விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label அணு உலை. Show all posts
Showing posts with label அணு உலை. Show all posts

Thursday, 13 September 2012

கூடங்குளம் : உயிர் வாழ ஒன்று சேர்வோம்!

              தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும் மக்கள், போலீசின் கடுமையான  தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.




     போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார் போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

     சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது.  நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத் தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை  காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம் மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.

     கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள், தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர். தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில் முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை செய்கின்றன.

     போராட்டக்குழு தலைவர் தன்னை  காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள் அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து சென்றுள்ளார்.

     இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டு,  கைதாவது என்பது வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இருந்தது.

     கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை. அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது முட்டுச்சந்தில்  சிக்கிக் கொண்டுவிட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு, முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள்  அனுமதிக்க போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன் உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.

     இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட வழிமுறையை  தொடரப் போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின் இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற  தன்மையைத்தான்  கோருகிறது. கடல் தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.

     போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.

     அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம் வட்டார மக்களின்,  அதிலும் மீனவ மக்களின் போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும் முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.

     ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும் அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.

     தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன. மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத  புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப்  போனது.மொத்தத்தில் இவர்கள் தமது இயலாமையை, சமவெளிப்பகுதியில் வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”, என்கின்றனர்.

     இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள் அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை  ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி  மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.

     இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு மாற்று ஏதுமில்லை.

     ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல. இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்  நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும். மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில் நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.

     எனவே நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

     கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது.  இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள் மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில் மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.

     தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும் மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன் ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.


     எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம் செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!

தொடர்புடைய கட்டுரைகள்:

Friday, 30 March 2012

மின்கட்டண உயர்வுக்கு காரணம்:விவசாயிகளா,பன்னாட்டு நிறுவனங்களா?

தமிழக மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் இன்னல்களில் இப்போது முதன்மையான இடம் பிடித்துள்ளது மின்வெட்டே ஆகும்.அன்றாடம் எப்போது மின்சாரம் வரும்,போகும் என்பது யாருக்கும் தெரியாது.குறைந்தது ஒரு நாளைக்கு பத்துமணி நேரமாவது மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.இதனால் மக்களின் அன்றாட வாழ்வே நிலை குலைந்து போகிறது.சிறு தொழில்கள்,விவசாயம் ஆகியவை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.


மின்கட்டண உயர்வு



மின் வெட்டு


மேற்கண்ட இன்னலோடு மேலும் ஒன்றும் சேரப்போகிறது என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயா அறிவித்துள்ளார்.தமிழநாடு மின்சார வாரியம் திவாலாகும் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதை தடுக்க இழப்பை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.விரைவில் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் மின்வாரியத்தை காப்பாற்ற முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சந்திக்கும் இழப்பின் காரணமாக திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் இந்த இழப்பு யாரால்,எதனால் ஏற்பட்டது என்பதை அறிவிக்கவில்லை.
ஆனால்,இந்த இழப்பை ஈடுகட்ட அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறையான மக்கள் மீதான மின்கட்டண உயர்வின் மூலம் இழப்பிற்கு மக்கள்தான் காரணம் எனபதை போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.அதிலும் தமிழக மக்களில் பெரும்பான்மையினரான விவசாயிகள் மீதுதான் இக்குற்றச்சாட்டை மறைமுகமாக ஜெயா சுமத்தியுள்ளதுடன், அதற்கான தண்டனையையும் அறிவித்துள்ளார். அதுதான் மின்கட்டண உயர்வு.

மின்கட்டணத்தை உயர்த்தப்போகிறேன் என்று அறிவித்துள்ளாரே தவிர விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்வேன் என்று முதல்வர் அறிவிக்கவில்லையே.அப்படியிருக்கும் போது விவசாயிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளார் என்று எப்படி கூறமுடியும் என்ற வினா எழலாம்.உண்மைதான் முதல்வர் நேரடியாக விவசாயிகளுக்கு தண்டனை அறிவிக்க வில்லைதான்.

ஆனால் மின்கட்டண உயர்வால அனைத்து பொருட்களின் விலையும்,மின்கட்டண உயர்வுக்கு ஏற்ப உயர்ந்துவிடும்.நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களும்,நாட்டின் இதரப்பிரிவு மக்களோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவான வருவாய் உடையவர்களுமான விவசாயிகள், விலைவாசி உயர்வின் காரணமாக தமது வாங்கும் சக்தியை மேலும் இழப்பார்கள்.இதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகும்.

நாட்டிலுள்ள மக்கள் பிரிவினரிலேயே விவசாயிகளுக்கு மட்டும்தான் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குகிறது.எனவே மின்வாரியம் சந்திக்கும் இழப்புக்கு காரணமே விவசாயிகள்தான் என்ற தோற்றத்தையும் அரசு மக்களிடையே தோற்றுவித்துள்ளது,உண்மையில் மின்வாரியம் சந்திக்கும் இழப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தால் தான் ஏற்படுகிறதா?வேறு ஏதாவது காரணங்கள் உண்டா?போன்ற வினாக்களுக்கு ஆம்,இல்லை என்ற ஒற்றை வார்த்தை மூலம் விடை காண முடியாது.

மின் உற்பத்தி,நுகர்வு,நிர்வாகம் ஆகிய அம்சங்களை முழுமையாக கணக்கிலெடுத்து ஆய்வு செய்தால்தான் இன்று மின்சார வாரியம் சந்திக்கும் இழப்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.இப்படி உண்மை விவரங்களிலிருந்து சரியானதொரு முடிவுக்கு வந்தால்தான், இதை களைவதற்கான தீர்வு என்ன என்பது பற்றிய சரியான முடிவுக்கும் நாம் வரமுடியும்.

எனவே 1947-க்கு பிந்தைய தமிழகத்தின் மின் உற்பத்தி,மின் தேவை,நுகர்வு,மின் ஆற்றல் மூலம் விளைந்த பொருளுற்பத்தி அகியவற்றை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்,

வ.எண்
ஆண்டு
மின் பயன்பாட்டு
அளவு மெகாவாட்டில்
மின் பயன்பாட்டு அதிகரிப்பின் அளவு மெகாவாட்டில்
1
1951
110
-
2
1951-61
301
191
3
1961-74
1470
1169
4
1974-80
2224
954
5
1980-90
3344
920
6
1990-97
6019
2675
7
1997-2002
7924
1905
8
2002-2007
10100
2176
9
2007-2011
12000
1900

மேலே கண்ட அளவில்தான் தமிழகத்தின் மின்தேவை அதிகரித்துவந்துள்ளது.இந்த தேவை அதிகரிப்பில் யார்,யார் எந்த விதத்தில் மின்சாரத்தை நுகர்ந்துள்ளனர் என்ற விவரத்தையும் இப்போது பார்ப்போம்.

வ.எண்
நுகர்வோர் பட்டியல்
மின்சார பயன்பாடு சதவிகிதத்தில்
மொத்த நுகர்வோரில் எண்ணிக்கை சதவிகிதத்தில்
1
தொழிற்சாலை
34.92
2.41
2
வர்த்தக நிறுவனங்கள்
10.43
12.63
3
வீடுகள்
27.5
66.56
4
விவசாயம்
20.93
8.83
5
பிற
6.67
9.57

மேலே கண்ட புள்ளி விவரங்களில் இருந்து எந்தத்துறையினர் மிகக் கூடுதலாக மின்சாரத்தை நுகருகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும்.
விவசாயம் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்துவோர் மொத்த நுகர்வோரில் 75.39% பேர்.இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவு 48.05%

மொத்த நுகர்வோரில் வெறுமனே 15.05% பேரே உள்ள தொழிற்துறையினரும்,வர்த்தக நிறுவனத்தினரும் நுகரும் மின்சாரத்தின் அளவோ 45.35%

விவசாயம் என்று தனியே பிரித்து பார்த்தால் மொத்த நுகர்வோரில்  8.83% பேரான இவர்கள் நுகரும் மின்சாரத்தின் அளவோ வெறுமனே 20.93% மட்டுமே

ஆனால் மொத்த நுகர்வோரில் 2.41% பேரான தொழிற்துறையினர் நுகரும் மின்சாரத்தின் அளவோ 34.92% ஆகும்.

அப்படியானால் மின்சாரத்தை அதிகமாக நுகரும்துறை தொழிற்துறையே தவிர விவசாயம் அல்ல.

இனி எதிர்காலத்தில் விவசாயத்திற்கும்,வீடுகளுக்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கப் போவதில்லை.ஏனென்றால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் அளவிற்கு வேளாண் பரப்பளவு குறைந்துவிட்டது.இது இனிவரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதேபோன்று தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் ஏறத்தாழ மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டதால் இதற்கான மின்தேவையும் அதிகரிக்கப்போவதில்லை.

ஆனால் இதற்கு நேர் எதிராக தொழிற்துறைக்கும்,வர்த்தகத்திற்குமான மின் தேவை அதிகரிக்கும்.

எனவே எதிர்கால மின்சாரத்தேவை என்பது முக்கியமாக தொழிற்துறைக்குதான் அவசியமாகிறது.

ஆனால் நமது ஆட்சியாளர்களோ, மின்சாரத்தின் தேவை அனைத்துப்பிரிவு மக்களுக்கும் அதிகரிக்கும் என்பது போல பேசிவருகின்றனர்.மின்சார உற்பத்தியின் அளவை அதிகரிக்காவிட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பீதியூட்டுகிறார்கள்.இப்படி பீதியூட்டுவதன் மூலம் அணு சக்தியினால் மூலம் கடல்வளம்,விவசாயம்,சுற்றுச்சூழல்,மக்களின் உடல்நலம் ஆகியவற்றுக்கு ஏற்படப்போகும் ஆபத்தை மறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதாவது தொழிற்துறையின் தேவைக்காக மொத்த நாட்டு மக்களின் வாழ்வையும் குழிதோன்ற புதைக்க முயற்சிக்கிறார்கள்.

 இங்கு தொழிற்துறையினர் என்றால் அவர்களில் பெருபான்மையினர் வெளிநாட்டு நிறுவனங்கள்தான்.இவர்களின் வருகைதான் நாட்டின் முன்னேற்றம் என்று மத்திய,மாநில அரசுகள் மக்களிடையே கூறிவருகின்றனர்.இப்படி கூறுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும்,வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகின்றனர்.இவர்களால் நமது நாட்டிற்கு எவ்வித நன்மையும் இல்லை.
அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் தொடங்கினால் அவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாகவும்,அதன் பிறகு சலுகை விலையிலும் மின்சாரம் தருகின்றனர்.தண்ணீரூம் இலவசமாக தருகின்றனர்.இதே போன்று வரியும் விதிப்பதில்லை.

இந்தியாவில் தொழில் தொடங்குவதால் இலவசமாக மின்சாரம்,தண்ணீர்,மலிவான விலையில் மனித உழைப்பு,வரி இல்லாதது ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதற்குத்தான் அந்நிய நிறுவனங்கள் இங்கு படையெடுக்கின்றனர்.

அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வளவு சலுகைகளை வாரி வழங்கும் மத்திய,மாநில அரசுகள் உள்நாட்டு தொழிற்துறைக்கு குறிப்பாக சிறு தொழில்களுக்கு எவ்வித சலுகையும் வழங்குவதில்லை.

மேற்கண்ட விவரத்தை தொகுத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் மின் தேவைக்கான அதிகரிப்பு அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் ஏற்படப்போகிறது.அதோடு இப்போது தொழிற்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் பெருமளவை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் உறிஞ்சிக்கொள்கின்றன.அதுவும் இலவசமாக.
ஆனால் நாட்டில் 80% மக்களுக்கு இன்றளவும் வாழ்வுக்கான ஆதாரமாக உள்ள விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் மின்வாரியம் இழப்பை சந்திக்க நேருவதற்கான காரணம் என ஆட்சியாளர்கள் வதந்தி பரப்புகின்றனர்.

மின்வாரியம் மிகப்பெரிய இழப்பை சந்திப்பதற்கான மிக முக்கியக் காரணம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதும்,மின் வாரிய நிர்வாக சீர்கேடு,ஊழல்,மின் திருட்டு,மின் கம்பிகள் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவைதான் மின்சாரத்துறையின் இழப்புக்கு காரணமாகும்.
மின்சாரத்துறையை இழப்பிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் மேற்கண்டவற்றை சரி செய்ய வேண்டும்.இதை செய்வதன் மூலம் மின்வாரித்தை லாபகரமான நிலைக்கு உயர்த்த முடியும்.

ஆனால் தமிழக அரசோ இதை செய்வதற்கு பதில் மின்கட்டணத்தை உயர்த்தி அப்பாவிகளான தமிழக மக்களுக்கு தண்டனை தர முயற்சிக்கிறது.

மத்திய அரசோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, கூடங்குளம் அணு உலை மூலம் தமிழக மக்களின் உயிர்களை காவு கேட்கிறது.அணுக்கதிர் வீச்சின் மூலம் கடல்,நீர்,நிலம்,காற்று,சுற்றுசூழல் அனைத்தையும் மாசுபடுத்தி தமிழகத்தை பாலைவனமாக்கத்துடிக்கிறது.

இந்த அநீதிகளை இனியும் நாம் சகித்துக்கொள்ள போகிறோமா? தொடரும்….. 


 18 டிசம்பர்-2011 அன்று சூறாவளியில் பிரசுரம் ஆன கட்டுரை, தற்போது மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்:

தொடர்புடைய கட்டுரைகள்:



Wednesday, 21 March 2012

கூடங்குளத்தில் வெறிநாய்களும்,தெரு நாய்களும்! எச்சரிக்கை!

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் முடிந்த அடுத்த நாளே, கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலையை அறிவித்திருக்கிறது.ஈழத்தமிழர்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலையை அடுத்து இப்போது தமிழக தமிழர்கள் மீதான படுகொலைக்கு ஆயத்தமாகி வருகிறது இந்தியா! இந்தியாவின் ஒரு அங்கம் தமிழகம் என்று கூறும் இந்திய அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே முற்றுகை இட்டுள்ளது.ராதாபுரம் வட்டத்தில் 144 தடை உத்தரவும் ,இடிந்தகரைக்கு மின்சாரம் ,குடிநீர்,பால்,காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே கூட இந்த தாக்குதல்கள் கூடங்குளம் மக்கள் மீது நடந்துகொண்டிருக்கலாம்.





தற்போது கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ள போலிசு வெறிநாய்கள்.


தமிழக அரசு அணு உலையை திறக்க எடுத்துள்ள முடிவும்,தமிழ மக்கள் மீது இந்திய அரசு தொடுக்கப்போகும் தாக்குதல்களும் நாம் எதிர்பாராதது அல்ல.காவல்துறை என்றப் பெயரில் திரியும் வேட்டை நாய்களுக்கு வேட்டையாட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.அவைகள் மக்களின் ரத்தம் குடித்து ஆனந்தக்கூத்தாட நாக்கை தொங்க விட்டுக்கொண்டு திரிகின்றன.

மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கும், அதை நியாயப்படுத்துவதற்கும் போராட்டக்குழுவையும்,மக்களையும் பயங்கரவாதிகளாக உருவகப்படுத்தும் வதந்திகளை வேட்டைநாய்கள் ஊடகங்கள் மூலம் பரப்பிவருகின்றன.இதை உறுதிப்படுத்தும் வகையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டால், போலீசு மீது போராட்டக்காரர்கள் வெடுகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுப்பார்கள் என்று உளவுத்துறையினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால் தமது போராட்டத்தையும்,இந்திய அரசு தம்மீது தொடுக்கப்போகும் தாக்குதல்களையும் மக்கள் பலத்தால் மட்டுமே போராட்டக்குழு எதிர்கொண்டது,எதிர்கொள்ளப்போகிறது.
இந்திய அரசை ஆயுதபலத்தால் எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது என்பது அவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

கூடங்குளம் மக்களை வேட்டையாட இந்திய அரசு ஆயத்தமாகிவிட்ட அதே நேரத்தில்,இந்த வேட்டையை காரணம் காட்டி போராட்டக்குழு மீது பழிபோட்டு அதில் ஆதாயமடையகூடங்குளம் மக்களை தன்பக்கம் இழுக்க-தெரு நாய்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.

எதிரிகள் ஏவிவிட்டுள்ள வேட்டைநாய்களை அடையாளம் கண்டுள்ள கூடங்குளம் மக்கள், இந்த தெருநாய்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனென்றால் வேட்டை நாய்கள் தலைமையை ஆயுதத்தால் தாக்கி மக்களை வேட்டையாட துடிக்கிறது.தெரு நாய்களோ தலைமை மீது பழிபோட்டு,தகுதியற்றது என்றுக்கூறி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆதாயம் அடைய துடிக்கிறது.

இருவகைநாய்களும் இருவேறு வழிமுறைகளை கையாண்டாலும் இருவரின் நோக்கமும் ஒன்றுதான்.வேட்டை நாய்களின் வேலையை எளிமையாக்குவதே தெருநாய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியாகும்.வேட்டைநாய்களை எதிர்கொள்ள,கூடங்குளம் மக்களே தெருநாய்களை உங்கள் அருகில் விட்டுவிடாதீர்கள்,எச்சரிக்கை!

தொடர்புடைய கட்டுரைகள்: