விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label புரட்சியாளர்கள். Show all posts
Showing posts with label புரட்சியாளர்கள். Show all posts

Tuesday, 18 December 2012

ஆதிக்க சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோல்விக்கான காரணங்களும்

'தாழ்த்தப்பட்டோர் - பல வண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் இதற்கு முன்பு வெளியிட்டிருந்தோம். அதில், "ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் வாழ்விழந்து நிற்கும் விவசாயிகள், நெசவாளிகள் உட்பட நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆளும் கும்பலுக்கு எதிராக வெறுப்பும், ஆத்திரத்தையும் கொண்டுள்ளனர். ஆளும் கும்பலுக்கு எதிராக மக்கள் வெறுப்பும், ஆத்திரமும் கொள்வதற்கு எது காரணமாக உள்ளதோ அதே காரணம்தான் பாமக உட்பட அனைத்து சாதிவெறி அமைப்புகள், பிழைப்புவாதிகள் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கும், அவர்களிடமிருந்து விலகி நிற்பதற்கும் காரணமாக அமைகிறது. மேற்கண்ட இருதரப்பினருக்கும் ஏற்படும் நெருக்கடி ஒரே புள்ளியில் இருந்துதான் துவங்குகிறது. இதன் காரணமாகத்தான் பாமக ராமதாஸ் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு எதைத் தீர்வாக முன்னெடுக்கிறாரோ, அதுவே ஆளும் வர்க்கங்களின் நெருக்கடியை தீர்ப்பதற்குமான தீர்வாகவும் அமைகிறது. இதன் காரணமாக இவ்விரு பிரிவினரும் ஒன்றிணைந்து செல்வதும் தவிர்க்கவியலாத செயல்" என்பதை தெளிவுபடுத்தியிருந்தோம்.
dalith_colony_643
இக்கட்டுரையை படித்த செல்வன் என்ற வாசகர் “ ஐயோ.. படிக்க படிக்க தலை சுத்துதே.. எவனும் யோக்கியன் இல்லே – நு மக்களுக்கும் தெரியும். எந்தக் கழகமானாலும், கட்சியானாலும், தலைவரானாலும், அது புரட்சிகரமா இருந்தாலும் சரி, புரட்சி இல்லாம இருந்தாலும் சரி. அடுத்த சம்பவம் நடக்குற வரைக்கும் தர்மபுரிய வெச்சு ஓட்ட வேண்டியதுதான் ”, என்று தனது எண்ணத்தைப் பதிவு செய்துள்ளார்.
 சில வாசகர்கள் எமது கட்டுரையில் உள்ள செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் மகஇக குழும அமைப்புகளும் இப்படித்தானா என்று எண்ணும்போது மிகுந்த வேதனையாக உள்ளது என்றும் தொலைபேசி வாயிலாக எம்மோடு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
 மற்றொரு வாசகர், தங்களின் கட்டுரை ஒட்டுமொத்தமாக புரட்சிகர அமைப்புகளின் மீதே அவநம்பிக்கையை ஏற்படுத்துவதைப் போன்று உள்ளது. எனவே கட்டுரையை வேறு வகையில் எழுதியிருக்கலாமோ என்று கருதுகிறேன் என்று கூறினார்.
 மொத்தத்தில் தமிழகத்தில் செயல்படும் ஒரே புரட்சிகர அமைப்பு தாங்கள்தான் என்று உரிமை பாராட்டிக் கொள்ளும் மகஇக குழுமம், கடந்த 40 ஆண்டுகளாக அவர்கள் இலக்கில் குறிப்பிடும் எதையுமே சாதித்து விடவில்லை. ஆனாலும் இந்த அமைப்பாவது இருக்கிறதே என்று ஆறுதல் பல தரப்பிலும் இருப்பதையும், அதுவும் இப்போது இல்லாமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கமும் மேற்கண்ட வாசகர்களின் கருத்துகளில் வெளிப்படுவதையும் நாங்கள் உணர்கிறோம்.
 ஆறுதலை மட்டுமே தரக்கூடிய தன்மையை கொண்டிருக்கிற அமைப்பைக் கொண்டு சமூகத்தில் நடைபெறும் பல்வேறு அநீதிகளை எதிர்கொள்வதோ, இவைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி முறியடிப்பதோ, அதிலும் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ சாத்தியமே இல்லை. இந்த அமைப்புகளின் செயல்பாடுகளின் மூலம் ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோத செயலை மூடி மறைக்கவும், மக்களை சாந்தப்படுத்தவுமே முடியும்.
 மகஇக குழும அமைப்புகளின் இலக்கும் மக்களைத் திரட்டுவதோ, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதோ அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக அவர்களின் இலக்கு முன்னணியாளர்களை வென்றெடுப்பது மட்டுமே!
 இப்படி வென்றெடுக்கும் நபர்களைக் கொண்டு புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் ஆகியவற்றை விற்பனை செய்வது, பேருந்துகளில் மக்களுக்குப் புரியாத, விளங்கிக் கொள்ள முடியாத விடயங்களைப் பேச வைப்பது (இப்படிப் பேசுபவர்களே தாங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடியாமல் கொஞ்சநாளில் ஓடி விடுவது என்பது வேறு கதை) ஆகியவைதான். இவைகளை செய்வதும் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதற்காகத்தான். இப்படி வென்றெடுக்கும் முன்னணியாளர்களை சமூக யதார்த்தத்திற்குப் புறம்பானவர்களாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும், தாங்கள் உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்பவர்களாகவும் மாற்றுவதுதான். அதாவது அவர்களை சிந்தனை ரீதியாக காயடிப்பதுதான் இவர்களின் நாற்பதாண்டு கால புரட்சிகர சாதனை!
 மேலே கண்ட சாராம்சத்தை உடைய இந்த அமைப்பின் தன்மையைக் கொண்டுதான், இது புரட்சிகர அமைப்பு அல்ல என்பதையும் சமரச, சீர்திருத்தவாத அமைப்பாக சீரழிந்து போன இவர்கள், பிழைப்புவாத சகதியில் மூழ்குவதும் தவிர்க்க வியலாத ஒன்றாகி விட்டது. எனவே தான் தாழ்த்தப்பட்டோர் ஆதிக்க சாதி வெறியை எதிர்கொள்ள இப்போதைய நிலையில் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் ஏதும் இல்லை என்பதையே வரையறுத்துக் கூறியுள்ளோம்.
 இப்படி நாங்கள் வரையறுத்துள்ளதாலேயே தமிழகத்தில் புரட்சிகர சக்திகள் உருவாவதற்கான அடிப்படை இல்லை என்பதோ, இனியும் உருவாகாது என்பதோ இதன் பொருளல்ல. அதே வேளையில் புரட்சிகர அமைப்புகள் இனி எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை தர்மபுரி நிகழ்வு நம் கண்ணத்தில் அறைந்தாற் போன்று நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
 நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் ஒன்றுபட்ட நக்சல்பரி இயக்கம் பின்னர், மக்கள் யுத்தக்குழு, மாவோயிஸ்டுகள் செயல்பட்டவரைதான் தாழ்த்தபட்டோருக்கு எதிரான வன்னிய சாதிவெறி வெளிப்படமால் இருந்துள்ளது. இதற்கு மேலே கண்ட நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களில் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் இருந்ததும், அதிலும் அவர்கள் ஆயுதம் ஏந்தி நின்றார்கள் என்பதுதான் ஆதிக்க சாதி வெறி வாலை சுருட்டிக் கொண்டிருந்ததற்குக் காரணமாக இருந்துள்ளது. இதை, இந்த சம்பவத்தைப் பற்றி நேரடி கள ஆய்வு செய்துள்ள அனைவரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
 நக்சல்பரி புரட்சிகர அமைப்புகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களை மட்டுமே பெருமளவு சார்ந்துள்ளது. தம்மை மேல்சாதி என்றுக் கருதிக் கொள்வோரில் முன்னணியாளர்களை மட்டுமே இவர்களால் வென்றெடுக்க முடிந்துள்ளது. இது நமக்கு புலப்படுத்தும் செய்தி என்னவென்றால் மேல்சாதிகள் என்று தம்மைக் கருதிக் கொள்ளும் மக்களைத் திரட்டுவதில் புரட்சிகர அமைப்புகள் தோல்வியையேச் சந்தித்துள்ளன என்பதைத்தான்.
 இந்தத் தோல்வி சமவெளிப்பகுதி மக்களை வென்றெடுப்பதில் நக்சல்பரி இயக்கங்கள் தோல்வி அடைந்துவிட்டதாக வேறொரு வகையில் புரிந்துகொள்ளப்படுகிறது. இதை இந்தியா முழுக்க உள்ள ஜனநாயக, புரட்சிகர சக்திகள் அனைவருமே ஒப்புக் கொண்டுள்ளனர்.
 இந்த உண்மையை புரட்சிகர அமைப்புகள் ஒப்புக்கொண்டாலும், இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றியோ, இதை எப்படி மாற்றுவது என்பதைப் பற்றியோ ஏதும் கூறுவதுமில்லை, விவாதிப்பதுமில்லை. இதற்கு இந்திய சமூக வரலாறு பற்றிய புரிதலோ, கண்ணோட்டமோ இவர்களுக்கு இதுவரை இல்லாததுதான் காரணமாகும்.
 உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் உற்பத்தித் துறையில் ஏற்படும் வளர்ச்சியும், முன்னேற்றமும் இந்திய மக்களின் சிந்தனையிலும் அதே அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இங்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சியும், முன்னேற்றமும் தவிர்க்கவியலாத சமூக வளர்ச்சியின் தேவையில் இருந்து ஏற்பட்டதா என்பதை இவர்கள் கணக்கில் கொள்ளவே இல்லை. தவிர்க்க வியலாத சமூக வளர்ச்சி தேவையிலிருந்து மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், அவைகள் மக்கள் செயல்பாடுகளின் விளைவாக அவர்களின் சிந்தனா முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்று வரை அனைத்து மாற்றங்களும் ஆளும் வர்க்கங்கள் தமது நலனில் இருந்து சமூகத்தின் மீது திணிப்பவைகளே ஆகும். ஆளும் வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்ப உற்பத்தியில் திணிக்கும் மாற்றங்களில் மக்களின் பங்களிப்பு, செயல்பாடு ஏதுமில்லாததால், உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் அதே அளவிற்கு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்குவதில்லை.
 மக்களின் சிந்தனா முறையில் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் உற்பத்தியில் ஏற்படும் மாற்றத்தை மக்கள் தமது செயல்பாடுகளின் ஊடாக – போராட்டங்களின் ஊடாக – கொண்டு வந்திருக்க வேண்டும்.
 மக்கள் தாங்கள் புதிதாக உருவாக்க விரும்பும் மாற்றங்களை, இதற்கு முந்தைய சமூக அடித்தளத்தின் மூலம் ஆதாயம் அடையக் கூடியவர்களை எதிர்த்து முறியடிப்பதன் மூலமே உருவாக்க முடியும்.
dharmapuri_attack_426
 இந்தப் போராட்டம் உற்பத்தியில் மட்டுமல்ல, இதைப் பாதுகாக்க ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டுள்ள பண்பாடு, நாகரீகம், கலை, கலாச்சாரம் உட்பட அனைத்தையும் எதிர்த்து முறியடிப்பது என்பதோடு இவைகளுக்கு மாற்றாக தமது நலன்களுக்கு ஏற்ப புதியனவற்றையும் உருவாக்கிக் கொள்வதாகும்.
 இப்படியான ஒரு அனுபவத்தை இந்தியச் சமூகம் இதுவரை தனது வரலாற்றில் ஒரு முறை கூட சந்தித்ததில்லை. எனவே தான் உற்பத்தியில் எவ்வளவு பெரிய வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் கருவிகளில் ஏற்படும் மாற்றமாக மட்டுமே உள்ளது. இவைகள் திணிப்பின் ஊடாக உருவாக்கப்படுவதால், அதை திணிப்பவர்களின் நலனை உள்ளடக்கிய அளவிற்கு மட்டுமே முந்தைய பண்பாடு, நாகரீகம் உட்பட அனைத்திலும் மாற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவைகள் தவிர்க்கவியலாத வடிவ மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்கள் இன்று அனைத்து சாதியினரோடும், பேருந்து, ரயில்களில் சமமாக பயணம் செய்வது, பள்ளிக் கல்லூரிகளில் கல்வி கற்பது, அரசுத்துறைகளில் வேலைபார்ப்பது, செருப்பணிவது உட்பட அனைத்து உரிமைகளும் ஆதிக்க சாதிகள் தமது மனமாற்றத்தின் விளைவாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு மனமுவந்து அளித்தவைகள் அல்ல.
 தவிர்க்கவியலாத சமூகத் தேவையும், தாழ்த்தப்பட்ட மக்களின் விடாப்பிடியான, வீரம் செறிந்த போராட்டங்களின் ஊடாகவும் வென்றெடுத்தவைகளே ஆகும்.
 சாதி, தீண்டாமையை சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் முன்பு திணித்து, தாழ்த்தப்பட்டோரை ஒடுக்கியவர்கள், இனி அது சாத்தியமில்லை என்பதால், அவைகளை தன்னளவில் – எல்லையை- சுருக்கிக் கொண்டு நடைமுறைப்படுத்துகின்றனர்.
 தமது நலன்களுக்கு உகந்த வகையில் தாழ்த்தப்பட்டோரை சமூக செயல்பாடுகளில் ஈடுபட சட்டரீதியாக பாதுகாப்பு அளிக்கும் ஆளும் வர்க்கம், சாதி, தீண்டாமையை ஆதிக்கசாதிகள் தன்னளவில் கடைப்பிடிப்பதை பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கிறது. இதன் வாயிலாக தமக்கெதிராக மக்கள் ஒன்று திரள்வதைத் தடுத்து, தனது நலனை முழு அளவில் பாதுகாத்துக் கொள்கிறது.
 ஆனால் இந்தியாவில் உள்ள நக்சல்பரி புரட்சிகர இயக்கங்களோ, வாழ்நிலையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்ற மார்க்சிய இயங்கியலை யந்திர கதியாக புரிந்து கொண்டு, அதை சமூகத்தின் மீது திணிப்பதையே தமது செயல்பாடாகக் கொண்டுள்ளனர்.
 இந்திய சமூக வளர்ச்சி பற்றிய செழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே மார்க்சிய இயங்கியலை இங்கு சமூக மாற்றத்திற்கான கோட்பாடாக பயன்படுத்த முடியும். இவர்களால் மட்டுமே இந்திய சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் – சமவெளிப்பகுதியில் உள்ள மக்களையும் - திரட்டுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும்.
 சமூகத்தில் உள்ள அனைத்து சாதி மக்களையும் திரட்டுவதற்கான புரிதலையோ, வழிமுறையையோ கொண்டிராத புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் தம்மிடம் உள்ள ஆயுதங்களின் செயல்பாடுகளை வைத்துதான், தாங்கள் செயல்படும் காலம் வரை சாதிவெறியர்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக மட்டுமே முடக்கி வைக்க முடியும் என்பதைத்தான் தர்மபுரி நிகழ்வு நமக்கு உணர்த்தி உள்ளது.
 ஆதிக்க சாதிகளில் ஒன்றிரண்டு முன்னணியாளர்களை வென்றெடுப்பதால் மட்டுமே ஆதிக்க சாதி வெறியை முறியடித்துவிட முடியாது. நாயக்கன் கொட்டாயில் தமிழ்வாணன், சித்தாநந்தன், பச்சியப்ன் போன்ற முன்னணியாளர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதும் அவர்கள் தமது மௌனம், ஒதுங்கிக்கொள்ளல் மூலம் வன்னிய சாதிவெறிக்கு மறைமுகமாக உதவியிருக்கிறார்கள் என்பதும்தான் நடந்துள்ளது.
 கீற்று இணையதளத்தில் 'வன்னிய சாதி வெறி சொல்வது என்ன?' என்ற கட்டுரையில் “ஆதிக்கசாதி மக்களிடமும் அமைப்பு பலம் பெற வேண்டும். அம்மக்களிடமும் சாதிய பிற்போக்குத் தனங்களுக்கும், கட்டவிழ்த்து விடவேண்டும்”, என்று தோழர் குணா குறிப்பிட்டுள்ளார்.
 இப்படி ஆதிக்க சாதிகளிடமும் அமைப்பு பலம்பெற என்ன திட்டம் உள்ளது என்பதைக் கூறவில்லையே என்று தோழர் குணாவிடம் வாசகர் சுதிர் மார்க்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கான பதில் தோழர் குணாவிடம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள எந்த ஒரு புரட்சிகர அமைப்பிடமும் இல்லை என்பதுதான் உண்மை.
 இந்தியாவில் உள்ள அனைத்து புரட்சிகரக் குழுக்களும் ஆதிக்க சாதிகளில் உள்ள ஒன்றிரண்டு முன்னணியாளர்களை தாங்கள் வென்றெடுப்பதையே முன்னுதாரணமாகக் கருதி இதே போன்று ஆதிக்க சாதிகளில் உள்ள பெரும்பான்மை மக்களையும், உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் திரட்டிவிட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை தொடரும் வரை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நமது நாட்டில், சமூக மாற்றம் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.
 புரட்சிகர இயக்கங்கள் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களையே பெருமளவு சார்ந்து தமது செயல்களைத் தொடரமுடிகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிகள் தமக்கு இழைக்கும் அநீதிகளை எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் புரட்சியாளர்கள் தோள்கொடுக்கிறார்கள் என்பதால்தான் அவர்களுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.
dalith_colony_646
 தாழ்த்தப்பட்ட மக்கள் புரட்சிகர அமைப்புகளில் இணைவதற்கு எது காரணமாக அமைகிறதோ, அதே காரணம்தான் ஆதிக்க சாதிகளை புரட்சிகர அமைப்புகளிடமிருந்து விலகி நிற்கவும் வைக்கிறது.
 கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவெங்கும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஏறத்தாழ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தமது உயிரையே பறிக்கும் அவலத்திற்கு எதிராக இம்மக்களை அமைப்பாக்கவோ, போராட வைக்கவோ புரட்சிகர, ஜனநாயக சக்திகளால் இயலவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கலவரங்களில் இவர்களை சாதிவெறியர்களால் அமைப்பாக திரட்ட முடிகிறது. இந்த அளவிற்கு இம்மக்களின் சிந்தனாமுறை - அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிந்தானா முறை - மிகவும் பிற்போக்கானதாக உள்ளதையும், இப்படிப்பட்ட நிலையிலும் இவர்களை தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராக அமைப்பாக்கும் வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையே இது நமக்கு உணர்த்துகிறது.
தமது வாழ்நிலை அவலங்களுக்கு எதிராகப் போராடும்போதுதான், தமது நலன்களுக்கு எதிரானவர்களையும், ஆதரவானவர்களையும் மக்களால் உணர்ந்து கொள்ளவும், இதன்மூலம் இவர்களின் சிந்தனைத்திறனை ஜனநாயக தன்மை உடையதாக மேம்படுத்த‌வும் முடியும்.
 இப்படி ஆதிக்க சாதிகளின் ஜனநாயக உணர்வு மேம்படுமேயானால் தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுடன் போராட்டக் களத்தில் இணைவதற்கு தடைக்கல் ஏதும் இருக்கப் போவதில்லை.
 தம்மை மேல்சாதி என்று கருதும் மக்களை அமைப்பாக்குவதற்கும், இதன் ஊடாக இம்மக்களின் சிந்தனையை ஜனநாயகப் பூர்வமாக்குவதற்குமான உள்ளடக்கத்தை உடைய திட்டத்தையும், வழி முறைகளையும் உருவாக்க வேண்டும்.
 இக்கட்டுரையில் நாங்கள் கூறியுள்ள கருத்துகளும், 'தாழ்த்தப்பட்டோர் பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்' என்ற கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ள கருத்துகளும் யதார்த்தமான உண்மையான விவரங்களில் இருந்து கிடைக்கும் விடைகளேயாகும். இப்படி நாங்கள் உண்மைகளை பதிவு செய்வது பலருக்கும் சலிப்பையும், அவநம்பிக்கையையும் உண்டாக்குவது போலத் தோன்றினாலும் இப்படிபட்டவர்கள் இந்த சமூக யதார்த்தத்தை மூடிமறைப்பதால், இதுவரை ஏற்பட்டுள்ள, இனி எதிர்காலத்தில் ஏற்படப்போகிற எதிர்றை விளைவுகள் நமக்கு பெரும் இன்னல்களையும், அழிவையுமே தரப் போகிறது என்பதை உணர்வார்களேயானால், தமது அவநம்பிக்கை சிந்தனா முறையை மாற்றிக் கொள்வார்கள். இவைகளை முறியடிப்பதற்கான வழிமுறைகளைக் காண முற்படுவார்கள்.
 இதற்கு மாறாக நிலவுகிற சமூக யதார்த்தத்தை மூடி மறைக்க முயலும் செயல்பாடுகள் அனைத்தும் நிலவுகிற சமூக அமைப்பை பாதுகாக்கவும், பிழைப்புவாதிகளின் அடித்தளத்தை செழுமைப்படுத்துவதற்கும் பயன்படும்.
 நாம் விவாதிக்கும் சமூக சிக்கல்கள் எதுவானாலும், அவைகளை உண்மையிலேயே தீர்த்து சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அடைய விரும்புகிற புரட்சிகர அமைப்புகள், தனிநபர்கள், குழுக்கள் எவராயினும் அதற்குரிய தீர்வுகளை, உரிய வழிமுறைகளைக் கொண்டு நாட்டின் பெரும்பான்மை மக்களைத் திரட்டி, சமூக மாற்றத்திற்கும், முன்னேற்றத்திற்கும் இடையூறாக உள்ள தடைக்கற்களை உடைக்க வேண்டியதே இன்றைய உடனடிக் கடமையாக ஆக்கிக்கொள்ள வேண்டும்!


தொடர்புடைய கட்டுரைகள்:

9.தாழ்த்தப்பட்டோர்: பலவண்ண பிழைப்புவாதிகளின் பகடைக்காய்!

Thursday, 14 June 2012

நேபாள புரட்சியின் பின்னடைவு :தோழர் பசந்தாவின் நேர்காணல்.

இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கும்,உழைக்கும் மக்களுக்கும் தெம்பூட்டும்,நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித்தலைமையின் காட்டிக்கொடுத்தலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.மக்கள் விடுதலை ராணுவமும் நயவஞ்சகமான முறையில் கலைக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும், நேபாள மாவோயிசக் கட்சியின் மிக முக்கிய தலைவர்களும்,அணிகளும் கட்சித்தலைமையின் துரோகக் காட்டிக்கொடுத்தலுக்கு எதிராக இன்று களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.அப்போராட்டத்தின் ஒரு அங்கமாக புரட்சிகர அணிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பசந்தா துருக்கி மா-லே-மா கட்சிக்கு அளித்துள்ள நேர்காணலை இங்கு வெளியிடுகிறோம்.




நேபாள் ஒருங்கிணைந்த மாவோயிசக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பசந்தாவுடனான நேர்காணல்:

கேள்வி1 .உங்களது கட்சிக்குள் வர்க்கப்போராட்டம் தொடர்பான தற்போதைய நிலை எப்படியுள்ளது? மிக முக்கியமான முரண்பாடுகள் ஏதேனும் தீர்க்கப்பட்டுள்ளதா (இங்கு இரு தரப்பினரின் நிலைப்பாடுகள் குறித்து முழுமையாக நீங்கள் விளக்கலாம்.மேலும் ஏற்கனவே நாங்கள் இந்த விவகாரத்தில் பொதுவான புரிதலைக்கொண்டிருந்தாலும் அதில் நீங்கள் உடன்படுகின்றவற்றை அடிக்கோடிட்டுக்காட்டுங்கள்.)

பதில்: வர்க்கப்போராட்டம் தான் ஒரு கம்யுனிஸ்ட் கட்சி உயிர்வாழ்வதற்கான அடிப்படை.கட்சிக்குள் வர்க்கப்போராட்டம் இல்லாவிட்டால் கம்யூனிசக்கட்சியே இருக்கமுடியாது.இருப்பினும் இந்த வர்க்கப்போராட்டம் எப்போதும் ஒரே அளவைக்கொண்டிருக்காது.அது பிரச்சனையின் தன்மையை பொருத்து மாறக்கூடியது.எமது கட்சிக்குள் வர்க்கப் போராட்டம் கூர்மை அடைந்தது,நாடாளுமன்றம் கூடி நேபாள ஜனநாயக குடியரசை உருவாக்கிய பின்னர்தான். தற்போது மன்னராட்சிதான் வீழ்த்தப்பட்டிருக்கிறதே தவிர நிலவுடைமை சுரண்டல் அல்ல.நேபாளம் இன்னும் அரைக்காலனி,அரை நிலப்பிரபுத்துவ நாடுதான்.வெளியில் இருந்து வரக்கூடிய நிர்பந்தங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.

தற்போது நடைபெறும் வர்க்கப்போராட்டத்தின் சாரம், தற்போதைய சூழலை எப்படி புரிந்துகொள்வது என்பதில்தான் மையங்கொண்டுள்ளது.அதாவது ஜனநாயக குடியரசு என்றப்பெயரால் அலங்கரிக்கப்பட்டு,மூடி மறைக்கப்பட்டுள்ள அரைக்காலனி,அரை நிலபிரபுத்துவம் என்ற நிலைப்பாட்டை தொடர்வதா? அல்லது மக்கள் குடியரசை நிறுவ தொடர்ந்து போராடுவதா? என்பதுதான்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற எங்களது கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் தலைவர் பிரசந்தா வர்க்கம் குறித்த கேள்விகள் தொடர்பான பல விடயங்கள் பற்றி விளக்கும் நீண்ட விளக்கத்தை கொடுத்திருந்தார். அதில் புதிய ஜனநாயக புரட்சிக்கும்,சோசலிசத்திற்கும் இடையிலான இடைவெளி குறைந்துள்ளதால், சந்தேகத்திற்கு இடமின்றி நேபாளத்திற்கு தற்போது புதிய ஜனநாயக புரட்சி தேவையற்றது என்றும் ,  அதில் நாம் பெருமளவு அடைந்து விட்டோம், மீதி சோசலிசம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக வரும்போது அடைந்துவிடுவோம் எனவும் கூறி இருந்தார். மேலும் தற்போது கட்சியின் முக்கியப் பணி முதலீட்டு நாடுகளுக்கு சாதகமான சூழலையும் உற்பத்தி சக்திகளையும் உருவாக்குவது எனவும் கூறி இருக்கிறார். இந்த வகையில் தேசிய பொருளாதாரம்,தேசிய முதலாளிகளுக்காக கூட அவர் நிற்கவில்லை.உண்மையில் அவர் ஏகாதிபத்திய சக்திகளோடு ஒருங்கிணைந்திருக்கிறார். மக்கள் சக்தியை வலுவிழக்கச் செய்வது, ஏப்ரல் 10, 2012 அன்று மக்கள் விடுதலைப்படையை சதித்தனமாக நேபாள ராணுவத்திடன் ஒப்படைத்தது, புரட்சியின் போது நிலபிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே தந்தது, தேச நலனுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டது மற்றும் இந்தியாவுடன் மற்றுமொரு கேவலமான நீர்வள ஒப்பந்தம் செய்துகொண்டது, ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய வல்லரசான இந்திய விரிவாக்கவாதிகளுக்கும், அவர்களின் நேபாள பொம்மைகளுக்கும் பிரசந்தா,பாபுராம் கும்பல் சேவை செய்துகொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த க்கும்பல் நாட்டிற்கும் உழைக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது. தலைவர்கள் ஏகாதிபத்தியங்களின் உள்ளூர் தரகர்களோடு நிர்வாணமாக சரணடையும் போது வர்க்கப்போராட்டம் கட்சியின் பிரச்சனையாக மட்டும் இருக்க முடியாது. அது நாட்டினதும்,நாட்டு மக்களினதும் பிரச்சனையாகும். இந்த தேச விரோத, மக்கள் விரோத குற்றங்களை  நிச்சயமாக மக்களிடையே கொண்டு சென்று அம்பலப்படுத்தப்பட வேண்டும். ஆகையால் இப்பிரச்சனையை மக்களிடம் எடுத்துச்சொல்வது என்பது மொத்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மார்க்சியத்தின் பெயரால் துரோகமிழைக்கும் வலதுசாரி திருத்தல்வாதிகளை அம்பலப்படுத்தி, முறியடித்து, புரட்சிகர சக்திகளின் பின் அணி வகுக்கச்செய்யும் கொள்கை மற்றும் அரசியல் பரப்புரையாகும்.

கடைசியாக நடைபெற்ற எங்களது கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் அமைப்பு பிரச்சனைகள் தொடர்பாக ஒரு முடிவை மேற்கொண்டது.

அது கட்சியில் உள்ள எந்த ஒரு கமிட்டியும் பெரும்பான்மைக்கு,சிறுபான்மை கட்டுபடல் மேல்கமிட்டிக்கு கீழ்கமிட்டி கட்டுப்படல் என்பதன் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளாது.

கட்சியில் ஒற்றுமை இல்லாத போது, எந்த ஒரு சித்தாந்தக் குழுவும் அவர்களின் கூட்டத்தை தனித்தனியாக நடத்தி முடிவுகள் எடுத்து அவற்றை செயல்படுத்த உரிமையுள்ளது.

தற்போது ஜனநாயக மத்தியத்துவம் என்பது எமது கட்சியில் இல்லை. கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சிபோராட்டங்கள் வெளிப்படையாக மக்களிடையே எடுத்துச்செல்லபட்டுள்ளது.

மொத்த நிகழ்வுகளையும் தொகுப்பது புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தேவையான,ஆழமான தத்துவார்த்த புரிதலை கொண்டவர்களாக எம்மை உருவாக்கும் என கருதுகிறோம்.

கேள்வி 2: மக்கள் விடுதலை படையின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது?அது முழுமையாக கலைக்கப்பட்டுவிட்டதா?

பதில்: மக்கள் விடுதலைப்படை உருவாக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநாட்டில் தலைவர் பிரசந்தா 21-ம் நூற்றாண்டின் எதிர்புரட்சியை தடுக்கவல்ல, உலக உழைக்கும் மக்களின் பலம் பொருந்திய ராணுவம் மக்கள் விடுதலைப்படை என்றார்.ஆச்சரியப்படும் வகையில் 12 ஆண்டுகளுக்கு பின் மக்கள் விடுதலைப்படையின் உயரிய கட்டளைத் தளபதியும்,அதற்கு உயிர் கொடுத்தவருமான தலைவர் பிரசந்தா ஏப்ரல் 10,2012 அன்று நேபாள ராணுவத்தைக்கொண்டு அதை  சதித்தனமாக சுற்றி வளைத்து கட்டாயப்படுத்தி சரணடைய உத்தரவிட்டார். இதனை தனது தைரியமான நடவடிக்கையாக அவர் கூறிக்கொள்கிறார். உண்மையில் இது ஏகாதிபத்திய மற்றும் விரிவாக்கவாதிகளின் நிழல் நடவடிக்கைகளினால் எடுக்கப்பட்ட கோழைத்தனமான முடிவாகும்.

கேள்வி 3: இந்த வர்க்கப்போராட்டம் தொடர்பாக உங்களது கட்சியின் சர்வதேச தொடர்புகளின் பிரதிபலிப்பு எப்படியுள்ளது? அவர்களின் விமர்சனம்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எடுத்துக்காட்டாக இந்திய மாவோயிசக்கட்சி மற்றும் அதே நிலைப்பாடுகளை உடைய ஏனைய அமைப்புகளின் விமர்சனங்கள் தொடர்பாக................

பதில்: எமது கட்சிக்குள் இரு வகை நிலைப்பாடுகள் எழுவதற்கு முன்பாக சர்வதேச கம்யூனிசக்குழுக்கள் எமது கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து விமர்சனங்களைக் கொண்டிருந்தன.சில கட்சிகள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருந்தன. எடுத்துக்காட்டாக இந்திய மாவோயிசக்கட்சி,ஈரான் மா-லெ-மா கட்சி ,அமெரிக்க புரட்சிகர கம்யூனிசக்கட்சி போன்றவை.சிலர் தமது விமர்சனங்களை எமக்கு அனுப்பி வைத்திருந்தனர்.சில திருத்தல்வாதக் கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் நாங்கள் எடுத்த நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருந்தனர். கட்சிக்குள் இருவகை நிலைப்பாடு எழுந்த பின்னர் உலக புரட்சிகர இயக்கங்கள் தமது சித்தாந்த ஆதரவை கட்சியின் புரட்சிகர பிரிவான தோழர் கிரணுக்கு தெரிவித்திருந்தனர். பல்வேறு குழுக்களிடம் இருந்து வந்த விமர்சனங்கள் அடிப்படையில் சரியானவை. அதில் சில இப்பிரச்சனை சார்ந்த சூழலின் புரிதல் தொடர்பானவை. எப்படியாயினும் அந்த விமர்சனங்கள் புரட்சியையும்,புரட்சிகர நிலைப்பாட்டையும் தற்காத்து திரிபுவாதத்திற்கு எதிராக போராட எமக்கு உதவியாய் இருந்தன.

கேள்வி 4: 2005 ரோல்பா மாநாட்டை எதிர் அணி எவ்வாறு கருதியது? அது தற்போதைய சூழல் ஏற்பட ஏதாவது ஒரு வகையில் காரணமானதா?

பதில். அப்போது எமது கட்சி  மாநாட்டைக் கூட்டவில்லை. மத்தியக்குழு கூட்டத்தைத்தான் கூட்டியது. அப்போது ஜனநாயக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக ஏற்றுக்கொண்டோம். அதனை நாங்கள்  செயல் தந்திர மாற்றம்  என்றே கூறினோம். அப்போது நாங்கள் எடுத்த பாராளுமன்ற பாதை நிச்சயமாக ஒரு திருப்புமுனை. அதுவே எங்களை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடு நிச்சயமாக இந்த சுழல் உருவாக்கத்தின் ஒரு காரணி. ஆனால் அந்த சொங்க்வாங் நிலைப்பாடு தோ வெற்றிடத்தில் இருந்து எழவில்லை. ஆதலால் கடந்த காலத்தை  முழுமையாக தொகுத்துப் பார்க்கவேண்டியுள்ளது, இதுவரை அதை நாங்கள் செய்யவில்லை. செழுமையான தொகுத்தலுக்கு அந்தக் கூட்டம், இரண்டாவது மாநாடு மற்றும் அதற்கு முந்தைய காலத்தையும் உற்று நோக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் நாங்கள் 21 ம் நுற்றாண்டில் ஜனநாயகத்தை உருவாக்குதல் என்ற எங்களது நிலைப்பாட்டையும் சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி.5 கட்சி மாநாடு நடத்துவது குறித்து எதிர் அணி என்ன நினைக்கிறது? கட்சியில் உள்ளவர்கள் சட்டவாத பாதையை ஆதரிப்பதற்கு, பல ஆண்டுகளாக மாநாடு நடத்தப்படாததும் ஒரு காரணம் என கருதுகிறீர்களா?

பதில். ஆமாம் இருபது ஆண்டுகளாக கட்சி மாநாடு நடத்தப்படாததும் ஒரு காரணம். ஆனால் அதுவே முக்கியமான காரணமில்லை. தலைமையின் கொள்கை மற்றும் அரசியல் சறுக்கல்களே முக்கியக் காரணம். கட்சி மாநாடு பிரச்சனைகளை தீர்க்க உதவும். அது தொடர்ச்சியாகவும் நடைபெற வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் அது நடக்க வாய்பில்லை. அது நாங்கள் நடைபெற வேண்டாம் என கருதுவதாகாது, மாறாக கட்சியில் எழுந்துள்ள இரு வேறு நிலைப்பாடுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்த உகந்த சுழல் வேண்டும் என்ற அவசியம் இல்லை.

கேள்வி 6. இந்த முரண்பாட்டை கட்சியில் பிளவின்றி தீர்க்க முடியும் என்று கருதுகிறீர்களா? எதிர் அணியினர் இதற்கு எந்த அளவிற்கு துணிவார்கள்?

பதில். புரட்சியாளர்கள் தான் புரட்சியை முன்னெடுக்க வலிமையான கட்சியை விரும்புகிறார்கள். முதன்மையாக புரட்சிகர தலைமையின் வலிமை அதன் சரியான கொள்கை மற்றும் அரசியல் பாதையை கொண்டு அளவிடப்பட வேண்டியதாகும். இரண்டாவது அமைப்பு மற்றும் செயல் முறை பரிமாணம் சார்ந்ததாகும். ஆகவே புரட்சியாளர்கள் முதன்மையாக சரியான கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாட்டை கட்டி எழுப்பும் உந்துதலையும், அதன் பிறகு சரியான அமைப்பு நிலைப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். இதுவே பலரையும் கட்சியில் அணிதிரளச்செய்து வலிமையான பௌதீக அடித்தளத்தையும் கொடுக்கும்.

தலைவர் மாவோ உடைந்து செல்லும் உண்மையான சிறு துண்டுகள் தொடர்பாக  மிகச் சரியாக ஒளியை  பாய்ச்சியிருக்கிறார்.  உடைந்த அந்த துண்டுகள் மார்க்சியத்தில் இருந்து விலகி செல்பர்வர்கள் என கூறி இருக்கிறார். வலது திரிபுவாதிகள் சோசலிசம் என்னும் தொலைநோக்கு பார்வையில் இருந்து விலகிச் செல்வார்கள். இந்த வகையில் பாபுராம் மற்றும் பிரசந்தா கும்பல் உடைந்து செல்லும் துண்டுகள் ஆவார்கள். நாங்கள் தற்போது சரியான நிலைபாட்டை காக்கவும், வளர்தெடுப்பதற்குமான வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் விளைவாக தோழர்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டு புரட்சிகர பகுதி வலுப்பெறும். இந்தச் சூழலை உருவாக்குவதன் மூலம் புரட்சிகர சக்திகள் புரட்சியின் மையத்தை இனங்கண்டு புரட்சியை முன்னெடுக்க அணிதிரள்வார்கள். திரிபுவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் வழியில் பயணிப்பார்கள். கம்யூனிச கட்சியில் மார்க்சியமும், திரிபுவாதமும் ஒன்றோடொன்று இணையாக நீண்ட காலம் இணைந்து செல்ல முடியாது

கேள்வி 7. 21 ம் நுற்றாண்டு சோசலிசத்தின் உள்ளடக்கம் என்ன? இதுகுறித்து இருதரப்பும் என்ன நினைக்கிறார்கள்?

பதில். 21 ம் நுற்றாண்டின் சோசலிசம், ஜனநாயகம் என்ற கோட்பாட்டை 2001 ல் எமது கட்சி முன்னெடுத்தது. இந்த அரசியல் வழிமுறை உண்மையில் எதிர் புரட்சியை தடுக்க  புதிய ஜனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பழக்கப்படுத்த பரிந்துரைத்தது. அதோடு மேலும் சில அம்சங்களையும் அது உள்ளடக்கி இருந்தது. ஒன்று புரட்சிக்குப் பின்னர் கட்சி, அரசு, இராணும் ஆகிய இம்மூன்றின்  மீது மக்களின் மேற்பார்வையையும், கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்தும் அரசியல் பொறியமைவை முன்மொழிந்தது. இரண்டாவது பல கட்சிகள்  செயல்படும் முறை உத்திரவாதப்படுத்தப் படவேண்டும்.  மூன்றாவது கட்சித் தலைமை அன்றாட அரசியல் பணிகளில் ஈடுபடக்கூடாது. கொள்கை மற்றும் அரசியல் சார்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபட வேண்டும். நான்கவது, மூன்றாம், நான்காம் மட்ட தலைவர்கள் கூட நிரந்தரமாக அல்லாது சுழற்சி முறையில்தான் அரசமைப்பில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். ஐந்தாவது மக்கள் விடுதலை ராணுவம் அளவில் சிறியதாகவும், மக்களை பயிற்றுவிக்க போதுமானதாகவும், தனித்த இடத்தில் அது வைக்கப்படாமல் மக்களோடு நேரடி தொடர்பிலும் இருக்க வேண்டும். இவைகள் புதிய ஜனநாயக மற்றும் சோசலிச சமூகத்திலும் நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டது.

புரட்சி நிறைவடையாமல், மக்கள் விடுதலை இராணுவம் கலைக்கப்பட்டுவிட்ட சுழலில், 1,3,4, மற்றும் 5 வதாக சொல்லப்பட்ட அம்சங்களுக்கு தற்போது எந்த அர்த்தமும் இல்லை. எஞ்சிய இரண்டாவது நெறிமுறை மட்டும் பிரசந்தா கும்பலுக்கு சிறப்பாக பயன்பட்டு, ஏகாதிபத்தியத்தின் கீழ் பாராளுமன்ற அரசியலை செய்வதாக ஆடை கட்டி நிற்கிறது. ஆகவே திரிபுவாத கும்பலால் இது சத்தமாக பேசப்படுகிறது. ஏனென்றால் இது அந்த கும்பலுக்கு மக்களை குழப்பவும், பலகட்சி அமைப்பில் ஆழ்த்துவதற்கும் சிறப்பான கருவியாக பயன்படுகிறது.

கட்சியில்  இருவேறு நிலைப்பாடுகளுக்கு இடையிலான போராட்டத்தின் காரணமாக கட்சியில்  பிளவு ஏற்பட்ட பிறகு, தோழர் கிரணால் வழி நடத்தப்படும் பிரிவு இவைகளைப் பற்றி இன்னும் விரிவாக தொகுத்துப் பார்க்கவில்லை. பொதுவாக இப்பொழுதும் நாங்கள் இந்த கோட்பாடு கம்யூனிச கட்சியில் பதுங்கியிருக்கும்  திரிபுவாதிகளால்  முதலாளித்துவம் நிலைநாட்டப்படுவதை தடுக்கவும், புரட்சியை பாதுகாக்க மக்கள் விடுதலை ராணுவம் சட்ட வாத்த்தில் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கவும் பயன்படும் என நம்புகிறோம். ஆனால் இந்த கோட்பாடு கூட இரண்டு அம்சங்களை உடையது. ஆகவே சரியான, முழுமையான தொகுப்பை நாம் புதிய ஜனநாயப் புரட்சியை சாதித்து நடைமுறையில் அவற்றை பயன்படுத்தி பார்த்தப்பிறகே அடைய முடியும்.

நேபாள மாவோக்கள் பன்னிரண்டு அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியபோதும், அதைத் தொடர்ந்து தேர்தல் தொடர்பாக திறம்பட எடுக்கப்பட்ட ஒவ்வொரு முன்னெடுப்புகள் மற்றும் ஆயுதங்களை எவ்வாறு பாதுகாத்து வைக்க வேண்டும் மற்றும் பலவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து செயல்பாடுகளையும் நாங்கள் ஆதரித்தோம். ஏகாதிபத்தியவாதிகளும், நிலவுடைமை வர்க்கங்களும் எப்போதும் ஆயுதம் எடுக்கும் சூழலை உருவாக்குவார்க்ள் என்பதால் இதனை நாங்கள் மிகவும் ஆபத்து நிறைந்த  ஒன்றாக கருதினோம். நாங்கள் கருதியது போலவே நடக்கவும் செய்தது. அதனால் நிலவுடைமை வர்க்கங்களால் உடைக்கப்பட்ட ஒப்பந்தத்தை, புரட்சிக்கு இனி உதவாத ஒன்றை மாவோயிச கட்சி அதன்படி நடக்க வலியுறுத்தியது.

கேள்வி 8 :அதற்கு என்னக் காரணம்?  இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

 பதில். இன்றைய சூழலில் திரும்பி பார்க்கும்போது எங்களது கட்சியின் முந்தைய நிலைப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம். ஜனநாயகக் குடியரசு என்பதை செயல் தந்திரமாக 2005 கூட்டத்தின் போது ஏற்றுக்கொண்டது, நேபாள நாடாளுமன்றவாதிகளுடன் டில்லியில் 12 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தியது ஆகியவை இந்த மொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கை கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்த செயல் தந்திரம் மூலம், மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்கள் கிளர்ச்சி என்னும் சூழலை ஏற்படுத்தி, நகரங்களில் புரட்சிகர கட்டமைப்பை ஏற்படுத்த  உதவும் என்பதால் இது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எமது கட்டமைப்பை வலுப்படுத்த நாங்கள் நகரங்களுக்கு வந்தோம். ஆனால் கொந்தளிப்பான கடந்த பத்துவருட மக்கள் யுத்தத்தில் நாங்கள் பெற்ற அனைத்தையும் தற்போது எமது கைகளை விட்டு போய்விட்டது. அண்மையில் தலைவர் பிரசந்தா அந்த 12 அம்ச ஒப்பந்த்த்தை அடையும் முன்பாக,  இந்திய விரிவாக்கவாதிகளுடன் டில்லியில் செய்து கொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை வெளிப்படுத்தியிருந்தார். இந்து பத்திரிக்கைக்கான ஏப்ரல் 16- நேர்காணலில் டில்லியுடன் பன்னிரெண்டு அம்ச ஒப்பந்தத்துடன் தொடங்கிய பயணம் தற்போது முடிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.  நேபாள ராணுவத்தை வைத்து மக்கள் விடுதலைப் படையின் முகாம்களை சதித்தனமாக சுற்றிவளைத்து சரணடையச்செய்ய உத்தரவு இட்டதற்குப் பின்னர்தான் இந்த நேர்காணலை அவர் தந்தார். இது பாபுராம், பிரசந்தா கும்பல் பாராளுமன்ற கட்சிகளுடன் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்பாக விரிவாக்கவாதிகளின் முன் சரணடைந்ததையே காட்டுகிறது. இதனை இந்தக் கும்பல் புரட்சியை அடைவதற்கான செயல் தந்திரம் என்று சொன்னது. ஆனால் அது இந்திய ஆளும் வர்க்கங்கள், நேபாள நாடாளுமன்ற வாதிகள் மற்றும் பாபுராம், பிரசந்தா கும்பல் கூட்டு சேர்ந்து நேபா புரட்சியை முறியடிக்க எடுத்த விரிவான நிலைப்பாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அந்தக் கும்பல் நேபாள உழைக்கும் மக்கள் மற்றும் உலக உழைக்கும் மக்களிடம் புளுகியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிரான சதியில் ஈடுபட்டதையே காட்டுகிறது.

கேள்வி 9. பல முக்கிய அம்சங்களை குறித்து இந்திய மாவோக்கள் விமர்சித்திருந்தாலும், முக்கியமாக முதலாளித்துவ வாதிகள் குறித்து நீங்கள்  கவம் செலுத்த தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.  நாங்கள் புரிந்து கொண்டவகையில் நேபாள மாவோக்கள் நிலவுடைமை வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்த (மன்னர் ஆட்சியை தூக்கியெறிதல்) அளவிற்கு முதலாளித்துவ வாதிகள் குறித்து கவணம் செலுத்த தவறிவிட்டனர். அதுவே அவர்களுடன் முடிவுறாத உடன்பாடு ஏற்பட காரணமானதாக விமர்சித்துள்ளனர். இது குறித்து என்ன  நினைக்கிறீர்கள்?

பதில். மிக முக்கிய கேள்வியை சரியான நேரத்தில் கேட்டிருக்கிறீர்கள். என்னை பொறுத்தவரையில் இந்திய மாவோ தோழர்கள் சரியான இடத்தை நோக்கி விரலை நீட்டியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். எங்களது கொள்கை  பிரிவை தலைமை தாங்கும் தோழர் கிரண் விரிவாக தொகுத்து பார்த்து முடிவை எடுக்காமல் இருக்கிறார். அதுவும் இந்த நிலைமை போராட்டம் எழ காரணமாக உள்ளது.

புதிய ஜனநாயகப் புரட்சி இரண்டு வகைத்தன்மையை கொண்டது. ஒன்று நிலப்பிரபுவத்துவ எதிர்ப்பு, இரண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு. இவை இரண்டும் பிரித்தறிய இயலாதவாறு பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் எமது கட்சியில் ஆரம்பத்திலிருந்தே இதனை புரிந்து கொள்வதில் சில வேறுபாடுகள் உள்ளது. மற்றவர்களைப் போன்று அல்லாமல் வெளியில் இருந்து வரும் குறுக்கீடுகளுக்கு எதிராக போராடுவதை விட பாபுராம் மன்னராட்சிக்கு எதிராக போராடுவது குறித்தே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். மக்கள் இதனை இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடாக புரிந்து கொண்டனர். கூடுதலாக புதிய ஜனநாயக புரட்சிக்கு முன்னதாக ஜனநாயக குடியரசிற்கு துணை படிநிலை இருக்க வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். 2004 புன்டிங்க்வங் தலைமை குழு கூட்டத்தில் மக்கள் யுத்தத்தை, தேசிய விடுதலை என்ற முழக்கத்தை வைத்து தீவிரப்படுத்த முடிவெடுத்தபோது, அதனை பாபுராம் கடுமையாக எதிர்த்தார். அதன் தொடர்ச்சியாக பாபுராம், பிரசந்தா ஆகிய இருவருக்கும் இருவகை நிலைப்பாட்டு போராட்டம் கூர்மையடைந்து இந்திய ஆதரவு, மன்னர் ஆதரவு என ஒருவரையொருவர் சாடிகொள்வது தொடர்ந்தது. கட்சி உடையும் நிலைக்கு சென்றது. ஒருவருடத்திற்குள்ளாக 2005 ல் ஜனநாயக குடியரசு என்னும் செயல் தந்திர நடவடிக்கை எனும் புள்ளியில் ஒற்றுமையாக நின்றார்கள். உண்மையில் இது பாபுராமின், பிரசந்தாவிற்கு எதிரான பெரிய அரசியல் வெற்றி. அந்தக் கூட்டத்தில் பாபுராம், தான் பிரசந்தாவினால் உள்வாங்கப் பட்டுவிட்டதாகவும் இனி தன் வாழ்நாள் முழுவதும் அவருக்கு சவாலாக இருக்க மாட்டேன். இரண்டாவது மனிதனாக அவருடன் இருந்து உதவுவேன் என்றார்.

தற்போது நாங்கள் இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம். சுங்வங் கூட்டத்திற்குப் பின்னர் இப்போது பாபுராமின் நிலைப்பாடுதான் கட்சியை வழிநடத்துகிறது. தற்போது சுங்க்வாங் கூட்டத்தின் பின்னர்  பாபுராம், பிரசந்தாவினுள் உள்வாங்கப் படவில்லை. இவர்தான் அவருக்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது. இருவரும் ஜனநாயக குடியரசை செயல்தந்திரம் எனும் வடிவத்தில் ஒப்புக்கொண்டபோது, அவர்களின் நிலைப்பாடு மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்தி இந்திய விரிவாக்கவாதிகளோடும், அவர்களின் நேபாள பொம்மைகளோடும் ஒரு நீண்டகால சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதாகும்.

கேள்வி 10. கட்சிக்கெதிரான, இந்த அணியின் தவறான பாதைக்கெதிரான இந்தப் போராட்டம் மிகத்தாமதமானது என நீங்கள் கருதவில்லையா?

பதில். நாங்கள் எங்கள் கட்சித்தலைமையின் தவறை புரிந்து கொள்ளவில்லை என்பதல்ல. நாங்கள் அவரை தேவைக்கும் அதிகமாக நம்பிவிட்டோம். இது மிகவும் தாமதமானது அல்ல என்றாலும் தாமதமான ஒன்றுதான். இன்னும் இதனை நாங்கள் இரண்டாவது கட்ட நிலையாகவே பார்க்கிறோம். எங்கள் முதல் நோக்கம் புரட்சி வலது சந்தர்ப்பவாத பாதையில் நீர்த்துவிடாமல் பாதுகாப்பதே ஆகும். புரட்சி ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதும், எந்த நேரத்திலும் எங்களது விரலை இருவேறு நிலைப்பாட்டில் நிற்கும் தலைவர்களை நோக்கி உயர்த்துவோம். இந்த நீண்ட கூர்மையான இரு நிலைப்பாட்டு போராட்டத்தில், நாங்கள் பரிசோதிக்கப்பட்ட தலைவர்களையும், தொண்டர்களையும் கொண்ட குழுவை பெற்றிருப்பதோடு, எங்களின் புரட்சிகர நிலைபாடும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இறுதியாக, மார்க்சியம் திர்புவாதத்தை வெல்லும், நேபாளத்தில் புதிய சனநாயக புரட்சி வெற்றிவாகை சூடும். 

பேட்டி கண்டது மா. லெ. க. க. துருக்கி.

ஆங்கில மூலக்கட்டுரை:

Interview with Basanta - Politburo Member of the Central Committee Unified Communist Party of Nepal (Maoist)



 தொடர்புடைய கட்டுரை:

Sunday, 19 February 2012

குடிப்பதற்கு கள்,சாவதற்கு அரளி இதுவே நமது மரபாம்! பாகம்-5

மது குடிக்கலாமா, கூடாதா என்பதைப் பற்றி தந்தை பெரியாரின் நிலைப்பாட்டைப் பற்றி  சென்றத் தொடரில் பார்த்தோம்.

மதுவினால் சமூகமும்,உழைக்கும் மக்களும் சந்திக்கும் தீமைகளைப்பற்றி மிக ஆழமான புரிதல் கொண்டிருந்த தந்தைப் பெரியார், அது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை போராடினார்.மதுவை மது விலக்கினால் ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் மதுவிற்கு அடிமையானவர்கள் அதை விட்டுவிட விரும்பினாலும் அவர்களின் உடல் அதைச்செய்வதற்கு அனுமதிப்பதில்லை.

ஏனெனில் மது குடியர்களின் உடலை தனக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.இப்படி மதுவுக்கு அடிமையான உடல் அவன் உள்ளத்தையும் அடிமைப்படுத்தி விடுகிறது.குடியர்களின் இந்த அவல நிலையை மது விலக்கு கணக்கில் கொள்ளாமல் மறுக்கிறது.

இதனால் குடிகாரர்கள் எப்படியாவது குடிப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது.குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக்கும்பல் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது கல்லாவை நிரப்பிக்கொள்கிறது.

குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக் கும்பலே புரிந்துகொள்ளும் போது அரசுக்கு புரியாதா? புரியும்.புரிந்தேதான் குடியர்களின் தேவையை ஒரே அடியாக மறுத்து அதன் மூலம் சமூக விரோதிகள் ஆதாயம் அடைய வழியை திறந்துவிடுகிறது.இதன் மூலம் அரசின் நோக்கம் நிறைவேறுவதோடு, அதன் இன்னொரு அங்கமான சமூக விரோதக் கும்பலின் நலனையும் நிறைவு செய்கிறது.



அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களை குடியர்களாக ஆக்குவதன் மூலம் அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை,போராடுவதை தவிர்த்து தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது.அதே நேரத்தில் தனது இந்த நோக்கத்தின் நடைமுறையாளர்களாக செயல்படும் சமூக விரோதக் கும்பலுக்கு கூலியாக மதுவின் ஆதாயத்தை தருகிறது.இப்படி மதுவின் மூலம் பெரும் ஆதாயம் அடையும் சமூக விரோதக் கும்பலை நாளடைவில் அரசியலில் பங்கேற்க வைத்து, அவர்களை முன்னணி அரசியல் 

தலைவர்களாகவும்,ஆட்சியாளர்களாகவும் உருவாக்கி அரசுக்கும்,சமூக விரோதக் கும்பலுக்குமான இடைவெளியை குறைத்து விடுகிறது.

இதனால் தான் நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை.இதை கோட்பாட்டு ரீதியாக வரையறுத்து தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும்,இதை உள்ளடக்கிய தீர்வையே முன் வைக்கிறார்.

நிலவுகிற சமூக அமைப்பில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதையும் குடியர்களை ஒரே அடியாய் பட்டினி போடாமல் படிப்படியாக அதிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்பதை பற்றிய வழிமுறையை அரசுக்கு பரிந்துரைக்கிறார்.

எந்த ஒரு நிலையிலும் குடிப்பதை நியாயப்படுத்தாமல், குடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை தொய்வில்லாமல் பிரச்சாரம் செய்த அதே நேரத்தில், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறையை தெளிவாக வரையறுத்து கூறுகிறார்.

எனவே மது அருந்தலாமா, கூடாதா என்பதைப்பற்றி நாம் புதியதொரு நிலைப்பாட்டை, வழிமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை.நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கடைபிடித்த வழிமுறையை கோட்பாடாக வரையறுத்து புரிந்துகொள்வதும்.அதை மேலும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான்.

இப்போது மீண்டும் ஒருமுறை நமது தந்தையின் பாதையையும், தம்மை தமிழகத்தின் புரட்சியாளர்கள் என்று தமக்குத்தாமே எழுதிவைத்துக்கொண்டு திரியும் கும்பலின் மது குடிப்பது பற்றிய வரையறுப்பையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டு பார்ப்போம்.
“நம்மை பொருத்த வரையில் கள்,சராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுதைவிட மதுருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.

“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக்கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோறும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும்படியாக செய்துவிட வேண்டும்”. (தந்தை பெரியார்)

கடி உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை”.

அதே போல என்றாவது ஒருநாள் குடிப்பதும் பிரச்சனையில்லை,ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.(தமிழக புரட்சியாளர்கள்)

மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளில் எது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உயர்த்திப் பிடிக்கிறது.என்பதை புரிந்துகொள்வதற்கு தனித்த திறமை எதுவும் தேவையில்லை.

தந்தை பெரியார் தவறியும் குடியை நியாயப்படுத்தவில்லை,ஆதரிக்கவில்லை.
ஆனால் தம்மை உலக புரட்சிக்கே வழிகாட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தக் கும்பலோ குடியை நியாயப்படுத்துகிறது.கடின உழைப்பாளர்கள் குடிப்பதை ஆதரிக்கிறது.அதோடு கடின உழைப்பாளர்கள் என்று இந்த கும்பலின் வரையறுப்பையும் கீழே தருகிறோம்.

“மறுகாலனியாக்கம்,கடும் உழைப்பு நிறைந்த உதிரித்தொழிலையும்,அதிக பணிச்சுமையையும், வீடு,குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி இருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது”,என்கிறது.

குடி,உழைப்பாளிகளை அதிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் உழைப்பாளிகளை எப்படி தனக்கு ஆட்படுத்துகிறது என்பதை வரையறுக்கும் இவர்கள், உள்ளூரிலேயே உள்ள கடின உழைப்பாளர்களையும், கடின உழைப்பில் இல்லாதவர்களையும் வளைத்துவிடும் உளவியலைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?
கடின உழைப்பாளர்கள் குடியின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கான  உளவியல் காரணத்தை வரையறுப்பது என்பது அவசியம் என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இப்படி வரையறுப்பது குடியின் பிடியில் இருந்து குடியர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளை,உத்தியை உருவாக்குவதற்கா? அல்லது அதை நியாயப்படுத்துவதற்கா? என்பதுதான் நமது விவாதத்திற்குரிய பொருளாகும்.

தந்தை பெரியார் அவர்கள்,அரசு திட்டமிட்டே மக்களை குடியர்களாக ஆக்கியது என்பதை வரையறுத்து அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.

ஆனால் தம்மை ‘புரட்சியாளர்கள்என்று கூறிக்கொள்ளும் இந்தக் கும்பலோ உழைப்பாளிகளின் ஒரு பிரிவினர் குடியின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதற்கான காரணங்களை வறையறுத்துவிட்டு அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை கூறாமல் கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம், என்றாவது ஒரு நாள் குடிப்பதில் பிரச்சனையில்லை என்று குடிப்பதை அங்கீகரித்து, நியாயப்படுத்துகிறது.

கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம் என்றால் கடின உழைப்பாளர்கள் என்று இவர்கள் கூறும் உழைப்பாளர்கள் மட்டுமல்ல மொத்த கடின உழைப்பாளர்களும் அதாவது விவசாயக்கூலிகள்,சிறு,குறு விவசாயிகள் உள்ளடக்கி நாட்டில் உள்ள அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பெருபான்மையினர் குடிக்கலாம் என்று ஒரு அமைப்பு வரையறுக்குமானால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு தன்னை பாட்டாளிவர்க்க அமைப்பு என்று கூறுக்கொள்ள முடியுமா?அதற்குரிய தகுதி இப்படி வரையறுக்கும் ஒரு அமைப்புக்கு எள் முனை அளவாவது இருக்கிறதா?

எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லை என்பதற்கும்,குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று மது பாட்டிலில் எழுதிவைத்துக்கொண்டே மதுவை விற்கும் அரசின் – முதலாளிகளின் நயவஞ்சக செயல்பாட்டிற்கும் இதற்கு என்ன வேறுபாடு உள்ளது.இவை இரண்டும் இரு வெவ்வேறான நிலைபாடுகள் அல்ல.மதுவினால் ஆதாயம் அடையும் இருவேறு பிரிவினரின் நிலைபாடுகள்தான் மேற்கண்ட இரண்டுமே.
எப்போதாவது குடிப்பது என்பது விதி விலக்கானவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.குடிப்பது என்பது மனித உயிர்களின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக இல்லாத போது,அது பெரும்பாலும் மனிதர்கள் அன்றாடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல்,துன்பம் ஆகியவற்றை சிறிது நேரம் மறப்பதற்கும்தான் மதுவை தேர்வு செய்கிறார்கள்.மது மேற்கண்ட காரணங்களுக்காக அல்லாது ஒரு வகையான இன்பத்திற்காக குடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள் மட்டுமே.

ஏனென்றால் மேற்கண்ட துன்பங்களும்,மன உளைச்சல்களும் மனிதர்களுக்கு ஏற்படுவது நிலவுக்கிற சமூக அமைப்பில் தவிர்க்கவியலாத விதியாகும்.இந்த விதிக்கு உட்படாதவர்கள் விதி விலக்கானவர்கள் மட்டுமே இருக்க முடியும்.எனவே மதுவை ஒருவிதமான இன்பத்திற்காக அருந்துபவர்களும்  இவர்கள்தான்.

எனவே பெரும்பான்மையானோர் இன்றைய சமூக வாழ்வில் ஆயிரம், ஆயிரம் வழிகளில் மேற்கண்ட மன உளைச்சல்களுக்கும்,சங்கடங்களுக்கும் ஆட்படுவது என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.எனவே இதுதான் சமூக வாழ்வாக நிலவும் சூழலில், எப்போதாவது ஒருமுறை குடிப்பது என்பது சாத்தியமேயில்லை.ஒரு முறை குடித்துவிட்டால் அப்படி குடிப்பவர்கள் அதை மீண்டும்,மீண்டும் செய்வதற்குரிய சமூக அடித்தளமே இப்போது நிலவுவதால் எப்போதாவது குடிப்பவர்கள் நிச்சயம் அடிக்கடி குடிப்பவர்களாகத்தான் மாறுவார்கள்.

மதுவினால் யார் ஆதாயம் அடைகிறார்களோ அவர்கள்தான் மக்களிடையே மது அருந்துவதற்குரிய சமூக உளவியலையும் உருவாக்குகிறார்கள்.

குடிப்பதற்கான பழி குடிகாரர்கள் மீது போடப்பட்டாலும், தாம் குடிப்பதற்குரிய சமூக அடிப்படையை தாமே உருவாக்கிக்கொள்வதில்லை.அதை மதுவினால் ஆதாயம் அடையும் கும்பலே மிகவும் நயவஞ்சகமான முறையில் திட்டமிட்டு உருவாக்குகிறது.இப்படி உருவாக்கபடும் இந்த நயவஞ்சக சமூக அடிப்படை மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.அதுவும் மக்களால் விரும்பி ஏற்கும் வகையில் அதன் செயல்பாடு அமைக்கபடுகிறது.

இந்த நயவஞ்சக முறையை உருவாக்குபவர்களும், சமூகத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களும் ஆக இவ்விரு பிரிவினர் மட்டுமே இதை அறிவர்.
இதனால் ஆதாயம் அடையக்கூடியவர்களான- மது உற்பத்தியாளர்கள்-ஆட்சியாளர்கள்- இவர்களிடம் அண்டி பிழைப்பவர்கள்-மட்டுமே குடிப்பதை அங்கீகரிக்கவும், நியாயப்படுத்தவும் முடியும்.

இரண்டாவது பிரிவினரான பொருள்முதல்வாதிகள் குடிப்பதற்கான சமூக இயங்கியலை வரையறுத்து,அதை களைவதற்கான வழிமுறைகளை மட்டுமே 
பரிந்துரைக்கவும்,நடைமுறைப்படுத்தவும் முடியும்.

மேலே கண்ட இரு தரப்பினரில் தந்தை பெரியார் அவர்கள் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானத்தை அறிந்திராவிட்டாலும் தமிழ் மக்கள் மீது தமக்கிருந்த காதலால் அவர்களின் நலன் என்ற வகையில் ஒரு பொருள்முதல்வாதியின் பாத்திரத்தை வகித்துள்ளார்.

ஆனால் ‘தமிழக புரட்சியாளர்கள்தம்மை பொருள்முதல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் மதுவினால் ஆதாயம் அடையக்கூடியவர்களிடம் அண்டிப்பிழைக்கும் கும்பல் என்பதை தமது நிலைப்பாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் இந்தக் கும்பல் முதலாவது பிரிவில் இருப்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு உதராணத்தையும் பார்ப்போம்.ஒரு மனிதனின் உயிர் பறிபோவதற்கு அரளி விதையை சாப்பிட்டாலும்,பாலிடாயிலை குடித்தாலும்,கத்தியை பயன்படுத்தினாலும்,துப்பாக்கியால் சுட்டாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான்.

நமது மரபு என்பதற்காக சாவதற்கு அரளிவிதையையும்,கத்தியையும், ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியுமா? அல்லது அதை பரிந்துரைக்கத்தான் முடியுமா?

உடல் வலியை போக்குவதற்கான வலி நிவாரணியாக நமது மரபான கொல்லை உயர்த்தி பிடித்தால் அதை நாம் வரவேற்கலாம்,பாராட்டலாம். ஆனால் அதற்கு மாறாக பாலிடாயிலை விட நஞ்சு குறைவு என்பதற்காக சாவதற்கு அரளி விதையை நமது மரபு என்று ஒருவர் பரிந்துரைப்பதற்கு உரிமை ஏதேனும் உண்டா? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார்?

கள் நமது மரபு என்று இந்தக் கும்பல் கூறுவது குடியை நியாயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. மரபு என்ற நமது பண்பாட்டை,நாகரிகத்தை ,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்தும் செயலுமாகும்.

இந்தக் கும்பல் யார் என்பதையும்,இந்த கும்பலின் நோக்கம் என்ன என்பதையும் அடுத்தத் தொடரில் பார்ப்போம்!.

                                                தொடரும்.............
தொடர்புடைய கட்டுரைகள்:

1.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்!  பாகம்-2


2.மது:பெரியாரின் மூடத்தனமும்,புரட்சியாளர்களின் ஜனநாயகமும்! -1