விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label HRPC. Show all posts
Showing posts with label HRPC. Show all posts

Monday, 30 June 2014

தமிழகத்தின் ஆம் ஆத்மி மகஇக குழுமம்!

   கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பும்,பின்பும் தனியார் ஆங்கிலப்பள்ளிகளின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ,நகரங்கள்,கிராமங்கள் வரை ஒவ்வொரு சந்து,பொந்துகளிலும் நமது கண்களும்,செவிப்பறைகளும் கிழிபடும் அளவுக்கு கொட்டிக்கிடக்கின்றன.இந்தக் களேபரங்கள் ,சந்தைக் கூச்சல்களுக்கிடையே இவைகளுக்கு எதிரான சில குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் கடந்த 07.06.2014 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் கல்வி தனியார் மய எதிர்ப்பு மாநாட்டை, மகஇக குழுமத்தின் ஓர் அங்கமான மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தியது.இதனோடு கடந்த மாதம் விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் தமிழ் வழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்ற பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர். இதைப்பற்றியச் செய்தியை இக்குழும இணையதளமான வினவு கடந்த 11.04.2014 அன்று வெளியிட்டுள்ளது.



தமிழ்வழிகல்வியின் அவசியத்தையும், கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் மகஇக குழுமம் தமது குழும உறுப்பினர்களின் குடும்ப பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை அம்பலப்படுத்தி, ”தமிழ்வழிக்கல்வியும் மகஇகவுக்கு பிழைப்புக்கான சாதனமே! “ என்றக் கட்டுரையை கீற்று மற்றும் சூறாவளி இணையதளத்தில் நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அவர்களின் கல்வி தனியார் எதிர்ப்பு மாநாட்டிற்கு பிறகாவது தமது பிள்ளைகளை அவர்கள் அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம்.

எம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டு செய்தியை வினவு இணையதளம் கடந்த 11.06.2014 அன்று கல்வி உரிமை மாநாடு சாதித்தது என்ன? என்றத் தலைப்பில் ஆரவாரமாக வெளியிட்டுள்ளது.

அதில் தங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் இருந்து தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில், அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துள்ளதாகவும் , இதுவே மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனோடு இவ்வமைப்பினர் மாநாட்டிற்காக வெளியிட்ட துண்டு பிரசுரம் தோற்றத்தில் விஞ்ஞான பூர்வமாகவும்,உணர்ச்சி பூர்வமாகவும் அமைந்திருந்தது.

·          “அரசுப்பள்ளிக்காக போராடாமல் விட்டில் பூச்சிகளாய் தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்?”

·          “ காசுக்கான வேசியும், கட்டிய மனைவியும் ஒன்றா? அரசுப்பள்ளிகளோடு கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுவதா?”

·          ” ஆங்கில வழியில் படித்துவிட்டா திருவள்ளுவர் 1330 குறல் படைத்தார்?”

ஆகிய முழக்கங்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது .

இவர்களின் கல்வி தனியார்மய எதிர்ப்பு, தாய்மொழிக் கல்வியின் அவசியம் குறித்த பிரச்சாரத்தை கேட்டு எத்துனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் தாய்மொழியில் படிக்க வைக்கப் போகிறார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்பதை வினவு கட்டுரையை பார்க்கும் போதே நமக்கும் புலப்படுகிறது.

மாநாடு, பேரணி , பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதால் மட்டுமே தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை மக்களிடையே உணர்த்திவிட முடியும் என்கிற அளவிற்கு நமது சமூகம் விழிப்புணர்வு படைத்த சமூகம் அல்ல.

சமூகத்தில் – பொருளாதாரத்தில் மேல்நிலையில், மேல்சாதியில் உள்ளவர்கள் எதை கடைபிடிக்கிறார்களோ அதை, அது   சரியா? தவறா? என்பதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், அதை அப்படியே பின்பற்றுவதுதான் வாழ்வில் முன்னேறுவதற்கான சிறந்த பாதை எனக் கருதும் சமூகம் இது.

ஒரு காலத்தில் கல்வி மற்றும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை வர்ணதர்மத்தின் மூலமாக சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக்கி வைத்திருந்தனர்.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யார் இந்த நிலைக்கு தம்மை ஆளாக்கி வைத்திருந்தனரோ அவர்கள் கடைபிடித்த வாழ்வியல் முறையை அடைவதும்,பின்பற்றுவதுமே தமது வாழ்வின் இலக்காக கொண்டுள்ளவர்களை பெரும்பான்மையாக கொண்ட சமூகம் இது.

வர்ண தர்மத்தால் இன்றளவும் நசுக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல் இலக்கும் பார்ப்பனியமே ஆகும்.

இதன் தவிர்க்கவியலாத அங்கம்தான் ஆங்கில கல்வி மோகம். சமூகத்தில் கேடுகெட்ட சிந்தனாமுறையை தூண்டிவிடும், இதன்மூலம் வர்ணாசிரம வாழ்வியலை காலத்திற்கு ஏற்ப உயர்த்தி பிடிப்பவைகள்தான் தனியார் ஆங்கிலப்பள்ளிகள்.

அன்று கல்வியையே தர மறுத்ததும், இன்று ஆங்கில மோகத்தை ஊட்டுவதும் ஒரே நோக்கத்திற்காகத்தான் . சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்கள் தமது சுகமான சுகவாழ்வை தக்க வைத்துக்கொள்வதுதான் அது.

எனவேதான் இவைகளைக்கு எதிராக போராடுபவர்கள்,  வெறுமனே வாய்வீச்சாளர்களாக இருந்தால் மட்டும் போதாது. அவர்கள் தாம் பிறர்க்கு உபதேசிப்பதை தமது சொந்த வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்.தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தாம் சமூகத்திற்கு எதை போதித்தார்களோ அதை தமது வாழ்விலும் கடைபிடித்தனர்.அதனால் தான் இன்றுவரை அவர்கள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக திகழ்கிறார்கள்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எதை மக்களுக்கு போதித்தனரோ, எதற்கு எதிராக தமது வாழ் நாள் முழுக்க போரிட்டனரோ அவைகளை அவர்களின் வாரிசுகளாக இன்றைய நிலையில் தம்மை கூறிக்கொள்வோர், அவற்றை தமது வாழ்வில் கடைபிடிக்காமல் மேடைக்கு ஒன்றும் , குடும்பத்தில் வேறொன்றுமாக இரட்டை வாழ்க்கை வாழ்வதால் பார்ப்பனிய சக்திகள் இப்போதைய நிலையில் வலிமைப்பெற்று வருகின்றன.

கல்வி தனியார் மயத்தை எதிர்த்தும், தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும் விண்ணுக்கும் , மண்ணுக்கும் எகிறிக்குதிக்கும் மகஇக குழும உறுப்பினர்களோ,  அவற்றை தமது வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பது விருதை மாநாட்டுக்கு முன்பு மட்டுமல்ல,  மாநாட்டிற்கு பின்பும் மாறாத உண்மையாய் இருப்பதால் இம்மாநாடு தாய்மொழிக்கல்வியின் நலன்களுக்கு எதிராகவே அமையும் என்பதை வரலாறு நிரூபிக்கும்.

விருதை மாநாட்டின் சாதனையாக தமது அமைப்பின் நிர்வாகிகள் அரசுப்பள்ளியில், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் தமது பிள்ளைகளை சேர்த்திருப்பதாக அப்பட்டமாக புளுகியிருக்கிறது வினவு.
மகஇக குழும நிர்வாகிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் செயலர் செந்தாமரை கந்தன் ஆகிய இருவரும் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளியில் இருந்து அரசு உதவி பெறும் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.இதன் மூலம் தாங்கள் எப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவிபெறும் பள்ளி தமிழ்வழியில் பயிலும் மாணவர்களைக் கொண்டது மட்டுமல்ல,  அதே வளாகத்தில், அதே நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறாத ஆங்கில வழி தனியார் பள்ளியும் செயல்படுகிறது. மகஇக குழும உறுப்பினர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி பிரிவில்தான் சேர்த்துள்ளனர். இவர்களின் ஏனைய நிர்வாகிகளோ தமது பிள்ளைகளை சென்ற ஆண்டைப் போன்றே நடப்பாண்டிலும் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் தான் படிப்பை தொடரவைத்துள்ளார்கள்.

அரசுப்பள்ளியில், தாய்மொழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்று ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதது மட்டுமல்ல,  தனியார் ஆங்கில பள்ளியில் இருந்து  அரசு உதவி பெறும் பள்ளி என்ற போர்வையில் ஆங்கில வழியிலேயே  தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டு சமூகத்தை ஏய்க்கும் செயலைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்துள்ளனர். இவர்களின் இந்த செயல் இழிவும், கேவலமும் நிறைந்ததாகும்.

ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதவர்கள் இழிவான இச்சமூக அமைப்பை பாதுகாக்கும் பிழைப்புவாதிகள் என்பதுதான் எமது நிலைபாடு.

தமது பிள்ளைகளை தாய்மொழியில் , அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்காத இவர்களின் பிரச்சாரம் நடைமுறைக்கானது அல்ல. அது இவர்களின் பிழைப்புக்கானதே ஆகும்.

தாம் சொல்வதற்கு நேர்மையாக நடந்து கொள்ளாத இரட்டை வேடதாரிகளான  இவர்களை பார்த்து எவரும் அரசுப்பள்ளிகளில் , தாய்மொழியில் தமது பிள்ளைகளை சேர்க்கப்போவதில்லை.

இவர்கள் மட்டுமல்ல இவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பெரும்பான்மையினரும் தமது வாரிசுகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பவர்களாத்தான் உள்ளனர்.

நிலவுகிற சமூகத்தில் ஆட்சியாளர்களுக்கு தேவையான பொய், பித்தலாட்டம், நேர்மையின்மை உட்பட அனைத்து அவசியமான திறமைகளையும் தாங்கள் எட்டிப்பிடித்துவிட்டோம் என்பதை இம்மாநாட்டின் மூலம் சமூகத்திற்கு இவர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே இவர்கள் விரைவிலேயே பெரும் திரளினராக பொங்கி பெருகி தமிழகத்தின் ஆம் ஆத்மியாக ஆட்சியை கைப்பற்றவும் கூடும்…..!
 
தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      



 







10.தவளை தன் வாயால் கெடும் ...!                           



-சூறாவளி ,தமிழ்நாடு.

தொடர்பு எண்:9842529188.


Monday, 21 April 2014

தமிழ்வழிக் கல்வியும் மகஇக‍வுக்கு பிழைப்புக்கான சாதனமே!

முலாயம் சிங் யாதவ் …. இவர் சமஜ்வாடி கட்சியின் தலைவர்.உத்திரபிரதேச முன்னால் முதல்வர்,இந்நாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தை.அண்மையில் இவர் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது இளைஞர்களின் இயல்பு .இதற்காக அவர்களுக்கு மரணதண்டனை விதிப்பது தவறு”, என்று பேசியுள்ளார்!

இப்படி அவர் பேசியது இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக உணர்வு படைத்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முலாயம் சிங்கின் கருத்து ஆணாதிக்க நிலையிலிருந்து சொல்லப்பட்டதாக விமர்சித்தனர். இப்படி விமர்சித்தவர்களில் உண்மையிலேயே ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் மட்டுமல்ல போலிகளும் அடங்குவர். ஒட்டுமொத்தத்தில் இப்போலிகள் முலாயம் சிங்கின் சிந்தானா முறையில் இருந்து வேறுபட்டவர்கள் இல்லை.இவர்களுக்கிடையே இப்படிப்பட்ட ஜனநாயக விரோத கருத்துகளை வெளிப்படுத்தும் வடிவங்களில்தான் வேறுபாடு உள்ளது.

இப்போதுமட்டுமல்ல எப்போதுமே முலாயம் சிங் அனைத்து வகையான பிற்போக்குத்தனங்களின் பிரதிநிதி என்றாலும் அவர் இதை இப்போது , இவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டிய தேவையும், அவசியமும் என்ன வந்தது என்பதை புரிந்து கொண்டால்தான் முலாயமின் கருத்தை விமர்சித்தவர்களில் போலிகள் மற்றும் உணமையான ஜனநாயக உணர்வுள்ளோரின் நோக்கத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான 16- வது தேர்தல் நடைபெறும் போது இப்படியான அப்பட்டமான ஜனநாயக விரோத கருத்தை ஒருவர் வெளிப்படையாக கூறமுடிகிறது என்றால், இந்த நாடு எப்படிப்பட்ட ஜனநாயக அடிப்படையை கொண்டது என்பதை வெளிப்படுத்துவதற்கான சிறந்த சான்றாகும்.உண்மையில் முலாயமின் கருத்து தேர்தலில் வெற்றி  பெறுவதை நோக்கமாக கொண்டது.இப்படியான கருத்துகள் தமக்கு தோல்வியை தந்துவிடும் என்று அவர் கருதியிருந்தால் ஒருபோதும் அப்படி பேசியிருக்க மாட்டார்.முற்போக்கை பேசுகிறோமா, இல்லை பிற்போக்கை பேசுகிறோமா என்பது முக்கியமில்லை. எதை பேசினாலும் வெற்றி என்பதே தேர்தலின் இலக்காகும். அந்த வகையில் ஆணாதிக்க கருத்துடையவர்களின் அதிலும் ஹார்மோன் செயல்பாட்டின் ஆதிக்கத்தில் உள்ள இளைஞர்களின் வாக்குகளை கவர்வதே அவரின் தந்திரம்.இந்த வகையில் அவர், தான் பிற்போக்குவாதி என்பதை சிறிதும் மறைக்கவில்லை. முழுப்பொய்யை விட, அரை உண்மை ஆபத்தானது என்பதை போன்று வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை விட, போலித்தனம் மிகப்பெரிய ஆபத்தானதாகும். இவையிரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இந்தியாவில் எப்போதும் பிற்போக்குத் தனத்தை விட, போலியான முற்போக்குத்தனந்தான் மிகப்பெரிய அபாயமாக உள்ளது. இந்தப் போலித்தனம் இந்திய சமூகத்தின்  சாரமாக விளங்குகிறது. எங்கும், எதிலும் நிறைந்து காணப்படுகிறது. அதுவன்றி இங்கு ஒர் அணுவும் அசைவதில்லை.

கடந்த 11.04.2014 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் ஆலிசிச்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவை நேரில் பார்த்த அனைவரும் அரசுப்பள்ளியில் அதிலும் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படியும் திறமைகள் உண்டா என்று வியக்கும் அளவுக்கு, அதிலும் அம்மாணவர்களின் பெற்றோர்கள் கூட தன்னுடைய பிள்ளைகளிடமா இப்படிபட்ட திறமை இருக்கிறது என்று வியக்கும் அளவுக்கு அந்த ஆண்டு விழா அமைந்திருந்தது.
பன்னிரண்டு நடன நிகழ்ச்சிகள், அரசுப்பள்ளியா, தனியார் பள்ளியா என்ற பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி , தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நாடகங்கள் ஆகியவற்றை மாணவர்கள் நிகழ்த்தினர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் திறமை,பொருப்புணர்ச்சி மட்டுமே போதுமானதல்ல பெற்றோர்களின் பங்களிப்பும் அவசியம் என்பதை வலியுறுத்தும் மறுபக்கம் என்ற குறும்படம் ஒன்றையும் இப்பள்ளியின் ஆசிரியர்களே தயாரித்து திரையிட்டும் காட்டியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இப்பள்ளி மாணவர்களிடையே உள்ள திறமையை இப்படிபட்ட கலைநிகழ்ச்சிகளின் மூலமாக மட்டுமல்ல கல்வித்தரத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.உண்மையில் இப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தானா என வியக்கும் அளவுக்கு அவர்களின் ஆற்றல் அமைந்துள்ளது.

தனது குழந்தையை தனியார் ஆங்கிலப்பள்ளியில்தான் சேர்ப்போம் என்று பிடிவாதம் பிடித்தவர்களை மட்டுமல்ல தமது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்திருந்த பெற்றோர்கள் மனதையும் இந்த ஆண்டு விழா மாற்றிவிட்டது. தமது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்போம் என்று அறிவிக்கவும் செய்துள்ளது.

எத்துனை கருத்தரங்குகள் விவாதங்கள் நடத்தினாலும் ஏற்படுத்த முடியாத மாற்றத்தை ஒரு ஆண்டுவிழா செய்துகாட்டிவிட்டது. இந்த அதிசயிக்க தக்க மாற்றத்திற்கான பெருமை அனைத்தும் இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களையே சாரும்.இதற்காக அவர்களுக்கு நமது மன்மார்ந்த நன்றியை காணிக்கையாக்குவோம்.

ஆனால் இந்த ஆண்டுவிழாவில் அரசுப்பள்ளிகள் பற்றி தாங்கள் வெளிக்கொணர்ந்த கருத்துக்கள் எதுவும் தாங்களுக்கு பொருந்தாது என்றுதான் இப்பள்ளி ஆசிரியர்களின் நடைமுறையாகும். ஏனெனில் இந்த ஆசிரியர்கள் எவரும் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கவில்லை.மாறாக தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில்தான் படிக்க வைக்கின்றனர்.

அடுத்து மகஇக குழுமத்தின் ஒரு நிறுவனமான வினவு இணையதளம் கடந்த 11.04.2014 அன்று  அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாய் விருதையில் பிரச்சாரம் என்ற தலைப்பில் இதே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்ட கிராமங்களில் தமது குழும அமைப்புகள் செய்த பிரச்சாரம் சம்பந்தமாக ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.



 

அதில் தமது குழுமத்தின் மனித உரிமை பாதுகாப்பு மையம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட தொட்டிக்குப்பம்,பெரிய வடவாடி,சத்தியவாடி, சாத்துக்கூடல்,செம்பளக்குறிச்சி, கோமங்கலம் ஆகிய கிராமங்களில் அரசு ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் அக்கிராம மக்களிடையே அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.வீரபாண்டியன் என்பவர் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் , தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு கூட்டங்களை நடத்திய மகஇக குழும அமைப்புகளின் செயலை பலரும் பாராட்டுவார்கள்.இப்படி பாராட்டுவதற்கு முன்பு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்.

“அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணார்வு கூட்டங்களில் கலந்துகொண்ட மகஇக குழும அமைப்பின் உறுப்பினர்களான செந்தாமரை கந்தன்,வேலுமணி,வீரகாந்தி அதிலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் வழக்கறிஞர் ராஜீ இவர்களின் அனைவரின் வீட்டுப்பிள்ளைகளும் ஆங்கில வழியில், தனியார் பள்ளிகளில்தான் தமது வாரிசுகளை படிக்க வைக்கின்றனர்.தமது பிள்ளைச் செல்வங்களின் கல்வி உரிமைக்காகத்தான் இப்பிரட்சியாளர்கள் பெற்றோர்கள் சங்கத்தை ஆரம்பித்துள்ளனர். இச்சங்கத்தின் மூலம் போராட்டம் நடத்தி தமது வாரிசுகளுக்கு கட்டணச் சலுகை வெற்றெடுத்துக் கொண்ட சாதனை புரிந்துள்ளனர்.

இப்புரட்சியாளர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்தான் படிக்க வைக்கின்றனர் என்ற உண்மையை சென்ற ஆண்டும் நாங்கள் அம்பலப்படுத்தியிள்ளோம்.ஆனால் அதைப்பற்றி அவர்கள் ஒரு சிறிதும் அதாவது அவர்களின் மனசாட்சி கூட அவர்களை உறுத்தவில்லை.எந்த கூச்சமும் இன்றி இந்தக் கழிசடைகள் இந்த ஆண்டும் அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்று பிரச்சாரம் செய்ய கிளம்பி விட்டனர்.

பாலியல் பலாத்காரம் பெரிய குற்றமல்ல என்று பேசிய முலாயமின் நோக்கம் அரசியல் ஆதாயமடைவது , அதாவது அரசியல் அவரின் பிழைப்புக்கான சாதனம்.இதைப் போன்றுதான் புரட்சி , முற்போக்கு, சமூக சேவை ஆகியவை மகஇக குழுமத்தின்  பிழைப்புக்கான சாதனங்கள்.இதனால்தான் இவர்களின் மனசாட்சி கூட இவர்களை  உறுத்துவதில்லை. அப்படியென்று ஒன்று இருந்தால் தானே உறுத்துவதற்கு!

இந்த வகை பிழைப்புவாதத்தில் இந்தியாவிலேயே இந்தக்குழுமம்தான் முதலிடத்தில் திகழ்கிறது.அதிலும் தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கே உரிய வடிவத்தில்.

அதாவது வட இந்தியாவில் பார்ப்பனியம் முரட்டுத்தனமானது தென்னிந்திய அதிலும் தமிழக பார்ப்பனிய வடிவமோ நாசுக்கான,நயவஞ்சகமானது, அதைப்போன்றதுதான் மகஇக குழுமத்தின் பிழைப்புவாதமும்.


இதுமட்டுமா,ஒருவனுக்கு ஒருத்தி, அண்ணன், தங்கை உறவு முறைகள் ஆகியவை நிலபிரபுத்து பிற்போக்குத் தனமாம்.அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடான இந்தியாவில் அவற்றை புரட்சியின் மூலம் இல்லாது ஒழிப்பதை இலக்காக கொண்டுள்ளார்களாம். இவர்கள்! இதனால் மேற்கண்ட நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும் ஒழிப்பதையும் இலக்காக கொண்டவர்களாம்.
அந்த வகையில்தான் சகோதர முறை திருமணம் செய்து கொண்டவர்களையும் பாலியல்  ரீதியாக சீரழிந்தவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு மாறாக அதன்மீது பெருமைப்பட வைத்து , அதைத் தொடர ஊக்கம் தருவதன் மூலம் அவர்களை தமது ஆதரவாளர்களாக அணிதிரட்டியும் வருகிறார்கள். இப்போலிகள். உலகில் இப்படிபட்ட புரட்சியாளர்களை வேறெங்காவது காண முடியுமா?

இதன் மூலம் தமது பிழைப்புவாதத்திற்கு இவர்கள் எதையும் செய்வார்கள். அந்தவகையில்தான் அரசுப்பள்ளிகளில் உங்களின் பிள்ளைகளை சேருங்கள் என்ற இவர்களின் பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றார்கள்.

இப்போது சொல்லுங்கள் மகஇக குழும அமைப்புகளின் கல்வி விழிப்புணர்வு! பிரச்சாரத்தை பாராட்டலாமா என்பதை?! இவர்களுக்கும் முலாயம் சிங் போன்றவர்களுக்கும் இடையே சாராம்சத்தில் என்ன வேறுபாடு உள்ளது என்பதை!
இந்தக் கட்டுரையில் நாங்கள் குறிப்பிட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாம் சொல்வதை தமது குடும்பத்தில் நடைமுறை படுத்தவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம். ஆனால் மகஇக குழும உறுப்பினர்களின் செயலை விமர்சித்த அளவுக்கு ஆசிரியர்களின் செயலை விமர்சிக்கவில்லை என்று நீங்கள் கருதலாம்.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளை சேருங்கள் என்ற தமது பிரச்சாரத்திற்கு ஏற்ப அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நடந்து கொள்ளாவிட்டாலும், தாம் பணியாற்றும் பள்ளியில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்தையும் ,கலைத்திறமைகளையும் வளார்த்தெடுத்து, சாதித்துக் காட்டியுள்ளனர். அரசுப்பள்ளியில் , தாய்மொழியில் கல்வி அளிப்பதன் மூலம் குழந்தைகளின் புரிதலை உயர்த்தி,பகுத்தறிவாளிகளாக பிறப்பிள்ளைகளை உயர்த்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளுக்கு அதை அளிக்க முன்வருவதில்லை.

இதற்கான காரணம், பிள்ளைகள் பகுத்தறிவற்றவர்களாக, ரோபாக்களாக இருந்தால்தான் எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.தனியார் நிறுவனங்களுக்கு தேவை மனிதர்கள் இல்லை. மனித உருவில் நடமாடும் ரோபாக்கள்தான். இதனால்தான் தெரிந்தே தமது பிள்ளைகளை அவர்கள் மூடர்களாக வளர்த்தெடுக்கின்றனர்.
இப்படிபட்ட ஆசிரியர்கள்,பெற்றோர்கள் தனியார்மய அநீதியை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையோ,வழிமுறைகளோ ஏதும் இல்லாதவர்கள். சமூகத்திற்கு பின்னே வால்பிடிப்பவர்கள்.

ஆனால் மகஇக குழுமத்தினரோ தனியார்மயம்,தாராளமயம்,உலகமய கொள்கைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள்,இவைகளை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உலகிலேயே நாங்கள் மட்டுமே வைத்துள்ளோம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். இதை இந்த கல்வி விழிப்புணர்வு கூட்டங்களிலும் பேசியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் பிள்ளைகளை படிக்க வைப்பதால் ஏற்படும் கேடுகளை அறிந்தவர்கள் இவர்கள்.அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் அறிந்தவர்கள் தாங்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில்,ஆங்கிலவழியில் படிக்க வைப்பதுதான் பெருங்குற்றம்.

ஏனென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் ஆங்கிலவழியில் படிக்க வைக்கும் செயலுக்கான அடிப்படை கையாலாகாத்தனமே காரணமாகும்.

ஆனால் மகஇக குழுமத்தினர் தமது பிள்ளைகளை இப்படிசெயவதற்கான காரணம் புரட்சி, முற்போக்கு ,சமூக சேவை ஆகியவற்றை தமது பிழைப்பிற்கான சாதனமாக ஆதாரமாக கொண்டிருப்பதுதான்.

சமூக மாற்றம் என்ற உன்னதமான மனிதகுல செயல்பாட்டையே தமது பிழைப்புக்கான ஆதாரமாக கொண்டிருப்பதால்தான் அதாவது சாரம்சத்தில் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயத்தை பாதுகாப்பவர்கள் என்ற வகையில்தான் இவர்களை நாங்கள் முதலாளித்துவ குழும அமைப்புகளில் ஒன்றாக  மக இக குழுமம் என்று வரையறுத்துள்ளோம்.

சமூக வளர்ச்சிக்கும் ,மாற்றத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் பெரும் தடைகற்களாக திகழும் மகஇக குழுமத்தை போன்ற போலிகளை களையெடுக்காமல் இவைகளை சாதிப்பது ஒருபோதும் சாத்தியமில்லை. 

தொடர்புடைய கட்டுரைகள்:

 1.  காயடிக்கும் கட்சி 
                      



 







10.தவளை தன் வாயால் கெடும் ...!                           




Sunday, 11 August 2013

மே 17 இயக்கத்தின் இயலாமையைப் பழிக்கும் வினவின் 'வீராவேசம்'!

இளவரசன் மரணத்தையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பல்வேறு இயக்கத்தினர் தமிழகம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.அந்த வரிசையில் மே-17 இயக்கமும் சுவரொட்டி ஒட்டியது.மகஇக குழுமமும் சுவரொட்டி ஒட்டியது.

இப்படி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மிகச்சிறந்தது எது என்ற அதிமுக்கிய விவாதத்தை,தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும், ஏன் அதற்கு மேலும் பார்ப்பனியம் உயிர்வாழும் நேபாளம்,இலங்கை உட்பட அனைத்து சமூகங்களுக்கும் அவசியமான விவாதத்தை மக இக குழுமத்தின் வினவு இணையதளம் துவக்கி வைத்திருக்கிறது.

இளவரசன் – திவ்யா தம்பதியினர் பிரிக்கப்பட்டு , இளவரசனும் மரணத்தை தழுவிய பிறகு இந்த விவாதத்தை துவக்கிய வினவு அதற்கு முன்பே அவர்களை எப்படிக்காப்பது, வாழவைப்பது என்பதை பற்றிய விவாதத்தை துவக்கியிருந்தால் போட்டியிட்டிருந்தால் சாதிமறுப்பு தம்பதிகளை காப்பாற்றி இருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் அதை ஆலோசனைகளாக மட்டுமல்லாது ,அந்த ஆலோசனைகளை நடைமுறையோடு இணைக்கவும் பாடுபட வேண்டிய தேவை தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகியிருக்கும்.

எல்லாம் முடிந்த பிறகு யார்வைக்கும் ஒப்பாரி சிறந்தது என்ற பட்டிமன்றத்தை காரசாரமாக துவக்கியிருக்கிறது வினவு.

இளவரசன் தம்பதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் தாங்கள் சுயவிமர்சனத்தோடு சுவரொட்டி முழக்கத்தை எழுதியுள்ளதாக மே-17 இயக்கம் கூறுவதில் நிச்சயம் ஒரு நேர்மை இருக்கிறது.

அதே நேரத்தில் மக இக கூறுவதைப் போன்று இளவரசனை போன்றே மே-17 இயக்கமும் பாமகவை கண்டு அச்சம் அடைந்தது உண்மையோ,இல்லையோ சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று இளவரசன் மட்டுமல்ல மே-17 இயக்கமும் விரக்தியடைந்ததுள்ளது  என்பதுதான் உண்மை.

இப்படி விரக்தியடைந்ததின் வெளிப்பாடுதான் மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள்.இந்த விரக்தி மனப்பான்மை மே-17 இயக்கத்தின் தனித்தன்மையோ,பலவீனமோ மட்டுமல்ல! அதுதான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சமூக உணர்வுள்ள இயக்கங்களின் நிலையுமாகும்.

இப்படி விரக்தியடைவதின் வெளிப்பாட்டு அளவு ஒவ்வொரு தனிநபரிடமும், இயக்கங்களிடமும் வேறுபடலாம்.ஆனால் இது பொதுத்தன்மையாகும். மகஇக குழுமம் தங்களுக்கு அப்படியொரு உணர்ச்சியே எழவில்லை,எழாது என்று உறுதியாக வாதிடுகிறது.
சாதிய விவகாரங்களில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு விவகாரத்திலும் ஒருத்தனிநபரோ,இயக்கமோ விரக்தி மனப்பான்மைக்கு உள்ளாகவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

·           குறிப்பிட்ட விவகாரத்தின் ஆதரவாளராகவும் அதன் மூலம் அவர்கள் ஆதாயமடையக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

அல்லது

·          குறிப்பிட்ட அந்த விவகாரத்தைப் பற்றிய ஞானமும் அதை சரிசெய்வதற்கான தீர்வையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலே உள்ளவற்றில் மகஇக குழுமம் எந்தக் காரணத்தினால் விரக்தி நிலைக்கு செல்லவில்லை என்பதைப்பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நேர்மறையான அல்லது எதிர்மறையான படிப்பினையை அதிலிருந்து நாம் பெறமுடியும்.

”இந்துக்களிடம் இந்து மதவெறியையும்,இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும் ,வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிவெறியையும் , தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்து பேசுகிறோம்.இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்த பிரிவு மக்களை மெல்ல,மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம்.மேலும் மதஉணர்வு,சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் போராட்டத்தின் மூலம் புரியவைக்கிறோம்”

இது மகஇக குழும அமைப்பான வினவின் கட்டுரையில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களாகும்.

மேலே கண்ட நிலைப்பாட்டின் மூலம் சாதியம் பற்றிய முரண்பாட்டை கையாள்வதில்,அதை முறியடிப்பதில் தாங்கள் மிகச்சிறந்த ஞானத்தையும் மிகத் துள்ளியமான வழிமுறைகளையும் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.இதன் மூலம் தாங்கள் சாதித்தவற்றை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவதாக சொக்குப்படியும் போட்டுள்ளார்கள்!

இதன் மூலம் அந்தச்சாதனையைப் பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டுவிடாமல்  நமது வாயை அடைத்துவிட்டார்கள்!
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனியத்தை எதிர்த்து அனைவரும் தோற்றுப் போயுள்ளனர் அல்லது அதனுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய கம்யுனிச இயக்கங்கள் சாதிய முரண்பாட்டை தீர்க்க முடியாததால் மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளனர்.

சாருவாகனர்கள்,புத்தர்,மகாவீரர்,சித்தர்கள்,களப்பிரர்கள்,அம்பேத்கார்,பூலே,பெரியார் ஆகியோர் சாதிக்க முடியாததை மகஇக குழுமம் சாதித்திருக்கிறது என்றால் நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல சாதியத்தின் மூலத்தைப் பற்றிய நிபுணார்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். அப்படியானால் இதுவே இந்திய வரலாற்றில் தலையாய சாதனையாகவும் இருக்க முடியும்.

இந்த வரலாற்றுச் சாதனையை பற்றி இவ்வளவு காலம் மகஇக குழுமம் மௌனம் சாதித்தாலும் இப்போதாவது அதைப்பற்றி 

வெளியில் சொல்லப் போவதாக அறிவித்திருப்பது நமது பெரும் பாக்கியமாகும்!

அண்மையில் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் ”இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது”, என்று அருள்வாக்கு தந்துள்ளார்.ஆனால் அது என்ன என்று கூறவில்லை.

மகஇக குழுமம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் நீடித்து, நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.அந்த ஏதோ ஒன்று என்னவென்று எவருக்கும் புரியவில்லை.இந்தப்புதிருக்கான விடை ஒரு வேளை அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் ஒளிந்து கொண்டிருக்கலாம்.அனைவரும் தமது ஐம்புலன்களையும் ஓருமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக அவர்கள் அருளப்போகும் அருளாசியை தவறவிட்டுவிடாதீர்கள்!

அப்படி அவர்கள் எழுதப்போகும் சாதனைப்பட்டியலில் எமக்குத்தெரிந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளை உங்களுக்கு முன்கூட்டியே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

·          தில்லை நடராசர் ஆலயத்தில் தமிழில் தேவாரம்,திருவாசகத்தை பாடக்கூடாது என்று பல நூற்றாண்டுகளாக தீட்சித பார்ப்பனர்கள் தடுத்து வந்ததை பெரியார் அவர்களுக்கு பின்னர் அதிகாரத்திற்கு வந்த எந்த திராவிட கட்சியின் ஆட்சிகளால் கூட தடுக்க இயலவில்லை.

இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மகஇக குழுமம் போராடி வெற்றி பெற்றது.

தமிழில் தேவாரம் ,திருவாசகத்தை ஆறுமுகசாமி என்ற சிவனடியாரை பாடவைத்து சாதனைப்படைத்தது.

இந்தப் போராட்டத்தில் பாமக,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இந்தச் சாதனையை செய்து காட்டியது.இதனோடு கருணாநிதி தலைமையிலான ஆட்சியையும்,நீதிமன்றத்தையும் கூட மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த எட்டு ஆண்டுகால போராட்டத்தில் மகஇக குழுமம் அமைப்பு தமது தோழர்கள் பலரை இப்போராட்டத்தில் முன்னிறுத்தியது. இப்படி முன்னிறுத்தப்பட்ட அனைவரும் பிறப்பால் வன்னிய சாதியை சேர்ந்தவர்கள்.தவறியும் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் எவரையும் முன்னிறுத்தவோ,மேடை ஏற்றவோ இல்லை.

தொடர்ச்சியாக சாதிவெறியை சுட்டிக்காட்டிப் போராடி மெல்ல,மெல்ல மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ள மகஇக குழுமம் தில்லைப் போராட்டத்தை பார்ப்ப்பனியத்திற்கு எதிரான தமிழர்களின் அல்லது உழைக்கும் மக்களின் போராட்டமாக நடத்தாமல்.ஆறுமுகசாமி என்ற சிவனடியார் வன்னியர் என்பதாலும், அவரே இப்போராட்டத்தின் கதாநாயகன் என்பதாலும், அவர் வன்னிய சாதி உணர்வாளார் என்பதாலும், இப்போராட்டத்தை தீட்சித பார்ப்பனர்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவே கையாண்டது என்பதற்கான ஆதாரம்தான் பிறப்பால் வன்னிய சாதியினரை மட்டுமே இப்போராட்டத்தில் இவர்கள் முன்னிறுத்திய செயலாகும்.

இது பற்றி அந்த குழும அமைப்பின் ஒருப்பகுதியை சேர்ந்தோர் கேட்டபோது அதை அவர்கள் மறுக்கவில்லை. அதற்கு மாறாக “ஒரு போராட்டத்தில் யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது அமைப்பு தலைமையின் உரிமையாகும் இதில் யாரும் தலையிட முடியாது ,என்று பதிலளித்தனர்.

·          ஆணோ,பெண்ணோ ஒருவர், மற்றவரை விரும்பலாம், தனது விருப்பத்தை குறிப்பிட்ட நபரிடமும் வெளிப்படுத்த, விரும்புவதும் , விருப்பத்தை வெளிப்படுத்துவதும் ஒருவரின் உரிமை.அதே போல அவ்விருப்பத்தை ஏற்பதும்,நிராகரிப்பதும் கூட மற்றவரின் உரிமை. இவைகளை ஒவ்வொரு தனி மனிதனின் ஜனநாயக உரிமையாக – தனி மனித உரிமையாக நாம் அங்கீகரித்துள்ளோம்.

ஆனால்,தனது விருப்பத்தை மற்றவரிடம் தெரிவிப்பது மட்டும்தான் தனிமனித உரிமை, அதை நிராகரிப்பது,நிராகரிப்பவரின் ’சாதி புத்தி’ என்று பட்டம் சூட்டிய ஒருவரைத்தான் மகஇக குழுமத்தினர் தனது மனித உரிமை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக, மனித உரிமை போராளியாக முன்னிறுத்தியுள்ளது. அந்த மனித உரிமைப் போராளியை பற்றியும் மே-17 இயக்கம் தன்னுடைய கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளது.

·          இளவரசன் , திவ்யா தம்பதியினரைப் போன்றே சாதிமறுப்பு திருமம் செய்து கொண்ட இருவர் ஒரு கிராமத்தில் தனது நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தனர்.இதை தெரிந்து கொண்ட பெண் வீட்டாரும்,போலிசும் அந்த பெண்ணை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த அக்கிரமச்செயலை அத்தெருவில் உள்ள பொதுமக்களும் , மகஇக குழும அமைப்பைச் சேர்ந்த சிலரும் தடுத்து அப்பெண்ணை காப்பாற்றினர்.மறுநாள் காலையில் அத்தம்பதியினரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக எழுதித் தந்த பின்னரே அப்பெண் அப்போதைக்கு விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தாங்கள் காவல்துறைக்கு எழுதித்தந்ததை போன்று நடந்துக் கொள்ளாமல், நேர்மையற்ற வகையில் அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்றனர் அவ்வூரில் இருந்த மகஇக குழும அமைப்புத் தோழர்கள். இது பற்றி அவர்கள் தமது தலைமையான மகஇக குழும அமைப்பிற்கு தகவல் தந்த போது தலைமை அவர்களுக்கு இட்ட உத்தரவை கேட்டால் அனைவரும் புல்லரித்துப் போவீர்கள்!

“தம்பதிகளைக் காப்பாற்றியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இதற்கு மேல் நேரடியாக அந்த விவகாரத்தில் ஈடுபடாதீர்கள்.ஆலோசனைக் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வேலைகளால் நமது அமைப்பு வேலை கெட்டுப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.இனிமேல் இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் எங்களுக்கு தகவல் கொடுங்கள், நாங்கள் கொடுக்கும் ஆலோசனைப் படிதான் நீங்கள் நடக்க வேண்டும்.அமைப்பு வேலை பாதிக்கும் வகையில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படக்கூடாது,அப்படி செயல் பட்டால் அது மத்தியத்துவத்தை மீறிய அமைப்பு விரோத செயலாகும்”!

சாதிவெறியை முறியடிப்பதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கரையுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்!

·          விடுதியில் தங்கி படித்த 13 வயது பாரத் தலித் என்ற மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்து போனான்.விடுதி காப்பாளரும்,போலிசும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.பெற்றோரும் ,உறவினர்களும் அது கொலை என்றனர்.இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர இதில் தலையிடுமாறு மகஇக குழும மனித உரிமை அமைப்பை குழும அமைப்பின் மற்றொரு அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி கோரியது.

இறந்து போன மாணவனும், குற்றம்சாட்டப்படும் விடுதிக் காப்பாளரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். “அது ஒரு சாதிக்குள் நடந்த விவகாரம் அவர்கள் பின்னர் ஒன்றாகி விடுவார்கள். நாம் அதில் தலையிடத் தேவையில்லை”.இதுதான் மனித உரிமைப் போராளிகளின் பதில்! மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை சாதித்ததற்கான வழிமுறை இதுதான் போலும்!

மேலே கண்டுள்ள செயல்பாடுகளின் மூலம் அவர்கள் மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை உருவாக்கியதை,உருவாக்குவதை பற்றி மிக விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவார்கள் காத்திருங்கள்..........!

மேலே நாங்கள் கொடுத்துள்ள தகவல்களில் இருந்து மகஇக குழுமம் பார்ப்பனியத்தால் ஆதாயம் அடையும், அதை ஆதரிக்கும் பிரிவினரா அல்லது சாதியத்தை ஒழிப்பதற்கான மிகத்தெளிவான புரிதலையும், அதன் அடிப்படையிலான வழிமுறைகளையும் கொண்டுள்ள அமைப்பா என்பதைப் பற்றி வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறோம்.

பார்ப்ப்பனியத்தை- சாதியத்தை பழைமைவாத பார்ப்பனியத் தலைமைகள் போன்று நடைமுறைப் படுத்தும் ,ஆதாயம் அடையும் பழமைவாதிகளில்லை மகஇக குழுமத்தினர்.காலத்திற்கு ஏற்ப பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள். நால்வருணத் தருமத்தை தமது கட்சியிலும், வெகுசன அரங்குகளிலும் மிகலாவகமாக எவரும் அறிந்து கொள்ளவோ,உணர்ந்து கொள்ளவோ முடியாத வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் வர்கள்.

யாரை எந்த வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீர்மானிப்பது தலைமையின் உரிமை.இதை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

·          மகஇக என்ற மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் தலைமைக்கு தகுதியானவர் மருதையன்தான்.இவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அல்ல.அவருக்குத்தான் இயல்பாகவே அந்த அறிவாற்றல் உள்ளது.

·          கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு துரைசண்முகம்தான் தலைமை ஏற்க முடியும்.அவர் வைசியர் என்பதால் அல்ல.அவரிடம் தான் இயல்பாகவே வியாபார ஞானம் இருக்கிறது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட வேலையைத்தான் அவரவர் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையில் தலையிடக்கூடாது.அப்படி செய்வது இந்துமதத்தில் நால்வருண தர்மத்திற்கு எதிரானது.

மகஇக குழுமத்தில் மீறுவதோ,கேள்வி எழுப்புவதோ ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரானது.

தமக்கு விதிக்கப்பட்ட வேலைக்கு மாறாக, அமைப்புக்கு தெரியாமல் அதை மீறி மகஇக குழும அமைப்பில் சிலர் விவசாயிகளிடம் ஆய்வுசெய்து அந்த ஆய்வறிக்கையை தலைமைக்கு அளித்தனர்.

“கொடுத்த வேலையை செய்ய வக்கில்லை, ஆய்வு பண்றாங்களாம் ஆய்வு”, இதுதான் புரட்சிகர தலைமையின் மறுமொழி.இப்படி ஆய்வு செய்தவர்களின் நடவடிக்கை, மத்தியத்துவத்தை மீறும் அமைப்பு விரோத செயல்.இதற்காக அவர்களுக்கு இவர்கள் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? ஒதுக்கி வைத்தல்!

அன்று பார்ப்பனியத்தை ஏற்க மறுத்தவர்களையும்,மீறியவர்களையும் பள்ளு,பறை,சக்கிலி என்று சேரிகளில் ஒதுக்கி வைத்ததார்கள் இவர்கள் அமைப்பிற்குள்ளேயே ஒதுக்கி வைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் மே-17 இயக்கத்தினரே மகஇக குழுமத்தின் இந்த திறமையும், சாதுரியமும் உங்களுக்கு வருமா? அது இருந்தால் மட்டுமே அவர்களோடு போட்டியிட நீங்கள் தகுதி உள்ளவர்களாவீர்கள்.

அவர்கள் உங்களை மட்டுமல்ல அனைவரையும் எதிர்ப்பதற்கும் , ஒதுக்கி வைப்பதற்கும் காரணமே அவர்களின் அகராதியில் நால்வருண தர்மத்தை நீங்களெல்லாம் மீறுவதே ஆகும்.

முற்போக்கு, புரட்சிகர சக்திகளில் நவீன வர்ணதர்மத்தின் உலகலாவிய தலைமை மகஇக குழும தலைமை மட்டுமே.அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட புரட்சிகர பூசாரி வேலையில் உங்களைப் போன்றோர் தலையிட்ட பின்னரும் அவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்!?

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69% இடஒதுக்கீட்டால் நாங்கள் எவ்வளவுதான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் எங்களுக்கு மருத்துவ படிப்பில் இடம்கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மேல்வர்ணத்தார் மனு செய்தார்கள். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 69%  இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மேல்வர்ணத்தாருக்கு 19% கூடுதல் இடங்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதை மே-17 இயக்கத்தினர் அறிந்திருக்க மாட்டார்களா என்ன!

யார் இந்த உரிமையை முற்போக்கு , புரட்சிகர அமைப்புகளுக்கான பூசாரி – தலைமை – பொருப்பை மகஇக குழுமத்திற்கு வழங்கியது!? நாங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று மே-17 இயக்கத்தை போன்றோர் வாதிடலாம்.

பார்ப்பனர்களுக்கு இந்துமதத்தின் தலைமையை தந்தது யார்?

காஞ்சி மடத்தை போன்று இந்தியா முழுக்க உள்ள மடங்களுக்கு பார்ப்பனர்களை மட்டுமே சங்கராச்சாரிகளாக நியமிப்பது யார்?
உங்களை போன்றோர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அவர்கள்தான் இந்தியாவில் பெரும்பான்மை. உங்களால் என்ன செய்ய முடியும்?

மகஇக- குழுமத்தலைமை உங்களைப் போன்றோர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன?

அவர்களை அவர்களின் அணிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் தலைமையாக!

இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கு அது ,அதில் உள்ளோரை சாதியாக கூறுபோட்டு, அதை தொடர்ந்து பாதுகாப்பதே காரணமாகும்.

மகஇக குழுமமும் 35 ஆண்டுகளாக உயிர்வாழ்வதற்கு அவர்களின் அணிகளுக்கிடையே ஒற்றுமைக்கான கூறுகள் ஏற்படாத வண்ணம் பாட்டாளி வர்க்க அமைப்பு பெயரிலான விதிகளை கறாராக கடைபிடிப்பதுதான் காரணமாகும்.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனித சமூகத்தில் எவ்விதமான முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் அனைத்தையும் தமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதுதான் பார்ப்பனியத்தின் ஆற்றல்.

பாட்டாளி வர்க்க அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவம், பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உட்பட அனைத்து கோட்பாடுகளையும், தமது புதிய பார்ப்பனிய வர்ண தர்மத்திற்கு ஏற்ப திரித்து செயல்படுத்துவதுதான் மகஇக குழுமத் தலைமையின் ஆற்றல்.

இந்து மதம் நீடிக்க எது காரணமோ அது , அதுவேதான் மகஇக குழுமமும் நீடித்திருப்பதற்கான காரணமுமாகும்.

பார்ப்பனியத்தில் உள்ளார்ந்த புலமை உள்ளவர்களால் மட்டுமே அதன் நிபுணர்களாக இருக்க முடியும்.அந்த வகையில் மகஇக குழுமம் பார்ப்பனிய நிபுணர்களைக் கொண்ட தலைமையாகும்.

இவர்கள் அதில் வல்லவர்கள் என்பதற்கான ஆதாரம் சிலவற்றைப் பார்ப்போம்.

நால்வருணத்தில் முதல் வருணமான பார்ப்பனர்களுக்கு ஏனைய வர்ணத்தாருக்கு இல்லாத பல்வேறு சிறப்புரிமையை பார்ப்பனியம் வழங்கியுள்ளது.அதில் இந்த பூலோகத்தில் உள்ள எந்த ஒரு பொருள் மீதும் அவர்களுக்கு உரிமை உண்டு. 

தேவைப்படும் போது அதன்மீது அவர்கள் உரிமை கோரமுடியும். எந்த வர்ணத்தாரின் உழைப்பின் மீதும், அதிலும் சூத்திர வர்ணத்தாரின் உழைப்பின் மீது எல்லாவித உரிமையும் பார்ப்பனர்களுக்கு உண்டு என்று மனுதர்மம் கூறுகிறது.

மொத்தத்தில் தான் உழைக்காமலேயே , மற்றவர்களின் உழைப்பில் வாழ்வதைப்பற்றி சிறிதும் அவர்கள் வெட்கப்படுவதில்லை.அதற்கு மாறாக உடல் உழைப்பே இழிவானது என்பதுதான் அவர்களின் உரத்த சிந்தனை!

இதை மகஇக குழுமத்தினர் நவீன வடிவத்தில் செயல்படுத்துகின்றனர்.

·          முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார்.சாராம்சத்தில் முத்துக்குமார் புலி ஆதரவு தரப்பைச் சேர்ந்தவர்.இதன் மூலம் புலிகளின் அரசியல், சித்தாந்த மேலாண்மையால் கவரப்பட்டு அதற்காகவே தன்னுயிரை ஈந்த தியாகி.

ஆனால் மகஇக குழுமமோ புலிகளை பாசிச அமைப்பாகவும்,புலிகளின் தலைவர் பிரபாகரனை ஈழத்து எம்.ஜி.ஆர் ,பாசிச கோமாளி என்றும் இன்றுவரை கூறிவருகிறது.

அந்த பாசிச கோமாளியின் அரசியல்,சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு உயிரிழிந்த முத்துக்குமாரின் சாவை தனது அரசியல் நோக்கத்திற்காக அறுவடை செய்துகொள்ள தேவையான அனைத்து தந்திரங்களையும் கையாண்டனர் மகஇக குழுமத்தினர்.

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் அங்கு தமது மேலாண்மையை நிருவுவதற்கு பல்வேறு தந்திரங்களை கையாளுவார்கள்.

அதில் முதன்மையாக தம்மை முன்னிலைப்படுத்திக்கொள்வது.இதற்காக தம்முடைய தனித்த அடையாளங்களை அதாவது பூணூல்,பேச்சு முறை ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.மற்றவர்களை பேசவிடாமல் சள,சளவென்று வாயடிப்பார்கள். அதே போன்றுதான் மகஇக குழுமம் முத்துகுமாரின் தியாகத்தை அறுவடை செய்து கொள்ள தாம்தான் தமிழகத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு என்பதைப் போன்று காட்டிக்கொள்ள திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமது அமைப்புக் கொடிகளோடு சென்று முழக்கம்மிட்டு அனைவரும் சோகத்தில் முழ்கியும்,இந்திய,இலங்கை அரசுகள் மீதும் தீராக் கோபம் கொண்டிருந்த தருணத்தை, சூழலை உனார்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு தம்மை முதன்மைப்படுத்திக் காட்டிக்கொண்டனர்.

இதன்மூலம் அங்கு யாருடைய தியாகத்தினைலோ, உழைப்பினாலோ திரட்டப்பட்டிருந்த, திரண்டிருந்த ஈழ ஆதரவாளர்களை அபகரித்துக்கொள்ள முயன்றனர். இப்படிச் செய்வது தமது உரிமை என்று தமது அணிகளுக்கு பாடமும் புகட்டுகின்றனர்.

·          கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைத்திரட்டி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் போராடி வருகின்றனர். இப்போராட்டம் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியது.இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் எழுந்த மிகச்சிறப்பான போராட்டம் இதுவே ஆகும்.

இப்போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதி மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சியில் மகஇக குழுமத்திற்கு எள் முனையளவு பங்கு கூட கிடையாது.ஆனால் அந்தப் போராட்டக் களத்தில் திடீரென நுழைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவிடம் இருந்து தலைமையைக் கைப்பற்ற இக்கும்பல் மிகத்தீவிரமான திட்டத்துடன் சென்று முயற்சி செய்தது. ஆனால் இது எதையும் அப்பகுதி மக்களோ, போராட்டக்குழுவோ கண்டு கொள்ளாததால் இறுதியில் ச்சீ,ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று வந்த வழியே திரும்பிவிட்டது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் இக்கும்பலின் பார்ப்பனிய குணாம்சத்தை அம்பலப்படுத்தும் உதாரணங்களாகும்.

உழைக்காமலேயே வாய்வீச்சின் மூலம் மட்டுமே அனைவரையும் பழித்து, அதன்மூலம் ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள், அதரவாளர்களை வென்றெடுத்துவிட முடியும் என்று முப்பத்து ஐந்து ஆண்டுகளாக கனவு காண்கிறது இக்கும்பல்.இந்த அடிப்படையில் மே-17 இயக்கத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறது. இளவரசன் சாதிமறுப்பு திருமண விவகாரத்தில் எவ்வித உழைப்பை செலுத்தாமலேயே வாயிருக்கிறது என்பதற்காக ஓங்கி ஊளையிடுகிறது.பேனா இருக்கிறது என்பதற்காக ஒன்றுக்கும் ஆகாதவற்றை அள்ளித் தெளிக்கிறது.

ஆலோசனை கொடுப்பது மட்டுமே தன்னுடைய வேலையாக கருதும் இக்கும்பல் ஏரி மதகு நொண்டித்திருடன் என்பதை நெருங்கிப் பார்த்தவர்களுக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.அது தெரியாதவர்கள்தான் ஏரிப்பக்கம் போவதையே தவிர்த்து விடுகிறார்கள்.

“ ஒரு மனிதனின் அறவிழுமியங்கள் வேறு,வேறு பிரச்சனைகளுக்கு வேறு மாதிரி இருக்காது”,  என்று மகஇக குழுமம் கூறுவது உண்மைதான்.இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான்.ஆனால் அது தனக்கு பொருந்தாது என்பதுதான் இவர்களின் அறக்கோட்பாடு!

நால்வருண அறவிழுமியங்களே இவர்களின் செயல்பாட்டுக்கான ஆதாரமாக அடிப்படையாக இருக்கிறது.
அதனால்தான் உழைக்காமலேயே மற்றவர் உழைப்பை சுரண்டத்துடிக்கிறது இக்கும்பல்.

பார்ப்பனியத்திற்கு எதிராக குலமரபை இக்கும்பல் முன்னிறுத்துகிறது.குல தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.
ஆரிய வருகைக்கு முன்பே பூர்வகுடி மக்களிடமிருந்த பண்பாடான குலமரபுகளை பார்ப்பனியத்திற்கு மாற்றாக உயர்த்தி பிடிக்கிறார்கள் இவர்கள்.

அதாவது புலிக்கு பயந்து புற்றுக்குள் கையை விடுங்கள் என்கிறார்கள்.

இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தாங்கள் வரும் போதே பூர்வகுடி மக்களை ஒடுக்குவதற்கு தயாராக பார்ப்பனிய – சாதிய – கோட்பாட்டை இங்கு கொண்டு வரவில்லை.பூர்வகுடி குலக்குழு மக்களிடையே நிலவிய குல மரபுகள் , பகை ஆகியவற்றின் விளை பொருளான ஒற்றுமையின்மையை ஆதாரமாக , அடிப்படையாக கொண்டுதான் அவற்றை நிரந்தரப்படுத்தும் பார்ப்பனியத்தை- சாதியத்தை – வளர்த்தெடுத்தனர்.

அதாவது பார்ப்பனியத்திற்கான மூலமான குலமரபு காட்டுமிராண்டித்தனங்கள்தான் பார்ப்பனியத்திற்கு மாற்றாம்!
இந்த குலமரபு அறவிழுமியங்கள்தான், தாய்வழிச் சமூக காட்டுமிராண்டித்தனமான சகோதர முறை திருமணங்களை மகஇக குழுமத்தினரை ஆதரிக்க வைக்கிறது. சகோதர முறைத்திருமண உறவை எதிர்ப்போரை ஜனநாயக விரோதிகள் என்றும் பேச வைக்கிறது.

இந்த காட்டுமிராண்டி அறவிழுமியங்கள்தான் அடுத்தவர் உழைப்பை , பொருளை கொள்ளையடிப்பதையும் நியாயம் என்று இவர்களை சிந்திக்கவும் தூண்டுகிறது.

இளவரசன் சாவை ஒட்டி மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான அதன் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் முழக்கங்கல்தான்.

ஆனால் மே-17 க்கு எதிராக கிளம்பியுள்ள மகஇக குழுமத்தினரோ பார்ப்பனியத்தை –சாதியத்தை –தமது பிழைப்பிற்காக உயர்த்திப் பிடிக்கும் ,பாதுகாக்கும் கருங்காலிகள்!

கருங்காலித்தனத்தோடு ஒப்பிடும் போது கையாலாகாத்தனம் பெரும் குற்றமல்ல!


தொடர்புடைய கட்டுரைகள்:


 1.  காயடிக்கும் கட்சி 
                      





 















11. சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா?

 

12. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க..