தமிழ்நாடு,கடலூர்மாவட்டம்,பெண்ணாடம் பள்ளி மாணவர் பாரத்தை படுகொலை செய்தவர்களை கொலை வழக்கில் கைது செய்யக் கோரி கடந்த செப்டம்பர் 20 அன்று பெண்ணாடத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.அதன் பிறகும் பெண்ணாடம் போலிஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிடுவதென முடிவு செய்தது.இதற்காக பெண்ணாடத்தில் இருந்து மாவட்ட தலைநகரான கடலூருக்கு செப்- 09,10,11 ஆகிய மூன்று தினங்கள் நடைபயணம் செல்வதாக அறிவித்தது.இச்செய்தியை மாவட்ட போலிஸ் கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது.இந்த நடைபயணத்திற்கு கடலூர் மாவட்ட போலிஸ் தடைவிதித்துவிட்டு, மீறி வந்தால் கைது செய்வோம் என மிரட்டியது.இதற்காக ஏராளமான போலிசையும் பெண்ணாடத்தில் குவித்தது.
பாரத்தின் பெற்றோரையும்,விவசாயிகள் விடுதலை முன்னணியையும் நடைபயணம் செல்ல அனுமதித்தால் போலீசின் முகத்திரை மக்கள் மத்தியில் கிழிந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே சட்டத்திற்கு புறம்பாக,ஜனநாயகத்திற்கு விரோதமாக தடைவிதித்தது.பிரச்சாரத்தை முடக்கும் போலீசின் அடாவடித்தனத்தை புரிந்துகொண்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை 11.10.2010 அன்று பெண்ணாடத்தில் நடத்த முடிவு செய்து, தனது பயணத்திட்டத்தை கிராம மக்களை நோக்கி திருப்பி, போலிசின் அடாவடித்தனத்துக்கு பதிலடி கொடுத்தது.அக்டோபர் 07,08,09,10 ஆகிய நான்கு நாட்களில் 15 கிராமங்களில் மக்கள் கலை இலக்கிய கழக மையக்கலை குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சியோடு பிரச்சாரம் செய்தது.கொலைகாரர்களுக்கு அரசு,போலீசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் ஆதரவாக செயல்படுவதையும் கூலிஏழை விவசாயியான மாணவர் பாரத்திற்கு துரோகம் இழைப்பதையும் அம்பலப்படுத்தினர்.
மக்களிடமே நீதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.உழைக்கும் மக்களுக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற நக்சல்பரி புரட்சிகர அமைப்புகளே உண்மையான பிரதிநிதிகள் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சாரம் உணர்ச்சிபூர்வமாகவும்,எழுச்சியுடனும் நடந்தது.
இப்பிரச்சாரத்தை கேட்டவர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கதறினர்.இப்படிகதறியவர்களின் கண்ணீரில் சொந்தம்,சாதி என்ற எந்த அடையாளமும் இல்லை.உழைப்பாளி என்ற அடையாளம் மட்டுமே பெருக்கெடுத்தது.இவ்வழக்கில் போலீஸ் கையூட்டு பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றுகிறது.இதை முறியடிக்க நாம் வீதியில் இறங்கி போராடுவதோடு மட்டுமல்லாமல், நாமும் சட்டபூர்வ வழிகளையும்பயன்படுத்த வேண்டும்.இதற்காக நாம் உயர்நீதி மன்றமும் செல்ல வேண்டும்.இப்படி செல்வதற்கு பாரத்தின் பெற்றோருக்கு வசதியில்லை.ஆண்டாண்டுகாலம் அழுதுபுரண்டாலும் மாண்டார் திரும்புவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர்கள் தமது பிள்ளையின் உயிரை மீட்பதற்காக வீதிக்கு வரவில்லை.தமக்கு ஏற்பட்ட கதி இனியாருக்கும் ஏற்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடுதான் போராடுகிறார்கள்.ஆகவே இது நமக்கான போராட்டம்.இந்த வழக்கு நமக்கான வழக்கு,கொலையாளியிடம் பணம் உள்ளது.நம்மிடம் சனம் உள்ளது.வீட்டிற்கு ஒரு ரூபாய் தருவோம் என்று தோழர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினர்.இதைக்கேட்டதும் மக்கள் தாராளமாக நிதி அளித்தனர்.கொலையாளிகளுக்கு ஆதரவாக செயல்படும், காப்பாற்ற முனையும் போலீஸ்,அரசு,ஓட்டுசீட்டு அரசியல் கட்சிகள் மீது தமது வெஞ்சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினர்.கொலையாளிகளுக்கு போலீஸ் தண்டனை வாங்கித்தராது,நாமே அவர்களை பழிக்கு பழி வாங்க வேண்டும்.அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினர்.
11.10.2010 அன்று காலையிலிருந்து மாலை வரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆகியோர் உரையாற்றினர்.இவர்களின் பேச்சு அரசு,போலீசு,ஓட்டுக்கட்சிகளின் மீதான மக்களின் மனங்களில் கணன்று கொண்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியது.அதிலும் விடுதலை சிறுத்தைகளின் துரோகத்தை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.ம.க.இ.க மையக்கலைக்குழுவின் புரட்சிகர பாடல்கள் அதை பற்ற வைத்தது.
“மக்கள் சமூக அக்கறையற்றவர்கள் சாதி,மதம்,சுயநலம் ஆகியவற்றில் மூழ்கி கிடப்பவர்கள், எப்போதுமே அநீதிக்கு வால் பிடிப்பவர்கள் இவர்களை திருத்தவே முடியாது”,என்றுக் கூறித்திரியும் மண்டை வீங்கிகளின் உளறல்களுக்கு ஆப்பறையும் வகையில் மக்கள் இப்போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
மக்கள் எப்போதுமே அநீதிக்கு எதிரானவர்கள் தான். மக்களை வழிநடத்துபவர்கள்தான் அவர்களை எப்போதுமே ஒன்று சேரவிடாமல் பிரித்து வைத்துள்ளனர்.நக்சல்பரி புரட்சியாளர்கள் மக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள கட்டுகள் அனைத்தையும் உடைத்தெரிந்து,அவர்களை சமுக மாற்றத்திற்கு அணிதிரட்டுவார்கள் என்பதற்கு அடையாளமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.
“கொலைகாரர்களும்,கொலை செய்யப்பட்ட மாணவனும் ஒரே சாதியாயினும் மாணவன் பாரத் ஏழை சாதி.இதனால் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொலைகாரர்களுக்கு ஆதரவாக உள்ளது.நக்சல்பரி போராளிகளோ எல்லாசாதிகளிலும் உள்ள ஏழைகளின் பிரதிநிதி.அதனால் தான் மாணவன் பாரத்தின் கொலைக்கு நீதி கேட்டு போராடுகிறது”, என்று மகஇக மையகலைக்குழு தோழர்கள் கூறியதும், அதுவரை எதிரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பலர் பந்தலுக்குள்ளே வந்து அமர்ந்தது இந்த ஆர்ப்பாட்டத்தின் மிக உயரிய நிகழ்வாகும்.
பெண்ணாடம் நக்சல்பரி புரட்சியாளர்களின் கோட்டை என்பது பழைய செய்தி மட்டுமல்ல,மீண்டும் இப்பூமி சிவக்கப் போவதை முன்னறிவிக்கும் நிகழ்வாகவும் இந்த தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் எழுச்சிகரமாக நடந்தது.
இது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மனங்களில் உள்ள கோபத்தை,குமுறலை வெளிப்படுத்திய விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரொட்டி.இதை தமிழ்நாடு, கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் நகரில்ஒன்றுவிடாமல் கிழித்தும், மேய்ந்தும் உள்ளனர் போலிஸ் பாதுகாப்புடன் திமுக காலிகள்.
சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்றுக் கருதுவதை போன்று,சுவற்றில் ஒட்டியதை கிழித்துவிட்டால் மக்கள் மனங்களில் உள்ளதையும் கிழித்துவிட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்களா? அல்லது விலை உயர்வை எவனும் பேசகூடாது என்று மக்களை எச்சரிக்கிறார்களா? நிச்சயம் அவர்கள் நம்மை மிரட்டுகிறார்கள்.ஏனென்றால் தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிமெண்ட்,இரும்பு கம்பெனிகளை கருணாநிதி குடும்பம் வளைத்துப் போட்டுவிட்டது.இப்பொருட்களின் விலை உயர்வால் கருணாநிதி குடுமபத்திற்கும்,முதலாளிகளுக்கும் கோடி கோடியாய் கொட்டுகிறது.இதனால் தான் அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள குடிசைகள் அனைத்தையும் கல்வீடாக்குவேன்.அதன்படி முதற்கட்டமாக மூன்று இலட்சம் குடிசைவாசிகளுக்கு தலா,ரூ.75,000/- வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் கலைஞர்.ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழுத கதையை போன்று கலைஞரின் கதை,வசனத்தை நம்பி மக்களும் தமது குடிசைகளை பிரித்துப் போட்டனர்.இத்திட்டத்தில் அரசு முன்பணம் ஏதும் தராது என்று அறிவித்துவிட்டதால் கடன் வாங்கி மக்கள் வேலையை தொடங்கினர்.வேலையை தொடங்கியவுடன் கட்டுமானப் பொருட்களின் விலைகள்,இரண்டுமடங்குக்கும் மேலாக உயர்ந்துவிட்டது.இதனால் இருந்த குடிசைகளையும் இழந்துவிட்டு,கல்வீட்டை கட்டவும் முடியாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள்.கட்டுமான பொருடகளின் விலை உயர்வைப் பற்றி கலைஞர் தனது மேல்வாயையும்,கீழ்வாயையும் பொத்திக்கொண்டு மவுனம் சாதிக்கிறார்!
இரண்டொரு நாட்களில் பருவமழையும் துவங்கப் போகிறது.இருந்த குடிசையும் இழந்துவிட்டு தவிக்கும் மூன்றுலட்சம் ஏழைகளின் மனக்குமுறல் தான் அந்த சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். .சரி,கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கோபப்படுவார்கள், அதனால் வரும் தேர்தலில் தமக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள் என்று முத்தமிழையும் வித்தவ(க)ருக்கு தெரியாதா? தெரியும்.அதனால் தான் தனது கட்சியினரை ஓர் ஆய்வு செய்யச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறாராம் கருணாநிதி.கழக கண்மணிகள் ஆய்வு செய்ததில், மக்கள் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 1500/- எதிர்பார்ப்பதாகவும்,மேலும், நாம் நல்லது செய்தால் மட்டும் மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டுவிடமாட்டார்கள்.பணம் தான் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும் என்று உறுதியாக முடிவுக்கும் வந்து அதை தலைமைக்கும் அறிவித்துள்ளனராம்! இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறார் கலைஞர்.ஒன்று இலவச திட்டங்களால் மக்கள் மனதில் இடம் பிடிப்பது.இரண்டு மக்கள் மற்றும் அரசுப்பணத்தை தமது,மற்றும்பிற முதலாளிகளின் ஆலைகளுக்கு திருப்பி, விலையை உயர்த்தி கோடி,கோடியாய் கொள்ளையடிக்கிறார்கள்.
இப்படி கொள்ளையடித்த பணத்தின் ஒருப்பகுதியை மக்களிடம் விட்டெறிந்தால் தேர்தலில் வென்றுவிடலாம் என்பதுஇவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை! இந்த நம்பிக்கை தான் விலை உயர்வை இவர்களை நியாயப்படுத்த வைக்கிறது.கவலைப்படாமல் தூங்கவைக்கிறது.இந்தக் கோட்பாடு ஒருக்கட்சிக்கு மட்டும் சொந்தமில்லை.இந்தியா முழுக்க உள்ள ஓட்டு சீட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது கோட்பாடாக வரித்துக் கொண்டிருப்பது இதைதான். விதையொன்று போட்டு, சுரையொன்றா முளைக்கும்?
வெள்ளையர்களிடமிருந்து ஆட்சியை மாற்றிக்கொண்டால் மட்டும் அதன் அடித்தளம் மாறியாவிடும்? இயக்கும் ஆளை மாற்றிவிட்டால் கழுதை, குதிரையாகவா மாறிவிடும்? இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.இதை குழிதோண்டி புதைக்காமல் இதற்கு தீர்வு எதும் இல்லை.
மாணவன் பாரத் படுகொலை பற்றிய வினவு கட்டுரை,பின்னூட்டத்தில் யோவ்இணையபதிவர் இட்ட கவிதை கதறல்!.
உச்சி வெயிலும்
பொளக்காத
என் மண்டையில
அந்நேரம்
இடி வந்து எறங்கியதே!
என் உசுரு என்ன விட்டு
போயிருச்சே!
பெத்து பாத்த
ஒம்மொகத்த
செத்து எப்படி
நான் பார்ப்பேன்!
பதினஞ்சு வயசு புள்ளைக்கு
தற்கொலைனா
என்னனென்னும்
அத செய்யுறது
எப்புடினும்
எப்புடியா தெரியும்?
புழுத்த அரிசி சோத்த
தின்னு செமிக்கும்போதே
தற்கொலைக்கு
தன்ன ஒப்புவிச்சவன்
மறுபடியும் எப்புடியா
தற்கொலைய
செஞ்சிருப்பான்?
இந்த மடசிருக்கி
பரம்பரையில
எல்லாரும்
கலக்டரு உத்தியோகமா
பாத்தாக?
போகமாட்டேன்னு
சொன்ன புள்ளைய
திரும்ப அனுப்பிவச்சேன்
சித்தாளு வேலைக்கு
சேத்துவிட்டாவது
நாலு நல்ல கறி
ஆக்கிப் போட்டிருப்பேனே!
களவாணித்தனம்
செய்யவும்,
குடிச்சிக் கூத்தடிக்கவும்,
பொம்பளைய பொறுக்கித் திரியவும்
பள்ளிகூட விடுதி
எடமில்லன்னு போராட
சங்கம் கட்டிய
என் தங்கமே! உசுரே!
பாவிங்க
உன் கழுத்த நெரிச்சு
மூச்சு முட்டயில
அம்மாவை நெனச்சிருப்பியே!
அந்தக் கன
நெனப்பு வந்து
என்ன சேரலியே!
தானா
தூக்கு மாட்டிக்கிட்டானாம்
பிரச்சனை ஏதும் பன்னினா
துப்பாக்கியால சுடுவானாம்!
மிரட்டிப்பாக்குறான்
போலிசு!
நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா?
பெண்ணாடம் அரசினர் ஆதிதிராவிடர் நல விடுதியில் கடந்த 02.09.2010 அன்று விடுதிக் காப்பாளர் மற்றும் இரு சமையல்காரர்களால்,பள்ளி மாணவன் பாரத் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 04.09.2010 அன்று செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
இப்படுகொலையை கண்டித்து கடலூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியை சார்ந்தவர்கள் 20.092010 அன்று பெண்ணாடம் நகரில் தோழர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாணவன் பாரத்தின்,தாயின் கதறல் கல்மணம் கொண்டோரையும் கரையவைத்தது.பின்னர் மாணவனின் சிறிய தந்தைகள் சுடர்மணி,ஜெயகாந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.அவர்கள் தமது உரையில் மாணவன் பாரத்திற்கு இரு தங்கைகள் உள்ளனர்.இவர்களில் ஒருவருக்கு இருதயத்தில் சரிசெய்ய முடியாத அளவிற்கு கோளாறு இருப்பதாகவும்,தாயிக்கு காச நோய் இருக்கிறது என்றும் கூறினர்.மாணவன் பாரத் அக்குடும்பத்திற்கு ஒரே ஆரோக்கியமான் ஆண் வாரிசு என்றும் கூறியது அனைவரையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அடுத்து உரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திரு.செல்வகுமார் மற்றும் வழக்கறிஞர் திரு.புஷ்பதேவன் ஆகியோர் மாணவன் கொலையில் போலிசார் சட்டத்திற்கு புறம்பாக எப்படி நடந்துகொண்டுள்ளனர் என்பதை தோலுரித்துக்காட்டினர்.
பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் நாகராசன்,ஜெயகாந்த்சிங் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.மாணவர் பாரத்தின் தாயின் கதறல் அனைவரையும் அழவைத்தது.தோழர் ஜெயகாந்த்சிங் பேச்சு பலநூற்றுக்கணக்கானோரை சுண்டி இழுத்ததுடன் அனைவரையும் கொதிப்படைய வைத்தது.
தோழர் ஜெயகாந்த்சிங் பேச்சு மட்டுமல்ல இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பினரால் போடப்பட்ட முழக்கங்களும் மக்களை உணர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
பெண்ணாடம் நகர வரலாற்றில் இப்படி ஒரு எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்ததே இல்லை என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொணட பகுதிமக்கள் அனைவரும் கூறினார்கள்.இப்படி ஒரு ஆர்ப்பாட்டம்,இதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சி வேறு எந்த அமைப்பினராலும் உருவாக்க முடியாது.விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் மட்டுமே உருவாக்க முடியும் என்பது மிகையல்ல.ஏனேன்றால் இதே சம்பவத்தை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(CPI) நடத்திய ஆர்ப்பாட்டம் இப்படிப்பட்ட எந்தவிதமான உணர்ச்சியையும்,கருத்தையும் மக்களிடையே உருவாக்கவில்லை.மாறாக அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் ஜெயகாந்த்சிங் உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
-தகவல் சூறாவளி செய்திக்குழு-கடலூர் மாவட்டம்.தமிழ்நாடு
தமிழ்நாடு,கடலூர் மாவட்டம்,பெண்ணாடம் நகரத்திற்கு தெற்கில்,அரை கிலோமீட்டர் தூரத்தில்,மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வெளியில், கரும்புத்தோட்டங்களின் நடுவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம்.வேறு எங்கும் இல்லாத அதிசயமாக நாலாபுறத்திலும் சுற்றுச்சுவர்.சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தின் ஒரு மூலையில் அரசினர் ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி.மொத்தத்தில் விடுதியில் வேலை செய்யும் கொள்ளைகாரர்களின் மர்ம பங்களா இது!
இங்கு 02.09.2010 அன்று பகல் 12 மணி வாக்கில் பத்தாம் வகுப்பு மாணவன் பாரத் விடுதியில் இறந்து விட்டதாக நகரில் செய்தி பரவியுள்ளது.இச்செய்தி எரப்பாவூரில் இருந்த மாணவனின் பெற்றோருக்கும்,உறவினர்களுக்கும் கிடைத்து விடுதிக்கு ஓடி வந்துள்ளனர்.அங்கே இருந்த சமையல்காரர்கள் ராமச்சந்திரன் மற்றும் செல்வராசு ஆகிய இருவரும் சமையல் வேலை செய்து கொண்டே மேலே பிணம் கிடைப்பதாக மிகவும் அலட்சியமாக கூறியுள்ளனர்.அப்போது விடுதிக் காப்பாளர் சுந்தர்ராஜன் அங்கு இல்லை.அவர் 12 மணிவாக்கிலேயே போலிஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.பின்னர் பெற்றோரும்,உறவினர்களும் 1 மணி அளவில் போலிஸ் நிலையம் சென்றபோது அங்கு விடுதிக் காப்பாளரும்,போலிஸ்காரர்களும் சிரித்து பேசி கும்மாளம் அடித்துள்ளனர்.பெற்றோர் புகாரின் மீது போலிசார் எவ்வித அக்கரையும் செலுத்தாததாலும்,குற்றவாளியுடன் போலிசின் இணக்கமான போக்கையும் கண்ட மக்கள் 2 மணிவாக்கில் பெண்ணாடம் நகரில் சாலைமறியல் செய்துள்ளனர்.இதன் பின்னர் தான் விடுதிக்காப்பாளரும்.போலிசாரும் விடுதிக்கு வந்துள்ளனர்.அப்போது போலிஸ்காரர்களுக்கு சமையல்காரர்கள் டீ கொடுத்து உபசரித்துள்ளனர்.
இதன் பின்னர்தான் வட்டாட்சியர்,கோட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.விடுதிக் காப்பாளரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளனர்.பள்ளி,விடுதி ஆகிய இடங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில் மாணவன் பாரத்தின் வருகை பதிவிடத்தில் வெள்ளை பூசி அழித்திருப்பதை கண்ட கோட்டாட்சியர் அதிச்சியடைந்து அனைவரின் கண் முன்னாலேயே விடுதிக்காப்பாளரை பார்த்து “கொலையும் செய்து விட்டு,வருகை பதிவேட்டையும் திருத்தியுள்ளீர்களே” என் சாடிவிட்டு விடுதிக் காப்பளரை அடிப்பதற்கு கையை ஓங்கியுள்ளார்!இதன் பின்னர் சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் சமரசப்பேச்சு,சந்தேக மரணம் என 174/3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு,விடுதிக்காப்பாளர்,சமையல்காரர்கள் கைது ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன.குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலிசின் வெளிப்படையான நடவடிக்கைகள்,சாலைமறியல் செய்தவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்போவதாக மிரட்டல்,அரசியல் கட்சிகளின் சமாதானம் ஆகியவைகளுக்கு பின்னர் மலை 5.30 மணிவாக்கில் மக்கள் சாலை மறியலைகைவிட்டுள்ளனர். பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும் தெரியாமலேயே மாணவன் பிணத்தை ஊரின் பின்புற வழியாக கடத்திச்சென்ற போலிசு,விடுதிக்காப்பாளருக்கு சேலைக்கட்டி அழைத்துச்சென்றுள்ளது.அன்று இரவு 12 மணிவாக்கில் மாணவனின் பெற்றோரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தற்கான நகலை தந்துவிட்டு பிணம் விருத்தாசலம் அரசுமருத்துவமணையில் இருப்பதாக கூறிச்சென்றுள்ளனர்.இதை நம்பிய பெற்றோரும்,உறவினர்களும் விருத்தாசலம் அரசுமருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.மாணவனின் பிணம் அங்கு இல்லாததை கண்டதும் திட்டக்குடி அரசுமருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு மாணவனின் பிணம் இருந்துள்ளது.இப்படி வேண்டும் என்றே அவர்களை அலையவிட்டுள்ளது போலிசு.தடியடி நடத்துவதற்கு தேவையான அளவிற்கு போலிசை குவித்துக்கொண்டுதான் மாணவனின் பிணத்தை பெற்றோரிடம் தங்துள்ளனர்.போலிசின் இந்த ஒரு நடவடிக்கையே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை காட்டிவிட்டது.அதிகாரிகளும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று மூடிமறைக்க பார்க்கிறார்கள்.ஆனால் உன்மையோ நடந்தது கொலை தான் என்கிறது.நடந்த சம்பவங்களை நங்கள் தொகுத்துத் தருகிறோம்.நடந்தது கொலையா.தற்கொலையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
சம்பவம் நடந்த இரு தினங்களுக்கு முன் தனது வீட்டுக்கு சென்ற மாணவன் விடுதியில் வார்டனும்,சமையல்காரர்களும் என்னை அடிக்கின்றனர்.பள்ளியில் வார்டனின் உறவினர் தையல்நாயகி டீச்சர் அடிக்கிறார். ஆகவே நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.பையனின் பெற்றோரும்.பெரியப்பாவும் சமாதானப்படுத்திதான் பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.பள்ளிக்கூடம் சென்ற மாணவனை தையல்நாயகி அடித்து வெளியே துரத்தியுள்ளார்.
மாணவன் பாரத் ஆறாம் வகுப்பில் இருந்தே இந்த விடுதியில் தான் தங்கி படித்துள்ளார்.இப்போதுள்ள விடுதி காப்பாளருக்கு முன் இருந்த காப்பாளரிடம் சமையல்காரர்களின் திருட்டுத்தனத்தையும்,பெண்களை அழைத்து வந்து கும்மாளம் போடுவதையும்,சாராயம் குடிப்பதையும் பற்றி முறையிடும் போது அவரும் சமையல்காரர்களை கண்டித்து வந்துள்ளார்.அதன் பின் வந்துள்ள தற்போதைய விடுதிக்காப்பாளர் சுந்தர்ராஜன் சமையல்காரர்களுடன் சேர்ந்து கொண்டு மாணவன் பாரத்தை பலமுறை அடித்தும்.,மிரட்டியும் வந்துள்ளார்.இதனால் தனக்கு பலம் சேர்ப்பதற்காக இந்திய மாணவர் சங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு,அச்சங்கத்தை விடுதியில் கட்டுவதற்கு பாரத் முயன்றுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த விடுதிக் காப்பாளர் தான் மட்டுமல்ல, தனது உறவினர் தையல்நாயகியையும் பயன்படுத்தி மாணவனுக்கு நெருக்கடி தந்துள்ளான்.சம்பவதினத்தன்று கூட மாணவனை கடைவீதியில் வைத்தே தலையில் கொட்டியுள்ளான்.
பள்ளியில் இருந்து தையல்நாயகியால் வெளியில் துரத்தப்பட்ட மாணவன் பாரத் விடுதிக்கு வந்துள்ளான்.நண்பகல் 11.15 வாக்கில் பள்ளி இடைவேளையின் போது பல மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக விடுதிக்கு வந்துள்ளனர்.இப்படி வருவது மாணவர்களின் அன்றாட நிகழ்வாகும்.ஆனால் அன்றைய தினம் மாணவர்களை உள்ளே வரவிடாமல் சமையல்காரர்கள் இருவரும் விரட்டியுள்ளனர்.இதன் பின்னர் 12 மணி அளவில் தான் பெண்ணாடம் நகரம் முழுக்க மாணவன் இறந்த செய்தி பரவி பொதுமக்கள் விடுதிக்கு சென்றுள்ளனர்.அப்போது சமையல்காரர்கள் இருவரும் சிரித்துப் பேசி சமைத்துள்ளனர்.பொது மக்கள் மாணவன் எங்கே என்று கேட்டபோது ”மேலதான் கிடக்கரான் போயி பாருங்க” என்று எவ்வித நெருடலும் இல்லாமல் கூறியுள்ளனர்.இந்த நேரத்தில் விடுதிக்காப்பாளர் போலிசு நிலையத்தில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏன் என்றால் 11.15மணிக்கு மாணவர்களை கண்டு மிரண்ட சமையல்காரர்கள் 12 மணி வாக்கில் மிகவும் தைரியமாக பேசியுள்ளனர்.பொது மக்கள் மாடிக்கு சென்று பார்த்த போது மாணவன் உடல் தரையில் கிடந்துள்ளது.அதன் அருகில் சமையல்காரன் ஒருவனின் துண்டும் கிடந்துள்ளது.இந்த துண்டில் தான் மாணவன் சன்னலில் துக்குமாட்டிக்கொண்டதாக கூறியதன் மூலம் கேழ்வரகில் நெய்வடிகிறது நம்புங்கள் என்று இந்த கயவாளிகள் கூறியுள்ளனர்.
தரைக்கும் சன்னலுக்கும் இடையில் உள்ள தூரம் இரண்டரை அடி,சன்னலின் உயரம் நான்கு அடி மொத்தம் ஆறரை அடி.துண்டின்நீளம்இரண்டு அடி,துண்டில்தூக்குபோட்டிருந்தால்ஒன்றரைஅடிநீளம்சுருக்குபோடவேசரியாகிவிடும்.எஞ்சியஅரைஅடியில்சன்னலில்முடிச்சுப்போடமுடியுமா?.சரிகுதிரைக்குகொம்புமுளைத்ததாகவேநம்புவோம்!.மொத்தஉயரம்ஆறரைஅடிபையனின்உயரம்ஐந்து அடிசன்னலில்தூக்குபோட்டிருந்தால்கழுத்துச்சுருக்குக்கும்சன்னலுக்கும்போட்டமுடுச்சுக்கும்இடையில்ஒருஅடியில்இருந்துஒன்னரைஅடிஇடைவெளிஇருக்கவேண்டும்.அப்படி இருந்தால் தான் சன்னலில் முகம் படாமல் சுருக்கை கழுத்தில் மாட்ட முடியும்,அப்படி மாட்டி இருந்தால் பையனின் கால் தரையிலேயே பதிந்திருக்கும்.தரையில் கால் பதிந்திருக்கும் போதே துக்குப்போட்டு சாக முடியுமா என்பதை,இதை தற்கொலை என்று கூறுபவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
சரி இப்போதும் நாம் நமது மூளையை கீழே கழற்றி வைத்து விடுவோம்!அந்த கத்தி போல் உள்ள சன்னலில்தான் மாணவன் தூக்குப்போட்டுக் கொண்டான் என்றால் பையனின் முகம்,சன்னலில் உராய்ந்து கடுமையான காயங்கள் எற்பட்டிருக்கும்.தூக்குமாட்டிக்கொண்டவனின் கால் மூட்டு கடுமையாக சுவற்றின் விளிம்பில் உரசி கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கும்.ஆனால் மாணவனின் முகம் மற்றும் கால் மூட்டில் சிறு உராய்வு கூட இல்லை.ஆனால் போலிசும்,பத்திரிக்கைகளும் இதை தற்கொலை என்று தான் சாதிக்கிறார்கள்.
இதற்கடுத்து மாணவன் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படும் இடத்திற்கும்,சமையல் கூடத்திற்கும் இடையே தெளிவாக பார்க்கும் வகையில்திறந்தவெளி உள்ளது.மாணவன் துக்குமாட்டிக்கொண்டு இருந்தால்,அங்கு பணியில் இருந்த சமையல்காரர்களுக்கு சத்தம் கேட்காமல் இருந்திருக்காது.அப்படி கேட்டிருந்தால் சமையல்காரர்கள் மாணவனை காப்பாற்ற ஏன் முயற்சிக்கவில்லை?
சரி, காப்பற்றுவது கிடக்கட்டும்.குறைந்தது ஒரு சாவு என்ற அடிப்படையில் அதிலும் தாங்கள் பணிபுரியும் விடுதியின் மாணவன் என்ற அடிப்படையிலாவது மாணவனின் சாவு அவர்களுக்கு துக்கத்தை தாரதது ஏன்?மாணவனின் சாவு காப்பாளருக்கும்,சமையல்காரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது எதனால்?இவர்களின் இப்படிப்பட்ட செயல்களே மாணவன் உடனான இவர்களின் பகையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.இறந்த மாணவன் பத்தாம் வகுப்பு படிப்பவன்.சிறுவயதில் இருந்தே அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவன்.தனது எதிரிகளைப் பற்றி தனது பெற்றோர்களிடமும்,உறவினர்களிடமும் கூறிய மாணவன்,தற்கொலைச் செய்வது என்று முடுவு எடுத்திருந்தால் அதைப்பற்றி நிச்சயம் ஒரு கடிதமாவது எழுதியிருப்பான் ஆனால் அப்படி ஒரு கடிதம் அவன் எழுதவே இல்லை.
ஆக மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கும் போது நடந்தது தற்கொலையில்லை,கொலைதான் என்ற முடிவுக்கு வாராமல் இருப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை!
ஆகவே விடுதிக் காப்பாளரும்,சமையல்காரர்களும் நன்கு திட்டமிட்டு தான் இந்தக் கொலையை செய்துள்ளனர்.ஏழையின் குரல் அம்பலம் ஏறாது. நாம் போராடாமல் நீதி கிடைக்காது!
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதியில் திருடுவது,தமது உரிமை என கருதுபவர்கள். அப்படி செய்வதற்காகவே குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து,போட்டியிட்டு இந்த பொருப்பிற்கு வந்தவர்கள்.திருடுவதும்,திருடியதை தமது மேல் அதிகாரிகளுக்கு மாதா,மாதம் கப்பம் கட்டுவதும்தான் இவர்களின் திமிருக்கான,தைரியத்திற்கான அடிப்படைகளாகும்.இனிமேலும் இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்!
ஆகவே நம்து பிள்ளைகள் இப்படிப்பட்ட விடுதிகளில் தங்கி படிக்க வேண்டும் என்றால்,இந்த கழிசடைகளை எதிர்த்து போராடி இவர்களின் திமிரை நாம் அடக்க வேண்டும்.அது முடியாவிட்டால் நாம் நமது பிள்ளைகளை சூடுசொரணை அற்றவர்களாக,மானம் கேட்டவர்களாகத்தான் வளர்க்க வேண்டும்.இதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.நீங்கள் எதை தேர்ந்தெடுக்க போகிறீர்கள்!
“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற நிலை தமிழக விவசாயிகளுக்கு எப்போது ஏற்பட்டது என்பதைப்பற்றி நாம் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.சென்றப் பகுதி-II- ல் சங்ககாலத்தில் விவசாயம் பற்றி ஆய்வு செய்தோம்.அதன் அடிப்படையில் இப்பழமொழி சங்ககாலத்தில் உருவாகவில்லை என்பதைப் பார்த்தோம்.
சங்ககாலத்திற்கு பின்னர் கிபி.3 ம் நூற்றாண்டிலிருந்து 6 ம் நூற்றாண்டு வரை தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டுள்ளனர்.களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளை வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புர செப்பேடுகள் கிடைக்கும் வரை நாம் அறியாமல் இருந்தோம்.இச்செப்பேடுகள் கிடைக்கும் வரை களப்பிரர் காலம் இருண்டகாலம் என்றே வரலாற்றில் கூறப்பட்டு வந்தது.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை களப்பிரர்கள் ஆண்டிருந்தாலும் அவர்கள் ஆண்டார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லாமலே இருந்தது.அப்படி சான்றுகள் இல்லாமல் போனது ஏதோ தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வல்ல,நன்கு திட்டமிட்டு மூர்க்கமாக அவைகள் அழிக்கப்பட்டுள்ளன என்பதைத்தான் மேற்கண்ட செப்பேடுகள் மற்றும் பார்ப்பன இலக்கியங்களில் உள்ள செய்திகளிலிருந்தும் நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
சங்ககால தொடக்க காலத்தில் தமிழ்ச்சமூகம் சாதியற்ற சமூகமாகவே இருந்தது.வட இந்தியாவில் ஆரிய வருகையும்,பூர்வகுடி மக்களுடனான அவர்களின் போர், வெற்றி, இனக்கலப்பு நால்வருணக்கோட்பாடு, சாதியத்தின் வளர்ச்சி போன்றவை நிகழ்ந்தன.இந்த பார்ப்பனியத்தை எதிர்த்து சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய மதங்கள் வட இந்தியாவில் தோன்றின.வட இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு முன்னர் மதங்கள் தோன்றவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
வட இந்தியாவில் பார்ப்பன நால்வருண-சாதியத்தை-பார்ப்பனியத்தை எதிர்த்து சமண,பவுத்த சமயங்கள் தோன்றின.ஆனால் இம்மதங்கள் தமிழகத்தில் பார்ப்பன வருகைக்கு முன்னரே வந்துவிட்டன.சாதியற்ற சமூகமாக வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தில் சாதிய இழிவை எதிர்த்து உருவான சமயங்களான சமணமும்,பவுத்தமும் செல்வாக்கு எதையும் பெறமுடியவில்லை.
இதன் பின்னர் தமிழகத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள் மிக விரைவில் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆனார்கள்.பார்ப்பனியம் அரச மதமாக உருப்பெற்றது.எந்த அளவிற்கு சாதியம் சமூகத்தை சிதைக்க ஆரம்பித்ததோ அந்த அளவிற்கு அதை எதிர்த்த சமணமும்,பவுத்தமும் தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெறத்தொடங்கியது.இந்த வளர்ச்சி தான் களப்பிரர்கள் தோன்றுவதற்கான அடிப்படைகளாக அமைந்தது.களப்பிரர்கள் தமிழகத்தை ஆளத்தொடங்கிய நிகழ்வு என்பது பார்ப்பனியத்தை எதிர்த்த பெரும்பான்மை மக்களின் உணர்வின் வெளிப்பாடாகும்.
ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறப்படும் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி,மு.ராகவய்யங்கர்,டி.வி.சதாசிவ பண்டாரகத்தார்,டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார்,எம்.எஸ்.ராமசாமி அய்யங்கார் ஆகியோர் இன்று வரை அதிலும் வேள்விகுடி செப்பேடு,தளவாய்புர செப்பேடு ஆகிய ஆவணங்கள் கிடைத்த பின்னருங்கூட அவர்கள் தமிழர்கள் அல்லர் கருநாடகத்தில் இருந்து தமிழகத்தின் மீது போர்தொடுத்தவர்கள் என்றும் அன்னியர்கள் என்றும்,அவர்களின் ஆட்சி இருண்டகாலம் என்றும் கூசாமல் புளுகுகின்றனர்.இதில் மயிலைசீனு வேங்கடசாமி அவர்கள் களப்பிரர்கள் அன்னியர்கள் என்று கூறினாலும் அவர்கள் ஆட்சி இருண்டகாலம் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கணட ஆய்வாளர்களின் நூல்களிலும்,வேள்விக்குடி மற்றும்தளவாய்புர செப்பேடுகளில் உள்ள செய்திகளை தொகுத்து பார்க்கும் போது களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட,நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் அது இருண்டகாலமா, இல்லையா என்பதை இப்போது பார்ப்போம்.
(அ).கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் என்று மேலே கண்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் களப்பிரர்கள் ஆட்சிகாலத்தில் தான்..........
1.வளையாபதி
2.சீவகசிந்தாமணி
3.குண்டலகேசி
4.சிலப்பதிகாரம்
5.மணிமேகலை
ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும்,பதிணென்கீழ்கணக்கு நூல்களும்,நாலடியார் போன்ற நூல்களும் இன்னும் பல ஆயிரக்கணக்கான நூல்களும் உருவாகி உள்ளன.
மேலே கண்ட விவரங்களில் இருந்து நாம் பார்க்கிற போது களப்பிரர்கள் ஆட்சிகாலம் தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாக திகழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.இவர்கள் காலத்தில் சமண.பவுத்த நூல்கள் மட்டுமல்ல சைவ சமய நூல்களும் ஏராளமாக இயற்றப்பட்டுள்ளன.அதை இயற்றிய புலவர்களுக்கும் எல்லாவகையான உதவிகளையும் களப்பிரர்கள் செய்துள்ளனர்.
(ஆ).களப்பிரர்கள் தமது கொடியில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களின் சின்னங்களான கயல்,வில்,புலி ஆகிய சின்னங்களையே பொறித்திருந்தனர்.தமக்கென தனித்த அடையாளம் எதையும் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
(இ).சங்ககால ஆட்சியாளர்களால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட கடல் கடந்த வணிகத்திற்கு மாற்றாக களப்பிரர்கள் ஆட்சியில் விவசாயமே மிகமுக்கிய தொழிலாக ஊக்குவிக்கப் பட்டது.
இதைப்போன்ற பல தகவல்களை தமது நூல்களில் எழுதிவிட்டு களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் இருந்தே இவர்களின் நேர்மையை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது.
இவ்வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுபவர்கள் தமது பார்ப்பன மூதாதையரின் பணியையே அதாவது பார்ப்பனியத்திக்கு எதிரான களப்பிரரை எந்த வெஞ்சினத்தோடு அழித்தொழித்து ஆனந்த கூத்தாடினார்களோ அதன் தொடர்ச்சியாகத்தான் மேற்கண்ட பார்ப்பன ஆய்வாளர்களும் தமது பணியை தொடர்ந்துள்ளனர்.முழுமுற்றான மூடனும்,அயோக்கியனும் மட்டுமே களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறமுடியும்.இப்படி களப்பிரர்கள் ஆட்சியை இருண்டகாலம் என்று கூறும் இவர்கள் மூடர்களா அல்லது அயோக்கியர்களா என்று கூறுவதற்கு இதற்கு மேலும் ஆய்வுகள் தேவையில்லை.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறுவதற்கு இவர்கள் மொழியியல் ஆதாரங்கள் என்று சிலவற்றை கூறினாலும் அவைகள் அனைத்தும் மிகவலுவான ஆதாரங்கள் என்று எற்க இயலாது.ஏன் என்றால் களப்பிரர்கள் காலம் பொற்காலம் என்பதற்கு வெளிப்படையான விவரங்கள் ஏராளமாக இருந்தாலும் அவை எதைப்பற்றியுமே எவ்வித மறுப்பும் கூறாமல் அவைகளை தமது நூல்களில் எழுதிக்கொண்டே முடிவை மட்டும் இருண்ட காலம் என்று கூறும் இவர்களின் மொழியியல் ஆதாரங்கள் எவ்விதத்திலும் நம்பதகுந்தவைகள் அல்ல.
களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறும் இவர்கள்,அவர்கள் தமது தாய்மொழியை வளர்ப்பதற்கு எதும் செய்தார்களா என்பது பற்றி எதும் கூறவில்லை.அதே நேரத்தில் அவர்கள் பாலி,பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கு ஊக்கம் அளித்ததாக கூறுகிறார்கள்.இவ்விரு மொழிகளுக்கும் ஆதரவு தந்தது.அவர்கள் கன்னடர்கள் என்று நிருபிப்பதற்கான ஆதாரமாக எப்படி கூற முடியும்?
மேற்கண்ட மொழிகள் சமண,பவுத்தம் உருவான பகுதிகளின் மொழிகள் ஆகும்.இந்த சமயங்களை பரப்புவதற்கு தமிழகத்துக்கு வந்த துறவிகளின் தேவைக்காக அவைகளுக்கு களப்பிரர்கள் ஆக்கமும்,ஊக்கமும் தந்திருப்பார்கள் என்பது தான் பொருத்தமான,ஏற்புடைய காரணமாக இருக்கமுடியும்.
ஆகவே களப்பிரர்கள் அன்னியர்கள் என்று இவர்கள் கூறுவது எதார்த்தமான ஒரு வரலாற்றுச்செய்தியை,நிகழ்வை பதிவு செய்வது என்ற நோக்கத்துக்காக அல்ல. அவர்களை தமிழர்களின எதிரிகள் என்று கொச்சைப்படுத்தி,இழிவுப்படுத்தும் நோக்கத்துக்காகத்தான் என்பதை நேர்மையான எவரும் எளிமையாக கூறிவிட முடியும்.
மேலும் பூர்வகுடி இனம் என்ற அடிப்படையில் தமிழ்மொழி பேசுவோரும் கன்னடம் பேசுவோரும் ஒரே திராவிட பூர்வகுடி இனக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.இன்றைய நவீன தேசிய இனம் என்ற அடிப்படையில் தான் தமிழர்களும்,கன்னடர்களும் இருவேறு தேசிய இனங்களை சேர்ந்தவர்கள்.
திராவிட மொழிக்குடும்பம் என்ற அடிப்படையில் இவ்விரு மொழிகளுக்கிடையில் பல்வேறு வார்த்தைகள் ஒன்றாய் இருப்பது தவிர்க்கவியலாதது ஆகும்.இன்றைய தமிழகம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழ்மொழி ஒரு பொது மொழியாக பொதுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்றும் கூட வட்டாரமொழிகள் இருக்கவே செய்கிறது.இதில் ஒரு வட்டாரமொழியை இன்னொரு வட்டாரத்தில் இருக்கும் மக்கள் புரிந்துகொள்வது சிரமம் என்பதை நாம் அறிவோம்.தமிழ்மொழியை பொருத்த வரை அதன் இலக்கண மற்றும் வார்த்தை வடிவத்திற்குள் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவி வளப்படுத்த தேவை ஏதும் இன்றி தமிழ்மொழி எல்லா வளங்களையும் கொண்டிருத்தது.ஆனால் கன்னடம்,மலையாளம்,தெலுங்கு என்று இன்று அறியப்படும் அன்றைய திராவிட இனக்குடும்ப வட்டாரமொழிகள் போதிய வளர்ச்சி அடையாத வளம் குறைந்த அவைகளின் தேவைகள் தான் பார்ப்பன சமஸ்கிருதம் ஊடுருவதற்கான வாய்ப்பாகவும் தேவையாகவும் அமைந்துவிட்டது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னர் தான் இம்மொழிகள் இன்றைய வடிவில் உருப்பெற்று எழுந்துள்ளன.இதன் பின்னரே இவைகள் இன்றைய பெயரிலும்,வடிவத்திலும் விளங்குகின்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன்னர் திராவிட இனக்குடும்ப வட்டார மொழிகள் என்ற வகையில் ஒரு வட்டாரத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு வார்த்தை இன்னொரு வட்டாரத்தில் புழக்கத்தில் இருப்பது அதிசயமானதொரு நிகழ்வல்ல.ஆக இந்த வார்த்தைகளை கொண்டே களப்பிரர்கள் தமிழர் அல்லாத அன்னியர் என்று இவர்கள் கூறுவது எவ்வளவு நேர்மையற்ற செயல் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.ஆனால் தமிழ்மொழியோடு எந்த ஒட்டும் உறவும் இல்லாத சமஸ்கிருதமும்,ஆரிய பார்ப்பனர்களும் அன்னியர்கள் என்று இவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.இது ஒன்றே இந்த பார்ப்பன வரலாற்று ஆய்வாளர்களின் நேர்மையின்மைக்கு தக்க சான்றாகும்.
தமிழை வளப்படுத்துவதற்கு பார்ப்பன ,சமஸ்கிருத மொழியின் தேவைஇல்லாத காரணத்தால் தான் தமிழ்மொழி தனித்துவமாக நிமிர்ந்து நின்றது.பார்ப்பன பண்பாட்டு ஊடுருவல் இல்லாத வரை தமிழ்ப் பண்பாடும் உயர்ந்து நின்றது.பார்ப்பனியம் ஆளுவோரின் தேவைக்கான பண்பாடாக,மதமாக உருவெடுத்த போது தான் பார்ப்பனப் பண்பாடை மறுத்த மக்களின் ஆட்சியாக களப்பிரர்கள் ஆட்சி உருவெடுத்தது. இந்த ஆட்சி மூன்று நூற்றாண்டு நீடிக்கவும் செய்தது.பார்ப்பனியத்தை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சிகண்ட தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனியத்தை எற்றுக்கொணட ஆட்சி எற்ப்பட்டது எப்படி என்பதற்கான மிகதெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதும் இல்லை.கிடைத்திருக்க கூடிய சில தகவல்களை வைத்து பார்க்கும் போது அதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ளமுடியும்.
களப்பிரர்கள் ஆட்சி, பார்ப்பனியம் மக்களை சாதியாக கூறுபோட்டு இழிவுபடுத்துவதற்கு எதிராக உருவானது.களப்பிரர்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களாகவே நீடித்துள்ளனர்.தமது செழிப்பான வாழ்வுக்கும் அரசியல் மற்றும் படைத்திரட்டலுக்கும் தேவையான எல்லா வளங்களையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும்,பண்பாட்டிற்கும் முற்றாக தடைவிதிக்கப்படவும் இல்லை.இதன் மூலம் அவர்கள் களப்பிரர்களை வெல்வதற்குரிய அனைத்து மூலவளங்களையும் பெற்று இருந்தனர்.அவர்களிடம் இல்லாத ஒரு வளம் மக்கள் மட்டுமே!
ஆனால் பிற்கால களப்பிர அரசர்களில் சிலர் பார்ப்பன சைவ சமயத்தை பின்பற்றியுள்ளனர்.இது அவர்கள் பார்ப்பனியத்தை-சாதியத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரம் ஆகும்.பார்ப்பனியம் அரச மதமாக படிப்படியாக உயர்ந்துவிட்டிருந்தது.அதே நேரத்தில் சங்ககாலத்தின் இறுதிப் பகுதியில் பார்ப்பனியத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சியை தூக்கி எறிந்து களப்பிரர்கள் ஆட்சியை கண்ட மக்கள்,பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்துக்கு எதிராக சமண,பவுத்தத்தை தழுவிக்கொண்டனர்.ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் சமண,பவுத்த சமயங்களின் அறம் சார்ந்து வாழ்ந்த மக்கள் சங்காலத்திய தமது போர்த்திறனை இப்பொது இழந்துவிட்டிருந்தனர்.
இப்படிப் பட்ட சமூக சூழலில் தான் களப்பிர மன்னர்கள் சிலரின் பார்ப்பன மயம், பாண்டிய மன்னர் பரம்பரை வாரிசுகளின் எழுச்சி, பார்ப்பனர்களின் நயவஞ்சகம்,சூழ்ச்சி,மக்களின் சமண,பவுத்த அறம் சார்ந்த வாழ்வு ஆகிய அனைத்தும் சேர்ந்து களப்பிரர்கள் ஆட்சியை அதன் சுவடே இல்லாமல் துடைத்தெறிவதற்கு அடிப்படைகளாக இருந்துள்ளது.
இன்றையை இலங்கை தமிழ்மக்களை காட்டிக்கொடுத்த டக்ளஸ் தேவானந்தா,கருணா,கே.பி போன்றவர்கள் சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் தூக்கிப் போட்ட பதவிகளை கவ்விகொண்டு சொகுசாக வாழ்வதைப் போன்று அக்காலத்தில் பார்ப்பனியத்துக்கு அடிபணிந்த சில களப்பிர அரசர்கள் சிற்றரசர்களாக தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனர் என்ற செய்தியும் வரலாற்றில் காணக்கிடக்கிறது!
ஆக மொத்தத்தில் களப்பிரர்கள் ஆட்சிபற்றி நமக்கு கிடைத்துள்ள ஒட்டு மொத்த தகவல்களையும் வைத்து ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது பார்ப்பனக்கும்பல் கூறுவதை போன்று களப்பிரர்கள் காலம் இருணடகாலம் இல்லை என்பது தெளிவாகிறது.
களப்பிரர்கள் ஆட்சி பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின் விளைவு என்ற அடிப்படையில் மொழி,பண்பாட்டுத்தளத்தில் மட்டும் அல்ல, பொருளாதார தளத்திலும் பெரும்பான்மை மக்களின் தொழிலான விவசாயம் களப்பிரர்கள் காலத்தில் செழிப்பாக வளர்க்கப்பட்டுள்ளது.ஆகவே “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது”, என்ற பழமொழி களப்பிரர்கள் காலத்தில் உருவாவதற்கான அடிப்படை எதும் இல்லை என்பது தெளிவாகிறது!
உலக அளவில் நடைபெறும் ‘கவுரவகொலைகள்’ பற்றியும்,அது இந்தியாவில் என்னென்ன காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதைப்பற்றியும்,ஏகாதிபத்திய சந்தை நலன்களுக்காக பரப்பப்படும் சீரழிவுப் பண்பாட்டிற்கு பலியாகி மனிதனையும்,மிருகங்களையும் பிரித்துக்காட்டும் மிகத்தெளிவான உறவுமுறைகளை மீறுகிற, காம வெறிச்செயல்களையும்,சாதிமறுப்பு-தீண்டாமை மறுப்பு காதல்,கோத்திரம் மீறியக்காதல் ஆகியவற்றையும் ஒன்றாக்கி குழப்பும் உச்சநி(நீ)திமன்றம்,அரசு,பத்திரிக்கைகள்,தன்னார்வக்குழுக்கள் ஆகியவற்றின் நோக்கம்,தேவை என்ன என்பதை பற்றியும் சென்றத் தொடரில் பார்த்தோம்.சாதி-தீண்டாமை மறுப்பு காதல்.கோத்திரம் மீறிய காதல் ஆகியவற்றைப் பற்றியும், மற்றும் இவைகளின் தேவை,அவசியம் ஆகியவைகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்கவியலாத தேவையாக உள்ளது.
உலகில் உள்ள உயிரினங்களிலேயே, மனிதர்கள் மட்டுமே உறவுமுறைகளை வகுத்துக்கொண்டுள்ளார்கள்.இந்த உறவுமுறைகள் மிகவும் பழமையானது என்பதாலேயே இதை தேவையற்றது என்றதொரு தோற்றத்தை,கருத்தை நாகரீக போர்வையில் திரியும் மனிதமிருகங்கள் எற்படுத்தி வருகின்றன.மனித இனம் இன்று வரை அழிந்து போகாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான்,இந்த உறவுமுறைகள். இப்படியொரு உறவுமுறைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மை முறைப்படுத்திக்கொண்ட செயல், அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ளதற்கான அடையாளம் ஆகும்.இந்த உறவுமுறைகள் தனிமனித விருப்பத்திலிருந்தோ,நல்லெண்ணத்திலிருந்தோ உருவாகவில்லை.மாறாக மனிதனின் வாழ்க்கை தேவையிலிருந்து தவிர்க்கவியலாமல் உருவானது.உலகில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் இருந்தாலும்,அவைகளில் மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவை பெற்றிருக்கிறார்கள்.இந்த பகுத்தறிவுதான் மிருகங்களிலிருந்து மனிதர்களை மிகத்தெளிவாக இனம் பிரித்துக்காட்டுகிறது.இதனாலேயே மனிதன் மிருகங்களைப் போன்று ஒருபோதும் வாழமுடியாது என்ற நிர்ப்பந்ததை ஏற்படுத்திவிடுகிறது.
மிருகங்களுக்கு மனம் என்பது இல்லை.ஆகவே காம உணர்வு அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வருவதாகும். இனப்பெருக்கம் என்ற இயற்கை தேவைக்காக, அதாவது காம உணர்வு என்பது மிருகங்களுக்கு உடல் சார்ந்த தேவை மட்டுமேயாகும்.
ஆனால் மனிதனுக்கோ காமம் உடல்சார்ந்த விடயம் மட்டுமல்ல.அது முக்கியமாக மனம் சார்ந்த விடயமாகும்.இதனால் காம உணர்வு மனிதர்களுக்கு ஆண்டு முழுவதும் உருவாகக் கூடியது.
மனிதர்களாயினும்,மிருகங்களாயினும் ஆண்களிடையே.பெண்களை அடைவதற்கான போட்டியில் பொறாமை உணர்வை ஏற்படுத்துகிறது.இந்தப் பொறாமை உணர்வு மொத்த கூட்டத்திலும் அமைதி இன்மையை,ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது.இது மிருகங்களிடையே குறிப்பிட்ட காலப்பகுதியோடு முடிந்து விடுகிறது.பின்னர் ஆண் மிருகங்கள் தமக்கிடையிலான பகையையும் மறந்து விடுகின்றன.
ஆனால் மனிதர்களிடையே இது ஆண்டு முழுவதும் ஒற்றுமை இன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல,ஆயுட்காலம் முழுக்க ஒருவரை ,ஒருவர் பழிவாங்கவும் தூண்டுகிறது.இதனால் மனித இனம் இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் கவனம் கொடுக்க முடியாததாலும்,தமக்கிடையிலான சண்டையினாலும் இரட்டிப்பு அழிவை சந்தித்தது.இதை தவிர்ப்பதற்கு,தவிர்க்கவியலாத ஒரு தேவைதான் பாலியல் தேவையை முறைப்படுத்தும் உறவுமுறைகளாகும்.இதை மீற நினைப்பது மனித இனத்தை காட்டுமிராண்டிகளாக்கி அழிவுக்குள்ளாக்கும் செயலாகும்.ஆகவே இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த போராட்டத்தை நாம் ஈவிரக்கமின்றி தான் நடத்தியாக வேண்டும்.
உணவு தேடுவதை மட்டுமே வாழ்வின் இலக்காக கொண்டிருக்கின்றன மிருகங்கள்.நுகர் பொருளை தேடுவது மட்டுமே மனித வாழ்வின் இலக்காக மாற்றுகின்றனர்,ஏகாதிபத்திய முதலாளிகளும்,அவர்களின் இந்தியக் கூட்டாளிகளும்.மனிதர்களை மனித மிருகங்களாக மாற்றும் இந்த இழிவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியில் தான்,மனித வாழ்வும்,வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
மனித வாழ்வை முறைப்படுத்தி,மேம்படுத்தி,வளர்த்து, வாழ வைத்த இந்த உறவு முறைகள்,மனித இனம் உள்ளவரை தவிர்க்கவியலாத, விஞ்ஞான பூர்வமான தேவையாகும்.ஆனால் சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகியவைகள் தேவையற்ற சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல, அவைகள் மனித குலத்தை அழிவுப்பாதையிலும் இட்டுச்செல்லும் பார்ப்பனிய பண்பாடுகளாகும்.மேற்கண்ட பிற்போக்குத் தனங்களை எதிர்த்து,மறுத்து நடைபெறும் காதல்,திருமணம் ஆகியவற்றை நாம் ஆதரிக்க வேண்டும்.இப்பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக விடாப்பிடியான,நீடித்தப்போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும்.
அதே நேரத்தில் கோத்திரம் மீறிய காதல் அண்ணன்,தங்கைகிடையிலான நிகழ்வாக கூறப்படுவதால் இப்போது அதைப்பற்றி சிறிது பார்ப்போம்!
கோத்திரம் மீறிய காதல் கொலைகளை தடுப்பது தான்,உச்சநி(நீ)திமன்றம் மற்றும் மைய அரசின் நோக்கம் என்பதை பகுதி –I ல்பார்ததோம்.இந்த கோத்திர வகைப்பாடு பார்ப்பனியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகும்.ஒரு சாதிக்குள்ளாகவே மக்களை கூறுபோடும் கோட்பாடு! மொத்த சாதியையும் குறிப்பிட்ட சில கோத்திரங்களாக வகைப்படுத்தி யார், யாரோடு திருமண உறவு கொள்ளவேண்டும் என்று எவ்வித நியாயமான தேவையும் இன்றி பார்ப்பனக் கும்பலால் உருவாக்கப்பட்டதாகும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள உறவுமுறைகள் மனித இனத்தை முறைப்படுத்துவற்கு போதுமானவைகளாக இருக்கும் போது,கோத்திரம் தேவையற்ற ஒன்றாகும்.ரத்தவழி உறவு மற்றும் நெருக்கமான நட்பு என்ற அடிப்படையிலும், அண்ணன்,தங்கை உறவுமுறை என்பதற்கான அடிப்படை ஏதுமற்ற ஒரு பிற்போக்கு பார்ப்பனிய பண்பாடாகும் கோத்திரம்.இதை மீறுவதால் அவ்விடத்தில் வெற்றிடமோ,பாண்பாட்டு சிதைவோ தோன்றி விடுவதில்லை.அதே நேரத்தில் சிதறிக்கிடக்கும் மனிதர்களிடையே நெருக்கமான பிணைப்பையும்,உறவையும் ஏற்படுத்துகிறது என்ற சமூகவிஞ்ஞான அடிப்படையிலும் குறிப்பிட்ட வரம்புக்குள்-நெருங்கிய ரத்த உறவுக்குள்-திருமண உறவு கொள்வதால் ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பை தவிர்க்கும் என்ற உடற்கூறுவிஞ்ஞான அடிப்படையிலும் கோத்திரம் மீறிய காதல் மிகச்சரியான ஒன்றே ஆகும்.
சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகிய பிற்போக்கு தனங்களுக்கும் முந்தைய காட்டுமிராண்டிதனந்தான் அண்ணன்,தங்கைக்கிடையிலானஉறவு.இது மிருக காமவெறி உணர்வே அன்றி காதல் அல்ல.ஆகவே இது மனிதகுல நாகரீகத்தையும்,வளர்ச்சியையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடுகிறது.இந்த அழிவுப் பண்பாட்டின் கர்த்தாக்கள் தான் ஏகாதிப்பத்தியங்கள்.ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை இந்த அழிவை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
மனித சமூகத்தின் மேம்பாட்டிலும்,வளர்ச்சியிலும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஏகாதிபத்தியத்திற்கும்,பார்ப்பனியத்திற்கும் எதிரான போராட்டத்தில் பங்கு பெறுவது தவிர்க்கவியலாத செயலாகும்.ஆகவே நாகரீக மனிதர்கள் அனைவரும் இவைகளை ஒழிப்பதற்கான போராட்டங்களில் ஒன்றிணைவோம் வாரீர்!வாரீர்!! சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றை குடி! பகுதி-I