விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label சாராயம். Show all posts
Showing posts with label சாராயம். Show all posts

Sunday, 19 February 2012

குடிப்பதற்கு கள்,சாவதற்கு அரளி இதுவே நமது மரபாம்! பாகம்-5

மது குடிக்கலாமா, கூடாதா என்பதைப் பற்றி தந்தை பெரியாரின் நிலைப்பாட்டைப் பற்றி  சென்றத் தொடரில் பார்த்தோம்.

மதுவினால் சமூகமும்,உழைக்கும் மக்களும் சந்திக்கும் தீமைகளைப்பற்றி மிக ஆழமான புரிதல் கொண்டிருந்த தந்தைப் பெரியார், அது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை போராடினார்.மதுவை மது விலக்கினால் ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் மதுவிற்கு அடிமையானவர்கள் அதை விட்டுவிட விரும்பினாலும் அவர்களின் உடல் அதைச்செய்வதற்கு அனுமதிப்பதில்லை.

ஏனெனில் மது குடியர்களின் உடலை தனக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.இப்படி மதுவுக்கு அடிமையான உடல் அவன் உள்ளத்தையும் அடிமைப்படுத்தி விடுகிறது.குடியர்களின் இந்த அவல நிலையை மது விலக்கு கணக்கில் கொள்ளாமல் மறுக்கிறது.

இதனால் குடிகாரர்கள் எப்படியாவது குடிப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது.குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக்கும்பல் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது கல்லாவை நிரப்பிக்கொள்கிறது.

குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக் கும்பலே புரிந்துகொள்ளும் போது அரசுக்கு புரியாதா? புரியும்.புரிந்தேதான் குடியர்களின் தேவையை ஒரே அடியாக மறுத்து அதன் மூலம் சமூக விரோதிகள் ஆதாயம் அடைய வழியை திறந்துவிடுகிறது.இதன் மூலம் அரசின் நோக்கம் நிறைவேறுவதோடு, அதன் இன்னொரு அங்கமான சமூக விரோதக் கும்பலின் நலனையும் நிறைவு செய்கிறது.



அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களை குடியர்களாக ஆக்குவதன் மூலம் அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை,போராடுவதை தவிர்த்து தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது.அதே நேரத்தில் தனது இந்த நோக்கத்தின் நடைமுறையாளர்களாக செயல்படும் சமூக விரோதக் கும்பலுக்கு கூலியாக மதுவின் ஆதாயத்தை தருகிறது.இப்படி மதுவின் மூலம் பெரும் ஆதாயம் அடையும் சமூக விரோதக் கும்பலை நாளடைவில் அரசியலில் பங்கேற்க வைத்து, அவர்களை முன்னணி அரசியல் 

தலைவர்களாகவும்,ஆட்சியாளர்களாகவும் உருவாக்கி அரசுக்கும்,சமூக விரோதக் கும்பலுக்குமான இடைவெளியை குறைத்து விடுகிறது.

இதனால் தான் நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை.இதை கோட்பாட்டு ரீதியாக வரையறுத்து தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும்,இதை உள்ளடக்கிய தீர்வையே முன் வைக்கிறார்.

நிலவுகிற சமூக அமைப்பில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதையும் குடியர்களை ஒரே அடியாய் பட்டினி போடாமல் படிப்படியாக அதிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்பதை பற்றிய வழிமுறையை அரசுக்கு பரிந்துரைக்கிறார்.

எந்த ஒரு நிலையிலும் குடிப்பதை நியாயப்படுத்தாமல், குடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை தொய்வில்லாமல் பிரச்சாரம் செய்த அதே நேரத்தில், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறையை தெளிவாக வரையறுத்து கூறுகிறார்.

எனவே மது அருந்தலாமா, கூடாதா என்பதைப்பற்றி நாம் புதியதொரு நிலைப்பாட்டை, வழிமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை.நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கடைபிடித்த வழிமுறையை கோட்பாடாக வரையறுத்து புரிந்துகொள்வதும்.அதை மேலும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான்.

இப்போது மீண்டும் ஒருமுறை நமது தந்தையின் பாதையையும், தம்மை தமிழகத்தின் புரட்சியாளர்கள் என்று தமக்குத்தாமே எழுதிவைத்துக்கொண்டு திரியும் கும்பலின் மது குடிப்பது பற்றிய வரையறுப்பையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டு பார்ப்போம்.
“நம்மை பொருத்த வரையில் கள்,சராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுதைவிட மதுருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.

“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக்கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோறும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும்படியாக செய்துவிட வேண்டும்”. (தந்தை பெரியார்)

கடி உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை”.

அதே போல என்றாவது ஒருநாள் குடிப்பதும் பிரச்சனையில்லை,ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.(தமிழக புரட்சியாளர்கள்)

மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளில் எது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உயர்த்திப் பிடிக்கிறது.என்பதை புரிந்துகொள்வதற்கு தனித்த திறமை எதுவும் தேவையில்லை.

தந்தை பெரியார் தவறியும் குடியை நியாயப்படுத்தவில்லை,ஆதரிக்கவில்லை.
ஆனால் தம்மை உலக புரட்சிக்கே வழிகாட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தக் கும்பலோ குடியை நியாயப்படுத்துகிறது.கடின உழைப்பாளர்கள் குடிப்பதை ஆதரிக்கிறது.அதோடு கடின உழைப்பாளர்கள் என்று இந்த கும்பலின் வரையறுப்பையும் கீழே தருகிறோம்.

“மறுகாலனியாக்கம்,கடும் உழைப்பு நிறைந்த உதிரித்தொழிலையும்,அதிக பணிச்சுமையையும், வீடு,குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி இருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது”,என்கிறது.

குடி,உழைப்பாளிகளை அதிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் உழைப்பாளிகளை எப்படி தனக்கு ஆட்படுத்துகிறது என்பதை வரையறுக்கும் இவர்கள், உள்ளூரிலேயே உள்ள கடின உழைப்பாளர்களையும், கடின உழைப்பில் இல்லாதவர்களையும் வளைத்துவிடும் உளவியலைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?
கடின உழைப்பாளர்கள் குடியின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கான  உளவியல் காரணத்தை வரையறுப்பது என்பது அவசியம் என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இப்படி வரையறுப்பது குடியின் பிடியில் இருந்து குடியர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளை,உத்தியை உருவாக்குவதற்கா? அல்லது அதை நியாயப்படுத்துவதற்கா? என்பதுதான் நமது விவாதத்திற்குரிய பொருளாகும்.

தந்தை பெரியார் அவர்கள்,அரசு திட்டமிட்டே மக்களை குடியர்களாக ஆக்கியது என்பதை வரையறுத்து அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.

ஆனால் தம்மை ‘புரட்சியாளர்கள்என்று கூறிக்கொள்ளும் இந்தக் கும்பலோ உழைப்பாளிகளின் ஒரு பிரிவினர் குடியின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதற்கான காரணங்களை வறையறுத்துவிட்டு அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை கூறாமல் கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம், என்றாவது ஒரு நாள் குடிப்பதில் பிரச்சனையில்லை என்று குடிப்பதை அங்கீகரித்து, நியாயப்படுத்துகிறது.

கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம் என்றால் கடின உழைப்பாளர்கள் என்று இவர்கள் கூறும் உழைப்பாளர்கள் மட்டுமல்ல மொத்த கடின உழைப்பாளர்களும் அதாவது விவசாயக்கூலிகள்,சிறு,குறு விவசாயிகள் உள்ளடக்கி நாட்டில் உள்ள அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பெருபான்மையினர் குடிக்கலாம் என்று ஒரு அமைப்பு வரையறுக்குமானால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு தன்னை பாட்டாளிவர்க்க அமைப்பு என்று கூறுக்கொள்ள முடியுமா?அதற்குரிய தகுதி இப்படி வரையறுக்கும் ஒரு அமைப்புக்கு எள் முனை அளவாவது இருக்கிறதா?

எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லை என்பதற்கும்,குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று மது பாட்டிலில் எழுதிவைத்துக்கொண்டே மதுவை விற்கும் அரசின் – முதலாளிகளின் நயவஞ்சக செயல்பாட்டிற்கும் இதற்கு என்ன வேறுபாடு உள்ளது.இவை இரண்டும் இரு வெவ்வேறான நிலைபாடுகள் அல்ல.மதுவினால் ஆதாயம் அடையும் இருவேறு பிரிவினரின் நிலைபாடுகள்தான் மேற்கண்ட இரண்டுமே.
எப்போதாவது குடிப்பது என்பது விதி விலக்கானவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.குடிப்பது என்பது மனித உயிர்களின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக இல்லாத போது,அது பெரும்பாலும் மனிதர்கள் அன்றாடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல்,துன்பம் ஆகியவற்றை சிறிது நேரம் மறப்பதற்கும்தான் மதுவை தேர்வு செய்கிறார்கள்.மது மேற்கண்ட காரணங்களுக்காக அல்லாது ஒரு வகையான இன்பத்திற்காக குடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள் மட்டுமே.

ஏனென்றால் மேற்கண்ட துன்பங்களும்,மன உளைச்சல்களும் மனிதர்களுக்கு ஏற்படுவது நிலவுக்கிற சமூக அமைப்பில் தவிர்க்கவியலாத விதியாகும்.இந்த விதிக்கு உட்படாதவர்கள் விதி விலக்கானவர்கள் மட்டுமே இருக்க முடியும்.எனவே மதுவை ஒருவிதமான இன்பத்திற்காக அருந்துபவர்களும்  இவர்கள்தான்.

எனவே பெரும்பான்மையானோர் இன்றைய சமூக வாழ்வில் ஆயிரம், ஆயிரம் வழிகளில் மேற்கண்ட மன உளைச்சல்களுக்கும்,சங்கடங்களுக்கும் ஆட்படுவது என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.எனவே இதுதான் சமூக வாழ்வாக நிலவும் சூழலில், எப்போதாவது ஒருமுறை குடிப்பது என்பது சாத்தியமேயில்லை.ஒரு முறை குடித்துவிட்டால் அப்படி குடிப்பவர்கள் அதை மீண்டும்,மீண்டும் செய்வதற்குரிய சமூக அடித்தளமே இப்போது நிலவுவதால் எப்போதாவது குடிப்பவர்கள் நிச்சயம் அடிக்கடி குடிப்பவர்களாகத்தான் மாறுவார்கள்.

மதுவினால் யார் ஆதாயம் அடைகிறார்களோ அவர்கள்தான் மக்களிடையே மது அருந்துவதற்குரிய சமூக உளவியலையும் உருவாக்குகிறார்கள்.

குடிப்பதற்கான பழி குடிகாரர்கள் மீது போடப்பட்டாலும், தாம் குடிப்பதற்குரிய சமூக அடிப்படையை தாமே உருவாக்கிக்கொள்வதில்லை.அதை மதுவினால் ஆதாயம் அடையும் கும்பலே மிகவும் நயவஞ்சகமான முறையில் திட்டமிட்டு உருவாக்குகிறது.இப்படி உருவாக்கபடும் இந்த நயவஞ்சக சமூக அடிப்படை மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.அதுவும் மக்களால் விரும்பி ஏற்கும் வகையில் அதன் செயல்பாடு அமைக்கபடுகிறது.

இந்த நயவஞ்சக முறையை உருவாக்குபவர்களும், சமூகத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களும் ஆக இவ்விரு பிரிவினர் மட்டுமே இதை அறிவர்.
இதனால் ஆதாயம் அடையக்கூடியவர்களான- மது உற்பத்தியாளர்கள்-ஆட்சியாளர்கள்- இவர்களிடம் அண்டி பிழைப்பவர்கள்-மட்டுமே குடிப்பதை அங்கீகரிக்கவும், நியாயப்படுத்தவும் முடியும்.

இரண்டாவது பிரிவினரான பொருள்முதல்வாதிகள் குடிப்பதற்கான சமூக இயங்கியலை வரையறுத்து,அதை களைவதற்கான வழிமுறைகளை மட்டுமே 
பரிந்துரைக்கவும்,நடைமுறைப்படுத்தவும் முடியும்.

மேலே கண்ட இரு தரப்பினரில் தந்தை பெரியார் அவர்கள் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானத்தை அறிந்திராவிட்டாலும் தமிழ் மக்கள் மீது தமக்கிருந்த காதலால் அவர்களின் நலன் என்ற வகையில் ஒரு பொருள்முதல்வாதியின் பாத்திரத்தை வகித்துள்ளார்.

ஆனால் ‘தமிழக புரட்சியாளர்கள்தம்மை பொருள்முதல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் மதுவினால் ஆதாயம் அடையக்கூடியவர்களிடம் அண்டிப்பிழைக்கும் கும்பல் என்பதை தமது நிலைப்பாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் இந்தக் கும்பல் முதலாவது பிரிவில் இருப்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு உதராணத்தையும் பார்ப்போம்.ஒரு மனிதனின் உயிர் பறிபோவதற்கு அரளி விதையை சாப்பிட்டாலும்,பாலிடாயிலை குடித்தாலும்,கத்தியை பயன்படுத்தினாலும்,துப்பாக்கியால் சுட்டாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான்.

நமது மரபு என்பதற்காக சாவதற்கு அரளிவிதையையும்,கத்தியையும், ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியுமா? அல்லது அதை பரிந்துரைக்கத்தான் முடியுமா?

உடல் வலியை போக்குவதற்கான வலி நிவாரணியாக நமது மரபான கொல்லை உயர்த்தி பிடித்தால் அதை நாம் வரவேற்கலாம்,பாராட்டலாம். ஆனால் அதற்கு மாறாக பாலிடாயிலை விட நஞ்சு குறைவு என்பதற்காக சாவதற்கு அரளி விதையை நமது மரபு என்று ஒருவர் பரிந்துரைப்பதற்கு உரிமை ஏதேனும் உண்டா? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார்?

கள் நமது மரபு என்று இந்தக் கும்பல் கூறுவது குடியை நியாயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. மரபு என்ற நமது பண்பாட்டை,நாகரிகத்தை ,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்தும் செயலுமாகும்.

இந்தக் கும்பல் யார் என்பதையும்,இந்த கும்பலின் நோக்கம் என்ன என்பதையும் அடுத்தத் தொடரில் பார்ப்போம்!.

                                                தொடரும்.............
தொடர்புடைய கட்டுரைகள்:

1.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!  பாகம்-2


2.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! -1






Tuesday, 14 February 2012

அரசு பற்றிய பாமரத்தனம்;பெரியார் குற்றவாளியா?!

மது அருந்துவதைப்பற்றி இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளோம்.இரண்டு மற்றும் மூன்றாவது கட்டுரைகளில் மது பற்றி தந்தை பெரியாரின் குடியரசு இதழ் தலையங்கங்களை தந்தோம்.

தந்தை பெரியார் மது விலக்கின் தேவை,அவசியத்தை விளக்கி 16.08.1925 –ம் ஆண்டு குடியரசு இதழ் தலையங்கத்தில்………

“இந்த பன்னிரண்டரை கோடி ரூபாய் நமது இராஜதானியில் கள்,சாராயத்திற்கு ஆக மூன்றை கோடி சனங்களால் செலவு செய்யப்படுகிறது.இது அல்லாமல் ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு-சூது-பொய்-கொலை-கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு? கோர்ட்டு,வக்கில்,லஞ்சம்,சப்ளை மாமூல் வகைகளில் ஆகும் செலவு எவ்வளவு?

மக்கள் ஒழுக்கம்,கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும், நாட்டிலும் குடும்பத்திலும் ஏற்படும் ஒற்றுமை குறைவுகள் எவ்வளவு?” என்று எழுதியுள்ளார்.



மதுவினால் சமூக,பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை,பண்பாடு,ஒழுக்கம் ஆகியவற்றில் எப்படியான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை மேற்கண்ட கட்டுரையில் தந்தை பெரியார் கூறியுள்ளதை பார்த்தோம்.இதை வெறுமனே தனது கருத்தாக மட்டுமல்லாமல் அக்கருத்துக்கு ஆதாரமாக அசைக்கமுடியாத, துள்ளியமான புள்ளிவிவரங்களுடன் மேற்கோள் காட்டித்தான் மது விலக்கின் அவசியம் தேவையை வலியுறித்தியுள்ளார்.

இப்படி எழுதிய தந்தை பெரியார் தான் பின்னாளில் மது விலக்குப்பற்றிய தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.இதை வாசகர்கள் சிலரும் எமக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் மது விலக்குத் தேவையில்லை என்று முடிவு செய்ததற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி பின்னர் பரிசிலிப்போம்.அதற்கு முன்னர் வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ள படி தந்தை பெரியார் மது விலக்குப்பற்றிய 1925-ம் ஆண்டு வரையிலான தனது நிலைப்பாட்டை அதன் பின்னர் மாற்றிக்கொண்டார் என்றே வைத்துக்கொள்வோம்.அதற்காக நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
தந்தை பெரியார் தனது கருத்தை பின்னாளில் மாற்றிக்கொண்டதாலேயே 1925 குடியரசு தலையங்கத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி எழுதியுள்ளவை இல்லை என்றாகிவிடுமா?அல்லது ’அப்படி தான் எழுதியது தவறு, சிலர் இட்டுக்கட்டி தந்த செய்தியை தகுந்த பரிசிலினை செய்யாமலேயே நம்பி எழுதிவிட்டேன்.ஆகையால் இப்போது எனது கருத்தை மாற்றிக்கொள்கிறேன்’, என்று மது விலக்குப்பற்றிய தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போது ஏதாவது எழுதியிருக்கிறாரா?

”தோப்பிற்கே சென்று கள் குடித்தால் அதில் அதிக போதை இல்லாமல் இருந்தது”,என்று அவர் கூறியுள்ளதை நாங்கள் இல்லை என்று மறுக்கவில்லை.இப்படி அவர் கூறியுள்ளதானலேயே ’கள்’ குடிக்கலாம் என்று அவர் கூறியதாக எடுத்துக்கொள்ள முடியாது.அவர் மேற்கண்டவாறு மட்டும் கூறவில்லை.அதோடு “கள் வருமானத்திற்கான வழியாக சர்க்கார்  ஆக்கிக்கொண்ட பிறகுதான் அது போதை பொருளாக ஆகிவிட்டது”, என்றும் கூறியுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அதாவது அரசு தனது வருவாயை பெருக்கிக்கொள்ள மதுவை ஒரு சாதனமாக தேர்ந்தெடுத்த பிறகுதான் அது அதிக போதை தரும் பொருளாக மாறியதற்கான காரணம் என்ன என்பதையும் நாம் உற்றி நோக்க வேண்டும்.

’கள்’ மூலம் அரசுக்கு வருவாய் தொடர்ந்து வரவேண்டுமானால் குடிகாரர்கள் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அப்படி அவர்கள் தொடர்ந்து குடிக்க வேண்டுமானால் அதற்கு அவர்கள் அடிமையாக வேண்டும்.மொத்தத்தில் மதுவினால் குடிகாரர்களின் உடலும்,உள்ளமும் அடிமையாக வேண்டும்.இப்படி அவர்கள் அடிமையாவதற்கு ’கள்’ என்பது அதிக போதை தரும் ஒன்றாக இருக்கவேண்டும்.இந்த அதிக போதையை செயற்கையாகத்தான் உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட அணுகுமுறையை அரசு மட்டுமல்ல அரசு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் போதும் குடிகாரர்களின் தேவையை நிறைவு செய்யும் சமூக விரோத கும்பலுக்கும் அவசிய தேவையாய் இருக்கிறது.

எனவே ’கள்’ வருமானத்துக்கான வழியாக இருக்கும் வரை – அதாவது நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை- அது போதை பொருளாகத்தான் இருக்கும்.அரசு மது விலக்கை நடைமுறைப்படுத்தினாலும் அது எப்படியும் குடிகாரர்களுக்கு கிடைத்தே தீரும்.அதை ஒருக்காலும் எவராலும் தடுத்து விட முடியாது.

இதுதான் அசைக்க முடியாத உண்மை என்கிற போது,மதுவினால் எந்த அளவுக்கு அரசுக்கும்,சமூக விரோதிகளுக்கும் வருவாய் பெருகுகிறதோ, அதன் எதிர் விளைவாக சமூக தீமைகளும் அதற்கு இணையாக பெருகவே செய்யும்.இதுதான் நிலைமை என்கிற போது தந்தை பெரியார் மது விலக்கு தேவையில்லை என்று கூறினார் என்பதற்காக, நாமும் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று கருதுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
தந்தை பெரியார் மேற்கண்ட சமூகத் தீமைகளை கணக்கில் கொள்ளாமலேயே மது  விலக்கு பற்றிய தனது நிலையை மாற்றிக்கொண்டிருந்தால், அதை விமர்சிக்கவும்,கண்டிக்கவும் வேண்டுமே தவிர அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று கருதுவது மூடத்தனமாகும்.

ஒரு மனிதனின் கருத்துகள் அம்மனிதனின் வயது முதிர்வுக்கு ஏற்ப முதிர்ச்சி அடையும் என்பது பொதுவானதொரு கருத்தே தவிர அது முழுமையான விஞ்ஞான பூர்வமான உண்மையல்ல.வயது முதிர்ச்சி,கருத்து முதிர்ச்சியாக மாறுவது,உருவாவது என்பது அனைவருக்கும் பொதுவான கோட்பாடல்ல.அது ஒவ்வொரு தனி மனிதனின் சமூக வாழ்வின் தன்மையில் இருந்து மாறக்கூடிய ஒன்றாகும்.
இது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்துவதை போன்று தந்தை பெரியாருக்கும் பொருந்தும்.

ஆனால் உண்மையில் மது பற்றிய 1925 வரையிலான தனது கருத்தை பின்னாளில் தந்தைபெரியார் மாற்றிக்கொண்டிருந்தால் அது பிழையானதொரு கருத்து மாற்றம் என்று தான் வரையறுக்க முடியும்.

ஆனால் சில வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை போன்று தந்தைபெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு மது பற்றிய தனது கருத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளவில்லை என்பதை அவரின் எழுத்தில் இருந்தே இனி பார்ப்போம்.

“காங்கிரசாரின் போலி மது விலக்கு முறையை சென்னை சர்க்கார்,வரப்போகும் வருடம் முதல் மாற்றிவிடக்கூடும் என்பதாக தெரிகிறது”.

“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக் கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோரும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும் படியாக செய்துவிட வேண்டும்.குடிகாரர்களை திடீரென்று ‘குடிப் பட்டினி’ போட்டால்,அவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடைய முயற்சிக்காமல் போக மாட்டார்கள்; இது இயற்கை”.
”சிலருக்கு குடிக்க அனுமதி கொடுத்து சிறிது,சிறிதாய் குறைத்து வரவேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் எப்படியாவது குடிப்பார்கள்.அதற்கு இவ்வளவு விலை இல்லாமலும் இன்றுள்ளது போல் ஒரு இலாக்கா வைத்து குடியை பெருக்காமலும்,காங்கிரஸ்காரர்களை போல் தந்திரம் செய்யாமலும் சர்க்கார் மனப்பூர்வமாய் யோக்கியமாய் நடந்துகொள்ள வேண்டும்”, (குடியரசு தலையங்கம் 06.11.1943)

“சென்னை ராஜ்ஜியத்தில் மது விலக்கு முறையை தொடர்ந்து நடத்துவதென ஆச்சாரியார் ஆட்சி முடிவு செய்துவிட்டது”.

“100-க்கு 5 வீதமே படித்த மக்களாய் இருந்த நாம்-ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தப் பிறகு 100-க்கு 7 படித்த மக்களானோம்.அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜாஜி தாம் 1938-ல் பதவிக்கு வந்தவுடன் ’கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை.ஆதலால் வரவு-செலவை சரிகட்ட 2600 பள்ளிகளை மூட வேண்டியது அவசியமாகிவிட்டது’ என்பதாக ஒரு சாக்கு கண்டுபிடிக்க கருதியே ‘மது விலக்கினால் ஏற்பட்ட நட்டத்தை சரிக்கட்டினேன்’ என்று சொல்ல வசதி ஏற்படுத்திக்கொண்டார்”.

“அந்த மதுவிலக்கு ஏற்பாடு செய்த நாள் முதல் நாளதுவரைக்கும், அந்த மது விலக்கு காரணமாக அது குடிசை தொழிலாக மாறி,இன்று அது (குடி) ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவி வந்திருக்கிறது.

இந்த மது விலக்கினால் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு,இதற்காக குடிகாரர்கள் செலவிடும் பணமும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததே அல்லாமல் குறையவில்லை என்பதோடு,முன்பு மதுக் கடைகளுக்கு சென்று வாங்கிக்குடித்தவர்களுக்கு இன்று அவர்கள் வீடு தேடி வந்து மது வினியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த மது உற்பத்தி தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள்,நாணயமில்லாதவர்கள் பெருகிவருகிறார்கள்.இது மாத்திரமல்லாமல்,கீழ் நிலை போலிசு நண்பர்கள் அநேகர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி,நாணயம் கெட்டவர்களாகவும் ஆகிவருகிறார்கள்”.(விடுதலை தலையங்கம் 04.03.1967)

“நம்மை பொருத்தவரையில் கள்,சாராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுவதை விட மதுவருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.

”மதுபானக் கெடுதி ஒழிவது நல்லது என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை.மதுபானத்தில் ஏற்படும் கேட்டை நன்றாய் உணர்ந்துதான் இருக்கிறோம்.ஆனால் மதுவிலக்கு என்னும் சாக்கில் பார்ப்பன ஆட்சி செய்யும் படுமோசத்தை நம்மால் சகிக்க முடியவில்லை”.(விடுதலை தலையங்கம் 24.10.1937)

தந்தை பெரியார் அவர்கள் தான் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு மது விலக்கு பற்றிய தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை குடியரசு இதழில் அவர் எழுதிய தலையங்கங்களில் இருந்து பார்த்தோம்.
·      
    இதில் எந்த ஒரு இடத்திலும் தான் காங்கிரசில் இருந்த போது மதுவினால் ஏற்படும் சமூகத் தீமைகள் பற்றி தான் கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொண்டதாக அவர் கூறவில்லை.அதற்கு மாறாக காங்கிரசின் போலியான மது விலக்கைத்தான் எதிர்த்துள்ளார்.
·          கல்வியில் பார்ப்பனர் அல்லாதோர் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக பார்ப்பன ராஜாஜி செய்த சூழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளார்.

·          மது விலக்கை நடைமுறைப்படுத்தி,அதனால் ஏற்பட்ட இழப்பை காட்டி பள்ளிகளை இழுத்து மூடும் காங்கிரசு,கள்,சாராயம் விற்கும் சமூக விரோதிகளை சட்டசபை உறுப்பினர்களாகவும்,மந்திரிகளாவும் ஆக்கியதையும் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்துகிறார்.


·          கள்ளுக்கடை மறியலை அறிவித்த காந்தி,தமிழகம் வந்த போது கள்,சாராயம் விற்கும் நபர்களின் வீட்டிலேயே தங்கியதையும் சுட்டிக்காட்டி, மது விலக்கு என்பது காங்கிரசின் இலக்கோ,நோக்கமோ அல்ல.கள்,சாராயம் குடித்து பார்ப்பனர் அல்லாதார் சீரழிந்து போக வேண்டும்.அதே வேளையில் அதே மது விலக்கை காரணம் காட்டி பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை பாழாக்க வேண்டும் என்ற பார்ப்பன கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்பதுதான் தந்தைபெரியாரின் நோக்கமே தவிர குடியை ஆதரிப்பது அல்ல.

அரசு திட்டமிட்டு குடிகாரர்களை உருவாக்கிவிட்டு திடீரென அவர்களை ’குடிப்பட்டிணி’ போட்டால் அவர்கள் எப்படியாவது குடித்தே தீருவர்.எனவே குடியர்களை ஒரே நாளில் திருத்திவிட முடியாது.அவர்களை படிப்படியாகத்தான் அதில் இருந்து விடுவிக்க முடியும்.எனவே அதற்குரிய வழிமுறைகளை கூறுகிறாரே அன்றி குடிப்பதில் தவறில்லை என்று நமது தமிழக புரட்சியாளர்களை போன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் பேசவோ,எழுதவோ இல்லை.

இதை நிரூபிக்கும் வகையில்தான் மலம் சாப்பிடுவதை விட மது அருந்துவதை தான் இழிவாக பார்ப்பதாக அவர் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மதுவிற்கு அடிமையானவர்களை அதில் இருந்து விடுவிப்பது எப்படி என்பதை பற்றி இயங்கியல் முறையில் ஆலோசனை தந்திருக்கிறாரே தவிர குடிப்பதை  ஒருபோதும் அவர் ஆதரிக்கவில்லை.

அதே நேரத்தில் மது விவகாரத்தில் அரசின் தலையீட்டிற்கு பின்னர்தான் ’கள்’ போதை பொருளாகிவிட்டது, என்று வரையறுத்த தந்தை பெரியார் “காங்கிரசின் போலி மது விலக்கு முறையை சென்னை சர்க்கார்,வரப்போகும் வருடம் முதல் மாற்றிவிடக்கூடும் என்பதாக தெரிகிறது”,என்று கூறியதன் மூலம் அரசு பற்றிய தனது அறியாமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது மதுவில் அரசு தலையிட்டதற்கான காரணம் அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதோடு, மதுவிற்கு மக்களை அடிமையாக்கி அவர்களை சமூக அக்கறை அற்றாவர்களாக ஆக்குவதன் மூலம் மக்கள் அரசுக்கு எதிராக போராடாமல் செய்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுவும்தான்.

இது அரசின் அடிப்படை நிலைப்பாடு.இதில் காங்கிரசு அரசு,காங்கிரசு அல்லாத அரசு என்ற வேறுபாடு ஏதுமில்லை.அரசு ,அரசாங்கம் ஆகியவற்றை பற்றிய பாமரத்தனமே பெரியாரின் மேற்கண்ட நிலைப்பாட்டிற்கு காரணமாகும்.

அரசு பற்றிய மேற்கண்ட பலவீனம் அவரிடம் இருந்ததே தவிர, மதுவினால் ஏற்படும் தீமைப்பற்றிய விவகாரத்தில் காங்கிரசில் இருந்த போதும் சரி அதில் இருந்து வெளியேறிய பிறகும் சரி அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.அதற்கு மாறாக மேலும் அக்கருத்தை கூர்மையாக்கிக்கொண்டார்.

எனவே தனது ஆரம்ப கால மது விலக்கு பற்றிய கருத்தை பின்னாளில் மாற்றிக்கொண்டார் என்ற வாதம் அடிப்படை அற்றாதாகும்.இது தந்தை பெரியாரை பற்றிய புரிதலின்மை அல்லது தமது கருத்துக்கு ஏற்ப தந்தை பெரியாரின் கருத்தை வளைத்து, திரித்துக்கூறும் நயவஞ்சகமே அன்றி வேறல்ல!

தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுள்ள வரை தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும்,மூச்சிலும் தமிழ் சமூதாயத்துக்கு தான் தந்தை என்பதை நிரூபித்தவர் அவர். தயவு செய்து நமது தந்தையை கொச்சைப்படுத்தாதீர்கள். தொடரும்……………

தொடர்புடைய கட்டுரைகள்:

1.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!  பாகம்-2


2.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! -1



  

Saturday, 4 February 2012

மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! பாகம்-3

மதுவிற்கு எதிராகவும், அதனால் சமூகத்தில் எப்படிப்பட்ட தீங்குகளும்,இழப்புகளும் ஏற்படுகிறது என்பது பற்றி அந்தக் காலத்திலேயே மிகவும் கூர்மையான பார்வையோடு,தகுந்த புள்ளி விவரங்களோடு தந்தை பெரியார் குடியரசு இதழில் 16.08.1925-ல் எழுதிய தலையங்கத்தை சென்றத் தொடரில் அப்படியே தந்தோம்.

பெரியாரின் மேற்கண்ட கட்டுரையைப்பற்றி பல வாசக நண்பர்கள் தங்கள் கருத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்.தந்தை பெரியார் அவர்கள் 1921-ம் ஆண்டுக்கு பிறகு, அதிலும் காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னர், மது விலக்கு பற்றிய தனது கருத்தை மாற்றிக்கொண்டுவிட்டதையும்,மது அருந்துவதை ஆதரித்து பேசியதையும்,எழுதியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

அதிலும் ஒரு வாசகர் மது விலக்கு பற்றிய நிலைப்பாட்டில் தமிழக புரட்சிகர அமைப்பின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகவும்,பெரியாரைப்பற்றி ஆழமாக வாசிக்கும்படியும் எமக்கு அறிவுருத்தியிருக்கிறார்.

மேலும் ஒரு வாசகர் மது விலக்கு பிரச்சனையில் தந்தை பெரியாருடன் சிண்டு முனியும் சூறாவளியின் நோக்கம் என்ன? என்றும் வினவியிருக்கிறார்.

தந்தை பெரியாரும், புரட்சிகர அமைப்பும் சொல்லும் மது விலக்குக்கொள்கை சரியல்ல,என்றால் திரு ராமதாஸ் சொல்லும் மது விலக்கை முன்மொழிவீர்களா? அல்லது வேறு ஏதாவது இருக்குமா? என்றும் ஒரு நண்பர் கேட்டுள்ளார்.

சென்றத் தொடரில் மது விலக்கை ஆதரித்து தந்தை பெரியார் எழுதிய குடியரசு இதழ் தலையங்க கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.இந்தத் தொடரில் மது விலக்கை எதிர்த்து குடியரசு இதழில் 04.03.1967-ல் தந்தை பெரியார் எழுதிய தலையங்க கட்டுரையை வெளியிடுகிறோம்.

மது பற்றிய விவகாரத்தில் தந்தை பெரியார் அதை ஆதரித்து எழுதியிருந்தாலும்,அல்லது அதை எதிர்த்து எழுதியிருந்தாலும், நாங்கள் குறிப்பிடும் புரட்சிகர அமைப்பின் நிலைப்பாடு சரியோ,தவறோ இதில் எதுவாக இருந்தாலும் எழுதியவரும்,நிலைப்பாடு எடுத்துள்ளவர்களும் அவர்கள் யார் என்பதைவிட, அவர்கள் எந்த மாதிரியான நிலைப்பாடு வைத்திருந்தார்கள்,வைத்திருக்கிறார்கள், அது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கும், சமூக நலன்களுக்கும் ஏற்றதா? இல்லையா? அல்லது புதிதாக நாம் ஒரு சரியான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டுமா? என்பதை விவாதித்து முடிவு எடுப்பதே சூறாவளியின் நோக்கமாகும்.இதில் எமக்கு உள்நோக்கம் எதுவுமில்லை.

தந்தை பெரியார் எழுதிவிட்டார் என்பதால் அதை ஆதரிக்க வேண்டும் என்பதோ,தமிழக புரட்சிகர அமைப்பு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது என்பதால் அது எதுவாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று கருதுவதோ எந்த வகையுலும் சமூக அக்கறையுள்ளவர்களின் சிந்தனா முறையாக ஒருக்காலும் இருக்க முடியாது.

இந்த விடயத்தில் முழுமையானதொரு கட்டுரையை ஒரே முறையில் எழுதினால், அதில் எமது கருத்தும்,நிலைபாடும் என்ன என்பதை எம்மால் அறுதியிட்டு கூறிவிட முடியும்.
ஆனால் இப்போதோ இணையதளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டொரு பக்கங்களில் எழுத வேண்டிய தேவையும்,அவசியமும் உள்ளது.ஏராளமான வாசகர்களை கட்டுரையை வாசிக்க வைப்பதும், ஆக்கபூர்வமாக விவாதத்தில் பங்கேற்க வைப்பதுமே எமது இலக்கும் நோக்கமும் ஆகும்.எனவே தற்போதைய இந்த வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை என்றே கருதுகிறோம்.



எமது இந்த நிலையை சிலர் தமக்கு சாதகமாகவோ அல்லது அவசரப்பட்டோ கருத்துகள் தெரிவிப்பதை கண்டு நாங்கள் வியப்படைய போவதில்லை.எமது நிலையை சிலர் தமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வதையும் மற்றும் சிலர் பொறுமையின்றி கருத்துகள் கூறுவதையும் நாங்கள் அறிவோம்.இவைகள் நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.இதற்காக யார் மீதும் எமக்கு எவ்வித வருத்தமும் இல்லை.

எனவே எங்களது பணியை நாங்கள் தொடர்கிறோம்.மது விலக்கை எதிர்த்த தந்தை பெரியாரின் குடியரசு இதழ் தலையங்க்க்கட்டுரை இதோ..........

நான் காங்கிரசைவிட்டு வந்தப் பிறகு,சுமார் 30 ஆண்டுகளாகவே இன்றுள்ள மதுவிலக்கு கொள்கைக்கு எதிரி.இதற்காக என்னை நான் மதுக் குடங்களை காவடிக்கட்டி சுமந்து நிற்கிற மாதிரி காங்கிரசுக்கு ஆதரவான பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரம் போட்டு கண்டித்து எழுதியுள்ளார்கள்.

நான் காங்கிரசு மது விலக்கை பற்றி எதிர்த்து குடியரசு இதழில் எழுதிய தலையங்கங்கள்,கட்டுரைகள் ஆகியவற்றில் காங்கிரசு மது விலக்கிற்கு உள்ளெண்ணம் கூட கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்,பேசி வந்திருக்கிறேன்.

அந்த உள்ளெண்ணம் என்னவென்றால்,1938-ல் காங்கிரசு (இராஜாஜி) பதவிக்கு வந்த காலத்தில் நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேட வேண்டும் என்கிற எண்ணத்தின் மீது மது விலக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது என்று எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன்.அதாவது 100-க்கு 5 வீதமே படித்த மக்களாய் இருந்த நாம்-ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தப் பிறகு 100-க்கு 7 படித்த மக்களானோம்.அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜாஜி தாம் 1938-ல் பதவிக்கு வந்தவுடன் கல்வியை அன்று உள்ள தன்மை படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. ஆதலால் வரவு,செலவை சரிகட்ட 2600-பள்ளிகளை மூட வேண்டியது அவசியமாகிவிட்டது என்பதாக ஒரு சாக்கு கண்டுபிடிக்க கருதியே மது விலக்கினால் ஏற்பட்ட நட்டத்தை சரிகட்டினேன் என்று சொல்ல வசதி ஏற்படுத்திக்கொண்டார்.அது மது விலக்கினால் மது வரும்படித்தொகை பெருமளவிற்கு குறைந்து விட்டது என்று கூறிவிடலாம் என்பதாக கருதி ஏற்பாடு செய்தார்.ஆனால் மது விலக்கு ஏற்பாடு செய்த நாள் முதல் நாளது வரைக்கும் அந்த மதுவிலக்கு காரணமாக அது குடிசை தொழிலாக மாறி,இன்று அது (குடி) ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவி வந்திருக்கிறது.

இந்த மது விலக்கினால் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்த பாடில்லை என்பதோடு இதற்காக குடியர்கள் செலவிடும் பணமும் மற்றும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்த்தே அல்லாமல் குறையவில்லை என்பதோடு,முன்பு மது கடைகளுக்கு சென்று வாங்கி குடித்தவர்களுக்கு இன்று அவர்கள் வீடு தேடி வந்து மது விநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த மது உற்பத்தி தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள்,நாணயமில்லாதவர்கள் பெருகிவருகிறார்கள்.இது மாத்திரம் இல்லாமல் கிழ்நிலை போலிசு நண்பர்கள் அநேகர்கள் குடி பழக்கத்துக்கு ஆளாகி,நாணயம் கெட்டவர்களாகவும் ஆகிவருகிறார்கள்.

மற்றும்,இந்த மது உற்பத்தி காரணமாக அநேக அயோக்கியர்கள்,காலிகள் போலிசுக்கு நண்பர்களாக ஆகிவருகிறார்கள்.

இவற்றை எல்லாம் விட,குடியர்கள் உடல்நிலை மிக,மிக கேடடைந்து விடுகிறது.
மது அருந்தியதற்காக 5 சதவீதத்திற்கும் குறைவான பேர்கள்தாம் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்.மற்ற 95 சதவீதத்தினர் தாராளமாய் முறைப்படி அருந்திகொண்டே இருக்கிறார்கள்.

இன்னும் ,இவற்றுள் பல ரகசியமான கேடுகள் நிகழ்ந்து வருகின்றன. இன்று அரசாட்சி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியார் மதுவிலக்கு விசயத்தில் சில சீர்திருத்தம் செய்து மது விலக்கை நிலைநிறுத்துவோம்,தீவிரப்படுத்துவோம் என்பதாக கூறியிருப்பதாக தெரிகிறது.
இப்படி இவர்கள் கூறியிருப்பதற்கு காரணம் ராஜாஜியை திருப்திபடுத்த-அவருக்கு பயந்து கூறியிருக்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

‘நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து சிலர் கெட்டு உழலவேண்டும் என்பதுதான் பார்ப்பனர் தர்மம். ஆதலால் எந்த நிலையிலும் பார்ப்பனர் நம் யாருக்குமே நல்வழிகாட்ட மாட்டார்கள்

இந்த மது விலக்கு துறையில்,தேவைப்பட்டவர்களுகெல்லாம் மது கிடைக்கும்படியும், மதுவினால் உடலும்,புத்தியும் கெடாதபடியும் இருக்கத்தக்க வண்ணம் மது அனுமதிப்பு ஏற்படுத்தினால் சர்க்காருக்கு நல்ல வரும்படி ஏற்படுவதுடன் , பார்ப்பனர் தவிர்த்த மற்ற சகல துறைகளிலும் உள்ள மக்களில் நல்ல அளவுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.

தொடரும்...........

(விடுதலை தலையங்கம் 04.03.1967)
தொடர்புடைய கட்டுரைகள்:

1.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!  பாகம்-2


2.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! -1


Sunday, 22 January 2012

மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!

   * 1921-ல் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியதற்காக, தந்தை பெரியாருக்கு 1 மாதம் சிறை தண்டனை வழங்கியது அன்றைய ஆங்கிலேய அரசு.இதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியும் என்ற ஆட்சியாளர்களின் கனவு பலிக்கவில்லை.இதற்கு மாறாக கள்ளுக்கடை மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது.போராட்டத்தை அடக்கமுடியாமல் ஆங்கில ஆட்சியாளர்கள் திணறினார்கள்.போராட்டம் நடத்த தடை விதித்தார்கள்.

தந்தை பெரியாரின் தங்கை கண்ணம்மாள்,துணைவியார் நாகம்மை ஆகியோர் தலைமையில் பெண்கள் பெரும் கூட்டம்,கூட்டமாக வீதியில் இறங்கி போராடினார்கள்.சிறைகள் நிரம்பி வழிந்தன.இதனால் கள்ளுக்கடை மறியல் நடத்த தாம் விதித்த தடையை திரும்ப பெற்றனர் ஆட்சியாளர்கள்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் உச்சகட்டமாக தந்தை பெரியார் தனது தோட்டத்தில் இருந்த 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.


·       
               *  மேற்குலக நாடுகளில் குடிப்பது என்பது தட்ப வெப்பம்,பண்பாடு,உணவு பழக்கம் காரணமாக ஒரு சமூக பண்பாக உள்ளது.அங்கேயும் குடிக்கு அடிமையான குடிகாரர்கள் இருக்கிறார்கள்.என்றாலும் அவர்கள் சிறு எண்ணிக்கையில்தான் உள்ளனர்.இங்கோ குடிப்பது சமூக பண்பாக இல்லாத நிலையிலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.

ஆல்கஹாலின் அளவு அல்லது காரம் குறைந்த கள் போன்றவையே நமது மரபில் இருந்தது.இன்று அதிகம் காரம் நிறைந்த வெளிநாட்டு மது வகைகளை நமது மக்கள் குடித்து பழகிவிட்டனர்.

எனவே குடிப்பதை ஒரு ஒழுக்க பிரச்சனையாக பார்க்காமல்,சமூக பொருளாதாரத்தில் வைத்து பார்ப்பதே சரியாக இருக்கும்.குளிர் பிரதேசங்கள்,கடுமுழைப்பில் ஈடுபடுவோர் போன்ற காரணங்களுக்காக குடிப்பது தவறில்லை.அதேபோல என்றாவது ஒரு நாள் குடிப்பதும் பிரச்சனையில்லை.ஆனால் இங்கும்கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.

மது குடிப்பதைப் பற்றிய ஒரு வரலாற்று நிகழ்வையும்,அண்மையில் தமிழகத்தில் உள்ள ஒரு புரட்சிகரஅமைப்பு வெளியிட்டுள்ள நிலைப்பாட்டையும் மேலே தந்துள்ளோம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது தந்தை பெரியாரின் காலத்தில் மக்கள் குடித்ததற்கான சமூக,பொருளாதார காரணிகளை, மக்களின் தேவை,விருப்பத்தை மொத்தத்தில் மக்களின் ஜனநாயக உரிமையை மதியாத தந்தை பெரியாரின் சர்வாதிகார மனப்பாங்கையும்,மூடத்தனத்தையுமே வெளிப்படுத்துவதாக உள்ளது!

தந்தை பெரியாரின் போராட்டமும், மது குடிப்பது பற்றிய ஒரு அமைப்பின் நிலைப்பாடும் பெரும்பான்மை மக்களின் நல்வாழ்வோடு தொடர்புடைய விடயங்களாகும்.

எனவே,மக்களின் மீதும்,சமூகத்தின் மீதும் அக்கறையுள்ள அனைவரும் மேற்கண்ட விடயங்கள் பற்றி ஒரு தெளிவான முடிவிற்கு வரவேண்டிய அவசியத்தை உருவாக்கி இருக்கிறது.ஆகவே,மேற்கண்ட விடயம் பற்றி சமூக அக்கறையுள்ள அனைவரும் தமது கருத்துகளை எமக்கு அனுப்பிவைக்குமாறும்,விவாதத்தில் ஆக்கபூர்வமாக பங்கேற்குமாறும் அன்புடன் அழைக்கிறோம்.தொடரும்.............