சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி-I
‘கவுரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில் 5000 கொலைகள் நடப்பதாகவும்,இதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘சக்திவாகிணி’ என்ற தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கில் மத்திய அரசையும்,எட்டு மாநில அரசுகளையும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநி(நீ)திமன்றம்.இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ‘கவுரவக் கொலைகள்’ நடைபெறுவதாக தன்னார்வக்குழுகள் செய்தி ஊடகங்களில் பரப்புரை செய்துவருகின்றன.
இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் 75 சதவீதமானவை சாதி கடந்து காதலிப்பதாலும் மூன்று சதவீத கொலைகள் கோத்திரம் மீறி காதலிப்பதாலும்,எஞ்சியவை கள்ளக்காதலால் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.உண்மையில் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் வெறுமனே 20 சதவீத கொலைகளே பதிவு செய்யப் படுவதாகவும்,ஏனையவை மூடிமறைக்கப்படுவதாகவும் இச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
மேலேக்கண்ட விவரங்கள் இப்போதுதான் புதிதாககண்டுபிடிக்கப் பட்டதை போன்று இவர்கள் நம்மிடையே பிரம்மிப்பை எற்படுத்துகின்றனர்.இவைகள் இந்தியாவில் காலம்காலமாக இந்து-சாதி-பெருமை என்ற பெயரில் நடைபெற்று வருபவைகள் தான். அப்போதல்லாம் இவற்றை சாதாரண கொலைகளாகவும், தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனைகளாகவும் பார்த்தவர்கள் இப்போது இதை சமூக விவகாரமாக உருவகப்படுத்துகின்றனர்.
1947-ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொலைகளையும்,தாக்குதல்களையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூட மறுத்துவரும் ஆட்சியாளர்கள், இப்போது ‘கவுரவக் கொலை’களை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளனர்.
தன்னார்வக்குழுக்கள்,நி(நீ)திமன்றங்கள்,ஊடகங்கள்,ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வரிந்துக்கட்டிகொண்டு ‘கவுரவக்கொலை’களை தடுக்கப் போவதாக கூறுவது உண்மையான அக்கறையால் தானா? அப்படியானால் இத்தனையாண்டு காலம் இப்படிப்பட்ட கொலைகள் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாதா?இப்போது மட்டும் இவர்களுக்கு கரிசனம் வந்ததற்கான காரணம் என்ன? என்பதுபற்றி நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றைக்கட்டி ஊற்று இரைக்க மாட்டார் என்பது போல் இவர்களின் திடீர்கரிசனத்துக்கும் ஏதோ ஒரு காரணம் உள்ளது.
‘கவுரவக் கொலைகள்’ என்று கவுரவமாக பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்தக் கொலைகள் அனைத்துமே சாதியாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தான் நடத்தப்படுகிறது.சாதி மறுப்பு காதலர்களை கொலை செய்வதை அநீதியான செயலாக இவர்கள் கருதியிருந்தால் இப்போது காட்டும் அக்கறையை பலப்பத்தாண்டுகளுக்கு முன்னரே காட்டியிருக்க வேண்டும்.உச்சநி(நீ)திமன்றத்துக்கு உண்மையிலேயே இந்தக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகளை மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவு போட்டிருக்க வேண்டும்.ஆனால் உச்சநி(நீ)திமன்றமோ கோத்திரம் மீறி காதலிப்பதால் கொலைகள் நடைபெறும் மாநில அரசுகளிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பதில் இருந்தே, இவர்களின் நோக்கம் கோத்திரக்கொலைகளை தடுப்பது மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது.
கோத்திரக் கொலைகள் மொத்த ‘கவுரவக்கொலை’களில் வெறுமனே 3 சதவீதமே ஆயினும்,இந்திய பொருளாதாரத்திலும்,சந்தையிலும்,ஆட்சியிலும் செல்வாக்கு செலுத்தும் ஏகாதிபத்திய முதலாளிகள் இவர்களின் இந்திய பிரதிநிதிகளான இந்திய முதலாளிகளும் தமது சந்தை நலன்களுக்காக பரப்பும் சீரழிவுப் பண்பாட்டுக்கு-மிருக உணர்வுக்கு- ஆட்பட்டவர்கள் இவர்கள். இதனால் தான் இவர்கள் இந்தக் கொலைகள் தமக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.இதைத்தான் தன்னார்வக்குழுக்களும்,ஆட்சியாளர்களும்,நி(நீ)திமன்றங்களும்,ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.தமது செயலுக்கு முற்போக்கு முலாம்பூசுவதற்காகத்தான் சாதிமறுப்பு காதல் கொலைகளையும் இதனோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.
இதோடு கோத்திரம் மீறிகாதலிப்போர் பட்டியலில் அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வை ‘காதல்’ என்ற பெயரில் சேர்த்துவிடுவதன் மூலம் மொத்த சமூகத்தையும் குழப்பி,குழம்பியக்குட்டையில் இவர்கள் மீன்பிடிக்க பார்க்கிறார்கள்
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா பிற்போக்குத் தனங்களும்,சமூகவிரோத செயல்களும் பார்ப்பனியத்தின் உதவியோடு தான் நடைபெற்று வருகிறது.எப்படிப்பட்ட பிற்போக்கு தனமாயினும் அது எங்கிருந்து வந்தாலும் மிகவும் இயல்பாக அதன் ஒரு பகுதியாக இணைந்து கொள்வதன் மூலம்தான் பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.கோத்திரம் மீறி காதலிப்பது தவறு என்று பார்ப்பனியமும்-பார்ப்பனர்களும்-கூறினாலும் இதை இவர்கள் என்றுமே கடைபிடித்ததில்லை. தமது சுகபோகத்திற்காக உறவுமுறைகளை மீறி திருமண உறவு வைத்துக்கொள்வது பார்ப்பனர்களுக்கு கைவந்தக்கலை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தில்லை தீட்சித பார்ப்பனர்கள்.இதனாலேயே இவர்கள் ஏனைய பார்ப்பனர்களை விட தாங்களே உயர்வானவர்கள்! என்று கூறிக்கொண்டு தில்லையின் எல்லைக்கு வெளியே திருமண உறவை வைத்துக்கொள்வதில்லை.இதன் காரணமாக அண்ணன்,தங்கை என்று கூட பாராமல் தங்களுக்குள்ளாகவே பல நூற்றாண்டுகளாக திருமண உறவு கொள்வதால், ஆரோக்கிய மற்ற சந்ததியினர் பிறந்தாலும், இதனால் இவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனாலும், இந்த மூடர்கள் இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
கடலைத்தாண்டுபவன்பார்ப்பானே அல்ல என்று மனுதர்மத்தில் எழுதிவைத்துள்ள பார்ப்பனக்கும்பல் தான் அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்து வருகிறது. பார்ப்பனர்களும், ஆதிக்கசாதியினரும் தாம் எழுதிவைத்துள்ள சாதிய சட்டங்களை என்றுமே மதித்ததில்லை.இவற்றை கீழ்சாதிகள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் அன்று முதல் இன்று வரை வன்முறை மூலம் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
ஆகவே பார்ப்பனியத்தின் – சாதியத்தின் – லட்சியமே உழைப்பாளர்களிடம் இருந்து உழைப்பின் பலன்களை அதாவது சமூக செல்வத்தை அபகரிப்பதுதான்.இதனால் தான் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அராபியர்கள்,மங்கோலியர்கள்,அய்ரோப்பியர்கள் ஆகிய அனைவரையும் வரவழைத்து,வரவேற்று,ஆதரித்து,காட்டிக்கொடுத்து, தமது வாழ்வை அன்று முதல் இன்று வரை தக்கவைத்து கொள்கின்றனர்.இன்றைய மறுகாலனியாக்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமது சுகபோக வாழ்வை மேலும் உத்தரவாதப் படுத்திக்கொண்டுள்ளனர்.பார்ப்பனக்கும்பல் காலத்திற்கு ஏற்ப எல்லாவித பிற்போக்கு தனங்களோடும் ஒன்று கலந்துவிடுவதும்,இந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்து உருவாகும் முற்போக்கு சிந்தனை, செயல்பாடுகளில் ஊடுருவி அவற்றை குலைப்பதும், ஆதிக்கசாதிகளை பயன்படுத்தி அவற்றை அழித்துவிடும் செயலையும் எப்போதுமே செய்து வருகிறது.
இப்படித்தான் பவுத்தத்தையும்,சமணத்தையும்,வள்ளலாரையும் சீரழித்தனர், அழித்தொழித்தனர்.பார்ப்பனர்களின் இந்த நயவஞ்சகமான நடைமுறையை உடனடியாக புரிந்து கொண்டு தம்மை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பார்ப்பனியத்தின் அடியாட்களான ஜாட்,வன்னியர்,தேவர் போன்ற சாதிகள் தங்களது சாதிப்பெருமையை காப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை ஈவிரக்கமின்றி ஆண்டுதோறும் காவுகொள்கின்றனர்.இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் பார்ப்பனியத்தை மீறுகின்றவர்களை,மீற நினைப்பவர்களை பீதியூட்டி பார்ப்பனியத்தை பாதுகாத்து கொள்ளும் அதே நேரத்தில்,இன்னொரு பக்கம் ஆட்சியாளர்கள் மூலம் ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு சட்டபூர்வ பாதுபாப்பையும் எற்படுத்திக்கொள்கின்றனர்.பார்ப்பனியம் சாதிக்கொரு நீதியையும்,இழிவையுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதை கடைபிடிப்பவர்களும் அப்படிப்பட்டவர்களாகவே மாறிவிடுகின்றனர்.
தமது வீடுகளிலும் கிராமத்திலும் தீண்டாமையை கடைபிடிக்கிற ஆதிக்கசாதிகள் ரயில்களிலும், பேருந்துகளிலும் அதை கடைபிடிப்பதில்லை.
தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் சாப்பிட மறுக்கும் இவர்கள் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் வேலை செய்யும் நகர உணவகங்களில் சாப்பிட மறுப்பதில்லை. சாதிமறுப்பு திருமணங்களின் மூலம் ஏற்படும் ரத்தக்கலப்பை தடுக்க நினைக்கும் இவர்கள் ரத்தவங்கிகளில் ரத்தம் பெறுவதை மறுப்பதில்லை.கிராமப்புற கோவில்களில் தாழத்தப்பட்டோர் நுழைவதை தடுக்கும் இவர்கள், நகர கோவில்களில் அதை செய்வதில்லை, அங்கு தாழ்த்தப்பட்டோர் நுழைவதால் நாங்கள் அங்கு வரமாட்டோம் என்று கூறுவதுமில்லை.தம்மை மேல்சாதி என்று கருதிக்கொள்ளும் அனைவரும் இப்படித்தான் நேர்மையற்றவர்களாகவும், இழிகுணங்களின் இருப்பிடமாகவும், முரண்பாடுகளின் மூட்டைகளாகவும், இரட்டை வேடதாரிகளாகவுமே வாழ்கின்றனர்.
சாதியும், தீண்டாமையும் இறைவனால் படைக்கப்பட்டது . அதனால் அது புனிதமானது என்று கருதுவதற்குரிய அம்சங்கள் அனைத்தும் இல்லாது ஒழிந்துவிட்டது. இப்போது அது சுரண்டல். அடக்குமுறை, பாசிசம் ஆகியவற்றின் அப்பட்டமான வடிவமாகவும் ஏகாதிபத்தியம், மறுகாலனியாக்கம் ஆகியவற்றின் உற்றத் தோழனாகவும், அதன் பிரிக்கமுடியாதஅங்கமாகவும் திகழ்கிறது, ஆகவே ஆதிக்க சாதிகளின் ‘கவுரவக் கொலை’களும்,மறுகாலனியாக்கத்தை ஆதரித்துக்கொண்டே ‘கவுரவக்கொலை’களைத் தடுக்க வேண்டும் என்ற கூப்பாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இவைகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
பார்ப்பனிய பிற்போக்கு பண்பாட்டையும், ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டையும் இவற்றிற்கான சமூக அடிப்படையையும் எதிர்த்து முறியடிப்பதன் மூலம்தான் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக்கொலை’கள் உள்ளிட்ட அனைத்து விதமான அநீதிகளையுமம் நாம் முறியடித்து வெற்றிபெற முடியும். இதற்கு நாம் சாதி மறுப்பு காதல், கோத்திரம் மீறிய காதல், அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வு ஆகியவைகள் பற்றியும் இவைகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும், இவைகள் சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவுகின்றனவா? அல்லது கேடுவிளைவிக்கின்றனவா? என்பதைப் பற்றி நாம் தரப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இவைகளில் எவற்றை நாம் ஆதரிக்க வேண்டும் எவற்றை எதிர்க்க வேண்டும் என்பதையும், இவற்றைத் தடுப்பதற்கு எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும். இப்படி அல்லாமல் இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று கூறுவது அயோக்கியத்தனம்! இதை ஏற்பது மூடத்தனம்!
-தொடரும்
தொடர்புடைய கட்டுரை
சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II
விவசாயம்
விவசாயிகளின் முன்னேற்றமே நாட்டின்முன்னேற்றம்,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்
Pages
Tuesday, 20 July 2010
Tuesday, 6 July 2010
மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.
மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.
“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி அது தோன்றிய போது நிலவிய உழவுத் தொழிலின் அவலத்தை மட்டுமல்ல,அக்காலசமூக அவலத்தையும் தன்னுள்ளே புதைத்து வைத்துள்ளது.இந்த அவலம் தோன்றுவதற்குரிய சமூக,அரசியல்,பொருளாதார அடிப்படைகளையும்,இந்த அவலத்தை எதிர்த்த அக்காலத்து மக்களின் உணர்வுகளையும்,எண்ணங்களையும் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத தேவையுள்ளது.
எனென்றால் ஒவ்வொரு சமூகமும் அவற்றின் வளர்ச்சியும்,அவற்றுக்கிடையிலான தொடர்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வெவ்வேறானவைகள் அல்ல.ஒரு சமூக வளர்ச்சியின் தொடர்ச்சிதான் அடுத்த சமூகமாக உருவெடுக்கிறது.ஆகவே ஒன்று மற்றொன்றின் வாழ்விலும்,வளர்ச்சியிலும் தவிர்க்கவியலாத பாத்திரம் ஆற்றுகிறது.இவைகளைப் பற்றி தெளிவாக வரையறுத்து நாம் புரிந்து கொண்டால்தான் நிலவுகிற சமூகத்தின் அவலங்களையும்,அதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மால் உருவாக்கிகொள்ளமுடியும்.ஆகவே இன்றைய நமது விவசாயத்துறை அவலத்தையும் அதற்கான காரணங்களையும் அதைபற்றி நாம் வாழும் சமூகத்தின் மனப்போக்கையும்,இது எழுவதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்க,பண்டைய நமது சமூகத்தின் வரலாற்றில் இருந்து தொடங்கி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுவரை வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ்சமூகத்தின் வரலாற்றை கி.மு 200 இருந்து கி.பி 250 வரை சங்ககாலம் என வரையறுத்துள்ளனர்.வரலாற்று ஆய்வாளர்கள் தொகுத்துள்ள சங்ககால வரலாற்றில் இருந்து நாம் நாமது தேடலை தொடங்குவது தான் இப்போதைக்கு நமக்குள்ள ஒரே வழியாகும்.
சங்ககாலம் என்று எடுத்துக்கொண்டால் இக்காலமக்களின் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை பற்றி அக்கால இலக்கியங்களில் இருந்து தான் தெளிவுபடுத்திகொள்ள வேண்டியிருக்கிறது.இக்காலத்தில் எழுதப்பட்ட எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவைகள் அக்கால சமூகமக்களின் வாழ்வை பதிவுசெய்துள்ளன. இக்காலம் புராதன பொதுவுடமை சமூகம் வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த காலமாகும்.இச்சமூகத்தின் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே இருந்துள்ளது.இதனால் விவசாயமே சமூகத்தில் மிக உயரிய தொழிலாக மக்களால் போற்றப்பட்டது.வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த இக்காலத்தில் இச்சமூகத்திற்கே உரிய ஏற்றதாழ்வுகள் இருந்துள்ளது.சமூகவளர்ச்சியின் விளைவாக பல்வேறு தொழில்கள் தோன்றி இதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் பல பிரிவுகளாக இருந்துள்ளது.இந்தப்பிரிவுகளுக்கு இடையில் பலஏற்றதாழ்வுகள் இருப்பினும் ஒன்று மற்றொன்றை இழிவாக பார்க்கவில்லை.
ஒரே குடும்பத்தில் பல தொழில்களை செய்பவர்கள் இருந்துள்ளனர் என்பது அன்றைய சமூகத்தின் எதார்த்தமான நிகழ்வாக இருந்துள்ளது.புராதன பொதுவுடைமை சமூகத்தில் சமூக சொத்தாக இருந்த நிலங்கள் மேலை நாடுகளை போன்று தனியுடைமையாக மாறாமல் அதற்கு மாறாக அரசர்களிடம் வேறொரு வடிவில் சமூகசொத்தாக மாற்றப்பட்டது. இதனால் விளைபொருட்களை பங்கிட்டுக் கொள்வதில் ஆளுவோர்க்கும்,உழைப்பாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவைகள் பகை முரண்பாடுகளாக உருவெடுத்துவிடவில்லை.
தமிழ்ச்சமூகத்தில் வர்க்கவேறுபாடுகள் வளர்ந்து வந்த சூழலில் தான் கி.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சமண,பவுத்த சமய பிரச்சாரகர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளனர்.இச்சமயங்கள் இரண்டுமே வட இந்தியாவில் பார்ப்பனியம் சமூகத்தில் எற்படுத்திய சகிக்க இயலாத, இழிவான ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை.ஒரு மனிதனின் பிறப்பின் அடிப்படையில் தான் அவனின் தொழிலும்,சமூகத்தகுதியும் தீர்மானிக்கப்படுகிறது என்ற பார்ப்பனிய கோட்பாட்டை அறிந்திராத தமிழ்ச் சமூகத்தில் அதற்கு எதிரான கோட்பாடுகளை உடைய சமண,பவுத்த கோட்பாடுகள்,தமிழ் மக்களை பெரிதும் கவரவில்லை.குலச்சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் பார்ப்பனிய கற்பனை கடவுளர்களுக்கு எதிராக கடவுள் மறுப்பு கொள்கையை போதித்த இம்மதக்கோட்பாடுகள், தம்மூதாதையர்களை தமது குலதெய்வங்களாக வணங்கிய தமிழ் மக்களிடம் தேவை அற்ற ஒன்றாகவே இருந்துள்ளது.மேலும் தமிழர்கள் சமயங்களை உருவாக்கிகொள்வதற்கான தேவைகள் சங்ககாலத்தில் உருவாகாததால் தமிழர்கள் சமயமற்றவர்களாகவே வாழ்ந்தனர்.தமிழ்ச்சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக உருவெடுக்காத போதும்,நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வுஎதையும் இச்சமயங்கள் வைக்கவில்லை.இது போன்ற காரணங்களால் சமண,பவுத்த சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்கு பெறமுடியவில்லை.
சமண,பவுத்த சமயங்களுக்கு பின்னர் தமிழ்ச்சமூகத்தில் ஊடுறுவிய பார்ப்பனியம் அன்றையப் ஆளும்வர்க்கத்தால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.உயிர்வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் அரசர்களுக்கே சொந்தமாக இருந்ததால் சாதி,தீண்டாமை ஆகிய பார்ப்பனியத்தை கடைபிடிக்க தமிழ்மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.இதன்மூலம் தமிழ்ச்சமூகத்தில் வேறேப்போதும் இல்லாத சுரண்டலும்,ஒடுக்குமுறையும்,இழிவுபடுத்தலும் பெரும்பான்மை மக்களாகிய உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டது.சமூகம் முழுமையும் பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்மக்கள் கூறுபோடப்பட்டனர்.வர்க்கமுரண்பாடுகள் எந்த அளவிற்கு சமூகத்தில் வளரதொடங்கியதோ அந்த அளவிற்கு சொத்துடைமை வர்க்கத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் உருவெடுத்தது.இப்போதுதான் சமண,பவுத்த சமயங்களின் கோட்பாடுகள் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களுக்கு அதாவது பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்தமாக இவைகள் உருவெடுத்தன.இதே அளவுக்கு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாகிய அரசு வேறெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் கருவியாக தன்னை வளர்த்துக்கொண்டது.இச்சூழலின் தேவையை ஒட்டி அக்காலசமூகத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகத்தான் திருவள்ளுவரின் திருக்குறல் அமைந்துள்ளது.
இந்த அடிப்படையில் தான் திருக்குறலில் உள்ள உழவு என்ற அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.உழவுத்தொழிலின் மேன்மையையும், உழவர்களின் மேன்மையையும் திருவள்ளுவர் புகழ்ந்து போற்றுவதில் இருந்தே உழவையும்,உழவனையும் இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் சமூகத்தில் நிலவியுள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.உழவையும்,உழவனையும் இழிவாகபார்க்கும் கண்ணோட்டத்தை பார்ப்பனிய கோட்பாடுகளே சமூகத்தில் உருவாக்கியது.இந்த வரையறுப்பின் அடிபடையில் தான் சங்ககால தமிழ்ச்சமூகத்தின் பிற்பகுதி சாதிய வெறுபாடுகளால் இழிந்து போனது.
ஆளுவோரின் சித்தாந்தமாக பார்ப்பனியம் மாறி அது உழவையும்,உழவனையும் இழிவானவைகளாக ஆக்கியது.இதன் நோக்கம் உழைப்பாளிகளிடம் இருந்து உழைப்பின் பலன்களை அபகரிப்பது தான்.அக்காலச்சமூகத்தில் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே விளங்கியதோடு அரசர்களின் செல்வ செழிப்பிற்கான ஊற்றுகண்ணாகவும் விளங்கியது.அதோடு பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தவும்,நிலைப்படுத்தவும் நிலங்களே பார்ப்பனர்களுக்கும்,அரசர்களுக்கும் சிறந்த கருவியாகவும் பயன்பட்டது.இதனால் உழவையும்,உழவனையும் பார்ப்பனியம் இழிவாக ஆக்கிய போதும் அதை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தமும்,கட்டாயமும் அரசர்களுக்கு இருந்தது.
நிலங்கள் அனைத்தும் அரசர்களுக்கே சொந்தமாக இருந்தது. அவற்றை தாம் விரும்பிய தனக்கு நம்பகமான ஆட்களிடம் மட்டுமே பயிரிட தந்தனர். இந்த நிலங்களை நம்பியே பெரும்பான்மை மக்கள் வாழ்ந்ததும் அரசர்களின் தேவைகளை,விருப்பங்களை மீறுகிறபோது,மீறுகிறவர்கள் தமது வாழ்க்கைகான ஆதாரத்தை-உழைப்பதற்கான உரிமையை இழக்க வேண்டியதாகியது.ஒவ்வொரு கிராமமும் சுயதேவை உடைய கிராமமாகவும் உழவுத் தொழிலோடு பிற கைத்தொழில்கள் இணக்கமாக இருந்ததும், சமூகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவரவர் சாதியின் அடிப்படையில் வேலை உத்திரவாதம் செய்யப்பட்டு இருந்ததாலும்,யாரும் இதில் இருந்து தப்பிச் சென்று இதற்கு வெளியில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பில்லை.இதுதான் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் உயிர்வாழ்வதற்கான அடிப்படையாக இருந்துள்ளது.
சங்ககால சோழமன்னர்களில் சிறந்தவனாக கருதப்படும் கரிகால் சோழன் காவிரிக்கு கரை எடுத்தததும்,கல்லணை கட்டி உழவுத்தொழிலை மேம்பாடடைய செய்ததும் இதன் அடிப்படையில தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
சங்ககாலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியம் தன்னை வலுப்படுத்தி கொண்டு மொத்த சமூகத்தையும் சாதிய சமூகமாக மாற்றியமைத்தது.பார்ப்பனியம் அன்றாட வாழ்ககை முறையாக்கப்பட்டது.உழைப்பாளர்களான சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும்,சொத்துரிமை உட்பட அனைத்து உரிமைகளும் இல்லாதவர்களாகவே ஒடுக்கப்பட்டு இருந்தனர்.இவர்களால் உருவாக்கப்படும் செல்வம் அனைத்தையும் நிலஉடைமையாளர்களே அபகரித்துக்கொண்டு அனுபவித்தனர்.உழைப்பாளிகளோ முழு அடிமைகளாக்கப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு பார்ப்பனிய இழிவை ஏற்று கொண்டு உயிர்வாழும் உரிமை மட்டுமே தரப்பட்டு இருந்தது.உழைப்பாளர்களின் உழைப்பை முற்றாக அபகரித்து வாழ்ந்த நில உடைமையாளர்களோ செல்வ செழிப்போடு வாழ்ந்தனர்.ஆகவே இச்சமூகத்தில் சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும் நிலம்,விளைச்சல் ஆகியவற்றில் எவ்வித உரிமையும் அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்ததால் இதில் கணக்கு பார்க்க வேண்டிய தேவை எதுவும் அவர்களுக்கு எழவாய்ப்பில்லை.அதே நேரத்தில் நில உடைமையாளர்கள் தாம் விரும்பிய அளவிற்கு மட்டுமே உழைப்பாளர்களுக்கு கூலியாக தந்துள்ளனர்.நில உடைமையாளர்கள் எவ்விடத்திலும் நிலத்திலோ,விளைச்சலிலோ தமது பங்காக உழைப்பெதையும் செலுத்தாத போது இவர்களுக்கு இழப்பு எற்படுவதற்கான அடிப்படைக் காரணம் ஏதும் இல்லை.வெள்ளம்,வறட்சி,போர் ஆகியவற்றால் உழவு தொழிலில் இழப்பு எற்பட்டாலூம் அதுவும் உழைப்பாளர்களின் உழைப்புக்கு ஏற்பட்ட இழப்பே தவிர நில உடைமையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பல்ல. ஆகவே உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது என்ற பழமொழி சங்ககாலத்தில் எழுவதற்கான அடிப்படை ஏதுமில்லை என்பது தெளிவாகிவிடுகிறது!. தொடரும்..................1.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I!http://suraavali.blogspot.com/2010/06/blog-post_16.html
Thursday, 1 July 2010
குட்டிய பாத்தா குதர, வளந்து முட்டிய பேத்தா கழுத!
வெள்ளிகிழமை (25.06.2010) இரவு மணி 10.30. இளம் பெண் ஒருவரை இருவர் அடித்து,உதைத்து தர,தரவென்று இழுத்துச்செல்கின்றனர்.அடிப்பவர்களைப் பாதுகாக்க காக்கிச்சட்டை அணிந்த அய்ந்து காவல் நாய்களும் உடன் சென்றன.அந்த அபலைப்பெண்ணின் அலறல் சத்தம் ஊரையே எழுப்பி விடுகிறது,நாங்களும் எழுந்து ஓடினோம்.மறித்தோம்! நீங்கள் யார்? எதற்காக இந்த பெண்ணை இழுத்து செல்லுகிறீர்கள்? என்று கேட்டோம்.
“நாங்கள் போலீசு.....இந்தப் பெண்ணை ஒருவன் கடத்திவந்துவிட்டதாக,இந்த பெண்ணின் அப்பா புகார் கொடுத்துள்ளார் அதைப்பற்றி விசாரிக்கவே அழைத்துச் செல்கிறோம்”,என்றது போலிசு.
நீங்கள் போலிசாக இருக்கலாம். அதற்காக ஒரு பெண்ணை இரவு நேரத்தில் நீங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லமுடியாது. இது சட்டப்படி தவறான செயல் என்று நாங்கள் போலிசிடம் சுட்டிக்காட்டினோம்.பகல் நேரமாக இருந்தாலும் பெண் போலிசு இல்லாமல் எந்த ஒரு பெண்ணையும் நீங்கள் விசாரணைக்கு அழைத்துச்செல்லமுடியாது. இதையும் மீறி நீங்கள் இந்தப் பெண்ணை இழுத்துச்செல்ல முற்பட்டால் கடும்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தோம்.இதன் பிறகு இந்தப்பெண்ணை நாங்கள் இழுத்துச்செல்லவில்லை.அந்தப்பெண்ணின் உறவினர்கள் தான் இழுத்துச்செல்கின்றனர் என்று தனது முட்டாள் தனத்தை வெளிப்படுத்திக்கொண்டது போலிசு.
உறவினர்களே ஆனாலும் சட்டப்படி வயதுவந்த ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லமுடியாது.இந்த சட்டவிரோத செயலை தடுக்க வேண்டிய போலிசு அதற்கு துணை போவது சட்டவிரோத செயலாகும்.அந்த பெண்ணை யாராவது கடத்தி வந்தார்களா என்று இப்பொழுதே நீங்கள் விசாரிக்க முடியும்.அதற்கு மாறாக யாரோ கடத்திவந்து விட்டதாக கூறும் நீங்கள் தான் இந்தபெண்ணை உண்மையாக கடத்த முயலுகிறீர்கள் என்று போலிசின் சமூகவிரோத செயலை நாங்கள் போட்டுடைத்தோம்
பின்னர் நாங்களே அந்தப்பெண்ணிடம் விசாரித்தோம்.அதற்கு அவர் “என்னை யாரும் கடத்தி வரவில்லை.நான் எனது காதலனை மனப்பூர்வமாக விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்.எனது கணவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்.நான் வன்னியச்சாதியை சேர்ந்தவள். எங்கள் காதலை எனது தந்தையும்,உறவினர்களும் ஏற்காமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்ததால் தான் நான் வீட்டை விட்டு வேளியே வந்து விட்டேன்.எனக்கு வயது 23,எனது கணவருக்கு வயது 26.எனது அப்பாவும் உறவினர்களும் சாதி வெறிப்பிடித்தவர்கள், இவர்களோடு நான் போகமாட்டேன்.இவர்களிடம் நீங்கள் எங்களை ஒப்படைத்தால் என்னையும்,எனது கணவரையும் இவர்கள் கொலை செய்து விடுவார்கள். ஆகவே எங்களை இவர்களிடம் ஒப்படைக்காதீர்கள்” என்று ஊர் மக்களிடம் அந்த அபலைப்பெண் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில் எங்கள் வழக்கறிஞரும் அந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்தார்.
நாளைக் காலையில் இந்தப்பெண்ணை போலிசு நிலையத்தில் ஒப்படைப்பதாக உங்களில் யாராவது எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால்,இப்போது விட்டு செல்லுவதாக போலிசு ஆய்வாளர் எங்களிடம் கூறினார்.அப்போதைக்கு இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆய்வாளர் கேட்டபடியே எழுதித்தந்தோம்.
போலிசு சென்றப் பின்னர் ஊர்மக்களும்,நாங்களும் தம்பதிகளை போலிசில் ஒப்படைப்பதில்லை என்று முடிவு செய்தோம்.அதன் படி இரவு நடந்த சம்பவத்தை உயர் போலிசு அதிகாரிகளுக்கு புகாராக அனுப்பிவிட்டு தம்பதிகளை பாதுகாப்பாக வைத்துள்ளோம்.தம்பதிகளை போலிசில் ஒப்படைப்பதில்லை என்ற எங்களின் முடிவை வழக்கறிஞர் மூலம் போலிசுக்கு தெரிவித்தோம். இதனால் ஆத்திரமடைந்த போலிசு எங்கள் மீதும் வழக்குப் போடுவதாக மிரட்டி வருகிறது.இந்த அக்கரமத்தை திருநாவலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு என்ற கழிசடை தான் தலைமையேற்று வழிநடத்துகிறது.ஆதிக்கசாதி வெறியர்களும்,போலிசும்,அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் ஆதிக்க சாதி வெறியோடு சுற்றி திரிவது அதிசயமான நிகழ்வல்ல. அப்படி இல்லாமல் இருந்தால் தான் அது அதிசயம்.ஆனால் முற்போக்கு,புரட்சி என்ற சொற்றொடர்களுக்குள் தமது சாதி வெறியை மூடிமறைத்துக்கொண்டு திரியும் சிலதுகளின் சாதி வெறியை அடையாளம் காண்பதில் தான் உண்மையாகவே சமூகமாற்றத்தை விரும்புகிறவர்களின் வெற்றி அடங்கியுள்ளது.இந்த நிகழ்வைப் பற்றி புரட்சியாளர்களின்(!) சார்பில் ஒரு புரட்சியாளர்(!) கூறியதை கீழே தொகுத்து தருகிறோம்
1.அந்த பையன் சரியில்லாத கேரக்டராமே, இப்படிப்பட்டவனுக்கா நீங்கள்
உதவிசெய்கிறீகள்?
2.இது உங்களுக்கு தேவையா?இதை உங்களால் சமாளிக்க முடியுமா?
3.அவர்களுக்கு உங்களால் எத்தனை நாளைக்கு பாதுகாப்பு தரமுடியும்?
4.இதனால் உங்களின் அமைப்பு பணிகள் பாதிக்காதா? உங்கள் அமைப்பு பணிகளை விட
இது அவ்வளவு முக்கியமானதா? இதனால் உங்களுக்கு என்ன ஆதாயம்?.
5.உங்களுக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு இவ்வளவு
ஆபத்துகளையும்,பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நீங்கள் உதவிசெய்யவேண்டுமா?
இதைப் போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை இவர்கள் எங்கள் முன் வைக்கிறார்கள்.இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் என்று தான் எங்களுக்கு இவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.இதன் மூலம் தங்களது முற்போக்கு,புரட்சிகர முகமூடிகளை தாங்களே கிழித்தெரிந்துவிடுகிறோம் என்பதைப்பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.அந்த அளவிற்கு முற்போக்கு,புரட்சிகர சிந்தனைப்பற்றிய சமூகத்தின் கண்ணோட்டம் மிகவும் தரம்தாழ்ந்து கிடக்கிறது என்பதைத்தான் மேற்கண்ட வினாக்கள் நமக்கு உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட சாதிமறுப்பு தம்பதிகளுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை வாழவைப்பது மட்டுமே எங்களின் ஒரே கூறிக்கோளாக நாங்கள் வைத்திருக்கவில்லை.சாதி.தீண்டாமை மறுப்பை,எதிர்ப்பை எமது இலட்சியத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே நாங்கள் கருதுகிறோம்.இந்தியாவில் சமூகமாற்றத்தை விரும்புகிற,நிலவுகிற சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்க்கிற தனிநபர்களாயினும்,அமைப்புகளாயினும் அவர்கள் அனைவரும் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடாமல் சமூக மாற்றத்தை நோக்கிய பாதையில் எள் முனை அளவிற்கு கூட முன்னேறமுடியாது.சாதி,தீண்டாமை ஆகியவற்றில் வெற்றுப் பேச்சும்,நாடகமும்,முதலை கண்ணீரும் பார்ப்பனியத்தை வலுப்படுத்தவே உதவும் இது தெரிந்து தான் இந்த அரியப் பணியை இப்படிப்பட்ட முற்போக்குகளும்,புரட்சியாளர்களும்(!) செய்து வருகிறார்கள்.இதனால் தான் எங்களை போன்ற நடைமுறைவாதிகளை கண்டால் இவர்களுக்கு உடலெல்லாம் பற்றி எரிகிறது.
இந்தியாவில் எப்படிப்பட்ட பிற்போக்குத்தனமும்,மக்கள் விரோத கொள்கைகளும்,செயல்களும் பார்ப்பனிய உதவியில்லாமல் செயல்பட முடியாது.மேற்கண்ட எதனோடும் கூட்டு சேராமல் பார்ப்பனியம் உயிர்வாழவும் முடியாது.இதை ஏற்காதவர்கள் எவரும் தாங்கள் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிக்கொள்ளவும் முடியாது,அப்படி இவர்கள் கூறிக்கொண்டால் அது அப்பட்டமான பித்தலாட்டமே ஆகும்.இப்படிப்பட்ட கழிசடை முற்போக்குகளின் முகத்திரைகளை நாம் கிழித்தெரிந்து தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டாவிட்டால் நம்மால் நமது லட்சியத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாது.இதில் ஏற்பட்ட,ஏற்படும் சறுக்கல்கள் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் முற்போக்கு,புரட்சிகர அமைப்புகளின் தோல்விகளுக்கு எது அடிப்படையாக இருந்ததோ அதுவே பார்ப்பனியத்தின் வெற்றிக்கான அடிப்படையாக இருந்து வருகிறது.
மேற்கண்ட நிகழ்வுகளில் எமது நடைமுறை செயல்கள் மற்றும் அதைப் பற்றிய கருத்துகளை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.இதைப்பற்றி தோழர்கள்,நண்பர்கள்,வாசகர்கள் தங்களது கருத்துகளையும்,எண்ணங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறும்,எங்களது பணிகளுக்கு ஆதரவு தருமாறும் தோழமையுடன் வேண்டுகிறோம்.
Labels:
ஆட்சியாளர்களும்ஆதிக்கசாதிவெறி,
பார்ப்பனியம்,
போலிகள்
Subscribe to:
Posts (Atom)


