சாதிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டன.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியைத்தான் பாமக அமைப்பாக்கியது. இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விட்டதாகவும், தங்களை மதிப்பதில்லை என்றும், நாமும் முன்னேற வேண்டுமானால் நமக்கும் தனியே இடஒதுக்கீடு வேண்டும் என்றும், இதுவே வன்னிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான மாமருந்தாகவும் காட்டி சாதி வெறியூட்டியது.
இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்றப் பேரில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கி, தமது கண்களை உறுத்திய அவர்களின் குடியிருப்புகளை தீ வைத்து எறித்து சூறையாடி, அவர்கள் சேர்த்து வைத்த செல்வங்களை கொள்ளையடித்து கோரத்தாண்டிவமாடியது. பல பத்தாண்டுகளாக தாங்கள் அடக்கி வைத்திருந்த ஆதிக்க சாதி வெறியை இதன் மூலம் தணித்துக் கொண்டனர்.
ஆனாலும் இவைகளின் ஊடாகவும் ஆதிக்க சாதி வெறிக் கும்பல் எதிர்மறை விளைவுகளையே சந்தித்தது. இவர்களின் செயல்பாடுகள் தாழ்த்தப்பட்ட மக்களை மேலும் எழுச்சி பெறச் செய்ததே அல்லாமல் அடங்கிப் போக செய்யவில்லை.
வன்னிய ஆதிக்கசாதி வெறியூட்டல் செயல்பாடுகளின் மூலம் வன்னிய மக்களிடையே வலுவான அரசியல் சக்தியாக மாறிய பாமக தலைமை, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் அரசியல் பேரங்கள் மூலம் பெருமளவிலான பொருளாதார ஆதாயங்களை அடைந்தது. அதோடு வன்னிய ஆதிக்க சாதி வெறியின் அடையாளமான பாமக, திருமாவளனோடு அரசியல் கூட்டு என்று கூறி – அது நயவஞ்சகமானதானாலும் – தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதி வெறிக் நடவடிக்கைகளை தொடராதது ஆகியவைகளினால் பாமக மீது வன்னிய சாதியினரிடையே அவநம்பிக்கை படிப்படியாக வளர காரணங்களாக அமைந்தன. இதனோடு தமக்கான இட ஒதுக்கீட்டை அடைந்து விட்ட பின்னரும் கூட, தமது வாழ்வாதார பிரச்சனைகள் தீரவில்லை என்பதையும், அவைகள் மேலும் தீவிரம் அடைந்து வருவதையும் அனுபவ ரீதியாக வன்னிய சாதியினர் உணரவும் ஆரம்பித்தனர்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தும் வேலைக்கு மாறாக, தனது குடும்ப பொருளாதார நலன்களை அதிகரித்துக் கொள்வதே ராமதாசின் பிரதான வேலையாக மாறியது. தன்னைத் தவிர தனது குடும்பத்தினர் எவரையும் கட்சி பொருப்புகளுக்கு கொண்டு வரமாட்டேன் என ஆரம்பத்தில் சவடால் அடித்த ராமதாஸ், மகன் அன்புமணியை தனது வாரிசாக கட்சியில் நிலைநாட்டினார். அவரின் இப்படியான செயல்பாடுகள் பாமக - வில் குழுச்செயல்பாட்டை தீவிரமாக்கியது.
தமது நடவடிக்கைகளை எதிர்க்க துவங்கிய பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி, பேராசிரியர் தீரன் ஆகியோரை கட்சியிலிருந்து ராமதாஸால் இலகுவாக ஒதுக்கி விட முடிந்தது. ஆனால் ராமதாசுக்கு எதிரான வன்னிய சாதியினரின் கோபம் வேல்முருகன் வடிவில் வெடித்துச் சிதறியது. வன்னிய சாதியில் கணிசமானோர் வேல்முருகனோடு சேர்ந்து கொண்டனர். ஏற்கனவே, தமிழகத்தின் எந்த ஒரு இடத்திலும் தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற அளவிற்கு பலவீனமைடைந்திருந்த பாமக, வேல்முருகனின் வெளியேற்றத்தினால் மேலும் பலவீனமாகியது.
இந்த இக்கட்டான சூழலில்தான், வன்னிய சாதி மக்களிடம் தான் இழந்து போன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்ட, கடந்த பத்தாண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியை பாமக மீண்டும் கையிலெடுத்துள்ளது.
இதற்கு முன்னமே வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பயன்படுத்தி தோல்வி கண்டிருந்த பாமக, மீண்டும் அதை கையிலெடுத்திருக்கிறது. தனது இந்தச்செயல் தற்கொலைக்கு ஒப்பானது என்று பாமக தலைமைக்கு தெரியாதா? தெரியும். ஆனாலும் பாமக உயிர் வாழ இதைத் தவிர அதற்கு வேறுவழியுமில்லை!
கடந்த பத்தாண்டுகளாக திருமாவளவனோடு நயவஞ்சக நாடகமாடி தாழ்த்தப்பட்ட மக்களிடையே அதன் செல்வாக்கை சரிய வைத்துவிட்டதாலும், அதன் தலைமை போராடும் குணத்தை இழந்து பிழைப்புவாத கும்பலாக மாறி விட்டதாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து உடனடி எதிர்தாக்குதல் சாத்தியமில்லை என்று பாமக தலைமை உறுதியாக நம்புகிறது. இதனால் தான் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தனது செயல்பாடு எதிர்காலத்தில் பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் கூட, தன்னை பாதுகாத்துக் கொள்ள வேறு வழியின்றி அதை தெரிவு செய்து விட்டது.
தன்னுடைய இந்த செயல்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் எதிர் விளைவுகளை கருத்தில் கொண்டு தான், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி வெறி அமைப்புகளுடனும் பாமக கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் அறிக்கை போர் நடத்தும் அளவிற்கு மட்டுமே திறன் படைத்தவைகளாக இருப்பதும், பாமகவின் தற்போதைய நிலையை ஆளும் கும்பலும் தனது தேவையின் காரணமாக ஆதரிப்பதும் போன்ற காரணங்களால் தாழ்த்தப்பட்ட மக்கள், வன்னிய ஆதிக்க சாதி வெறியை தனித்து நின்று எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற யதார்த்தமான உண்மைகளைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் பதிவு செய்திருந்தோம்.
தொடரும்.....

Tuesday, 8 January 2013

 விடுதலைச் சிறுத்தைகளிடம் தலித்துகள் நம்பிக்கை இழந்தது ஏன்?

சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 2
வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வை அமைப்பாக்கிய விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடு சாதி, தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தவிர்க்கவியலாத வரலாற்றுப் பாத்திரமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாட்டால் கட்டமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், தமது செயல்பாட்டின் ஊடாக, விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களின் சாதி தீண்டாமைக்கு எதிரான உணர்வை மேலும் மேம்படுத்தியது. இதனால் பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட மக்களின் செல்வாக்கு மிக்க அமைப்பாகவும் அது திகழ்ந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வன்னிய ஆதிக்க சாதி வெறியை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் கொண்டே வருகின்றனர். இந்த ஆதிக்க சாதிவெறி பார்ப்பனியமாக அமைப்பாக்கப்பட்டிருந்தாலும், இதன் செயல் தளம் கிராம அளவிலானதாக சுருங்கி இருந்தது.
thirumavalavan_ramadoss_500
ஆனால் வன்னிய ஆதிக்க சாதி வெறி பாமக - வினால் மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் எல்லை பரந்து விரிந்த போது, இதற்கு முன்பு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து சட்டப்பூர்வமாக கிடைத்த வாய்ப்புகள், உரிமைகளினால் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைந்த வாழ்வாதார நலன்களை பல இடங்களில் அமைப்பாக்கப்பட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறி, தனது கோரப்பசிக்கு இறையாக்கிக் கொண்டது.
இந்த வன்னிய ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் போராடி முறியடிக்காவிட்டால், தாங்கள் உயிர் வாழக்கூட முடியாது என்ற நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த உணர்வை அமைப்பாக்கி, வன்னிய ஆதிக்க சாதிவெறிக்கு வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு சில இடங்களில் பதிலடி தந்தனர் விடுதலைச் சிறுத்தைகள். இந்த எதிர்தாக்குதல் ஒப்பீட்டளவில் சிறியதே ஆயினும் காலம், காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பை ஏற்படுத்தி இருமாந்திருந்த வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கும்பலுக்கு, இது முற்றிலும் புதியது என்பதால் இதை எதிர்கொள்ள முடியாமல் அது திணறியது, அஞ்சி நடுங்கியது.
 தமது இந்த சிறு எதிர்வினையாற்றலைக்கூட எதிர்கொள்ள வக்கற்ற ஆதிக்கசாதிவெறி கும்பலின் பலவீனத்தை அறிந்து கொண்டதால், ஏற்பட்ட உற்சாகம் தாழ்த்தப்பட்ட மக்களிடையே காட்டுத்தீயாய் பற்றிப் பரவியது பட்டி, தொட்டியெங்கும் விடுதலைச் சிறுத்தைகளாக அவர்கள் தம்மை அமைப்பாக்கிக் கொண்டனர்.
 இதன் காரணமாக வன்னிய ஆதிக்க வெறியின் அடையாளமான பாமக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தனது செயல்பாடு தற்கொலைப்பாதை என்பதை உணர ஆரம்பித்தது. இந்த உணர்வின் வெளிப்பாடுதான், பாமகவை தாழ்த்தப்பட்ட மக்களோடு அரசியல் ரீதியான கூட்டு என்ற நயவஞ்சக நாடகத்தை நடத்த வைத்தது. அமைப்பாக்கப்பட்டு மாநில அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதிக்க சாதி வெறித்தாக்குதல் வடிவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு முந்தைய கிராம அளவிலானதாக சுருக்கிக் கொண்டது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது நயவஞ்சக நாடகத்தில் திருமாவளவனை பங்கேற்க வைத்ததன் மூலம், ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வின் வெளிப்பாடாக திகழ்ந்த விடுதலை சிறுத்தைகளை தனது பாத்திரத்தை கைவிட வைத்தது.
தமது செயல்பாட்டுக்கான தளத்தை கைவிட்டதும் வேறொரு ஆதாயத்தை அதாவது அரசியல் கட்சிகளோடு தேர்தல் கூட்டு என்ற அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகளுக்கு பெற்றுத்தந்தது. இதன் மூலம் சிறுத்தைகள் பொருளாதார ஆதாயங்களை அடைந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களிடையே தம‌து செல்வாக்கை இழக்க ஆரம்பித்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு கிடைத்த பொருளாதார ஆதாயங்கள் பெருமளவில் அரசு எந்திரத்தோடு ஏற்பட்ட உறவின் மூலம் கிடைத்தது . இது படிப்படியாக வளர்ந்து அரசு எந்திரத்திற்கான தரகு வேலை பார்ப்பதே விடுதலைச் சிறுத்தைகளின் பிரதான வேலையாக, அலுவலாக மாறிப்போனது.
 சாராம்சத்தில் இது விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த துரோகமாகும். இதன் காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து மேலும், மேலும் தனிமைப்பட்டு அவர்களிடையே செல்வாக்கை இழக்க ஆரம்பித்தனர்.
மக்கள் நலன்களைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடுவதற்கும், தம்மை அர்பணித்துக் கொள்வதற்கு மட்டுமே எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புகளுக்கும் உரிமை உண்டு. மக்கள் நலனை பாதிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட எவருக்கும் உரிமையில்லை.
 சாதி தீண்டாமையை எதிர்த்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெடும்பயணத்தில் வன்னிய ஆதிக்க சாதி வெறித்தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுப்பது என்பதோடு விடுதலைச் சிறுத்தைகளின் பாத்திரம் நிறைவு பெற்று விட்டது. இந்த அளவில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு தாழ்த்தப்ப‌ட்ட மக்கள் தமது அங்கீகாரத்தை வழங்கியும் இருந்தார்கள்.
 இந்த வரம்பிற்கு மேல் சாதி தீண்டாமை ஒழிப்பில் சிறுத்தைகள் பங்காற்றவும் முடியாது.
ஆதிக்க சாதி வெறித் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்வினையாற்றல் நடவடிக்கையின் உள்ளடக்கம் பெருமளவில் தற்காப்பு என்பதே ஆகும், இதுவே சாதி தீண்டாமையை ஒழித்து விடாது.
 சாதி, தீண்டாமை நீடிப்பதற்கான அடிப்படையை சமுக மாற்றத்தின் மூலமே அகற்ற முடியும், இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே தனித்து நின்று சாதித்து விடமுடியாது. இதை சமுகத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஒருங்கிணைப்பின் முலமே அடைய முடியும்.
 விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், சாதி தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆதிக்க சாதி வெறியை கட்டுப்படுத்துதல் என்ற வகையிலான பாத்திரமே ஆற்ற முடியும்.
இது நிலவுகிற சமுக அமைப்பிற்கு உள்ளேயே ஆற்றும் பாத்திரமாகும். ஆகவே இது சாராம்சத்தில் நிலவுகிற சமுக அமைப்பை ஏற்கும் சீர்திருத்த நடவடிக்கையே ஆகும். நிலவுகிற சமுக அமைப்பை தூக்கி எறியாத சீர்திருத்த நடவடிக்கையின் உள்ளடக்கம், சாதி இருக்க சாதியினால் எழும் விளைவுகளை கட்டுபடுத்துவது என்பதே. அதாவது சாதியின் செயல்பாட்டு வடிவத்தை மாற்றுவதாகும்.
சாதிகள் இருக்கும் வரை அதன் பிரிக்க முடியாத அங்கமான தீண்டாமையும் நீடிக்கவே செய்யும். அவைகள் வடிவ மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாகத்தான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் சாதி தீண்டாமை ஒழிப்பில் தமது வரலாற்றுப் பாத்திரத்தை தாண்டித் செயல்பட முனையும் செயல்பாடுகள் அனைத்தும் அவர்களைத் தவிர்க்கவியலாமல் பிழைப்புவாத புதைகுழிக்குள்தான் தள்ளிவிடும்.
எனவே விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளின் பிழைப்புவாதத்திற்கான அடித்தளம் அவர்களின் அரசியல் பாதையில் தான் கருக்கொண்டுள்ளது.
எந்த ஒரு அமைப்பினதும், குழுவினதும் பிழைப்புவாதமும் தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளிலிருந்து உருவாவதில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாதமும் திருமாவளவன் என்ற தனி மனிதரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது எமது கண்ணோட்டமோ, கருத்தோ அல்ல. உண்மையிலேயே, மனப்பூர்வமாக தங்கள் சமூக நலன்களுக்காக பாடுபட வேண்டும், அதற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கூட, இவர்களின் இந்த விருப்பமே அதை நிறைவேற்றிவிடாது. அதற்கு மாறாக தாங்கள் அடைய விரும்பும் இலக்கும், அதை அடைவதற்கு அவர்கள் தெரிவு செய்து கொள்ளும் வழிமுறைகளுமே இதைத் தீர்மானிக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக தாம் தொடர வேண்டும் என திருமாவளவன் கருதியிருந்தால், வன்னிய ஆதிக்க சாதிவெறி அமைப்பான பாமக ராமதாசுடன் ஒப்புர‌வு நாடகமாடியிருப்பாரா?
வன்னிய ஆதிக்க சாதி வெறியால் அன்றாடம் பல்வேறு வடிவங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, இருசாதி மக்களிடையே எவ்வித ஒப்புர‌வும் ஏற்படாதபோது ராமதாசும், திருமாவளவனும் ஒப்புர‌வு கொண்டாடியதை தமது விருப்பத்திற்கு மாறானது என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதியதில் என்ன தவறு இருக்கிறது?
தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த கருத்தைத்தானே இப்போதுமட்டுமல்ல அப்போதும் எங்களைப் போன்றோர் வெளிப்படுத்தினோம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கிய அங்கீகாரத்தை, தேர்தல் பங்கேற்பு, அரசியல் கட்சிகளோடு கூட்டு என்று அவர்கள் வரம்பு மீறி தவறாகப் பயன்படுத்திய போதே, இது உங்களை பிழைப்புவாத புதை சேற்றில் தள்ளிவிடும் என்று பலரும் எச்சரித்தபோது, இதை ஏற்க மறுத்து, 'போராட்டங்களினால் மேல்சாதி மக்களோடு பகையும், வழக்குகளுமே வந்து சேர்கிறது. அதற்கு மாறாக அவர்களோடு இணைந்து நின்று தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தால்தான் சாதி, தீண்டாமையைக் கட்டுப்படுத்த முடியும்' என்று தானே தமது செயலை நியாயப்படுத்தினார்கள்.
ஆதிக்க சாதி அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டாலும், மக்களிடம் தாம் இழந்த செல்வாக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஆதிக்க சாதி வெறியை தூண்டுவதன் மூலம் மீண்டும் நிலை நாட்டி விட முடியும் என்பதை தர்மபுரி நிகழ்வின் ஊடாக பாமக நிரூபித்துள்ளது.
இதை எங்களைப் போன்றோர் அன்றே கூறி எச்சரித்தோமே, அதை ஏன் திருமாவளவன்கள் ஏற்கவில்லை?
'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டமுடைய' எங்களால் கூற முடிந்ததை, 'இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் சித்தாந்த அடிப்படையைக்' கொண்டவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் தடுத்தது எது?
தொடரும்...
தொடர்புடைய கட்டுரைகள்: