விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, 27 February 2013

ஊழல், முறைகேடு - இந்திய சமூகத்தின் பாரம்பரியம்!

வான் உலங்கு ஊர்தி – எலிகாப்டர்- வாங்குவதில் மீண்டும் ஓர் ஊழல் அம்பலமாகி இருக்கிறது. இந்திய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அடங்கிய மிக முக்கிய அரசுத்தலைவர்களின் பயன்பாட்டிற்காக இத்தாலி நிறுவனத்திடமிருந்து வான் உலங்கு ஊர்தி வாங்க செய்து கொண்ட ஒப்பந்தத்தில்தான் இது நடைபெற்றுள்ளது. இத்தாலியின் ஃ பின் மெக்கனிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் – மிருந்து 12 வான் உலங்கு ஊர்தியை பெற கடந்த 2010-ம் ஆண்டு ரூ 3600 கோடிக்கு இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத் தொகையில் 10 சதவீதம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இப்படி லஞ்சம் தந்த இத்தாலி நிறுவனத்தின் தலைவரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இதன் பின்னர் தான் இந்தச் செய்தி இந்திய மக்களுக்கு தெரியவந்துள்ளது.
தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தையில் நிலவும் கடுமையான போட்டியை சமாளித்து வெற்றி பெறுவதற்கு கமிஷன் – லஞ்சம் – கொடுப்பது என்பது முதலாளித்துவ நிறுவனங்களின் வழமையான நடவடிக்கையாகும். அதிலும் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கூடுதலான லஞ்சம் கொடுத்து ஒப்பந்தத்தை பெறுகின்றன.
தரமான பொருட்களை வாங்குவதன் மூலம் குறைவான லஞ்சம் கிடைக்கிறது என்பதால்தான் தரம் குறைந்த பொருட்களை வாங்கி கூடுதலான ஆதாயம் அடைகின்றனர் இந்திய அதிகார வர்க்கத்தினர்.
இந்திய அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் தான் தாங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள் தரமானதா, இல்லையா என்பதைவிட கூடுதல் லஞ்சம் கிடைக்குமா, இல்லையா என்பதிலிருந்து தான் ஒப்பந்தம் செய்து கொள்வதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பவர்கள்.
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்குபவர்களுக்கு கமிஷன் என்றப்பெயரால் லஞ்சம் கொடுப்பது என்பது அவைகளின் இயல்பான நடவடிக்கையாகும். இது கமிஷன் என்றப்பெயரில் சட்டப்படியே அங்கீரிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
இப்படி இருக்கும் போது இத்தாலி நிறுவனத்தின் தலைவர் லஞ்சம் கொடுத்தார் என்று எதற்காக கைது செய்யப்பட வேண்டும்? என்ற நியாயமான கேள்வி எழவே செய்கிறது.
இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை நிறுவனத்தின் இடைத்தரகர்களாக செயல்படுவர்களுக்கே வழங்கப்படும். பொருளை கொள்முதல் செய்பவர்களுக்கு நேரிடையாக தரப்படுவதில்லை. இப்படி வழங்கப்படும் கமிஷன் தொகை அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மேல் செல்கிற போதுதான் அது லஞ்சமாக கருதப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் இப்படி கூடுதலாக கமிஷன் – லஞ்சம் – வழங்கப்படுவது தனியார் நிறுவனங்களில், அதன் உரிமையாளரின் ஒப்புதலின் பேரிலேயே வழங்கப்படுவதால் அவைகள் வெளியே வருவதில்லை. இப்படிப்பட்ட நிகழ்வுகள் பொருளைப் பெற ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளின் அரசியல் ரீதியான காரணங்களினாலேதான் பெரும்பாலும் வெளிவருகின்றன.
ஆனால் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனமோ இத்தாலி அரசு நிறுவானமாகும். இதனால் ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் இத்தாலி அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாட்டு நடவடிக்கைகளின் கண்காணிப்பிற்கும் உள்ளாகிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவுடனான ஒப்பந்த விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு வெளியே வந்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு மேல் கமிஷன் தொகை கைமாறியதுதான் குற்றமாக வெளியே வந்துள்ளது.
பாவம், இத்தாலி நிறுவனத்தின் தலைவருக்கு விவரம் புரியவில்லைபோலும்! தனக்கு புரியாத ஒன்றைப்பற்றி அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டிருந்தால், அவர்கள் மிகவும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு குறைவாக கமிஷன் தந்ததாக ஆவணங்களில் பதிவு செய்து தனது நாட்டு அரசிடமிருந்து அவர் பாராட்டையும் பெற்றிருக்கலாம்!
இத்தாலியில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தரப்பட்டுள்ள கூடுதல் தொகை லஞ்சம் என கூறப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் இந்நிகழ்வு இந்தியாவில் எப்படிப்பட்ட விளைவுகளை, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது? அதிலும் மக்கள் மத்தியில் என்றால் அப்படி எதுவும் இல்லை என்றுதான் கூறவேண்டும், இதை பல பத்திரிக்கைகளும் வெளிப்படுத்தியுள்ளன.
மக்களின் உணர்வே மரத்துப் போய் விட்டதாக அங்கலாய்க்கின்றனர். இப்படி ஊடகங்கள் வெளிப்படுத்தும் உணர்வும், உணர்ச்சியும் கூட உயிரோட்டமானதா என்றால் இல்லவே, இல்லை என்பது மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.
ஊடகங்கள் தமது தொழில் காரணமாகவே இவைகளை வெளிப்படுத்துவதும், அங்கலாய்ப்பதும் நடக்கிறதே தவிர உண்மையான உணர்வின் வெளிப்பாட்டால் அல்ல. லஞ்சம், ஊழல், முறைகேடு ஆகியவற்றின் ஒரு அங்கம்தான் ஊடகங்களும்! இவைகளை கட்டித் தழுவிக் கொள்ளாமல் ஒரு கணம் கூட இவைகளால் உயிர் வாழமுடியாது!
இந்திய ஊடகங்களின் அன்றாட செயல்பாடுகள் மட்டுமல்ல, அதன் உரிமையாளர்களின் இன்றைய இருப்பே முறைகேடுகளின் ஊடாக அடைந்தவைகளே ஆகும். இந்திய நிறுவனங்களின் இருப்பு மட்டுமல்ல, இந்திய மக்கள் ஆகபெரும்பான்மையினரின் இருப்பும் முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல. இதில் சமூகத்தின் மேல் நிலையில் இருப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே அளவு ரீதியான வேறுபாடு உள்ளதே தவிர, பண்பு ரீதியான வேறுவாடு ஏதுமில்லை.
இந்தியசமூகம் ஊழல், முறைகேடுகளுக்கு எதிரான அதிர்வலைகள் எழுவதற்கான உள்ளடக்கத்தை வாழ்வியல் முறையாக கொண்டதல்ல. மாறாக அதில் தனது பங்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஏக்கத்தை எப்போதுமே கொண்டதே ஆகும். இந்த நிலைப்பாட்டிலிருந்துதான் அரசு அதிகாரிகளுக்கு இடையிலும், அரசுகளுக்கு இடையிலும், அரசியல் கட்சிகளுக்கு இடையிலும், மக்கள் ஒவ்வொருவருக்கு இடையிலும் முறைகேடுகள் பற்றிய சிந்தனாமுறை எழுகிறது. இதன் காரணமாகத்தான் ஊழல், முறைகேடுகள் இந்திய சமூகத்தில் பெருத்த அதிர்வலைகளை உருவாக்குவதில்லை.
இதில் ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட அதிர்வலைகளும் தற்போது நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது. சமூகம் முழுமைக்கும் இது பொதுமையாக்கப்பட்டு விட்டது. நமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருப்போம் என்பதுதான் அந்தப் பொதுமையாகும். இந்த பொதுமையான உணர்வும் அதன் அடிப்படையிலான செயல்பாட்டு வடிவமும் இந்திய சமூகத்தில் எப்படி நிலை நாட்டப்பட்டது? அதற்கான கூறுகளும், வாய்ப்புகளும் இச்சமூகத்திற்கு எங்கிருந்து எப்படி கிடைத்தன போன்ற ஐயங்களுக்கான விடையை இனி பார்ப்போம்!
இன்றைய இந்திய சமூகத்தின் மேல்நிலையில் முதலாளிகள், நிலச்சுவான்தார்கள், வியாபாரிகள், அரசு அதிகாரிகள் – உள்ளிட்டவர்களாயினும், நடுத்தர பிரிவினர் ஆயினும், ஏன் தொழிலாளிகள், தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ள விவசாயிகள், வரை ஆகப்பெரும்பான்மையினர் இந்த விநாடி வரை சிந்தனையால் மட்டுமல்ல, நடைமுறையிலும் மேல் சாதிகளாக வாழ்பவர்கள்தான்.
இந்த மேல்சாதி என்ற தகுதி இவர்கள் தமது தகுதி, திறமையின் ஊடாக பெற்றவையா? இல்லை. இது பிறப்பின் அடிப்படையில் கிடைப்பதாகும். இது இந்தியாவில் மனிதர்கள் உருவான காலத்திலிருந்தே நிலவிக் கொண்டிருக்கும் ஓர் பண்பாடா என்றால் நிச்சயம் இல்லை! இந்திய சமூகத்தில் சாதியும் அதன் அடிப்படையான வேறுபாடுகளும் இல்லாத காலமும் ஒன்று இருக்கவே செய்தது. கடந்த இரண்டாயிரத்திலிருந்து, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத்தான் சாதியும், சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் இச்சமூகத்தில் வேரூன்றி உள்ளது.
ஆரிய வருகை, பூர்வகுடி மக்களுடனான போராட்டம், அதில் அவர்களின் வெற்றி, இனக்கலப்பு, வெற்றியாளர்களின் மக்களை பிரித்தாளும் தந்திரங்கள், இதை எதிர்த்த பூர்வகுடி மக்களின் போராட்டம், இதில் பெரும்பான்மையினர் காட்டிக்கொடுத்தல், இதற்கு கைமாறாக அடைந்த வாழ்வுதான் நாம் மேலே அவதானித்த ஆகப்பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.
பூர்வகுடி மக்களில் பெரும்பான்மையானர் தனது சமூகத்தின் ஒரு பகுதியினரை பகுதி, பகுதியாக, சிறுக, சிறுக வெற்றியாளனுக்கு காட்டிக்கொடுத்து அடைந்த வாழ்வாதாரம் தான், இன்றுவரை எப்படிப்பட்ட வரலாற்றுச் சூழலிலும் நீடித்து, நிலைப்பெற்று ஏற்ற இறக்கங்களுடன் நிலவி வருகிறது. வாழ்க்கைக்கான அடிப்படையாகவே இவைகள்தான் திகழ்வதால்தான் ஒற்றுமைக்கான கூறுகள் இச்சமூகத்தில் மிகவும் அரிதான ஒன்றாக ஆகிவிட்டுள்ளது.
முதலாளித்துவ கூறுகள் குறைவாக இருந்த காலத்தில் ஒவ்வொரு சாதிக்குள்ளேயான ஒற்றுமைக் கூறுகள் ஒப்பீட்டளவில் மேலானதாக இருந்தது. சாதிகளுக்கிடையில் மேல், கீழ் அடிப்படையில் ஓர் தொடர்பையும், இயக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆனால் இன்றோ ஒற்றுமைக்கான கூறுகள் அனைத்து மட்டங்களிலும் ஏறத்தாழ அறுந்தே போயுள்ளது. இப்போது சாதிகளிலேயே கடைநிலை தீண்டத்தகாத சாதிகளுக்கு எதிராக மட்டுமே ஒற்றுமைக்கான கூறுகளை மட்டுமே இச்சமூகம் கொண்டுள்ளது. இதுவும் கூட சிந்தனா ரீதியான ஒற்றுமையே வலிமையானதாகும். இதுதான் நடைமுறை ரீதியாக, ஒதுக்குதல் என்பதைவிட ஒதுங்கிக்கொள்ளல் என்பதை வலுவாக கடைபிடிக்க வைக்கிறது. இது சில நேரங்களில் மட்டுமே நேரடி நடவடிக்கையாக மாறுகிறது.
மேல் சாதிகள் என்று தம்மை நம்பக்கூடிய இந்திய மக்களில் ஆகப்பெரும்பான்மையினோரை ஒருங்கிணைக்கும் ஒரே ஒரு கூறு தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சிந்தனையும், செயல்படுகளுமே ஆகும்.
இவர்களுக்கிடையில் பிற அனைத்து அம்சங்களிலும் ஒற்றுமைக்கான கூறுகள் இல்லவே, இல்லை. ஒற்றுமையின்மைக்கான கூறுகள் மட்டுமே மேலும், மேலோங்கி வருகிறது. மேலும் இது எந்த அளவிற்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவிற்கு அதன் வெளிப்பாடுகள் குழுச்செயல்பாடுகளாக சமூகத்தின் அனைத்து அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது.
முதலாளித்துவ நுகர்வு பண்பாடு எந்த அளவிற்கு சமூகத்தில் பெருக்கெடுக்கிறதோ அந்த அளவிற்கு ஒற்றுமை இன்மைக்கான கூறுகள் இங்கு வீரியமடைகின்றன.
இவைகள் இன்று சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துவிட்டுள்ளது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக நிலைநிறுத்ப்பட்டுள்ளது.
முறைகேடுகள் இச்சமூகத்தின் பிரிக்க வியலாத, ஓர் அங்கமாக அன்றாட, இயல்பான நிகழ்வாக மாறிப்போனதற்கான அடிப்படையே, இச்சமூகத்தின் வாழ்வியல் முறையாகவே காட்டிக்கொடுத்தல் என்பதை கொண்டிருப்பதால்தான். லஞ்சம், ஊழல், முறைகேடுகளும் நாட்டை காட்டிக்கொடுக்கும் செயல்தான் என்பதை உணரும் போதுதான் மேலே கண்ட உண்மையையும் புரிந்து கொள்ளமுடியும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தனது மூதாயர்களின் காட்டிக் கொடுத்தல், அதன் அடிப்படையிலான வாழ்வியல் ஆகியவற்றை இச்சமூகம் குற்றமாக, இழிவாக கருதாத வரை, இச்சமூகத்தில் போபோர்ஸ், பேர்பாக்ஸ், 2G, வான் உலங்கு ஊர்தி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றாட நிகழ்வுகளாகவே நீடிப்பதை எவராலும் தடுத்து விடமுடியாது!

Friday, 28 September 2012

மின்சாரம் சமூகத்தரத்திற்கான ஆதாரம்!


கூடங்குளம் போராட்டம் எப்போதெல்லாம் தீவிரம் அடைகிறதோ அப்போதெல்லாம், தமிழகத்தில் மின்வெட்டு நேரமும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. உண்மையில் இப்போது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம்  வழங்கப்படுகிறது.
      
ஒரு நாளைக்கு ஏறத்தாழ இருபது மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டால் மொத்தத் தமிழகமும் செயலிழந்து போய் கிடக்கிறது. குறைந்தது குடிநீர் தேவையைக் கூட தற்போது வழங்கப்படும் மின்சாரத்தால் ஈடுசெய்ய இயலவில்லை.


      
தமிழகத்தின் கொங்குமண்டலத்தில் இயங்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இப்போதைய மின் வெட்டால் தமது நூற்பு ஆலைகள் முற்றாக செயலிழந்துவிட்டது. ஜெனரேட்டர்களையும் பயன்படுத்த முடியாத அளவுக்கு டீசல் விலை உயர்வு அமைந்து விட்டது என்று குமுறுகிறார்கள்.
     
 ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்ட விவசாயம் இந்த மின்வெட்ட்டால், மேலும் அழிந்துவிடப்போவதில்லை என்பதால் விவசாயிகள் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
      
 மொத்தத்தில் தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டாலும் ஒப்பாரி. புலம்பல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் போராட்டங்களைத்தவிர, பிரச்சனையை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை காணவேண்டிய நிர்பந்தத்தை , ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தக்கூடிய அடிப்படையை கொண்ட போராட்டங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒன்று கூட நடைபெறவில்லை.
     
 ஈழத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற போரின் காரணமாக மின்சாரம் அம்மக்களுக்கு எட்டாக்கனியாகிப் போனதை நாம் அறிவோம். இன்னமும் கூட அங்கு மின் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
      
ஆனால் தமிழகத்திலோ ஈழத்தைப் போன்று போர் எதுவும் நடக்காமலேயே, மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக்கப்படுட்டு விட்டது!
     
  தமிழகத்தில் தற்போதைய மின்பற்றாக்குறை 6500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறைவாரியம் அறிவித்துள்ளது.
     
 கூடங்குளம் அணு உலை முழுமையாக இயங்க ஆரம்பித்தாலே ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தியாகும் என்கிறார்கள். அதிலும்  உலக அளவில் அணு உலை மின் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்ட அளவில் 30 % -  40 % மட்டுமே ஆகும். அப்படியானால் கூடங்குளத்திலும் மின் உற்பத்தி தொடங்கினாலும் கூட 400 மெகாவாட் அளவிற்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். அதுவும் இன்னும் சில ஆண்டுகளுக்கு பரிசோதனை மட்டுமே நடைபெறப்போகிறது.
      
இதுதான் நிலைமையாக இருக்கும்போது கூடங்குளம்  செயல்பட ஆரம்பித்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்துவிடும் என்று பச்சையாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எந்தக் கூச்சமும் இன்றி வெளிப்படையாக புளுகுகிறார்கள். அதிகார பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள்.
      
இப்படிச் செய்வதன் மூலம் கூடங்குளம் மக்களுக்கு எதிராக தமிழக மக்களை  திசை திருப்ப பார்க்கிறார்கள். இவர்கள் தமது முயற்சியில் ஏறத்தாழ வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நபர்களிடம் மட்டுமே கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு நிலவுகிறது.
      
தற்போதைய மின்வெட்டைப்பற்றி மத்திய ஆட்சியாளர்கள் வாயே திறப்பதில்லை. மின்சாரம் மாநில அரசின்  பட்டியலில் உள்ளதால் அதுபற்றி மத்திய அரசு கவலைப்பட வில்லை என்று மட்டுமே பெரும்பாலோர் கருதுகின்றனர். மின்சாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்றாலும் இதனால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் என்றாலும், இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிவிடமுடியுமா?
      
மின்பற்றாக் குறையால் ஒரு மாநிலம் செயலிழந்து  கிடக்கும்போது , அம்மாநில மக்களின் நலனில் மத்திய அரசுக்கு சம்பந்தமில்லை என்றால், இந்தியா என்ற கூட்டமைப்பிற்குள் குறிப்பிட்ட மாநிலம் உணர்வுபூர்வமாக இருக்க முடியுமா?
     
 மக்கள் நலன் என்பது மத்திய ஆட்சியாளர்களுக்கோ, மாநில ஆட்சியாளர்களுக்கோ எப்போதுமே  இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. எனவே அந்த நிலையிலிருந்து இப்பிரச்சனையை நாம் பார்த்தால்  து நமது அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும்.
      
இவர்களுக்கு வேறொரு கோணத்தில் இந்த மின்பற்றாக்குறை அத்தியாவசியமானது என்பதால் அதன் மீது ஆட்சியாளர்களுக்கு  அக்கறை ஏற்பட்டிருக்க வேண்டும்.
      
அந்த  வகையிலும் எவ்வித வெளிப்பாடும் அவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. இதைப்பார்க்கும் போது அவர்களுக்கு அக்கரையுள்ள குறிப்பிட்ட அந்தத் துறைக்கும், இந்த மின்பற்றாக்குறைக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.
      
ஆட்சியாளர்களின் அக்கறையுள்ள அந்த துறை அந்நிய  முதலீட்டு துறையே ஆகும். தமிழகத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள்  தற்போதைய மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக்கணமே மத்திய ஆட்சியாளர்கள் அலறியிருப்பார்கள்.
      
ஆனால் அவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பன்னாட்டு நிறுவனங்களும் இதுபற்றி  மூச்சுவிடவில்லை. இதிலிருந்தே பன்னாட்டு  நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது.
      
ஆனால் மின்பற்றாக் குறைபற்றி பேசுகிற ஆளும் கட்சி, எதிர்கட்சி, தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் உட்பட யாருமே பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தடையற்ற மின்சாரத்தை பற்றி பேசுவதில்லை. இதிலிருந்தே ஆட்சியாளர்கள் மட்டுமல்ல . தங்க்ளை சமூக அக்றை உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் அனைவருமே மக்களின் கவனத்தை உண்மைக்கு புறம்பான வழியிலேயே திசை திருப்புகின்றனர்.
     
 தமிழகத்திலுள்ள நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் மின்சாரத்தை தடுக்கப்போவதாக் கூறி பிரச்சாரம் செய்யும் தமிழ் இனவாத குழுக்கள் வாய்த்தவறி கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் விநியோகத்தை தடுக்கப்போவதாக கூறுவதில்லை,
      
இனவாத குழுக்கள் மட்டுமல்ல தங்களை சர்வதேசவாதிகள், புரட்சியாளர்கள், கம்யூனிஸ்டுகள் என்று  கூறிக்கொள்வோரும் கூட இதுபற்றி மக்களிடையே பேசுவதில்லை.
      
இப்படி நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும், மக்களின் உயிராதாரமான பிரச்சனையில் உண்மைக்கு புறம்பாக நடந்து கொண்டு, மக்களுக்கு துரோகமிழைக்க முடிகிறது என்றால், இவைகளை ஏற்கும் திறன் இச்சமூகத்திற்கு உள்ளது என்பதின் வெளிப்பாடே ஆகும்.
     
 சமூகத்தின் இந்த உண்மையான நிலைக்கு ஏற்பத்தான் எல்லா அமைப்புகளும் நடந்து கொள்கின்றன. இந்த அடித்தளத்தில் இருந்துதான் அனைத்து அமைப்புகளும் தமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்கின்றன.
      
ஆட்சியாளர்கள் தம்மை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் நடத்தினாலும், இழிவுபடுத்தினாலும் தமது வாழ்வாதாரத்தை அழித்தாலும், அதற்கெதிராக போராடி அதை முறியடிப்பதற்கு மாறாக,அனைத்தையும் சகித்துக் கொண்டு வாழ்வது என்பதே இந்திய சமூகத்தின் பாரம்பரிய மரபாகும். இதுவே இன்றுவரையிலான  சமூகத்தின் சொத்தாக விளங்குகிறது  தற்போதைய மின்பற்றாக்குறையையும், அதை சமூகம்  எதிர் கொள்ளும் விதத்திலும் இயலாமையை மட்டுமல்ல, அது தனது தரத்தையும் வெளிப்படுத்திக்கொள்கிறது.
     
 எப்படியாவது உயிர் வாழ்ந்தால் போதும் என்ற இந்த சிந்தனா  முறையின் தவிர்க்க வியலாத  விளைபொருள்தான் பிழைப்புவாதமாகும்.
     
 மொத்த சமூகத்தின் வாழ்வியலே பிழைப்புவாத அடித்தளத்தை கொண்டிருப்பதால் தான், இந்நாட்டில் உருவாகும் ஒவ்வொரு அமைப்பும் பிழைப்பு வாத அமைப்புகளாகவே உருவெடுக்கினறன. சமூகத்தன்மையின் காரணமாக  பிழைப்புவாதம் முரணான, தவறான ஒன்றாக பார்க்கப்படுவதில்லை.
      
சமூகத்தின் இந்த அடித்தளத்தைப் பற்றிய வரையறை, கண்ணோட்டமில்லாத  அமைப்புகள் எதுவனாலும், அவைகள் எவ்வளவு தான் உணர்வுபூர்வமாக, தியாக மனப்பான்மை உடையவைகளாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே தங்களையே  அறியாமல், உணரமுடியாமல் பிழைப்பு வாதத்தையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
      
தம்மிடையே உள்ள இந்த தன்மையை உணராதவர்கள், குறிப்பிட்ட  காலத்திற்கு பின்னர் சமூகத்தின் மீது எழும் விரக்தி மனப்பாண்மை காரணமாக மிக எளிமையாக, வெளிப்படையான பிழைப்பு வாதிகளாக மாறிக் கொள்கிறார்கள்.
      
எனவே இந்திய சமூகத்தின் இந்த யதார்த்தமான நிலையை, சமூக அடித்தளத்தை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே சமூக மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்கிக் கொள்ள முடியும். இதை புரிந்து கொள்ளாதவர்கள், மறுப்பவர்கள் அனைவரும் பிழைப்புவாதிகளாக மாறுவது தவிர்க்க வியலாத நிகழ்வாகும்.
      
பிறக்கும் போது தெரியாவிட்டாலும் மூக்கு வெளுத்ததும் தெரிந்துவிடும் அது கழுதையா, குதிரையா என்பது!