விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சங்ககாலவிவசாயம். Show all posts
Showing posts with label சங்ககாலவிவசாயம். Show all posts

Saturday, 20 August 2011

மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-1





       “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது”,என்பது பழமொழி. இதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்.ஏனென்றால் இது, இப்போதைய விவசாயத்தையும்,விவசாயிகளையும் பற்றிய தகவல் அல்ல என்பதால்! இக்காலத்திய விவசாயத்தை பற்றி பொதுவில் சமூகத்தில் பெரும்பாலோரிடம் அக்கறை இன்மையே நிலவுகிறது.அதே நேரத்தில் விவசாயத்தை பற்றிய மூடநம்பிக்கைகளே வலுவாக காணப்படுகிறது.இந்த மூடநம்பிக்கைகள் முற்றிலும் கற்பனையாக அவர்கள் மூளையில் உருவான ஒன்றல்ல. நிலவுகின்ற உண்மையான இருத்தல் ஒன்றின் தவறான அல்லது திரித்து கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் எழக்கூடிய ஒன்றாகும்.
இந்த அடிப்படையில் தான் இன்றைய விவசாயம் பற்றிய மூடநம்பிக்கைகளும் முளைத்துள்ளன.இவைகள் உண்மை போன்று தோன்றினாலும் முழு உண்மைகள் அல்ல;அரை உண்மைகள். முழு பொய்யை விட அரை உண்மைகள் ஆபத்தானது.இந்த ஆபத்தை பற்றி நமது சமூகத்தில் ஒரு சில தனி நபர் மற்றும் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே கவலை படக் கூடிய ஒன்றாக உள்ளது.எதிர்காலத்தில் நாமும்,நமது சமூகமும் சந்திக்க இருக்கிற, மிகமோசமான அழிவுக்கான மிகத்தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்போதும் கூட நமது சமூகம் அதைப்பற்றிய எந்த அக்கறையும் இன்றி அனைத்தும் மிகச்சரியாக நடப்பதை போன்று, போலியான தோற்றத்துடன் இயங்கிகொண்டிருக்கிறது.இந்த சொரணையற்ற பண்பு தொடர்ந்து நீடிக்க நாம் அனுமதித்தோமானால், எதிர்காலத்தில் எற்படபோகும் அழிவை நாம் தடுக்க நினைத்தாலும் முடியாத சூழல் ஏற்படவாய்புள்ளது.



எனவே இனியாவது நாம்,நமது சிந்தனையையும்,செயலையும் இந்த அழிவை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.இதற்கு இன்றைய விவசாயத்தைப் பற்றியும்,விவசாயிகளைப் பற்றியுமான உண்மையான விவரங்களை விருப்பு,வெருப்பு இன்றி அறிந்து கொள்ள நாம் முற்படவேண்டும்.அதற்கான அடிப்படையான சில விவரங்களை இப்போது நாம் பார்ப்போம்.


1.விவசாய வருவாய்க்கு வரிவிலக்கு.
2.இலவச மின்சாரம்.
3.குறைந்த வட்டிக்கு விவசாயக்கடன்.
4.விவசாயகடன் தள்ளுபடி



இது போன்ற சில அம்சங்கள், நாட்டின் பெரும்பான்மை மக்களிடம், ஏனைய தொழில்களை காட்டிலும், விவசாயத்திற்கு மத்திய,மாநில அரசுகள் கூடுதல் முக்கியத்துவம் தருவதை போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.இந்த அம்சங்கள்தான் விவசாயம் பற்றிய மூடநம்பிக்கைகள் முளைப்பதற்கான அடிப்படைகளாக உள்ளன. இவைகள் உண்மையான நிலையை நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் முட்டுக்கட்டைகள் ஆகிவிடுகின்றன.


*எளிமையான வாழ்க்கை வாழ்வது விவசாயிகளின் இயல்பு. இதைக் காட்டி அவர்கள் 
வறுமையில் உழல்வதாக கூறுவது தவறு. விவசாயிகள் வளமாகவே உள்ளனர்.

*விவசாயிகள் விவசாயத்தில் இருந்து கட்டுபடியாகாத தொழில் என்பதால் 
வெளியேறுகிறார்கள் என்பது உண்மை அல்ல;சமூக வளர்ச்சிக்கு ஏற்ப 
தவிற்கவியலாத ஒரு நிகழ்வாகவே இது நடைபெறுகிறது.



*விவசாயிகள் தற்கொலைகள் என்பதெல்லாம் இட்டுக்கட்டி கூறப்படும் செய்திகள்;இந்த 
தற்கொலைகளுக்கு உண்மையில் வேறு காரணங்கள் உள்ளன.



*நாட்டில் எவ்வளவு தான் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவற்றை பயன்படுத்தி கொண்டு முன்னேறும் ஆற்றல் நமது நாட்டு விவசாயிகளுக்கு இல்லை....என்பன போன்ற அடுக்கடுக்கான தவறான செய்திகளும், குற்றசாட்டுகளும் சமூகத்தில் உலாவருகின்றன.


இப்படியான சிந்தனையும்,கருத்தோட்டமும் நெருக்கடியை தீவிரப்படுத்தவே உதவுகிறது.இது விவசாயத்தின்,விவசாயிகளின் அழிவை மட்டுமல்ல, மொத்தநாட்டின் அழிவையும் பிரதிபலிக்க கூடியதாகும்.விவசாயத்தின் அழிவு,நாட்டின் அழிவாக எற்கமறுப்பவர்கள் கீழ்காணும் புள்ளி விவரங்கள் வேறு எதைக்காட்டுகிறது? என்பதை கூறியாக வேண்டும்.


தமிழ்நாட்டின் மொத்த விளைநிலம் :3.25 கோடியே லட்சம் ஏக்கர்
இதில் பாசன வசதி பெற்ற நிலம் :0.82 லட்சம் ஏக்கர்
புன்செய் நிலம் :0.92 லட்சம் ஏக்கர்
பயன்பாடற்ற நிலம் :1.51கோடியே லட்சம் ஏக்கர்

20 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டு நிலத்தின அளவு :2.02 கோடியே லட்சம் ஏக்கர்
கடந்த 20 ஆண்டுகளில் பயன்பாடற்ற நிலமாக மாற்றப்பட்ட நிலத்தின் அளவு :0.51 லட்சம் ஏக்கர்



இப்போதைய பயன்பாடற்ற மொத்தநிலத்தின் அளவு :2.02 கோடியே லட்சம் ஏக்கர்
ஆண்டுக்கு, ஆண்டு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.அதற்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.ஆனால் இதற்கு நேரெதிராக விளைநிலத்தின் அளவும்,உணவு தானிய உற்பத்தியின் அளவும் குறைந்து கொண்டே வருவதைத்தான் மேலே கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகிறது.ஆனாலும் இன்றளவும் நாட்டின் ஆகபெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வு தரக்கூடிய தொழிலாக இருப்பது விவசாயமே!.



மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை பறித்து, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கும் அநீதிக்கு எதிராக, தமது வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ள நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த அநீதிக்கு எதிரான போராட்டம்தான் மத்திய இந்தியாவில் மாவோயிஸ்டுகள் தலைமையில் நடைபெறுகின்றது.இந்திய வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத வகையில் எழுபது ஆயிரம் போராளிகள் உருவாகும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு மிக்க போராட்டமாக இது உருவேடுத்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ விவசாயிகள் மத்தியில் இது,நிலத்திற்கு கூடுதல் விலை கேட்கும் உணர்வாக மட்டுமே வெளிப்படுகிறது.இதன் வெளிப்பாடுகள்தான் நெடுஞ்சாலைகள் தொடங்கி கிராமப்புற மண்சாலைகள் வரை,பார்க்கும் இடமெல்லாம் விளைநிலங்கள், வீட்டுமனைகள் என்ற அறிவிப்புடன் தரிசுநிலங்களாக கிடக்கின்றன.ரியல் எஸ்டேட் லாபம்கொழிக்கும் மிகப்பெரிய தொழிலாக தமிழகத்தில் மாறியுள்ளது. ரியல் எஸ்டேட் கொள்ளை கும்பல்,வீட்டுமனை என்று சொல்லி விற்கும் இடங்கள் உண்மையில் வீடுகட்டுவதற்காக விற்கப்படுவது இலலை.வாங்குபவர்களில் பெரும்பாலோர் இவற்றை வீடுகட்டும் நோக்கத்திற்காக வாங்க வில்லை.பங்குசந்தை,தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதை போன்று,அதைவிட இரட்டிப்பு ஆதாயம் தரக்கூடியது.என்ற அடிப்படையில் தான் வீட்டுமனைகள் வாங்கப்படுகின்றன.


ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விவசாய உற்பத்திக்கோ, குடியிருப்புக்கோ பயன்படாமல் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுக்கு லாபத்தை அள்ளித்தரும்,சூதாட்டத்திற்கான களமாக திகழ்கிறது.இந்த சமூக விரோத கும்பல் சமூகத்தில், அரசியல்,பொருளாதாரம் ஆகியதுறைகளில் இப்போது செல்வாக்குமிக்கவர்களாகவும் திகழ்கிறார்கள்.இவர்களோடு அரசியல்வாதிகள்,முன்னாள், இன்னாள் அரசுஅதிகாரிகள்,சினிமாக்காரகள் ஆகியோர்,தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, பாதுகாப்பாக நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.இவர்கள் ஒவ்வொரும் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வாங்கி பயன்படுத்தாமல் தரிசாக போட்டு வைத்துள்ளனர்.தாங்கள் வேறு வகையில் சம்பாதிக்கும் பணத்தை,விவசாயத்தில் சம்பாதித்ததாக காட்டி வரிஏய்ப்பு செய்து வருகின்றனர்.அதோடு தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளிலும்.தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் விவசாயகடனாக பெறுகின்றனர்.உண்மையில் இவர்கள்,தான் விவசாய வருவாய்க்கான வரிவிலக்குகளையும்,விவசாய கடன் தள்ளுபடியும் பெறுகின்றனர்! இவர்கள் கொடுக்கும் பொய்யான கணக்குகளின் அடிப்படையில் தான் சராசரி விளைச்சலின் அளவும்,விவசாய லாபத்தின் அளவும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது.
இப்போதைக்கு விளைநிலங்கள் இவர்களுக்கு,மேலே கண்டவகையில் பயன்பட்டுவருவதோடு இவர்களின் நோக்கம் நிறைவடைந்து விடவில்லை.எதிர்காலத்தில் இந்த விளைநிலங்களை உள்நாட்டு நாட்டு,வெளிநாட்டு முதலாளிகளுக்கு கைமாறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இப்போதே சிலர் முதலாளிகளின் பினாமிகளாகவும் இருந்து வருகின்றனர்.
இவைகள் அனைத்துமே, நமது கண்முன்னாலேயே நடந்தாலும்,இவைகள் எதுவுமே தமக்கு தொடர்பில்லாத விவகாரங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.இப்படி இவர்கள் கருதுவதற்கு,இன்றைய ஏகாதிபத்தியசீரழிவு பண்பாடு மற்றும் பார்ப்பனிய பண்பாடு ஆகிய இரண்டும் இணைந்து ஏற்படுத்தும் சிந்தனா முறையும் இதனடிப்படையிலான வாழ்க்கையுமே காரணங்களாக உள்ளன.
ஆகவே நாம் இன்றைய இந்திய,தமிழக விவசாயிகளின் உண்மையான நிலைமையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது”,என்ற காலத்தில் இருந்து தொடங்கினால் தான் மேலே கண்டுள்ள காரணங்களுக்கான அடிப்படைகளையும்,இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.இதை பற்றி நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்....

Tuesday, 6 July 2010

மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.


மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II.
 “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது, என்ற பழமொழி அது தோன்றிய போது நிலவிய உழவுத் தொழிலின் அவலத்தை மட்டுமல்ல,அக்காலசமூக அவலத்தையும் தன்னுள்ளே புதைத்து வைத்துள்ளது.இந்த அவலம் தோன்றுவதற்குரிய சமூக,அரசியல்,பொருளாதார அடிப்படைகளையும்,இந்த அவலத்தை எதிர்த்த அக்காலத்து மக்களின் உணர்வுகளையும்,எண்ணங்களையும் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டிய தவிர்க்கவியலாத தேவையுள்ளது.
        எனென்றால் ஒவ்வொரு சமூகமும் அவற்றின் வளர்ச்சியும்,அவற்றுக்கிடையிலான தொடர்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத வெவ்வேறானவைகள் அல்ல.ஒரு சமூக வளர்ச்சியின் தொடர்ச்சிதான் அடுத்த சமூகமாக உருவெடுக்கிறது.ஆகவே ஒன்று மற்றொன்றின் வாழ்விலும்,வளர்ச்சியிலும் தவிர்க்கவியலாத பாத்திரம் ஆற்றுகிறது.இவைகளைப் பற்றி தெளிவாக வரையறுத்து நாம் புரிந்து கொண்டால்தான் நிலவுகிற சமூகத்தின் அவலங்களையும்,அதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மால் உருவாக்கிகொள்ளமுடியும்.ஆகவே இன்றைய நமது விவசாயத்துறை அவலத்தையும் அதற்கான காரணங்களையும் அதைபற்றி நாம் வாழும் சமூகத்தின் மனப்போக்கையும்,இது எழுவதற்கான காரணங்களையும் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்க,பண்டைய நமது சமூகத்தின் வரலாற்றில் இருந்து தொடங்கி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
        இதுவரை வரலாற்று ஆய்வாளர்கள் தமிழ்சமூகத்தின் வரலாற்றை கி.மு 200 இருந்து கி.பி 250 வரை சங்ககாலம் என வரையறுத்துள்ளனர்.வரலாற்று ஆய்வாளர்கள் தொகுத்துள்ள சங்ககால வரலாற்றில் இருந்து நாம் நாமது தேடலை தொடங்குவது தான் இப்போதைக்கு நமக்குள்ள ஒரே வழியாகும்.
        சங்ககாலம் என்று எடுத்துக்கொண்டால் இக்காலமக்களின் பண்பாடு நாகரிகம் ஆகியவற்றை பற்றி அக்கால இலக்கியங்களில் இருந்து தான் தெளிவுபடுத்திகொள்ள வேண்டியிருக்கிறது.இக்காலத்தில் எழுதப்பட்ட எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவைகள் அக்கால சமூகமக்களின் வாழ்வை பதிவுசெய்துள்ளன. இக்காலம் புராதன பொதுவுடமை சமூகம் வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த காலமாகும்.இச்சமூகத்தின் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே இருந்துள்ளது.இதனால் விவசாயமே சமூகத்தில் மிக உயரிய தொழிலாக மக்களால் போற்றப்பட்டது.வர்க்கசமூகமாக மாறிக்கொண்டிருந்த இக்காலத்தில் இச்சமூகத்திற்கே உரிய ஏற்றதாழ்வுகள் இருந்துள்ளது.சமூகவளர்ச்சியின் விளைவாக பல்வேறு தொழில்கள் தோன்றி இதன் அடிப்படையில் தமிழ்ச் சமூகம் பல  பிரிவுகளாக இருந்துள்ளது.இந்தப்பிரிவுகளுக்கு இடையில் பலஏற்றதாழ்வுகள் இருப்பினும் ஒன்று மற்றொன்றை இழிவாக பார்க்கவில்லை.
ஒரே குடும்பத்தில் பல தொழில்களை செய்பவர்கள் இருந்துள்ளனர் என்பது அன்றைய சமூகத்தின் எதார்த்தமான நிகழ்வாக இருந்துள்ளது.புராதன பொதுவுடைமை சமூகத்தில் சமூக சொத்தாக இருந்த நிலங்கள் மேலை நாடுகளை போன்று தனியுடைமையாக மாறாமல் அதற்கு மாறாக அரசர்களிடம் வேறொரு வடிவில் சமூகசொத்தாக மாற்றப்பட்டது. இதனால் விளைபொருட்களை பங்கிட்டுக் கொள்வதில் ஆளுவோர்க்கும்,உழைப்பாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும் அவைகள் பகை முரண்பாடுகளாக உருவெடுத்துவிடவில்லை.
        தமிழ்ச்சமூகத்தில் வர்க்கவேறுபாடுகள் வளர்ந்து வந்த சூழலில் தான் கி.மு மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சமண,பவுத்த சமய பிரச்சாரகர்கள் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளனர்.இச்சமயங்கள் இரண்டுமே வட இந்தியாவில் பார்ப்பனியம் சமூகத்தில் எற்படுத்திய சகிக்க இயலாத, இழிவான ஏற்ற தாழ்வுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவை.ஒரு மனிதனின் பிறப்பின் அடிப்படையில் தான் அவனின் தொழிலும்,சமூகத்தகுதியும் தீர்மானிக்கப்படுகிறது என்ற பார்ப்பனிய கோட்பாட்டை அறிந்திராத தமிழ்ச் சமூகத்தில் அதற்கு எதிரான கோட்பாடுகளை உடைய சமண,பவுத்த கோட்பாடுகள்,தமிழ் மக்களை பெரிதும் கவரவில்லை.குலச்சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் பார்ப்பனிய கற்பனை கடவுளர்களுக்கு எதிராக கடவுள் மறுப்பு கொள்கையை போதித்த இம்மதக்கோட்பாடுகள், தம்மூதாதையர்களை தமது குலதெய்வங்களாக வணங்கிய தமிழ் மக்களிடம் தேவை அற்ற ஒன்றாகவே இருந்துள்ளது.மேலும் தமிழர்கள் சமயங்களை உருவாக்கிகொள்வதற்கான தேவைகள் சங்ககாலத்தில் உருவாகாததால் தமிழர்கள் சமயமற்றவர்களாகவே வாழ்ந்தனர்.தமிழ்ச்சமூகத்தில் நிலவிய வர்க்க முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக உருவெடுக்காத போதும்,நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வுஎதையும் இச்சமயங்கள் வைக்கவில்லை.இது போன்ற காரணங்களால் சமண,பவுத்த சமயங்கள் தமிழ்ச்சமூகத்தில் செல்வாக்கு பெறமுடியவில்லை.
        சமண,பவுத்த சமயங்களுக்கு பின்னர் தமிழ்ச்சமூகத்தில் ஊடுறுவிய பார்ப்பனியம் அன்றையப் ஆளும்வர்க்கத்தால் ஏற்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.உயிர்வாழ்வதற்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலங்கள் அரசர்களுக்கே சொந்தமாக இருந்ததால் சாதி,தீண்டாமை ஆகிய பார்ப்பனியத்தை கடைபிடிக்க தமிழ்மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.இதன்மூலம் தமிழ்ச்சமூகத்தில் வேறேப்போதும் இல்லாத சுரண்டலும்,ஒடுக்குமுறையும்,இழிவுபடுத்தலும் பெரும்பான்மை மக்களாகிய உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டது.சமூகம் முழுமையும் பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்மக்கள் கூறுபோடப்பட்டனர்.வர்க்கமுரண்பாடுகள் எந்த அளவிற்கு சமூகத்தில் வளரதொடங்கியதோ அந்த அளவிற்கு சொத்துடைமை வர்க்கத்தின் சித்தாந்தமாக பார்ப்பனியம் உருவெடுத்தது.இப்போதுதான் சமண,பவுத்த சமயங்களின் கோட்பாடுகள் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களுக்கு அதாவது பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் சித்தாந்தமாக இவைகள் உருவெடுத்தன.இதே அளவுக்கு வர்க்க சமுதாயத்தின் பாதுகாவலனாகிய அரசு வேறெப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் கருவியாக தன்னை வளர்த்துக்கொண்டது.இச்சூழலின் தேவையை ஒட்டி அக்காலசமூகத்தில் நிலவிய சமூக அநீதிகளுக்கு எதிராகத்தான் திருவள்ளுவரின் திருக்குறல் அமைந்துள்ளது.
        இந்த அடிப்படையில் தான் திருக்குறலில் உள்ள உழவு என்ற அதிகாரத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.உழவுத்தொழிலின் மேன்மையையும், உழவர்களின் மேன்மையையும் திருவள்ளுவர் புகழ்ந்து போற்றுவதில் இருந்தே உழவையும்,உழவனையும் இழிவாக பார்க்கும் கண்ணோட்டம் சமூகத்தில் நிலவியுள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.உழவையும்,உழவனையும் இழிவாகபார்க்கும் கண்ணோட்டத்தை பார்ப்பனிய கோட்பாடுகளே சமூகத்தில் உருவாக்கியது.இந்த வரையறுப்பின் அடிபடையில் தான் சங்ககால தமிழ்ச்சமூகத்தின் பிற்பகுதி சாதிய வெறுபாடுகளால் இழிந்து போனது.
        ஆளுவோரின் சித்தாந்தமாக பார்ப்பனியம் மாறி அது உழவையும்,உழவனையும் இழிவானவைகளாக ஆக்கியது.இதன் நோக்கம் உழைப்பாளிகளிடம் இருந்து உழைப்பின் பலன்களை அபகரிப்பது தான்.அக்காலச்சமூகத்தில் வாழ்வுக்கான ஆதாரமாக உழவுத்தொழிலே விளங்கியதோடு அரசர்களின் செல்வ செழிப்பிற்கான ஊற்றுகண்ணாகவும் விளங்கியது.அதோடு பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தவும்,நிலைப்படுத்தவும் நிலங்களே பார்ப்பனர்களுக்கும்,அரசர்களுக்கும் சிறந்த கருவியாகவும் பயன்பட்டது.இதனால் உழவையும்,உழவனையும் பார்ப்பனியம் இழிவாக ஆக்கிய போதும் அதை மேம்படுத்த வேண்டிய நிர்பந்தமும்,கட்டாயமும் அரசர்களுக்கு இருந்தது.
        நிலங்கள் அனைத்தும் அரசர்களுக்கே சொந்தமாக இருந்தது. அவற்றை தாம் விரும்பிய தனக்கு நம்பகமான ஆட்களிடம் மட்டுமே பயிரிட தந்தனர். இந்த நிலங்களை நம்பியே பெரும்பான்மை மக்கள் வாழ்ந்ததும் அரசர்களின் தேவைகளை,விருப்பங்களை மீறுகிறபோது,மீறுகிறவர்கள் தமது வாழ்க்கைகான ஆதாரத்தை-உழைப்பதற்கான உரிமையை இழக்க வேண்டியதாகியது.ஒவ்வொரு கிராமமும் சுயதேவை உடைய கிராமமாகவும் உழவுத் தொழிலோடு பிற கைத்தொழில்கள் இணக்கமாக இருந்ததும், சமூகத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் அவரவர் சாதியின் அடிப்படையில் வேலை உத்திரவாதம் செய்யப்பட்டு இருந்ததாலும்,யாரும் இதில் இருந்து தப்பிச் சென்று இதற்கு வெளியில் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பில்லை.இதுதான் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே பல்லாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனியம் உயிர்வாழ்வதற்கான அடிப்படையாக இருந்துள்ளது.
        சங்ககால சோழமன்னர்களில் சிறந்தவனாக கருதப்படும் கரிகால் சோழன் காவிரிக்கு கரை எடுத்தததும்,கல்லணை கட்டி உழவுத்தொழிலை மேம்பாடடைய செய்ததும் இதன் அடிப்படையில தான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
        சங்ககாலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியம் தன்னை வலுப்படுத்தி கொண்டு மொத்த சமூகத்தையும் சாதிய சமூகமாக மாற்றியமைத்தது.பார்ப்பனியம் அன்றாட வாழ்ககை முறையாக்கப்பட்டது.உழைப்பாளர்களான சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும்,சொத்துரிமை உட்பட அனைத்து உரிமைகளும் இல்லாதவர்களாகவே ஒடுக்கப்பட்டு இருந்தனர்.இவர்களால் உருவாக்கப்படும் செல்வம் அனைத்தையும் நிலஉடைமையாளர்களே அபகரித்துக்கொண்டு அனுபவித்தனர்.உழைப்பாளிகளோ முழு அடிமைகளாக்கப்பட்டிருந்தனர்.இவர்களுக்கு பார்ப்பனிய இழிவை ஏற்று கொண்டு உயிர்வாழும் உரிமை மட்டுமே தரப்பட்டு இருந்தது.உழைப்பாளர்களின் உழைப்பை முற்றாக அபகரித்து வாழ்ந்த நில உடைமையாளர்களோ செல்வ செழிப்போடு வாழ்ந்தனர்.ஆகவே இச்சமூகத்தில் சூத்திரர்களும்,தாழ்த்தப்பட்டோரும் நிலம்,விளைச்சல் ஆகியவற்றில் எவ்வித உரிமையும் அற்றவர்களாக வைக்கப்பட்டிருந்ததால் இதில் கணக்கு பார்க்க வேண்டிய தேவை எதுவும் அவர்களுக்கு எழவாய்ப்பில்லை.அதே நேரத்தில் நில உடைமையாளர்கள் தாம் விரும்பிய அளவிற்கு மட்டுமே உழைப்பாளர்களுக்கு கூலியாக தந்துள்ளனர்.நில உடைமையாளர்கள் எவ்விடத்திலும் நிலத்திலோ,விளைச்சலிலோ தமது பங்காக உழைப்பெதையும் செலுத்தாத போது இவர்களுக்கு இழப்பு எற்படுவதற்கான அடிப்படைக் காரணம் ஏதும் இல்லை.வெள்ளம்,வறட்சி,போர் ஆகியவற்றால் உழவு தொழிலில் இழப்பு எற்பட்டாலூம் அதுவும் உழைப்பாளர்களின் உழைப்புக்கு ஏற்பட்ட இழப்பே தவிர நில உடைமையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பல்ல. ஆகவே உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது என்ற பழமொழி சங்ககாலத்தில் எழுவதற்கான அடிப்படை ஏதுமில்லை என்பது தெளிவாகிவிடுகிறது!. தொடரும்..................

1.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I!http://suraavali.blogspot.com/2010/06/blog-post_16.html