விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சுருதி. Show all posts
Showing posts with label சுருதி. Show all posts

Friday, 27 July 2012

சென்னை சிறுமி சுருதியின் சாவில் உயர்நீதிமன்றத்தின் சாகசம்!

இலண்டனில் இன்று (27.7.12முப்பதாவது ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. இந்த உலக விளையாட்டுத் திருவிழாவில் வீரர்கள் சாகசங்கள் நிகழ்த்தப்போவதை இந்த உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக சாசகம் ஒன்றை நிகழ்த்தி நம்மை திக்குமுக்காடச் செய்து விட்டது. தனியார் கல்வி கொள்ளையர்களின் லாப வெறி என்னும் கோரப்பசிக்கு பலியான சிறுமி சுருதியின் இறப்புச் செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்துவிட்டு, தாமாக முன்வந்து வழக்கை விசாரனணக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுதான் இந்த சாகசம் ஆகும்.

சென்னை, தாம்பரத்தை அடுத்த சேலையூரில் 25.7.12 அன்று தனியார் பள்ளிப் பேருந்தின் உள்ளே இருந்த ஓட்டை வழியே  தவறி கீழேவிழுந்த சிறுமி சுருதி பேருந்தின் சக்கரத்தில் நசுங்கி கோரமாக இறந்து போனாள். இந்தக் கொடுமையை கண்ணால் கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அப்பேருந்தை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்துள்ளனர்.அதோடு நில்லாமால் சிறுமியின் சாவுக்கு காரணமான கயவர்களை கைது செய்யக் கோரி மக்கள் சாலை மறியலும் செய்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளி முதலாளியோ  எரிக்கப்பட்ட பேருந்து தன்னுடைய பள்ளியைச் சேர்ந்த்து அல்ல என்று எவ்வித நெருடலும்  இல்லாமல் அறிவித்தான்.



பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில் இப்பிரச்சனையை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இப்பேருந்துக்கு அனுமதி அளித்த மண்டல போக்குவரத்து அதிகாரியையும், பள்ளி நிர்வாகிகளையும் இன்று 27.7.12 உயர்நீதி மன்றத்தில் நேர்நிற்குமாறு  உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் இறந்துபோன சிறுமியின் சாவுக்கு தனது இரங்கலையும்,சிறுமியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் ஒரு லட்சத்தை உதவித்தொகையாகவும் அறிவித்துள்ளது. அதோடு பள்ளியின் முதலாளி, மண்டல போக்குவரத்து அலுவலர், பேருந்து ஓட்டுநர், உதவியாளர் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளது.  சிறுமியின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மொத்தத்தில் சிறுமி, தனது சாவுக்கு பின்னர் பெரும் தலைவருக்குரிய தகுதியை பெற்று விட்டாள்.



நேற்றுவரை யாரென்றே தெரியாத சிறுமி இன்று இந்த அளவிற்கு ஆனதற்கு   ஊடகங்களின் பிரச்சாரம், உயர்நீதிமன்றத்தின் தலையீடு, ஆகியவையே காரணமாகும். 

சிறுமியின் உயிரைக்குடித்த பேருந்தை தீ வைத்து கொளுத்திய வன்முறையாளர்களின் செயல்தான் உயர்நீதிமன்றத்தை தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்ததற்கு அடிப்படையாகும். இப்படிப்பட்ட வன்முறைகள் ஊடகங்களையும், நம்மையும் ஈர்ப்பது அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஆனால் சட்டத்தின் காவலனான உயர்நீதி மன்றத்தையும் ஈர்த்ததுதான் நமது கவனத்திற்குரியதாகும்.

ஒரு மனித உயிர், சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட அரசுதுறையின் முறைகேடான செயல்பாடுகளால் பறிபோனாலும், அது எவ்வளவுதான் அநீதியான, அக்கரமமான செயலாக இருந்தாலும் அதை சட்டப்படி சந்தித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர, சட்டத்தை பொது மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ள உரிமை இல்லை என்று சொல்லி, சட்டபூர்வ ஆட்சியை  நியாயப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பான உயர்நீதிமன்றத்தை வன்முறையாளர்களின் செயல் ஈர்த்துள்ளது என்பது மிகமுக்கிய நிகழ்வாகும்.அப்படியானால் பேருந்தை எரித்த வன்முறையாளர்களான பொதுமக்களின் மீது வழக்கு தொடுக்கக்கூடாது என உயர்நீதி மன்றம் அரசுக்கும்,காவல்துறைக்கும் பகிரங்கமாக உத்தரவிட முடியுமா?

இந்நிகழவில் உயர் நீதிமன்றத்தின் தலையீடும், செயல்பாடும் சட்டத்தை நடைமுறைப்படுத்த  அமைக்கப்பட்ட அரசுத்துறைகள், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும்போது, அதற்கெதிராக பொதுமக்கள் வன்முறையை கையாள்வதில் தவறில்லை என்பதை  போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது.ஆனால் உண்மையில் உயர்நீதி மன்றத்தின் நோக்கம் அதுதானா?

இல்லை. இதற்கு நேர்மாறான காரணத்திற்காகத்தான் நீதிமன்றங்கள் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் தானாக முன்வந்து தலையிடுகின்றன. இப்படிப்பட்ட வன்முறைகள் மீண்டும் நடக்கக்கூடாது. இதைப்போன்ற நிகழ்வுகள் முன்னுதாரணங்களாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் இத்தலையீடுகளின் நோக்கமாகும்.



சட்டத்தை பாதுகாப்பதற்காக, சட்டப்படி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் அரசும், அரசுத்துறைகளும் உண்மையில் அதற்காக இல்லை என்பதையும், அவைகள் மக்களை ஒடுக்கும் வன்முறைக் கருவிகள் என்பதும், மக்களின் உழைப்பை, இயற்கை செல்வாதாரங்களை சுரண்டுவதற்கும், கொள்ளை அடிப்பதற்குமான சமூகத்தை பாதுகாப்பதற்குமே என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி விடுகின்ற நிகழ்வுகள்தான் சிறுமி சுருதியின் இறப்பு போன்றவைகள்.

இப்படிப்பட்ட அநீதிகளை முறையிடுவதற்கான இடம் எதுவுமில்லை என்ற  உண்மையை மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டதன் வெளிப்பாடுகள்தான், தாமே குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனையாகும். ஆனால் இதை சட்டத்தின் மொழியில் கூறுவதாயின், மக்கள் சட்டத்திற்கு புறம்பாக, சட்டத்தை கையிலெடுத்துக் கொண்ட வன்முறை செயலாகும்.

மொத்தத்தில் சட்டம் முழுமுற்றாக செயலிழந்து விட்டது என்று மக்கள் கருதும் நிகழ்வுகள் நடைபெறும் போதுதான், அரசும், அரசுத்துறைகளும் செயலிழந்து போனாலும் சட்டத்தை பாதுகாக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன என்று காட்டிக் கொள்ளும் செயல்கள்தான் சிறுமியின் சாவில் தானே முன்வந்து உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ள நிகழ்வாகும்.

இப்பிரச்சனையில் உயர்நீதிமன்றம் தலையிட்டதன் மூலம் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கட்டாயமாக வழக்குப்பதிவு செய்யப்படும். அதோடு குற்றவாளிகளுக்கு தண்டனையும் கூட வழங்கப்படலாம்!

ஆனால் இதன்மூலம் முற்றாக சட்டத்திற்கு புறம்பாகவும், மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதையே தமது அன்றாட நடைமுறையாகக் கொண்டுள்ள நீதிமன்றங்கள் உட்பட அனைத்து அரசுத்துறைகளையும் மாண்புமிகு நீதியரசர்கள் எப்படி, யாரைக் கொண்டு தண்டிக்கப்போகிறார்கள்? முடியாது என்பதுதான் தெள்ளத்தெளிவான விடையாகும்.

எப்படியாவது நிலவுகிற இந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிராக, அதன் அவலங்களுக்கு எதிராக மக்கள் ஒன்று திரள்வதையும்,செயல்படுவதையும் தடுப்பதுதான் நீதிமன்றங்களின் இப்படியான தலையீடுகளின் உள்ளடக்கமாகும். தனி நபர்களை தண்டித்து, சட்டத்தை மேன்மையானது என்றுக் காட்டி,தவறுசெய்யும் தனி நபர்களின் செயல்கள் அனைத்திற்கும் அடித்தளமான இக்கேடுகெட்ட சமூகத்தை எப்படியாவது பாதுகாத்திடுவதே நீதிமன்றங்களின் இலக்காகும்.

இப்படிப்பட்ட தவறுகள் அனைத்திற்கும் அடிப்படை எப்படியாவது, எதைச் செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறிதான் காரணம். இந்த வெறியை சட்டப்படி உருவாக்குவதே நிலவுகிற சமூக அமைப்புதான். 
சிறுமியின் சாவுக்கு காரணமான தனிநபர்களை மட்டுமே தண்டித்துவிட்டு இவர்களை உருவாக்கும் சமூகத்தை பாதுகாப்பது என்பது, எய்தவனை விட்டுவிட்டு அம்பை நொந்துகொள்வதும்,சாக்கடையை ஒழிக்காமல் விட்டுவிட்டு,கொசு வத்தி விற்பதுமான ஏமாற்று செயலல்லாமல் வேறென்ன? 

1.மனித உரிமை:பறையன்னா விடு,வன்னியன்னா போராடு!வினவு கும்பலின் அகராதி!



2.பெண்ணாடம் பள்ளி விடுதியில் அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை



.