கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பும்,பின்பும்
தனியார் ஆங்கிலப்பள்ளிகளின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ,நகரங்கள்,கிராமங்கள்
வரை ஒவ்வொரு சந்து,பொந்துகளிலும் நமது கண்களும்,செவிப்பறைகளும் கிழிபடும் அளவுக்கு
கொட்டிக்கிடக்கின்றன.இந்தக் களேபரங்கள் ,சந்தைக் கூச்சல்களுக்கிடையே இவைகளுக்கு எதிரான
சில குரல்களும் கேட்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் கடந்த 07.06.2014 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம்
நகரில் கல்வி தனியார் மய எதிர்ப்பு மாநாட்டை, மகஇக குழுமத்தின் ஓர் அங்கமான மனித உரிமை
பாதுகாப்பு மையம் நடத்தியது.இதனோடு கடந்த மாதம் விருத்தாசலம் வட்டாரத்தில் உள்ள பல
கிராமங்களில் தமிழ் வழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்ற பிரச்சாரத்தையும் நடத்தியுள்ளனர்.
இதைப்பற்றியச் செய்தியை இக்குழும இணையதளமான வினவு கடந்த 11.04.2014 அன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்வழிகல்வியின் அவசியத்தையும், கல்வியில் தனியார்மயத்தை எதிர்த்தும்
பிரச்சாரம் செய்யும் மகஇக குழுமம் தமது குழும உறுப்பினர்களின் குடும்ப பிள்ளைகளை தனியார்
ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பதை அம்பலப்படுத்தி, ”தமிழ்வழிக்கல்வியும் மகஇகவுக்கு
பிழைப்புக்கான சாதனமே! “ என்றக் கட்டுரையை கீற்று மற்றும் சூறாவளி இணையதளத்தில் நாங்கள்
வெளியிட்டிருந்தோம்.
அவர்களின் கல்வி தனியார் எதிர்ப்பு மாநாட்டிற்கு பிறகாவது தமது
பிள்ளைகளை அவர்கள் அரசுப்பள்ளிகளில், தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள் என்று நாங்கள்
நம்பினோம்.
எம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதைப் போன்ற
தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டு செய்தியை வினவு
இணையதளம் கடந்த 11.06.2014 அன்று கல்வி உரிமை மாநாடு சாதித்தது என்ன? என்றத் தலைப்பில்
ஆரவாரமாக வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில்
இருந்து தமது பிள்ளைகளை அரசுப்பள்ளியில், அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துள்ளதாகவும்
, இதுவே மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனோடு இவ்வமைப்பினர் மாநாட்டிற்காக வெளியிட்ட துண்டு பிரசுரம்
தோற்றத்தில் விஞ்ஞான பூர்வமாகவும்,உணர்ச்சி பூர்வமாகவும் அமைந்திருந்தது.
·“அரசுப்பள்ளிக்காக போராடாமல் விட்டில் பூச்சிகளாய்
தனியார் பள்ளிகளை நாடுவது ஏன்?”
·“ காசுக்கான வேசியும், கட்டிய மனைவியும் ஒன்றா?
அரசுப்பள்ளிகளோடு கட்டண கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை ஒப்பிடுவதா?”
·” ஆங்கில வழியில் படித்துவிட்டா திருவள்ளுவர்
1330 குறல் படைத்தார்?”
ஆகிய முழக்கங்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக அமைந்திருந்தது
.
இவர்களின் கல்வி தனியார்மய எதிர்ப்பு, தாய்மொழிக் கல்வியின்
அவசியம் குறித்த பிரச்சாரத்தை கேட்டு எத்துனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்
தாய்மொழியில் படிக்க வைக்கப் போகிறார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்பதை வினவு
கட்டுரையை பார்க்கும் போதே நமக்கும் புலப்படுகிறது.
மாநாடு, பேரணி , பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதால் மட்டுமே
தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை மக்களிடையே உணர்த்திவிட முடியும் என்கிற அளவிற்கு நமது
சமூகம் விழிப்புணர்வு படைத்த சமூகம் அல்ல.
சமூகத்தில் – பொருளாதாரத்தில் மேல்நிலையில், மேல்சாதியில் உள்ளவர்கள்
எதை கடைபிடிக்கிறார்களோ அதை, அது சரியா? தவறா? என்பதை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்,
அதை அப்படியே பின்பற்றுவதுதான் வாழ்வில் முன்னேறுவதற்கான சிறந்த பாதை எனக் கருதும்
சமூகம் இது.
ஒரு காலத்தில் கல்வி மற்றும் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை
வர்ணதர்மத்தின் மூலமாக சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக்கி வைத்திருந்தனர்.ஆயிரமாயிரம்
ஆண்டுகளாக யார் இந்த நிலைக்கு தம்மை ஆளாக்கி வைத்திருந்தனரோ அவர்கள் கடைபிடித்த வாழ்வியல்
முறையை அடைவதும்,பின்பற்றுவதுமே தமது வாழ்வின் இலக்காக கொண்டுள்ளவர்களை பெரும்பான்மையாக
கொண்ட சமூகம் இது.
வர்ண தர்மத்தால் இன்றளவும் நசுக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களின்
வாழ்வியல் இலக்கும் பார்ப்பனியமே ஆகும்.
இதன் தவிர்க்கவியலாத அங்கம்தான் ஆங்கில கல்வி மோகம். சமூகத்தில்
கேடுகெட்ட சிந்தனாமுறையை தூண்டிவிடும், இதன்மூலம் வர்ணாசிரம வாழ்வியலை காலத்திற்கு
ஏற்ப உயர்த்தி பிடிப்பவைகள்தான் தனியார் ஆங்கிலப்பள்ளிகள்.
அன்று கல்வியையே தர மறுத்ததும், இன்று ஆங்கில மோகத்தை ஊட்டுவதும்
ஒரே நோக்கத்திற்காகத்தான் . சமூகத்தின் மேல்நிலையில் உள்ளவர்கள் தமது சுகமான சுகவாழ்வை
தக்க வைத்துக்கொள்வதுதான் அது.
எனவேதான் இவைகளைக்கு எதிராக போராடுபவர்கள், வெறுமனே வாய்வீச்சாளர்களாக இருந்தால் மட்டும் போதாது.
அவர்கள் தாம் பிறர்க்கு உபதேசிப்பதை தமது சொந்த வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்.தந்தை
பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தாம் சமூகத்திற்கு எதை போதித்தார்களோ அதை தமது வாழ்விலும்
கடைபிடித்தனர்.அதனால் தான் இன்றுவரை அவர்கள் நமது வாழ்வின் வழிகாட்டிகளாக திகழ்கிறார்கள்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எதை மக்களுக்கு போதித்தனரோ,
எதற்கு எதிராக தமது வாழ் நாள் முழுக்க போரிட்டனரோ அவைகளை அவர்களின் வாரிசுகளாக இன்றைய
நிலையில் தம்மை கூறிக்கொள்வோர், அவற்றை தமது வாழ்வில் கடைபிடிக்காமல் மேடைக்கு ஒன்றும்
, குடும்பத்தில் வேறொன்றுமாக இரட்டை வாழ்க்கை வாழ்வதால் பார்ப்பனிய சக்திகள் இப்போதைய
நிலையில் வலிமைப்பெற்று வருகின்றன.
கல்வி தனியார் மயத்தை எதிர்த்தும், தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை
வலியுறுத்தியும் விண்ணுக்கும் , மண்ணுக்கும் எகிறிக்குதிக்கும் மகஇக குழும உறுப்பினர்களோ,
அவற்றை தமது வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பது
விருதை மாநாட்டுக்கு முன்பு மட்டுமல்ல, மாநாட்டிற்கு
பின்பும் மாறாத உண்மையாய் இருப்பதால் இம்மாநாடு தாய்மொழிக்கல்வியின் நலன்களுக்கு எதிராகவே
அமையும் என்பதை வரலாறு நிரூபிக்கும்.
விருதை மாநாட்டின் சாதனையாக தமது அமைப்பின் நிர்வாகிகள் அரசுப்பள்ளியில்,
அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், தமிழ் வழியில் தமது பிள்ளைகளை சேர்த்திருப்பதாக அப்பட்டமாக
புளுகியிருக்கிறது வினவு.
மகஇக குழும நிர்வாகிகளில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில
ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின்
செயலர் செந்தாமரை கந்தன் ஆகிய இருவரும் தமது பிள்ளைகளை தனியார் ஆங்கிலப்பள்ளியில் இருந்து
அரசு உதவி பெறும் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் பள்ளிக்கு மாற்றியிருக்கிறார்கள்
என்பது உண்மைதான்.இதன் மூலம் தாங்கள் எப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்கள் என்பதை அவர்கள்
நிரூபித்துள்ளனர்.
டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவிபெறும் பள்ளி தமிழ்வழியில் பயிலும்
மாணவர்களைக் கொண்டது மட்டுமல்ல, அதே வளாகத்தில்,
அதே நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறாத ஆங்கில வழி தனியார் பள்ளியும் செயல்படுகிறது.
மகஇக குழும உறுப்பினர்கள் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி பிரிவில்தான் சேர்த்துள்ளனர். இவர்களின்
ஏனைய நிர்வாகிகளோ தமது பிள்ளைகளை சென்ற ஆண்டைப் போன்றே நடப்பாண்டிலும் தனியார் ஆங்கிலப்பள்ளிகளில்
தான் படிப்பை தொடரவைத்துள்ளார்கள்.
அரசுப்பள்ளியில், தாய்மொழியில் பிள்ளைகளை படிக்க வையுங்கள் என்று
ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதது மட்டுமல்ல, தனியார் ஆங்கில பள்ளியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளி என்ற போர்வையில் ஆங்கில வழியிலேயே
தமது பிள்ளைகளை சேர்த்துவிட்டு சமூகத்தை ஏய்க்கும்
செயலைச் சிறிதும் உறுத்தல் இன்றி செய்துள்ளனர். இவர்களின் இந்த செயல் இழிவும், கேவலமும்
நிறைந்ததாகும்.
ஊருக்கு உபதேசிப்பதை தமது வாழ்வில் கடைபிடிக்காதவர்கள் இழிவான
இச்சமூக அமைப்பை பாதுகாக்கும் பிழைப்புவாதிகள் என்பதுதான் எமது நிலைபாடு.
தமது பிள்ளைகளை தாய்மொழியில் , அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்காத
இவர்களின் பிரச்சாரம் நடைமுறைக்கானது அல்ல. அது இவர்களின் பிழைப்புக்கானதே ஆகும்.
தாம் சொல்வதற்கு நேர்மையாக நடந்து கொள்ளாத இரட்டை வேடதாரிகளான
இவர்களை பார்த்து எவரும் அரசுப்பள்ளிகளில்
, தாய்மொழியில் தமது பிள்ளைகளை சேர்க்கப்போவதில்லை.
இவர்கள் மட்டுமல்ல இவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய
பெரும்பான்மையினரும் தமது வாரிசுகளை தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் படிக்க வைப்பவர்களாத்தான்
உள்ளனர்.
நிலவுகிற சமூகத்தில் ஆட்சியாளர்களுக்கு தேவையான பொய், பித்தலாட்டம்,
நேர்மையின்மை உட்பட அனைத்து அவசியமான திறமைகளையும் தாங்கள் எட்டிப்பிடித்துவிட்டோம்
என்பதை இம்மாநாட்டின் மூலம் சமூகத்திற்கு இவர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே இவர்கள் விரைவிலேயே
பெரும் திரளினராக பொங்கி பெருகி தமிழகத்தின் ஆம் ஆத்மியாக ஆட்சியை கைப்பற்றவும் கூடும்…..!
கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள்,ஆசிரியர்கள்,நூற்றுக்கும் மேற்பட்டபட்டதாரிகள் உள்ளனர்.2006 தேசியநெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும்,மேற்புறம்பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால்,தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது
இதனால் தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக் கட்டிடம் கட்டித்தருமாறு மக்கள்கோரினர். ஆனால் அரசுஅதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. இறுதியாக சென்ற ஆண்டு ஊருக்கு அருகே உள்ள அய்யனார் கோவில் தரிசுநிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மக்களின் இக்கோரிக்கையை ஆதிக்கச்சாதிவெறியர்கள் எதிர்த்தனர்.மக்கள் போராடியப்பிறகு ஆதிதிராவிடநலத்துறை மூலம, கோவில் தரிசுநிலத்தில் 20 செண்ட் இடத்தை அறநிலையத் துறையிடமிருந்து விலைக்கு வாங்கி பள்ளிக்கட்டிடம் கட்டுவதென, மாவட்டஆட்சியர் மக்களிடம் வாக்குறுதி தந்தார். அதன்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலமதிப்பீடு பெற்றுத்தரப்பட்டது. இந்த நிலமதிப்பீட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்டவருவாய்துறை அலுவலர் ஆகியோரும் ஏற்றுக்கொண்டு, அதை இந்து அறநிலையதுறைக்கு அனுப்பிவைத்தனர் .இந்து அறநிலையத்துறை,பத்திரப்பதிவு துறை மதிப்பீட்டை ஏற்கமுடியாது என்றும், சந்தை மதிப்பீட்டின் படி தான் நிலம் விற்பனைக்கு தரமுடியும் என்றும் கூறி ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக, சட்டத்துக்கு புறம்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்தது.இதனால் இம்முறையும் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் இல்லாததால் 200மாணவர்களின் படிப்பு முற்றாக பாழடிக்கப்பட்டுவிட்டது.ஐம்பது குழந்தைகள் மட்டுமே அமரக்கூடிய அங்கன்வாடிக் கட்டிடத்தில், மேலும் 200 மாணவர்களுக்கும் மதிய உணவு மட்டும் தரப்பட்டது. ஐந்து ஆண்டுகளாய் மக்கள் மனுக்கள்,உண்ணாவிரதம்,பிள்ளைகளை மதிய உணவு வாங்காமல் நிறுத்துதல்,தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவிக்கும் போதெல்லாம்,மக்களை அதிகாரிகள் தமது வெற்று வாக்குறுதிகள் மூலமே ஏமாற்றி வந்துள்ளனர். பல ஆண்டுகளாய், பல வழிகளில் போராடியும் தீர்வு ஏதும் கிடைக்காததால் மக்கள் சோர்ந்து போனார்கள். இதனால் ஆண்டுக்கு, ஆண்டு போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு குறைந்து வந்தது.ஒரளவிற்கு வசதி உள்ளோர் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலும், வேறு சிலர் வேப்பூர் அரசு பள்ளியிலும் சேர்த்தனர். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சிறுநெசலூர் தொடக்கப்பள்ளியை, ஆதிதிராவிடர் நலத்துறையோ தமது பதிவேடுகளில் மட்டும் ஆரோக்கியமாக உயிர் வாழ வைத்து,அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தது .மேற்கண்ட தமது செயலின் மூலம் இனி சிறுநெசலூரில் பள்ளிகூடமே வராது என்ற அவநம்பிக்கையை மக்களிடையே விதைத்தது.
இப்படிப்பட்ட சூழலில், தான் இந்த அநீதியைக் கண்டு சகிக்க முடியாத கல்வித்துறை ஊழியர் ஒருவரின் மனசாட்சி, விருத்தாசலம் வட்டார விசாயிகள் விடுதலை முன்னணிக்கு இத்தகவலை கொண்டுவந்து சேர்த்தது. இச்செய்தியை கேட்டு ஒருகனம் அதிர்ந்து போன தோழர்கள்,மறு கனமே களத்தில் இறங்கினர் . சிறுநெசலூர் சென்று மக்கள் இடையே தகவல்களை சேகரித்தனர் . தாம்சேகரித்த தகவல்களை ஆய்வு செய்து, பிரச்சனைக்கான தீர்வை தீர்மானித்தனர். ஊரில் உள்ள முன்னணியாளர்களை அடையாளம் கண்டு,அவர்களோடு உரையாடி இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையை விளக்கினர். ஆலிச்சிக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு, அதற்கு எதிராக மக்களை திரட்டி தாம் நடத்திய போராட்டம், ஆகியவற்றை முன்னணியாளர்களுக்கு விளக்கி,மாபெரும் மக்கள் சக்தி மூலம் மட்டுமே நாம் நமது கோரிக்கையில் வெற்றி பெற முடியும் என்பதை விளக்கி,புரியவைத்து ஏற்க வைத்தனர்.விவிமு-வின் நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி நாளிதழ்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த முன்னணியாளர்கள், விவிமு- வின் வழிகாட்டுதலை படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மூலம் ஒரு சில தினங்களில் இளைஞர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, அவர்களும் ஏற்கும் வகையில் தீர்வு முன்வைக்கப்பட்டது.முன்னணியாளர்கள், இளைஞர்கள் நம்பிக்கை அடைந்தவுடன்,உடனடியாக போராட்டக்குழு அமைக்கப்பட்டது. போராட்டக்குழு கூட்டத்தில் ஐந்தாண்டு காலப் போராட்டம்,அதில் கிடைத்த படிப்பினைகள், அதற்கான காரணங்கள், ஆகியவற்றை விவிமு செயளர் விளக்கி புதியபோராட்ட முறையை கையாள வேண்டியதின் தேவையை, அவசியத்தை புரியவைத்தார்.அதன் படி விவிமு முன்மொழிந்த, அரசு அதிகாரிகள் மூடியப் பள்ளியை நாம் திறப்போம்! அடிக்கல் நாட்டுவிழா! என்றப் போராட்டம், போராட்ட குழுவில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது .இப்போராட்டத்தை 10.06.2011 அன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மறு நாளே இம் முடிவு கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் கூட்டப்பட்ட ஊர்கூட்டத்தில் பிரச்சனைக்கான தீர்வு பற்றி விவாதிக்கப்பட்ட்து.மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தந்து, நம்பிக்கை ஊட்டி,மக்களிடம் போராட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மறு நாளே விளக்கப்பிரசுரம் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே வினியோகித்து, பரப்புரை செய்யப்பட்டது .சுவரொட்டி தயாரிக்கப்பட்டுபோராட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் சிறுநெசலூர்,வேப்பூர்,விருத்தாசலம்,கடலூர் ஆகிய ஊர்களில் பரவலாக ஒட்டப்பட்டது.விளம்பரத்தட்டி தயாரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்ற இடத்திலும், வேப்பூர் பேருந்து நிலையத்திலும் வைக்கப்பட்டது.சிறுநெசலூரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டங்களில், தமது எழுச்சி மிக்க உரையின் மூலம் மக்களை உணர்வூட்டினார்விவிமு செயலர்.இதன் காரணமாக ஐந்தாண்டுகால தயக்கம்,உற்சாகமின்மை ஆகியவை மக்களிடையே படிப்படியாக குறைந்து போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது.விவிமு தோழர்களின் தன்னலமற்ற உழைப்பு,அர்ப்பணிப்பு உணர்வு,மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தமது சொந்த பாதிப்பாக உணர்ந்து,மக்களின் உணர்வோடு ஐக்கியமாகியது ஆகியவை, இதற்கு முன்னர் இக்கிராம மக்களிடையே விவிமு தோழர்களுக்கு அறிமுகம் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அவர்களை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.
இவ்வளவு நடவடிக்கைகள்,செயல்பாடுகளுக்கு பின்னரும் கூட அரசுத்தரப்பில் இருந்து பிரச்சனையை தீர்ப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளைப் போலவே இப்போதும் மக்களின் போராட்டம் பிசு,பிசுத்துவிடும் என்று அரசு அதிகாரிகள் இருமாந்திருந்தனர்.தமது இடத்தில்! கிராம மக்கள் அத்துமீறி நுழைந்தால்,நடவடிக்கை எடுக்குமாறு இந்து அறநிலையத்துறை, போலீசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.இக்கடிதத்தை காட்டி முன்னணியாளர்களை மிரட்டியது போலீசு! தமது கையாட்கள் மூலம் மக்களிடையே கைது,தடியடி,வழக்கு,சிறை என பயபீதியூட்டியது.இவை அனைத்திற்கும் எதிராக தமது போர்க்குணமான பரப்புரை மற்றும் நுட்பமான தமது செயல்பாடுகள் மூலம் போரட்டக்குழு பதிலடிக்கொடுத்தது.
போராட்டத்திற்கு முந்தைய நாள் 09.06.2011 மாலை 07 மணியளவில் விருத்தாசலம் வட்டாட்சியர்,தனி வட்டாட்சியர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஊருக்குள் நுழைந்து அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிடுவது என்ற போர்வையில் மக்களின் தயார் நிலையை வேவு பார்த்தது.தமக்கு அருகில் நின்ற மக்களிடம் “அங்கன்வாடி இடம் தான் வசதியாக உள்ளதே! பின் எதற்காக பிரச்சனை செய்கிறீர்கள்” என வட்டாட்சியர் திமிர்த்தனமாக மக்களிடம் பேசிவிட்டு, நெடுஞ்சாலைக்கு மறுபுறம் உள்ள, மூடப்பட்ட பள்ளியை பார்வையிடச் சென்றார்.இதைக் கேள்விப் பட்ட போராட்டக்குழுவினர், வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரை சந்தித்து, தமது ஐந்தாண்டுகால போராட்டத்தை பற்றி விளக்கிக் கூறினர்.இதைக் கேட்ட வட்டாட்சியர் ஐந்தாண்டுகளாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பிரச்சனை ஏதும் இன்றி விட்டுக்கொடுத்ததைப் போன்று இம்முறையும் தனக்காக விட்டுக்கொடுக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் கோரினார்.இப்போது இடைமறித்த விவிமு செயலர் கடந்த ஐந்தாண்டுகளாய் நாங்கள் ஏமாந்தது போதும். இனியும் நாங்கள் அதிகாரிகளின் வெற்றுவாக்குறுதிகளை நம்பி எமது போராட்டத்தை கைவிட தாயாரில்லை. உங்களை நாங்கள் நம்பவேண்டுமானால், பள்ளி திறப்பு நாளான 15.06.2011 அன்றைக்குள் கட்டிடம் கட்டுவதற்கான இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தரமுடியமா? என்று கேட்கும் போதே, இடைமறித்த வட்டாட்சியர் ”அது தன்னால் முடியாது”, என்று திட்டவட்டமாக கூறினார்.”இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தர உங்களால் முடியாது என்றால், எங்களால் போராட்டத்தை கைவிடவும் முடியாது.நாங்கள் திட்டமிட்டபடி போராடுவோம்.நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, எங்களை கைது செய்துகொள்ளுங்கள்”, என்றார் விவிமு செயலர்.இதனால் ஆத்திரம் அடைந்த வட்டாட்சியர் “என்ன நீ எங்கிட்ட கை நீட்டி, நீட்டி பேசர?” என்றும் ”லூஸ் டாக் பன்ற”,என்றும் வாய்கொழுப்பெடுத்து பேசினார்.இதற்கு பதில் தந்த விவிமு செயலர் ”நாங்கள் என்ன உங்களுக்கு அடிமைகளா? கைநீட்டி பேசாமல் வேற எத நீட்டி பேச சொல்ர? உனக்குமட்டுந்தான ஆங்கிலத்தில் திட்டத்தெரியுமா? அது எங்களுக்கும் தெரியும்.யார் லூஸ் டாக்ஸ் பன்றது? ஏய்யா, நீ அதிகாரின்னு,நாங்க மரியாத கொடுத்து பேசுனா நீ வாய்க்கு வந்தபடியேல்லாம் பேசர?இடியட், நான்சென்ஸ் இனியும் நீ இங்கு நின்ன உருப்படியா போய்சேர மாட்ட. ஒழுங்கா இங்கருந்து ஓடிப்போயா” ,என்று கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார்.இதனால் உற்சாகம் அடைந்த இளைஞர்கள் தமது பங்கிற்கு வட்டாட்சியருக்கு அர்ச்சனை செய்தனர்.இவை அனைத்தையும் தனது மடியில் கட்டிக்கொண்ட வட்டாட்சியர் ”தன்னை மாவட்ட ஆட்சியர் தான் அனுப்பினார்,என்னையா திட்டுறீங்க உங்களை நான் பார்த்துகிறேன்” என்று சொல்லிக்கொண்டே பின்னங்கால் பிடரியில் பட தனது குழுவினருடன் ஓட்டம் பிடித்தார்.
உடனடியாக இது பற்றி போராட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் இருந்து நாளை போராட்டத்தின் போது போலிசை பெருமளவில் குவிக்க வாய்ப்புள்ளது.ஆகவே நாளை போராட்டத்தின் போது நாம் போட தீர்மானித்திருந்த கொட்டகையை, இன்று இரவே போட்டுவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.இம்முடிவின் படி கொட்டகை அமைப்பதற்கான பொருட்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் போராட்டக்குழு தலைமையிலான 50 பேர் கொண்ட குழு கொட்டகை போடும் இடத்திற்கு விரைந்தது.இதை தமது கையாட்கள் மூலம் தெரிந்து கொண்ட போலிசு கொட்டகை போடும் முயற்சியை தடுத்தது.இப்போது கொட்டகை போட முடியாது என்பதை புரிந்து கொண்ட போராட்டக்குழு தமது முயற்சியை கைவிட்டு திட்டமிட்ட படி போராட்டத்தை நாளையே செய்வது என முடிவு செய்து பின் வாங்கியது.10.06.2011 பொழுது விடிந்ததும் மக்களை திரட்டும் பணியில் போராட்டக்குழு தீவிரமாக இறங்கி செயல்பட்டது.காலை 09.30 மணியளவில் ஊரின் நடுப்பகுதியில் கூடிய 500 க்கும் மேற்பட்ட மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் விவிமு செயலர்.விவிமு தோழர்களின் உணர்ச்சிமிக்க,விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலம் தனது இலக்கை நோக்கி விரைவாய் முன்னேறியது.
மக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருவார்கள்.அப்போது அவர்களை,பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட திடலுக்குள் நுழைவதை தடுத்து கைது செய்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு போலிசு காத்திருந்தது.போலிசின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஊரின் பின் புற வழியாக ஊர்வலம் வழிநடத்தி செல்லப்பட்டது.ஊர்வலம் தமக்கு பின்புறம் வருவதை கண்ட போலிசு அதை தடுத்து நிறுத்த தனது நடையை விரைவு படுத்தியது.அவர்கள் ஊர்வலத்தை நெருங்குவதற்குள்,கண்ணிமைக்கும் நேரத்தில் திடலுக்குள் நுழைந்து போலிசின் திட்டத்தை முறியடித்தனர் மக்கள். பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட இடத்தில் மக்கள் அமர்ந்து முழக்க மிட்டனர்.இதனால் செய்வதறியாது தவித்த போலிசு முன்னணியாளர்களை கோட்டாட்சியரிடம் பேசுமாறு அழைத்தது.பேச்சு வார்த்தைக்கு என்று தீர்மானிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு கோட்டாட்சியரிடம், பிரச்சனையை தீர்க்கும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே நாங்கள் பேசுவோம்,உங்களிடம் பேசமாட்டோம் என்று கூறிவிட்டு மீண்டும் திடலுக்கு வந்து விட்டனர்.கடுமையான வெய்யலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க சாமியானா பந்தல் வரவழைக்கப்பட்டது.இதைப் போடக்கூடாது, போட்டால் கைது செய்வோம் என்று போலிசு மிரட்டியது.முடிந்தால் செய்து பார் என்று ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் போலிசுக்கு சவால் விட்டனர்.”போலிசு நம்மை மிரட்ட ஆரம்பித்த பின்னர் இனியும் நாம் சும்மா இருக்க முடியாது.உடனடியாக பள்ளிக்கு கொட்டகைப் போடுங்கள்”,என போராட்டக் குழுத் தலைவர் உத்தரவிட்டார்.இதற்காகவே காத்திருந்த மக்கள் துள்ளிக்குதித்து தமது வேலையை தொடங்கினர்.உற்சாகமும்,போர்க்குணமும் கரைபுரண்டு ஓடியது.கொட்டகைப் போடும் முயற்சியை தடுக்க விரைந்த போலிசு மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பின்வாங்கியது.போலிசின், ’கைது செய்வோம்’, என்ற மிரட்டல் மக்களிடையே நகைப்பிற்குரியதாகியது.
திறமையான பந்தல் அமைப்பாளர்களால் சுமார் 10 மணி நேரத்தில் போடப்படும் கொட்டகையை இங்கே வெறுமனே ஒரு மணிநேரத்தில் கட்டி முடித்தனர் மக்கள் .நிலைமையின் தீவிரத்தை தத்தமது உயர் அதிகாரிகளுக்கு போலிசு துணை கண்காணிப்பாளரும், கோட்டாட்சியரும் நேர்முக வர்ணனை செய்தனர்.கொட்டகை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்ததும் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இருவரும் போராட்டக்குழுவிடம்,”மாவட்ட ஆட்சியர் குறிஞ்சிப்பாடியில் மக்கள் குறைதீர்க்கும்! முகாமில் உள்ளதால் அவரால் இங்கு வரமுடியவில்லை, உங்களை அவர் அங்கு அழைத்து வரச்சொன்னார்”,என்று தகவல் தந்தனர்.இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழு மாவட்ட ஆட்சியரை சந்திக்க குறிஞ்சிப்பாடி சென்றனர்.போராட்ட குழுவின் மற்றொரு உறுப்பினரான விவிமு செயலர் கொட்டகை அமைக்கும் பணி முழுமை அடைந்த பின், மக்களை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார்.மாலை 07 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற குழுவினர் ஊர் திரும்பினர்.சூலை 15 க்குள் பள்ளிக்கட்டிடம் கட்ட இடம் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு வாக்குறுதி தந்ததாகவும்,அதுவரை போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்கள்.நீங்கள் உங்கள் வாக்குறுதிப்படி சூலை 15க்குள் உத்தரவு பெற்றுத்தராவிட்டால் சூலை 16 அன்று நாங்கள் கொட்டகை அமைத்த இடத்தில் பள்ளியை நடத்துவோம் என்று போராட்டக்குழுவில் தீர்மானித்தப்படி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் உடனான மேற்கண்ட உரையாடல்,வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் வெற்றிக்கு காரணமான மக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து, அப்போதே ஊரில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
நாங்கள் சிறுநெசலூர் சென்றபோது எங்களை வரவேற்றது அவ்வூரில் எஞ்சிவிடப்பட்டிருந்த அவநம்பிக்கை மட்டுமே! கடந்த ஐந்து ஆண்டுகால போராட்டம், மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து விட்டதால்,அதை மீண்டும் உருவாக்க வேண்டிய மிகக்கடுமையான பணியை,சவாலை விவிமு தோழர்கள் எதிர்கொண்டனர்.கடந்த ஐந்தாண்டுகால போராட்டங்கள், அவற்றின் தன்மை,அதில் இருந்த பலவீன்ங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு,ஒருமாத கால அவகாசத்தில் படிப்படியாக மக்களிடையே நம்பிக்கை உருவாக்கப்பட்டது!
விவிமு செயலரின் போர்க்குணமான,உணர்வூட்டும் உரைகள், தோழர்களின் தன்னலமற்ற அற்பணிப்பு மிக்க உழைப்பு ஆகியவையே தங்களை இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டியதாக மக்கள் போரட்டத்திற்கு முன்னரும் பின்னரும் தெரிவித்தனர்.
மக்களுக்கு நேர்மையை,போர்க்குணத்தை வெளியில் இருந்து யாரும் அவர்களுக்கு வழங்க தேவையில்லை.அது அவர்களின் உழைப்போடும்,உயிரோடும் இரண்டர கலந்துள்ளது.இதை முன்னணியாளர்கள் அடையாளம் கண்டு,அதை தனது அற்பணிப்பு,தியாகம்,போர்க்குணம்,மக்கள் மீதான மாளாக்காதல்,மக்களின் உணர்வை தமது உணர்வாக்கிகொள்ளுதல் ஆகியவற்றை கொண்டு மக்களை அமைப்பாக்கி,நம்பிக்கை ஊட்டி ,தளராமல் வழிநடத்துவது மட்டுமே நமது வேலை.நமது இந்தப்பணிக்கு இறுதி வெற்றித் தேடித்தருபவர்கள் மக்களே! மக்களின் சக்தியே மகத்தானது!
மக்களின் சக்தியை மறுத்து அவர்களை ஆக்க மற்றவர்களாக காட்டி,சித்தரித்து சமூகத்தில் சில கதாநாயகர்களே அனைத்தையும் சாதிப்பதாக ஆளும் வர்க்க கழிசடைகள் காலம்,காலமாக நம்மை ஏய்க்கின்றனர்.
ஆளும்வர்க்கம் தனது வர்க்க நலனை-மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும்-பாதுகாக்க வன்முறை,அடக்குமுறை ஆகியவற்றை மட்டுமே ஆயுதமாக காலம்,காலமாக பயன்படுத்துகிறது! இனியும் பயன்படுத்தும்,ஆனால் தமது சுரண்டலுக்கு எதிராகப் போராடும் உழைப்பாளிகள் மீது பிணத்திற்கு ஒப்பான,உண்ணாவிரதம் போன்றவற்றை காந்தி,அன்னாஹசரே,பாபாராம்தேவ் போன்ற கோமாளிகளை வைத்து,வித்தை காட்டி,இக்கோமாளிகளையே மக்களின் கதாநாயகர்களாகவும் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறது.இதன் மூலம் ஆளும்வர்க்கம் தாம் சாகாவரம் பெற்றுவிடலாம்(அய்யோப் பாவம்) என மனப்பால் குடிக்கிறது
ஊழலை ஒழிக்க திடீரென அவதாரம் எடுத்த அன்னாஹசாரேவின் உண்ணாவிரதம், வெறுமனே நாடகம் என்பதையும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக,தாம் நடத்திய மக்கள் திரள் போராட்டமே, ஊழலை ஒழிப்பதற்கானப் பாதை என்பதையும் நிரூபித்தது,விவசாயிகள் விடுதலை முன்னணியின் அன்றையப் போராட்டம்!
மக்களின்,கல்வி கற்பதற்கான உரிமையை,தனியார் கல்விக் கட்டண கொள்ளையை,சமச்சீர் கல்வியை உண்ணாவிரதம் இருந்தே,வாங்கித்தரப் போவதாக(விலை பேசிகொண்டிருக்கிறார்களா அல்லது பேசி முடித்துவிட்டார்களா? புரோக்கர் கமிசன் எவ்வளவு இது பற்றி நீரா ராடியாவிடம் ஆலோசனை பெற்றார்களா? இதைப்போன்ற விடயங்களுக்கெல்லாம் CBI –யை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!) தற்போது புறப்பட்டுள்ள கோமாளிக் கும்பலின் முகத்திரையை கிழித்து இவைகளை சாதிப்பதற்கான பாதை உண்ணாவிரதம் அல்ல நக்சல்பரி போராளிகள் தலைமையிலான மக்கள்திரள் போரட்டமே என்பதை சிறுநெசலூர் போராட்டத்தின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது விவசாயிகள் விடுதலை முன்னணியின் இன்றையப் போராட்டம்...!