விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label போர்குணம். Show all posts
Showing posts with label போர்குணம். Show all posts

Wednesday, 19 September 2012

கூடங்குளம்: வெற்றி விரிவாக்கத்தில்....!

இந்தியாவிலிருந்து 1947- ல் வெள்ளை ஆட்சியாளர்கள் வெளியேறியது, காந்தி தலைமையிலான காங்கிரசின் அகிம்சை போராட்டத்தின் விளைவாகத்தான் என்று நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இந்தக் கதையை கூடங்குளம் போராட்டக்குழுவும் நம்புவதில் அதிசயம் ஏதுமில்லை. திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு மட்டுமல்ல, குறுகிய மனப்பான்மை உள்ள அனைவராலும் அப்படியே மறுமொழி ஏதுமில்லாமல் ஏற்கப்படும் தாரகமந்திரமாகி விட்டது இந்தக் கதை.  இந்து மத கடவுளர்களின் கதைகள் எப்படி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதோ அதே  போன்றதுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்ததாக கூறப்படும் கதையுமாகும்.


     
திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவை குறுகிய மனப்பான்மை உடையது என்ற எமது விமர்சனம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் நாங்கள் இப்போது வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை, இப்போராட்டத்தை விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் வளர்த்தெடுத்து நடத்தி வரும் போராட்டக் குழுவையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
     
அணு சக்தி, அணு உலை சம்பந்தமான போராட்டக் குழுவின் கருத்தை, கண்ணோட்டத்தை நாங்கள் குறுகிய மனப்பான்மையிலானது என்று கூறவில்லை. அதன் சமூக கண்ணோட்டத்தைத்தான் குறுகிய மனப்பான்மை உடையது என்று கூறுகிறோம்.
     
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போட்டத்தின் வெற்றி, போராட்ட விரிவாக்கத்தில் தான் அடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தின் விரிவாக்கம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.ஆனால் நமது சமூகமோ ஜனநாயக உணர்வு படைத்த சமூகம் அன்று. இதன் காரணமாக கூடங்குளம் வட்டார மக்களின் போராட்டத்தை தமக்கு சம்பந்தமுள்ள போராட்டமாக நமது சமூகம் கருதவில்லை.
     
தமது சொந்த பாதிப்புகளுக்கு எதிராகக் கூட போராட தயாராக இல்லாத  சிந்தனாமுறையை கொண்டுள்ள ஒரு சமூகம், பிறரின் பாதிப்பாக கருதும் ஒன்றுக்கு எதிராக போராட முன்வரும் என்றுக் கருதுவது கற்பனையே ஆகும். இந்த சிந்தனா முறைக்கு  அப்பாற்பட்டது அல்ல கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவும்! இதனாலேயே அதை குறுகிய மனப்பான்மை உடையது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.
     
போராட்டக்குழுவின் குறுகிய மனப்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரத்தைத் தேடி வேறு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்போது இந்திய மக்கள் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள டீசல் விலை உயர்வு, பல கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வை சூறையாடும் சிறு வணிகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் சமூக விரோத செயலுக்கு எதிராக போராட்டக் குழுவின் பாராமுகமே இதை நிரூபிக்க மிகச்சிறந்த உதாரணமாகும்.
     
தமது போராட்டத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள கூடங்குளம் போராட்டக்குழு, நாட்டின் ஏனையப் பிரிவு மக்களை அழிவுக்குள்ளாக்கக் கூடிய அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை தமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதுகிறது. ஏற்கனவே போராட்டக் களத்தில் நிற்கும் இக்குழுவும், இக்குழு தலைமையிலான மக்களும், நாட்டின் ஏனைய பிரிவு மக்களோடு உணர்வு பூர்வமாக ஒருங்கிணைவதற்கு மிச்சிறந்த வாய்ப்பாகும் இது. இதை போராட்டக் குழு புரிந்து கொண்டிருந்தால் ஏற்கனவே  களத்திலுள்ள மக்களை அரசின் சமூக விரோத இந்த செயல்களுக்கு எதிராகவும் போராட வைத்திருக்க வேண்டும்.
    
 இப்படிச் செய்திருந்தால் தற்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பழங்குடி மக்களின் உணர்வு  நிலையிலிருந்து   உறுதியாகப் போராடும் மீனவ மக்களின் உணர்வு மட்டத்தையும், ஜனநாயக மட்டத்திற்கு உயர்த்த முடியும். அதோடு உணர்வு பூர்வமாக தாழ்ந்து கிடக்கும் சமூகத்தின் பிறத்தட்டு மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கும் இது அடித்தளமாகவும் அமையும்.
     
ஆனால் இப்படியொரு சிந்தனா முறையே இல்லாத போராட்டக்குழு இந்திய சுதந்திர போராட்டம் சம்பந்தமாக கொண்டிருக்கும் கருத்தும், கண்ணோட்டமும் இதற்கு மாறான ஒன்றாக இருக்க முடியாது.
     
இரண்டாம் உலகப் போரில் இட்லரின் நாஜிப்படையை எதிர்த்து போரிட்டு 1 கோடி மக்களின் உயிர்களை இழந்து ஜெர்மனை முறியடித்தது சோவியத் யூனியன்.  சோவியத் யூனியனின் இந்த வெற்றி உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர, சுதந்திர தாகம் கொண்ட அனைவரையும் எழுச்சி பெற செய்தது. இதனால் உலகம் முழுவதும் இருந்த காலனி நாட்டு மக்களின் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் வீறு கொண்டெழுந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌன் பேட்டன் பிரபு தமது நாட்டிற்கு இந்திய நிலைமை பற்றிய அனுப்பிய அறிக்கையில் இந்தியா வெடிகுண்டுகள் ஏற்றிய கப்பல்  தீ பிடித்தது போன்று உள்ளது, என்று குறிப்பிட்டிருந்தார்
     
மௌன் பேட்டன் பிரபுவின் மேற்கண்ட வர்ணணை, காந்தி வழி நடத்திய போராட்டத்தால் உருவானதல்ல. இந்நிலை முற்றிலும் காந்திக்கும், காங்கிரசுக்கும் அப்பாற்பட்டு எழுந்த ஒன்றாகும்.
    
 இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான நாஜிப்படையே வெற்றி பெறும் என்று கணித்திருந்த காந்தி புதிய  எஜமானை வரவேற்க தயாரானார். இதற்காகவே வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தையும் ஆரம்பித்தார்.
    
ஆனால் காந்தியின் எதிர்பார்ப்புக்கு மாறாக  நேச நாடுகளின் வெற்றி, உலக மக்களை உற்சாக மடைய வைத்ததைப் போன்றே இந்திய மக்களையும் எழுச்சி பெற செய்தது. இதனால்  காந்தியின் வழிகாட்டுதலை மீறி நாடெங்கும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு  பதிலடி தந்தனர்.
     
போரில் நேச நாடுகளின் வெற்றியால் திகைத்த காந்தி, தமது பழைய எஜமானனின் நம்பிக்கையை பெற  தாம் அறிவித்தப் போராட்டத்தை வன்முறை என்று கூறி திரும்பப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு துரோகமிழைத்தார்.
     
ஆனாலும் மக்களின் போராட்டமோ  மௌன் பேட்டன் பிரபுவின்  வர்ணணைக்கு ஏற்ப தொய்வில்லாமல் முன்னேறியது.
     
இப்படிப்பட்ட சூழலில் தான் வெள்ளை ஆட்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிவு செய்தனர். இதற்காகவே தமது நலனை பாதுகாக்கும், தனது நம்பகமான  காவலனான காங்கிரசிடம் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து விட்டு வெளியேறினார்கள்.
     
1947 - ஆகஸ்ட் - 15 ல், ஆட்சி அதிகாரத்திலிருந்து  ஆட்கள் மட்டுமே மாற்றப்பட்டனர்.  ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும் சட்டங்களும், நிர்வாக இயந்திரமும் அன்றிலிருந்து இன்று வரை வெள்ளையர்கள் விட்டுச் சென்றவைகள்தான.
     
வெள்ளையர்கள் அன்று விட்டுச்சென்ற சட்டத்தின் அடிப்படையில் தான் இன்று கூடங்குளம் போராடும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர்.
    
இன்று ஆட்சியாளர்கள் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர், நயவஞ்சகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை போராட்டக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். இவை அனைத்துமே வெள்ளை ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவைகள்தான்.
     
அன்றும்,இன்றும் ஏகாதிபத்திய நலனை உள்ளடக்கிய சட்டத்தையும், நிர்வாக முறையையும் கொண்டதுதான் இந்திய ஆட்சி முறை.
     
கூடங்குளம் போராட்டக்குழு இந்திய சட்டங்களும், நிர்வாக முறையும்  சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறது என்றால், அதன் அடிப்படையில் இந்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் எப்படி தவறு என்று கூறமுடியும்!?
     
இங்கே முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது போராட்டக்குழு தான். ஆனால் இந்திய ஆட்சியாளர்களை பொருத்த வரை அவர்களை இயக்கும் சட்டத்திற்கு ஏற்ப முரணற்ற வகையில் தான் இயங்கி வருகின்றனர்.
     
எனவே கூடங்குளம் போட்டக்குழுதான் முரணற்ற வகையில் செயல்பட முன் வரவேண்டும். அந்த வகையில் இப்போராட்டத்தை வரிவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இனி பார்ப்போம்.
     
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களிடையே தார்மீக ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மீனவ மக்களிடையே  இந்த ஆதரவு பெருமளவு அதிகரித்துள்ளது.  இந்த தார்மீக ஆதரவை போராட்டத்திற்கான நேரடி ஆதரவாக ஒருக் குடையின் கீழ் ஒன்று திரட்டப்படவேண்டும்.
     
இரண்டாவதாக  தமிழகம், புதுவை கடற்கரை நெடுக உள்ள மீனவ மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
     
மூன்றாவதாக சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாகவும் தமது தலைமையிலான மக்களை போராடத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும்.
     
இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உடைய அணுகு முறைகள் மூலமே கூடங்குளம் போராட்டம் மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் முன்னேற்றத்தை  காண முடியும்.
     
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுடன் ஒருங்கிணைய கூடங்குளம் போராட்டக்குழு தனது சிந்தனா முறையை , பரந்து விரிந்த ஒன்றாக மாற்றிக் கொள்ள இனியாவது தயாராகுமா?   

தொடர்புடைய கட்டுரைகள்:

Saturday, 15 October 2011

கூடங்குளம்:இறுக்கம்+விரிவாக்கம்=வெற்றி.

“கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடு”,என்ற ஒற்றை கோரிக்கையுடன் இரண்டாவது கட்டப் போராட்டம் கூடங்குளத்தில்  நடைபெற்றுவருகிறது.முதற்கட்ட போராட்டம் போலல்லாது உண்ணாவிரதம் என்பதை தாண்டி அணுமின்நிலைய பணிகளை முடக்கும் வகையில், அங்கு வேலைக்கு செல்வோரை தடுப்பது,அணுமின்நிலையத்தை முற்றுகையிடுவது,சாலை மறியல் என போராட்டம் இறுக்கமடைந்து அடுத்தக்கட்டத்தை தொட்டுள்ளது.


இரண்டாவது கட்டப் போராட்டம்,போராட்டம் அடுத்தக்கட்டத்திற்கு செல்வது ஆகியவை ’மாமா’ மன்மோகன் சிங்கின் தயவால்தான்! தலைநகரில் தமிழக அரசு பிரதிநிதிகளையும்,போராட்டக்குழு பிரதிநிதிகளையும் சந்தித்த ’மாமா’ மக்களின் அச்சத்தை போக்கும் நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என்று ’மாமா’க்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு பேசியுள்ளார்.

போராட்டக்குழுவினர் தமிழகம் வருவதற்குள்ளாகவே, கூடங்குளம் அணுமின்நிலையத்தை  திறப்பதற்கு உதவுமாறு ஜெயாவுக்கு கடிதமும் எழுதிவிட்டார்.இதன் மூலம் கூடங்குளம் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்பதை தெளிவுபடுத்தி இருப்பதுடன்,போராட்டக்குழுவின் முகத்தில் கரியையும் பூசிவிட்டார்.இதை உடனடியாக புரிந்துகொண்ட போராட்டக்குழு அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

’மாமா’, ஜெயாவுக்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் உற்பத்தியை தொடங்கினால் 2000 மொகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யபடும் என்றும் இதில் தமிழகத்துக்கு 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்காவிட்டால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 900 மொகாவாட்ஸ் மின்சாரம் கிடைக்காமல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிடும் என்றும் நைச்சியமாக எழுதியுள்ளார்.

இக்கடிதத்திற்கு பிறகு திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.இப்படி ஜெயா கூறி இருப்பதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா?,எந்த மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பார்?,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் உணர்வுகளுக்கா அல்லது போராட்டக்குழுவிலிருந்து பிரிந்து வந்துள்ள பிரஜாதிபதிக்கு ஆசி வழங்கி இருக்கிறாரே அப்படிபட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பாரா என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்ப்போம்!


ஜெயா இப்படி பேசியிருப்பது மத்திய அரசோடும்,காங்கிரசோடும் தனக்குள்ள அரசியல் உறவு பற்றிய ராஜ தந்திர காய் நகர்த்தல்தான் ஜெயாவின் திருச்சி பொதுக்கூட்ட அறிவிப்பாகும்.

எது, எப்படி ஆயினும் இப்போராட்டத்தை கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டமாக உள்ளதை தமிழக,கேரள மக்களின் போராட்டமாக விரிவாக்கம் செய்வதின் அளவில்தான் போராட்டத்தின் வெற்றி அமையும் என்பதை போராட்டக்குழு கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.ஏனென்றால் போராட்டத்திற்கு இப்போதைக்கு ஜெயா ஏதும் இதுவரை இடையூறு செய்யாவிட்டாலும் அடிப்படையில் ஜெயாவின் கருத்து கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தவறில்லை என்பதுதான் என்பதை போராட்டக்குழு மறந்துவிடக்கூடாது.

உலக அளவில் அணுமின்சார உற்பத்தில் இந்தியா 15-வது இடத்தில் தான் உள்ளது.இந்தியா அணுசக்தியின் மூலம் 4780 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.இது நாட்டின் மொத்த மின்சாரத்தேவையில் வெறுமனே 2.8 சதவீதம் மட்டுமே.

20 அணு உலைகளை கொண்டுள்ள இந்தியா ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 239 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது.


ஆனால்,தனது நாட்டின் மொத்த மின் தேவையில் 74.12 சதவீதத்தை அணுமின்சாரத்தின் மூலம் பெறும் பிரான்ஸ் ஒரு அணு உலையின் மூலம் சராசரியாக 916 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.இந்த நாடே ஜப்பானின் அணு உலை விபத்துக்கு பிறகு தனது நாட்டின் அணுமின்சார உற்பத்தியை விரைவில் பாதியாக குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.உலகின் பலநாடுகளும் இப்படி அறிவித்துள்ளன.


ஆனால் இந்தியாவோ இதற்கு நேர்மாறாக 2030-க்குள் 60 ஆயிரம் மெகாவாட்ஸ்  அணு மின்சாரத்தை உற்பத்தி செய்ய போவதாக கூறியுள்ளது.

உலக அளவில் காலாவதி ஆகிப்போன அணு தொழிட்நுட்பத்தை இந்தியாவின் தலையில் கட்டும் ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாகத்தான் ’மாமா’ மன்மோகனும் இந்திய ஆட்சியாளர்களும் ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக வாலாட்டுகின்றனர்.

அணு உலை விபத்து என்பது இயற்கை சீற்றங்களால் மட்டுமே ஏற்படும் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை இந்திய ஆட்சியாளர்கள் மக்களிடையே உருவாக்கப்பார்க்கிறார்கள்.இயற்கை சீற்றங்களால் ஏற்படும்  விபத்து எப்போதாவது ஏற்படுவது.ஆனால் பெரும்பாலான அணு உலை விபத்துகளும், அணு கசிவும் மனிதத்தவறுகளால் தான் ஏற்படுகிறது.


உலகில் உள்ள அனைத்து அணு உலைகளுமே மேம்படுத்தப்படாத பழமையான தொழிட்நுட்பத்தை கொண்டவைகள்தான்.அதிலும் ரஷ்யாவின் அணு உலை தொழிட்நுட்பம் தற்காப்பு திறனற்றதாகும்.இதனால் சிறு மனித தவறுகள் நேர்ந்தாலும் கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காவுகொள்வதோடு.பல நூற்றாண்டுகளுக்கு கதிர்வீச்சின் அபாயத்தை எதிர்கொள்ளவும் நேரிடும்.
ஆகவே,கூடங்குளம் அணு உலை விவகாரம் அவ்வட்டார மக்களின் விவகாரம் மட்டுமல்ல.ரஷ்யாவின் செர்னோபில் அணு விபத்தினால் ஐரோப்பா முழுவதுமே அணுக்கதிர்வீச்சு பரவியது.ஜப்பானின் அணு விபத்தின் மூலம் அணுக்கதிர்வீச்சு அமெரிக்காவிற்குள்ளும் பரவியுள்ளதாக செய்திகள் கூறிகின்றன.

எனவே, கூடங்குளம் அணு உலையில் ஏற்படும் விபத்து தமிழகம் கேரளம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுக்கவே அணுக்கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ளது.

மேற்கண்டவற்றை கவனத்தில் கொண்டு போராட்டத்தை குறைந்தது தமிழகம் மற்றும் கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும்.போராட்டத்தின் இறுக்கம் மட்டுமல்ல அதனோடு விரிவாக்கமும் சேரும் போதுதான் வெற்றிக்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது என்பதை போராட்டக்குழுவிற்கு இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்! 

Wednesday, 22 June 2011

கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

    கல்விக்கான மக்களின் உரிமை:-விருத்தாசலத்தில் நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கை

     


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடலூர் மாவட்டத்தில்  உள்ள ஊர் சிறுநெசலூர். இவ்வூரில் உள்ள அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்கள்.1926-ல் வெள்ளையன் ஆட்சியிலேயே போராடி தொடக்கப்பள்ளியை கொண்டு வந்தார்கள் இவ்வூர்மக்கள்.இதனால் இவ்வூரில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசுஊழியர்கள்,ஆசிரியர்கள்,நூற்றுக்கும் மேற்பட்டபட்டதாரிகள் உள்ளனர்.2006 தேசியநெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது,சாலையின் கீழ்ப்புறம் ஊரும்,மேற்புறம்பள்ளியும் இரண்டாக துண்டாடப்பட்டது. இவ்வூர் மக்களின் மேம்பால கோரிக்கையை நிராகரித்த தேசியநெடுச்சாலை துறையினரை தமது அலட்சியத்தின் மூலம் மாநில அரசு அதிகாரிகளும் ஆதரித்ததால்,தொடக்கப்பள்ளி பாழடைந்து போனது
        இதனால் தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக் கட்டிடம் கட்டித்தருமாறு மக்கள்கோரினர். ஆனால் அரசுஅதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. இறுதியாக சென்ற ஆண்டு ஊருக்கு அருகே உள்ள அய்யனார் கோவில் தரிசுநிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மக்களின் இக்கோரிக்கையை ஆதிக்கச்சாதிவெறியர்கள் எதிர்த்தனர்.மக்கள் போராடியப்பிறகு ஆதிதிராவிடநலத்துறை மூலம, கோவில் தரிசுநிலத்தில் 20 செண்ட் இடத்தை அறநிலையத் துறையிடமிருந்து விலைக்கு வாங்கி பள்ளிக்கட்டிடம் கட்டுவதென, மாவட்டஆட்சியர் மக்களிடம் வாக்குறுதி தந்தார். அதன்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலமதிப்பீடு பெற்றுத்தரப்பட்டது. இந்த நிலமதிப்பீட்டை மாவட்டஆட்சியர் மற்றும் மாவட்டவருவாய்துறை அலுவலர் ஆகியோரும் ஏற்றுக்கொண்டு, அதை இந்து அறநிலையதுறைக்கு அனுப்பிவைத்தனர் .இந்து அறநிலையத்துறை,பத்திரப்பதிவு துறை மதிப்பீட்டை ஏற்கமுடியாது என்றும், சந்தை மதிப்பீட்டின் படி தான் நிலம் விற்பனைக்கு தரமுடியும் என்றும் கூறி ஆதிக்கச்சாதி வெறியர்களுக்கு ஆதரவாக, சட்டத்துக்கு புறம்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்தது.இதனால் இம்முறையும் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.கடந்த 5 ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் இல்லாததால் 200மாணவர்களின் படிப்பு முற்றாக பாழடிக்கப்பட்டுவிட்டது.ஐம்பது குழந்தைகள் மட்டுமே அமரக்கூடிய அங்கன்வாடிக் கட்டிடத்தில், மேலும் 200 மாணவர்களுக்கும் மதிய உணவு மட்டும் தரப்பட்டது. ஐந்து ஆண்டுகளாய் மக்கள் மனுக்கள்,உண்ணாவிரதம்,பிள்ளைகளை மதிய உணவு வாங்காமல் நிறுத்துதல்,தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவிக்கும் போதெல்லாம்,மக்களை அதிகாரிகள் தமது வெற்று வாக்குறுதிகள் மூலமே ஏமாற்றி வந்துள்ளனர். பல ஆண்டுகளாய், பல வழிகளில் போராடியும் தீர்வு ஏதும் கிடைக்காததால் மக்கள் சோர்ந்து போனார்கள். இதனால் ஆண்டுக்கு, ஆண்டு போராட்டங்களில் மக்களின் பங்கேற்பு குறைந்து வந்தது.ஒரளவிற்கு வசதி உள்ளோர் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலும், வேறு சிலர் வேப்பூர் அரசு பள்ளியிலும் சேர்த்தனர். கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சிறுநெசலூர் தொடக்கப்பள்ளியை, ஆதிதிராவிடர் நலத்துறையோ தமது பதிவேடுகளில் மட்டும் ஆரோக்கியமாக உயிர் வாழ வைத்து,அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்தது .மேற்கண்ட தமது செயலின் மூலம் இனி சிறுநெசலூரில் பள்ளிகூடமே வராது என்ற அவநம்பிக்கையை மக்களிடையே விதைத்தது.
        இப்படிப்பட்ட சூழலில், தான் இந்த அநீதியைக் கண்டு சகிக்க முடியாத கல்வித்துறை ஊழியர் ஒருவரின் மனசாட்சி, விருத்தாசலம் வட்டார விசாயிகள் விடுதலை முன்னணிக்கு இத்தகவலை கொண்டுவந்து சேர்த்தது. இச்செய்தியை கேட்டு ஒருகனம் அதிர்ந்து போன தோழர்கள்,மறு கனமே களத்தில் இறங்கினர் . சிறுநெசலூர் சென்று மக்கள் இடையே தகவல்களை சேகரித்தனர் . தாம்சேகரித்த தகவல்களை ஆய்வு செய்து, பிரச்சனைக்கான தீர்வை தீர்மானித்தனர். ஊரில் உள்ள முன்னணியாளர்களை அடையாளம் கண்டு,அவர்களோடு உரையாடி இப்பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறையை விளக்கினர். ஆலிச்சிக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த முறைகேடு, அதற்கு எதிராக மக்களை திரட்டி தாம் நடத்திய போராட்டம், ஆகியவற்றை முன்னணியாளர்களுக்கு விளக்கி,மாபெரும் மக்கள் சக்தி மூலம் மட்டுமே நாம் நமது கோரிக்கையில் வெற்றி பெற முடியும் என்பதை விளக்கி,புரியவைத்து ஏற்க வைத்தனர்.விவிமு-வின் நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி நாளிதழ்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த முன்னணியாளர்கள், விவிமு- வின் வழிகாட்டுதலை படிப்படியாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் மூலம் ஒரு சில தினங்களில் இளைஞர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, அவர்களும் ஏற்கும் வகையில் தீர்வு முன்வைக்கப்பட்டது.முன்னணியாளர்கள், இளைஞர்கள் நம்பிக்கை அடைந்தவுடன்,உடனடியாக போராட்டக்குழு அமைக்கப்பட்டது. போராட்டக்குழு கூட்டத்தில் ஐந்தாண்டு காலப் போராட்டம்,அதில் கிடைத்த படிப்பினைகள், அதற்கான காரணங்கள், ஆகியவற்றை விவிமு செயளர் விளக்கி புதியபோராட்ட முறையை கையாள வேண்டியதின் தேவையை, அவசியத்தை புரியவைத்தார்.அதன் படி விவிமு முன்மொழிந்த, அரசு அதிகாரிகள் மூடியப் பள்ளியை நாம் திறப்போம்! அடிக்கல் நாட்டுவிழா! என்றப் போராட்டம், போராட்ட குழுவில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது .இப்போராட்டத்தை 10.06.2011 அன்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
        மறு நாளே இம் முடிவு கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் கூட்டப்பட்ட ஊர்கூட்டத்தில் பிரச்சனைக்கான தீர்வு பற்றி விவாதிக்கப்பட்ட்து.மக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், மக்கள் ஏற்கும் வகையில் விளக்கம் தந்து, நம்பிக்கை ஊட்டி,மக்களிடம் போராட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மறு நாளே விளக்கப்பிரசுரம் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே வினியோகித்து, பரப்புரை செய்யப்பட்டது .சுவரொட்டி தயாரிக்கப்பட்டு போராட்டத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் சிறுநெசலூர்,வேப்பூர்,விருத்தாசலம்,கடலூர் ஆகிய ஊர்களில் பரவலாக ஒட்டப்பட்டது.விளம்பரத்தட்டி தயாரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்ற இடத்திலும், வேப்பூர் பேருந்து நிலையத்திலும் வைக்கப்பட்டது.சிறுநெசலூரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டங்களில், தமது எழுச்சி மிக்க உரையின் மூலம் மக்களை உணர்வூட்டினார்விவிமு செயலர்.இதன் காரணமாக ஐந்தாண்டுகால தயக்கம்,உற்சாகமின்மை ஆகியவை மக்களிடையே படிப்படியாக குறைந்து போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது.விவிமு தோழர்களின் தன்னலமற்ற உழைப்பு,அர்ப்பணிப்பு உணர்வு,மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தமது சொந்த பாதிப்பாக உணர்ந்து,மக்களின் உணர்வோடு ஐக்கியமாகியது ஆகியவை, இதற்கு முன்னர் இக்கிராம மக்களிடையே விவிமு தோழர்களுக்கு அறிமுகம் ஏதும் இல்லாவிட்டாலும், மக்கள் அவர்களை தம்மில் ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.
        இவ்வளவு நடவடிக்கைகள்,செயல்பாடுகளுக்கு பின்னரும் கூட அரசுத்தரப்பில் இருந்து பிரச்சனையை தீர்ப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளைப் போலவே இப்போதும் மக்களின் போராட்டம் பிசு,பிசுத்துவிடும் என்று அரசு அதிகாரிகள்      இருமாந்திருந்தனர்.தமது இடத்தில்! கிராம மக்கள் அத்துமீறி நுழைந்தால்,நடவடிக்கை எடுக்குமாறு இந்து அறநிலையத்துறை, போலீசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.இக்கடிதத்தை காட்டி முன்னணியாளர்களை மிரட்டியது போலீசு! தமது கையாட்கள் மூலம் மக்களிடையே கைது,தடியடி,வழக்கு,சிறை என பயபீதியூட்டியது.இவை அனைத்திற்கும் எதிராக தமது போர்க்குணமான பரப்புரை மற்றும் நுட்பமான தமது செயல்பாடுகள் மூலம் போரட்டக்குழு பதிலடிக்கொடுத்தது.
          போராட்டத்திற்கு முந்தைய நாள் 09.06.2011 மாலை 07 மணியளவில் விருத்தாசலம் வட்டாட்சியர்,தனி வட்டாட்சியர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஊருக்குள் நுழைந்து அங்கன்வாடி கட்டிடத்தை பார்வையிடுவது என்ற போர்வையில் மக்களின் தயார் நிலையை வேவு பார்த்தது.தமக்கு அருகில் நின்ற மக்களிடம்அங்கன்வாடி இடம் தான் வசதியாக உள்ளதே! பின் எதற்காக பிரச்சனை செய்கிறீர்கள்என வட்டாட்சியர் திமிர்த்தனமாக மக்களிடம் பேசிவிட்டு, நெடுஞ்சாலைக்கு மறுபுறம் உள்ள, மூடப்பட்ட பள்ளியை பார்வையிடச் சென்றார்.இதைக் கேள்விப் பட்ட போராட்டக்குழுவினர், வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரை சந்தித்து, தமது ஐந்தாண்டுகால போராட்டத்தை பற்றி விளக்கிக் கூறினர்.இதைக் கேட்ட வட்டாட்சியர் ஐந்தாண்டுகளாக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பிரச்சனை ஏதும் இன்றி விட்டுக்கொடுத்ததைப் போன்று இம்முறையும் தனக்காக விட்டுக்கொடுக்குமாறும், போராட்டத்தை கைவிடுமாறும் கோரினார்.இப்போது இடைமறித்த விவிமு செயலர் கடந்த ஐந்தாண்டுகளாய் நாங்கள் ஏமாந்தது போதும். இனியும் நாங்கள் அதிகாரிகளின் வெற்றுவாக்குறுதிகளை நம்பி எமது போராட்டத்தை கைவிட தாயாரில்லை. உங்களை நாங்கள் நம்பவேண்டுமானால், பள்ளி திறப்பு நாளான 15.06.2011 அன்றைக்குள் கட்டிடம் கட்டுவதற்கான இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தரமுடியமா? என்று கேட்கும் போதே, இடைமறித்த வட்டாட்சியர் அது தன்னால் முடியாது”, என்று திட்டவட்டமாக கூறினார்.இடத்திற்கு ஒப்புதல் பெற்றுத் தர உங்களால் முடியாது என்றால், எங்களால் போராட்டத்தை கைவிடவும் முடியாது.நாங்கள் திட்டமிட்டபடி போராடுவோம்.நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, எங்களை கைது செய்துகொள்ளுங்கள்”, என்றார் விவிமு செயலர்.இதனால் ஆத்திரம் அடைந்த வட்டாட்சியர்என்ன நீ எங்கிட்ட கை நீட்டி, நீட்டி பேசர? என்றும் லூஸ் டாக் பன்ற”,என்றும் வாய்கொழுப்பெடுத்து பேசினார்.இதற்கு பதில் தந்த விவிமு செயலர் நாங்கள் என்ன உங்களுக்கு அடிமைகளா? கைநீட்டி பேசாமல் வேற எத நீட்டி பேச சொல்ர? உனக்குமட்டுந்தான ஆங்கிலத்தில் திட்டத்தெரியுமா? அது எங்களுக்கும் தெரியும்.யார் லூஸ் டாக்ஸ் பன்றது? ஏய்யா, நீ அதிகாரின்னு,நாங்க மரியாத கொடுத்து பேசுனா நீ வாய்க்கு வந்தபடியேல்லாம் பேசர?இடியட், நான்சென்ஸ் இனியும் நீ இங்கு நின்ன உருப்படியா போய்சேர மாட்ட. ஒழுங்கா இங்கருந்து ஓடிப்போயா” ,என்று கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார்.இதனால் உற்சாகம் அடைந்த இளைஞர்கள் தமது பங்கிற்கு வட்டாட்சியருக்கு அர்ச்சனை செய்தனர்.இவை அனைத்தையும் தனது மடியில் கட்டிக்கொண்ட வட்டாட்சியர் தன்னை மாவட்ட ஆட்சியர் தான் அனுப்பினார்,என்னையா திட்டுறீங்க உங்களை நான் பார்த்துகிறேன்என்று சொல்லிக்கொண்டே பின்னங்கால் பிடரியில் பட தனது குழுவினருடன் ஓட்டம் பிடித்தார்.
        உடனடியாக இது பற்றி போராட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் இருந்து நாளை போராட்டத்தின் போது போலிசை பெருமளவில் குவிக்க வாய்ப்புள்ளது.ஆகவே நாளை போராட்டத்தின் போது நாம் போட தீர்மானித்திருந்த கொட்டகையை, இன்று இரவே போட்டுவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.இம்முடிவின் படி கொட்டகை அமைப்பதற்கான பொருட்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டு இரவு 11.30 மணியளவில் போராட்டக்குழு தலைமையிலான 50 பேர் கொண்ட குழு கொட்டகை போடும் இடத்திற்கு விரைந்தது.இதை தமது கையாட்கள் மூலம் தெரிந்து கொண்ட போலிசு கொட்டகை போடும் முயற்சியை தடுத்தது.இப்போது கொட்டகை போட முடியாது என்பதை புரிந்து கொண்ட போராட்டக்குழு தமது முயற்சியை கைவிட்டு திட்டமிட்ட படி போராட்டத்தை நாளையே செய்வது என முடிவு செய்து பின் வாங்கியது.10.06.2011 பொழுது விடிந்ததும் மக்களை திரட்டும் பணியில் போராட்டக்குழு தீவிரமாக இறங்கி செயல்பட்டது.காலை 09.30 மணியளவில் ஊரின் நடுப்பகுதியில் கூடிய 500 க்கும் மேற்பட்ட மக்களிடையே உணர்ச்சி பொங்க பேசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் விவிமு செயலர்.விவிமு தோழர்களின் உணர்ச்சிமிக்க,விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலம் தனது இலக்கை நோக்கி விரைவாய் முன்னேறியது.



        மக்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக வருவார்கள்.அப்போது அவர்களை,பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட திடலுக்குள் நுழைவதை தடுத்து கைது செய்துவிட வேண்டும் என்ற திட்டத்தோடு போலிசு காத்திருந்தது.போலிசின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் ஊரின் பின் புற வழியாக ஊர்வலம் வழிநடத்தி செல்லப்பட்டது.ஊர்வலம் தமக்கு பின்புறம் வருவதை கண்ட போலிசு அதை தடுத்து நிறுத்த தனது நடையை விரைவு படுத்தியது.அவர்கள் ஊர்வலத்தை நெருங்குவதற்குள்,கண்ணிமைக்கும் நேரத்தில் திடலுக்குள் நுழைந்து போலிசின் திட்டத்தை முறியடித்தனர் மக்கள். பள்ளிக்கென தீர்மானிக்கப்பட்ட இடத்தில் மக்கள் அமர்ந்து முழக்க மிட்டனர்.இதனால் செய்வதறியாது தவித்த போலிசு முன்னணியாளர்களை கோட்டாட்சியரிடம் பேசுமாறு அழைத்தது.பேச்சு வார்த்தைக்கு என்று தீர்மானிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு கோட்டாட்சியரிடம், பிரச்சனையை தீர்க்கும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே நாங்கள் பேசுவோம்,உங்களிடம் பேசமாட்டோம் என்று கூறிவிட்டு மீண்டும் திடலுக்கு வந்து விட்டனர்.கடுமையான வெய்யலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க சாமியானா பந்தல் வரவழைக்கப்பட்டது.இதைப் போடக்கூடாது, போட்டால் கைது செய்வோம் என்று போலிசு மிரட்டியது.முடிந்தால் செய்து பார் என்று ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் போலிசுக்கு சவால் விட்டனர்.போலிசு நம்மை மிரட்ட ஆரம்பித்த பின்னர் இனியும் நாம் சும்மா இருக்க முடியாது.உடனடியாக பள்ளிக்கு கொட்டகைப் போடுங்கள்”,என போராட்டக் குழுத் தலைவர் உத்தரவிட்டார்.இதற்காகவே காத்திருந்த மக்கள் துள்ளிக்குதித்து தமது வேலையை தொடங்கினர்.உற்சாகமும்,போர்க்குணமும் கரைபுரண்டு ஓடியது.கொட்டகைப் போடும் முயற்சியை தடுக்க விரைந்த போலிசு மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பின்வாங்கியது.போலிசின், கைது செய்வோம்’, என்ற மிரட்டல் மக்களிடையே நகைப்பிற்குரியதாகியது.



திறமையான பந்தல் அமைப்பாளர்களால் சுமார் 10 மணி நேரத்தில் போடப்படும் கொட்டகையை இங்கே வெறுமனே ஒரு மணிநேரத்தில் கட்டி முடித்தனர் மக்கள் .நிலைமையின் தீவிரத்தை தத்தமது உயர் அதிகாரிகளுக்கு போலிசு துணை கண்காணிப்பாளரும், கோட்டாட்சியரும் நேர்முக வர்ணனை செய்தனர்.கொட்டகை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்ததும் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இருவரும் போராட்டக்குழுவிடம்,மாவட்ட ஆட்சியர் குறிஞ்சிப்பாடியில் மக்கள் குறைதீர்க்கும்! முகாமில் உள்ளதால் அவரால் இங்கு வரமுடியவில்லை, உங்களை அவர் அங்கு அழைத்து வரச்சொன்னார்,என்று தகவல் தந்தனர்.இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழு மாவட்ட ஆட்சியரை சந்திக்க குறிஞ்சிப்பாடி சென்றனர்.போராட்ட குழுவின் மற்றொரு உறுப்பினரான விவிமு செயலர் கொட்டகை அமைக்கும் பணி முழுமை அடைந்த பின், மக்களை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார்.மாலை 07 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்ற குழுவினர் ஊர் திரும்பினர்.சூலை 15 க்குள் பள்ளிக்கட்டிடம் கட்ட இடம் வாங்கித்தருவதாக மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு வாக்குறுதி தந்ததாகவும்,அதுவரை போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்கள்.நீங்கள் உங்கள் வாக்குறுதிப்படி சூலை 15க்குள் உத்தரவு பெற்றுத்தராவிட்டால் சூலை 16 அன்று நாங்கள் கொட்டகை அமைத்த இடத்தில் பள்ளியை நடத்துவோம் என்று போராட்டக்குழுவில் தீர்மானித்தப்படி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளனர்.



        மாவட்ட ஆட்சியர் உடனான மேற்கண்ட உரையாடல்,வாக்குறுதி மற்றும் போராட்டத்தின் வெற்றிக்கு காரணமான மக்களின் பங்கேற்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்து, அப்போதே ஊரில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.    
        நாங்கள் சிறுநெசலூர் சென்றபோது எங்களை வரவேற்றது அவ்வூரில் எஞ்சிவிடப்பட்டிருந்த அவநம்பிக்கை மட்டுமே! கடந்த ஐந்து ஆண்டுகால போராட்டம், மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து விட்டதால்,அதை மீண்டும் உருவாக்க வேண்டிய மிகக்கடுமையான பணியை,சவாலை விவிமு தோழர்கள் எதிர்கொண்டனர்.கடந்த ஐந்தாண்டுகால போராட்டங்கள், அவற்றின் தன்மை,அதில் இருந்த பலவீன்ங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு,ஒருமாத கால அவகாசத்தில் படிப்படியாக மக்களிடையே நம்பிக்கை உருவாக்கப்பட்டது!


        விவிமு செயலரின் போர்க்குணமான,உணர்வூட்டும் உரைகள், தோழர்களின் தன்னலமற்ற அற்பணிப்பு மிக்க உழைப்பு ஆகியவையே தங்களை இப்போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டியதாக மக்கள் போரட்டத்திற்கு முன்னரும் பின்னரும் தெரிவித்தனர்.
        மக்களுக்கு நேர்மையை,போர்க்குணத்தை வெளியில் இருந்து யாரும் அவர்களுக்கு வழங்க தேவையில்லை.அது அவர்களின் உழைப்போடும்,உயிரோடும் இரண்டர கலந்துள்ளது.இதை முன்னணியாளர்கள் அடையாளம் கண்டு,அதை தனது அற்பணிப்பு,தியாகம்,போர்க்குணம்,மக்கள் மீதான மாளாக்காதல்,மக்களின் உணர்வை தமது உணர்வாக்கிகொள்ளுதல் ஆகியவற்றை கொண்டு மக்களை அமைப்பாக்கி,நம்பிக்கை ஊட்டி ,தளராமல் வழிநடத்துவது மட்டுமே நமது வேலை.நமது இந்தப்பணிக்கு இறுதி வெற்றித் தேடித்தருபவர்கள் மக்களே! மக்களின் சக்தியே மகத்தானது!
        மக்களின் சக்தியை மறுத்து அவர்களை ஆக்க மற்றவர்களாக காட்டி,சித்தரித்து சமூகத்தில் சில கதாநாயகர்களே அனைத்தையும் சாதிப்பதாக ஆளும் வர்க்க கழிசடைகள் காலம்,காலமாக நம்மை ஏய்க்கின்றனர்.
        ஆளும்வர்க்கம் தனது வர்க்க நலனை-மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும்-பாதுகாக்க வன்முறை,அடக்குமுறை ஆகியவற்றை மட்டுமே ஆயுதமாக காலம்,காலமாக பயன்படுத்துகிறது! இனியும் பயன்படுத்தும்,ஆனால் தமது சுரண்டலுக்கு எதிராகப் போராடும் உழைப்பாளிகள் மீது பிணத்திற்கு ஒப்பான,உண்ணாவிரதம் போன்றவற்றை காந்தி,அன்னாஹசரே,பாபாராம்தேவ் போன்ற கோமாளிகளை வைத்து,வித்தை காட்டி,இக்கோமாளிகளையே மக்களின் கதாநாயகர்களாகவும் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறது.இதன் மூலம் ஆளும்வர்க்கம் தாம் சாகாவரம் பெற்றுவிடலாம்(அய்யோப் பாவம்) என மனப்பால் குடிக்கிறது
ஊழலை ஒழிக்க திடீரென அவதாரம் எடுத்த அன்னாஹசாரேவின் உண்ணாவிரதம், வெறுமனே நாடகம் என்பதையும்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக,தாம் நடத்திய மக்கள் திரள் போராட்டமே, ஊழலை ஒழிப்பதற்கானப் பாதை என்பதையும் நிரூபித்தது,விவசாயிகள் விடுதலை முன்னணியின் அன்றையப் போராட்டம்!
மக்களின்,கல்வி கற்பதற்கான உரிமையை,தனியார் கல்விக் கட்டண கொள்ளையை,சமச்சீர் கல்வியை உண்ணாவிரதம் இருந்தே,வாங்கித்தரப் போவதாக(விலை பேசிகொண்டிருக்கிறார்களா அல்லது பேசி முடித்துவிட்டார்களா? புரோக்கர் கமிசன் எவ்வளவு இது பற்றி நீரா ராடியாவிடம் ஆலோசனை பெற்றார்களா? இதைப்போன்ற விடயங்களுக்கெல்லாம் CBI –யை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்!) தற்போது புறப்பட்டுள்ள கோமாளிக் கும்பலின் முகத்திரையை கிழித்து இவைகளை சாதிப்பதற்கான பாதை உண்ணாவிரதம் அல்ல நக்சல்பரி போராளிகள் தலைமையிலான மக்கள்திரள் போரட்டமே என்பதை சிறுநெசலூர் போராட்டத்தின் மூலம் மீண்டும் நிருபித்துள்ளது விவசாயிகள் விடுதலை முன்னணியின் இன்றையப் போராட்டம்...!
                   
             
             தகவல்:- போராட்டக்குழு சிறுநெசலூர் ,விருத்தாசலம் வட்டம்.