கூடங்குளம்:ஆறப்போடுஅணைந்துவிடும்…! கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா? ஆகிய இரு தலைப்புகளில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.இப்போராட்டம் அவ்வட்டார மக்களின் போராட்டமாகவும்,ஏனைய பகுதி மக்களை பொருத்தவரை வேடிக்கை பார்ப்பது,பரபரப்பான செய்தி அல்லது நாட்டின் தேவைக்கு அணுமின்சாரத்தை விட்டால் வேறு என்ன வழியிருக்கிறது, என்கிற அடிப்படையில் அணுமின்சார உற்பத்தியை ஆதரிக்கும் மெத்தப்படித்த மேதாவிகளிடம் கருத்து நிலவுகிறது.
2. கூடங்குளம்:அணுகுண்டு தயாரிக்கவா? மின்சாரம் தயாரிக்கவா?
மின்சாரம் இன்றி இனி நம்மால் வாழமுடியுமா? என்கிற அளவுக்கு நமது வாழ்நிலை மாறிவிட்டுள்ளது.மீண்டும் பழைய காலத்திற்கே திரும்பவும் முடியாது.ஏற்கனவே மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களில் முக்கிய தாதுப் பொருளான நிலக்கரியின் வளம் குறைந்து கொண்டே வருகிறது.நீர் மின்சாரம் மழைக்காலத்தில் மட்டுமே தமிழகத்தை பொருத்தவரை பலன் தரக்கூடியதாக உள்ளது.காற்றாலை மூலமான மின்சாரம் மிகவும் குறைந்த அளவிற்கே கிடைக்ககூடிய வளமாகவும் உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் அணுமின்நிலையங்கள் மூலம் தான் நமது நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை பெறமுடியும் என்பதுதான் ஆட்சியாளர்கள் மற்றும் இதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் மின்கம்பிகளின் மூலம் அனுப்பும் போது வீணாவது,தரமற்ற மின் வினியோக எந்திரங்களால் வீணாவது,மின் திருட்டு,பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் தொழிற்சாலைகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்குவது ஆகியவற்றின் மூலமும் தமிழக மின்வாரியம் பல்லாயிரம் கோடி இழப்பில் இயங்கிவருகிறது.
ரஷ்யாவின் செர்னேபில்.ஜப்பானின் புகிஷிமா அணு உலைகளின் விபத்துக்குப் பின்னர் உலகம் முழுக்கவே அணுமின்நிலையங்களை முற்றாக மூடுகிற திட்டத்தை பிரான்ஸ் உட்பட பல நாடுகள் வெளியிட்டுவருகின்றன.அதோடு மாற்று மின்உற்பத்திக்கான ஆய்வுகளை தொடங்கிவிட்டுள்ளன.சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆய்வுகளில் ஆக்கபூர்வமாக செயல் பட்டு வருகின்றன.ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ நமது அணு உலைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என மக்களின் காதுகளில் பூ சுற்றுகின்றனர்.
யுரேனியம் அணு தொழில்நுட்பத்தை விட,தோரியத்தை அடிப்படையாக கொண்ட மிகவும் முன்னேறிய தொழில்நுட்பத்தை, தமது ஆண்டை அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து கைவிட்டுவிட்டு அமெரிக்கவின் மிகவும் பின் தங்கிய,அரதப்பழசான யுரேனிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு 123 என்ற ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளது மன்மோகன்சிங் தலைமையிளான கும்பல்.உலக தோரிய இருப்பில் நமது நாட்டில்தான் 70 சதவிதம் தோரியம் உள்ளது என்பதை நாம் சிறிது நினைத்து பார்த்தாலே நமது ஆட்சியாளர்களின் தேசத்துரோகம் பளிச்சென நமக்கு புரிந்துவிடும்.யுரேனியமோ,தோரியமோ இவை இரண்டுமே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவைதான். அப்படியானால் மின் தேவைக்கு மாற்று ஏதுமில்லையா? இருக்கிறது! ஆனால் அவற்றை செயல் படுத்தும் ஆர்வமோ,ஆற்றலோ நமது தேசத்துரோக ஆட்சியாளர்களுக்கு சிறிதுமில்லை.
தற்போது ஏனோ,தானோ என்று செய்யப்படும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்,கழிவுநீர் மற்றும் கழிவுப்பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரித்தல், தற்போது பெய்யும் மழைநீரில் 90 விழுக்காட்டுக்கும் மேல் கடலில்தான் கலக்கிறது.இந்த நீர் அனைத்தையும் சேமித்து, அதன் மூலம் சிறு,சிறு நீர் மின்நிலையங்கள் மூலமும் நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் தயாரிக்க முடியும்.
மழைநீரை சேமிப்பதன் மூலம் மின் உற்பத்தி மட்டுமல்ல,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு,பாசனத்திற்காக நிலத்தடி நீரை விவசாயிகள் சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துவிடவும் முடியும்.இதோடு ஏராளமான மின்சாரத்தையும் சேமிக்க முடியும் .
முதலாளித்துவ உற்பத்தி என்பதே நுகர்பொருள் உற்பத்திதான். இதை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான பொருள் உற்பத்தியாக மாற்றுவதன் மூலமும்,சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவசமாக மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவதை தடை செய்வதன் மூலமும் மிகப்பெரிய அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மின் உற்பத்தியை புதிய,ஆபத்தற்ற தொழில்நுட்பத்தை கொண்டு செய்தல்.மின்சாரத்தை வினியோகிக்கும் போது ஏற்படும் மின் இழப்பை சரி செய்தல்,விவசாயத்திற்கு இயற்கையில் இருந்து பாசன வசதியை ஏற்படுத்துதல்,பன்னாட்டு,உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலவச,சலுகை விலையில் மின்சாரம் தருவதை நிறுத்துதல்,நுகர்பொருள் உற்பத்திற்கு மாற்றாக அத்தியாவசிய தேவைக்கான உற்பத்தியாக தொழில்துறை உற்பத்தியை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம்தான் மின்பற்றாகுறை என்ற சொல்லையே நாட்டில் இருந்து தூக்கியெறிய முடியும்.நமக்கு தேவையான மின்சாரம் அனைத்தையும் இயற்கை வளத்திற்கு குந்தகம் ஏற்படுத்தாமல்,இயற்கை வளங்களில் இருந்தே மின்சாரம் தயாரித்து,மின் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடையவும் முடியும்.
(ஜப்பான் - ஹிரோசிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி படுகொலை செய்த படங்கள்.முதல் படம் குண்டு வீச்சுக்கு முன்பு எடுக்கப்பட்டது.இரண்டாவது படம் குண்டு வீச்சுக்கு பின்பு எடுக்கப்பட்டது.)
ஆனால், இவைகளை பற்றியெல்லாம் மக்கள் விரோத ஆட்சியாளர்களான நமது ஆட்சியாளர்களிடம் நாம் ஒருபோதும் எதிர்பாக்க முடியாது.பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான புதிய சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இவைகளை சாதிக்க முடியும். அதற்கு சமூக மாற்றத்திற்காக தம்மையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுவோம்! நம்மையும் நமது எதிர்கால தலைமுறையையும் மொத்தத்தில் மனித குலத்தையே பாதுகாப்போம்!
தொடர்புடைய கட்டுரைகள்:


2 comments:
மீண்டும் போராட வேண்டிய காலத்திற்கு தள்ளப் படுவோம் என்று எண்ணுகிறேன்... பாரத பிரதமர் அணு உலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று திருவாய் நாறியுள்ளார்..
வீட்டுக்கு ஒரு மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்ட முடியிலை நம்மாள் ! சிறு சிறு நீர்த்தேக்கம் காட்றதா ? நடக்றத பேசுங்க பாஸ் !
Post a Comment