விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Tuesday, 28 October 2014

ஆற்றுமணல் கொள்ளை: ஒரு ஆறும் அதன் ஊரும் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறு!

கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் வட்டம், விருத்தாசலம் சேலம் சாலையில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் பரவலூர். இக்கிராமத்தின் ஊடாக செல்லும் மணிமுத்தாற்றில் கடந்த 11.09.2014 முதல் அரசு மணல் குவாரி ஒன்று துவக்கப்பட்டுள்ளது.இக்குவாரி அமைக்க ஆற்றின் உள்ளே செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போதே பரவலூர் பொதுமக்களும், இப்பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தார்கள், விருத்தாசலம் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர்.காவல் துறையினரின் முழு ஒத்துழைப்போடு குவாரி ஒப்பந்ததாரர் பொது மக்களாகிய எங்களை அடியாட்கள் மூலம் மிரட்டியும், பொது மக்களிடையே சாதி அடிப்படையிலான பிளவுகள், மோதலை உருவாக்கும் வகையிலான தந்திரங்களை கையாண்டும் மக்களின் எதிர்ப்பை சிதறடிக்க முயற்சித்து வருகின்றனர். இதோடு பரவலூர் கிராமத்திலும் இவ்வட்டாரத்தில் உள்ள அரசியல் கட்சியினரையும் மற்றும் ஊராட்சிமன்ற தலைவரையும் விலைக்கு வாங்கியும் எமது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயன்று வருகின்றனர்.

பரவலூர் பொதுமக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில் பரவலூர் கிராம பொதுமக்களிடையே சாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் மணல் குவாரி ஒப்பந்ததாரரின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாத வகையில் போராட்டங்களை மிகவும் கவனமாக நடத்தி வருகிறார்கள்.
இந்த வழிமுறையின் ஒரு அங்கமாக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பிரதான வழிமுறையாக கடைபிடித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய தேதிகளில் இரண்டு சமாதான கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

முதல் சமாதான கூட்டம் நடைபெற்ற 14.09.2014 அன்று மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எமது இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை மணல் குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அது வரை போராட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் கோட்டாட்சியர் மக்களை கோட்டுக்கொண்டார். கோட்டாட்சியரின் இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். ஆனால் இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக மறுநாளே 15.09.2014 மீண்டும் மணல் குவாரி செயல்படத்துவங்கியது. மணல் குவாரியில் நான்கு பொக்லைன்(HITACHI) கனரக இயந்திரங்கள் மூலம் நூற்றுகணக்கான லாரி மணல் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த மக்கள் உடனடியாக மணல் லாரிகள் குவாரியை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் மக்களை கலைந்து போகச்சொன்னதுடன் உங்கள் கோரிக்கையை கோட்டாட்சியரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை மக்கள் ஏற்க மறுத்ததால் மணல் அள்ளுவதை இப்போதைக்கு நிறுத்துவதாகவும், நாளை மீண்டும் கிராம மக்களை சந்திப்பதாகவும் கூறினார்.வட்டாட்சியரின் இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்க வேண்டும் என்றால் லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள மணலை ஆற்றிலேயே திருப்பி கொட்ட வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்.இதன் அடிப்படையில் லாரியில் ஏற்றப்பட்ட மணல் கொட்டப்பட்ட பிறகு மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மீண்டும் முன்பு போலவே வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் அள்ளப்பட்டது, ஆனால் இம்முறை உள்ளூரில் விலைக்கு வாங்கப்பட்ட அடியாட்களை வைத்து மணல் அள்ளியதால் அப்பகுதிக்கு மக்கள் சென்றால் அடியாட்களால் பொதுமக்கள் தாக்கப்படும் அபாயமும் ,சாதிய மோதலும் நிகழும் என்பதால் பொதுமக்களை மணல் குவாரிக்கு அழைத்து வருவதை தவிர்த்துவிட்டு, எமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டகுழு உறுப்பினர்கள் மட்டும் மணல் எடுப்பதை எதிர்த்து மறியல் செய்தோம், நாங்கள் எதிர்பார்த்ததை போன்றே மணல் குவாரியில் தயார் நிலையில் இருந்த அடியாட்கள் எங்களை தாக்கினார்கள்.நாங்கள் திருப்பி தாக்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசு அதிகாரிகளும், காவல்துறையும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக எமது போராட்டத்தை திசைதிருப்புவார்கள் என்பதால் நாங்கள் பின்வாங்கினோம்.

பின்னர் கிராம மக்களிடையே பேசி மணல் குவாரி செயல்படுவதை நேரடியாக தடுத்தால் அது அடியாட்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக, சாதிய மோதலாக திசை திருப்பப்பட்டுவிடும் என்பதால் இனி குவாரியில் நேரிடியாக போராடாமல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானித்தோம்.

அதன்படி 20.09.2014 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுகணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டோம். எமது முற்றுகையை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் ,காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் முந்தைய சமாதானக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் எடுக்க கோட்டாட்சியர் அனுமதி வழங்கியதற்கும், அதற்கு அடுத்த நாள் மணல் குவாரியில் வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மணல் எடுக்க அனுமதி வழங்கியதற்கும் , மணல் குவாரி ஒப்பந்ததாரர் அடியாட்களை பயன்படுத்துவதை கண்டும் காணாமல் வந்த வட்டாட்சியரின் செயலுக்கும் எமது எதிர்ப்பை, தெரிவித்தோம். இதோடு இச்சமாதான கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மணல் குவாரி ஒப்பந்ததாரர் நூற்றுக்கணக்கான அடியாட்களை திரட்டி மணல் குவாரி அருகில் விருத்தாசலம் – சேலம் சாலையில் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்திருப்பதால் நாங்கள் ஊர் திரும்பும் போது அடியாட்களால் தாக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக மணல் குவாரியை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைக்கு ஏற்ப உடனடியாக மூடிவிட வேண்டும்.மேலும் மணல் குவாரி அருகில் திரட்டப்பட்டுள்ள அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் அனைவரும் இந்த அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்ற எமது முடிவை கோட்டாட்சியரிடம் தெரிவித்தோம்.

இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர் உங்கள் கோரிக்கைகளை பற்றி உடனடியாக முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி ஆலோசித்துவிட்டு உரிய பதில் அளிப்பதாகவும், அதுவரை காத்திருக்குமாறும் கூறினார். இரண்டு மணி நேரம் கழித்து மணல் குவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ,மணல் குவாரி அருகில் ஒப்பந்ததாரரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறும் அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்திரவிட்டிருப்பதாகவும், அடுத்த சமாதான கூட்டம் மீண்டும் 23.09.2014 அன்று நடைபெறும் என்றும்  கோட்டாட்சியர் அறிவித்தார்.இதை ஏற்றுக்கொண்ட நாங்கள் ஊர் திரும்பினோம்.

அன்றிலிருந்து 30.09.2014 தற்போதுவரை வரை மணல் குவாரியில் மணல் அள்ளப்படாவிட்டாலும் கோட்டாட்சியர் அறிவித்த சமாதான கூட்டம் 23.09.2014 அன்று நடத்தப்படவில்லை.அதோடு 2001-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்  பரவலூர் கிராமத்தில் மணல் எடுக்க நிரந்தர தடையாணை விதித்து அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் சுட்டிக்காட்டியும், அதன் நகலை கோட்டாட்சியரிடம் வழங்கி எச்சரித்த பின்னரும் மணல் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெறவில்லை. மேலும் மணல் குவாரியில் மணல் அள்ளிய கனரக பொக்லைன் இயந்திரங்கள் மணல் குவாரிக்கு எதிரிலேயே இன்றுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாற்றின் இயற்கை கட்டமைப்பு:- 
மணிமுத்தாறு விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் சிற்றோடையாக தொடங்குகிறது.இதனோடு பல்வேறு சிற்றோடைகளும் இணைந்து கடலூர் மாவட்டம் நல்லூர் என்ற ஊரின் அருகில் இருந்துதான் மணல் வளமிக்க ஆறாக வடிவமெடுக்கிறது.இங்கிருந்து விருத்தாசலம் ஊடாக பயணிக்கும் இந்த ஆறு சேத்தியாதோப்பு என்ற ஊரில் வெள்ளாற்றுடன் சங்கமிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு இதே பாதையில் பயணித்து, தான் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் வாழுமிடங்களை வளம் கொழிக்கும் பூமியாக வைத்திருக்கிறது.இந்த ஆற்றில் நல்லூர் அருகே உள்ள மேமாத்தூர் என்ற ஊரில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.மணிமுத்தாறு இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் விருத்தாசலம் வரை உள்ள கிராமங்களின் பாசன ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. 

இதன் மூலம் கொடுக்கூர்,பெரம்பலூர்,மன்னம்பாடி,சாத்தியம்,விளாங்காட்டூர்,தொரவலூர்,பரவலூர்,கோமங்கலம்,முகுந்தநல்லூர், சாத்துக்கூடல்,க.இளமங்கலம், ஆலிச்சிக்குடி,விருத்தாசலம் ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்படுகிறது.இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீர் அவ்வூர்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதோடு அவ்வூர்களில் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகவும் அமைகிறது.
நல்லூர் கிராமத்தில் இருந்து மணல் வளமிக்க ஆறாக வடிவம் எடுக்கும் மணிமுத்தாற்றின் தென்கரையில் நல்லூர்,வண்ணாத்தூர்,மேமாத்தூர்,கச்சிபெருமநத்தம்,பரவலூர்,கோமங்கலம், மணவாளநல்லூர் ஆகிய கிராமங்களும், வடகரையில் இலங்கியனூர்,மேமாத்தூர்,மேமாத்தூர் ரயில்வே காலணி,ராசாபாளையம்,எருமனூர் ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன.

மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்குகளின் போது ஏற்படும் மண் அரிப்பும் பாதிப்புகளும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த ஆறு, கடந்த ஐம்பதாண்டுகளில் மேமாத்தூரில் இருந்து கோமங்கலம் வரை வரலாற்றில் வேறெப்போதும் நிகழாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக பலநூறு ஏக்கர் விளைநிலங்கள் ஆறாக மாறியுள்ளது. ஆற்றின் அகலமும், ஆழமும் இருமடங்காக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஆற்றின் பல பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகளும்,களி மண்ணும் வெளியே தெரிகின்றன.ஏறத்தாழ இருபது ஆடி அளவிற்கு இயற்கை அண்ணையின் மடியில் காலம்,காலமாக படுத்திருந்த மணல் காணாமல் போய்விட்டது.

கடந்த ஐம்பதாண்டுகளில் மண் அரிப்பிற்கான மூலக்காரணம். 
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956-ம் ஆண்டில்  துவங்கப்பட்டது.அதன் கட்டுமானப் பணிகளுக்கு இம்மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மற்றும் வெள்ளாற்றில் இருந்து மணல் கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மணல் குவாரி அமைந்துள்ள அதே இடத்திலிருந்து அதாவது பரவலூர் கிராமத்தின் கிழக்கு பக்க எல்லையில் இருந்து, மேற்கு பக்க எல்லை வரை உள்ள ஆற்று பகுதியில்தான் ஆயிரக்கணக்கான லாரி மணல் 20 அடி ஆழத்திற்கு, மணலுக்கு கீழே சுண்ணாம்பு பார் வெளியே தெரியும் அளவிற்கு முற்றாக சுரண்டி எடுக்கப்பட்டது.ஆற்றில் இருந்த மணல் 20 அடி ஆழத்திற்கு முற்றாக சுரண்டி அள்ளப்பட்டுவிட்டதால் - இயற்கையாகவே இப்பகுதி வடக்கிலிருந்து தெற்காக சரிவாக அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் 1960-களுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் உண்டான நீரின் அழுத்தம் மற்றும் வேகத்தினால் ஆற்றின் தென்பகுதி கரையில், வரலாற்றில் வேறெப்போழுதும் நிகழாத அளவுக்கு மண் அரிப்பை ஏற்படுத்தி ஏராளமான விளை நிலங்களை காவுகொண்டது. இதன் மற்றொரு விளைவு பரவலூர் கிராமத்தில் குடியிருப்பிற்கு கிழக்கிலும்,மேற்கிலும் முற்றிலும் புதிதான இரு கொண்டை ஊசி வளைவுகள் உருவாகின.

கொண்டை ஊசி வளைவுகளின் சிறப்பம்சங்கள்.
கொண்டை ஊசி வளைவின் நடுப்பகுதி ஆற்றங்கரையின் நேர்க்கோட்டு பாதையில் இருந்து வெளிப்பக்கமாக வளைந்து செல்லக்கூடியது.இதனால் கொண்டை ஊசி வளைவு தொடங்கிய பகுதியின் முனையும் முடியும் பகுதியின் முனையும் ஏறத்தாழ நேர்க்கோட்டு பாதையில் வருகிறது.இந்த கட்டமைப்பின் காரணமாக கொண்டை ஊசி வளைவு தொடங்கும்  இடத்தில் இருந்து ஆற்று நீர் வெளிப்பக்க வளைவிற்கு ஏற்ப வளைந்து சென்று, முடியும் பகுதியின் மீது தனது முழுபலத்துடன் மோதுவதால் அவ்விடத்தில் நீர் சுழற்சி ஏற்படுகிறது.இந்த சுழல்வட்டப்பாதை ஆற்றின் எதிர்கரை வரை சென்று ஆற்று மணலை எதிர் பக்கத்தில் குவிக்கிறது.இந்த சுழற்சியின் போது மென்மையான,வளமான மணல் எதிர்கரையின் பக்கம் நீர் சுழற்சியோடு இணைந்து கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்படுகிறது.

கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதி இயற்கையாகவே அதன் எதிர்ப்பக்கத்தை விட தாழ்வான பகுதியாக உள்ள காரணத்தால், அதன் எதிர்ப்பக்க கரைப் பகுதியில் மணல் குவிக்கப்படுவதற்கு நேர் எதிராக கொண்டை ஊசி பகுதி நீரின் வேகம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மண் அரிப்பு மேலும் அதிகரித்து அது கொண்டை ஊசி பகுதியின் ஆழத்தையும் , அகலத்தையும் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றின் நீர் செல்லும் அளவிற்கு ஏற்ப அதிகரிக்க செய்கிறது.

பரவலூர் கிராமத்தின் கீழ்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியும், மேற்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 2-ன் பகுதியும், இரண்டின் தொடக்கப்பகுதியும் , இவ்விரு கொண்டை ஊசி பகுதிகளுக்கு இடையில் உள்ள பரவலூர் கிராம குடியிறுப்பு பகுதியின் தென்பகுதி எல்லையும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது.இரண்டு கொண்டை ஊசி பகுதிகளுக்கும் இடையில் உள்ள குடியிருப்புப் பகுதி, ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கொண்டை ஊசி வளைவுகளின் விரிவடைதலுக்கு ஏற்ப அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது.இதை உடனடியாக தடுக்கும் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் கீழ் பகுதி மேற்பகுதி கொண்டை ஊசி வளைவுகளின் கோரத்தாண்டவத்தால் அவைகள் நேர்கோட்டில் இணைவதை எவராலும் தடுக்க முடியாது.


(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

இரு மஞ்சள் கோடுகளுக்கு இடைப்பட்ட 1 குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -1. 2- என குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -2 ஆகும்.மேலும் சிவப்பு நிறத்தில் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதிகள் பரவலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடியிறுப்புகள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவன கட்டுமான பணிகளுக்காக 1956 மற்றும் 1990 களில் பெருமளவு மணல் எடுக்கப்பட்டதால்தான் பரவலூர் கிராமத்தில் இரு ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உருவாகியுள்ளன.
கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியின்      தென்புறக்கரை மூன்று மீட்டர் அகலம் மட்டுமே தற்போது உள்ளது.இதை அடுத்து மேமாத்தூர் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயும் ,அதைத் தொடர்ந்து விருத்தாசலம் - சேலம் சாலையும் அமைந்துள்ளன. கொண்டை ஊசி வளைவு- 1 –ன் ஆபத்தினால் விருத்தாசலம் – சேலம் சாலையும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க அவ்விடத்தில் 10 மீட்டர் உயரமும் நீளமும் உடைய  ஒன்பது தடுப்புச் சுவர்களை வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 17.65 கோடி செலவில் பொதுப்பணித்துறை கட்டியுள்ளது.இந்த தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல் இருந்திருந்தால் வெள்ளப்பெருக்குகளின் போது கரை உடைபெடுத்து விருத்தாசலம் – சேலம் சாலை துண்டித்து கோமங்கலம்,மணவாளநல்லுர் ஆகிய ஊர்களில் பெரும் வெள்ளப்பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கும். நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டிருக்கும்.அதே வேளையில் இந்த தடுப்புச்சுவர்கள் குறிப்பிட்ட அப்பகுதியை பாதுகாத்தாலும், மண் அரிப்பிற்கு உள்ளாகியுள்ள பரவலூர் கிராமத்தையும் அதன் விளைநிலங்களையும், கோமங்கலம் கிராம விளைநிலங்களையும் பாதுகாக்கவில்லை.முன் எப்போதும் போலவே இப்போதும் மண் அரிப்பினால் ஆபத்தை எதிர்கொண்டே உள்ளன.

இதற்கு முன்பு பரவலூர் கிராம ஆற்றுபகுதி இருமுறை பெருமளவு அள்ளப்பட்ட மணலினால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள இப்பகுதியை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, அதற்கு நேர்மாறாக மூன்றாவது முறையாக மணல் குவாரி அமைத்ததன் மூலம் ஏற்படபோகும் அழிவின் வேகத்தை துரிதப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு 1956 மற்றும் 1990 களில் அள்ளப்பட்ட மணலால் உருவான கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை அண்ணை தன்னை சமனிலைப்படுத்திக்கொள்ள அரிப்பு மற்றும் சரிவு ஆகிய வடிவங்களில் சேமித்து வைத்துள்ள மணலை தாயின் மடியறுத்து பால் கறப்பதைப் போன்று மணல் கொள்ளையர்கள் ஒட்டச்சுரண்டிவிடுவார்கள்.இதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரியில் ஏறத்தாழ பதினைந்து அடி ஆழத்துக்கும் மேலாக ஒரு சில நாட்களிலேயே களிமண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மணல் ஒட்ட சுரண்டி அள்ளப்பட்டுள்ளது.








கீழே செம்மண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மண் அள்ளியுள்ள காட்சி.





ஏறக்குறைய 15 ஆழத்திற்கு மண் அள்ளியுள்ள காட்சி.

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப்போகும் அழிவுகளும்,பாதிப்புகளும்.    

·          தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் மணிமுத்தாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்குகளின் போது கொண்டைஊசி வளைவு – 1 மற்றும் -2 இரண்டும் இணைந்து பரவலூர் என்ற கிராமமே தமிழக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்.இதுவே இந்த மணல் குவாரியால் ஏற்படபோகும் முதன்மையானதும் மிகப்பெரியதுமான விளைவாகும்.

·          இதன் அடுத்த விளைவாக பலநூற்றுகணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மண் அரிப்பிற்குள்ளாகி ஆறாக மாறுவதால் இதை நம்பி உயிர்வாழும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

·          மணிமுத்தாற்றில் உள்ள மணல் ஒட்டசுரண்டி அள்ளப்படுவதால் இந்த ஆற்றின் கரையில் உள்ள கிராமங்களில் மட்டுமல்ல இவ்வாற்றை சுற்றியுள்ள 20- திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.இதனால் இவ்வட்டாரத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நிலத்தடிநீர் இல்லாமல் போய் இவ்வட்டாரமே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. இதற்கு ஆதாரமாக பரவலூர் கிராம பகுதிகளில் 1960 களில் ஐந்தடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 55 அடி முதல் 60 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.இக்கிராமத்திலும் இதை சுற்றியுள்ள கிராமங்களிலும் 60 அடிக்கு கீழே 300 அடி வரை நிலத்தடிநீர் வளமே இல்லை என்பதும்,அப்படியே ஒரு சில இடங்களில் கிடைத்தாலும் அந்த நீர் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாத வேதிப்பொருட்கள் நிறைந்த நீராகவே உள்ளது.எனவே இப்போதுள்ள 60 அடி ஆழ நீர்மட்டத்தை பாதுகாப்பதும், அதற்கான ஆதாரமாக உள்ள ஆற்றுமணல் கொள்ளை போவதை தடுப்பதுமே இவ்வட்டார மக்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழிமுறையாகும்.

1990 -களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் அதில் வழங்கப்பட்ட தீர்ப்பாணையும்.
பரவலூர் கிராமத்தில் 1990 களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரு குழந்தைகளின் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக பரவலூர் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் விருத்தாசலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் மு.வ.எண் 939/91 –ல் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் தீர்ப்பு 26.10.1999 தேதி அன்று அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு மனுதாரருக்கு எதிராக அமைந்ததால்,இத்தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு எண்:2/2000 மேல்முறையீடு செய்தார்.

இம்மேல்முறையீட்டு வழக்கில் எதிர்வாதிகளாக
1.தமிழ்நாடு அரசு ரெப் பை தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர்
2.விருத்தாசலம் கோட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
3.விருத்தாசலம் வட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
4.ராஜசேகரன்,(மணல் குவாரி ஒப்பந்ததாரர்) ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக 2001-ம் ஆண்டு ஜீன் திங்கள் 15 –நாள்  தீர்ப்பு வழங்கப்பட்டது(தீர்ப்பாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2001- க்கு பிறகு பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்கபடவில்லை.ஆனால் நீதிமன்ற தடையாணை நீடிக்கும் போதே அதை பொருட்படுத்தாமல் அதை அவமதிக்கும் வகையில் தற்போது மணல் குவாரி தமிழக அரசின் அதிகாரிகளால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.இம்மாதத்தில் 14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய இரு சமாதான கூட்டங்களிலும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களிடம் நீதிமன்ற தடையாணைப் பற்றியும், அதன் நகலையும் மக்கள் சுட்டிக்காட்டியும், அளித்த பின்னரும் கூட அதை ஒரு பொருட்டாக அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை.

எப்படியாவது பொதுமக்களை எங்களை ஏமாற்றி மணல் குவாரியை அதன் குத்தகைதாரருக்கு ஆதரவாக இயங்கவைப்பதிலேயே கோட்டாட்சியரும்,வட்டாட்சியரும் தீவிர கவனமும்,அக்கறையும் செலுத்தி வருவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர், விருத்தாசலம் கோட்டாட்சியர்,விருத்தாசலம் வட்டாட்சியர் ஆகியோருக்கு எமது போராட்டக்குழுவின் சார்பில் கடந்த 24.11.2014 அன்று பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளித்தது, நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்பதையும் அது நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக்காட்டி,எச்சரித்து உடனடியாக மணல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறாவிட்டால் உங்கள் மூவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதையும் குறிப்பிட்டு எமது வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு சமாதானகூட்டங்களிலும் மணல் குவாரி ஒப்பந்ததாரர் யார் என்பதை நாங்கள் வலியுறுத்திக்கேட்டும், கோட்டாட்சியர் தகவல் தர மறுத்துவிட்டார்.மணல் குவாரி ஒப்பந்ததாரரின் பெயரை வெளியே சொல்ல மறுக்கும் கோட்டாட்சியரின் செயல் ஏன் என்பது எமக்கு விளங்கவில்லை.

நீதிமன்ற ஆணைக்கே கட்டுப்பட மறுக்கும் தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அவர்களின் மூலம் எமக்கு நியாயம் கிடைக்கும், எமது உயிருக்கும் , உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும், எமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதில் பொருள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

தினசரி பத்திரிக்கையில் மக்களின் போராட்ட செய்திகள் link




தந்தி தொலைக்காட்சி அவணப்படம்( உத்தரகாண்ட் மாநிலம்)






Monday, 25 June 2012

நேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......! ஆய்வறிக்கை.

இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.

பிரசந்தா,பாபு ராம் துரோகக்கும்பலின் நடவடிக்கைகள் மீது தோழர் கிரண் தலைமையிலான குழுவினர் அவநம்பிக்கை கொண்டிருந்தாலும்,கட்சிக்கட்டுப்பாடு என்பதற்குள் மூழ்கி எதிர்த்து போராடி முறியடிக்காமல் இருந்துள்ளனர்.தற்போது நிலைமை கைமீறி சென்ற பிறகு துரோக கும்பலுக்கு எதிராக போராட ஆரம்பித்துள்ளனர்.தமது இந்த நடவடிக்கை தாமதமானது எனபதை அவர்களே வெளிப்படுத்தியுள்ளனர்.

புதிய ஜனநாயக புரட்சிக்கும்,சோசலிசத்திற்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால், சந்தேகத்திற்கு இடமின்றி நேபாளத்திற்கு தற்போது புதிய ஜனநாயக புரட்சி தேவையற்றது என்றும் ,  அதில் நாம் பெருமளவு அடைந்து விட்டோம், மீதி சோசலிசம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வரும்போது அடைந்துவிடுவோம் , மேலும் தற்போது கட்சியின் முக்கியப் பணி முதலீட்டு நாடுகளுக்கு சாதகமான சூழலையும், உற்பத்தி சக்திகளையும் உருவாக்குவதுதான் பிரசந்தா எனவும் கூறி இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

மேற்கண்ட கருத்துகள் மூலம் பிரசந்தா,பாபு ராம் கும்பல் அப்பட்டமாக புரட்சியை ஆளும்வர்க்கங்களிடம் காட்டிக்கொடுத்துள்ளனர் என்பது மிகவும் வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக தெரிந்திருந்தாலும், இவர்களே கட்சியில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ண்மையில் நேபாள மாவோயிசக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பசந்தா அவர்கள் துருக்கி மா-லெ.கம்யூனிசக்கட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த கும்பலையும், இந்த துரோகக்கும்பலை தாங்கள் முழுமையாக நம்பி ஏமாந்து போனதை பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.

”அப்போது ஜனநாயக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக ஏற்றுக்கொண்டோம். அதனை நாங்கள்  செயல் தந்திர மாற்றம்  என்றே கூறினோம். அப்போது நாங்கள் எடுத்த பாராளுமன்ற பாதை நிச்சயமாக ஒரு திருப்புமுனை. அதுவே எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு நிச்சயமாக இந்த சுழல் உருவாக்கத்தின் ஒரு காரணி”.



”இன்றையச் சூழலில் திரும்பி பார்க்கும்போது எங்களது கட்சியின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக 2005 கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டது, நேபாள நாடாளுமன்றவாதிகளுடன் டில்லியில் 12 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஆகியவை இந்த மொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்த செயல் தந்திரம் மூலம், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் கிளர்ச்சி என்னும் சூழலை ஏற்படுத்தி, நகரங்களில் புரட்சிகர கட்டமைப்பை ஏற்படுத்த  உதவும் என்பதால் இது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் நகரங்களுக்கு வந்தோம். ஆனால் கொந்தளிப்பான கடந்த பத்துவருட மக்கள் யுத்தத்தில் நாங்கள் பெற்ற அனைத்தும் தற்போது எமது கைகளை விட்டு போய்விட்டது. அண்மையில் தலைவர் பிரசந்தா அந்த 12 அம்ச ஒப்பந்த்தை அடையும் முன்பாக,  இந்திய விரிவாக்கவாதிகளுடன் டில்லியில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இந்து பத்திரிக்கைக்கான ஏப்ரல் 16- நேர்காணலில் டில்லியுடன் பன்னிரெண்டு அம்ச ஒப்பந்தத்துடன் தொடங்கிய பயணம் தற்போது முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.  நேபாள ராணுவத்தை வைத்து மக்கள் விடுதலைப் படையின் முகாம்களை சதித்தனமாக சுற்றிவளைத்து சரணடையச்செய்ய உத்தரவு இட்டதற்குப் பின்னர்தான் இந்த நேர்காணலை அவர் தந்தார். இது பாபுராம், பிரசந்தா கும்பல் பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக விரிவாக்கவாதிகளின் முன் சரணடைந்ததையே காட்டுகிறது. இதனை இந்தக் கும்பல் புரட்சியை அடைவதற்கான செயல் தந்திரம் என்று சொன்னது. ஆனால் அது இந்திய ஆளும் வர்க்கங்கள், நேபாள நாடாளுமன்ற வாதிகள் மற்றும் பாபுராம், பிரசந்தா கும்பல் கூட்டு சேர்ந்து நேபாள புரட்சியை முறியடிக்க எடுத்த விரிவான நிலைப்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கும்பல் நேபாள உழைக்கும் மக்கள் மற்றும் உலக உழைக்கும் மக்களிடம் புளுகியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதையே காட்டுகிறது”, என்றும் கூறியிருக்கிறார்.


தோழர் பசந்தாவின் மேற்கண்ட கருத்துகளில் ஜனநாயக குடியரசு என்ற எமது செயல்தந்திரம் தான் இப்போதைய பின்னடைவுக்கு காரணம், இது இந்திய நேபாள ஆளும்வர்க்கங்கள் பிரசந்தா,பாபுராம் கும்பல் கூட்டுசேர்ந்து செய்த சதியாகும். ஆனால் நாங்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களும் பிரசந்தா,பாபுராம் துரோகக்கும்பலை தற்போது எதிர்த்து போராடுபவர்களுமான தோழர்கள் கிரண்,பசந்தா,கஜிரோல்,பாதல் போன்றவர்களால் கூட கட்சித்தலைமையின் சூழ்ச்சியை புரிந்துகொள்ள முடியாமல் அதற்கு பலியாகியிருக்கிறார்கள்.

இவர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத போது கட்சி அணிகளும்,நேபாள உழைக்கும் மக்களும் கட்சித்தலைமையின் துரோகத்தை புரிந்துகொள்ளாதது அதிசயமான நிகழ்வல்ல.

கடந்த 10 ஆண்டுகால புரட்சியின் பயன்கள் அனைத்தையும் முற்றாக இழந்த பின்னரும் கூட கட்சித்தலைமையின் துரோகத்தை, அதை எதிர்க்கும் புரட்சிகர குழுவினர் இன்னமும் தெளிவாக வரையறுத்து புரிந்துகொள்ளாமல்தான் உள்ளனர்.

தோழர் பசந்தாவினுடைய பேட்டியில் கட்சித்தலைமையின் துரோகத்தைப்பற்றியும்,  நேபாள புரட்சியை முறியடிக்க இந்திய, நேபாள ஆளும்வர்க்கங்களின் செயல்பாடுகளைப்பற்றியும் அதாவது முக்கியமாக புறநிலைசக்திகளின் செயல்பாடுகளைப் பற்றிய தமது குழுவின் கருத்துக்களையே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்படிப்பட்ட பின்னடைவுகளுக்கு புறநிலை சக்திகளின் எதிர் வினையாற்றல்கள் இயல்பானவைகளாகும். இதற்கு எதிரான அகநிலை சக்திகளின் செயல்பாடுகளும், வினையாற்றல்களுமே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் தீர்மானகரமா காரணியாகும். இதன் அடிப்படையில் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் நேபாள புரட்சியின் பின்னடைவை பரிசீலக்கவில்லை என்பதைத்தான் மேற்கண்ட பேட்டியில் உள்ள அவரது கருத்துகள் நமக்குப் புலப்படுத்துகிறது.

எந்த ஒரு நாட்டிலும்  புரட்சிக்கு எதிராக பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருக்கும் ஆளும் வர்க்க பிரதிநிதிகளும், ஆளும் வர்க்கங்களும் பல்வேறு சதிகளின் மூலம் புரட்சியை முறியடிக்க முயற்சிப்பார்கள் என்பது இயல்பானதொரு நடவடிக்கையே தவிர அதிசய நிகழ்வல்ல.

நேபாள சமூகத்தை விட  மிகவும் முன்னேறியச் சமூகங்களான சோவியத் ஒன்றியத்திலும், சீனத்திலும் கூட கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ கும்பலின் சதிகளால் அந்நாடுகளில் புரட்சி பின்னடைவுக்குள்ளானதை வரலாற்றில் நாம் பார்த்தேதான் இருக்கிறோம்.
அவ்விரு நாடுகளிலும் புரட்சி வெற்றியடைந்து பல பத்தாண்டுகளுக்குப் பின்னர்தான், முதலாளித்துவவாதிகளால் அதை முறியடிக்க முடிந்தது. அந்நாடுகளில் இச்செயல் அவ்வளவு எளிமையான ஒன்றாகவும் இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஏனென்றால் அவ்விரு நாடுகளின் மொத்த சமூகமும் இந்திய, நேபாள நாடுகளை  விட, சிந்தனாரீதியாக மிகவும் முன்னேறிய சமூகங்களாகும். இதன் காரணமாக கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் தோழர்கள் லெனின்,ஸ்டாலின் மற்றும் தோழர் மாவோ ஆகியோருக்குப் பின்னர் தான் கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. கட்சியில் இருந்த உண்மையான பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்கள் ஆயிரக்கணக்கானோரை நயவஞ்சகமாக கொலை செய்தும், சிறையில் அடைத்தும் தமக்கான நிலையை கட்சியிலும், ஆட்சியிலும் நிச்சயமான வகையில் உறுதி செய்து கொண்ட பின்னர்தான், தமது முதலாளித்துவ நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடிந்தது. இதையும் கூட முழுக்க, முழுக்க ராணுவ ஒடுக்குமுறை மூலமே நிறைவேற்றிக்கொண்டனர்.

ஆனால் நேபாளத்திலோ புரட்சி முடிவடைவதற்கு முன்பாகவே மிகவும் வெளிப்படையாகவும், கட்சியில் உள்ள பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நெருக்குதலையோ, அழிவையோ ஏற்படுத்தாமலேயே முதலாளித்துவவாதிகள் தமது நோக்கத்தை எளிமையாக நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிகழ்வு நேபாளத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் முழு முற்றாக பொருந்தக் கூடியதாகும். இவ்விரு நாடுகளிலும் செயல்பட்ட, செயல்படும் புரட்சிகர சக்திகளின் செயல்பாடுகளை தொகுத்துப் பார்க்கும்போது இரண்டுமே உள்ளடக்கத்தில் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளது.

நேபாள, இந்திய புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளின் நடவடிக்கைகளில் உள்ள ஒரே வேறுபாடாக தோன்றுவது இந்திய புரட்சிகர சக்திகள், நேபாள புரட்சிகர சக்திகள் முன்னேறிய அளவிற்கு புரட்சியில் முன்னேறாமல் ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர் என்பதே ஆகும்.

ஆனால் நேபாள புரட்சிகர சக்திகள் வெற்றியின் விளிம்புவரை சென்று பின்னடைவை சந்தித்துள்ளதைப், போன்று தோற்றமளித்தாலும், உள்ளடக்கத்தில் இவ்விரு நாடுகளின் புரட்சிகர சக்திகளின் பின்னடைவில் குறிப்பிடும்படியான தனித்துவம் ஏதுமில்லை
ஏனென்றால் நேபாள புரட்சிகர சக்திகளின் எழுச்சி, முன்னேற்றம் என்பது மன்னராட்சியை தூக்கியெறிவது என்பதில் மட்டுமே மேலாண்மை செலுத்தியுள்ளது. மன்னராட்சியை தூக்கியெறியும் அளவுக்கு மட்டுமே அது உள்ளடக்கத்தையும், வீரியத்தையும் கொண்டிருந்தது என்பதுதான் நேபாள படிப்பிணையில் இருந்து நமக்குத் தெளிவாக புலப்படுகிறது.

தோழர் பசந்தா அண்மையில் வெளியிட்ட கருத்துகளும்  கீழ்கண்டவற்றையே சாரமாக உள்ளடக்கியிருக்கிறது. மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டத்தையும் கூட நடத்துகின்ற திறனும், ஆற்றலும்  இல்லாத நேபாள முதாலாளித்துவவாதிகள், தம்மால் செய்ய வக்கற்ற ஒன்றை பாட்டாளி வர்க்க அமைப்பைக் கொண்டு சாதித்துக்கொண்டுள்ளன.

எனவேதான் மன்னராட்சிக்கெதிரான புரட்சிகர சக்திகளின் போராட்டத்தை இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களும் மறைமுகமாக ஆதரித்துள்ளன. அதை நேபாள மாவோயிசக் கட்சியில் ஒளிந்துக்கொண்டிருந்த தமது பிரதிநிதிகளான பிரசந்தா, பாபுராம் தலைமையிலான  கும்பலின் மூலமே சாதித்துக் கொண்டுள்ளன.

சீனத்தில்  பாட்டாளி வர்க்க கட்சியில் ஒளிந்துகொண்டிருந்த முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க தோழர் மாவோ கலாச்சார புரட்சியை  முன்வைத்து நடைமுறைப்படுத்தினார். சீன சமூகத்திற்கு, முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க மக்கள் சக்தியைக் கொண்டு, ஒரு கலாச்சார புரட்சியை மட்டுமல்ல பல கலாச்சார புரட்சிகளை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார் தோழர் மாவோ. ஆனாலும் கூட முதலாளித்துவ பாதையாளர்கள் கலாச்சார புரட்சியையும் மீறி தோழர் மாவோவின் இறப்பிற்குப் பின்னால் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டனர்.

சோவியத் புரட்சியின் படிப்பினையிலிருந்துதான் முதாலாளித்துவ பாதையாளர்களை, மாபெரும் மக்கள் சக்தியைக் கொண்டு முறியடிக்க வேண்டும் என்ற முடிவிற்கு தோழர் மாவோ வந்தார். அதனடிப்படையிலேயே கலாச்சார புரட்சியை நடத்தினார். முதலாளித்துவ பாதையாளர்களை முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல, புரட்சியின் அகநிலைச் சக்திகளான மக்களே முதலாளித்துவ பாதையாளர்களை இனம் கண்டுகொள்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிக்  களமாகவும் திகழ்வதுதான் கலாச்சார புரட்சியின் உள்ளடக்கமாகும்.

உழைக்கும் மக்களை  அப்படி தயார் செய்வதற்கு முன்பாகவே தோழர் மாவோவின் இறப்பும் முதலாளித்துவவாதிகள் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுதலும் நிகழ்ந்துவிட்டது. சீனத்தின் இந்த அனுபவத்தில் இருந்து கட்சிக்கு வெளியில் உள்ள உழைக்கும் மக்கள் மட்டுமல்ல, கட்சியில் உள்ளவர்கள் கூட முதலாளித்துவ பாதையாளர்களை அடையாளம் காணமுடியாமலும், அப்படியே கண்டுபிடித்தாலும் அதை முறியடிக்க மக்கள் சக்தியை பயன்படுத்தும் ஆற்றலோ, திறமையோ இல்லாதவர்களாவே இருந்துள்ளனர்.

 இதிலிருந்து சீனத்தில் கலாச்சார புரட்சி, மக்கள் செல்வாக்குப் பெற்ற தோழர் மாவோவின் மீதான மக்களின் உயரிய நம்பிக்கையின் வெளிப்பாடாகவே  வெளிப்பட்டுள்ளது. சீனத்தில் மட்டுமல்ல உலக பாட்டாளி வர்க்க அமைப்புகள் அனைத்தின் செயல்பாடுகள், அனுபவங்கள் ஆகியவற்றை பார்க்கும்போது உறுதியான கட்சித்தலைமை என்பது குறிப்பிட்ட சமூகத்தின் நற்பயன் சார்ந்த ஒன்றை போன்றே தோற்றமளிக்கிறது.  சோவியத் யூனியனுக்கு தோழர்கள் லெனின், ஸ்டாலினை போன்று சீனத்திற்கு தோழர் மாவோ கிடைத்தது அந்நாடுகளின் நற்பயன்தான் போலும்!. ஆனால் இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இதுவரை அப்படி ஒரு நற்பயன் வாய்க்கவே இல்லை!

 தவறு மற்றும் முதலாளித்துவ பாதையாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி,  கட்சித் தலைமையை மட்டுமே சார்ந்திராமல் பிரதான அகநிலைச் சக்திகளான  அணிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அரசியல், சித்தாந்த வளர்ச்சி   அடிப்படையிலான அடித்தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே உலக புரட்சிகர அமைப்புகளின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இது சாத்தியமா? எப்படி இதை சாதிப்பது? இப்பணி உலக பாட்டாளி வர்க்கம் இது வரை சந்தித்தவற்றிலேயே மிகவும் சவாலான பணிதான் என்றாலும், இதை சாதிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியேதும் இல்லை.  

 ஆனால் இந்தப் புரிதலை கட்சி அணிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் தற்போது உலக கம்யூனிச இயக்கங்கள் கடைபிடிக்கும் சித்தாந்த பயிற்சி அளித்தல் என்ற வடிவத்தின் மூலம் கட்சி அணிகளின் உயர்ந்த புரிதல் மட்டத்தையே உயர்த்த இயலாதபோது, உழைக்கும் மக்களுக்கு அதை தருவது என்பது சாத்தியமே இல்லை.

உலகின் ஏனைய நாடுகளை விட இந்திய, நேபாள நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகளுக்கு இது பன்மடங்கு சவால் நிறைந்த பணியாகும். உலகில் ஏனைய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளிலே கூட, கட்சி அணிகள் அரசியல், சித்தாந்த புரிதலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுவதற்கு மாறாக தலைமை மீதான நம்பிக்கை, விசுவாசம் என்ற அடித்தளத்தின் மீதே பெருமளவு கட்டி எழுப்படுகிறது.

இந்த நம்பிக்கை, விசுவாசம் ஆகிய பண்புகள் சொத்துடைமை வர்க்கப் பண்பின் தொடர்ச்சியாகவே பாட்டாளி வர்க்க அமைப்புகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது. இத்தன்மை இந்திய, நேபாள நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இச்சமூகங்களுக்கே உரித்தான வகையில் தனித்தன்மையுடன் மேலாண்மைப் பெற்று விளங்குகிறது.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ்விரு நாடுகளிலும் உள்ள சமூகங்கள் பார்ப்பனிய பண்பாட்டையும் அதனடிப்படையிலான வாழ்வியலையுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. பார்ப்பனியம் இந்திய, நேபாள ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் மிகச் சிறந்த ஆயுதமாகும்.
எனவே இவ்விரு நாடுகளின் தனித்தன்மையான பார்ப்பனியத்தை பற்றிய தெளிவான வரையறையை இந்நாடுகளில் உள்ள புரட்சிகர அமைப்புகள் கொண்டிருப்பது தவிர்க்கவியலாத தேவையாகும். இதைக்கொண்டிராத எந்த ஒரு புரட்சிகர அமைப்பும், தமது இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேற இயலாது.

இவ்விரு நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க அமைப்புகள், தமது அணிகளுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி அளிக்க நடத்தும் வகுப்புகளின் மூலம் இதுவரை ஆதாயம் அடைந்து வருவது பார்ப்பனிய சக்திகளே ஆகும். இவர்களின் மூதாதையர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமக்கு எதிரான அனைத்து சித்தாந்தங்களையும் தின்று, செறித்துவிட்டதைப் போன்றுதான் மார்க்சியத்தையும் தின்று செறித்துவிடும் திசையை நோக்கி இதுவரை  வர்கள் வெற்றிகரமாக நடை போட்டு வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில் தான் இந்திய, நேபாள புரட்சிகர அமைப்புகளின் பின்னடைவுகளும், தோல்விகளும் அமைந்துள்ளன. இதனடிப்படையில்தான் ஜனநாயக மத்தியத்துவம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய பாட்டாளி வர்க்க உயரிய கோட்பாடுகளையும் இந்நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப, பார்ப்பனிய நடைமுறைகளின் மூலம் மடைமாற்றிக் கொண்டுள்ளனர். இப்படி இவர்கள் பாட்டாளி வர்க்க அமைப்பையும், அதன் உயரிய கோட்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதை புரிந்து கொள்வதில் உழைக்கும் மக்களிடையே உள்ள அரசியல், சித்தாந்த புரிதல் பற்றிய  போதாமை நீடித்திருக்க வேண்டியது இவர்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது.

எனவே ஆளும் வர்க்கங்களின் இந்த நயவஞ்சகத்தை உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள அவர்களின் வாழ்நிலையிலிருந்து, அதை அடையாளம் காண தேவையான அரசியல், சித்தாந்த புரிதலை தருவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பிட்டதொரு சமூகத்திற்கு எப்படியான சமூக மாற்றம் தேவைப்படுகிறதோ, அதை அம்மக்களின் வாழ்வியலில் இருந்து, அவர்களுக்கு புரிந்த மொழியில் புரிய வைப்பதும், அதனடிப்படையில் அவர்களை போராட வைத்து, இப்போராட்டத்தின் ஊடே அவர்களுக்கு அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான வழிமுறையை நாம் உருவாக்கியாக வேண்டும்.

குறிப்பாக புதிய ஜனநாய புரட்சியின் சாரம் விவசாயிகளுக்கான விவசாய புரட்சி என்பதை நாம் அறிவோம். இந்த புதிய ஜனநாயக புரட்சியின் சாரத்தை உழுபவருக்கே நிலம், உழைப்பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தின் உள்ளே தோழர் மாவோ உள்ளடக்கியுள்ளார். இதைத்தான் இந்திய நக்சல்பரி புரட்சியாளர்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

இன்றைய நிலையில் இந்தியாவில் விவசாயம் லாபமற்ற தொழிலாக மட்டுமல்ல, அது தற்கொலைக்கான தொழிலாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களால் மாற்றப்பட்டுவிட்டது. இதனால் இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெயியேறும் நிகழ்வு மிக விரைவாக  நிகழ்ந்து வருகிறது. ஆனால் இப்படி  விவசாயத்தில் இருந்து வெளியேறும் விவசாயிகளுக்கு வாழ்வளிக்கக் கூடிய மாற்று ஏதும் உருவாக்கப்படவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினரான விவசாயிகளுக்கு வாழ்வளிக்க வேறெந்த துறையிலும் வாய்ப்பேதும் இல்லை. அதிலும்  உலக ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் தரகு முதலாளித்துவத்திற்கு இதற்கான தகுதி முற்றாக இல்லவே, இல்லை.

எனவே, விவசாயமே இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளிப்பதற்கான தகுதிப் பெற்ற ஒரே தொழிலாகும்.இதன் மூலமே பெரும்பானமை மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து,  அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், போது மட்டுமே தேசிய சந்தை உருவெடுக்கும்.மக்களின் வாங்கும் சக்தி பெருகாத வரை நாடு தொழில்மயமாவது என்பது சாத்தியமேயில்லை.

ஆனால் ஆளும்வர்க்கங்களோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்கும் முனைப்பில் விவசாயத்தை ஏறத்தாழ அழித்துவிட்டது.இதன் மூலம் நாட்டின் பெரும்பான்மை மக்களை அழிவின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது.இப்படி அழிவின் விளிம்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள்தான் புரட்சியின் பிரதான சக்திகள் ஆவர்.விவசாயிகளை அவர்களின் வாழ்நிலைக்கோரிக்கைகளில் இருந்து தொடங்கி போராட வைப்பதும்,இதையே அவர்கள் அரசியல்,சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களமாகவும் உருவாக்குவதே புரட்சிகர அமைப்புகளின் அத்தியாவசிய பணியாகும்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனிய வாழ்வியலையே அடிப்படையாக் கொண்டுள்ள இந்திய,நேபாள சமூகங்களே உலகில் உள்ள சமூகங்களிலேயே, சிந்தானா ரீதியாக மிகவும் பின்தங்கிய சமூகங்களாகும்.

இவைகளின் அன்றாட வாழ்வியலே  பார்ப்பனியமாக உள்ளதால், கொத்தடிமைத்தனமும் அதன் அடிப்படையிலான பற்று, விசுவாசத்தை தமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்டுள்ளவைகள்.இந்திய நேபாள சமூகங்களின் இந்த தனித்தன்மையின் காரணமாக எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான சீனத்தின் கலாச்சாரப் புரட்சி என்ற வழிமுறை மட்டும் இங்கு போதுமானதல்ல.அதிலும் கலாச்சாரப் புரட்சி,புரட்சிக்கு பிந்தைய சமூகத்திலுள்ள எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இந்திய, நேபாள சமூகத்தன்மையின் அடிப்படையில் இருந்து மக்களை புரட்சிக்கு அணிதிரட்டும் போதே கட்சியில் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்புரட்சியாளர்களை முறியடிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் கடந்த 8-ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறோம்.

இதற்காக இந்நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளிடம் விரிவான ஆய்வொன்றை நடத்தி கீழ்க்கண்ட கோரிக்கைகளை தொகுத்துள்ளோம்.

மத்திய, மாநில அரசுகளே!

1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!

2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் ,நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்காரர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு!

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து.


மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமது வாழ்நிலை அனுபவங்களில் இருந்து விவசாயிகளே  வந்தடைந்தவைகள்.இக்கோரிக்கைகள் பொருளாதார வடிவைக்கொண்டிருந்தாலும் இவைகள் நிலவுகிற சமூக அமைப்பில் தீர்க்க முடியாதவைகள் என்பதால் இவைகள் முழு முற்றாக அரசியல் கோரிக்கைகளாகும்.இவைகள்தான் இந்திய ஆளும்வர்க்கங்களால் அழிவின் விளிம்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டதாகும்.இதனோடு இந்திய உழைக்கும் மக்கள் அனைவரின் நலனையும், தேசிய முதலாளிகளின் நலனையும் உள்ளடக்கியதாகும்.இதன் காரணமாக இக்கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அந்தக்கணமே நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கும் அவர்களின் விரோதிகளுக்குமான போர் தொடங்கிவிடுகிறது.

தமது கோரிக்கைகளின் சந்தேகத்திற்கு இடமில்லாத, மிகத்தெளிவான நியாயத்தில் இருந்து, இதற்கெதிரான தமது விரோதிகளின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்.இந்த நீடித்த, இடைவிடாத போராட்டத்தின் ஊடாக நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல், சித்தாந்த பயிற்சி பெறுவதற்கான களத்தை உருவாக்குவதே புரட்சிகர தலைமையின் தலையாயப் பணியாகும்.இப்பணி எந்த அளவிற்கு நேர்த்தியாக, உயரிய மட்டத்தில் செழுமைப்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் புரட்சிகர ஆற்றல் பெருக்கெடுக்கும்.

எமது மேற்கண்ட நிலைப்பாட்டை நாங்கள் முன்பு செயல்பட்ட சி.பி.ஐ-எம்.எல்(மா.அ.க) தலைமையிடம் முன்வைத்தோம்.எமது இந்த முன்னெடுப்பு தமது நோக்கத்திற்கு எதிரானது என்பதால், எம்மை அவர்கள் நயவஞ்சகமான முறையில் விவசாய அமைப்பின் மாநில தலைமையைத்தந்து திசைத்திருப்ப பார்த்தனர்.அது முடியாது போகவே தமது வர்க்க தன்மைக்கு ஏற்ப அமைப்பில் இருந்து எம்மை ஒதுக்குதல்,ஓரங்கட்டுதல்,இழிவுபடுத்துதல் ஆகியவைகள் மூலம் பணிய வைக்க முயற்சித்தனர்.

இவைகளை புரிந்து கொண்ட நாங்கள் எமது நிலையில் மேலும் உறுதியாக நின்றோம்.இப்போதும் அதை விவசாயிகளிடையே கொண்டு செல்லும் பணியையே அடிப்படையாக்க் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

மொத்தத்தில் இதுவரை நாம் பரிசீலித்தவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கான சமூக அடித்தளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை வாழ்வியலாக கொண்டுள்ள இந்திய, நேபாள சமூகங்கள் தத்தமது சமூகங்களின் பின்தங்கிய நிலை,தனித்தன்மை ஆகியவைகளுக்கு ஏற்ப புரட்சியின் அகநிலை சக்திகளான நாட்டின் பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களை புரட்சிக்கு அணி திரட்டுவதற்கும்,அரசியல் சித்தாந்த பயிற்சி அளித்து வளர்த்தெடுப்பதற்கும், இதன் மூலம் பாட்டாளிவர்க்க அமைப்புகளில் ஊடுருவி, அதை உள்ளிருந்தே சீர்குலைக்கும் எதிர்புரட்சியாளர்களை இனம் கண்டு முறியடிப்பதற்கான வழி முறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.

குறிப்பு:-
நாங்கள் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதே நேபாள புரட்சியை காட்டிக்கொடுத்த பிரசந்தா,பாபுராம் கும்பலின் துரோகத்தை முறியடித்து,நேபாளத்தில் புதிய ஜனநாயக புரட்சியை தொடர்வதற்கு மீண்டும் ஆயுதப்போராட்ட பாதையில் போராடப் போவதாகவும்,புதிய கட்சியை துவக்கப்போவதாகவும் தோழர் கிரண் தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டத்திற்கு பின்னர் முறைப்படி அறிவித்துள்ளனர்.புரட்சிகர பாதையில் முன்னேற துரோகக் கும்பலுக்கு மாற்றாக துவங்கப்பட்டுள்ள நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சிக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதோடு தாங்கள் இதுவரை இருந்த ஒன்றுபட்ட கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் முடிவுகளையும் மறுபரிசீலனை செய்து தொகுத்து சரியான அடிப்படை நிலைப்பாடுகளை தீர்மானிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.விரைவில் மா-லெ-மா கோட்பாடுகளின் அடிப்படையில் புரட்சியில் முன்னோறுவதற்கும்,புரட்சியை பாதுகாப்பதற்கும் சரியான முடிவுகளுக்கு வந்தடைவதற்கு எமது மேற்கண்ட கட்டுரையும் அவர்களுக்கு உதவும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தோழமையுடன்: விவசாயிகள் விடுதலைப் பேரவை,தமிழ்நாடு.
நாள்:26.06.2012.


 தொடர்புடைய கட்டுரை:


Wednesday, 15 February 2012

மின்வெட்டுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.



மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.

மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,

வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900

மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.

ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.

இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்….. 
 18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.