விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label கவுரவக் கொலைகள். Show all posts
Showing posts with label கவுரவக் கொலைகள். Show all posts

Monday, 12 September 2011

கவுரவக் கொலைகள்:சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II

உலக அளவில் நடைபெறும் கவுரவகொலைகள் பற்றியும்,அது இந்தியாவில் என்னென்ன காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதைப்பற்றியும்,ஏகாதிபத்திய சந்தை நலன்களுக்காக பரப்பப்படும் சீரழிவுப் பண்பாட்டிற்கு பலியாகி மனிதனையும்,மிருகங்களையும் பிரித்துக்காட்டும் மிகத்தெளிவான உறவுமுறைகளை மீறுகிற, காம வெறிச்செயல்களையும்,சாதிமறுப்பு-தீண்டாமை மறுப்பு காதல்,கோத்திரம் மீறியக்காதல் ஆகியவற்றையும் ஒன்றாக்கி குழப்பும் உச்சநி(நீ)திமன்றம்,அரசு,பத்திரிக்கைகள்,தன்னார்வக்குழுக்கள் ஆகியவற்றின் நோக்கம்,தேவை என்ன என்பதை பற்றியும் சென்றத் தொடரில் பார்த்தோம்.சாதி-தீண்டாமை மறுப்பு காதல்.கோத்திரம் மீறிய காதல் ஆகியவற்றைப் பற்றியும், மற்றும் இவைகளின்  தேவை,அவசியம் ஆகியவைகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்கவியலாத தேவையாக உள்ளது.






        உலகில் உள்ள உயிரினங்களிலேயே, மனிதர்கள் மட்டுமே உறவுமுறைகளை வகுத்துக்கொண்டுள்ளார்கள்.இந்த உறவுமுறைகள் மிகவும் பழமையானது என்பதாலேயே இதை தேவையற்றது என்றதொரு தோற்றத்தை,கருத்தை நாகரீக போர்வையில் திரியும் மனிதமிருகங்கள் எற்படுத்தி வருகின்றன.மனித இனம் இன்று வரை அழிந்து போகாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான்,இந்த உறவுமுறைகள். இப்படியொரு உறவுமுறைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மை முறைப்படுத்திக்கொண்ட செயல், அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ளதற்கான அடையாளம் ஆகும்.இந்த உறவுமுறைகள் தனிமனித விருப்பத்திலிருந்தோ,நல்லெண்ணத்திலிருந்தோ உருவாகவில்லை.மாறாக மனிதனின் வாழ்க்கை தேவையிலிருந்து தவிர்க்கவியலாமல் உருவானது.உலகில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் இருந்தாலும்,அவைகளில் மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவை பெற்றிருக்கிறார்கள்.இந்த பகுத்தறிவுதான் மிருகங்களிலிருந்து மனிதர்களை மிகத்தெளிவாக இனம் பிரித்துக்காட்டுகிறது.இதனாலேயே மனிதன் மிருகங்களைப் போன்று ஒருபோதும் வாழமுடியாது என்ற நிர்ப்பந்ததை ஏற்படுத்திவிடுகிறது.
        மிருகங்களுக்கு மனம் என்பது இல்லை.ஆகவே காம உணர்வு அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வருவதாகும். இனப்பெருக்கம் என்ற இயற்கை தேவைக்காக, அதாவது காம உணர்வு என்பது மிருகங்களுக்கு உடல் சார்ந்த தேவை மட்டுமேயாகும்.
        ஆனால் மனிதனுக்கோ காமம் உடல்சார்ந்த விடயம் மட்டுமல்ல.அது முக்கியமாக மனம் சார்ந்த விடயமாகும்.இதனால் காம உணர்வு மனிதர்களுக்கு ஆண்டு முழுவதும் உருவாகக் கூடியது.
        மனிதர்களாயினும்,மிருகங்களாயினும் ஆண்களிடையே.பெண்களை அடைவதற்கான போட்டியில் பொறாமை உணர்வை ஏற்படுத்துகிறது.இந்தப் பொறாமை உணர்வு மொத்த கூட்டத்திலும் அமைதி இன்மையை,ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது.இது மிருகங்களிடையே குறிப்பிட்ட காலப்பகுதியோடு முடிந்து விடுகிறது.பின்னர் ஆண் மிருகங்கள் தமக்கிடையிலான பகையையும் மறந்து விடுகின்றன.
        ஆனால் மனிதர்களிடையே இது ஆண்டு முழுவதும் ஒற்றுமை இன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல,ஆயுட்காலம் முழுக்க ஒருவரை ,ஒருவர் பழிவாங்கவும் தூண்டுகிறது.இதனால் மனித இனம் இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் கவனம் கொடுக்க முடியாததாலும்,தமக்கிடையிலான சண்டையினாலும் இரட்டிப்பு அழிவை சந்தித்தது.இதை தவிர்ப்பதற்கு,தவிர்க்கவியலாத ஒரு தேவைதான் பாலியல் தேவையை முறைப்படுத்தும் உறவுமுறைகளாகும்.இதை மீற நினைப்பது மனித இனத்தை காட்டுமிராண்டிகளாக்கி அழிவுக்குள்ளாக்கும் செயலாகும்.ஆகவே இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த போராட்டத்தை நாம் ஈவிரக்கமின்றி தான் நடத்தியாக வேண்டும்.
        உணவு தேடுவதை மட்டுமே வாழ்வின் இலக்காக  கொண்டிருக்கின்றன மிருகங்கள்.நுகர் பொருளை தேடுவது மட்டுமே மனித வாழ்வின் இலக்காக மாற்றுகின்றனர்,ஏகாதிபத்திய முதலாளிகளும்,அவர்களின் இந்தியக் கூட்டாளிகளும்.மனிதர்களை மனித மிருகங்களாக மாற்றும் இந்த இழிவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியில் தான்,மனித வாழ்வும்,வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
        மனித வாழ்வை முறைப்படுத்தி,மேம்படுத்தி,வளர்த்து, வாழ வைத்த இந்த உறவு முறைகள்,மனித இனம் உள்ளவரை தவிர்க்கவியலாத, விஞ்ஞான பூர்வமான தேவையாகும்.ஆனால் சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகியவைகள் தேவையற்ற சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல, அவைகள் மனித குலத்தை அழிவுப்பாதையிலும் இட்டுச்செல்லும் பார்ப்பனிய பண்பாடுகளாகும்.மேற்கண்ட பிற்போக்குத் தனங்களை எதிர்த்து,மறுத்து நடைபெறும் காதல்,திருமணம் ஆகியவற்றை நாம் ஆதரிக்க வேண்டும்.இப்பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக விடாப்பிடியான,நீடித்தப்போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும்.
        அதே நேரத்தில் கோத்திரம் மீறிய காதல் அண்ணன்,தங்கைகிடையிலான நிகழ்வாக கூறப்படுவதால் இப்போது அதைப்பற்றி சிறிது பார்ப்போம்!
        கோத்திரம் மீறிய காதல் கொலைகளை தடுப்பது தான்,உச்சநி(நீ)திமன்றம் மற்றும் மைய அரசின் நோக்கம் என்பதை பகுதி I  ல் பார்ததோம்.இந்த கோத்திர வகைப்பாடு பார்ப்பனியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகும்.ஒரு சாதிக்குள்ளாகவே மக்களை கூறுபோடும் கோட்பாடு! மொத்த சாதியையும் குறிப்பிட்ட சில கோத்திரங்களாக வகைப்படுத்தி யார், யாரோடு திருமண உறவு கொள்ளவேண்டும் என்று எவ்வித நியாயமான தேவையும் இன்றி பார்ப்பனக் கும்பலால் உருவாக்கப்பட்டதாகும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள உறவுமுறைகள் மனித இனத்தை முறைப்படுத்துவற்கு போதுமானவைகளாக இருக்கும் போது,கோத்திரம் தேவையற்ற ஒன்றாகும்.ரத்தவழி உறவு மற்றும் நெருக்கமான நட்பு என்ற அடிப்படையிலும், அண்ணன்,தங்கை உறவுமுறை என்பதற்கான அடிப்படை ஏதுமற்ற ஒரு பிற்போக்கு பார்ப்பனிய பண்பாடாகும் கோத்திரம்.இதை மீறுவதால் அவ்விடத்தில் வெற்றிடமோ,பாண்பாட்டு சிதைவோ தோன்றி விடுவதில்லை.அதே நேரத்தில் சிதறிக்கிடக்கும் மனிதர்களிடையே நெருக்கமான பிணைப்பையும்,உறவையும் ஏற்படுத்துகிறது என்ற சமூகவிஞ்ஞான அடிப்படையிலும் குறிப்பிட்ட வரம்புக்குள்-நெருங்கிய ரத்த உறவுக்குள்-திருமண உறவு கொள்வதால் ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பை தவிர்க்கும் என்ற உடற்கூறுவிஞ்ஞான அடிப்படையிலும் கோத்திரம் மீறிய காதல் மிகச்சரியான ஒன்றே ஆகும்.
        சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகிய பிற்போக்கு தனங்களுக்கும் முந்தைய காட்டுமிராண்டிதனந்தான் அண்ணன்,தங்கைக்கிடையிலான உறவு.இது மிருக காமவெறி உணர்வே அன்றி காதல் அல்ல.ஆகவே இது மனிதகுல நாகரீகத்தையும்,வளர்ச்சியையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடுகிறது.இந்த அழிவுப் பண்பாட்டின் கர்த்தாக்கள் தான் ஏகாதிப்பத்தியங்கள்.ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை இந்த அழிவை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மனித சமூகத்தின் மேம்பாட்டிலும்,வளர்ச்சியிலும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஏகாதிபத்தியத்திற்கும்,பார்ப்பனியத்திற்கும் எதிரான போராட்டத்தில் பங்கு பெறுவது தவிர்க்கவியலாத செயலாகும்.ஆகவே நாகரீக மனிதர்கள் அனைவரும் இவைகளை ஒழிப்பதற்கான  போராட்டங்களில் ஒன்றிணைவோம் வாரீர்!வாரீர்!!

குறிப்பு:11.08.10 அன்று சூறாவளியில் வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீள்பிரசுரம் செய்யப்படிகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்:


Thursday, 25 August 2011

சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி- I

கவுரவக் கொலைகள்என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில் 5000 கொலைகள் நடப்பதாகவும்,இதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘சக்திவாகிணிஎன்ற தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கில் மத்திய அரசையும்,எட்டு மாநில அரசுகளையும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநி(நீ)திமன்றம்.இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும்கவுரவக் கொலைகள்நடைபெறுவதாக தன்னார்வக்குழுகள் செய்தி ஊடகங்களில் பரப்புரை செய்துவருகின்றன.

இந்தியாவில் நடைபெறும்கவுரவக் கொலைகளில் 75 சதவீதமானவை சாதி கடந்து காதலிப்பதாலும் மூன்று சதவீத கொலைகள் கோத்திரம் மீறி காதலிப்பதாலும்,எஞ்சியவை கள்ளக்காதலால் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.உண்மையில் இந்தியாவில் நடைபெறும்கவுரவக் கொலைகளில் வெறுமனே 20 சதவீத கொலைகளே பதிவு செய்யப் படுவதாகவும்,ஏனையவை மூடிமறைக்கப்படுவதாகவும் இச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.




மேலேக்கண்ட விவரங்கள் இப்போதுதான் புதிதாககண்டுபிடிக்கப் பட்டதை போன்று இவர்கள் நம்மிடையே பிரம்மிப்பை எற்படுத்துகின்றனர்.இவைகள் இந்தியாவில் காலம்காலமாக இந்து-சாதி-பெருமை என்ற பெயரில் நடைபெற்று வருபவைகள் தான். அப்போதல்லாம் இவற்றை சாதாரண கொலைகளாகவும், தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனைகளாகவும் பார்த்தவர்கள் இப்போது இதை சமூக விவகாரமாக உருவகப்படுத்துகின்றனர்.

1947-
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொலைகளையும்,தாக்குதல்களையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூட மறுத்துவரும் ஆட்சியாளர்கள், இப்போதுகவுரவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளனர்.

தன்னார்வக்குழுக்கள்,நி(நீ)திமன்றங்கள்,ஊடகங்கள்,ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வரிந்துக்கட்டிகொண்டுகவுரவக்கொலைகளை தடுக்கப் போவதாக கூறுவது உண்மையான அக்கறையால் தானா? அப்படியானால் இத்தனையாண்டு காலம் இப்படிப்பட்ட கொலைகள் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாதா?இப்போது மட்டும் இவர்களுக்கு கரிசனம் வந்ததற்கான காரணம் என்ன? என்பதுபற்றி நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றைக்கட்டி ஊற்று இரைக்க மாட்டார் என்பது போல் இவர்களின் திடீர்கரிசனத்துக்கும் ஏதோ ஒரு காரணம் உள்ளது.

கவுரவக் கொலைகள்என்று கவுரவமாக பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்தக் கொலைகள் அனைத்துமே சாதியாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தான் நடத்தப்படுகிறது.சாதி மறுப்பு காதலர்களை கொலை செய்வதை அநீதியான செயலாக இவர்கள் கருதியிருந்தால் இப்போது காட்டும் அக்கறையை பலப்பத்தாண்டுகளுக்கு முன்னரே காட்டியிருக்க வேண்டும்.உச்சநி(நீ)திமன்றத்துக்கு உண்மையிலேயே இந்தக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகளை மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவு போட்டிருக்க வேண்டும்.ஆனால் உச்சநி(நீ)திமன்றமோ கோத்திரம் மீறி காதலிப்பதால் கொலைகள் நடைபெறும் மாநில அரசுகளிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பதில் இருந்தே, இவர்களின் நோக்கம் கோத்திரக்கொலைகளை தடுப்பது மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது.

கோத்திரக் கொலைகள் மொத்தகவுரவக்கொலைகளில் வெறுமனே 3 சதவீதமே ஆயினும்,இந்திய பொருளாதாரத்திலும்,சந்தையிலும்,ஆட்சியிலும் செல்வாக்கு செலுத்தும் ஏகாதிபத்திய முதலாளிகள் இவர்களின் இந்திய பிரதிநிதிகளான இந்திய முதலாளிகளும் தமது சந்தை நலன்களுக்காக பரப்பும் சீரழிவுப் பண்பாட்டுக்கு-மிருக உணர்வுக்கு- ஆட்பட்டவர்கள் இவர்கள். இதனால் தான் இவர்கள் இந்தக் கொலைகள் தமக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.இதைத்தான் தன்னார்வக்குழுக்களும்,ஆட்சியாளர்களும்,நி(நீ)திமன்றங்களும்,ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.தமது செயலுக்கு முற்போக்கு முலாம்பூசுவதற்காகத்தான் சாதிமறுப்பு காதல் கொலைகளையும் இதனோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.

இதோடு கோத்திரம் மீறிகாதலிப்போர் பட்டியலில் அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வைகாதல்என்ற பெயரில் சேர்த்துவிடுவதன் மூலம் மொத்த சமூகத்தையும் குழப்பி,குழம்பியக்குட்டையில் இவர்கள் மீன்பிடிக்க பார்க்கிறார்கள்
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா பிற்போக்குத் தனங்களும்,சமூகவிரோத செயல்களும் பார்ப்பனியத்தின் உதவியோடு தான் நடைபெற்று வருகிறது.எப்படிப்பட்ட பிற்போக்கு தனமாயினும் அது எங்கிருந்து வந்தாலும் மிகவும் இயல்பாக அதன் ஒரு பகுதியாக இணைந்து கொள்வதன் மூலம்தான் பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.கோத்திரம் மீறி காதலிப்பது தவறு என்று பார்ப்பனியமும்-பார்ப்பனர்களும்-கூறினாலும் இதை இவர்கள் என்றுமே கடைபிடித்ததில்லை. தமது சுகபோகத்திற்காக உறவுமுறைகளை மீறி திருமண உறவு வைத்துக்கொள்வது பார்ப்பனர்களுக்கு கைவந்தக்கலை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தில்லை தீட்சித பார்ப்பனர்கள்.இதனாலேயே இவர்கள் ஏனைய பார்ப்பனர்களை விட தாங்களே உயர்வானவர்கள்! என்று கூறிக்கொண்டு தில்லையின் எல்லைக்கு வெளியே திருமண உறவை வைத்துக்கொள்வதில்லை.இதன் காரணமாக அண்ணன்,தங்கை என்று கூட பாராமல் தங்களுக்குள்ளாகவே பல நூற்றாண்டுகளாக திருமண உறவு கொள்வதால், ஆரோக்கிய மற்ற சந்ததியினர் பிறந்தாலும், இதனால் இவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனாலும், இந்த மூடர்கள் இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

கடலைத்தாண்டுபவன்பார்ப்பானே அல்ல என்று மனுதர்மத்தில் எழுதிவைத்துள்ள பார்ப்பனக்கும்பல் தான் அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்து வருகிறதுபார்ப்பனர்களும், ஆதிக்கசாதியினரும் தாம் எழுதிவைத்துள்ள சாதிய சட்டங்களை என்றுமே மதித்ததில்லை.இவற்றை கீழ்சாதிகள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் அன்று முதல் இன்று வரை வன்முறை மூலம் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.

ஆகவே பார்ப்பனியத்தின்சாதியத்தின்லட்சியமே உழைப்பாளர்களிடம் இருந்து உழைப்பின் பலன்களை அதாவது சமூக செல்வத்தை அபகரிப்பதுதான்.இதனால் தான் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அராபியர்கள்,மங்கோலியர்கள்,அய்ரோப்பியர்கள் ஆகிய அனைவரையும் வரவழைத்து,வரவேற்று,ஆதரித்து,காட்டிக்கொடுத்து, தமது வாழ்வை அன்று முதல் இன்று வரை தக்கவைத்து கொள்கின்றனர்.இன்றைய மறுகாலனியாக்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமது சுகபோக வாழ்வை மேலும் உத்தரவாதப் படுத்திக்கொண்டுள்ளனர்.பார்ப்பனக்கும்பல் காலத்திற்கு ஏற்ப எல்லாவித பிற்போக்கு தனங்களோடும் ஒன்று கலந்துவிடுவதும்,இந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்து உருவாகும் முற்போக்கு சிந்தனை, செயல்பாடுகளில் ஊடுருவி அவற்றை குலைப்பதும், ஆதிக்கசாதிகளை பயன்படுத்தி அவற்றை அழித்துவிடும் செயலையும் எப்போதுமே செய்து வருகிறது.

இப்படித்தான் பவுத்தத்தையும்,சமணத்தையும்,வள்ளலாரையும் சீரழித்தனர், அழித்தொழித்தனர்.பார்ப்பனர்களின் இந்த நயவஞ்சகமான நடைமுறையை உடனடியாக புரிந்து கொண்டு தம்மை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பார்ப்பனியத்தின் அடியாட்களான ஜாட்,வன்னியர்,தேவர் போன்ற சாதிகள் தங்களது சாதிப்பெருமையை காப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை ஈவிரக்கமின்றி ஆண்டுதோறும் காவுகொள்கின்றனர்.இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் பார்ப்பனியத்தை மீறுகின்றவர்களை,மீற நினைப்பவர்களை பீதியூட்டி பார்ப்பனியத்தை பாதுகாத்து கொள்ளும் அதே நேரத்தில்,இன்னொரு பக்கம் ஆட்சியாளர்கள் மூலம் ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு சட்டபூர்வ பாதுபாப்பையும் எற்படுத்திக்கொள்கின்றனர்.பார்ப்பனியம் சாதிக்கொரு நீதியையும்,இழிவையுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதை கடைபிடிப்பவர்களும் அப்படிப்பட்டவர்களாகவே மாறிவிடுகின்றனர்.

தமது வீடுகளிலும் கிராமத்திலும் தீண்டாமையை கடைபிடிக்கிற ஆதிக்கசாதிகள் ரயில்களிலும், பேருந்துகளிலும் அதை கடைபிடிப்பதில்லை. 
தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் சாப்பிட மறுக்கும் இவர்கள் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் வேலை செய்யும் நகர உணவகங்களில் சாப்பிட  மறுப்பதில்லைசாதிமறுப்பு திருமணங்களின் மூலம் ஏற்படும் ரத்தக்கலப்பை தடுக்க நினைக்கும் இவர்கள் ரத்தவங்கிகளில் ரத்தம் பெறுவதை மறுப்பதில்லை.கிராமப்புற கோவில்களில் தாழத்தப்பட்டோர் நுழைவதை தடுக்கும் இவர்கள், நகர கோவில்களில் அதை செய்வதில்லை, அங்கு தாழ்த்தப்பட்டோர் நுழைவதால் நாங்கள் அங்கு வரமாட்டோம் என்று கூறுவதுமில்லை.தம்மை மேல்சாதி என்று கருதிக்கொள்ளும் அனைவரும் இப்படித்தான் நேர்மையற்றவர்களாகவும், இழிகுணங்களின் இருப்பிடமாகவும், முரண்பாடுகளின் மூட்டைகளாகவும், இரட்டை வேடதாரிகளாகவுமே வாழ்கின்றனர்.

சாதியும், தீண்டாமையும் இறைவனால் படைக்கப்பட்டது . அதனால் அது புனிதமானது என்று கருதுவதற்குரிய அம்சங்கள் அனைத்தும் இல்லாது ஒழிந்துவிட்டது. இப்போது அது சுரண்டல். அடக்குமுறை, பாசிசம் ஆகியவற்றின் அப்பட்டமான வடிவமாகவும் ஏகாதிபத்தியம், மறுகாலனியாக்கம் ஆகியவற்றின் உற்றத் தோழனாகவும், அதன் பிரிக்கமுடியாதஅங்கமாகவும் திகழ்கிறதுஆகவே ஆதிக்க சாதிகளின்கவுரவக் கொலைகளும்,மறுகாலனியாக்கத்தை ஆதரித்துக்கொண்டேகவுரவக்கொலைகளைத் தடுக்க வேண்டும் என்ற கூப்பாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இவைகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.




பார்ப்பனிய பிற்போக்கு பண்பாட்டையும், ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டையும் இவற்றிற்கான சமூக அடிப்படையையும் எதிர்த்து முறியடிப்பதன் மூலம்தான் இந்தியாவில் நடைபெறும்கவுரவக்கொலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அநீதிகளையுமம் நாம் முறியடித்து வெற்றிபெற முடியும். இதற்கு நாம் சாதி மறுப்பு காதல், கோத்திரம் மீறிய காதல், அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வு ஆகியவைகள் பற்றியும் இவைகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும், இவைகள் சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவுகின்றனவா? அல்லது கேடுவிளைவிக்கின்றனவா? என்பதைப் பற்றி நாம் தரப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இவைகளில் எவற்றை நாம் ஆதரிக்க வேண்டும் எவற்றை எதிர்க்க வேண்டும் என்பதையும், இவற்றைத் தடுப்பதற்கு எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும். இப்படி அல்லாமல் இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று கூறுவது அயோக்கியத்தனம்! இதை ஏற்பது மூடத்தனம்!
-
தொடரும்

குறிப்பு:20.07.10 அன்று சூறாவளியில் வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீள்பிரசுரம் செய்யப்படிகிறது.



தொடர்புடைய கட்டுரை