விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label தகுதித்தேர்வு. Show all posts
Showing posts with label தகுதித்தேர்வு. Show all posts

Wednesday, 29 August 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுமுடிவு: இந்திய சமூகத் தரத்தின் வெளிப்பாடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த சூலை-12ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 6,76,763 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த 6,74,000 பேருக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி மறுத் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

எதிர்கால சமூதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் இந்த பரிதாபகரமான நிலையைக்  கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ஆசிரியர்களானால் நமது இளைய சமுதாயம் என்ன ஆகும்? என்று வினா எழுப்புகிறவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில்  தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர்களாக ஆகப்போகிறவர்கள் மட்டுமல்ல. இப்போதே இவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள்தான்.



இவர்கள் தான் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள்  என்றால் அப்பள்ளகளில் பயிலும் மாணவர்களின் தரம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தமது தகுதியையே நிரூபிக்க முடியாதவர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை எப்படி உயர்த்த முடியும்?

அரசுப்பள்ளி ஆசிரியர்களை விட பல மணிநேரம்  கூடுதலாக தனியார் பள்ளிகளில் பணிபுரிகிறார்கள் இவர்கள். மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் போதே  தமது கல்வி போதிக்கும் திறனையும், தமது அறிவாற்றலையும் இவர்கள் உயர்த்திக்  கொள்ள முடியும, உயர்த்திக் கொள்ளவும் வேண்டும்.

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்பதைத்தான், இந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் நமக்கு உணர்த்துகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி போதிப்பதில் இவர்கள் எவ்வித  நுட்பத்தையும் கையாளவில்லை என்பதும், இதற்கு மாறாக மனப்பாடம் என்ற வடிவத்தை மட்டுமே வழிவழியாக கையாளுகிறார்கள என்பதும் தெரிகிறது. தாம் கற்பிக்கும் பாடத்தை முழுமையாக, உள்ளார்ந்து புரிந்து கொண்டு, அப்படி புரிந்து கொண்டதை ஒவ்வொரு மாணவர்களின் இயல்புக்கும், தனித்தன்மைக்கும் ஏற்ப போதிப்பதுதான் ஆசிரியர்களின் அடிப்படையான பணியாகும். ஆனால் இவர்களிடம் அதற்கான அறிகுறி எதுவுமே இல்லை என்பதைத்தான் தேர்வு முடிவுகள் வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர் பணிக்கான இந்த அடிப்படை பண்பு இவர்களிடம் உருவாகாததற்கு, இவர்கள் உருவாக்கப்பட்ட விதம் தான் அடிப்படையாகும்.

தற்போது தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்கள், தனியார் பள்ளிகளில் கல்வி கற்று, தனியார் ஆசிரியர் நிறுவனங்களில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். இப்படிப்பட்டவர்களை  கொண்டு நடத்தப்படும் தனியார் பள்ளிகள் தான் தரமானவை என்று நாட்டு மக்களிடம் போதிக்கப்பட்டு, அவர்களும் அதை  எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் நம்புவதோடு அதையே உயர்வானதாகவும் கருதுகின்றனர்.

இவர்களின்  இந்த கண்ணோட்டமே அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இழிவாக பார்க்கவும் வைக்கிறது.  அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பதை தரக்குறைவாக கருதும் இவர்கள்தான், அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வேலைபார்ப்பதையே தமது இலக்காக வைத்துள்ளனர். தற்போது நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 24,343 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வே ஆகும்.

அரசுப்பள்ளிகளில்  கல்வி கற்க விரும்பாதவர்கள் அதில் பணியாற்றுவதையே வாழ்க்கையின் இல்லக்காக கொள்கின்றனர். தனியாரிடம் கொட்டிக் கொடுத்தப் பணத்தை அரசிடம்  திருப்பி எடுக்க முயற்சிக்கிறார்கள்.

தனியாரிடம் தாம் பெற்ற திறமை இன்மையை, அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வெகுமதியாக தர விரும்புகிறார்கள்.

தம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு தம்மை முட்டாள்களாக்கிக் கொண்டவர்கள், அதே பணத்தைக் கொண்டு அரசு பணியிடங்களை விலைக்கு வாங்கி, பணமில்லாத ஏழைப் பிள்ளைகளையும் முட்டாள்களாக்க துடிக்கிறார்கள். தம்மைப் போன்றே அனைவரையும் இருக்குமாறு இவர்கள் தமது செல்வாக்கின் மூலம் நிர்ப்பந்திக்கிறார்கள். இதே போல் உயர்கல்வி என்று வந்து விட்டாலும், குறிப்பாக மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு அரசுக்கல்லூரிகளில் உள்ள இடங்களை இவர்கள்தான் முதலில் ஆக்கரமித்துக் கொள்கிறார்கள். இப்படி நேர்மையற்ற வகையில் நடந்து கொள்வதுதான்  இந்திய சமூகத்தின் இயல்பாகும்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சமூகத்தை இழிநிலையில் வைத்திருப்பதும்  இந்த இழிந்த பண்புதான்.

படிநிலையாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள சாதிகள்,  தமக்கு மேலே உள்ள சாதி தம்மை அழுத்துவதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. அதற்கு மாறாக தம்மால் அழுத்தப்படும், தமக்கு கீழே உள்ள சாதியை இழிவுப்படுத்திப் பார்த்து  ஆனந்தமடைகிறது.

தமக்கு மேலே உள்ள அழுத்தத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு, தமக்கு கீழே உள்ளவர்களை தமது  அழுத்தத்தை  அவர்கள் விரும்பாவிட்டாலும் ஏற்குமாறு நிற்பந்திக்கிறது.

தமக்கு மேலே உள்ளவர்களிடம் உள்ள இழிவை, தமக்கு கீழே உள்ளவர்களுக்கு கடத்தும் ஊடகமாக தம்மை மேல் சாதி என்று கருதிக்கொள்ளும்  ஒவ்வொரு சாதியும் செயல்படுகிறது.

மேற்கண்ட பண்புதான் இந்திய சமூகத்தின் இயல்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது. இதுதான் இச்சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் வெளிப்படுகிறது.

மொத்தத்தில் நேர்மை இன்மையே இந்திய சமூகத்தின் இயல்பான பண்பாக திகழ்ந்தது, திகழ்கிறது,திகழவும் அனுமதிக்க போகிறோமா?