”தலித் சமுதாயத்தைச்
சேர்ந்த இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களை
குறிவைத்து, அவர்களிடம் நயவஞ்சகமாக பேசி, அவர்களை காதல் வலையில் விழவைத்து,
பின்னர் திருமணம் என்று ஒன்றை செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து
பெண்வீட்டாரிடமிருந்து பொருள்களை வாங்கிவா, பணம் வாங்கி வா என்று கூறி அவர்களை வீட்டுக்கு
அனுப்பி விடுகின்றனர்”.
மேலே கண்ட கூற்றுக்கு சொந்தக்காரர் பாமக டாக்டர்
ராமதாஸ். கடந்த 26.11.12 அன்று நெய்வேலியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தான் இப்படிக் கூறியுள்ளார்.
இவர் மேற்கண்ட வாறு பேசிய மறுநாளே கடலூர் மாவட்டம்,
குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள கிராமமான
பாச்சார பாளையத்தில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகளை பாமகவினர் தீ வைத்து
எரித்துள்ளனர்.
டாக்டர் ராமதாஸ் இதே பேட்டியில் தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தில் தமது
கட்சிக்கு கடுகளவு கூட சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றுள்ள சம்பவத்திலும் தமக்கு சம்பந்தம் இல்லை என்று கூறுவாரா
என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!
தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்ற
சமுதாயத்தை சேர்ந்த பெண்களை குறிவைத்து நயவஞ்சகமாக பேசி, காதல் வலையில்
விழவைப்பதாகவும், இந்தச் செயலை சில தலித் அமைப்புகள் ஊக்குவிப்பதாகவும்
கூறியுள்ளார். இதன் மூலம் தனது சாதியான
வன்னிய சாதியின் நலனை மட்டுமல்ல, அனைத்து ஆதிக்க சாதி நலனிற்காகவும் தான் குரல்
கொடுப்பதாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.
தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது இப்படி
பொத்தாம் பொதுவாக ராமதாஸ் குற்றச்சாட்டை கூறியிருக்கிறாரே தவிர, அதற்கான ஆதாரம்
எதையும் அவர் வெளியிடவில்லை.
தமிழகம் முழுவதும் ஒரு ஆண்டில் எவ்வளவு
காதல் திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில் சாதி மறுப்பு திருமணங்கள் எவ்வளவு,
இவற்றில் தோல்வியில் முடியும் திருமணங்கள் எவ்வளவு, இதற்கு என்னக் காரணம், தலித்
இளைஞர்கள் சம்பந்தப்படாத காதல் திருமணங்கள் தோல்வி அடைகிறதா, இல்லையா, அப்படி
தோல்வி அடைந்தால் அதற்கு என்னக் காரணம், தோல்வி அடையாவிட்டால் என்னக் காரணம், சாதி
மறுப்பு அல்லாத ஒரே சாதியில் நடைபெறும் காதல் திருமணங்கள் எவ்வளவு, அவற்றில்
தோல்வி அடையும் திருமணங்கள் அதற்கான காரணங்கள் இப்படி அடுக்கடுக்கான வினாக்களும்,
அவற்றிற்கான பதில்கள், ஆதாரங்கள் எதையுமே கூறாமல் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மட்டுமே
மற்ற சாதி பெண்களை காதலிப்பதை போன்றும்,
அவைகள் தோல்வியில் முடிவதைப் போன்றும் பேசியுள்ளார்.
பொதுவில் நமது நாட்டில் ஏற்பாடு
செய்யப்படும் திருமணங்களை காட்டிலும் காதல் திருமணங்கள் அதிக அளவில் தோல்வியில்
முடிகிறது என்பது நடைமுறை உண்மையாகும்.
இதற்கு காதலர்கள் காதலிக்கும் போது காமம்
அல்லாத பிற வாழ்க்கைப் பற்றிய விவகாரங்களில் பெரும்பாலும் கவனம் ஏதும்
செலுத்துவதில்லை. இப்படி நடைபெறாதன் விளைவாக திருமணத்திற்கு பின்னர் நடைமுறை
வாழ்க்கையில் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமைகள் உச்ச நிலைக்கு சென்று
இத்திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
குறிப்பாக காதலிக்கும் பெண்கள் மற்றப்
பெண்களை காட்டிலும் ஜனநாயக உணர்வில் மேம்பட்டவர்கள். பெரும்பாலும் காதலிக்கும்
போது ஆண்கள், பெண்களின் உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
திருமணத்திற்கு பின்னர் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கின்றனர்.பெண்ணடிமைத் தனத்தை
திணிக்கின்றனர்.
இதோடு காதல் தம்பதியினரை பெரும்பாலான உறவுக்காரர்கள்
ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக
தம்பதிகளிடையே எழும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கோ, அல்லது சமசரப்படுத்துவதற்கோ யாரும் முன்வராததும் காதல்
திருமணங்கள் மணமுறிவை நோக்கி விரைவாக சென்று விடுகின்றன.
அதே நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும்
திருமணங்கள் பெரும்பாலானவை வரதட்சனை பிரச்சனையாலேயே மணமுறிவை சந்திக்கின்றன.ராமதாசோ சாதி மறுப்புத்
திருமணங்கள்தான் வரதட்சணைப் பிரச்சனையால் பிரிகின்றன என்கிறார்!
ஆனால், பாமக ராமதாசோ இவைகள் எதையும்
கணக்கில் கொள்ளவே மறுக்கிறார். சாதிமறுப்பு திருமணங்கள் மட்டுமே தோல்வி அடைவது
போலவும் தாழ்த்தப்பட்டவர்களை திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மட்டுமே வரதட்சணை
கொடுமைக்கு ஆளாவது போலவும் கயிறு திரிக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக 3.11.12 அன்று
தர்மபுரியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ராமதாஸ் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக
பயன்படுத்தப்படுகிறது. ஆகவே அதில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறியுள்ளார்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம்
கொண்டு வரவேண்டும் என்று ராமதாஸ் கூறினாலும் உண்மையில் அந்தச் சட்டத்தையே
நீக்கிவிடவேண்டும் என்பதுதான் ராமதாஸ் பேச்சின் உள்ளடக்கம். இந்த கோரிக்கை ராமதாசின் கோரிக்கை மட்டுமல்ல
தமிழகம் முழுக்க உள்ள சாதி வெறி அமைப்புகளின் கோரிக்கையாகும்.
உண்மையில் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம்
கொண்டுவந்து அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். அன்றாடம் தமிழகத்தில் குறைந்தது
ஆயிரம் பேர் மீதாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுக்க
முடியும். தாழ்த்தப்பட்டோரை இழிவுப்படுத்துவது ஆதிக்க சாதிகளின் அன்றாட பண்பாடாக
உள்ளது. ஆனால் மிகவும் அபூர்வமாகத்தான் இந்தச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
பாமக ராமதாஸ் கூறுவது போல இந்தச்சட்டம்
காவல் துறையோடு கூட்டு வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் விடுதலை சிறுத்தைகள்
போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தபட்ட விவகாரங்களில் மட்டுமே பெரும்பாலும்
பயன்படுத்தப்படுகிறது. இப்படி தொடுக்கப்படும் வழக்குகள் பெரும்பாலும் சாட்சி
பிறழ்வுகளின் மூலம் தோல்வியடைய செய்யப்படுகின்றன. அல்லது வழக்குகள் நீதிமன்றத்திற்கு செல்லாமலேயே காவல்
நிலையங்களிலேயே சமரசப்படுத்தப்டுகின்றன. இப்படி நடப்பதற்கு பேரங்களே காரணமாக உள்ளது. உண்மையில் இந்த
வழக்குகள் சாதி வெறியர்களை தண்டிப்பதற்கு பதில் போலிசு மற்றும் விடுதலை சிறுத்தை
அமைப்பில் உள்ள பிழைப்பு வாதிகளின் பைகளை நிரப்புவதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தடுக்கப்பட்டு
உண்மையிலேயே சாதி வெறியர்கள் அனைவரின் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டம் பாயும்
வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்கள் இச்சட்டத்தில் கொண்டுவரப்பட
வேண்டும்.
ராமதாசின் வாதப்படியே இந்தச்சட்டம் தவறாக
பயன்படுத்தப்படுவதால் தேவையில்லை என்றால்
இந்திய அரசியல் சட்டம் உட்பட அனைத்து சட்டங்களும் தவறாகத்தான்
பயன்படுத்தப்படுகின்றன. எனவே இவைகள் அனைத்தையுமே நீக்கிவிடமுடியுமா?
உண்மையில் இப்படி நீக்கிவிட வேண்டும்
என்பதுதான் சாதி வெறியர்களின் விருப்பமுமாகும். ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள்
இப்போது ஆதிக்கசாதி பெண்களை திருமணம் செய்ய துணிகிறார்கள் என்றால் அதற்கு
மாறிப்போன சமூக, பொருளாதார வாழ்வும் அதற்கு ஏற்ப
உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களுமே காரணமாகும். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள்
கல்வி,வேலை வாய்ப்பு உட்பட அனைத்து சமூக நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடிகிறது.
ஆதிக்க சாதி பெண்களை காதலிக்கவும், திருமணம் செய்து கொள்ளவும் முடிகிறது. எனவே
தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உரிமைகளை பறிக்க வேண்டும்.
அப்போதுதான் இவைகளை தடுக்க முடியும்.
ஆனால் இதை வெளிப்படையாக கூறமுடியாமல் தான்
சுற்றி வளைத்து பேசுகிறார்கள். சாதிமறுப்பு திருமணங்களை காரணம் காட்டி
தாழ்த்தப்பட்டோர் இந்த சட்டங்களை பயன்படுத்தி சேர்த்த செல்வத்தை அழித்து
ஆனந்தமடைகின்றனர்.
நாட்டில் பெரும்பான்மையினர் ஆதிக்க
சாதிகள்தான். தாழ்த்தப்பட்டோர் சமூக சமத்துவம் பெறுவதை அனைத்து சாதி வெறியர்களும்
எதிர்க்கிறார்கள். வெளிப்படையாக தீர்மானங்களும் நிறைவேற்றுகிறார்கள். சரியோ, தவறோ
தாங்கள் கடைபிடிக்கும் சாதிய பண்பாட்டில் சாதி வெறியர்கள் உறுதியாக இருந்தால்
அதாவது தாழ்த்தப்பட்டோரை தமக்கு சம்மாக ஏற்க முடியாது என்பதில் ஊறுதியாக இருந்தால்
அதுதான் நியாயம் என்று இவர்கள் கருதினால் தாழ்த்தப்பட்டோருக்கு இந்திய அரசியல்
சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக போராட வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் அவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள சட்ட பூர்வ உரிமைகளை மறுதலிக்க வேண்டும்.
இதை நடைமுறையில், அரசுப்பணிகளில் மேலதிகாரிகளாக
உள்ள தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களின் கீழே, பணிபுரிவதை ஆதிக்க சாதியை
சேர்ந்தவர்கள் ஏற்கக் கூடாது. அதாவது அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றக் கூடாது
அல்லது அரசு வேலைகளை தூக்கியெறிந்து அரசுக்கு நெருக்கடி தரலாம்!
பேருந்துகள், ரயில்கள், விமானங்களில் அனைத்து
சாதியினரோடும் சமமாக தாழ்த்தப்பட்டவர்கள் பயணம் செய்வதை எதிர்த்துப் போராடலாம்.
இதை சாதிக்க இவற்றில் பயணம் செய்வதை ஆதிக்க சாதிகள் புறக்கணிக்கலாம்.
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்பதும்,
பொருளீட்டுவதும் தான் மேல்சாதி பெண்களை காதலிக்கவும், திருமணம் செய்யவும் காரணமாக
அமைவதால் தர்மபுரி போன்ற நிகழ்வுகளில் பாமக கடைபிடித்துள்ள சொத்துக்களை
சேதப்படுத்துவது என்பதோடு நிறுத்திவிடாமல் நாடு முழுக்கச் செய்து தாழ்த்தப்பட்டோர்
சொத்து சேர்க்கும் உரிமையையே சட்டப்படி தடுக்கும் வகையிலான நிர்பந்தத்தை ஆட்சியாளர்களுக்கு
ஏற்படுத்தலாம்!
இதே போன்று பள்ளிக், கல்லூரிகளில்
தாழ்த்தப்பட்ட மாணவர்களை படிக்கவிடாமல் தமது சாதி மாணவர்களை கொண்டு அடித்து விரட்டுவதை
தொடர் இயக்கமாக நடத்தலாம். இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி
தாழ்த்தப்பட்டோரின் கல்வி உரிமையையும் பறித்துவிடலாம்!
இப்படிப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் மூலம்தான்
சாதிமறுப்பு திருமணங்களை முற்றாக தடுக்க முடியும். எனவே இதை செய்வதற்கு பாமக
ராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிகளையும் ஒருங்கிணைத்து வழி நடத்தலாம்!
இப்போதுள்ள இந்த சமூக கட்டமைப்பிற்கு
மாற்றாக ராசராசன் கால ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று அறிவிக்கலாம். இதன் மூலம்
அனைத்து ஆதிக்க சாதிகளையும் எளிதாக கவரமுடியும்.
எனவே இதை சாதிப்பதற்கு, இந்த அபூர்வ திறமை
படைத்த மனிதரான ராமதாசை அனைத்து ஆதிக்க சாதிகளும் தமது தலைவராக ஏற்றுக் கொண்டு
செயல்பட முன்வரவேண்டும்.
குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான
படுகொலைகள் நிகழ்த்திய மோடி, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்த
ராசபக்சே ஆகியோருக்கு இணையானவர் ராமதாஸ்.ஏனேன்றால் மோடியும்,ராசபக்சேவும்
குஸராத்திலும்,இலங்கையிலும் நடந்த படுகொலை சம்பவங்கள் அனைவரும்அறிந்த உண்மை
என்றாலும் இவைகளில் தமக்கு துளி கூட சம்பந்தமில்லை என்றுதான் இன்றுவரை
கூறிவருகின்றனர்.இதையேதான் தர்மபுரியில் நாயக்கன்கொட்டாய் விவகாரத்திலும்
அச்சுபிசகாமல் தமது பங்காளிகளான மோடி,ராசபச்சே ஆகியோரின் வார்த்தைகளை அப்படியே
ஒப்பிக்கிறார். அவரை மட்டும் தலைவராக ஏற்றுக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை அவருக்கு ஆதிக்க
சாதிகள் வழங்குமேயானால் தமக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்களின் கனவுகளை சத்தியமாக
அவர் நிறைவேற்றி வைப்பார்!
தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்யும் துணிவு படைத்தவர்
அவர்! இதனால் தான் தமது சாதி
பெண்களின் மானத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த
ஆதிக்கசாதி பெண்களின் மானத்தையும் பகடைக்காயாக பயன்படுத்தி தாழ்த்தப்பட்டோரின்
ஆதிக்கத்தை முறியடிக்க புறப்பட்டுள்ளார் அவர்.
அதாவது தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு
மேல்சாதி பெண்களை மயக்கி, காதல்வயப்படுத்தி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று
கூறுகிறார் ராமதாஸ்.
சாதிமறுப்பு திருமணம் செய்யும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக தர்மபுரியை காட்டி எச்சரிக்கும் ராமதாஸ்,
தாழ்த்தப்பட்ட இளைஞர்களிடம் அறிவிழந்து மயங்கும் தமது சாதி பெண்களின் நிலைக்கு
தீர்வு எதையும் கூறவில்லை.
இப்படி கூறாதது தற்செயலான ஒன்றல்ல, தமது சாதிப் பெண்களின் இந்தச்
செயல்தான் தம்மை பலப்படுத்திக் கொள்ள ராமதாஸ் எடுத்துள்ள அதாவது தமது சாதி பெண்களின் மானத்தை அடமானம்
வைத்துதான் தனது அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்ள அவர் முனைகிறார்.
தமது சாதி பெண்களின் மானத்தை வைத்து
பகடையாடும் ராமதாசின் தொழில் மருத்துவமா,வேறு
ஏதாவது இருக்குமோ என்று குழப்பமாக உள்ளதா? எதைச் செய்தால் என்ன? அதன்மூலம் ஆதாயம்
அடைந்தால் சரி!
தமது சாதிப்பெண்களை
வைத்து அரசியலில் தன்னை வலுப்படுத்திக்கொள்ள கருதும் ராமதாஸ் தமது சாதிப்பெண்களை
மட்டுமல்ல ஒட்டுமொத்த மேல்சாதிப்பெண்களையும் இழிவுபடுத்தியுள்ளார்.இவ்வளவு
வெளிப்படையாக,துணிவாக ராமதாசை தவிர வேறு யாரும் பெண்களை வைத்து அரசியல் தொழில்
நடத்திக்கொண்டே அவர்களை இழிவுப்படுத்தி,கொச்சைப்படுத்துவதோடு இவைகளை வெளிப்படையாக
,பகிரங்கமாகவும் அறிவிக்கவும் முடியுமா என்ன?!