விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label விவசாயத்தின் அழிவு. Show all posts
Showing posts with label விவசாயத்தின் அழிவு. Show all posts

Thursday, 27 October 2011

விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1

நடப்பு சம்பாப்பருவ நடவுப்பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது.இந்த ஆண்டிற்கான நெல்கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவித்துள்ளது.மோட்டாரகம் கிலோவுக்கு ரூ 11.30 சன்னரகம் ரூ 11.80 என்றும் அறிவித்துள்ளது.இந்த விலை போதுமானது அல்ல என்று விவசாய சங்கப் பிரதிநிகள் வழக்கம் போல கூறியுள்ளனர்.

நடப்பு சம்பா பருவத்தில் 1 ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ 14.500/- வரை செலவாகிறது.அதாவது 1 கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ6.70 செலவாகிறது.உற்பத்தி செலவை விட தமிழக அரசு மோட்டா ரகத்திற்கு ரூ 4.60,சன்னரகத்திற்கு ரூ5.10 என்றும் கூடுதலாக விலை தருகிறது.ஆனால் விவசாயிகள் சார்பில் பேசுவோர் ஒரு குவிண்டாலுக்கு ரூ 2100/- ரூபாயாவது தந்தால் தான் கட்டுபடியாகும். நடப்பு விலைவாசி உயர்வில் குவிண்டால் ரூ1130/- என்பது கட்டுபடி ஆகாது என்று கூறியிருக்கிறார்கள்.அதாவது கிலோவுக்கு ரூ21.00 என்று விலை கேட்கிறார்கள்.

இந்தியாவில் இன்றைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கைக்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்தான்.ஆனால் விவசாயிகளை தவிர வேறு எந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரும், தமது உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியாகும் விலைகேட்டு அரசாங்கத்திடம் கெஞ்சுவதில்லை.தமது உற்பத்தி பொருளுக்கான விலையை தாமே தீர்மானிக்கும் உரிமையை சட்டபூர்வமாகவே பெற்றுள்ளனர்.ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அரசும்,தனியாரும்தான் விலையை தீர்மானிக்கிறார்கள்.அவர்களிடம் விவசாயிகள் கையேந்தி நிற்கிறார்கள்.

விவசாய உற்பத்தியில் விவசாயி தனது சொந்த நிலத்திலேயே கொத்தடிமையாக உழல்கிறான்.மேலும் கடன்காரனாகவும் திட்டமிட்டு ஆக்கப்படுகிறான்.தனது சொந்த குடும்ப உழைப்பு மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் மட்டுமே கூலியாட்களுக்கு தர வேண்டிய கூலியை தான் பெற்றுக்கொண்டு சில ஆண்டுகள் சமாளிக்கிறான்.சொந்த உழைப்பு இல்லாதவர்கள் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே நிலத்தை விற்றுவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

சொந்த உழைப்பில் விவசாயம் செய்யும் விவசாயி கூட கடனை தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதன் மூலமே அடைக்கிறான்.இதற்கு எதற்கும் வசதியில்லாத விவசாயி தற்கொலையை தேர்ந்தெடுக்கிறான்.தமிழகத்து விவசாயிகளோ நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் விற்றுவிட்டு விவசாயத்திலிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள்.

இதையும் மீறி விவசாயம் செய்யும் விவசாயி,விவசாயம் அல்லாத வழிகளில் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவது,ஆடு,மாடு வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயத்தில் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு என்றாவது ஒருநாள் நல்லகாலம் பிறக்காதா? என்று காத்திருக்கிறான்.மொத்தத்தில் உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற விவசாயி தன்னையே இழக்கிறான்.

நடப்பு பருவத்தில் உற்பத்தி செலவை விட 1 கிலோவுக்கு கூடுதலாக விலையை அரசு தந்தும் கூட இது போதுமானது அல்ல என்று விவசாயிகள் கூறுவது சரியா? என்றுதான் சாதாரணமாக எல்லோரும் நினைக்கிறார்கள்.

விவசாயத்தில் ஆண்டு முழுவதும் ஈடுபடும் விவசாயிக்கு சம்பளம் வேண்டும் என்பதோ,நிலவாடகை,நடப்பு பருவ செலவுக்கு ஆகும் தொகைக்கு அதாவது மூலதனத்திற்கான வட்டி,ஆழ்துளை கிணறு தோண்ட செலவழிக்கப்படும் மூலதனத்தை திரும்ப எடுத்தல்,அதற்கான வட்டி,ஆழ்துளை கிணறு மின்சாதனங்கள் பராமரிப்பு இவை அனைத்திற்கு பிறகு லாபம் ஆகிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.விவசாயத்தை தவிர ஏனைய அனைத்து தொழில்களிலும் இந்த அம்சங்கள் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகிறது.


மேலே கண்ட அம்சங்களை கொண்டு திட்டமிட்டால்

2011 சம்பா பருவ நெல்சாகுபடிக்கான செலவு விவரம்.

                                                     ரூபாய்
1.நாற்றங்கால் ஏர்                                         500  
 நாற்றங்கால் அண்டை வெட்ட 1ஆள்                      150
 நாற்றங்கள் ஒழுங்கு செய்ய 1ஆள்                        150
 விதை நெல் 45 கிலோ                                   950
  உரம்                                                   110
2.நடவு வயல் ஏர்                                          2000
 நாற்று பறிக்க                                            1400
 அடியுரம் 2 மூட்டை                                      1400
 நடவு ஆள் கூலி                                         1680
 அண்டை வெட்ட 6 ஆள்                                  900
3.மேலுரம்                                                900
4.களை பறிக்க                                            1400
5.மருந்தடிக்க                                              1000
6.அறுவடை செலவு (1 ½ மணி நேரம்,இயந்திரம் மூலம்)      2000

மொத்தம்-             14,620


7.விவசாயி கூலி                                         10,000
8.நில வாடகை                                            9000
9.மூலதன வட்டி(5 மாதம்)                                   725     
10.ஆழ்துளை கிணறு மூலதனத்தை திரும்ப எடுத்தல்         2000
11.ஆழ்துளை கிணறு மூலதன வட்டி 1 போகம்              1000
12.ஆழ்துளை கிணறு பராமரிப்பு                             1000
13 லாபம் 20% (மிக குறைந்த லாப விகிதம் இது)            1861
                                
                                    மொத்தம்             40,206

மேற்கண்ட பட்டியல் அடிப்படையில் பார்த்தால் ஒரு ஏக்கர் நெல் உற்பத்தி செய்ய ரூ40,206/- வரை செலவாகிறது.இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று நடப்பு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பவர்கள் கூறலாம்.

இதோடு மட்டுமல்ல விவசாய விலை பொருட்கள் விலை ஏறினால் மக்கள் எப்படி அவற்றை வாங்கி சாப்பிட முடியும்.இதனால் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விடும் என்று தேசபக்தி பொங்க குரல் எழுப்புகிறார்கள்.இவர்களிடம் நாம் கேட்போம் தேசம், நாடு என்றால் என்ன? இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அதாவது 80 கோடி பேர் விவசாயிகள்.இந்த 80 கோடி விவசாயிகளின் அழிவு நாட்டின் அழிவில்லையா?

சரி ஒரு கிலோ சன்னரக நெல்லின் விலை ரூ 11.80.ஒன்றரை கிலோ நெல்லில் 1 கிலோ அரசியை பெறமுடியும்.அப்படியானால் ஒரு கிலோ அரிசிக்கு தேவையான நெல்லின் விலை ரூ17.70 ஆகிறது.ஆனால் ஒரு கிலோ சன்னரக அரிசியின் விலை கடையில் ரூ40 வரை விற்கிறது.நெல்லை விவசாயிடமிருந்து விலைக்கு வாங்கி அதை அரிசியாக மாற்றி விற்கும் இடைத்தரகர்கள் நெல்லை அரிசியாக்கும் செலவு போக ஒரு கிலோவுக்கு ரூ20 வரை லாபம் பெறுகிறான்.
ஆனால் நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயி ஒரு பருவத்தில் 1 ஏக்கரில் மோட்டாரகத்தில் ரூ 6300/-ம் சன்னரகத்தில் ரூ4806/-ம் நட்டமடைகிறான்.ஆகவே விவசாயத்திலிருந்து ஒரு பைசா கூட வருமானம் பெறாத விவசாயி தனது குடும்பத்திற்கான உணவு,கல்வி,மருத்துவம்,திருமணம்,மொய்,திருவிழாக்கள் அனைத்திற்கும் கடன் வாங்கித்தான் செலவழிக்கிறான்.இப்படிப்பட்ட கடன்கள் வட்டியும் அசலும் சேர்ந்து நான்கைந்து ஆண்டுகளில் நிலத்தை விற்றுத்தான் அடைக்கும் நிலைக்கு விவசாயிகளை தள்ளிவிடுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி மிகுநிலை பெற்றுள்ள ஒரு சமூகத்தில்,அதன் ஆதிக்கத்தில் விவசாயம் செய்யும் விவசாயி முதலாளித்துவ முறையில் தனது உற்பத்தியை திட்டமிடக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

உணவுப்பொருட்களின் விலை உயர்வு பற்றி நியாயமாக அரசிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.விவசாயி எவ்வளவு நட்டமடைந்தாலும்,உணவு பொருட்களின் விலை குறைவாகவா விற்கிறது.இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தவக்கற்ற அரசுகள்தான் குற்றவாளிகள்!

உண்மையிலேயே நாட்டின் மீதும்,நாட்டு மக்கள் மீதும் அக்கறையுள்ளோர் உணவுப்பொருள் விநியோகம் அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்றுதான் குரல் எழுப்ப வேண்டும்.உணவு பொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களை அகற்றப்பட வேண்டும்.


மேலும் விவசாயிகள் பெயரில் உரக்கம்பெனி முதலாளிகளுக்கும்,விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படுகிறது என்றப்பெயரில் இடைத்தரகர்கள் கொள்ளையடிக்க வழங்கப்படும் மானியங்களிலிருந்து,மேலும் பல்வேறு வகையில் தரப்படும் மானியங்கள் அனைத்தையும் உணவுப் பொருளுக்கு ஒருமுகப்படுத்தி வழங்கினால்,இப்போது உள்ள உணவுப்பொருட்களின் விலையை விட பாதிவிலையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடியும்.

ஆகவே விவசாயிகளுக்கு, தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிடும் என்ற வாதத்தில் துளியும் உண்மை இல்லை என்பதை இப்போதாவது நாம் உணர வேண்டும்.

மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க வேண்டிய  கடமை அரசினுடையது என்பது தவிர்க்கவியலாத விதியாகும்.ஆனால் இதற்கு நேர்மாறாக இந்திய அரசு செயல்படுகிறது.உணவு பொருட்கள் அனைத்தையும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளில் ஒப்படைக்கிறது.இதுநாள் வரை இந்தியாவில் உள்ள பல லட்சக்கணக்கான சிறு இடைத்தரகர்கள் பெற்றுவந்த லாபத்தை ஒருசில பன்னாட்டு பகாசூர கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு திறந்துவிட்டு,இருக்கும் இந்திய அரசு விவசாயத்திற்கும்,விவசாயிகளுக்கும் ,நாட்டுமக்களுக்கும் ஆழக்குழித் தோண்டுகிறது,துரோகம் இழைக்கிறது.இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் தேவை மட்டுமல்ல,கடமையுமாகும்!      

Thursday, 29 September 2011

ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

இன்றளவும் நாட்டின் பெரும்பாண்மை மக்களுக்கு அதாவது 70 சதவீதம் மக்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக இருப்பது விவசாயம்.நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் உணவளிப்பவர்கள் விவசாயிகள். நாட்டிலுள்ள எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த வெற்றியை தீர்மாணிப்பது விவசாயிகளின் வாக்குகள்தான். ஆனால் விவசாயிகளைப் பற்றி அரசியல் கட்சிகளும்,அதிகாரவர்க்கங்களும் கிள்ளுக்கிரையாகவே பார்த்துவருகின்றனர்.

நாட்டில் உள்ள அனைத்து ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளும் அயோக்கியர்களின் கூடாரமே என்பதை மக்கள் அனைவருமே அறிவர்.தங்களால் அன்றாட வாழ்வுக்கே அல்லல்படும் தங்களால் இவர்களை எதிர்த்து போராட முடியாது என்றே பெரும்பான்மை மக்கள் எண்ணுகின்றனர்.இந்த இவர்களின் சிந்தனை இயல்பாக அவர்களின் வாழ்நிலைகளில் இருந்து வந்துவிடவில்லை.அதை அரசியல் கட்சிகளும்,ஆளும் வர்க்கங்கள் ,அதிகாரவர்க்கம் ஆகியோர் திட்டமிட்டே மக்களின் மனங்களில் பதியவைத்துள்ளனர்.

ஒட்டுச்சீட்டு அரசியல் கட்சிகள் மட்டுமல்ல,புரட்சிகர சவடால் அடித்தவர்களும், மக்களுக்கு துரோகம் இழைத்து ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவாக மாறுகிற போக்கு இந்திய புரட்சிகர வரலாற்றில் அடிக்கடி நிகழ்வதும், மக்களின் அவநம்பிக்கையை உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது,ஆனால் அதே நேரத்தில் உண்மையான புரட்சிகர ஜனநாயக சக்திகள் கிடைக்கும் போதேல்லாம் மக்கள் தமது இயல்பான போர்க்குணத்தை வெளிக்காட்டியே வருகின்றனர்.பெரும்பாலும் இந்த போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தின் அநீதிகளுக்கு எதிராகவே நடத்தப்படுகின்றன.இப்படிப்பட்ட போராட்டங்கள் அன்றாட பொருளாதார கோரிக்கைகளாகவே உள்ளன.

விவசாயத்தை ஆளும்வர்க்கங்கள் நன்கு திட்டமிட்டே சிதைத்து வருவதற்கு எதிரானதாக, பிரச்சனையை தீர்ப்பதற்கான நேரடியான கோரிக்கைகளையோ முழக்கங்களையோ புரட்சிகர ஜனநாயக சக்திகள் முன்வைப்பதில்லை.தமது வெவ்வேறு திட்டத்தின் ஊடாக விவசாயத்தையும்,விவசாய பிரச்சனைகளையும் தொட்டுவிட்டு செல்லுகின்றனர்.இவைகள் விவசாயிகள் அனுபவிக்கும் பிரச்சனைக்கான அடிப்படையைக் கவனத்தில் கொண்டதாக இருப்பதில்லை.ஆகவே விவசாயிகள் இவர்களை நேர்மையானவர்களாக மதித்தாலும் தமது பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக பார்ப்பதில்லை.இதற்கு மாறாக இப்படிப்பட்ட விவசாய அமைப்புகளில் உள்ளவர்களின் செயல்களைப் பார்த்து அனுதாபப்படவே செய்கின்றனர்.ஏனென்றால் இப்படிப்பட்டவர்கள் விவசாய அமைப்புகளில் இருந்தாலும், தாங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வைக்காத அதே நேரத்தில் தாங்களும் ஏனைய அரசியல் கட்சியினரைப் போன்று பொருளாதாரத்தில் முன்னேறாமல் நொடிந்து போவதால் மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கையை விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொள்வதால்தான், இவர்களைப் பார்த்து மக்கள் அனுதாபப்படுகின்றனர்.இந்த அனுதாபத்தைதான் இவர்களும் அப்பாவித்தனமாக மக்கள் வழங்கும அங்கீகாரமாக, ஆதரவாக பாமரத்தனமாக கருதிக்கொள்கின்றனர்.நாளடைவில் விவசாயிகள் தமது அமைப்பில் இணைய முன்வராததை ஏனென்று ஆய்வுக்கு உட்படுத்தாமல்,விவசாயிகளை விவரமற்றவர்களாகவும்,பிற்போக்குவாதிகளாகவும் கருதிக்கொண்டு, இவர்கள் எந்த ஒரு போராட்டத்திற்கும் வரமாட்டார்கள் என்ற இயங்கியலுக்கு புறம்பான முடிவுக்கு வருவதோடு தாமும் விரக்தி அடைந்துவிடுகின்றனர்.

இதன் மூலம் விவசாயிகளின் அன்றாட பிரச்சனைகளைக் கூட பேசுவதற்கோ,போராடுவதற்கோ ஆளில்லாமல் போகிறது.இது ஆளும் வர்க்கங்களுக்கு மிகுந்த தைரியத்தை தந்து, விவசாயிகளுக்கு எதிராக எந்தவிதமான சிரமங்களாயினும்,துரோகமாயினும் அதை தருவதற்கும், இழைப்பதற்கும் தயங்குவதே இல்லை!
இது நாள் வரை விவசாயிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் விவசாயிகளின் பெயரில், மக்களின் வரிப்பணத்தை உரக்கம்பெனி முதலாளிகளுக்கு அளித்த மத்திய அரசு,தற்போது அந்த மானியத்தை நிறுத்திவிட்டது.அதற்கு மாறாக உரத்திற்கான விலையை முதலாளிகளே உயர்த்திக்கொள்ளலாம் என முதலாளிகளின் கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டது.அரசு, உரக்கம்பெனி முதலாளிகளுக்கு மானியம் தந்த போதே அவர்கள் செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கூடுதல் விலைக்கு விற்று கொள்ளையடித்தனர்.அப்படி கொள்ளை அடித்த நிறுவனங்களுக்கு இனி அதைப் பற்றி சொல்லித்தரவா வேண்டும்!
சென்றாண்டு சம்பா பருவத்தில் 50 கிலோ டி.ஏ.பி உரம் ரூபாய் 585-க்கு விற்பனை செய்யப்பட்டது நடப்பு சம்பா பருவத்தில் அதிலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டை உருவாக்கி இந்த ஆண்டோ அதே டி.ஏ.பி உரம் ரூ 825-க்கு விற்கிறார்கள்.இதனால் நடப்பு சம்பா பருவத்திலேயே இந்த வகை உரத்தின் விலை ரூபாய் 1000  வரை உயர வாய்ப்புள்ளது.விலை உயர்வு மட்டுமல்ல உரத்தின் மணி மற்றும் தழைச்சத்தின் அளவு 18:46 என்ற அளவில் இருந்து 16:44 என்ற அளவாக குறைத்தும் இரட்டிப்பு வழிகளில் உரமுதலாளிகள் கொள்ளை அடிக்க ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள்.

உரத்தட்டுப்பாடு,மின்தடை,மழை,வெள்ளம்,பூச்சி,நோய்,டீசல் விலை உயர்வு என ஆயிரம் பிரச்சனைகளைச் சந்தித்து,சமாளித்து நெல்லை உற்பத்திச் செய்து விற்பனைக்குக் கொண்டு சென்றால்,ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகள் தமக்கிடையே கூட்டமைப்பை ஏற்படுத்திக்கொண்டு போட்டியை தவிர்த்து விடுகின்றனர்.இதனால் தற்போதைய குறுவை சாகுபடியில் நெல் கிலோவுக்கு ரூபாய் 7 மட்டுமே விலை போகிறது,ஆனால் அரிசியோ கிலோவுக்கு ரூபாய் 30 விற்கிறது.ஒப்பீட்டு அளவில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விட, கூடுதல் விலை கிடைக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடப்பு குறுவை பருவத்தில் பெரும்பாலானவை திறக்கப்படாதது,நெல் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

ஆனால்,அதே நேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்க வெளிநாட்டு,உள்நாட்டு முதலாளிகளை மத்திய,மாநில அரசுகள் உருவுகின்றன,சலுகைகளை வாரி இறைக்கின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கினால் 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,தனியாக சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு,இலவசமாக தண்ணீர்,மின்சாரம் அனைத்தையும் அள்ளித்தருகின்றனர்.சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அனுமதி பெற்ற 37 நிறுவனங்கள் அவற்றை இன்னும் அமைக்காததால்,அவர்கள் அவற்றை அமைக்க கால அவகாசத்தை நீட்டித்து வாலாட்டுகின்றனர் ஆட்சியாளர்கள்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 5-10 ஆண்டுகள் சலுகை என்று அறிவித்தாலும்,இந்த சலுகை காலம் முடிந்தவுடன் தமது நிறுவனங்களின் பெயர்களை மாற்றிக்கொண்டு  வேறு புதிய பெயர்களில்  தொடர்ந்து இலவச சலுகைகளை அனுபவிக்கின்றனர்.இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழில் தொடங்கும் உள்நாட்டு,வெளிநாட்டு முதலாளிகள் அரசின் சலுகைகளை பெறுவதற்காகவே தொழில் தொடங்கி கொள்ளை அடிக்கின்றனர்.தனியே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசிடம் அனுமதி பெற்ற பல நிறுவனங்கள் அரசின் மூலம் தமக்கு கிடைத்த நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றி விற்றுவிடுவதும் நடந்தே வருகிறது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் நாட்டிற்கு எந்தவிதமான லாபமும் இல்லை.இந்த மண்டலங்களில் இந்திய அரசின் சட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது.இதனால் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவர்களால் கொலையே செய்யப்பட்டாலும், நாம் நமது  நாட்டின் சட்டப்படி கேட்க முடியாது! இதுதான் இந்தியா வல்லரசு ஆகும் லட்சணமாம்! நம்புங்கள்!

ஓட்டு சீட்டு அரசியல்வாதிகளோ,அதிகாரவர்க்க கும்பலோ சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உற்பத்திச் செய்யப்படும் பொருளையா அன்றாடம் தமது பசிக்கு தின்கிறார்கள்? அல்லது அம்முதலாளிகள் சாப்பிட்டுவிட்டு  பேளும் பீயை தின்கிறார்களா? இவர்கள் அதையும் செய்ய தயங்க மாட்டார்கள் மானம் கெட்டவர்கள்!

ஆனால்,நாம் நமது வாழ்வை இந்த நாய்களுக்கு பலிகொடுக்க முடியாது!

ஆகவே, விவசாயத்தை பாதுகாப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்!! நாட்டை பாதுகாப்போம்!!! வாரீர்!  

தொடர்புடைய பதிவுகள்:





5.ஊழல்:கயவாணி அண்ணா ஹசாரேவும், நக்சலைட்டுகளின் நேரடி நடவடிக்கையும்... !




Wednesday, 7 September 2011

நாங்கள்.........

            இந்திய மக்களில் பெரும்பாலானோருக்கு அன்றும்,இன்றும் வாழ்வு தந்தது,தருவதுவிவசாயம்.அந்த விவசாயம் இன்று அன்னியர்களுக்காக ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் விவசாயத்திலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படிஓடுபவர்கள் மற்றொரு பொருளுற்பத்தி துறைக்கு செல்லவில்லை.மாறாக நாட்டில் வாங்கும் திறன் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் வேலைகளில், ஏற்கனவே உள்ளவர்களின் வாய்ப்புகளை பங்கிட்டுக்  கொள்கிறார்கள்.






ஆகவிவசாயத்தின் அழிவு  மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்.இதை பல்வேறு வழிகளில் ஆட்சியாளர்கள் மூடி,மறைக்க முயன்று வருகிறார்கள். இவைகளை அம்பலப்படுத்தி,இதற்கு எதிராக விவசாயிகளை மட்டுமல்ல சமூக பொருப்புள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கிலே தான்.இந்த இணையதளத்தை நாங்கள் துவக்குகிறோம்.எமது இந்த முயற்சிக்கு ஆதரவும்,ஒத்துழைப்பும் நல்குமாறு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

Friday, 13 August 2010

சாகும் கலை…....!

     சாகும் கலை....!
 
 
 
    
 

விவசாயமா? செய்யாதே!
விளைந்த பொருளுக்கு
விலை கிடைக்காது
நிலத்தை விற்று பணமாக்கு
பெற்றப் பிள்ளையை
வெ...ளி நாட்டுக்கு அனுப்பு
வாங்கியவன் பிள்ளை
காரில் பயணம்
உனது பிள்ளை
விமானத்தில் பயணம்
பாலைவனப்பாம்பு காறித்துப்புதாம்      
கவலைப்படாதே துடைத்துவிடலாம்
உயிரோடு இருந்தால் பணம்
செத்தால் பிணம்
அன்னியப் பணம் அரசுக்கு
இந்தியப் பணம் உனக்கு
நீ பணத்தை சாப்பிடு
உன்னை கழுகு சாப்பிடும்!