நாட்டில் அன்றாடம் ஆயிரம் பிரச்சனைகள்…. குடிநீர் இல்லை,சாலைகள் இல்லை,அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை,எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் லஞ்சம் தராமல் ஒரு காரியமும் நடப்பதில்லை.வேலையில்லை,விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையில்லை.சிறு தொழிலில் உள்ளவர்களுக்கோ எவ்வித உத்தரவாதமும் இல்லை.இப்படி மக்களுக்கு அன்றாடம் ஆயிரமாயிரம் பிரச்சனைகள். இவற்றை தட்டிக்கேட்கவோ,போராடவோ விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர வேறு எவரும் இல்லை என்ற அவல நிலை.
அண்மையில் சமச்சீர் கல்வி விவகாரத்துக்காக போராடியவர்கள் ஒரு சிலரே,ராஜிவ் கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் துக்கில் போட நாள் குறித்த மிகவும் உணர்ச்சி பூர்வமான பிரச்சனையில் கூட சமூகத்தில் ஆகப்பெரும்பான்மையோர் வேடிக்கையே பார்த்தனர்!
மேற்கண்ட பரிதாபகரமான சூழல்தான் தற்போது தமிழகத்தில் நிலவுகிறது.சமூக விவகாரங்களில் பங்கேற்கும், தலையிடும் நபர்களின் எண்ணிக்கை நாளும் குறைந்து கொண்டே போகும் அவலம்.
இப்படிப்பட்ட சூழலில்தான் தீடீர் என 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேர் தமிழகமெங்கும் சமூக பணியாற்ற களத்தில் குதித்துள்ளனர்.இவர்கள் தனியாக அல்ல,ஒவ்வொருவரும் குறைந்தது தம்மோடு ஒரு 20-பேரையாவது அழைத்தும் வந்துள்ளனர்.இது நம்மை திக்குமுக்காட வைத்துவிட்டது! மேற்கண்ட நபர்களின் எவருமே நேற்றுவரை, ஏன் இப்போது கூட தனது வீட்டிற்கு முன்பு சாலையின் குறுக்கே சாக்கடை ஓடினாலும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள்.மூக்கை பொத்திக்கொண்டு அடக்கம்,ஒடுக்கமாக சாலையை கடந்து சென்றவர்கள்.தனது வீட்டுற்குள் சாக்கடை நாற்றமடித்தாலும், அது தெரியாமல் இருப்பதற்காக தனது வீட்டினுல் வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டு இருப்பவர்கள்.இப்போது சமூக பணியாற்ற ஓடோடி வந்திருக்கிறார்கள்!
இவர்கள் சமூக பணியாற்ற களத்திற்கு வந்தவுடன் அரசின் வருவாய் பல மடங்காக உயர்ந்துவிட்டது.ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறதோ இல்லையோ, மக்கள் கேட்காமலேயே பாட்டில்,பாட்டிலாக சீமை சாரயம் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறது.வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தமிழக ’குடி’ மக்கள் நிம்மதியாய் உள்ளனர்.சுதந்திரமாய் வீதிகளில் வாந்தி எடுத்து,விழுந்து புரள்கின்றனர்.
நேற்றுவரை ஊரில் நாதியற்றவர்களாக இருந்தவர்கள் உட்பட அனைவரும் இவர்களின் நலன் விசாரிப்புகளில் நனைந்து போகிறார்கள்.மொத்தத்தில் தமிழகமெங்கும் அன்பும்,பந்தமும்,பாசமும்,நேசமும் அப்பப்பா என்னமாய் கரை புரண்டு ஓடுகிறது! இப்படிபட்ட நிலையை ஏற்படுத்தியுள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் என்பதற்கு பதில் ஆண்டுக்கு ஒருமுறை வரக்கூடாதா? என்று மக்களை ஏங்க வைக்கிறது!
ஒரு ஓட்டு ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை நல்ல விலைக்கு விலை பேசப்படுகிறது.உள்ளூராட்சி தேர்தல்களில் நிற்கும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 177 பேரும் அச்சகங்களை நோக்கி ஓடுகிறார்கள்.இந்த அச்சகங்களில் அன்றாடம் நடைபெறும் வேலைகளை விட நூறு மடங்குக்குமேல் வேலையும்,லாபமும் கொழிக்கிறது.கிராமங்களிலும்,நகரங்களிலும் உள்ள உணவகங்களில் உணவக உரிமையாளர்களால் சோறு வடித்து கொட்டமுடியாத அளவுக்கு விற்பனை சூடுபறக்கிறது.
இப்படி உள்ளூராட்சி தேர்தல் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கானோர் ஆதாயம் அடைகின்றனர்.தாங்கள் சமூக சேவைக்காக தேர்தெடுக்கப்படுவதற்கு முன்பே மக்களை இப்படி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் உள்ளூராட்சி வேட்பாளர்கள் தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் என்னவெல்லாம் செய்து மக்களை திகைப்பில் ஆழ்த்த போகிறார்கள் என்பதை இனி பார்ப்போம்.
ஊராட்சி மன்ற கூட்டங்கள் எங்கேயும்,எப்போதும் நடத்தப்படுவதே கிடையாது.இப்படி நடக்காத கூட்டங்கள் நடந்ததாகவும்,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் ஊராட்சி மன்றத்தலைவர் நீட்டும் இடங்களில் கைநாட்டு இடும்,கையோழுத்து போடும் ஒவ்வொரு பஞ்சாயத்து உறுப்பினருக்கும் ரூபாய் 50 இனாம்.இதோடு தீபாவளி,பொங்களுக்கு வேட்டி,சேலை ஊராட்சி மன்றத்தலைவரால் வழங்கப்படும்.100-நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு போகாமலேயே சம்பளம் கிடைக்கும்.
ஊராட்சிமன்றத்தலைவர் அன்றாட செலவினங்களுக்காக ரூபாய் 5ஆயிரம் வரை ஒவ்வொரு மாதமும் எடுத்துக்கொள்ளலாம்.இந்தத் தொகையை கொண்டு மக்களுக்கான குடிநீர், தெருவிளக்கு ஆகியவற்றை பராமரிக்கவேண்டும்.தெருவிளக்கு எரிகிறதோ இல்லையோ குழாயில் தண்ணீர்வருகிறதோ இல்லையோ பராமரிப்புத்தொகை மட்டும் மாதாமாதம் எடுக்கப்பட்டுவிடும்.மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இவற்றிற்கு நீர் ஏற்றும் மின்மோட்டார்கள், தெருவிளக்கு பராமரிப்பு ஆகிய பணிகளை ஒரு பொருளின் விலையைவிட ஒன்றுக்கு பத்தாக பில் எழுதி அதிகாரிகளுக்கு பாதி,தனக்கும் கடைக்காரருக்கும் பாதி என பிரித்துக்கொள்வது தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும்!
நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 100-பேர் வேலை செய்தால் 200-பேர் என பொய்கணக்கு எழுதி அதிகாரிகளுக்கு பாதி,மீதி ஊராட்சி எழுத்தர்,மக்கள் நலப்பணியாளர் ஆகியோருக்கு கொடுத்தது போக எஞ்சியதை தலைவர் எடுத்துக்கொள்வார்.
ஊராட்சியில் அமைக்கப்படும் சிமெண்ட் சாலைகள் வடிகால் வாய்க்கால்கள், அரசு கட்டிடங்கள் உட்பட அனைத்து ஒப்பந்த பணிகளிலும் ஒப்பந்ததாரர் தலைவருக்கு ஒரு பரிசுத்தொகையை தருவார்.அதை பெற்றுக்கொண்டு நடைபெறும் பணிகளின் தரத்தை பற்றி மக்களில் யாராவது கேள்வி கேட்டால் அவர்களை கையாளும் பொறுப்பை தலைவர் எடுத்துக்கொண்டு ஒப்பந்ததாரருக்கு பாதுகாப்பு தருவார்.
ஊரில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சித்தலைவரின் கூட்டுக்கணக்கிலும், பொருப்பிலும் கட்டப்படுகிறது.இந்த கட்டிடங்களை தலைவர் அல்லது தலைமையாசிரியர் இருவரில் ஒருவர் பொருப்பெடுத்து கொண்டு கட்டுகின்றனர்.கட்டிடம் கட்டுபவர் மற்றவருக்கு உரிய தொகையை பரிசாக தந்துவிடுவார்.
நகராட்சிகளிலும்,மாநகராட்சிகளிலும் நடைபெறும் அனைத்து பணிகளும் ஒப்பந்த முறையிலேயே நடைபெறும்.இந்த ஒப்பந்தங்களை கவுன்சிலர்களே பெறுவார்கள்.அல்லது ஒப்பந்ததாரரிடம் உரிய பரிசை பெற்றுக்கொள்வார்.இப்படி தொடர்ந்தும் பரிசு பெறுவதற்காக தமது பகுதியில் வேலை நடை பெறுவதற்கு கூட்டங்களில் விடாப்பிடியாக வாதாடுவார்.
ஊராட்சிகள் தொடங்கி மாநகராட்சிகள் வரை நடைபெறாத பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டி அதிகாரிகளுடன் சேர்ந்து கூட்டுகொள்ளை அடிப்பது இவர்களின் தலையாய பணிகளில் ஒன்றாகும்.தமது பொருப்புகளின் மூலம் அரசு அதிகாரிகளிடம் கிடைக்கும் அறிமுகத்தை வைத்துக்கொண்டு பிறப்பு,இறப்பு சான்றிதழ் உட்பட மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகராக செயல்படுவது போலிஸ் நிலையங்களிலும் இடைத்தரகராக செயல்படுவதும்தான் இவர்களின் நிரந்தர தொழிலாகவும் மாறிவிடுகிறது.
இதனால்தான் உள்ளூராட்சி தேர்தல்களில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.இவர்கள் மட்டுமல்ல தம்மோடு இவர்கள் தமது உறவினர்கள்,நண்பர்கள்,ஊரில் வேலை வெட்டி இல்லாத போக்கிரிகள் ஆகிய அனைவரையும் குளிப்பாட்டி தம்மோடு ஒரு கூட்டத்தையே வைத்துக்கொண்டு வலம் வருகின்றனர்.
இந்த தேர்தல்களில் சாதி,உட்சாதி,வகையறா,கொத்து,தெரு,ஊர் என அனைத்து பிரிவினைகளையும் தூண்டிவிட்டு ஆதாயமடைய துடிக்கின்றனர!.
தேர்தல்கள் முடியும் வரை தமிழக ‘குடி’ மக்களுக்கும்,வேலை வெட்டியில்லா கூட்டத்துக்கும் ஒரு குறையுமில்லை!
தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு குறையும் இருக்கப்போவதில்லை!
ஆனால் நமக்கு………..?
இதுதான் ஜனநாயகத்தை பரவலாக்கும் செயலாம்! மக்கள் பணத்தை திருடுவதும்,கொள்ளையடிப்பதுமே ஜனநாயகம் என்ற கருத்து மக்கள் மனங்களில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது.இப்படி திருடுவதற்கும்,கொள்ளையடிப்பதற்கும் மக்களிடம் உரிமை பெறும் உரிமைன் பெறும் நடவடிக்கைத்தான் இந்ததேர்தலும்,தேர்தலில் மக்களுக்கு வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளும் ஆகும்.
இந்த சமூகத்தில்தான் ஊழலை ஒழிக்கப்போவதாக அன்னா ஹசாரேக்கலும்,அத்வானிகளும் வலம் வந்து, நம் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.அதிகம் வேண்டாம் குறைந்தது இந்த மாபெரும் ஜனநாயகவாதிகள் முகங்களில் காறியாவது துப்புங்கள்!
