“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது”,என்பது பழமொழி. இதை நம்மில் பலரும் அறிந்திருப்போம்.ஏனென்றால் இது, இப்போதைய விவசாயத்தையும்,விவசாயிகளையும் பற்றிய தகவல் அல்ல என்பதால்! இக்காலத்திய விவசாயத்தை பற்றி பொதுவில் சமூகத்தில் பெரும்பாலோரிடம் அக்கறை இன்மையே நிலவுகிறது.அதே நேரத்தில் விவசாயத்தை பற்றிய மூடநம்பிக்கைகளே வலுவாக காணப்படுகிறது.இந்த மூடநம்பிக்கைகள் முற்றிலும் கற்பனையாக அவர்கள் மூளையில் உருவான ஒன்றல்ல. நிலவுகின்ற உண்மையான இருத்தல் ஒன்றின் தவறான அல்லது திரித்து கூறப்படும் தகவல்களின் அடிப்படையில் எழக்கூடிய ஒன்றாகும்.
இந்த அடிப்படையில் தான் இன்றைய விவசாயம் பற்றிய மூடநம்பிக்கைகளும் முளைத்துள்ளன.இவைகள் உண்மை போன்று தோன்றினாலும் முழு உண்மைகள் அல்ல;அரை உண்மைகள். முழு பொய்யை விட அரை உண்மைகள் ஆபத்தானது.இந்த ஆபத்தை பற்றி நமது சமூகத்தில் ஒரு சில தனி நபர் மற்றும் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே கவலை படக் கூடிய ஒன்றாக உள்ளது.எதிர்காலத்தில் நாமும்,நமது சமூகமும் சந்திக்க இருக்கிற, மிகமோசமான அழிவுக்கான மிகத்தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. இப்போதும் கூட நமது சமூகம் அதைப்பற்றிய எந்த அக்கறையும் இன்றி அனைத்தும் மிகச்சரியாக நடப்பதை போன்று, போலியான தோற்றத்துடன் இயங்கிகொண்டிருக்கிறது.இந்த சொரணையற்ற பண்பு தொடர்ந்து நீடிக்க நாம் அனுமதித்தோமானால், எதிர்காலத்தில் எற்படபோகும் அழிவை நாம் தடுக்க நினைத்தாலும் முடியாத சூழல் ஏற்படவாய்புள்ளது.
எனவே இனியாவது நாம்,நமது சிந்தனையையும்,செயலையும் இந்த அழிவை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும்.இதற்கு இன்றைய விவசாயத்தைப் பற்றியும்,விவசாயிகளைப் பற்றியுமான உண்மையான விவரங்களை விருப்பு,வெருப்பு இன்றி அறிந்து கொள்ள நாம் முற்படவேண்டும்.அதற்கான அடிப்படையான சில விவரங்களை இப்போது நாம் பார்ப்போம்.
1.விவசாய வருவாய்க்கு வரிவிலக்கு.
2.இலவச மின்சாரம்.
3.குறைந்த வட்டிக்கு விவசாயக்கடன்.
4.விவசாயகடன் தள்ளுபடி
இது போன்ற சில அம்சங்கள், நாட்டின் பெரும்பான்மை மக்களிடம், ஏனைய தொழில்களை காட்டிலும், விவசாயத்திற்கு மத்திய,மாநில அரசுகள் கூடுதல் முக்கியத்துவம் தருவதை போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.இந்த அம்சங்கள்தான் விவசாயம் பற்றிய மூடநம்பிக்கைகள் முளைப்பதற்கான அடிப்படைகளாக உள்ளன. இவைகள் உண்மையான நிலையை நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் முட்டுக்கட்டைகள் ஆகிவிடுகின்றன.
*எளிமையான வாழ்க்கை வாழ்வது விவசாயிகளின் இயல்பு. இதைக் காட்டி அவர்கள்
வறுமையில் உழல்வதாக கூறுவது தவறு. விவசாயிகள் வளமாகவே உள்ளனர்.
*விவசாயிகள் விவசாயத்தில் இருந்து கட்டுபடியாகாத தொழில் என்பதால்
வெளியேறுகிறார்கள் என்பது உண்மை அல்ல;சமூக வளர்ச்சிக்கு ஏற்ப
தவிற்கவியலாத ஒரு நிகழ்வாகவே இது நடைபெறுகிறது.
*விவசாயிகள் தற்கொலைகள் என்பதெல்லாம் இட்டுக்கட்டி கூறப்படும் செய்திகள்;இந்த
தற்கொலைகளுக்கு உண்மையில் வேறு காரணங்கள் உள்ளன.
*நாட்டில் எவ்வளவு தான் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் அவற்றை பயன்படுத்தி கொண்டு முன்னேறும் ஆற்றல் நமது நாட்டு விவசாயிகளுக்கு இல்லை....என்பன போன்ற அடுக்கடுக்கான தவறான செய்திகளும், குற்றசாட்டுகளும் சமூகத்தில் உலாவருகின்றன.
இப்படியான சிந்தனையும்,கருத்தோட்டமும் நெருக்கடியை தீவிரப்படுத்தவே உதவுகிறது.இது விவசாயத்தின்,விவசாயிகளின் அழிவை மட்டுமல்ல, மொத்தநாட்டின் அழிவையும் பிரதிபலிக்க கூடியதாகும்.விவசாயத்தின் அழிவு,நாட்டின் அழிவாக எற்கமறுப்பவர்கள் கீழ்காணும் புள்ளி விவரங்கள் வேறு எதைக்காட்டுகிறது? என்பதை கூறியாக வேண்டும்.
தமிழ்நாட்டின் மொத்த விளைநிலம் :3.25 கோடியே லட்சம் ஏக்கர்
இதில் பாசன வசதி பெற்ற நிலம் :0.82 லட்சம் ஏக்கர்
புன்செய் நிலம் :0.92 லட்சம் ஏக்கர்
பயன்பாடற்ற நிலம் :1.51கோடியே லட்சம் ஏக்கர்
20 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டு நிலத்தின அளவு :2.02 கோடியே லட்சம் ஏக்கர்
கடந்த 20 ஆண்டுகளில் பயன்பாடற்ற நிலமாக மாற்றப்பட்ட நிலத்தின் அளவு :0.51 லட்சம் ஏக்கர்
இப்போதைய பயன்பாடற்ற மொத்தநிலத்தின் அளவு :2.02 கோடியே லட்சம் ஏக்கர்
ஆண்டுக்கு, ஆண்டு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.அதற்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.ஆனால் இதற்கு நேரெதிராக விளைநிலத்தின் அளவும்,உணவு தானிய உற்பத்தியின் அளவும் குறைந்து கொண்டே வருவதைத்தான் மேலே கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகிறது.ஆனாலும் இன்றளவும் நாட்டின் ஆகபெரும்பான்மையான மக்களுக்கு வாழ்வு தரக்கூடிய தொழிலாக இருப்பது விவசாயமே!.
மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை பறித்து, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு வழங்கும் அநீதிக்கு எதிராக, தமது வாழ்வுரிமையை பாதுகாத்துக் கொள்ள நாட்டின் பல மாநிலங்களில் விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த அநீதிக்கு எதிரான போராட்டம்தான் மத்திய இந்தியாவில் மாவோயிஸ்டுகள் தலைமையில் நடைபெறுகின்றது.இந்திய வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத வகையில் எழுபது ஆயிரம் போராளிகள் உருவாகும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்கு மிக்க போராட்டமாக இது உருவேடுத்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ விவசாயிகள் மத்தியில் இது,நிலத்திற்கு கூடுதல் விலை கேட்கும் உணர்வாக மட்டுமே வெளிப்படுகிறது.இதன் வெளிப்பாடுகள்தான் நெடுஞ்சாலைகள் தொடங்கி கிராமப்புற மண்சாலைகள் வரை,பார்க்கும் இடமெல்லாம் விளைநிலங்கள், வீட்டுமனைகள் என்ற அறிவிப்புடன் தரிசுநிலங்களாக கிடக்கின்றன.ரியல் எஸ்டேட் லாபம்கொழிக்கும் மிகப்பெரிய தொழிலாக தமிழகத்தில் மாறியுள்ளது. ரியல் எஸ்டேட் கொள்ளை கும்பல்,வீட்டுமனை என்று சொல்லி விற்கும் இடங்கள் உண்மையில் வீடுகட்டுவதற்காக விற்கப்படுவது இலலை.வாங்குபவர்களில் பெரும்பாலோர் இவற்றை வீடுகட்டும் நோக்கத்திற்காக வாங்க வில்லை.பங்குசந்தை,தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதை போன்று,அதைவிட இரட்டிப்பு ஆதாயம் தரக்கூடியது.என்ற அடிப்படையில் தான் வீட்டுமனைகள் வாங்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விவசாய உற்பத்திக்கோ, குடியிருப்புக்கோ பயன்படாமல் ரியல் எஸ்டேட் கொள்ளையர்களுக்கு லாபத்தை அள்ளித்தரும்,சூதாட்டத்திற்கான களமாக திகழ்கிறது.இந்த சமூக விரோத கும்பல் சமூகத்தில், அரசியல்,பொருளாதாரம் ஆகியதுறைகளில் இப்போது செல்வாக்குமிக்கவர்களாகவும் திகழ்கிறார்கள்.இவர்களோடு அரசியல்வாதிகள்,முன்னாள், இன்னாள் அரசுஅதிகாரிகள்,சினிமாக்காரகள் ஆகியோர்,தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, பாதுகாப்பாக நிலத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.இவர்கள் ஒவ்வொரும் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வாங்கி பயன்படுத்தாமல் தரிசாக போட்டு வைத்துள்ளனர்.தாங்கள் வேறு வகையில் சம்பாதிக்கும் பணத்தை,விவசாயத்தில் சம்பாதித்ததாக காட்டி வரிஏய்ப்பு செய்து வருகின்றனர்.அதோடு தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளிலும்.தேசிய மயமாக்கப்பட்டவங்கிகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் விவசாயகடனாக பெறுகின்றனர்.உண்மையில் இவர்கள்,தான் விவசாய வருவாய்க்கான வரிவிலக்குகளையும்,விவசாய கடன் தள்ளுபடியும் பெறுகின்றனர்! இவர்கள் கொடுக்கும் பொய்யான கணக்குகளின் அடிப்படையில் தான் சராசரி விளைச்சலின் அளவும்,விவசாய லாபத்தின் அளவும் அரசால் தீர்மானிக்கப்படுகிறது.
இப்போதைக்கு விளைநிலங்கள் இவர்களுக்கு,மேலே கண்டவகையில் பயன்பட்டுவருவதோடு இவர்களின் நோக்கம் நிறைவடைந்து விடவில்லை.எதிர்காலத்தில் இந்த விளைநிலங்களை உள்நாட்டு நாட்டு,வெளிநாட்டு முதலாளிகளுக்கு கைமாறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இப்போதே சிலர் முதலாளிகளின் பினாமிகளாகவும் இருந்து வருகின்றனர்.
இவைகள் அனைத்துமே, நமது கண்முன்னாலேயே நடந்தாலும்,இவைகள் எதுவுமே தமக்கு தொடர்பில்லாத விவகாரங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.இப்படி இவர்கள் கருதுவதற்கு,இன்றைய ஏகாதிபத்தியசீரழிவு பண்பாடு மற்றும் பார்ப்பனிய பண்பாடு ஆகிய இரண்டும் இணைந்து ஏற்படுத்தும் சிந்தனா முறையும் இதனடிப்படையிலான வாழ்க்கையுமே காரணங்களாக உள்ளன.
ஆகவே நாம் இன்றைய இந்திய,தமிழக விவசாயிகளின் உண்மையான நிலைமையை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் ”உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கும் மீறாது”,என்ற காலத்தில் இருந்து தொடங்கினால் தான் மேலே கண்டுள்ள காரணங்களுக்கான அடிப்படைகளையும்,இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்.இதை பற்றி நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்....

0 comments:
Post a Comment