தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான,உணர்ச்சி பூர்வ நிகழ்வு என்றால் அது முல்லை பெரியாறு! இந்திய அளவில் பரபரப்பான செய்தியாக ஊடகங்களால் முன்னிறுத்தப்படும் செய்தி லோக்பால் மசோதா! அன்னா ஹசாரே என்ற கிழடை வைத்து பார்ப்பன கும்பல் நடத்தும் மாயாஜால வித்தைதான் லோக்பால் விவகாரம்.நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகவும் ,சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கத்தையும் ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதற்கு லோக்பால் மசோதாவே ஒரே வழியென்று பார்ப்பன ஊடகங்கள் ஒருமித்தக்குரலில் எழுதுகின்றன.
சமூக ஆர்வலர் என்று அன்னாவுக்கு பட்டமும் அளித்து கவுரவிக்கின்றனர்.இந்த கிழட்டு நரிக்கு இப்போது வயது என்பது.இத்துணை ஆண்டு காலம் வராத ஞானோதயம் இப்போதுதான் வந்துள்ளது.
கூடங்குளம் அணு உலையை எதிர்த்து 1990- களிலிருந்து நடந்துவரும் போராட்டத்தை மறைத்துவிட்டு,இத்தனை ஆண்டுகளாக போராடமால்,இப்போது அணு உலையை எதிர்த்து போராடும் போராட்டக்குழுவின் நோக்கம் என்ன? என்று கேட்கும் பார்ப்பன கும்பல்,இதே கேள்வியை அன்ன ஹசாரேவை கேட்காமல் அவருக்கு மலர் மகுடம் சூட்டுகிறார்கள்.
இந்தியாவில் ஊழல் வரலாறு நேருகாலத்திலிருந்து துவங்கிவிட்டது.மூக்கிருக்கும் வரை சளியிருக்கும் என்பதைப்போன்று அன்று தொடங்கிய ஊழல் இன்று 2G,3G என ஆலமரமாய் வளர்ந்து சமூகமெங்கும் வேர் பரப்பிவிட்டது.அது இல்லாத இடம் என்று எங்குமில்லை.ஊழல் இன்று ஒவ்வொரு இந்தியன் வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.லஞ்சமும்,ஊழலும்!
கிராமத்தில் உள்ளூராட்சி அமைப்பிலிருந்து,டெல்லி செங்கோட்டை வரை அது இல்லாத இடமேயில்லை.அரசுத்துறையானாலும்,தனியார் துறையானாலும் அவற்றில் எது இருக்கிறதோ,இல்லையோ நிச்சயம் அது இருக்கிறது!
லோக்பால் மசோதா பற்றியும், அதை நிறைவேற்றுவதைப்பற்றியும் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர்,சிபிஐ,டி பிரிவு ஊழியர்கள் வரை சேர்க்கவேண்டும் என்று காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது.
ஆனால்,நாட்டின் எந்த ஒரு இடத்திலும் லஞ்சம்,ஊழலில் ஈடுபடுவர்களிடம் அதன் சுவடுகூட தென்படவில்லை.வழக்கம் போல அவர்களின் பணியை செவ்வனே செய்துவருகின்றார்கள்.
தமிழகத்தில் TNPSC முன்னால்,இன்னால் அதிகாரிகளின் வீடுகளில், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலிசார் தீவிர சோதனை நடத்துகிறார்கள் என்ற செய்தி நாளேடுகளிலும்,தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது.அதே நேரத்தில் சத்துணவு,அங்கன்வாடி பணியாளர்கள் 28 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒரு பணியிடத்திற்கு ஒன்றைரை லட்ச ரூபாய் விலை போகிறது.ஒரு ஆசிரியர் பணியிடம் 5 லட்சம் வரை …..இங்கு எங்கேயும் லோக்பாலின் எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதோடு மட்டுமா, தமிழக அரசின் இலவசத்திட்டங்கள் கூட இதில் இருந்து தப்பிக்கவில்லை.
1.இலவச ஆடு வழங்கும் திட்டத்தில் பயன் பெற ரூபாய் 2 ஆயிரம்.
2.பசுமை குடில் பெறுவதற்கு ரூபாய் 25 ஆயிரம்.
3.சாதி மாற்றி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றாலும் அதன் விலை ரூபாய் ஐந்து ஆயிரம்.
4.குடும்ப அட்டை ரூபாய் 5 ஆயிரம்,அட்டை வீடு தேடி வரும்.
5.அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் சீட்டுவாங்க ஐந்து ரூபாய்.சீட்டே இல்லாமல் பத்து ரூபாய் கொடுத்தால் இரண்டு ஊசி.
இவை எல்லாமே அன்றாடம் மிக இயல்பாக நடக்கிறது.இப்படி செய்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்,நான் லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு வந்தேன்.எவனாவது எனக்கு இலவசமாகவா வேலை கொடுத்தான்!
எந்த வேலையும் இலவசமாக கிடைப்பதுமில்லை!,லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருவோர்.அதை திருப்பி செய்வதற்கு கூச்சப்படுவதுமில்லை!.நூறு சதவீத வேலைகளும் லஞ்சம் பெற்றுதான் தரப்படுகிறது.எந்த ஒரு அரசு அலுவலகங்களிலும் யாராவது ஒருவர் நேர்மையாக நடந்துகொண்டால், அவர் தனது வேலையை விரைவிலேயே இழந்துவிடுவார்.
ஊழலை தடுப்பதற்கு என்று எத்தனையோ துறைகளும், நூற்றுக்கணக்கான சட்டங்களும் உள்ளன.ஆனால் இந்த சட்டங்கள் அனைத்தும் லஞ்சம் கொடுத்து வேலைக்கு வருகின்றவர்கள் மூலம்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
லோக்பால் சட்டம் வந்தாலும்,அந்த சட்டமும் மனிதர்களால்தான் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.எப்படிப்பட்ட சிறந்த சட்டமாக இருந்தாலும் அதை மனிதர்கள் தான் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தான் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை.அதனால் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை பணி அமர்த்தலாம் என்றாலும், அந்த ரோபோக்களுக்கும் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பவர்களும் மனிதர்கள்தான்.சரி மிருகங்களை அமர்த்தலாம் என்றால் அவைகளை பழக்குபவர்களும் மனிதர்கள்தான்.
எனவே சட்டங்கள் ஆயிரங்கள் இருந்தாலும்.அவற்றை நடைமுறைப்படுத்துவது இந்த சமூக அமைப்பில் சாத்தியமில்லை.
இந்த எளிய உண்மை ஹசாரேவுக்கும்,பார்ப்பன ஊடகங்களுக்கும் தெரியாதா என்ன? தெரியும்!பிறகு எதற்காக உயிரற்ற சட்டத்திற்காக இவ்வளவு வரிந்துக்கட்டி கொண்டு நிற்கிறார்கள்?
இதற்கான பதிலும் மிகவும் எளிமையானதுதான்.நிலவுகிற இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் போக்கு மிக வேகமாகி வருகிறது.இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கிறது.
இந்த சமூக அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையின்மைதான் ’வால் தெரு’ போராட்டமாக உலகெங்கிலும் வெடித்திருக்கிறது.இதில் இருந்து மக்களின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்புவதுதான் இவர்களின் நோக்கம்.இதை போய் யார் நம்புவார்கள் என்கிறீர்களா? இந்த திசை திருப்பும் நாடகங்கள் உலகின் வேறு பகுதிகளில் எடுபடுகிறதோ, இல்லையோ இந்தியாவில் அது நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
ஒரு சாதிக்காரன் ஏற்றுக்கொண்டால்,அதை இன்னொரு சாதிக்காரன் ஏற்றுக்கொள்ள மாட்டான்.ஒரு மாநிலம் சரி என்றால் இன்னொரு மாநிலம் முடியாது எனக் கூறும்.ஒரு மதம் ஒப்புக்கொண்டால் இன்னொரு மதம் ஒப்புக்கொள்ளாது.இவர்கள் இவற்றில் ஏதோ ஒன்றை துணைக்கு வைத்துக்கொள்வார்கள்.பிறகென்ன! அவர்கள் நினைப்பது நடக்காமலா போய்விடும்!
சரி இதற்கு என்ன தான் வழி! லஞ்சம் ஊழலை எப்படித்தான் ஒழிப்பது! அது முடியாதா என்றால் அதற்கான பதில் இதுதான்.
நிலவுகிற இந்த சமூக அமைப்பின் அடிப்படை போட்டி உற்பத்தி. பொருள் உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகள் சந்தையை கைப்பற்றுவதற்கும் அதை தக்கவைத்து கொள்வதற்கும்,தமது அரசியல் பிரதிநிதியான அரசியல் கடசிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் கோடி,கோடியாய் கொட்டிகொடுக்கிறார்கள்.இவ்விரு பிரிவினரையும் வைத்துக்கொண்டு,தமக்கு வேண்டியதை சாதித்துகொள்கிறார்கள்.உலகில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு பிரிவு முதலாளிகளின் நலனை பாதுகாக்க செயல்படுபவைதான்.
இதுதான் ஊழலுக்கான ஆணி வேர்.அரசியல் கட்சிகளின் தலைமை, அரசு எந்திரத்தின் உயர்மட்டம் ஆகியோரின் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் கீழ்மட்டங்களும் அதே வழியை பின்பற்றுகிறார்கள்.இது கிளையாக வளர்ந்து நிற்கிறது.
மொத்தத்தில் போட்டியும், பற்றாக்குறையும் சமூகத்தில் இருக்கும் வரை லஞ்சமும்,ஊழலும் இருந்துகொண்டே இருக்கும்.
நிலத்தில் கோரையை ஒழிக்கவேண்டுமானால்,அதன் கிழங்கோடு பிடுங்கி எறியவேண்டும்.கிழங்கை விட்டுவிட்டு அதன் மேல் பகுதியை கிள்ளுவதால் மட்டும் அது ஒழிந்துவிடாது.கிழங்கு மண்ணிற்குள் மறைந்து இருக்கும்வரை,அது வளர்ந்துகொண்டேதான் இருக்கும்.இதைப் போன்றுதான் ஊழலின் ஆணி வேரான போட்டி பொருளுற்பத்தியை தூக்கியெறியாமல் லஞ்சமும்,ஊழலும் மீண்டும், மீண்டும் முளைவிட்டுகொண்டேதான் இருக்கும்.
மறைந்து இருக்கும் ஆணிவேரை பற்றி பேசாமல் வெளியில் தெரியும் கிளையைக்காட்டி நம்மை திசை திருப்புவதுதான் ஹசாரே கும்பலின் இலக்கு,நோக்கம்!
அதுமட்டுமல்லாமல்,ஹசாரேவும் இதை இயக்கும் கும்பலும் நாய் வாலை நிமிர்த்தி விடப்போவதாக கொக்கரிக்கிறார்கள்.இதை நம்மையும் நம்ப சொல்கிறார்கள்!
இதை நம்புவதற்கு நீங்கள் தயாரா?
(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)
