விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label மன்மோகன்சிங். Show all posts
Showing posts with label மன்மோகன்சிங். Show all posts

Friday, 7 September 2012

அத்தைக்கு மீசை முளைத்தால்தான் சித்தப்பா……!

அலைக்கற்றை ஊழலை அடுத்து, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கியதில் மத்திய அரசுக்கு ரூ 1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை தெரிவித்ததுள்ளது. இதையொட்டி இழப்புக்கு காரணமான பிரதமர் பதவி விலக வேண்டும். அதுவரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்து, அதை நடைமுறைபடுத்தியும் வருகிறது.



இதனால் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் இதுவரை மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக நடந்துள்ளது. மக்களவையில் 50 சதவீத அலுவல்களும், மாநிலங்களவையில் 62 சதவீத அலுவல்களும் பாதிக்கப்பட்டுள்ளதாம்!

நாடாளுமன்றம் நடந்தாலும், நடக்காவிட்டாலும் ஒரு நாளைக்கு ரூ 2 கோடி செலவாகிறதாம். இதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ரயில்,விமான பயணச்செலவு, தங்குமிடம்,  இதரப்படிகளையும் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ஆகும் செலவு ரூ 52 கோடியே 50 லட்சமாம்.

இப்போது மட்டுமல்ல நாடாளுமன்றத்தின் செயல்பாடு என்பது இந்தியாவில் எப்போதுமே சரியாக நடைபெற்றதாக வரலாறு கிடையாது. 1950 களில் 125 நாட்களாக இருந்த நாடாளுமன்ற அலுவல் நாட்கள் 1990-ல் 100 நாட்களாக குறைந்தது.

மேலும் இது 14-வது நாடாளுமன்ற காலத்தில் வெறுமனே 73 நாட்களே நடைபெற்றுள்ளது. 2011ம் ஆண்டு திட்டமிடப்பட்ட 520 மணி நேர அலுவலில் 306 மணி நேர அலுவல் மட்டுமே நடந்துள்ளது.

மேலே  கண்டவாறுதான் இந்திய நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே அமைந்துள்ளது. உண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அலுவல்களின் எண்ணிக்கையை விட அமளிகளே அதிகம். கடந்த 2011 –ம் ஆண்டு மே மாதம் வரை சுமார் 12 ஆயிரம் அமளிகளும், 110 ஒத்தி வைப்புகளையும் நாடாளுமன்றம்  சந்தித்துள்ளதாம்.

இப்படிப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைளை கொண்டுள்ள ஒரு  நாட்டைத்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்கிறார்கள். அதாவது இவ்வளவு கேவலமான முறையில் நாடாளுமன்றம் நடைபெற்றாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே  கருதாத இந்திய மக்களின் சிந்தானா முறையைத்தான் ஜனநாயகம் என்று போற்றகிறார்கள் போலும்!

அமளிகளையே தனது பிரதான அலுவலாக நாடாளுமன்றம் கொண்டிருந்தாலும், அதனால் இந்திய அரசின் நிர்வாகப் பணிகளில் அது எவ்வித  சுணக்கத்தையோ, தடுமாற்றத்தையோ ஏற்படுத்தவில்லை. அரசு எந்திரத்தின் பணிகள் எப்போதுமே அதன் போக்கில் வழமையாகத்தான் நடைபெற்று வருகிறது.

ஆனால் நாடாளுமன்றம்தான் இந்தியாவை ஆள்வதாக தொடர்ந்து ஊடகங்கள் நமது  காதுகளில் பூ சுற்றுகின்றன.

உண்மையில் நாட்டை ஆள்வது  அதிகார வர்க்கம் தான். இந்த அதிகார வர்க்கம் இயங்குவதற்கான  சக்தியை நாடாளுமன்றம் வழங்கவில்லை. லஞ்சமும், ஊழலும்தான் இவைகள் இயங்குவதற்கான சக்தியை அவைகளுக்கு அளிக்கின்றன.

இந்த அதிகார வர்க்கத்திற்கான சக்தியை பெற்றுத்தரும் ஊடகமாகத்தான் ஆட்சியாளர்கள் திகழ்கிறார்கள். இதனால் தான் 2ஜி அலைகற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் போன்ற  உலகிலேயே மிகப்பெரிய  ஊழல்கள் முதல் அனைத்து ஊழல்களிலும் அதிகார வர்க்கத்தினர் முக்கியமானவர்களாக வெளியே தெரிவதில்லை. அதே நேரத்தில் இவர்கள் இல்லாமல் எந்த ஒரு ஊழலும் உருவாவதும் இல்லை. அனைத்து ஊழல், முறைகேடுகளுக்கும் இவர்கள்தான் அடித்தளமிடுகிறார்கள்.

 தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அதாவது ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருட்டிக் கொள்வதுதான் ஆட்சியாளர்களின் இலக்கு. இப்படி ஐந்து ஆண்டுகளில்  கிடைத்ததை சுருட்டிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு, அதற்கான நுட்பத்தை   அதிகாரவர்க்கத்தின் தயவில்லாமல் பெறமுடியாது.

ஜனநாயகம் என்றாலே போட்டி. எந்த அளவிற்கு போட்டி உள்ளதோ அந்த அளவிற்கு ஜனநாயகம் தழைத்தோங்கும் என்கிறார்கள்.

ஆனால் எந்த அளவிற்கு போட்டி உள்ளதோ அந்த அளவிற்கு பதவியும், பொருப்பும் நிரந்திர மில்லாத ஒன்றாகிவிடுகிறது. எந்த அளவிற்கு உத்தரவாதமில்லையோ, அந்த அளவிற்கு சுருட்டிக் கொள்வதும் ராக்கெட் வேகமெடுக்கிறது. மொத்தத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் தான் ஊழல்களுக்கான பிறப்பிடமாக திகழ்கிறது.இதை நிரூபிக்கும் ஆதாரம் ஒன்று  அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. உலக அளவில் சுரங்கத் தொழிலில் முன்னணியில் உள்ள  வேதாந்தா ரிசோர்ஸ் என்ற நிறுவனம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ 28 கோடி நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்தப் பணம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக வழங்கினோம் என்று தனது 2011-12 ஆண்டறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது!

 இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டதாம், நம்புங்கள்! அப்படியானால் ஜனநாயகம் என்றால் அதன் உண்மையான பொருள் இப்போது விளங்குகிறதா?  பன்னாட்டுமுதலாளி மார்கள் நாட்டிலுள்ள அனைத்து இயற்கை செல்வங்களையும், மனித உழைப்பையும் சுருட்டிக் கொள்ளவும், சுரண்டவும் மாமா வேலை செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு  பெயர்தான் ஜனநாயகம்.

இதற்கு எதற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள்? தேவையே இல்லை. இந்த மாமா வேலையை நாடாளுமன்றத்திலா விவாதிக்க முடியும். இவற்றை அதிகார வர்க்கத்திடம் மட்டுமே பேசமுடியும். இப்படி செய்யப்படும் செயல்களை மக்களிடையே மூடி மறைக்கும்  திரைச்சீலை தான் நாடாளுமன்றம்.

நாடாளுமன்றத்தை முடக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு இது தெரியாதா என்ன? நாடாளுமன்றத்தை முடக்குவதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் இந்நடவடிக்கை  அதை வளர்க்கவே செய்யும் என்பதையும், அதை செய்வதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள அக்கட்சி செய்யும் தந்திர நடவடிக்கை தான் நாடாளுமன்ற முடக்கம். இது இந்தக் கட்சியின்  செயல்பாடு மட்டுமல்ல ஒவ்வொரு  கட்சியின் இலக்கும்,செயல்பாடும் இதுதான்.

எல்லா அரசியல் கட்சிகளும் நிறுவனங்களிடம் நிதி-லஞ்சம் பெறும்போது யாரை ஏய்க்க ஊழலை ஒழிக்கப் போவதாக கூச்சலிடுகின்றன?
என்ன, இன்னமுமா புரியவில்லை? அப்படி புரியாத இளித்த வாயர்கள் நாம், நாமே தான்!

நம்மால் என்ன செய்ய முடியும் என்கிறீர்களா? ம்ம்ம்......

அதுவும் சரிதான் நம்மால் என்ன முடியும்? அவனவன் பிறந்த நேரம். அவன் அவனுக்கு முடிந்தவரை சுருட்டிக்கொள்கிறான். நம்மால் முடிந்தவரை நேரம் கிடைக்கும் போது நாமும் அதை செய்ய வேண்டியதுதான். அந்த நேரம் எப்போது வரும்!

நிச்சயம் ஐந்து ஆண்டுகளக்கு மூன்றுமுறை வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள். அப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவை கறந்து விடுவோம்!

பொழைக்க தெரியாத பயலுவ தான் சூடுசொரனை, மானம், வெட்கம், ஒழுக்கம், நியாயம், தர்மம் பேசுவான். நாம என்ன பொழைக்க தெரியாத ஜென்மங்களா என்ன.!

அந்தக்காலத்தில் ராசாக்கள் நாட்டை ஆண்ட போது நாமா அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்? இல்லையே! அப்போதே அதாவது ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு அடக்கம்,ஒடுக்கமாக வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்!

இப்போது நாம் கேட்காமலேயே ஆள்வோரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை – அதிலும் காசு வாங்கிக்கொண்டு தேர்ந்தெடுக்கும் - வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்.

அந்த நன்றி, விசுவாசம் இல்லாமல் பேசுவது நமது இந்திய மரபுக்கு இழுக்காகும்.நமது பாரம்பரிய மரபை,கலாச்சாரத்தை உயர்த்திப்பிடிப்போம்!

பாரத் மாதாகிக்கு! ஜே!!