விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Monday, 18 March 2013

மாணவர் போராட்டம் - அன்று அறுவடை செய்தது அண்ணா! இன்று?

இராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தண்டனையை நிறுத்தக்கோரி தமிழகம் எங்கும் எழுந்த உணர்வலைகளுக்கு பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி தமிழகம் எங்கும் மீண்டும் ஓர் உணர்வலை தற்போது எழுந்துள்ளது.அதிலும் கல்லூரி மாணவர்களிடையே உருவாகியுள்ள இந்த உணர்வலை, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எழுந்த எழுச்சிக்கு இணையானதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தை கடந்த இரண்டாண்டுகளாக இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டுக்குக் எதிராகக் கூட எழாத இந்த உணர்வலை ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களை அதிலும் மாணவர்கள், இளைஞர்களை உணர்ச்சி கொள்ள ஒரே அம்சமாக இருந்து வருவது ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமே என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் இந்த உணர்வலை ஒரே சீரானதாக, ஒருங்கிணைக்கப்பட்டதாக அல்லாமல் வெவ்வேறான அளவிலும், தன்மையிலும் குழுக்குழுவான நடவடிக்கையாக சிதறிய அளவில் மட்டுமே இருந்துள்ளது. இந்த ஒப்புமை இப்போது எழுந்துள்ள உணர்வலைக்கும் பொருந்துவதாகும்.தமிழக அரசியல் கட்சியினரிடையே எத்துனை பிளவுகள், குழுக்கள், கருத்துக்கள் உள்ளனவோ அத்துணையும் மாணவர்களின் போராட்டங்களின் ஊடாக வெளிப்பட்டு வருகிறது.
இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற வகையிலான குரல்கள்தான் பெரும்பான்மையாக வெளிபட்டு வருகிறது.அமெரிக்காவின் இந்தத்  தீர்மானம் உண்மையில் இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கையை அம்பலப்படுத்தக் கூடிய உள்ளடக்கத்தை கொண்டதல்ல என்ற மிகச்சாதரண உண்மைக் கூட மாணவர்களிடையே  காணப்படவில்லை.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா முன்மொழிந்துள்ள திருத்தம் இதை முழுமுற்றாக சாகடித்துவிட்டது.அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை மட்டுமல்ல இறுதிகட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களையும் அன்று கொலைசெய்ததும் இந்தியாதான்.இந்திய நேரடி ராணுவ பங்கேற்புடன் தான் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தனது சொந்தநாட்டு அரசின் இந்த அநீதிக்கு எதிராக போராட முடியாத, நாம் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போவானாம்!
நமது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் நித்தம், நித்தம் சாகடிக்கப்படுகிறார்கள். இந்திய அரசின் ஆதரவோடுதான் நாங்கள் உங்களைத் தாக்குகிறோம் என்று இலங்கை கடற்படையினர் நமது மீனவர்களிடையே பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு நமது பலவீனம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டப் பிறகும், அதற்கு எதிராக கிளர்தெழாமல் மீனவர்களை தன்னந்தனியாக தவிக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் நாம் ஈழத்தமிழர் உரிமைகளை  எப்படி பெற்றுத்தர முடியும்?
தனது அரசியல், பொருளாதார நலன்களுக்காக சொந்த நாட்டு மக்களின் உயிரைக் கூட காவு – காட்டி – கொடுக்கும் இந்திய அரசின்  கோரமுகத்தைக் கூட முற்றாக அடையாளம் காண முடியாமல், பாமர்களாக உள்ள நமக்கும், நமது போராட்டங்களுக்கும் இலங்கை அரசு எந்த அளவிற்கு மதிப்புக் கொடுக்கிறது என்பதற்கு ஆதாரம்தான் தமிழக மீனவர்கள் மீதான அதன் தாக்குதல்கள்.தமிழகத்தில் எந்த அளவிற்கு இலங்கை இனவெறிக்கு எதிரான உணர்வுகள் மேலோங்குகிறதோ, அந்த அளவிற்கு அது இலங்கை கடற்படையின் சிங்கள இனவெறியாய் தமிழக மீனவர்கள் மீது  பாய்கிறது.
தனது இரு கடற்படை வீர்ர்களுக்காக இத்தாலி அரசு இந்திய அரசுடனான தனது உறவையே முறித்துக் கொள்ள தயாராக இருக்கிறது.ஆனால் இந்திய அரசோ, தனது சொந்தநாட்டு மக்களின் ஆயிரக்கணக்கான உயிரையே இலங்கை அரசுக்கு காவு கொடுத்து அதனுடனான தனது உறவை பாதுகாத்துக்கொள்கிறது.
இத்தாலி அரசு தனது இரு கடற்படை வீரர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினால், அதனால் தனது சொந்த நாட்டு மக்களின்  எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சுகிறது. இந்தியாவுடனான உறவை விட தனது நாட்டு மக்களின் உணர்வே மேலானது என்று தீர்மானிக்கிறது.ஆனால் இந்திய அரசோ இந்தியாவிலுள்ள எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பற்றி மயிரளவிற்கு கூட கவலைப்படவில்லை.
இப்படி இந்திய அரசு நமது உணர்வுகளை இந்த அளவிற்கு உதாசீனப்படுத்துகிறதே அது ஏன் என்பதைப்பற்றி என்றைக்காவது நாம் பரிசீலித்திருக்கிறோமா?இப்படி பரிசீலிப்பதற்கு அன்று நமது தந்தை பெரியார் இருந்தார். நமது  தந்தையின் கருத்துக்கள் நம்மை ஒருங்கிணைத்தது. இந்த ஒருங்கிணைப்புகள் இந்தி எதிர்ப்புப் போராட்டமாக, மாணவர்களிடையே வெடித்தது அன்று!இப்போது தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ள உணர்வலைகளை இந்தி எதிர்ப்பு  போராட்டத்தோடு ஒப்பிடுவதாலேயே இப்போராட்டம் அதனோடு இணைந்து விடாது.
இப்போராட்டம் ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். சரியான இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.அன்று நமது தந்தையையே காட்டிக் கொடுக்க ஒரு அண்ணதுரை இருந்தார். இன்று ஆயிரம் அண்ணாதுரைகள் அணி, அணியாக  அணிவகுத்து நிற்கிறார்கள்!ஆயிரம் தடைகள் அணி வகுத்தாலும் அதையெல்லாம் தகர்க்கும் ஆற்றல் மாணவர்களுக்கு உண்டு. அதை அவர்கள் செய்து முடிக்க உறுதுணையாய், ஓரணியில் அணிதிரள்வோம், ஆதரவளிப்போம் !
தொடர்புடைய பதிவுகள்:

1.தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!



Thursday, 15 March 2012

ஈழப்படுகொலை : இந்தியாவை காக்கும் அமெரிக்காவின் நாடகம்!

விடுதலைப் புலிகள் உடனான இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது.உலக வரலாற்றிலேயே இப்படியொரு படுகொலையை உலகம் இதுவரை பார்த்ததில்லை.அதற்காக இந்த உலகம் இலங்கை அரசு மீது இதுவரை குறிப்பிடும்படியான எந்த ஒரு கண்டணத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இப்போது முதன்முறையாக அமெரிக்கா இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பந்தமாக ஐநா மனித உரிமைக்கவுன்சிலில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.இந்தத் தீர்மானம் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும்,ஊடகங்களும் தற்போது விவாதித்து  வருகின்றன.
இலண்டனில் இருந்து வரும் சேனல்- 4 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் இளையமகன் சுடப்பட்டுப்பட்டு இறந்து கிடக்கும் காட்சியை ஒளிபரப்பி எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியுள்ளது.

 






ஈழத்தில் இந்திய ராணுவம்.


இந்த விவகாரம் இந்திய நாடாளுமன்றத்திலும் தமிழக உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுவருகிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுக்கிறார்கள் என்பதுதான்!

ஆனால் மாமா மன்மோகன்சிங் இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்தையே நாடாளுமன்றத்தில் அறிக்கையாக தந்துள்ளார்.மாமாவுக்கு அமெரிக்காவையே எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டதைப்பற்றி பலரும் தமது புருவத்தை உயர்த்துகிறார்கள்.ஆனால் மாமா மிகவும் இயல்பாக இந்த நிகழ்வை எதிர்கொள்கிறார்.


பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி ஈராக்,ஆப்கானிஸ்தான்,லிபியா ஆகிய நாடுகளை தாக்கி ஆக்கிரமித்த அமெரிக்காதற்போது அடுத்ததாக இப்போது ஈரானை தாக்க எத்தனித்து வருகிறது.இதன் ஒரு அங்கமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணையை உலக நாடுகள் வாங்கக்கூடாது என்று நிர்பந்தித்துவருகிறது.இதில் நமது மாமா செய்யவேண்டிய வேலையை கொடுத்தும் அனுப்பியுள்ளது.அமெரிக்கா காலால் இட்ட வேலையை தலையால் செய்து முடிக்கும் மாமா அதற்கான அனைத்து பணியையும் தொடங்கிவிட்டார்.

ஆனால் பேரழிவு ஆயுதம் போன்று ஈழப்போரும்,முள்ளிவாய்க்கால் படுகொலையும் கற்பனை நிகழ்வுகள் அல்ல.ஆதாரபூர்வமான உண்மைகள்.இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்கா,தனது தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று எந்த வகையிலும் இந்தியாவை நிர்பந்திக்கவில்லை.அப்படி அமெரிக்கா செய்யாது என்று நமது மாமாவிற்கு நன்றாகவே தெரியும்.
நமது மாமாவிற்கு தனது நாடகத்தில் இந்த கதாபாத்திரத்தை வழங்கியதே அமெரிக்காதான்.மாமாவிற்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தில் தம்மையும் இணைத்து கொண்டுள்ளனர் தமிழக அரசியல் கட்சியினர்.மொத்தத்தில் பெரும் நாடகம் நம் கண்முன்னே அரங்கேறிவருகிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தபோதும்,இப்போதும் அமெரிக்காவும் தமிழக அரசியல் கட்சியினரும் இப்போரின் கதாநாயகனை,படுகொலையின் சூத்திரதாரியை நன்கு திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்.

போரை நடத்தியதும்,முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்தியதும் இலங்கைதான்.இது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான்.எனவே அனைவருக்கும் தெரிந்த செய்தியை மீண்டும் பேசுவதில் சிக்கல் ஒன்றும் புதிதாக எழப்போவதில்லை.ஆனால் மீண்டும்,மீண்டும் அனைவருக்கும் தெரிந்த செய்தியை பேசுவதன் மூலம் அனைவருக்கும் தெரியாத செய்தி அவர்களுக்கு தெரியாமலேயே மூடி மறைக்கப்படுகிறது!

இந்தப் போரை நடத்தியதால் இலங்கைக்கு என்ன லாபம்? இலங்கை இரண்டாக பிளவு படுவதை தடுத்தது இலங்கைக்கு லாபம் என்று பாமரத்தனமாக நாம்  நம்பிக் கொண்டிருக்கிறோம்.இலங்கை இரு துண்டாவது நின்றுபோனது என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இந்தப்போரின் மூலம் உண்மையில் ஈழத்தை இலங்கை இழந்துபோனது.ஈழத்தை ஈழத்தமிழர்களிடம் இழக்காத இலங்கை, அதை இந்தியாவிடம் இழந்துவிட்டது.ஆதாரம்தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!
http://suraavali.blogspot.in/2011/09/blog-post.html )இந்திய ஈழத்தில் இலங்கை தற்போது இந்தியாவுக்காக காவல்காக்கும் பணியைத்தான் செய்துவருகிறது.

ஈழம் இந்தியாவின் பிடிக்குள் வந்துவிட்டது என்றால் அது அமெரிக்காவின் பிடியில் வந்துவிட்டது என்றுப்பொருள்.ஏனென்றால் இந்தியா அமெரிக்காவின் அடிமை.எனவே தனது அடிமையைக் காக்கும் அதே நேரத்தில், தன்னையும் மனித உரிமை போராளியாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாடகம்தான் ஐநா மனித உரிமைக்கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம்.

அன்று தனது தெற்காசிய மேலாதிக்க நலங்களுக்கு அடிபணியாத இலங்கை அரசை பணியவைக்க ஈழத்தமிழர்களின் உரிமைப்போரில் தலையிட்டு ஈழப்போராளிகளுக்கு பயிற்சியும், ஆயுதத் தளவாடங்களையும் தந்து இலங்கை அரசை மிரட்டியது, அன்றைய இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு.

இலங்கை அரசு பணிந்து போன பிறகு,தனது நோக்கத்திற்கு எதிராக நின்ற ஈழப்போராளிகள் மற்றும் ஈழமக்கள் மீது போர் தொடுத்து தோல்வி கண்டது இந்திராவின் மகன் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு.

தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், ஈழமக்களுடனான போரில் தனது தோல்விக்கு பழிதீர்க்கவும் இந்தியா நடத்திய போர்தான் ஈழ இறுதிப் போரும்,முள்ளிவாய்க்கால் படுகொலையும்.

எனவே முன்பு தன்னை தோற்கடித்த விடுதலைபுலிகளை மட்டுமல்ல,ஈழமக்களையும் பழிக்கு,பழிவாங்க இந்திய அரசு நடத்தியப் போர்தான் ஈழ இறுதிப்போர்.இதனால்தான் போராளிகளை மட்டுமல்ல அப்பாவி ஈழத்தமிழ் மக்களையும் உளவு பார்த்து,திட்டம் தந்து,ஆயுதம் தந்து,நிதி தந்து,ராணுவ நிபுணர்களை அனுப்பி முள்ளிவாய்க்காலில் உலகிலேயே மிகப்பெரிய மனிதப்படுகொலையை நிகழ்த்தியது இந்தியா.மொத்தத்தில் இந்தியாவிற்காக இலங்கை நடத்திய போர்தான் ஈழ இறுதிப்போர்.எனவே, இந்தியா எந்த நிலையிலும் இலங்கையைக் காட்டிக்கொடுக்காது.இந்தியா அப்படிச்செய்யும்,செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாளித்தனமேயாகும்.தனது தெற்காசிய மேலாதிக்க நலன்களுக்காக தனது சொந்த நாட்டு தமிழ் மீனவர்களையே இலங்கைக்கு காட்டிக்கொடுக்கும் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு அதரவாக செயல்படும்,செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது!


ஈழப்படுகொலையை கண்டிப்பவர்கள் நேர்மையானவர்கள் என்றால் அவர்கள் முதன்மை குற்றவாளியான இந்தியாவைத்தான் முதலில் கண்டிக்க வேண்டும்.தண்டிக்க வேண்டும்.இந்தியாவையும் இணைத்துதான் ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்திருக்க வேண்டும்.

ஐநாவும் நேர்மையான சக்தியல்ல.அமெரிக்காவும் நேர்மையா சக்தியல்ல.அமெரிக்காவின் கைப்பாவைதான் ஐநா.எனவே தான் அமெரிக்க நாடகத்திற்கு மேடை அமைத்துத் தருகிறது ஐநா.

அமெரிக்காவின் இந்த நாடகத்தில் துணை நடிகர்களாக நடிக்கிறார்கள் தமிழக அரசியல்கட்சியினர்! மாபெரும் முள்ளிவாய்க்கால் கொலைகாரர்களை மூடிமறைக்கும்இந்த நாடகத்தில் பங்கேற்க நம்மையும் அழைக்கிறார்கள்! நீங்கள் தயாரா?

தொடர்புடைய பதிவுகள்:

1.தீ:நமக்கல்ல இனி எதிரிக்கு வைப்போம்!