விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 31 December 2015

பெருமழை,பெருவெள்ளம்: தன்னார்வலர்களின் இலக்கற்ற நிவாரணப்பணிகளின் விளைவுகள்!


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தைவிட 112 சதவீதம் கூடுதலாக இந்த ஆண்டு இரண்டொரு நாட்களில் சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,கடலூர் மாவட்டங்களில் கொட்டோ, கொட்டென்று கொட்டி விட்டது. இதனால் தமிழகத்தின் தலைநகரான சென்னை, அதன் வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளத்தில் மிதந்தது.

கூவம்,அடையாறு,பக்கிம்காம் கால்வாய் ஆகிய சாக்கடைகளின் ஓரத்தில் வாழ்ந்த பஞ்சை பராகரிகளை மட்டுமல்ல அண்ணாநகர், அடையாறு போன்ற மேட்டுக்குடிகள் வாழும் பகுதிகளையும் இந்த பெருவெள்ளம் விட்டுவைக்கவில்லை.அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் அங்கேயே பலநாட்கள் முடங்கிக் கிடந்தனர்.

ஊரெல்லாம் தண்ணீர் என்றாலும் ஒரு வாய் குடிப்பதற்கு குடிநீர் கிடைக்கவில்லை. சாப்பிடக் கூட நேரம் ஒதுக்க முடியாது என்றுக்கூறிக் கொண்டு, பணமே அனைத்தும் என்றிருந்தோருக்கு ஒரு கவலம் சோறு கிடைக்காமல் தவித்துப் போனார்கள்.ஒரு வாய் சோத்துக்கும், தண்ணீருக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என ஏங்கித்தவித்தனர். சென்னை சிலநாட்கள் முற்றிலும் தனித்தீவானது. அனைத்து போக்குவரத்தும், தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.பல லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் உயிர் பிழைப்போமா என்ற சந்தேகத்தை சுமந்தனர். தமது குழந்தைகளை வைத்துக்கொண்டு அழுது புலம்பியது அனைவரது நெஞ்சத்தையும் கரைத்தது.

சென்னைக்கு அதிலும் மாநகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும்,மக்களுக்கும் அதிலும் இளைய தலைமுறை தமது வாழ்நாளில் முதன்முறையாக சந்தித்த பெரும் துயரம் இது.
ஆனால் கடலூர் மாவட்ட மக்களோ இந்தத் துயரங்களை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக சந்திப்பவை, பழகிப்போனவை.

2004 சுனாமி பேரழிவை அடுத்து 2012 தானேப்புயல் இம்மாவட்டத்தை முற்றாக புரட்டிப்போட்டது. இந்த ஆண்டு பருவமழை மீண்டும் ஒரு பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் கொட்டித்தீர்த்த வடகிழக்கு பருவமழையும், அதைத்தொடர்ந்து தமிழக வரலாற்றில் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த தன்னார்வர்களின் நிவாரணப்பணிகளும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது!

தமிழ்கத்தில் எங்கு திரும்பினாலும் வெள்ள நிவாரண வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அணி வகுத்தன.பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு பகுதியிலும், ஊரிலும் ஏராளமான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான மக்களை வெள்ளத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்தனர்.

இந்த நாட்டையே, உலகையே வியப்படையச் செய்த தன்னார்வலர்களின் வெள்ள நிவாரணப்பணிகள் வேறெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நடந்ததற்கு என்னக்காரணம்?

இந்த நிவாரணப்பணிகள் எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இனி வரும்காலங்களில் இயற்கை பேரிடர்களின் போது இதேப் போன்று தன்னார்வலர்களின் தொண்டு தொடருமா?

தன்னார்வர்களின் சேவை நிவாரணம் அளிப்பது மட்டும்தானா? போன்ற எண்ணற்றக் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் வந்தபின் நிவாரணம் அளிப்பதைக்காட்டிலும் வருமுன் காப்பதே சாலச்சிறந்தது என்பதினால்.

சுனாமி,புயல்,மழை,பெருவெள்ளம் ஆகியவை இயற்கை பேரிடர்கள். அவைகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியாதுதான்.ஆனால் அவைகளில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும். ஏனெனில் நாம் மனிதர்கள். மந்தைகள் இல்லை.

ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போதும் ஊடகங்களும், ஆட்சியாளர்களும் அவற்றை தடுப்பது பற்றியும், அதிலிருந்து காத்துக்கொள்வது பற்றியும் நமக்கு திகட்டும் அளவுக்கு பேசுகிறார்கள். இவை அனைத்தும் ஒன்றிரண்டு வாரங்கள் மட்டுமே நடக்கின்றன. பின்னர் அதைப்பற்றி எவரும் திரும்பிப்பார்ப்பதில்லை.

பேசுபவர்களும் மறந்து போகிறார்கள், பாதிப்பிற்கு உள்ளானவர்களும் மறந்து போகிறார்கள்.மீண்டும் ஒரு பேரழிவு நிகழும் போது சற்றும் குறையாத இழப்புகளை மீண்டும் சந்திக்கிறோம்.

2004- ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவு நமது நாட்டிற்கு கடந்த பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்த முற்றிலும் புதிதான நிகழ்வாகும்.இதற்கு முன்னர் தமிழகத்திலும் சரி இந்தியாவிலும் சரி பெரும்பான்மை மக்கள் சுனாமி என்ற வார்த்தையை கூட அறிந்தவர்களில்லை. அப்போது ஏற்பட்ட சுனாமியையும், அதனால் ஏற்பட்ட அழிவையும் நாம் தடுத்திருக்க முடியுமா?

முடியும் என்றுதான் பரிசீலினையின் போது கிடைத்த உண்மை நமக்கு சொன்னது. சுனாமி என்கிற ஆழிப்பேரலையை, அதே இயற்கை அலையாத்தி காடுகள் மூலம் காலம்காலமாய் தடுத்துவந்தது. கடற்கரை எங்கும் வளர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மைக்காத்த இயற்கையின் அபார திறனும்,சக்தியும் மிக்க அலையாத்திக்காடுகளை அழித்தது மனிதர்கள்தான்.

எனவே இனி எதிர்க்காலத்தில் ஆழிப்பேரலையின் அழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அலையாத்தி காடுகளை கடற்கரையெங்கும் வளர்க்க வேண்டும் என்றார்கள்.பேசியதை பேசியவர்கள் மட்டுமல்ல, கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் மறந்து போனோம். இந்த அலையாத்திக் காடுகள் ஆழிப்பேரலையை மட்டுமல்ல பெரும் புயல்களின் அழிவிலிருந்தும் நம்மை காக்கக்கூடியவை.

இப்போது பொழிந்த பெருமழையிலிருந்தும், வெள்ளத்திலிருந்தும் கூட மனித சக்தியால் தற்காத்துக்கொள்ள முடியும்.நம்மை இவற்றிலிருந்து நம்மை காக்கும் இயற்கை அரண்களாக திகழ்ந்த வடிகால்களை முற்றிலும் இல்லாமல் ஆக்கியது நாம்தான். யாரோ சிலர் செய்த தவறுகளுக்கு அனைவரின் மீதும் குற்றம் சொல்லலாமா? என்று மக்களை மிகவும் நேசிப்பதாக கருதிக்கொள்ளும் பலரும் பொங்கி எழுகிறார்கள்.

அனைவரும் குற்றம் செய்யவில்லை என்பது உண்மைதான்.வெள்ள வடிகால்களை, வாய்க்கால்களை , ஏரிகளை,குளம் குட்டைகளை அதிகாரத்தில் உள்ளவர்களும், அவர்களோடு ஒட்டிக்கொண்டிருந்தவர்களுமே ஆக்கிரமித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஆக்கிரமிப்புகள் நமக்கு தோண்டும் சவக்குழிகள் என்பதைக்கூட உணரமுடியாத அளவுக்கு சிக்கலான செயல்களா அல்லது நடவடிக்கைகளா? ஆக்கிரமிப்பாளர்களின் அநீதியான , அக்கிரமமான செயல்களை அன்று நாம் நமக்கென்ன என்றுதானே வேடிக்கை பார்த்தோம். ஒதுங்கிப்போனோம். நம்மால் அவர்களை தடுக்க முடியாது என்றுதானே கருதினோம். தட்டிக்கேட்டவர்களை பிழைக்கத்தெரியாதவன், விவரம் இல்லாதவன் என்றுதானே ஏளனம் செய்தோம்.இதன் மூலம் இந்த குற்றச்செயல்களுக்கு ஒதுங்கி நின்று துணை செய்தோம்! குற்றம் செய்வது மட்டுமல்ல , அதற்கு துணை நிற்பதும் குற்றம் தானே? இக்கேள்வியை கேட்கும் மனிதர்களை நாம் ஏளனம் செய்யலாம். ஆனால் இயற்கை கேள்வி எதையும் கேட்கவில்லை. குற்றவாளிகள் என்று தண்டனைகளையே வழங்கிவிட்டது. இப்போது இயற்கையை என்னச் சொல்லி ஏளனம் செய்யப்போகிறோம்! 

 


இவ்வளவு பெரிய இழப்புகளுக்கு பின்னரும் வேடிக்கை பார்க்கவும் , ஒதுங்கி நிற்கவும்தான் போகிறோமா? இயற்கை பேரிடர்கள் வரும்வரை காத்திருந்து,வந்தபின் நிவாரணம் அளிப்பதுதான் தன்னார்வலர்களின் தன்னிகரற்ற செயல்பாடா?

தென்னாப்பிரிக்காவில் உள்ள தேசிய வனவியில் உயிரியல் பூங்கா ஒன்றில் வழியெங்கும் அறிவிப்பு பலகை ஒன்றை கட்டி வைத்திருக்கிறார்கள் பூங்கா நிர்வாகிகள். சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவளிக்காதீர்கள் என்பதுதான் அந்தச் செய்தி.ஆனால் இந்த அறிவிப்பை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அலட்சியம் செய்தனர். குரங்குகளுக்கு உணவளித்தனர்.

விளைவு, குரங்குகள் காடுகளில் இயற்கையாக உணவு தேடுவதை விடுத்து சுற்றுலாப்பயணிகளை முற்றிலும் சார்ந்திருக்க தொடங்கின. ஆரம்பத்தில் அவர்கள் அளித்த உணவுகளை உண்டு வாழ்ந்த அவைகள், பிறகு அவர்களிடமிருந்து பிடுங்க ஆரம்பித்தன? மனிதர்களைப் போன்று வழிப்பறியில் இறங்கின. இதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகளும் சுற்றுலாப்பயணிகளும் இன்றுவரை திணறிவருகிறார்கள்.

இப்போதைய மழையும் ,பெருவெள்ளமும் இந்த அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தியதற்கு காரணம் வடிகால் வாய்க்கால்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதும், இதை தடுக்க வேண்டிய அரசு அதை தடுக்காதது மட்டுமல்ல, அதுவே ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவராக மாறியதுமே காரணம் என்பதை மக்கள் உணர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,புதிய ஆக்கிரமிப்புகள் நிகழ்வதை தடுத்து நிறுத்தவும், தன்னார்வலர்களின் வெள்ள நிவாரணப்பணிகள் ஏதேனும் உதவி செய்துள்ளனவா? நிச்சயம் இல்லை.

மாறாக திக்குத்தெரியாத ,திட்டமிடப்படாத , முறைப்படுத்தப்படாத, திகட்டும் வகையிலான வெள்ள நிவாரணப்பணிகள் மக்களை தன்னலவாதிகளாகவும், பேராசைக்காரர்களாகவும், வழிப்பறியாளர்களாகவும் மாற்றிவிட்டுள்ளது. மொத்தத்தில் மக்களை முற்றிலும் நேர்மையற்றவர்களாக ஆக்கிவிட்டுள்ளது. இப்போது சொல்லுங்கள் குரங்குகளுக்கு உணவளித்தவர்களுக்கும், தன்னார்வலர்களின் நிவாரணப்பணிகளுக்கும் என்ன வேறுபாடு என்று?

ஒவ்வொரு நகரப்பகுதியிலும், கிராமப்புறங்களிலும் வலிமையே நிவாரணப் பொருட்களை பெறுவதை தீர்மானித்தது. கட்சி, சாதி அடிப்படையிலான ஆள் பலமே நிவாரணப்பொருட்கள் பெறுவதை தீர்மானித்தன.
ஒவ்வொரு இடத்திலும் வலிமையற்றவர்களிடம் முற்றிலும் நிவாரணப்பொருட்கள் எட்டவிடாமல் தடுக்கப்பட்டனர். இதை மீறிய தன்னார்வலர்கள் ஏச்சுக்கும், பேச்சுக்கும், தாக்குதலுக்கும் அவமானத்திற்குள்ளானார்கள். பல லாரி நிவாரணப்பொருட்களை வலிமையானவர்கள் முற்றாக கைப்பற்றி அவற்றை அரசுப்பள்ளிகளிலேயே சேமித்து வைத்து கொண்டதும் நிகழ்ந்துள்ளது.

நிவாரணப்பொருட்கள் குறிப்பாக ,துணி மணிகள் தன்னார்வலர்களாலும், போலீசாலும் லாரியிலிருந்து மக்கள் கூட்டத்தில் வாரி இறைக்கப்பட்டது.இதை கைப்பற்ற முயற்சித்த மக்களின் அலைமோதல்கள், முட்டல், மோதல்கள் வெட்கி தலை குனியச்செய்யும் நிகழ்வுகளாகும்.உணவு தேவைபடாவிட்டாலும் அதை வாங்கி தெருவில் கொட்டினார்கள். பயன்படுத்த முடியாவிட்டாலும் அதை வாங்குவது தனது உரிமை என நினைக்க தொடங்கிவிட்டார்கள்.மொத்தத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே ஏராளமான இலவச திட்டங்களால் மூழ்கடிக்கப்படும் மாநிலம் தமிழகம்தான். ஒவ்வொரு முறையும் ஆட்சியை கைப்பற்றும் கட்சிகள் ஒவ்வொன்றும் இலவசங்களை வாரி வழங்கி ஆட்சியை பிடிப்பதால் தேர்தல் என்றாலே புதிய இலவச திட்டங்கள் உறுதியாக கிடைக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

இந்த மனநிலை மொத்த சமூகத்தையும் ஆட்கொண்டுவிட்டது.இதுவே தன்னார்வர்களின் இலக்கற்ற அதீதமான வெள்ள நிவாரணப்பணிகளுக்கும் அடிப்படையாகும்.

இனிவரும் காலங்களிலாவது இலக்கற்ற நிவாரணப்பணிகளை தவிர்ப்போம்! வருமுன் காப்போம் என்ற உணர்வை தடுக்கும் மக்களை மந்தைகளாக மாற்றும் அனைத்து செயல்களையும் தவிர்ப்போம்!!

Monday, 13 July 2015

மீத்தேன் : கடலூர் மாவட்டத்தையும் கொல்ல வரும் கொல்லிவாய் பிசாசு!

நாம் உயிர்வாழ பூமியை பாதுகாப்போம்! பூமியை பாதுகாக்க மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்!!

நாட்டின் முன்னேற்றம் என்றால் அது தொழிற்துறை முன்னேற்றம். இதை சாதிக்க
வேண்டுமானால் அதற்கு எரிபொருள் தேவை. இன்று அந்த எரிபொருளை வெளிநாடுகளில்
இருந்துதான்  இறக்குமதி செய்கிறோம்.

எனவே நமக்குத் தேவையான எரிபொருளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும்.இதற்கு
பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் எரிவாயு வளங்களை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரியிலிருந்து, கச்சத்தீவு வரையில் எண்ணெய்,
எரிவாயு வளத்தை கண்டுபிடித்துள்ளனர். பூமியை சல்லடையாய் துளைத்து தஞ்சையில் இதை
வெளியே எடுக்க முயன்றபோது தமிழகத்தின் நெற்களஞ்சியமான நஞ்சை கொஞ்சும் தஞ்சையை
நஞ்சாக்காதே ”  என்ற மக்களின் முழக்கம் ஆட்சியாளர்களின் காதுகளை கிழித்தது.

மக்கள் போராட்டங்களை கண்டுப்பதறிய மாநில அரசு காவிரிப்படுகைகளில் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்திற்கான அனுமதியை ரத்துசெய்வதாக அறிவித்தது.
இதனால் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டுவிட்டதாக நாம் கருதினோம்.
ஆனால் தஞ்சையை அடுத்து நாகை  திருவாரூர் , சிவகங்கை மாவட்டங்களிலும் ONGC - என்ற
இந்திய அரசு நிறுவனத்தின் மூலம் தனது வாலை நுழைத்துப்பார்த்தது. தஞ்சையை போன்றே  மக்கள் போராட்டங்கள் அங்கும் வெடித்ததால்,  இந்த  இடங்களில் இருந்தும் தனது வாலை சுருட்டிக்கொண்டது.

இப்போது  நமது  கடலூர், அரியலூர் மாவட்டங்களில் விருத்தாசலம்,காட்டுமன்னார்கோயில்,திருமுட்டம், புவனகிரி, ஆண்டிமடம் ஆகிய வட்டாரங்களில் நமக்கு சொரணை இருக்கிறதா என்று  சீண்டிப்பார்க்கிறது.  மீத்தேன் எடுப்பதற்கான திட்டத்தையும் அறிவித்துள்ளது.

இதை நாட்டை முன்னேற்றும்  திட்டம் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் மக்களோ
வேண்டாம் என்று மல்லு கட்டுகிறார்கள்!

மீத்தேன் என்று இன்று சொல்லப்படும் எரிவாயுவை நமது முன்னோர்கள் கொல்லிவாய்
பிசாசுஎன்றார்கள். நீர்  நிரம்பிய பகுதிகளிலும், சதுப்பு நிலங்களிலும் பூமியின் உள்ளே இருந்து
வெளியே வரும் மீத்தேன் எரிவாயு காற்றுப்பட்டதும் எரிய ஆரம்பித்துவிடும்.

இந்த கொல்லிவாய் பிசாசு பூமிக்கு அடியில் மூன்று கிலோ மீட்டரிலிருந்து 5 கிலோ மீட்டர்
ஆழத்தில் கடினமான பாறைகளுக்கு நடுவில்சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் உள்ளது.

இந்த எரிவாயுவை  முப்பது அடி அகலம், 5 கிலோமீட்டர் ஆழம் வரை கிணறு தோண்டி, அதன் அடியில் நாலா பக்கங்களிலும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்கவாட்டில் குடைவார்கள்.பின்னர் ஒரு
கிணற்றுக்கு 1 1/2 கோடி லிட்டர் தண்ணீரோடு  மணல் மற்றும் பல்வேறு  வகையான சிறு கற்கள், 600 வகையான ரசாயனங்களை கலந்து  கிணற்றுக்குள் பீய்ச்சி அடிப்பார்கள்.

இந்தக்கலவை பூமிக்கு அடியில் உள்ள கடினமானப்பாறைகளை பிளந்து, அரித்து
அவைகளுக்கிடையில் சிக்கி உள்ள எரிவாயுவை வெளியே வரச்செய்து, மேலே கொண்டு வந்து
நீரையும், எரிவாயுவையும் தனித் தனியே பிரித்துப்தெடுப்பார்கள். கழிவு நீரை நிலத்தில் கொட்டி
ஆவியாக்குவார்கள்.

600 வகையான இந்த ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆவியாகி காற்று மண்டலத்தில் கலக்கும். இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து ஆண்டு முழுவதுமே சித்திரை மாதமாகி நம்மை சுட்டெரிக்கும். நீராவியாக காற்றில் கலந்துள்ள நஞ்சான ரசாயனங்கள் மழையோடு சேர்ந்து  பூமிக்கு மீண்டும் வந்துசேரும். இந்த மழை நீர் நிலத்தில் உள்ள  ஆறுகள், குளம், குட்டைகள்,நிலத்தடி நீர் அனைத்தையும்நஞ்சாக்கிவிடும்.

கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக, ஒருசில ஆண்டுகளிலேயே இந்த கொல்லி வாய்
பிசாசு நம்மை, நாம் வாழும் இடத்திலிருந்து நம்மை விரட்ட ஆரம்பித்துவிடும். காற்றில் கலக்கும் நஞ்சு,அதை சுவாசிக்கும் புல், பூண்டுகள் முதல் விலங்குகள், மனிதர்கள் உட்பட அனைத்து
உயிரினங்களையும் படிப்படியாக சித்ரவதை செய்து சாகடிக்க ஆரம்பித்துவிடும்.

நஞ்சாகிப்போன நீரால் விவசாயம் பொய்த்துவிடுவது மட்டுமல்ல, புல், பூண்டு கூட
முளைக்காத கட்டாந்தரையாக மாற்றிவிடும்.

இந்தக்காற்றை சுவாசிக்கும் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும்  மூளை, கண், நுரையீரல், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம்,தோல்  என அனைத்து உறுப்புகளிலும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை உருவாக்கும். உயிர் பிழைக்க வேண்டுமானால்  இருக்கும் இடத்தை காலி செய்துவிட்டு ஓடுவதை தவிர, நமக்கு வேறு வழி  இல்லை.

ஒரு கிணற்றுக்கு 1 1/2 கோடி லிட்டர் தண்ணீர் தேவை என்றால் பலநூற்றுக்கணக்கான
கிணறுகளுக்கும் காவிரி நீரை முழுமையாக  பபயன்படுத்தினாலும் போதாது.
இதனால் நிலத்தடி நீரையும் முற்றாக உறிஞ்சி விடுவார்கள். எஞ்சிய நிலத்தடி நீரிலும் மீத்தேன்
எரிவாயு கலந்து விடும். இந்த தண்ணீரை நாம் வெளியே எடுத்தால் அதனோடு சேர்ந்து கொல்லி வாய்பிசாசும் வெளியே வந்து நம்மை சுட்டெரிக்கும்.




1. கிணறு தோண்ட, ஒரு கிணற்றுக்கு எழுபது கனரக வாகனங்கள் வீதம்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்ல பல ஆயிரம் கிலோ   மீட்டர் சாலை அமைக்க, எரிவாயு குழாய் அமைக்க இப்படி நமது  நிலங்களை நம்மை கேட்காமலேயே பிடுங்கிக்கொள்வார்கள். இதை எதிர்த்து  நீதிமன்றம் செல்லக்கூட நமக்கு  உரிமை இல்லை
என்கிறார் மோடி!

2. 24 மணிநேரமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களின்     இடைவிடாத பெரும் இரைச்சல்.....

3. இரவை பகலாக்கும் மின்விளக்குகளின் வெளிச்சம்....

4. நஞ்சாகி சுவாசிக்கவோ, குடிக்கவோ முடியாத காற்றும், நீரும்....

5. பூமிக்கடியில் கடினப்பாறைகளை உடைப்பதால் வரப்போகும் நிலநடுக்கப்பேரழிவு...

6. புல், பூண்டு கூட முளைக்காத பூமி ..... இவைகளைத்தான் இத்திட்டத்தின் மூலம் ஆட்சியாளர்கள்,
நமக்கு பரிசாய் தரபோகிறார்கள்.....!

இதைத்தான் அவர்கள் நாட்டின் முன்னேற்றம் என்றும் சொல்கிறார்கள்!

பூமியே அழிந்தாலும் பரவாயில்லை! நமது முதலாளிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும்
தேவை பணம் ! அந்தப்பணம் இருந்தால், அவர்கள் இந்த அண்ட சராசரத்தில் எங்கு வேண்டுமனாலும் வாழ்ந்து விடுவார்கள்! அதனால் தான் அவர்கள்இப்போதே சூரியன் உட்பட நவக்கிரகங்களையும்
மனைபோட்டு விற்கவும், வாங்கவும்  ஆரம்பித்துவிட்டார்கள்.


நாம் என்ன செய்ய போகிறோம்......?!

பூமியை அழித்து  சூரியனில் குடியேறத்துடிக்கும் அறிவாளிகளோடு  சேரப்போகிறோமா? அல்லது
பூமியை பாதுகாத்து இங்கேயே  வாழத்துடிக்கும் முட்டாள்களோடு சேரப்போகிறோமா?  
கொல்லி வாய் பிசாசு வெளியே வருவதற்குள் இதை முடிவுசெய்யுங்கள். பிசாசு வெளியே வந்து விட்டால் நாம் நினைத்தாலும் நம்மால் முடிவெடுக்க முடியாது. ஏனென்றால் அப்போது அந்த
பிசாசால் நாம் காவு கொல்லப்பட்டிருப்போம்!

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு – கடலூர் மாவட்டம்.
தொடர்பு எண்: 9750272873