விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label மக்கள்போராட்டம். Show all posts
Showing posts with label மக்கள்போராட்டம். Show all posts

Tuesday, 28 October 2014

ஆற்றுமணல் கொள்ளை: ஒரு ஆறும் அதன் ஊரும் சிதைந்துகொண்டிருக்கும் வரலாறு!

கடலூர் மாவட்டம் , விருத்தாசலம் வட்டம், விருத்தாசலம் சேலம் சாலையில் மணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ள கிராமம் பரவலூர். இக்கிராமத்தின் ஊடாக செல்லும் மணிமுத்தாற்றில் கடந்த 11.09.2014 முதல் அரசு மணல் குவாரி ஒன்று துவக்கப்பட்டுள்ளது.இக்குவாரி அமைக்க ஆற்றின் உள்ளே செம்மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போதே பரவலூர் பொதுமக்களும், இப்பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்தார்கள், விருத்தாசலம் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர்.காவல் துறையினரின் முழு ஒத்துழைப்போடு குவாரி ஒப்பந்ததாரர் பொது மக்களாகிய எங்களை அடியாட்கள் மூலம் மிரட்டியும், பொது மக்களிடையே சாதி அடிப்படையிலான பிளவுகள், மோதலை உருவாக்கும் வகையிலான தந்திரங்களை கையாண்டும் மக்களின் எதிர்ப்பை சிதறடிக்க முயற்சித்து வருகின்றனர். இதோடு பரவலூர் கிராமத்திலும் இவ்வட்டாரத்தில் உள்ள அரசியல் கட்சியினரையும் மற்றும் ஊராட்சிமன்ற தலைவரையும் விலைக்கு வாங்கியும் எமது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயன்று வருகின்றனர்.

பரவலூர் பொதுமக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில் பரவலூர் கிராம பொதுமக்களிடையே சாதி ரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் மணல் குவாரி ஒப்பந்ததாரரின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாத வகையில் போராட்டங்களை மிகவும் கவனமாக நடத்தி வருகிறார்கள்.
இந்த வழிமுறையின் ஒரு அங்கமாக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பிரதான வழிமுறையாக கடைபிடித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய தேதிகளில் இரண்டு சமாதான கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

முதல் சமாதான கூட்டம் நடைபெற்ற 14.09.2014 அன்று மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எமது இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை மணல் குவாரியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அது வரை போராட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் கோட்டாட்சியர் மக்களை கோட்டுக்கொண்டார். கோட்டாட்சியரின் இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்தனர். ஆனால் இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறாக மறுநாளே 15.09.2014 மீண்டும் மணல் குவாரி செயல்படத்துவங்கியது. மணல் குவாரியில் நான்கு பொக்லைன்(HITACHI) கனரக இயந்திரங்கள் மூலம் நூற்றுகணக்கான லாரி மணல் கொண்டு செல்லப்பட்டது. இதை அறிந்த மக்கள் உடனடியாக மணல் லாரிகள் குவாரியை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் மக்களை கலைந்து போகச்சொன்னதுடன் உங்கள் கோரிக்கையை கோட்டாட்சியரிடம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை மக்கள் ஏற்க மறுத்ததால் மணல் அள்ளுவதை இப்போதைக்கு நிறுத்துவதாகவும், நாளை மீண்டும் கிராம மக்களை சந்திப்பதாகவும் கூறினார்.வட்டாட்சியரின் இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்க வேண்டும் என்றால் லாரிகளில் ஏற்றப்பட்டுள்ள மணலை ஆற்றிலேயே திருப்பி கொட்ட வேண்டும் என்று நிபந்தனை வைத்தனர்.இதன் அடிப்படையில் லாரியில் ஏற்றப்பட்ட மணல் கொட்டப்பட்ட பிறகு மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.மீண்டும் முன்பு போலவே வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் அள்ளப்பட்டது, ஆனால் இம்முறை உள்ளூரில் விலைக்கு வாங்கப்பட்ட அடியாட்களை வைத்து மணல் அள்ளியதால் அப்பகுதிக்கு மக்கள் சென்றால் அடியாட்களால் பொதுமக்கள் தாக்கப்படும் அபாயமும் ,சாதிய மோதலும் நிகழும் என்பதால் பொதுமக்களை மணல் குவாரிக்கு அழைத்து வருவதை தவிர்த்துவிட்டு, எமது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் போராட்டகுழு உறுப்பினர்கள் மட்டும் மணல் எடுப்பதை எதிர்த்து மறியல் செய்தோம், நாங்கள் எதிர்பார்த்ததை போன்றே மணல் குவாரியில் தயார் நிலையில் இருந்த அடியாட்கள் எங்களை தாக்கினார்கள்.நாங்கள் திருப்பி தாக்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அரசு அதிகாரிகளும், காவல்துறையும் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக எமது போராட்டத்தை திசைதிருப்புவார்கள் என்பதால் நாங்கள் பின்வாங்கினோம்.

பின்னர் கிராம மக்களிடையே பேசி மணல் குவாரி செயல்படுவதை நேரடியாக தடுத்தால் அது அடியாட்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக, சாதிய மோதலாக திசை திருப்பப்பட்டுவிடும் என்பதால் இனி குவாரியில் நேரிடியாக போராடாமல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானித்தோம்.

அதன்படி 20.09.2014 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நூற்றுகணக்கான மக்கள் திரண்டு முற்றுகையிட்டோம். எமது முற்றுகையை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு சமாதானக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் ,காவல்துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் முந்தைய சமாதானக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக மறுநாளே மீண்டும் மணல் எடுக்க கோட்டாட்சியர் அனுமதி வழங்கியதற்கும், அதற்கு அடுத்த நாள் மணல் குவாரியில் வட்டாட்சியர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மணல் எடுக்க அனுமதி வழங்கியதற்கும் , மணல் குவாரி ஒப்பந்ததாரர் அடியாட்களை பயன்படுத்துவதை கண்டும் காணாமல் வந்த வட்டாட்சியரின் செயலுக்கும் எமது எதிர்ப்பை, தெரிவித்தோம். இதோடு இச்சமாதான கூட்டம் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மணல் குவாரி ஒப்பந்ததாரர் நூற்றுக்கணக்கான அடியாட்களை திரட்டி மணல் குவாரி அருகில் விருத்தாசலம் – சேலம் சாலையில் ஆயுதங்களுடன் நிறுத்தி வைத்திருப்பதால் நாங்கள் ஊர் திரும்பும் போது அடியாட்களால் தாக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக மணல் குவாரியை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வழங்கியுள்ள ஆணைக்கு ஏற்ப உடனடியாக மூடிவிட வேண்டும்.மேலும் மணல் குவாரி அருகில் திரட்டப்பட்டுள்ள அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் அனைவரும் இந்த அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்ற எமது முடிவை கோட்டாட்சியரிடம் தெரிவித்தோம்.

இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர் உங்கள் கோரிக்கைகளை பற்றி உடனடியாக முடிவெடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி ஆலோசித்துவிட்டு உரிய பதில் அளிப்பதாகவும், அதுவரை காத்திருக்குமாறும் கூறினார். இரண்டு மணி நேரம் கழித்து மணல் குவாரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ,மணல் குவாரி அருகில் ஒப்பந்ததாரரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் கூறும் அடியாட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்திரவிட்டிருப்பதாகவும், அடுத்த சமாதான கூட்டம் மீண்டும் 23.09.2014 அன்று நடைபெறும் என்றும்  கோட்டாட்சியர் அறிவித்தார்.இதை ஏற்றுக்கொண்ட நாங்கள் ஊர் திரும்பினோம்.

அன்றிலிருந்து 30.09.2014 தற்போதுவரை வரை மணல் குவாரியில் மணல் அள்ளப்படாவிட்டாலும் கோட்டாட்சியர் அறிவித்த சமாதான கூட்டம் 23.09.2014 அன்று நடத்தப்படவில்லை.அதோடு 2001-ம் ஆண்டு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்  பரவலூர் கிராமத்தில் மணல் எடுக்க நிரந்தர தடையாணை விதித்து அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் சுட்டிக்காட்டியும், அதன் நகலை கோட்டாட்சியரிடம் வழங்கி எச்சரித்த பின்னரும் மணல் குவாரி அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப்பெறவில்லை. மேலும் மணல் குவாரியில் மணல் அள்ளிய கனரக பொக்லைன் இயந்திரங்கள் மணல் குவாரிக்கு எதிரிலேயே இன்றுவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மணிமுத்தாற்றின் இயற்கை கட்டமைப்பு:- 
மணிமுத்தாறு விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் சிற்றோடையாக தொடங்குகிறது.இதனோடு பல்வேறு சிற்றோடைகளும் இணைந்து கடலூர் மாவட்டம் நல்லூர் என்ற ஊரின் அருகில் இருந்துதான் மணல் வளமிக்க ஆறாக வடிவமெடுக்கிறது.இங்கிருந்து விருத்தாசலம் ஊடாக பயணிக்கும் இந்த ஆறு சேத்தியாதோப்பு என்ற ஊரில் வெள்ளாற்றுடன் சங்கமிக்கிறது.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வாறு இதே பாதையில் பயணித்து, தான் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் வாழுமிடங்களை வளம் கொழிக்கும் பூமியாக வைத்திருக்கிறது.இந்த ஆற்றில் நல்லூர் அருகே உள்ள மேமாத்தூர் என்ற ஊரில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.மணிமுத்தாறு இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் மூலம் விருத்தாசலம் வரை உள்ள கிராமங்களின் பாசன ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. 

இதன் மூலம் கொடுக்கூர்,பெரம்பலூர்,மன்னம்பாடி,சாத்தியம்,விளாங்காட்டூர்,தொரவலூர்,பரவலூர்,கோமங்கலம்,முகுந்தநல்லூர், சாத்துக்கூடல்,க.இளமங்கலம், ஆலிச்சிக்குடி,விருத்தாசலம் ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்படுகிறது.இந்த ஏரிகளில் தேக்கப்படும் நீர் அவ்வூர்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிப்பதோடு அவ்வூர்களில் நிலத்தடி நீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகவும் அமைகிறது.
நல்லூர் கிராமத்தில் இருந்து மணல் வளமிக்க ஆறாக வடிவம் எடுக்கும் மணிமுத்தாற்றின் தென்கரையில் நல்லூர்,வண்ணாத்தூர்,மேமாத்தூர்,கச்சிபெருமநத்தம்,பரவலூர்,கோமங்கலம், மணவாளநல்லூர் ஆகிய கிராமங்களும், வடகரையில் இலங்கியனூர்,மேமாத்தூர்,மேமாத்தூர் ரயில்வே காலணி,ராசாபாளையம்,எருமனூர் ஆகிய கிராமங்களும் அமைந்துள்ளன.

மணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்குகளின் போது ஏற்படும் மண் அரிப்பும் பாதிப்புகளும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த ஆறு, கடந்த ஐம்பதாண்டுகளில் மேமாத்தூரில் இருந்து கோமங்கலம் வரை வரலாற்றில் வேறெப்போதும் நிகழாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் விளைவாக பலநூறு ஏக்கர் விளைநிலங்கள் ஆறாக மாறியுள்ளது. ஆற்றின் அகலமும், ஆழமும் இருமடங்காக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஆற்றின் பல பகுதிகளில் சுண்ணாம்பு பாறைகளும்,களி மண்ணும் வெளியே தெரிகின்றன.ஏறத்தாழ இருபது ஆடி அளவிற்கு இயற்கை அண்ணையின் மடியில் காலம்,காலமாக படுத்திருந்த மணல் காணாமல் போய்விட்டது.

கடந்த ஐம்பதாண்டுகளில் மண் அரிப்பிற்கான மூலக்காரணம். 
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 1956-ம் ஆண்டில்  துவங்கப்பட்டது.அதன் கட்டுமானப் பணிகளுக்கு இம்மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு மற்றும் வெள்ளாற்றில் இருந்து மணல் கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மணல் குவாரி அமைந்துள்ள அதே இடத்திலிருந்து அதாவது பரவலூர் கிராமத்தின் கிழக்கு பக்க எல்லையில் இருந்து, மேற்கு பக்க எல்லை வரை உள்ள ஆற்று பகுதியில்தான் ஆயிரக்கணக்கான லாரி மணல் 20 அடி ஆழத்திற்கு, மணலுக்கு கீழே சுண்ணாம்பு பார் வெளியே தெரியும் அளவிற்கு முற்றாக சுரண்டி எடுக்கப்பட்டது.ஆற்றில் இருந்த மணல் 20 அடி ஆழத்திற்கு முற்றாக சுரண்டி அள்ளப்பட்டுவிட்டதால் - இயற்கையாகவே இப்பகுதி வடக்கிலிருந்து தெற்காக சரிவாக அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் 1960-களுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் உண்டான நீரின் அழுத்தம் மற்றும் வேகத்தினால் ஆற்றின் தென்பகுதி கரையில், வரலாற்றில் வேறெப்போழுதும் நிகழாத அளவுக்கு மண் அரிப்பை ஏற்படுத்தி ஏராளமான விளை நிலங்களை காவுகொண்டது. இதன் மற்றொரு விளைவு பரவலூர் கிராமத்தில் குடியிருப்பிற்கு கிழக்கிலும்,மேற்கிலும் முற்றிலும் புதிதான இரு கொண்டை ஊசி வளைவுகள் உருவாகின.

கொண்டை ஊசி வளைவுகளின் சிறப்பம்சங்கள்.
கொண்டை ஊசி வளைவின் நடுப்பகுதி ஆற்றங்கரையின் நேர்க்கோட்டு பாதையில் இருந்து வெளிப்பக்கமாக வளைந்து செல்லக்கூடியது.இதனால் கொண்டை ஊசி வளைவு தொடங்கிய பகுதியின் முனையும் முடியும் பகுதியின் முனையும் ஏறத்தாழ நேர்க்கோட்டு பாதையில் வருகிறது.இந்த கட்டமைப்பின் காரணமாக கொண்டை ஊசி வளைவு தொடங்கும்  இடத்தில் இருந்து ஆற்று நீர் வெளிப்பக்க வளைவிற்கு ஏற்ப வளைந்து சென்று, முடியும் பகுதியின் மீது தனது முழுபலத்துடன் மோதுவதால் அவ்விடத்தில் நீர் சுழற்சி ஏற்படுகிறது.இந்த சுழல்வட்டப்பாதை ஆற்றின் எதிர்கரை வரை சென்று ஆற்று மணலை எதிர் பக்கத்தில் குவிக்கிறது.இந்த சுழற்சியின் போது மென்மையான,வளமான மணல் எதிர்கரையின் பக்கம் நீர் சுழற்சியோடு இணைந்து கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்படுகிறது.

கொண்டை ஊசி வளைவுகள் உள்ள பகுதி இயற்கையாகவே அதன் எதிர்ப்பக்கத்தை விட தாழ்வான பகுதியாக உள்ள காரணத்தால், அதன் எதிர்ப்பக்க கரைப் பகுதியில் மணல் குவிக்கப்படுவதற்கு நேர் எதிராக கொண்டை ஊசி பகுதி நீரின் வேகம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக மண் அரிப்பு மேலும் அதிகரித்து அது கொண்டை ஊசி பகுதியின் ஆழத்தையும் , அகலத்தையும் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றின் நீர் செல்லும் அளவிற்கு ஏற்ப அதிகரிக்க செய்கிறது.

பரவலூர் கிராமத்தின் கீழ்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியும், மேற்புறத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு 2-ன் பகுதியும், இரண்டின் தொடக்கப்பகுதியும் , இவ்விரு கொண்டை ஊசி பகுதிகளுக்கு இடையில் உள்ள பரவலூர் கிராம குடியிறுப்பு பகுதியின் தென்பகுதி எல்லையும் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது.இரண்டு கொண்டை ஊசி பகுதிகளுக்கும் இடையில் உள்ள குடியிருப்புப் பகுதி, ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கொண்டை ஊசி வளைவுகளின் விரிவடைதலுக்கு ஏற்ப அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது.இதை உடனடியாக தடுக்கும் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் கீழ் பகுதி மேற்பகுதி கொண்டை ஊசி வளைவுகளின் கோரத்தாண்டவத்தால் அவைகள் நேர்கோட்டில் இணைவதை எவராலும் தடுக்க முடியாது.


(படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)

இரு மஞ்சள் கோடுகளுக்கு இடைப்பட்ட 1 குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -1. 2- என குறிப்பிட்டுள்ள பகுதி கொண்டை ஊசி வளைவு -2 ஆகும்.மேலும் சிவப்பு நிறத்தில் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதிகள் பரவலூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடியிறுப்புகள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவன கட்டுமான பணிகளுக்காக 1956 மற்றும் 1990 களில் பெருமளவு மணல் எடுக்கப்பட்டதால்தான் பரவலூர் கிராமத்தில் இரு ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் உருவாகியுள்ளன.
கொண்டை ஊசி வளைவு 1-ன் முடிவு பகுதியின்      தென்புறக்கரை மூன்று மீட்டர் அகலம் மட்டுமே தற்போது உள்ளது.இதை அடுத்து மேமாத்தூர் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயும் ,அதைத் தொடர்ந்து விருத்தாசலம் - சேலம் சாலையும் அமைந்துள்ளன. கொண்டை ஊசி வளைவு- 1 –ன் ஆபத்தினால் விருத்தாசலம் – சேலம் சாலையும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க அவ்விடத்தில் 10 மீட்டர் உயரமும் நீளமும் உடைய  ஒன்பது தடுப்புச் சுவர்களை வெள்ளத்தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் 17.65 கோடி செலவில் பொதுப்பணித்துறை கட்டியுள்ளது.இந்த தடுப்புச் சுவர்கள் கட்டப்படாமல் இருந்திருந்தால் வெள்ளப்பெருக்குகளின் போது கரை உடைபெடுத்து விருத்தாசலம் – சேலம் சாலை துண்டித்து கோமங்கலம்,மணவாளநல்லுர் ஆகிய ஊர்களில் பெரும் வெள்ளப்பெருக்கையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கும். நூற்றுக்கணக்கான மனித உயிர்களை காவு கொண்டிருக்கும்.அதே வேளையில் இந்த தடுப்புச்சுவர்கள் குறிப்பிட்ட அப்பகுதியை பாதுகாத்தாலும், மண் அரிப்பிற்கு உள்ளாகியுள்ள பரவலூர் கிராமத்தையும் அதன் விளைநிலங்களையும், கோமங்கலம் கிராம விளைநிலங்களையும் பாதுகாக்கவில்லை.முன் எப்போதும் போலவே இப்போதும் மண் அரிப்பினால் ஆபத்தை எதிர்கொண்டே உள்ளன.

இதற்கு முன்பு பரவலூர் கிராம ஆற்றுபகுதி இருமுறை பெருமளவு அள்ளப்பட்ட மணலினால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள இப்பகுதியை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, அதற்கு நேர்மாறாக மூன்றாவது முறையாக மணல் குவாரி அமைத்ததன் மூலம் ஏற்படபோகும் அழிவின் வேகத்தை துரிதப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளது. இதற்கு முன்பு 1956 மற்றும் 1990 களில் அள்ளப்பட்ட மணலால் உருவான கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை அண்ணை தன்னை சமனிலைப்படுத்திக்கொள்ள அரிப்பு மற்றும் சரிவு ஆகிய வடிவங்களில் சேமித்து வைத்துள்ள மணலை தாயின் மடியறுத்து பால் கறப்பதைப் போன்று மணல் கொள்ளையர்கள் ஒட்டச்சுரண்டிவிடுவார்கள்.இதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரியில் ஏறத்தாழ பதினைந்து அடி ஆழத்துக்கும் மேலாக ஒரு சில நாட்களிலேயே களிமண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மணல் ஒட்ட சுரண்டி அள்ளப்பட்டுள்ளது.








கீழே செம்மண்பார் வெளியே தெரியும் அளவிற்கு மண் அள்ளியுள்ள காட்சி.





ஏறக்குறைய 15 ஆழத்திற்கு மண் அள்ளியுள்ள காட்சி.

அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படப்போகும் அழிவுகளும்,பாதிப்புகளும்.    

·          தற்போது துவங்கப்பட்டுள்ள மணல் குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் மணிமுத்தாற்றில் ஏற்படும் வெள்ளபெருக்குகளின் போது கொண்டைஊசி வளைவு – 1 மற்றும் -2 இரண்டும் இணைந்து பரவலூர் என்ற கிராமமே தமிழக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்.இதுவே இந்த மணல் குவாரியால் ஏற்படபோகும் முதன்மையானதும் மிகப்பெரியதுமான விளைவாகும்.

·          இதன் அடுத்த விளைவாக பலநூற்றுகணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மண் அரிப்பிற்குள்ளாகி ஆறாக மாறுவதால் இதை நம்பி உயிர்வாழும் நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும்.

·          மணிமுத்தாற்றில் உள்ள மணல் ஒட்டசுரண்டி அள்ளப்படுவதால் இந்த ஆற்றின் கரையில் உள்ள கிராமங்களில் மட்டுமல்ல இவ்வாற்றை சுற்றியுள்ள 20- திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.இதனால் இவ்வட்டாரத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நிலத்தடிநீர் இல்லாமல் போய் இவ்வட்டாரமே மக்கள் வாழத்தகுதியற்ற பகுதியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. இதற்கு ஆதாரமாக பரவலூர் கிராம பகுதிகளில் 1960 களில் ஐந்தடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து தற்போது 55 அடி முதல் 60 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.இக்கிராமத்திலும் இதை சுற்றியுள்ள கிராமங்களிலும் 60 அடிக்கு கீழே 300 அடி வரை நிலத்தடிநீர் வளமே இல்லை என்பதும்,அப்படியே ஒரு சில இடங்களில் கிடைத்தாலும் அந்த நீர் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாத வேதிப்பொருட்கள் நிறைந்த நீராகவே உள்ளது.எனவே இப்போதுள்ள 60 அடி ஆழ நீர்மட்டத்தை பாதுகாப்பதும், அதற்கான ஆதாரமாக உள்ள ஆற்றுமணல் கொள்ளை போவதை தடுப்பதுமே இவ்வட்டார மக்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரே வழிமுறையாகும்.

1990 -களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் அதில் வழங்கப்பட்ட தீர்ப்பாணையும்.
பரவலூர் கிராமத்தில் 1990 களில் அமைக்கப்பட்ட மணல் குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரு குழந்தைகளின் உயிரிழப்பு ஆகியவற்றின் காரணமாக பரவலூர் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் திரு.ஆசைத்தம்பி அவர்கள் விருத்தாசலத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் மு.வ.எண் 939/91 –ல் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் தீர்ப்பு 26.10.1999 தேதி அன்று அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பு மனுதாரருக்கு எதிராக அமைந்ததால்,இத்தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு எண்:2/2000 மேல்முறையீடு செய்தார்.

இம்மேல்முறையீட்டு வழக்கில் எதிர்வாதிகளாக
1.தமிழ்நாடு அரசு ரெப் பை தென்னாற்காடு மாவட்ட ஆட்சித்தலைவர்
2.விருத்தாசலம் கோட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
3.விருத்தாசலம் வட்டாட்சித் தலைவர்- விருத்தாசலம்.
4.ராஜசேகரன்,(மணல் குவாரி ஒப்பந்ததாரர்) ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக 2001-ம் ஆண்டு ஜீன் திங்கள் 15 –நாள்  தீர்ப்பு வழங்கப்பட்டது(தீர்ப்பாணையின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக 2001- க்கு பிறகு பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்கபடவில்லை.ஆனால் நீதிமன்ற தடையாணை நீடிக்கும் போதே அதை பொருட்படுத்தாமல் அதை அவமதிக்கும் வகையில் தற்போது மணல் குவாரி தமிழக அரசின் அதிகாரிகளால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.இம்மாதத்தில் 14.09.2014 மற்றும் 20.09.2014 ஆகிய இரு சமாதான கூட்டங்களிலும் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் ஆகியோர்களிடம் நீதிமன்ற தடையாணைப் பற்றியும், அதன் நகலையும் மக்கள் சுட்டிக்காட்டியும், அளித்த பின்னரும் கூட அதை ஒரு பொருட்டாக அதிகாரிகள் எடுத்துக்கொள்ளவில்லை.

எப்படியாவது பொதுமக்களை எங்களை ஏமாற்றி மணல் குவாரியை அதன் குத்தகைதாரருக்கு ஆதரவாக இயங்கவைப்பதிலேயே கோட்டாட்சியரும்,வட்டாட்சியரும் தீவிர கவனமும்,அக்கறையும் செலுத்தி வருவதால் கடலூர் மாவட்ட ஆட்சியர், விருத்தாசலம் கோட்டாட்சியர்,விருத்தாசலம் வட்டாட்சியர் ஆகியோருக்கு எமது போராட்டக்குழுவின் சார்பில் கடந்த 24.11.2014 அன்று பரவலூர் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளித்தது, நீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்பதையும் அது நீதிமன்ற அவமதிப்பு என்று சுட்டிக்காட்டி,எச்சரித்து உடனடியாக மணல் குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறாவிட்டால் உங்கள் மூவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதையும் குறிப்பிட்டு எமது வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இரு சமாதானகூட்டங்களிலும் மணல் குவாரி ஒப்பந்ததாரர் யார் என்பதை நாங்கள் வலியுறுத்திக்கேட்டும், கோட்டாட்சியர் தகவல் தர மறுத்துவிட்டார்.மணல் குவாரி ஒப்பந்ததாரரின் பெயரை வெளியே சொல்ல மறுக்கும் கோட்டாட்சியரின் செயல் ஏன் என்பது எமக்கு விளங்கவில்லை.

நீதிமன்ற ஆணைக்கே கட்டுப்பட மறுக்கும் தமிழக அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அவர்களின் மூலம் எமக்கு நியாயம் கிடைக்கும், எமது உயிருக்கும் , உடமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும், எமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதில் பொருள் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

தினசரி பத்திரிக்கையில் மக்களின் போராட்ட செய்திகள் link




தந்தி தொலைக்காட்சி அவணப்படம்( உத்தரகாண்ட் மாநிலம்)






Wednesday, 19 September 2012

கூடங்குளம்: வெற்றி விரிவாக்கத்தில்....!

இந்தியாவிலிருந்து 1947- ல் வெள்ளை ஆட்சியாளர்கள் வெளியேறியது, காந்தி தலைமையிலான காங்கிரசின் அகிம்சை போராட்டத்தின் விளைவாகத்தான் என்று நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இந்தக் கதையை கூடங்குளம் போராட்டக்குழுவும் நம்புவதில் அதிசயம் ஏதுமில்லை. திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு மட்டுமல்ல, குறுகிய மனப்பான்மை உள்ள அனைவராலும் அப்படியே மறுமொழி ஏதுமில்லாமல் ஏற்கப்படும் தாரகமந்திரமாகி விட்டது இந்தக் கதை.  இந்து மத கடவுளர்களின் கதைகள் எப்படி கேள்விகளுக்கு அப்பாற்பட்டதோ அதே  போன்றதுதான் இந்தியாவிற்கு சுதந்திரம் வந்ததாக கூறப்படும் கதையுமாகும்.


     
திரு.சுப.உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவை குறுகிய மனப்பான்மை உடையது என்ற எமது விமர்சனம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் நாங்கள் இப்போது வரை கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்களின் போராட்டத்தை, இப்போராட்டத்தை விஞ்ஞான பூர்வமான அடிப்படையில் வளர்த்தெடுத்து நடத்தி வரும் போராட்டக் குழுவையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.
     
அணு சக்தி, அணு உலை சம்பந்தமான போராட்டக் குழுவின் கருத்தை, கண்ணோட்டத்தை நாங்கள் குறுகிய மனப்பான்மையிலானது என்று கூறவில்லை. அதன் சமூக கண்ணோட்டத்தைத்தான் குறுகிய மனப்பான்மை உடையது என்று கூறுகிறோம்.
     
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போட்டத்தின் வெற்றி, போராட்ட விரிவாக்கத்தில் தான் அடங்கியுள்ளது. இந்தப் போராட்டத்தின் விரிவாக்கம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது.ஆனால் நமது சமூகமோ ஜனநாயக உணர்வு படைத்த சமூகம் அன்று. இதன் காரணமாக கூடங்குளம் வட்டார மக்களின் போராட்டத்தை தமக்கு சம்பந்தமுள்ள போராட்டமாக நமது சமூகம் கருதவில்லை.
     
தமது சொந்த பாதிப்புகளுக்கு எதிராகக் கூட போராட தயாராக இல்லாத  சிந்தனாமுறையை கொண்டுள்ள ஒரு சமூகம், பிறரின் பாதிப்பாக கருதும் ஒன்றுக்கு எதிராக போராட முன்வரும் என்றுக் கருதுவது கற்பனையே ஆகும். இந்த சிந்தனா முறைக்கு  அப்பாற்பட்டது அல்ல கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவும்! இதனாலேயே அதை குறுகிய மனப்பான்மை உடையது என்று நாங்கள் குறிப்பிடுகிறோம்.
     
போராட்டக்குழுவின் குறுகிய மனப்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரத்தைத் தேடி வேறு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. இப்போது இந்திய மக்கள் அனைவரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள டீசல் விலை உயர்வு, பல கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்வை சூறையாடும் சிறு வணிகத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் சமூக விரோத செயலுக்கு எதிராக போராட்டக் குழுவின் பாராமுகமே இதை நிரூபிக்க மிகச்சிறந்த உதாரணமாகும்.
     
தமது போராட்டத்திற்கு நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள கூடங்குளம் போராட்டக்குழு, நாட்டின் ஏனையப் பிரிவு மக்களை அழிவுக்குள்ளாக்கக் கூடிய அரசின் சமூக விரோத நடவடிக்கைகளை தமக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகவே கருதுகிறது. ஏற்கனவே போராட்டக் களத்தில் நிற்கும் இக்குழுவும், இக்குழு தலைமையிலான மக்களும், நாட்டின் ஏனைய பிரிவு மக்களோடு உணர்வு பூர்வமாக ஒருங்கிணைவதற்கு மிச்சிறந்த வாய்ப்பாகும் இது. இதை போராட்டக் குழு புரிந்து கொண்டிருந்தால் ஏற்கனவே  களத்திலுள்ள மக்களை அரசின் சமூக விரோத இந்த செயல்களுக்கு எதிராகவும் போராட வைத்திருக்க வேண்டும்.
    
 இப்படிச் செய்திருந்தால் தற்போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பழங்குடி மக்களின் உணர்வு  நிலையிலிருந்து   உறுதியாகப் போராடும் மீனவ மக்களின் உணர்வு மட்டத்தையும், ஜனநாயக மட்டத்திற்கு உயர்த்த முடியும். அதோடு உணர்வு பூர்வமாக தாழ்ந்து கிடக்கும் சமூகத்தின் பிறத்தட்டு மக்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கும் இது அடித்தளமாகவும் அமையும்.
     
ஆனால் இப்படியொரு சிந்தனா முறையே இல்லாத போராட்டக்குழு இந்திய சுதந்திர போராட்டம் சம்பந்தமாக கொண்டிருக்கும் கருத்தும், கண்ணோட்டமும் இதற்கு மாறான ஒன்றாக இருக்க முடியாது.
     
இரண்டாம் உலகப் போரில் இட்லரின் நாஜிப்படையை எதிர்த்து போரிட்டு 1 கோடி மக்களின் உயிர்களை இழந்து ஜெர்மனை முறியடித்தது சோவியத் யூனியன்.  சோவியத் யூனியனின் இந்த வெற்றி உலகம் முழுவதுமுள்ள புரட்சிகர, சுதந்திர தாகம் கொண்ட அனைவரையும் எழுச்சி பெற செய்தது. இதனால் உலகம் முழுவதும் இருந்த காலனி நாட்டு மக்களின் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் வீறு கொண்டெழுந்தது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மௌன் பேட்டன் பிரபு தமது நாட்டிற்கு இந்திய நிலைமை பற்றிய அனுப்பிய அறிக்கையில் இந்தியா வெடிகுண்டுகள் ஏற்றிய கப்பல்  தீ பிடித்தது போன்று உள்ளது, என்று குறிப்பிட்டிருந்தார்
     
மௌன் பேட்டன் பிரபுவின் மேற்கண்ட வர்ணணை, காந்தி வழி நடத்திய போராட்டத்தால் உருவானதல்ல. இந்நிலை முற்றிலும் காந்திக்கும், காங்கிரசுக்கும் அப்பாற்பட்டு எழுந்த ஒன்றாகும்.
    
 இரண்டாம் உலகப் போரில் இட்லர் தலைமையிலான நாஜிப்படையே வெற்றி பெறும் என்று கணித்திருந்த காந்தி புதிய  எஜமானை வரவேற்க தயாரானார். இதற்காகவே வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தையும் ஆரம்பித்தார்.
    
ஆனால் காந்தியின் எதிர்பார்ப்புக்கு மாறாக  நேச நாடுகளின் வெற்றி, உலக மக்களை உற்சாக மடைய வைத்ததைப் போன்றே இந்திய மக்களையும் எழுச்சி பெற செய்தது. இதனால்  காந்தியின் வழிகாட்டுதலை மீறி நாடெங்கும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு  பதிலடி தந்தனர்.
     
போரில் நேச நாடுகளின் வெற்றியால் திகைத்த காந்தி, தமது பழைய எஜமானனின் நம்பிக்கையை பெற  தாம் அறிவித்தப் போராட்டத்தை வன்முறை என்று கூறி திரும்பப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு துரோகமிழைத்தார்.
     
ஆனாலும் மக்களின் போராட்டமோ  மௌன் பேட்டன் பிரபுவின்  வர்ணணைக்கு ஏற்ப தொய்வில்லாமல் முன்னேறியது.
     
இப்படிப்பட்ட சூழலில் தான் வெள்ளை ஆட்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற முடிவு செய்தனர். இதற்காகவே தமது நலனை பாதுகாக்கும், தனது நம்பகமான  காவலனான காங்கிரசிடம் ஆட்சி அதிகாரத்தை மாற்றிக் கொடுத்து விட்டு வெளியேறினார்கள்.
     
1947 - ஆகஸ்ட் - 15 ல், ஆட்சி அதிகாரத்திலிருந்து  ஆட்கள் மட்டுமே மாற்றப்பட்டனர்.  ஆட்சி அதிகாரத்தை வழி நடத்தும் சட்டங்களும், நிர்வாக இயந்திரமும் அன்றிலிருந்து இன்று வரை வெள்ளையர்கள் விட்டுச் சென்றவைகள்தான.
     
வெள்ளையர்கள் அன்று விட்டுச்சென்ற சட்டத்தின் அடிப்படையில் தான் இன்று கூடங்குளம் போராடும் மக்கள் மீது ஆட்சியாளர்கள் தாக்குதல் தொடுக்கின்றனர்.
    
இன்று ஆட்சியாளர்கள் கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனர், நயவஞ்சகமாக நடந்து கொள்கின்றனர் என்பதை போராட்டக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர். இவை அனைத்துமே வெள்ளை ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றவைகள்தான்.
     
அன்றும்,இன்றும் ஏகாதிபத்திய நலனை உள்ளடக்கிய சட்டத்தையும், நிர்வாக முறையையும் கொண்டதுதான் இந்திய ஆட்சி முறை.
     
கூடங்குளம் போராட்டக்குழு இந்திய சட்டங்களும், நிர்வாக முறையும்  சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறது என்றால், அதன் அடிப்படையில் இந்திய ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் எப்படி தவறு என்று கூறமுடியும்!?
     
இங்கே முன்னுக்குப்பின் முரணாக நடந்து கொள்வது போராட்டக்குழு தான். ஆனால் இந்திய ஆட்சியாளர்களை பொருத்த வரை அவர்களை இயக்கும் சட்டத்திற்கு ஏற்ப முரணற்ற வகையில் தான் இயங்கி வருகின்றனர்.
     
எனவே கூடங்குளம் போட்டக்குழுதான் முரணற்ற வகையில் செயல்பட முன் வரவேண்டும். அந்த வகையில் இப்போராட்டத்தை வரிவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இனி பார்ப்போம்.
     
தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதுமுள்ள மீனவர்களிடையே தார்மீக ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மீனவ மக்களிடையே  இந்த ஆதரவு பெருமளவு அதிகரித்துள்ளது.  இந்த தார்மீக ஆதரவை போராட்டத்திற்கான நேரடி ஆதரவாக ஒருக் குடையின் கீழ் ஒன்று திரட்டப்படவேண்டும்.
     
இரண்டாவதாக  தமிழகம், புதுவை கடற்கரை நெடுக உள்ள மீனவ மக்களை ஒன்று திரட்ட வேண்டும்.
     
மூன்றாவதாக சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாகவும் தமது தலைமையிலான மக்களை போராடத்தில் ஈடுபடுத்தவும் வேண்டும்.
     
இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை உடைய அணுகு முறைகள் மூலமே கூடங்குளம் போராட்டம் மட்டுமல்ல சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் தமது வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் முன்னேற்றத்தை  காண முடியும்.
     
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுடன் ஒருங்கிணைய கூடங்குளம் போராட்டக்குழு தனது சிந்தனா முறையை , பரந்து விரிந்த ஒன்றாக மாற்றிக் கொள்ள இனியாவது தயாராகுமா?   

தொடர்புடைய கட்டுரைகள்:

Tuesday, 20 March 2012

கூடங்குளம்:உறுதிப் பயணமா? இறுதி பயணமா?

தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதிமிக்க போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான் என்றால் அது மிகையில்லை.இந்த உறுதிக்கு காரணம் இப்போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்தான்.இம்மக்கள் இப்போராட்டத்தில் உறுதியாக ஈடுபடுவதற்குக்காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதுதான்.இப்படிப்பட்ட போராட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக இப்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இப்படி பேசுவதற்கும் ,விவாதிப்பதற்கும்  தமிழக அரசு இப்போராட்டம் குறித்து, இதுநாள் வரை தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளப்போகிறது என்பதைக் காரணமாகக் கூறுகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையும் அதனைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் ஆளும் கட்சியினர் மக்கள் மத்தியில் தற்போது செய்துவரும் பிரச்சாரமும் இதற்கான ஆதாரமாக காட்டப்படுகிறது.



மேற்கண்ட இரு அம்சங்களும் தமிழக அரசு கூடங்குளம் போராட்டத்தில் இதுநாள்வரை, தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையின் - நாடகத்தின் - இறுதிக்கட்டத்தை காட்டுகிறதே தவிர, இவைகள் கூடங்குளம் மக்களின் அணு உலைக்கெதிரான போராட்டத்தின் இறுதி நிலையைக் காட்டவில்லை.தமிழக அரசு தனது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பதையே, போராட்டத்தின் முடிவாக சித்தரிக்கிறார்கள்.
கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிரான தமது போராட்டத்தை தமிழக அரசின் பிரதிநிதியாக இருந்து-கூலி ஆட்களாக இருந்து - நடத்தவில்லை.இப்போராட்டத்திற்கு தமிழ அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கவில்லை.”கூடங்குளம் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின்நிலையத்தை மத்திய அரசு திறக்கக்கூடாது ”, என்ற தமிழக அரசின் நிலைப்பாடே ,இப்போராட்டத்தை நேரடியாக அது எதிர்க்கவில்லை,ஆனால் இந்த நிலைப்பாட்டின் உள்ளே மக்கள் போராட்டத்திற்கு எதிரான தன்மையையே கொண்டிருக்கிறது.

தமிழக அரசு ”மக்களின் அச்ச உணர்வு”, என்று கூறுவதன் மூலம் தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாளன் இல்லை என்பதை உணர்த்துகிறது.ஏனென்றால் கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிராக ஊகத்தின் அடிப்படையிலான அச்சத்தை கொண்டிருக்கவில்லை.விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.மக்களின் இந்த விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டைத்தான் அச்சம்’ என தமிழக அரசு சித்தரிக்கிறது.உண்மையில் மக்களிடையே அச்ச உணர்வுதான் உள்ளது என்று தமிழக அரசு கருதியிருந்தால், தான் நியமித்த நிபுணர் குழு மூலம் அவற்றை போக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.அதற்கு மாறாக மத்திய அரசின் அதே அணுகுமுறையைத்தான் தான் நியமித்த நிபுணர் குழு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.

தமது போராட்டத்திற்கு எதிரான நயவஞ்சக அணுகுமுறையை தமிழக அரசு கொண்டிருந்தாலும், தமது நடவடிக்கைத்தான் போராட்டத்திற்கு எதிராக தமிழக அரசு திரும்புவதற்கு காரணம் என்றாகிவிடக்கூடாது என்பதால் தமிழ அரசு அணுகும் அதே முறையில், அதை கூடங்குளம் மக்களும் எதிர்கொள்கிறார்கள்.

எனவே இந்தப்போராட்டத்தை எந்த நிலையிலும் தமிழக அரசை நம்பி கூடங்குளம் மக்கள் ஆரம்பிக்கவும் இல்லை, தொடரவுமில்லை,தமது சொந்த பலத்திலேயேதான் ஊன்றி நிற்கிறார்கள்.விஞ்ஞானபூர்வமான ஆதாரத்துடன் தமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக போராடுகின்றனர்.

மத்திய அரசு ,மாநில அரசு ஆகியவற்றின் நிபுணர் குழுக்களும், அப்துல்கலாம் போன்ற அரைகிறுக்குகளும் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பேசுகிறார்கள்.ஆனால் மக்களோ கட்டிட உறுதிதன்மை குறித்த பிரச்சனைகளுக்காக போராடவில்லை.அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு கழிவுகளால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தே போராடுகிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பவன் ஒவ்வொருவனும், இதற்கு பதில் சொல்வதை தவிர்த்து கட்டிட உறுதித்தன்மை குறித்து பேசி திசைதிருப்புவதன் மூலம் தாங்கள் அயோக்கியர்கள், நேர்மையற்றவர்கள்,தேசத் துரோகிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

ஆனால், இவர்களோ தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை காரணம் காட்டி கூடங்குளம் மக்களின் போராட்டத்தை நாட்டுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கின்றனர்.இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து, அதை தீர்ப்பதற்காகத்தான் கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு உருவாக்கியது போன்று இந்த கழிசடைகள் ஊளை இடுகிறார்கள்.தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை தமிழகத்தை இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின், தமிழக நலன் மீதான அக்கறையின்மையின் வெளிப்பாடேயாகும்.தமிழகத்தில் இதுவரை வரலாறுகாணாத மின் பற்றாக்குறை நிலவினாலும் தமிழக அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதை ஒரு சிறிதும் குறைத்துக்கொள்ளவில்லை.

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தேவையும்,பற்றாக்குறையும் தமிழக மக்களின் மின்தேவை அதிகரிப்பால் உருவானது அல்ல.மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் மின் தேவை அதிகரிப்புதான் மின் பற்றாக்குறைக்கு அடிப்படையாகும்.யாரால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ அவர்களுக்கு தமிழக அரசு மின்சாரம் வழங்குவதை குறைக்காமல் அதற்கு மாறாக மின்பற்றாக்குறைக்கான தண்டனையை தமிழக மக்களுக்கு வழங்குகிறது.இந்த தண்டனையின் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கூடங்குளம் அணு உலையாகும்.

கூடங்குளம் அணு உலை தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான் என்றாலும் இதுவும் கூட மின்பற்றாக்குறையை தீர்த்துவிடப் போவதில்லை.இப்போது கூடங்குளம் அணு உலை செயல்படத்தொடங்கினாலும் அதில் இருந்து மின்சாரம் வெளிவர 2 ஆண்டுகளாகும்.அடுத்து இந்தியா முழுக்க உள்ள 20 அணு மின்நிலையங்கள் மூலம் மொத்தமாக 4130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் 4000 மெகாவாட் மின்சாரத்தை இந்த 20 அணு மின்நிலையங்களே பயன்படுத்திக்கொள்கின்றன.எஞ்சிய 130 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பிற்கு கிடைக்கிறது.

கூடங்குளம் அணு உலையில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரத்தை  உற்பத்தி செய்யப்போவதாக கூறுகிறார்கள்.இதில் பாதி மின்சாரத்தை தமிழகத்திற்கு தரப்போவதாக தூண்டில் போடுகிறார்கள்.20 அணு மின்நிலையங்களில் இருந்து கிடைக்காத மின்சாரம் கூடங்குளத்தில் இருந்து மட்டும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? ஒருவேளை கூடங்குளம் அணு மின்திட்டம் மிகவும் நவீனமானது என்றால் காலாவதியான தொழில்நுட்பத்தை உடைய ஏனைய 20 அணு உலைகளையும் மத்திய அரசு மூடிவிடுமா? உண்மையில் தமிழகத்தின் நலனுக்காகத்தான், கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகப் போவதாக சொல்லப்படும் மின்சாரத்தில் பாதியை தரப்போவதாக மத்திய அரசு கூறுமானால், அதை இப்பொழுதே நெய்வேலி அனல்மின்நிலையத்தில் இருந்தும் மத்திய மின் தொகுப்பில் இருந்தும் வழங்களாமே? ஏன் வழங்கவில்லை?

மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துபார்க்கும் போது, இந்தியாவில் உள்ள அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது இந்திய அரசின் நோக்கமல்ல என்பது தெளிவாகிறது.அதோடு கூடங்குளம் அணு உலையின்  மூலம் உற்பத்தியாகப் போவதாக கூறப்படும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவோம் என்று மத்திய அரசு கூறுவதும் ஏமாற்றும் தந்திரமே என்பதும் விளங்குகிறது,
எனவே கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளின் செயல்பாடுகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் மட்டுமல்ல, அவைகள் தேசத்துரோக செயல்பாடுகளுமாகும்.

அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகள் எந்தளவிற்கு உண்மையோ,தவிர்க்கவியலாததோ அந்தளவிற்கு அதற்கெதிரான போராட்டமும் தவிர்க்கவியலாமல் நடந்தே தீரும்! இதை ஒருபோதும் யாராலும் தடுத்துவிட முடியாது.கூடங்குளம் அணு உலை செயல்பாடே மக்கள் போராட்டத்தின் முடிவல்ல.அது போராட்டத்தில் வடிவ மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும்!  

(இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகிறது)

தொடர்புடைய கட்டுரைகள்: