விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Showing posts with label தமிழகவரலாறு. Show all posts
Showing posts with label தமிழகவரலாறு. Show all posts

Thursday, 24 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-2

ஆரிய வருகையும்,போரும் ஆரிய வெற்றியும் விந்திய மலைக்கு வடக்குப்பகுதியில் நடந்தேறியது என்பதையும்,பார்ப்பனியம் ஆரியத்தின் மற்றும் பூர்வகுடி மக்களின் பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கிய புதிய வடிவம் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.இன்றைய வட இந்தியப்பகுதிகளில் ஆரியர்கள் வெற்றியாளர்கள் என்பதால் ஆரிய-பார்ப்பனிய பண்பாடு பூர்வகுடி மக்களுக்கு தேவையாக இருந்தாலும்,இல்லாவிட்டாலும்,விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் அவைகள் அவர்கள் மீது நிர்பந்தமாக திணிக்கப்பட்டது.

ஆனால் விந்திய மலைக்கு தெற்கில் பார்ப்பனர்கள் ஊடுருவல்வாதிகள் என்பதால் நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றையே தமது அணுகுமுறைகளாக கொண்டிருந்தார்கள் என்பதையும் சென்றத்தொடரில் பார்த்தோம்.

ஈழப்படுகொலை


வட இந்தியப்பகுதிகளில் ஆரிய வெற்றி,பூர்வகுடி மக்களுடான இனக்கலப்பு,ஆரிய மேலாண்மையின் கீழ் பூர்வக்குடி மக்களின் பண்பாட்டு கூறுகளில் தமது நலன்களையும் உள்ளடக்கிய பார்ப்பனிய பண்பாட்டு முறைகளை உருவாக்கி, அதைக் கொண்டு சாங்கியம்,சமணம்,பவுத்தம் ஆகிய பண்பாட்டு எதிர்ப்பாளர்களையும் முறியடித்து சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டிய செழுமையான அனுபவம் ஆகியவற்றை ஆரிய பார்ப்பனர்கள் பெற்றுக் கொண்ட பின்னர்தான் தென்னிந்தியப்பகுதிகளில் ஊடுருவினர்.

செழுமையான அனுபவங்களோடு ஊடுருவியதால் வட இந்திய நிலைமைகளோடு ஒப்பிடும்போது புதிய பகுதி முற்றிலும் வேறுபட்டிருந்தாலும் அதற்கேற்ப தமது அணுகுமுறைகளை உருவாக்கிக் கொள்வதில் பெரும் சிரமம் அவர்களுக்கு ஏதும் ஏற்படவில்லை.

பெரும்பான்மை மக்களிடையே பார்ப்பனர்களும் பார்ப்பனியமும் முதலில் ஆதரவை பெற முடியாவிட்டாலும் பார்ப்பனியம் ஆட்சியாளர்களுக்கு மிகச்சிறந்த அரசத் தந்திர முறையாக இருந்ததால் அவர்களிடையே செல்வாக்கு பெற்றது.

பார்ப்பனியம் ஆட்சியாளர்களிடையே செல்வாக்கு பெறுதல் என்ற நடைமுறை தென்னிந்தியப் பகுதிகள் முழுவதுமே ஏறத்தாழ ஒரே சீரான முறையில் நடந்தேறியதுஆனால் செல்வாக்கு பெறும் தன்மை மக்களிடையே ஒரே சீராக அமையவில்லை.இது ஏற்றத்தாழ்வான போக்கையே கொண்டிருந்தது.

இந்த ஏற்றத்தாழ்வு அந்தந்த பிரதேசங்கள் அல்லது வட்டாரங்களின் சமூக,பொருளாதார,நாகரீகம்,மொழிவளம் இவற்றின் தேவை ஆகியவற்றை பொருத்து அமைந்தது.மேற்கண்ட தேவையின் அடிப்படையில் பார்ப்பனிய நிலைநாட்டலும் வேறுபட்டு இருந்தது.

தென்னிந்திய பகுதிகள் முழுக்கவே திராவிட இனக்குடும்பத்தை சேர்ந்த மக்களே ஆவர். ஆனால் ஒரே இனக்குடும்பத்தை சேர்ந்தவர்களாயினும்  வட்டார அளவில் சமூகம், பொருளாதாரம், நாகரீகம், மொழி ஆகிய துறைகளில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியே நிலவியது. இந்த ஏற்றத்தாழ்வும் இதன் மேம்பாட்டிற்கான தேவை எந்த அளவிற்கு இருந்ததோ அந்த அளவிற்கு பார்ப்பனீயம் நிலைபெறும் தன்மையும் வேறுபட்டிருந்தது.

அதிலும் மொழி, சமூக, பொருளாதாரம், நாகரீகம் ஆகியவற்றின் செழுமையின் வெளிப்பாடு என்பதால் அதற்கேற்பவே மொழியின் வளர்ச்சி அமைந்திருந்தது. எனவே பார்ப்பனியம் முதலில் ஆட்சியாளர்களிடமும் இவர்களின் ஊடாக மொழியிலும் மேலாதிக்கம் பெறத்தொடங்கியது. இதன் அடிப்படையில் வட இந்தியாவோடு ஒப்பிடும் போது தென்னிந்திய  புதியநிலைமைகளுக்கு ஏற்ப புதிய வடிவிலான பார்ப்பனிய பண்பாடு படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்குப் பெறத்தொடங்கியது.      

திராவிட மொழிக்குடும்பத்தின் பல்வேறு வட்டார வழக்குகளில் தமிழ் தவிர்த்த ஏனைய வழக்குகள்,அவற்றின் வளர்ச்சியின் போதாமை,தேவைக் காரணமாக பார்ப்பன,சமஸ்கிருதம் அவற்றில் ஊடுருவி ஆக்கிரமித்தது.இந்த ஊடுருவலுக்கு பின்னரே திராவிட மொழிக்குடும்ப வட்டார வழக்குகளில் இன்று நாம் அறியும் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஆகியவை உருப்பெற்றன.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு முன் இம்மொழிகள் பல்வேறு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன.

ஆனால் இதற்கு முற்றிலும் வேறுபட்ட நிலையுடன் தமிழ் விளங்கியது.பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவலுக்கு பின்னரே பிற திராவிட வட்டார வழக்குகள் ஒரு மொழியாக உருபெற்றதைப் போன்றல்லாமல், தமிழ் பார்ப்பன ஊடுருவலுக்கு வெகுகாலத்திற்கு முன்பே தனிச்சிறப்பான தன்னிறைவான வளர்ச்சியடைந்து செழுமைப்பெற்றிருந்தது.

நாம் ஏற்கனவே பார்த்தது போன்று மொழியின் உருவாக்கம் வளர்ச்சி என்பது சமூகம்,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.இதன் படி தமிழ் மொழியின் செழுமை இம்மொழி பேசப்பட்ட பகுதியின் சமூக,பொருளாதார நாகரீக வளர்ச்சியின் அடையாளமாகும்.

எனவே,இன்று தமிழகம் என்று அறியப்படும் பகுதியில் பார்ப்பனியமும்,சமஸ்கிருதமும் இவ்வாட்டாரப் பகுதிகளில் செழுமைப்படுத்த வேண்டிய தேவையின்மையால் இவைகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற முடியவில்லை.அதிலும் தமிழில் அதியுயர்ந்த இலக்கண செழுமை காரணமாக பார்ப்பன சமஸ்கிருதம் எள் முனையளவுக்குக் கூட இதில் நுழைய முடியவில்லை.

ஆட்சியாளர்கள் மக்களை பிரித்தாள பார்ப்பனிய பண்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் கூட அவர்களும் சமஸ்கிருதத்தை தமிழில் நுழைக்க வேண்டிய தேவையேதும் எழவில்லை.அந்த அளவிற்கு தமிழ் மிகச்சிறப்பான,உன்னதமான வளர்ச்சியை கொண்டிருந்தது.

அதே நேரத்தில் விந்திய மலைக்கு தெற்கில் திராவிட இனமக்கள் வாழ்ந்த பகுதிகளில் பார்ப்பனியம் ஊடுறுவிய போது, அது முதலில் ஆட்சியாளர்களிடமும்,பின்பு சமூக பண்பாட்டு,மொழி ஆகியவற்றின் தேவையை பொருத்து படிப்படியாக மக்களிடையேயும் செல்வாக்கு பெறத்தொடங்கியது.

ஆனால் தமிழகத்திலோ,இது ஏனைய திராவிட வட்டார பகுதிகளில் நடந்தேறியதைப்போன்று அந்துணை எளிதாக அமையவில்லை.தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பார்ப்பனிய சமஸ்கிருதம் முழு முற்றான தேவையின்மையால் நிராகரிக்கப்பட்டது.இதே போன்று சமூக,பொருளாதாரம்,நாகரீகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பார்ப்பனியத் தேவை ஏதும் எழவில்லை.ஆனாலும் கூட சங்க காலத்தில் மன்னர்களுக்கு மக்களை பிரித்தாள வேண்டிய தேவைக் காரணமாக அவர்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டு,அதை சமூகத்தின் மீது நிர்பந்தமாக திணிக்க முயன்றனர்.

இப்படி பார்ப்பனியத்தை திணிக்க முயன்ற ஒவ்வொரு சமயத்திலும் அதை சமூகம் நிராகரித்தது.இவ்வாறு சமூகம் எந்த அளவிற்கு எதிர்த்து நிராகரித்து முறியடித்ததோ அந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் மக்கள் மீது நிர்ப்பந்தமாக ஒடுக்குமுறைகள் மூலம் பார்ப்பனியத்தை திணிக்க முயன்றனர்.இந்த ஒடுக்குமுறை எந்த அளவில் இருந்ததோ ,அந்த அளவிற்கு அதை எதிர்கொள்ளும் திறனும் தமிழ்சமூகத்திற்கு இருந்தது.

இந்த எதிர்ப்பாற்றல் அதன் செழுமையான வளர்ச்சியின் காரணமாக தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் சீராக அமைந்திருந்தாலும் அவைகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாக இல்லை.இதுவும் அந்தந்த வட்டார வாழ்வியலின் அங்கங்களாகவும் அதற்கேற்ப வேறுபட்டவைகளாகவும் இருந்தது.இது ஒரே சீரான பொதுமையாக்கப்பட்ட வாழ்வியல் முறையை உள்ளடக்கிய பார்ப்பனியத்தை எதிர்க்கொள்வதற்கு போதுமானதாக இல்லை.இந்த வகையில் அதற்கான தேவை இப்போது தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டது.

தொடரும்……..

(இக்கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)

Wednesday, 23 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1


இந்தத் தலைப்பைப் படித்தவுடனே பலருக்கும் வியப்பையும் ஆச்சரியத்தையும் சிலருக்கு ஆத்திரத்தையும் கூட ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம்.உண்மை கசக்கத்தான் செய்யும்.வேறு வழியில்லை இதை பற்றி நாம் விவாதிப்பதைத்தவிர!. இப்படி செய்வது நம்மை நாமே புண்படுத்திக்கொள்வதற்காக அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இதைப்பற்றி பரிசீலிக்காமல் இருந்ததும், இருப்பதுமே தோல்விகள் தொடர்கதையாவதற்கு காரணமாகும்.

தமிழகத்தில் வாழும் தமிழர்களாகினும்,இன்றைய இந்தியாவில் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களாயினும்,ஈழம் முதல் உலகில் எந்த பாகத்தில் வாழும் தமிழனும் நிம்மதியாக வாழ்ந்ததாகவோ,வாழ்வதாகவோ நாம் அறிந்தவரையில் ஆதாரம் ஏதுமில்லை.

தமிழர்களின் தோல்வியின் வரலாறு 1500 ஆண்டுகால பழமையானது.இப்படி 1500 ஆண்டுகளுக்கு முன் வீழ்ந்த நாம் இன்றுவரை அதிலிருந்து மீண்டெழவேயில்லை.தோல்வியே தொடர்கதையாகிப்போனது நமக்கு! இந்த நீண்ட நெடிய காலத்தில் நாம சந்தித்த தோல்விகள் கூறித்து தந்தை பெரியாரைத்தவிர வேறு யாரும் பரிசீலித்ததாக தெரியவில்லை.ஆனால்,அவரின் பரிசீலனையும்,செயல்பாடும் கூட அவரின் காலத்திலேயே, அவரின் கண் முன்னாலேயே மீண்டும் ஒரு தோல்வியை தழுவிக்கொண்டுவிட்டது.

1500 ஆண்டுகளுக்கு முன் நாம் தோல்வி அடைந்ததற்கு எது காரணமோ ,அடிப்படையோ அதுதான் இன்றுவரை நமது தோல்விகளுக்கு அடிப்படையும், காரணமும் ஆகும்.உலகில் இந்த நீண்ட நெடியகாலத்தில் ஆயிரமாயிரம்  மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், நமது தோல்விக்கான அடிப்படையில் மட்டும் இன்றுவரை மாற்றமேதும் இல்லை.இது வியப்பையும்,சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம்.இது இயங்கியலுக்கு புறம்பானதாகவும் கூட நீங்கள் கருதலாம்.மேலோட்டமாக பார்க்கும் போது, இது அப்படித்தான் தோன்றினாலும் நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்கும் போது இதுவே உண்மையாக உள்ளது.

சமூகம்,பொருளாதாரம்,பண்பாடு,நாகரீகம் ஆகிய துறைகளில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை இன்றைய நிலையோடு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான்.ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் நமது வினையாற்றல்களின் விளைவாக உருவான,உருவாக்கப்பட்ட மாற்றங்கள் இல்லை.இவைகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்களால்,செலுத்துபவர்களால் அவர்களின் தேவைக்கும்,நலன்களுக்கும் உகந்தவாறு திணிக்கப்பட்ட,திணிக்கப்படும் மாற்றங்களாகும்.

மாற்றங்கள் திணிப்பின் மூலம் உருவாக்கப்பட்டவைகள் என்பதால், இந்த மாற்றங்களை நம்மீது திணித்தவர்களின் தேவையும்,நலன்களுமே பிரதானமானது என்பதால், அதனால் ஏற்பட்ட வளர்ச்சியும்,மாற்றங்களும் இயற்கையானதாக அமையவில்லை.அதற்கு மாறாக நான்குதலை,எட்டு கைகளும் உடைய பார்ப்பன கடவுள்களை போன்றும்,ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் விசித்திரமான உருவங்களை போன்றும் விகாரமாக, இயற்கைக்கு புறம்பானதாக காட்சித்தருகிறது.
உடையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அளவுக்கு, இச்சமுக மாற்றம் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கவில்லை.1500 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்ட தோல்விக்கு பின்னர் நம்மீது திணிக்கப்பட்ட பண்பாடும்,வாழ்வியலும் வடிவமாற்றத்தை கண்டிருக்கிறதே அன்றி,அவைகள் மறைந்து போய்விடவில்லை.மேலும், மேலும் அவைகள் தமக்கே உரித்தான வகையில் நேர்மையற்ற முறையிலும்,கூர்மையாகவும் மாற்றம் அடைந்துள்ளன.

எனவே,இவைகளைப்பற்றி நன்கு பரிசீலித்து ,ஆய்வுக்குட்படுத்தி அவற்றை அடையாளம் காணும்போதுதான், அவைகளை தூக்கி எறிவதற்கான வழிமுறைகளை நாம் உருவாக்கிக்கொள்ள முடியும்.ஆகவே,இனி அவற்றைப் பற்றி முடிந்தவரையில் கூர்மையாகவும்,அதே நேரத்தில் சுருக்கமாகவும் பரிசீலிப்போம்.இந்தப் பரிசீலனை நாம், நமது இலக்கை நோக்கிய பயணத்திற்கு வழிகாட்டியாக இருக்கும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தமிழர்களின் வரலாற்றில் வசந்தகாலமாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் காலம் சங்க காலமேயாகும்.இக்காலம் தமிழர்களின் வாழ்வில் வசந்தகாலமாக விளங்கியதற்கான அடிப்படைகளைப்பற்றி, அதற்கு பிந்தைய நமது வாழ்வியலோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது சங்கக்காலத்தில் நாம் இன்றுள்ள பார்ப்பனிய சாதி மதமற்று வாழ்ந்த வாழ்வியலே அடிப்படை என்பதை நம்மால் அறிய முடிகிறது.மதமும்,சாதியும் ஏற்படுவதற்குரிய சமூக அடிப்படையேதும் சங்கக்காலத்தில் தமிழ் சமூகத்தில் எழவில்லை.இதே நிலை நமக்கு மட்டுமல்ல விந்திய மலை கடந்த, இன்றைய வட இந்தியாவிற்கும் பொதுவானதாகவே இருந்துள்ளது.

சாதியும்,மதமும் இச்சமூகங்களில் இல்லாததால் அக்காலகட்டத்தில் இச்சமூகங்களின் வாழ்வு மனிதகுல வாழ்வின் ஆரம்ப நிலையிலும் இல்லை.உலகில் ஏனைய சமூகங்களைப் போன்றே இயற்கையான வளர்ச்சியை உள்ளடக்கியே இருந்துள்ளது.இதற்கு ஆதாரமாக தமிழகத்தில் சங்ககாலத்தைப் போன்று வடக்கே ஹரப்பா,மொகஞ்சதாரோ ஆகிய நாகரிங்கள் உள்ளன.

அதன் பின்னர் ஆரிய வருகை அதற்கெதிரான பூர்வகுடி மக்களின் போராட்டம் ஆகியவற்றில் பூர்வகுடி மக்களின் தோல்வி,இனக்கலப்பு ஆகிய நிகழ்வுகளுக்கு பின்னரே பார்ப்பனிய பண்பாடு,நாகரீகம்,சமூக வாழ்வியல் ஆகியவை தோல்வியடைந்த பூர்வகுடி மக்கள் மீது வெற்றியாளர்களின் திணிப்பாக அமைந்தது.

ஆனால் இந்த ஆரிய வெற்றியாளர்களின்  திணிப்பு  விந்திய மலைக்கு வடக்கில் நடந்ததேயன்றி தெற்கே நிகழவில்லை.ஆரியம் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப பார்ப்பனியமாக வளர்த்தெடுக்கப்பட்டு, விந்திய மலைக்கு வடக்கே ஆழ வேரூன்றி, நிலைப்பெற்றது. இன்றைய வட இந்திய மக்களிடையே நிலைநாட்டப்பட்டுள்ள பார்ப்பனிய வாழ்வியலும்,பண்பாடும் ஆரிய வருகைக்கும், அதன் வெற்றிக்கும் எது சவாலாகவும்,இடையூறாகவும் அமைந்திருந்ததோ அது மீண்டும் ஒரு முறை நிகழ்ந்துவிடாமல் தடுப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டதாகும்.

அதாவது ஆரிய வெற்றிக்கு சவாலை ஏற்படுத்தியது அன்றைய வட இந்திய பூர்வகுடி மக்களின் சாதி,மத மற்ற வாழ்க்கையும் அதனால் அவர்களிடையே ஆழ நிலைபெற்றிருந்த ஒற்றுமை உணர்வும்தான்.இவற்றை தகர்த்தெரியும் உள்ளடக்கத்துடனேதான் பார்ப்பனியம் உருவாக்கப்பட்டது.
பார்ப்பன மதமும் அதன் நடைமுறை வடிவமாக சாதியும் உருவாக்கப்பட்டு, அவைகள் சமூகத்தில் வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.இந்த மாற்றங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக படிப்படியாக உருவாக்கப்பட்ட மாற்றங்களாகும்.இவைகள் , இவைகளை உருவாக்கியவர்களின் நோக்கத்தை அவர்கள் எதிர்ப்பார்த்ததைவிட மேலும் கூடுதலான பலனைத்தந்தது.மக்களிடையேயான ஒற்றுமை உணர்வும்,தன்மானமும் முற்றாக துடைத்தெறியப்பட்டது.

மக்கள் சாதியாக கூறுபோடப்பட்டு ,ஒவ்வொரு சாதியும் கீழிருந்து மேலாக,ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு நெருக்கமான கட்டமைப்பாக்கப்பட்டது.இதற்கு இசைவான முறையில் ஒன்றின் வாழ்வு,இன்னொன்றை சார்ந்ததாகவும்,இந்த சார்புத்தன்மை, ஒன்றின் வாழ்வை மற்றவை பாதிக்ககூடியதாகவும், இவைகளை ஏற்க மறுத்தால் அதற்கு வெளியில் வாழ முடியாத சூழலும் உருவாக்கப்பட்டது.

அதாவது அன்றைய வாழ்வின் அடிப்படையான நிலங்கள் அனைத்தும் மன்னனுக்கு சொந்தமானதாகவும்,இந்த கட்டமைப்பை ஏற்பவர்கள் மட்டுமே இதைச்சார்ந்து வாழ அனுமதிக்கப்பட்டதாலும்,இதை எதிர்த்து முறியடிப்பதற்கு தடையாக சாதி மக்களை கூறுப்போட்டுவிட்டதாலும் அதை ஏற்பதைத் தவிர மக்களுக்கு வேறுவழியில்லை.
மேலே விவரிக்கப்பட்ட வாழ்வியல் முறையும், அதற்குரிய அடித்தளமும் உருவாக்கப்பட்டு சமூக வாழ்வியலாக நிலைநாட்டப்பட்டது.

இப்படி வெற்றியடைந்த பார்ப்பனியத்தை எதிர்த்துதான் சாங்கியம்,சமணம்,பெளத்தம் ஆகிய வாழ்வியல் முறைகள் வட இந்தியாவில் உருவாகின.ஆனால் அவைகளும் தான் போதித்த, பார்ப்பனியத்தை எதிர்த்த வாழ்வியல் முறையை நிலைநாட்டுவதற்கான சமூக அடித்தளமின்மையால் நாளடைவில் பார்ப்பனியத்தால் உள்ளிருந்தே செரிக்கப்பட்டு பார்ப்பனியத்தின் ஒரு அங்கமாக்கப்பட்டது.

இப்படி வட இந்தியாவில் பார்ப்பனியம் வெற்றிக்கொடி நாட்டினாலும்,அது விந்திய மலைக்கு தெற்கில் நிகழவில்லை.பிற்காலத்தில் தெற்கில் ஊடுறுவிய பார்ப்பனர்கள் ஆட்சியாளர்களிடையே பார்ப்பனியத்தை நிலைநாட்டினார்கள்.படிப்படியாக ஊடுறுவிய பார்ப்பனர்களும்,பார்ப்பனியமும் அரசுகளின் செல்வாக்கை பெற்றனர்.

வடக்கில் பூர்வகுடி மக்களை வெற்றிக்கொண்டதால், தாம் உருவாக்கிய பண்பாட்டை மக்கள் மீது வெற்றியாளர்களுக்குரிய அதிகாரத்தின் மூலம் நிர்பந்தமாக திணித்தனர்.ஆனால் அதே பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் தெற்கே ஊடுறுவல்காரர்கள் என்பதால் தமது பண்பாட்டை ஆட்சியாளர்கள் மூலமே நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகாரணமாக தமது அணுகுமுறையை அதற்கேற்ப அமைத்துக்கொண்டனர்.

எனவே தெற்கே இவர்களின் அணுகுமுறை நயவஞ்சகம்,சூழ்ச்சி,தந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.இவற்றைக்கொண்டு ஆட்சியாளர்களின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டனர்.

இவைகளினால் தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகளையும்,மாற்றங்களையும் அவைகள் தென்னிந்திய பிரதேசங்களில் ஒரே சீரான விளைவுகளை ஏற்படுத்தியதா? அல்லது அவைகளில் ஏற்றாத்தாழ்வுகள் ஏதேனும் உண்டா? அவைகள் என்னென்ன என்பதைப் பற்றி அடுத்தத்தொடரில் பார்ப்போம்…..

Wednesday, 2 May 2012

தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-5 (அண்ணாவின் பரிணாமம் ஜெயா))

சங்ககாலத்தின் இறுதிக்கட்டத்தில் ,தமிழ்ச்சமூகம் நிலபிரபுத்துவ சமூக வளர்ச்சியை நெருங்கிக்கொண்டிருந்த போது, பார்ப்பனியம் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சியாளர்களின் செல்வாக்கைப் பெற்றது.வட இந்தியாவில் பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் தமிழ்ச்சமூகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.இதனோடு தமிழ்ச்சமூகம் பார்ப்பனியத்தின் அடிப்படையில் சமூகம் நால்வருண அடிப்படையில் முதல் முறையாக பல நூறு சாதிகளாக கூறுபோடப்பட்டது.


வட இந்திய சமூகங்களைப் போன்று தமிழ்ச் சமூகம் ஆரியபார்ப்பனர்களால் வெற்றிகொள்ளப்பட்ட சமூகமல்ல.மாறாக ஆளுவோரை வென்றெடுத்து அவர்களின் மூலமே பார்ப்பனியம் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் மூலம் பார்ப்பனியம் திணிக்கப்பட்டது, ஆட்சியாளர்களின் பார்ப்பனிய மயமாக்கம் ஆகியவை அன்றைய தமிழ்ச் சமூகத்தால் துரோகமாக கருதப்பட்டதன் விளைவுதான் களப்பிரர்களின் ஆட்சியாகும்.




பார்ப்பனியத்தை சகிக்காத தமிழ்ச் சமூகம் அதை தூக்கியெறிந்து,பார்ப்பன மதத்திற்கு எதிராக சமண,பௌத்த சமயங்களை தமக்குரியதாக வரித்துக்கொண்டனர்.தமிழர்கள் ஏற்றுக்கொண்ட சமண,பௌத்த சமயங்களும் பண்பாட்டு துறையில் பார்ப்பனியத்தைசாதியத்தை - நிராகரித்தனவே அன்றி, பொருளாதாரத்தில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே ஏற்றிருந்தன.


எனவே,களப்பிர ஆட்சியாளர்களும்,சங்க காலத்தின் இறுதிக்கட்டத்தில், தமிழகத்தை  ஆண்ட மூவேந்தர்கள் மற்றும் ஏனைய குலக்குழு ஆட்சியாளர்கள் திணித்திருந்த ஆசிய சொத்துடைமை வடிவத்தையே மாற்றமின்றி ஏற்று நடைமுறைப்படுத்தினர்.


சமணமும்,பௌத்தமும் பண்பாட்டு ரீதியில் புராதன பொதுவுடைமை சமூகத்தின் மேலாண்மையின் கூறுகளையே கொண்டிருந்தன. ஆசிய சொத்துடைமை வடிவத்தில் நிலங்கள் அனைத்தும் சமூக உடைமையாக இருந்தது என்பது புராதன பொதுவுடைமைச் சமூகத்தின் கூறாகும்.ஆசிய சொத்துடைமை வடிவத்தில் அரசனின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் சமூக உடைமை போன்று தோற்றம் அளித்தாலும், உண்மையில் அது பார்ப்பனிய மேல்வருணத்தாரின் ஆதிக்கத்தையே அடிப்படையாக கொண்டது.அரசன் நால்வருணத் தருமத்திற்கு கட்டுப்பட்டவன் என்பதால் மேல்வருணத்தாரே நிலங்களின் உண்மையான உடைமையாளர்களாக விளங்கியதை இவர்கள் காணத்தவறினர்.இந்த தவறான புரிதல் காரணமாக சமூக அடித்தளமான சொத்துடைமையில் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே அவைகள் அங்கீகரித்தன.பண்பாடு என்பது சமூக அடித்தளத்தின் தன்மை,தேவைகளுகேற்பவே எழக்கூடியதாகும்.இதன் காரணமாக சமண,பௌத்த சமயங்கள் போதித்த பண்பாட்டு வடிவங்கள் சமூக அடித்தளத்திற்கு முரணாக அமைந்திருந்தது.இதன் மூலம் சமண,பௌத்த சமயங்கள் போதித்த வாழ்வியல் முறைகள் கற்பனையானதாகவும்,அகநிலை விருப்பமும் உடையதாகவே அமைந்திருந்தன.

களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான மக்களின் தேவை என்றாலும் இவர்களும் சமூக அடித்தளத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்களுக்கு உரிய அடிப்படையை கொண்டிருப்பதும்,அவைகளை வளர்த்துக்கொள்வதும் தவிர்க்கவியலாத அம்சங்களாகும்.


ஆசிய சொத்துடைமையின் அடிப்படையிலிருந்து சமூகம் ஏற்றத்தாழ்வாக வளர்வது,வளர்க்கப்படுவது என்பது தவிர்க்கவியலாத நிகழ்வுகளாகும்.


தவிர்க்க வியலாத இந்த அம்சத்திலிருந்து ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தை தழுவிக்கொள்வது என்பதும் இயல்பான செயலே ஆகும்.இதற்கு ஏற்ப சமூகம் சாதியாக கூறுபோடப்படுவது நடந்தேறுவதும் நிச்சயமான ஒரு நிகழ்வே ஆகும்.


களப்பிர ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தின் ஒரு அங்கமானதும்,சமூகம் சாதியாக வளர்ந்து நிலைபெற்றதும் போன்ற நிகழ்வுகள் களப்பிர ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்படும் நிகழ்வுக்கு அடிகோலியது.

களப்பிரர்கள் தமது ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து, இறுதி வரையிலும் ஆசிய சொத்துடைமை வடிவத்தையே கடைபிடித்து நிலைபெறச்செய்தனர்.இதன் மூலம் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் நிரந்தரமாக தடுத்து நிறுத்தினர்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த களப்பிரர்கள், தம்மை ஆட்சியாளர்களாக உயர்த்திய தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு நிரந்தர முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதன் வாயிலாக பார்ப்பனியத்துடனான போரில், தமிழர்களின் முதல் தோல்வியை தொடங்கி வைத்ததோடு, தமது அழிவையும் உறுதி செய்துகொண்டனர்.


இன்றிலிருந்து ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிலைநாட்ட, அதன் பிரதிநியாக இருந்து பாண்டியர்களும்,பல்லவர்களும், களப்பிரர்களையும்  அவர்களோடு சேர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும், அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இல்லாமல் அழித்தொழித்தனர்.


மேற்கண்டவாறு களப்பிரர்களின் அழிவுக்கு பின்னர், தந்தை பெரியாரின் காலத்தில் தான் தமிழர்களின் தன்மானத்திற்கும் ,சுயமரியாதைக்கும் பார்ப்பனியத்தால் ஏற்பட்ட இழிவுக்கு எதிராக மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டது.


ஆனால் தந்தை பெரியாரின் இந்தப் இயக்கமும் உள்முரண்பாடுகளையும்,பலவீனங்களையும் கொண்டதாகவே இருந்தது. சங்க காலத்தின் பிற்பகுதியில் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட ஆசிய சொத்துடைமை வடிவம் வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் தான் ரயத்துவாரி, ஜமீன்தாரி ஆகிய வடிவங்களாக மாற்றப்பட்டது.


ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவிய ஆசிய சொத்துடைமை வடிவம் மாற்றப்பட்டாலும், இதுவும் ஆங்கில ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தை, சுரண்டலை உறுதிப்படுத்தும் உள்ளடக்கத்தையே கொண்டிருந்தது. இந்த உள்ளடக்கம் காலனி ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாப்பதோடு, பார்ப்பனிய பண்பாட்டுக்கும் அதன் மேலாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும்அமைந்திருந்தது.

நிலங்கள் அனைத்தும் முன்பு மன்னர்களுக்கு உடைமையாய் இருந்தற்கு மாறாக, இப்போது அந்நிலங்கள் ஜமீன்தார்கள் வசம் சென்றது. இவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களின் நலன்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பனிய நலன்களுக்கும் உகந்தவர்களாக இருப்பதே இப்பொருப்பிற்கான தகுதியாக கொள்ளப்பட்டது. ஏனென்றால் பார்ப்பனியம், பார்ப்பனர்கள் மற்றும் அதற்கடுத்த மேல் சாதிகளின் நலன்களுக்கு மட்டுமல்ல, அதுவே தமதுநலன்களுக்கும் மிகச்சிறந்த கவசம் என்பதாலேயே, அதை பாதுகாக்கும் பணியையும் ஆங்கில ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.

ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான முதன்மையான அடிப்படையாக நிலமே விளங்கியது. அதோடு இப்போது நவீன தொழிற்துறையிலான வேலை வாய்ப்புகளும், அரசு எந்திரத்திலான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.


வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்திற்கு முன்பே உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மீறாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பார்ப்பனிய மேலடுக்குகளில் இருந்தவர்கள் நிலவுரிமையோடு, அரசு எந்திர வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்துறை வேலைவாய்ப்புகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டனர்.


பார்ப்பனர்களும் இவர்களை அடுத்த மேல் சாதியினரும் அரசுப் பணிகளில் எந்த அளவிற்கு ஆதிக்கம் பெற்றனரோ, அந்த அளவிற்கு தாம் காலம், காலமாக அனுபவித்து வந்த சுகபோகங்களை தக்கவைத்துக் கொண்டனர். இதனால் இவர்கள் விவசாயத்தில் இருந்தும் தம்மை படிப்படியாக விடுவித்துக் கொள்ள ஆரம்பித்தனர். இதன்படி முதலில் பார்ப்பனர்களும் இவர்களைத்  தொடர்ந்து அடுத்தடுத்த மேல் சாதியினரும் விவசாயத்தில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வெளியேற ஆரம்பித்தனர். விவசாயம் அல்லாத பிற தொழில்களே ஆட்சியாளர்களின் நலனை உள்ளடக்கியது என்பதால் விவசாயம் அவர்களால் புறக்கணிக்கப்பட்ட தொழிலாக ஆகிப்போனதையே இவ்வெளியேற்றங்கள் நிரூபித்தன.


சமூகத்தின் மேல் அடுக்குகளில் இருந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தாம் அனுபவித்து வந்த வாழ்க்கையை, அதன் தரத்தை புதிய நிலைமைகளிலும் தக்க வைத்துக்கொண்டனர். மேல் சாதியினரின் இப்போதைய புதிய வாழ்வும் சாதி அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுவதாக அமைந்தது.இந்திய சமூக அமைப்பில் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆங்கிலேயே ஆட்சியாளர்களுக்கும் இந்நடவடிக்கை அவசியமானது என்பதால் அவர்கள் இதை திறமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

1947 ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் விவசாயத்தை புறக்கணிக்கும்பார்ப்பன ஆட்சியாளர்களின் செயல் மேலும் தீவிரமானது. இது எந்தளவிற்கு ஆட்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டதோ, அந்த அளவிற்கு விவசாயத்திலிருந்து எஞ்சிய மேல் சாதியினரும் வெளியேறும் நடவடிக்கை அமைந்தது. மேல் சாதியினர் விவசாயத்தில் இருந்து வெளியேறும் நிகழ்வு எந்த அளவிற்கு நடந்தேறியதோ அந்த அளவிற்கு நிலங்கள் இப்போது சூத்திர சாதிகளின் கைகளுக்கு மாறியது.

ஆசிய சொத்துடைமை வடிவமே இந்தியாவில் சாதிகள் நிலை பெறுவதற்கு மிகச்சிறந்த வடிவமாக இருந்தது. இன்று ஆசிய சொத்துடைமை வடிவம் ஆற்றியப் பணியை நவீன தொழிற்துறை வேலைவாப்புகளும், அரசுத்துறை வேலைவாய்ப்புகளும் ஆற்றி வருகின்றன. மேற்கண்ட இரு புதிய வேலைவாய்ப்புகளுக்கான தளங்களும் சாதி அடிப்படையிலேயே உத்திரவாதம் செய்யப்படுவதால்தான் சாதிக்கான தேவை இன்னமும் மறைந்துவிடாமல் சமூகத்தில் நீடித்து நிற்கிறது. புதிய தேவைகளுக்கும், நிலைமைகளுக்கும் ஏற்ப சாதி கூர்மையாகவும், நயவஞ்சகமானதாகவும், நேர்மையற்றதாகவும் வடிவமாற்றம் அடைந்துள்ளது.


புதிய சமூக நிலைமைகளிலும் பார்ப்பனியத்தின் மேல் அடுக்குகளில் இருப்பவர்கள் தமது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கான உத்தரவாதத்தை சாதி அடிப்படையிலேயே கொண்டிருப்பதால்தான் சாதியை  புதிய நிலைமைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து பாதுகாத்து வருகின்றனர்.

தமது நயவஞ்சகமான நடவடிக்கைகள் அனைத்தையும் இப்போது அவர்கள் இட ஒதுக்கீட்டு முறையின் மூலம் மூடி மறைத்துக் கொள்கின்றனர்.

இட ஒதுக்கீட்டிற்கான அவசியத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும் இடையிலான உறவுகள் படிப்படியாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு சிறுத்துப் போய்விட்டது.


சாதி நீடிக்கும் போதே, சாதி அடிப்படையிலான சமூக இழிவுகள் மாறிவிடும் என்ற பொய்மையான தோற்றத்தை ஆளும் கும்பலும், மேல் சாதியினரும் சமூகத்தில் இன்று நிலைபெறச்செய்துள்ளனர்.

மேலே நாம் கண்ட விடயத்தில் தான் தந்தை பெரியாரின் இயக்கம் பலவீனத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே அவ்வியக்கம் உள் முரண்பாடுகளால் ஆதிக்கம் செய்யப்பட்டது. இதனால் அவ்வியக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த பார்ப்பனியத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதற்கு பதிலாக சமூக, பொருளாதார வளங்களை பங்கிட்டுக்கொள்ள, பார்ப்பன சாதியுடன் பிற மேல்சாதிகள் நடத்திய போராட்டத்தையே உள்ளடக்கமாக கொண்டிருந்தது.

இதன் காரணமாக தந்தை பெரியாரின் காலத்திலேயே,அவரின் கண்ணெதிரிலேயே அவர் தொடங்கிய இயக்கம் தோல்வியைத் தழுவியது.


தந்தை பெரியாரின் இயக்கம், பார்ப்பனிய நலன்களுக்காக அண்ணாதுரையால் காட்டிக்கொடுக்கப்பட்டு இன்று அது ஜெயலலிதாவாக பரிணாம வளர்ச்சி அடைந்து நிற்கிறது!


ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்திய மேலாண்மைக்காக டக்ளஸ் தேவானந்தா,கருணா ஆகியோரால் 
காட்டிக்கொடுக்கப்பட்டு, சிங்கள ஆட்சியாளர்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்ல அவர்களோடு சேர்த்து அவர்களின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.


தந்தைப் பெரியாரின் இயக்கத்திற்கு பின்னர்,கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமும் இந்திய மேலாண்மைக்காக-பார்ப்பனிய மேலாணமைக்கு -  கருணாநிதி,ஜெயலலிதா போன்றோரால் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

·           

    *களப்பிரர்கள் ஆட்சி அழிக்கப்பட்டது….

·          *தந்தை பெரியார் இயக்கத்தின் பின்னடைவு….
·          *ஈழப்போராட்டத்தின் பின்னடைவு.........
·          *கூடங்குளம் போராட்டத்தின் பின்னடைவு ஆகியவை

களப்பிரர்கள் ஆட்சி ஏற்படுவதற்கு காரணமான எழுச்சிக்கு பின்னர், மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் தமிழர்களின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தோல்வியும்,பின்னடைவுகளுமாகும்.


மேற்கண்ட நான்கு நிகழ்வுகளும் பார்ப்பன மேலாதிக்கத்திற்காக காட்டிக்கொடுக்கப்பட்டே அழிவையும்,பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.மொத்தத்தில் சங்க காலத்தின் பிற்பகுதியில் பார்ப்பனியத்திற்கு எதிரான எழுச்சி,வெற்றிக்கு பின்னர் தமிழ்ச் சமூகத்தின் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்துவருகின்றன.


அப்படியானால் இந்தியாவிலுள்ள ஏனைய தேசிய இனங்கள் தமது கோரிக்கைகளில் வெற்றி பெறுகின்றனவா?இல்லை.போராட்டமே இல்லாதபோது தோல்வி என்பது எப்படி ஏற்பட முடியும்?

இந்தியாவில் உள்ள தேசிய இனங்களிலேயே, தமிழ் தேசிய இனத்தைத் தவிர, ஏனைய அனைத்து தேசிய இனங்களும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டு,செரிக்கப்பட்டுவிட்டது.இதில் அவைகள் பார்ப்பனியத்தின் பிரிக்கவியலாத அங்கங்களாகிவிட்டன.

இதற்கு நேர்மாறாக அன்றிலிருந்து, இன்று வரை பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்த,எதிர்க்கும் மரபை தமிழினம் மட்டுமே கொண்டுள்ளது.


இந்த மரபிற்கான அடிப்படை தமிழ் மொழியின் தன்னிறைவான வளமும்,தமிழர்களின் செழுமையான பண்பாடும்,நாகரீகமுமே காரணமே தவிர, நவீன தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்கான உந்துதல்களில் இருந்து உருவான போராட்டங்களின் மரபல்ல.இந்த உந்துதல்கள் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படாததற்கு நிலபிரபுத்துவம், பின்தங்கிய ஆசிய சொத்துடைமை வடிவமாக பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும்,வெள்ளையர்களால் திணிக்கப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறை காலனிய ஆட்சியாளர்களின் நலன்களுக்காவும், தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டதேயாகும்.இதனால்தான் நவீன கருவிகளின் பயன்பாடு, உற்பத்தி ஆகியவை மக்களின் சிந்தனாமுறையில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.


இதன் காரணமாகவே எத்துனை முறை தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்டாலும், அது மீண்டும்,மீண்டும் சங்ககாலத்தில் இயல்பான சமூக வளர்ச்சியின் ஊடாக அடைந்த வளர்ச்சியான மொழி.பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே எழுகிறது.


இந்த வளமான பெருமிதம்தான் தமிழினத்தின் பலம் என்றாலும், இந்த பெருமிதத்தை காட்டிக்கொடுப்பவர்களும்,காட்டிக்கொடுப்பவர்களை ஏற்பவர்களும் தமிழ்ச் சமூகத்தில் பாதிக்கும் மேலாக இருப்பதுதான் நமது தோல்விகளுக்கான இருக்கிறது.


இதிலிருந்து பார்க்கும் போது, நாம் இதுவரை சந்தித்த தோல்விகள் அனைத்தும் நமது எதிரிகளின் பலத்தால் ஏற்பட்டதல்ல.இவைகள் அனைத்தும் கருங்காலிகளால் காட்டிக்கொடுத்ததனால் ஏற்பட்டவைகளேயாகும்.

சமூகத்தில் நிகழும்,நிகழ்த்தப்படும் அனைத்து நிகழ்வுகளையும் சாதியாக பார்க்கும் கண்ணோட்டமே  
தமிழ்ச்சமூகத்தில் மேலோங்கி நிற்கிறது.


எனவே தமிழ் மக்களை சமூக மாற்றத்திற்காக,வளர்ச்சிக்காக ஒருங்கிணைக்கும், ஒன்றுப்படுத்தும் காரணிகள் எதுவும் அத்துனை தெளிவானதாக இல்லை.


தமிழ்ச்சமூகத்தின் இந்த யதார்த்த நிலையை தம்மை முற்போக்கு என்றும்,புரட்சிகர சக்திகள் என்றும் கூறிக்கொள்வோர் யாரும் கணக்கிலெடுக்க தயாரில்லை,இதற்கு மாறாக தமது அகநிலை விருப்பதற்கு ஏற்ப எடுக்கும் முடிவுகளையும்,தீர்வுகளையுமே சமூகத்தின் மீது திணிக்க முயல்கின்றனர்.


இதன் காரணமாகவே தமிழ் தேசியம் பேசுவோரும்,புதிய ஜனநாயக புரட்சியை பேசுவோரும், கையடக்க சக்திகளை கூட வென்றெடுக்கவோ,வென்றெடுத்த சக்திகளை தக்க வைக்கவோ முடியாமல் தவிப்பதும்,இந்த தவிப்பு இவர்களிடையே சமூகத்திற்கு எதிரான வெறுப்பும்,ஆத்திரமுமாக மாறி பிழைப்புவாத சகதியில் மூழ்கி சமூகத்தை காட்டிக்கொடுப்பதுமாக மாறுகிறது.எனவே தமிழ்ச்சமூகத்தின் தேவை இவைகள் அல்ல.இவைகள் இதை பேசும் அமைப்புகளின் அகநிலை விருப்பமே தவிர சமூகத்தின் தேவையல்ல.மேற்கண்ட மாற்றங்களுக்கான தேவை ஏற்படும் அளவிற்கு அவைகளுக்குரிய சமூக அடித்தளம் இன்னமும் உருவாகிவிடவில்லை. எனவே இப்போதைய நிலையிலிருந்து அடுத்தக்கட்ட   சமூக வளர்ச்சிக்கான தேவை என்னவோ அதை எட்டுவதற்கான பணியைத் தொடங்குவதுதான். இப்பணி முற்றிலும் நமது சமூகத் தன்மையின் தேவையிலிருந்து எழக்கூடியதாக அமைய வேண்டும்.இந்தத் தேவை இவ்வுலகில் உள்ள ஏனைய சமூகங்கள் இதுவரை காணாத புதிய வடிவையும், தன்மையையும் கொண்டதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் நமது சமூகம் உலகில் வேறெங்கும் இல்லாத தனித்தன்மையைக் கொண்டதாகும்.இந்நிலை தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்ல மொத்தத்தில் இந்திய நாட்டிலுள்ள  அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான தன்மையாகும்.இதிலிருந்து இந்தியாவில் வாழும் அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களை  பொதுவாக ஒருங்கிணைப்பதற்கான, ஒரே சமூக அடித்தளமாக இன்றும் விளங்குவது விவசாயம் மட்டுமே!


பார்ப்பனிய படிக்கட்டில் கீழே அழுத்தப்படும் பெரும்பான்மை மக்களின் தொழிலாகவும்,இதன் காரணமாக அரசுகளால் புறக்கணிக்கப்படும் தொழிலாகவும்  விவசாயமே விளங்குகிறது.


இப்படி ஆட்சியாளர்களின் புறக்கணிப்பிற்கும்,ஒதுக்குதலுக்கும் ஆட்பட்டுள்ள விவசாயமே, நாட்டின் பெரும்பான்மை மக்களை ஒருங்கிணைக்கும் கூறாகவும் இருக்க முடியும்.


ஆகவே நமது தோல்விகளை வெற்றிகளாக மாற்ற, பெரும்பான்மை மக்களை அணிதிரட்டும் சமூக அடித்தளம் விவசாயத்தை தவிர வேறதுவும் இல்லை,இருக்கவும் முடியாது!


தொடர்புடைய கட்டுரைகள்:



 முற்றும்.