அண்மையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் ஏழு உயர்த்திவிட்டு, இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் லிட்டருக்கு இரண்டு ரூபாயை குறைத்திருக்கிறது இந்திய அரசு. இந்த விலை குறைப்புக்கான அளவை விலையை உயர்த்தியபோதே குறைப்பதற்கென்றே தீர்மானித்த அளவாகும். உண்மையில் தான் உயர்த்த விரும்பும் விலை உயர்வின் அளவிற்கு மட்டுமே இவர்கள் விலையை உயர்த்தவதில்லை. அதற்கு மாறாக குறைப்பதற்கான அளவையும் சேர்த்தே விலையை உயர்த்துகின்றனர். எதிர்ப்பு ஏற்பட்டவுடன் தாங்கள் ஏற்கனவே தீர்மானித்த அளவிற்கு விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடுகின்றனர்.
இதைவிட நாட்டு மக்களை முட்டாள்களாகவும், ஏமாளிகளாகவும் வேறு யாரும் கருதி செயல்பட முடியாது.
நாடு முழுக்க அன்றாடம் மோசடி கும்பல்கள், மக்களை மோசடி செய்து ஏமாற்றி வருவதை நாம் பார்த்துதான் வருகிறோம். இவர்கள் தமது மோசடி செயல்களுக்கான தார்மீக பலத்தை அரசுகளிடமிருந்துதான் இயல்பாக பெற்றுக்கொள்கின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொருத்தே, எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிப்பதாக தனது மக்கள் விரோத செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறது இந்திய அரசு.
உண்மையில் இந்திய அரசின் மேற்கண்ட வாதமே அப்பட்டமான மோசடித்தனம் நிறைந்ததாகும். இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலையில் பாதிக்கும் மேல் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளே ஆகும். உலகிலேயே பெட்ரோலிய பொருட்களின் மீது மிக அதிகமான வரிவிதிப்பது இந்தியாவில் தான்.
ஆனால் இம்முறை பொட்ரோல் விலையை உயர்த்தியபோது இந்த கேடுகெட்ட வாதத்தைக்கூட இவர்கள் முன் வைக்கவில்லை. அதற்கு மாறாக டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால்தான் பெட்ரோலின் விலையை உயர்த்தியதாக கூறினர்.
”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு இல்லை. ஆகையால் சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை உயர்வை மக்கள் ஏற்கத்தான் வேண்டும்”, என்று அரசு கூறும் வாதத்தில் ஒரு வித தர்க்க நியாயம் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கும் மக்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? யாருடைய தவறால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது? இதற்கு மிக எளிமையாக, இந்திய அரசின் தவறான, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளினால்தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது என்று கூறிவிடலாம். இதன்படி பார்த்தால் தவறு செய்த குற்றவாளி இந்திய அரசு. ஆனால் குற்றவாளியே தான் செய்த தவறுக்கான தண்டனையை மக்களாகிய நமக்கு வழங்குகிறது!
உண்மையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு காரணமான அரசுக்குத்தான் மக்களாகிய நாம் தண்டனை தரவேண்டும். ஆனால் அதற்கு நேர் மாறாக குற்றவாளியே, குற்றமற்ற நமக்கு தண்டனை தருகின்ற விநோதம் நடைபெறுகிறது!
தொடர்புடைய கட்டுரைகள்:
1.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 23.37; வரி ரூ. 40.33 ! கொள்ளையடிப்பதை மத்திய அரசு ஒப்புதல்!!
.

