விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Thursday, 28 July 2011

சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது,வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1


சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1





சமச்சீர்கல்வி விவகாரத்தில் மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் சீர்த்திருத்த கோரிக்கையை எடுத்துப் போராடி,சீர்திருத்த புதைகுழியில் சிக்கிக்கொண்டுள்ளன.தமிழகத்தில் ஒரே புரட்சிகர அமைப்பான இந்த அமைப்பைகளை இதில் இருந்து மீட்டு, மீண்டும் அவர்களை புரட்சிகர நீரோட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் சூறாவளியில் கட்டுரை ஒன்றை(சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி ) வெளியிட்டு இருந்தோம்.
இக்கட்டுரையை கண்ட இந்த அமைப்பினர் எமது விமர்சனத்துக்கு நேரிடையாக பதில் ஏதும் தராமல்,தனது ஆதரவாளர்கள் இருவர் மூலம் அரட்டை பாணியில் சில அர்த்தமற்ற கேள்விகளை கேட்டனர்.கட்டுரையின் உள்ளடகத்தில் என்ன உள்ளது என்பதைவிட யார் அதை எழுதியது என்பதில் தான் அவர்கள் முழுகவனத்தையும் செலுத்தினர்.போலிஸ் பாணியில் துருவித்,துருவி கேள்விகேட்டனர்.பெரியண்ணன் பாணியில் அவர்களின் அனுகுமுறை அமைந்துள்ளது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் தன்மீது தோழமை ரீதியாகக் கூட எவரேனும்  விமர்சனம் வைத்தால்,அப்படி விமர்சனம் வைத்தவர்கள் அமேரிக்காவின் சிஐஏ உளவுத்துறையினராக இருப்பார்களோ என்று யோசிக்கும் அளவுக்கு அவர்கள் அணுகுமுறை அமைந்துள்ளது.
      நாங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் மிகவும் அழுத்தமான உள்ளடக்கத்தை சுருக்கமாக எழுதியுள்ளதால் அதை வாசிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு சிரமப்படுவார்கள் என்பதாலும் இக்கட்டுரையை நாங்கள் தவறான அடிப்படையிலும்,நோக்கத்திலும் வெளியிட்டுள்ளோம்  என்று எம்மீது அவதூறு பரப்பப்பட்டு வருவதாலும்,எமது அந்த கட்டுரையை விரிவான முறையில் அரசியல்,சித்தாந்த ரீதியாக எழுதி வெளியிடுவது என முடிவுசெய்துள்ளோம்.
      நாங்கள் யார் என்ற வினவு ஆதரவு தோழர்கள் கேள்விக்கு எமது பதில் இதுதான்.நாங்களும் மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளின் உண்மையான ஆதரவாளர்கள் தான்.இதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள்.ஆனால் நாங்கள் அம்மா பாணி விசுவாச தொண்டர்கள் அல்ல,அரசியல் சித்தாந்தத்திற்கு மட்டுமே விசுவாசிகள்.நாங்கள் உண்மையான ஆதரவாளர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து வெளிப்படும் தவறுகளை சுட்டிக்காட்டி போராடுகிறோம்.இது நமது கடமை என உறுதியாக கருதுகிறோம்.ஒரு வேளை எமது கட்டுரையும்  அதில் எழுதப்பட்டுள்ள நிலைப்பாடும் தவறானவை எனறு வினவும்,அதன் தோழமை அமைப்புகளும் நிருபித்தால் எமது தவறுக்காக சுயவிமர்சனங்களை ஏற்க சிறிதும் தயங்கமாட்டோம்.அதே நேரத்தில் எந்த வகையிலும் அரசியல்,சித்தாந்த ரீதியாக சமரசம் எதையும் செய்துகொள்ளவும் மாட்டோம்.அப்படி சமரசம் செய்துகொள்ள இது ஒன்றும் எமது தனிப்பட்ட விவகாரம் அல்ல என்பதால்,அப்படி சமரசமாக போக எமக்கு உரிமை ஏதும் இல்லை.முன்பு சூறாவளி இணையத்தில் ஆசிரியராக இருந்தவரும்,மேற்கண்ட புரட்சிகர அமைப்புகளில் ஒருவருமான தோழர் மூடக்கிழவனிடம் அரசியல்,சித்தாந்தம் பயின்றவர்கள் தான் நாங்கள் அவர் எமக்கு தந்த பயிற்சியின் அடிப்படையில் தான் செயல்படுகிறோம்,அந்த அடிப்படையில் தான் எமது கட்டுரைகளை வெளியிடுகிறோம்.என்ன தோழர்களே எங்களை பற்றிய அறிமுகம் போதுமா என்ன?
சமச்சீர் கல்வியை கருணாநிதி ஆட்சியில் கொண்டு வந்ததற்கும்,உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் சமச்சீர்கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதற்கும் ,கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து ,விரிந்த தேவைதான் அடிப்படை காரணம் என்பதை இதற்கு முந்தைய எமது கட்டுரையில் எழுதியிருந்தோம்.
      சமச்சீர் கல்வியை நிறுத்தி கார்ப்பரேட் மூலதனத்தின் பரந்து, விரிந்த தேவைக்கு முட்டுக்கட்டை போட்ட பார்ப்பன ஜெயா தலைமையிலான பார்ப்பன மூடக்கும்பல் மூக்குடைப்பட்டது என்பதையும் எழுதியிருந்தோம்.
      சமச்சீர் கல்வியை கொண்டு வந்ததற்கான பொருளியல் காரணத்தை புறக்கணித்துவிட்டு,இதை கொண்டு வந்ததற்கும்,நீதிமன்றங்கள் அதை உறுதிபடுத்தியதற்கும் கல்வியில் தனியாரின் கட்டணக்கொள்ளையை தடுப்பதற்கும்,கார்ப்பரேட் மயத்தை தடுப்பதற்கு தான் என்றும் மக இக வும் அதன் தோழமை அமைப்புகளும் எதிரும்,புதிருமான இருவேறு கருத்துக்களை மக்களிடையே விதைப்பதையும்,இப்படி இவர்கள் செய்வதற்கு தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஆதரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யவோ,குறைந்தது நீதிமன்றங்களில் சட்டரீதியாக போராடுகிற அளவுக்குக் கூட ஜனநாயக சக்திகள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு தனிநபர்களைத் தவிர வேறு எந்த ஜனநாயக சக்திகளும் இல்லை. இதனால் இவர்கள் சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்த இருக்குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்கமெங்கும் மக்களிடையே பிரச்சாரத்தையும்,போராட்டங்களையும் தாமே நடத்தியதோடு,உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தியும் வருகின்றனர்.
      மக இக மற்றும்  அதன் தோழமை அமைப்புகளை தவிர மேற்கண்ட  கல்வி பிரச்சனைகளுக்காக மட்டுமல்ல, வேறெந்த மக்கள் நலனுக்காகவும் போராடக்கூடிய ஜனநாயக அமைப்புகளே ஒருவரும் இல்லை என்ற மிக அவலமான சூழலில் தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அனாதையாக்கப்பட்டுள்ளனர்.இந்த வெற்றிடத்தை நக்சல்பாரி புரட்சியாளர்களாகிய மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் இட்டு நிரப்பும் வகையில் தான் தன்னுடைய முழுபலத்தையும் பயன்படுத்தி போராடி வருகிறனர். இந்த அமைப்புகளின் தோழர்கள் அல்லும்,பகலும், அயராது போராடி வருகின்றனர்.
      சமச்சீர் கல்வி,கல்விகட்டண நிர்ணயம் ஆகிய பிரச்சனைகளில் இப்புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை சமச்சீர் கல்வி ஆதரவு ஊடகங்கள் தவிர்க்கவியலாமல் வெளியிட்டே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக வரம்புக்கு உட்பட்டு வெளியிட்டு வருகின்றன.இப்படி கிடைத்த விளம்பரங்களின் மூலம் இவ்வமைப்புகள் வேறேப்போதும் இல்லாத வகையில் ஆளும்வர்க்க ஊடகங்களால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தாம் நடத்தும் போராட்டங்களில் பெருமளவில் மக்கள் அதிலும் பெற்றோர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் இதன் மூலம் தமது அமைப்புகளில் இணைவார்கள் என்றும் வேறேப்போதும் இல்லாதவகையில் தமது சக்தியை  இதன் மூலம் அதிகரித்துக்கொள்ளமுடியும் என்றும் எதிர்பார்த்தனர்.ஆனால் இவர்களின் இந்த எதிர்பார்ப்பு,குறிப்பிட்டு சொல்லும்படியான அளவிற்கு நிறைவேறவில்லை.இதன் காரணமாக தமது வழமையான புரட்சிகர செயல்பாடுகளில் சிற்சில சமரசங்களை செய்துகொண்டனர்.இதை தமது மக்கள் திரள் அமைப்புகளான மக இக,புமாஇமு,புஜதொமு,விவிமு ஆகிய அமைப்புகள் மூலம் அல்லாது மனித உரிமை பாதுகாப்பு மையம் மூலம் நடைமுறைப்படுத்தினர்.இவர்கள் மூலம் நீதிபதி கோவிந்தராசன் குழு,நீதிபதி ரவிராசன் குழு ஆகிய இரு குழுக்களும் நிர்ணயத்த தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழகம் எங்கும் போராட்டங்களை நடத்தினர்.இது மக்களிடையே போதுமான தாக்கதை ஏற்ப்படுத்தாத காரணத்தினால் மக இக,புமாஇமு ஆகிய அமைப்புகளையும் களத்தில் இறக்கி மேலும் ஒரு சமரசத்தை செய்துகொண்டனர்.இரு நீதிபதி குழுக்களின் கட்டணநிர்ணயத்தை நடைமுறைப்படுத்தக் கோருவது கல்வியில் தனியார்மயத்தை ஆதரிப்பதாகும் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல்,எப்படியாவது மக்களிடையே பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகின்றனர்.
      தமிழகத்தில் சமச்சீர்கல்விக்காக அமைப்பு ரீதியாக வேறு எவரும் போராடாத சூழலில் இவ்வமைப்புகள் மட்டுமே தன்னந்தனியாக நின்று போராடி இதில் வரலாற்றில் குறிப்பிடும் படியான வெற்றியையும் சாதித்துள்ளன.இவ்விவகாரத்தில் சிபிஎம் போலிகள் சமச்சீர்கல்விக்கு எதிராக பார்ப்பன ஜெயா கொண்டுவந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்துவிட்டு, சமச்சீர்கல்விக்கு ஆதரவாக போராடி மக இகவும் அதன் தோழமை அமைப்புகளும் ஈட்டியுள்ள வெற்றியின் பலனை அறுவடை செய்துகொள்ளும் ஈனச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.தற்போது கருணாநிதி கட்சியும் களத்தில் குதித்துள்ளது. இப்போராட்டத்தின் மூலம் மக்களிடையே தமக்கு கிடைத்துள்ள பிரபல்யம்,ஆதரவை தமது உழைப்புக்கேற்ற பலனை அறுவடை செய்துகொள்ளும் நோக்கில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தினால், அது தனியார் கல்விக்கட்டணக்கொள்ளைக்கு முடிவுகட்டிவிடும் என்று பரப்புரை செய்துவருகின்றனர்.சமச்சீர்  கல்வியை நடைமுறைப்படுத்தினால்,அப்படி நடைமுறைப்படுத்திய ஒரிரு மாதங்களிலேயே தாம் கூறும் காரணம் உண்மையல்ல என்பது மக்களுக்கு தெரிந்து தாம் மக்களிடையே அம்பலப்பட்டு விடுவோம் என்பதைப்பற்றி கூட சிறிதும் கவலைபடாமல் மீண்டும்,மீண்டும் அதையே கூறிவருகின்றனர்.அந்த அளவிற்கு இந்த விடயத்தை பயன்படுத்தி பிரபல்யம் அடைந்து விட வேண்டும் என்று துடியாய்துடிக்கின்றனர்.இதன் உச்சகட்டமாக உண்ணாவிரதம் என்பதையே சிறையை தவிர சமூகத்தில் வேறெங்கும் ஏற்காத இவர்கள்.மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மூலம் முதன் முறையாக உண்ணாவிரதம் இருந்தனர்.
      கடந்த இருபந்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணமான போராட்டங்களை மட்டுமே நடத்தி தனக்கென தனி  வரலாற்றை உருவாக்கி இருந்த இவர்களை, ஆளும்வர்க்கங்களும் அதன் ஊடகங்களும் நக்சலைட் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தியுள்ளதற்கு மாறாக, காந்தியவழியிலான உண்ணாவிரதம் போன்றவற்றை நடத்தி அதிலாவது மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்ற இவர்களின் எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது.இந்த உண்ணாவிரதங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தனது உறுப்பினர்களை கொண்டே நடத்த முடியாமல் தமது தோழமை அமைப்பு உறுப்பினர்களையும் மறைமுகமாக கலந்துகொள்ள செய்ததன் மூலம் ஆளும்வர்க்கங்களுக்கே உரித்தான உண்ணாவிரதம்  என்ற வடிவத்தோடு அவர்களின் போலித்தனமும் இவர்களை தொற்றிக்கொண்டுவிட்டதை இந்நிகழ்வு அம்பலப்படுத்திவிட்டது.ஆனாலும் இப்புரட்சிகர அமைப்புகள் தம்முடன் நெருங்கி வரும் மகிழ்ச்சியில் ஆளும்வர்க்க ஊடகங்கள் இப்புரட்சிகர அமைப்புகளின் ஏனைய போராட்டங்களுக்கு தாம் தரும் முக்கியத்துவத்தை விட ஆக கூடுதலான முக்கியத்துவம் தந்து இச்செய்திகளை வெளியிட்டன.சமச்சீர்கல்வியை கருணாநிதி கொண்டுவந்தற்கும்,இதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் ஆதரித்து தீர்ப்புகள் வழங்கியதற்கும்,கார்ப்பரேட் மூலதனத்தின் தேவை மற்றும் நலனுக்காகத் தான் என்ற அடிப்படை உண்மையை மக்களிடையே கூறிவிட்டால், இதன் வெற்றிக்காக சமூகத்திலும்,நீதிமன்றங்களிலும் தான் போராடியதால்தான் இவ்வெற்றி கிடைத்தது என்பதில் முக்கியத்துவம் குறைந்து மக்களிடையே தான் எதிர்பார்க்கும் பலனை அடையமுடியாது என்பதால்தான் தேர்தல் காலத்தில் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் மக்களிடையே உண்மைக்கு புறம்பான செய்திகளை கூச்சமோ,தயக்கமோ இல்லாமல் கூறுவது போல் இவர்களும் சமச்சீர்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டால், அது தனியார் கல்விகட்டணக்கொள்ளையை தடுத்துவிடும் என்று உண்மைக்கு புறம்பான செய்தியை எவ்வித தயக்கமும் இன்றி மக்களிடையே பரப்புரை செய்து வருகின்றனர்.சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால் அது தனியார் கட்டணகொள்ளையை தடுத்துவிடும் என்ற கூற்றில் உண்மையில்லை என்பதையும் இக்கூற்று உள்முரண்பாடு நிறைந்துள்ளதையும் எமது சென்றக்கட்ரையிலேயே எழுதியிருந்தோம்.சமச்சீர் கல்வியை கொண்டுவந்த கருணாநிதியும், இதைப் உறுதிபடுத்திய உயர்நீதிமன்ற,உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கல்வியில் தனியார்மய எதிர்ப்பாளர்கள் என்ற கண்ணோட்டத்தை மக்களிடையே விதைப்பதையும்,இதன் மூலம் இப்புரட்சிகர அமைப்புகளின் அயராத உழைப்பை எதிர்வரும் தேர்தல்களில் கருணாநிதியும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் அறுவடை செய்துகொள்ளபோகிறார்கள் என்பதற்கு மேல் இப்புரட்சிகர அமைப்புகள் வேறு எதையும்  இதில் சாதிக்க போவதில்லை. என்பதை விரைவில் இவர்களுக்கு காலம் உணர்த்தும்.ஆனால் இவர்க்கு,ஆளும்வர்க்க ஊடகங்களால் கிடைத்த விளம்பரமும்,பிரபல்யமும் மேற்கண்ட உணமையை காணவொட்டாது இவர்களின் அறிவுக்கண்ணை மறைத்துவிட்டது.சரியோ,தவறோ தமது வழமையான பாணியில் அனைத்து அமைப்புகளும் ஒரே குரலில் தமது கருத்துகளை பிரதிபலிக்காமல் தமக்குள்ளேயே முன்னுக்குபின் முரணாக பேசியும்,எழுதியும் வருகின்றனர்.இப்படி தாங்கள் செய்வதால் அது மக்களிடையே குழப்பத்தையும் தனது முரண்பட்ட நிலை குறித்த கேள்வியையும் ஏற்படுத்துமே என்பதை பற்றிகூட இவர்கள் சிறிதும் கலைப்படவில்லை.இப்புரட்சிகர அமைப்புகள் வாழ்நாளில் முதன் முறையாக மக்களை முட்டாள்களாகவும்,மூடர்களாகவும் கருதுவதையே மேற்கண்ட நிகழ்வுகள் உறுதிபடுத்துகிறன.மேலும் மக்களை ஆக்கமற்றவர்களாக கருதுவதால் தான் மக்கள் போராட தயாரில்லை என்று மக்களை குற்றம் சாட்டிவிட்டு தம்மை கதாநாயகர்களாக காட்டிக்கொள்ளும் நோக்கில்தான் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.ஆளும்வர்க்க ஊடகங்கள் துணையோடு தமது அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொருளாதார பலம்படைத்த ஒருவரை கதாநாயகனாக மக்கள் மனங்களிலே வலிந்து திணித்து வருகின்றனர்.
      அதோடு புதியஜனநாயக பத்திரிக்கைக்கு முரணான கருத்தை மக இகவின் புதிய கலாச்சாரம் முன் வைக்கிறது.இதைவிட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இணையதளமான வினவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் ஜெயா சமச்சிர்கல்வியை ரத்து செய்ய முனைவதாக தமது அமைப்பு நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளதாக எழுதி புளகாங்கிதம் அடைகிறது.
      இப்படி இம்மூன்று ஊடகங்களும் மூன்று வெவ்வேறான காரணங்களை சமச்சீர்கல்வி விவகாரத்தில் முதன்மையான காரணம் என்று முன்னிலைப்படுத்துகின்றன.ஒரே லட்சியத்திற்காக செயல்படும்  இவர்கள் இவ்விவகாரத்தில் தமக்குள்ளேயே எதிரும்,புதிருமான ,முன்னுக்குபின் முரணான கருத்துகளை முன் வைக்கிறோமே என்பதைப் பற்றி இவர்கள் சிறிதும் கூச்சப்படவில்லை.ஆனால் ஒரு விடயத்தில் மாத்திரம் இவர்கள் இடையேயான ஒற்றுமை மிக வலுவாகவே உள்ளது.
      சமச்சீர்கல்வியை ஆளும்வர்க்கங்கள் கொண்டுவந்ததற்கான அடிப்படையான பொருளியல் காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ளகூடாது என்பதில் மட்டும் இவர்களிடையே உள்ள ஒற்றுமை தான் அது.ஒருவேளை ஒரே காரணத்தை சொன்னால் அது சமூகத்தில் ஒரு தரப்பால் மட்டுமே ஏற்க கூடியதாக இருக்கும்.ஆகையால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளை மக்களிடையே கொண்டுசென்றால்,அது சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவையும் திருப்தி செய்து தமக்கு வலுசேர்க்கும் என்று கருதி தமக்கிடையே வேலை பிரிவினை செய்துகொண்டிருக்கிறார்களோ என்னவோ!ஒரு வேளை சிபிஎம் இடமிருந்து இவ்வித்தையை இவர்கள் கற்றுக்கொண்டிருக்கலாம்.இதைப் போன்ற நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் விரைவில் இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அனைவரும் ஒன்று சேருவோம் என்று சில காம்ரேட்டுகள் கூறுகிறார்களோ என்னவோ!
      சரி,எது எப்படியோ நடக்கட்டும்! நாம் இக்கட்டுரையின் விமர்சனத்துக்கு உட்படுத்தியுள்ள புரட்சிகர அமைப்புகள் வேறேப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தமக்கிடையிலேயே ஒருவருக்கு எதிராய் ஒருவர் நிலைப்பாடுகளை முன்வைப்பது ஏன் என்பதையும்,அந்நிலைப்பாடுகள் ஒவ்வொன்றுக்குள்ளேயும் உள்ள முரண்பாடுகளையும் அவைகள் என்ன,என்ன என்பதையும்,இவைகள் அரசியல் சித்தாந்த ரீதியாக எத்தகைய தன்மைகொண்டது என்பதையும்.இவைகள் எந்த வர்க்கங்களின் நலனை பிரதிபலிக்கின்றன என்பதையும்,”ஒவ்வொரு சொல்லுக்கும்,செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்துகொண்டிருக்கிறது” என்ற ஆசான் மாவோ கூறிய கோட்பாட்டு ஒளியில் இனி அவற்றை பரிசீலிப்போம்.
                                                      தொடரும்


தொடப்புடைய கட்டுரை:
                      சமச்சீர் கல்வி....! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி