மது குடிக்கலாமா, கூடாதா என்பதைப் பற்றி தந்தை பெரியாரின் நிலைப்பாட்டைப் பற்றி சென்றத் தொடரில் பார்த்தோம்.
மதுவினால் சமூகமும்,உழைக்கும் மக்களும் சந்திக்கும் தீமைகளைப்பற்றி மிக ஆழமான புரிதல் கொண்டிருந்த தந்தைப் பெரியார், அது சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது இறுதி மூச்சு வரை போராடினார்.மதுவை மது விலக்கினால் ஒழித்துவிட முடியாது. ஏனென்றால் மதுவிற்கு அடிமையானவர்கள் அதை விட்டுவிட விரும்பினாலும் அவர்களின் உடல் அதைச்செய்வதற்கு அனுமதிப்பதில்லை.
ஏனெனில் மது குடியர்களின் உடலை தனக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.இப்படி மதுவுக்கு அடிமையான உடல் அவன் உள்ளத்தையும் அடிமைப்படுத்தி விடுகிறது.குடியர்களின் இந்த அவல நிலையை மது விலக்கு கணக்கில் கொள்ளாமல் மறுக்கிறது.
இதனால் குடிகாரர்கள் எப்படியாவது குடிப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது.குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக்கும்பல் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது கல்லாவை நிரப்பிக்கொள்கிறது.
குடியர்களின் இந்த உளவியலை சமூக விரோதக் கும்பலே புரிந்துகொள்ளும் போது அரசுக்கு புரியாதா? புரியும்.புரிந்தேதான் குடியர்களின் தேவையை ஒரே அடியாக மறுத்து அதன் மூலம் சமூக விரோதிகள் ஆதாயம் அடைய வழியை திறந்துவிடுகிறது.இதன் மூலம் அரசின் நோக்கம் நிறைவேறுவதோடு, அதன் இன்னொரு அங்கமான சமூக விரோதக் கும்பலின் நலனையும் நிறைவு செய்கிறது.
அதாவது நாட்டின் பெரும்பான்மை மக்களை குடியர்களாக ஆக்குவதன் மூலம் அவர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை,போராடுவதை தவிர்த்து தனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது.அதே நேரத்தில் தனது இந்த நோக்கத்தின் நடைமுறையாளர்களாக செயல்படும் சமூக விரோதக் கும்பலுக்கு கூலியாக மதுவின் ஆதாயத்தை தருகிறது.இப்படி மதுவின் மூலம் பெரும் ஆதாயம் அடையும் சமூக விரோதக் கும்பலை நாளடைவில் அரசியலில் பங்கேற்க வைத்து, அவர்களை முன்னணி அரசியல்
தலைவர்களாகவும்,ஆட்சியாளர்களாகவும் உருவாக்கி அரசுக்கும்,சமூக விரோதக் கும்பலுக்குமான இடைவெளியை குறைத்து விடுகிறது.
இதனால் தான் நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை.இதை கோட்பாட்டு ரீதியாக வரையறுத்து தந்தை பெரியார் அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும்,இதை உள்ளடக்கிய தீர்வையே முன் வைக்கிறார்.
நிலவுகிற சமூக அமைப்பில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்பதையும் குடியர்களை ஒரே அடியாய் பட்டினி போடாமல் படிப்படியாக அதிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி என்பதை பற்றிய வழிமுறையை அரசுக்கு பரிந்துரைக்கிறார்.
எந்த ஒரு நிலையிலும் குடிப்பதை நியாயப்படுத்தாமல், குடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை தொய்வில்லாமல் பிரச்சாரம் செய்த அதே நேரத்தில், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறையை தெளிவாக வரையறுத்து கூறுகிறார்.
எனவே மது அருந்தலாமா, கூடாதா என்பதைப்பற்றி நாம் புதியதொரு நிலைப்பாட்டை, வழிமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை.நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கடைபிடித்த வழிமுறையை கோட்பாடாக வரையறுத்து புரிந்துகொள்வதும்.அதை மேலும் செம்மைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுதான்.
இப்போது மீண்டும் ஒருமுறை நமது தந்தையின் பாதையையும், தம்மை தமிழகத்தின் புரட்சியாளர்கள் என்று தமக்குத்தாமே எழுதிவைத்துக்கொண்டு திரியும் கும்பலின் மது குடிப்பது பற்றிய வரையறுப்பையும் மீண்டும் ஒரு முறை ஒப்பிட்டு பார்ப்போம்.
“நம்மை பொருத்த வரையில் கள்,சராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுதைவிட மதுவருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.
“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக்கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோறும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும்படியாக செய்துவிட வேண்டும்”. (தந்தை பெரியார்)
”கடின உழைப்பாளர்கள் குடிப்பதில் தவறில்லை”.
”அதே போல என்றாவது ஒருநாள் குடிப்பதும் பிரச்சனையில்லை,ஆனால் இங்கும் கூட காரம் குறைந்த மது வகைகளையே குடிப்பதே நமது நாட்டிற்கு பொருத்தமாக இருக்கும்”.(தமிழக புரட்சியாளர்கள்)
மேற்கண்ட இரண்டு நிலைப்பாடுகளில் எது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உயர்த்திப் பிடிக்கிறது.என்பதை புரிந்துகொள்வதற்கு தனித்த திறமை எதுவும் தேவையில்லை.
தந்தை பெரியார் தவறியும் குடியை நியாயப்படுத்தவில்லை,ஆதரிக்கவில்லை.
ஆனால் தம்மை உலக புரட்சிக்கே வழிகாட்டி என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தக் கும்பலோ குடியை நியாயப்படுத்துகிறது.கடின உழைப்பாளர்கள் குடிப்பதை ஆதரிக்கிறது.அதோடு கடின உழைப்பாளர்கள் என்று இந்த கும்பலின் வரையறுப்பையும் கீழே தருகிறோம்.
“மறுகாலனியாக்கம்,கடும் உழைப்பு நிறைந்த உதிரித்தொழிலையும்,அதிக பணிச்சுமையையும், வீடு,குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தி இருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது”,என்கிறது.
குடி,உழைப்பாளிகளை அதிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக உருவாக்கப்படும் உழைப்பாளிகளை எப்படி தனக்கு ஆட்படுத்துகிறது என்பதை வரையறுக்கும் இவர்கள், உள்ளூரிலேயே உள்ள கடின உழைப்பாளர்களையும், கடின உழைப்பில் இல்லாதவர்களையும் வளைத்துவிடும் உளவியலைப்பற்றி என்ன சொல்லப்போகிறார்கள்?
கடின உழைப்பாளர்கள் குடியின் பிடியில் சிக்கிக்கொள்வதற்கான உளவியல் காரணத்தை வரையறுப்பது என்பது அவசியம் என்பதை நாம் மறுக்கவில்லை.ஆனால் இப்படி வரையறுப்பது குடியின் பிடியில் இருந்து குடியர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளை,உத்தியை உருவாக்குவதற்கா? அல்லது அதை நியாயப்படுத்துவதற்கா? என்பதுதான் நமது விவாதத்திற்குரிய பொருளாகும்.
தந்தை பெரியார் அவர்கள்,அரசு திட்டமிட்டே மக்களை குடியர்களாக ஆக்கியது என்பதை வரையறுத்து அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழி முறைகளைப்பற்றி தெளிவுப்படுத்துகிறார்.
ஆனால் தம்மை ‘புரட்சியாளர்கள்’ என்று கூறிக்கொள்ளும் இந்தக் கும்பலோ உழைப்பாளிகளின் ஒரு பிரிவினர் குடியின் பிடிக்குள் சிக்கிக்கொள்வதற்கான காரணங்களை வறையறுத்துவிட்டு அதிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை கூறாமல் கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம், என்றாவது ஒரு நாள் குடிப்பதில் பிரச்சனையில்லை என்று குடிப்பதை அங்கீகரித்து, நியாயப்படுத்துகிறது.
கடின உழைப்பாளர்கள் குடிக்கலாம் என்றால் கடின உழைப்பாளர்கள் என்று இவர்கள் கூறும் உழைப்பாளர்கள் மட்டுமல்ல மொத்த கடின உழைப்பாளர்களும் அதாவது விவசாயக்கூலிகள்,சிறு,குறு விவசாயிகள் உள்ளடக்கி நாட்டில் உள்ள அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.
சமூகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பெருபான்மையினர் குடிக்கலாம் என்று ஒரு அமைப்பு வரையறுக்குமானால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பு தன்னை பாட்டாளிவர்க்க அமைப்பு என்று கூறுக்கொள்ள முடியுமா?அதற்குரிய தகுதி இப்படி வரையறுக்கும் ஒரு அமைப்புக்கு எள் முனை அளவாவது இருக்கிறதா?
எப்போதாவது குடிப்பதில் பிரச்சனையில்லை என்பதற்கும்,குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று மது பாட்டிலில் எழுதிவைத்துக்கொண்டே மதுவை விற்கும் அரசின் – முதலாளிகளின் நயவஞ்சக செயல்பாட்டிற்கும் இதற்கு என்ன வேறுபாடு உள்ளது.இவை இரண்டும் இரு வெவ்வேறான நிலைபாடுகள் அல்ல.மதுவினால் ஆதாயம் அடையும் இருவேறு பிரிவினரின் நிலைபாடுகள்தான் மேற்கண்ட இரண்டுமே.
எப்போதாவது குடிப்பது என்பது விதி விலக்கானவர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும்.குடிப்பது என்பது மனித உயிர்களின் வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையாக இல்லாத போது,அது பெரும்பாலும் மனிதர்கள் அன்றாடம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல்,துன்பம் ஆகியவற்றை சிறிது நேரம் மறப்பதற்கும்தான் மதுவை தேர்வு செய்கிறார்கள்.மது மேற்கண்ட காரணங்களுக்காக அல்லாது ஒரு வகையான இன்பத்திற்காக குடிப்பவர்கள் விதிவிலக்கானவர்கள் மட்டுமே.
ஏனென்றால் மேற்கண்ட துன்பங்களும்,மன உளைச்சல்களும் மனிதர்களுக்கு ஏற்படுவது நிலவுக்கிற சமூக அமைப்பில் தவிர்க்கவியலாத விதியாகும்.இந்த விதிக்கு உட்படாதவர்கள் விதி விலக்கானவர்கள் மட்டுமே இருக்க முடியும்.எனவே மதுவை ஒருவிதமான இன்பத்திற்காக அருந்துபவர்களும் இவர்கள்தான்.
எனவே பெரும்பான்மையானோர் இன்றைய சமூக வாழ்வில் ஆயிரம், ஆயிரம் வழிகளில் மேற்கண்ட மன உளைச்சல்களுக்கும்,சங்கடங்களுக்கும் ஆட்படுவது என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிட்டது.எனவே இதுதான் சமூக வாழ்வாக நிலவும் சூழலில், எப்போதாவது ஒருமுறை குடிப்பது என்பது சாத்தியமேயில்லை.ஒரு முறை குடித்துவிட்டால் அப்படி குடிப்பவர்கள் அதை மீண்டும்,மீண்டும் செய்வதற்குரிய சமூக அடித்தளமே இப்போது நிலவுவதால் எப்போதாவது குடிப்பவர்கள் நிச்சயம் அடிக்கடி குடிப்பவர்களாகத்தான் மாறுவார்கள்.
மதுவினால் யார் ஆதாயம் அடைகிறார்களோ அவர்கள்தான் மக்களிடையே மது அருந்துவதற்குரிய சமூக உளவியலையும் உருவாக்குகிறார்கள்.
குடிப்பதற்கான பழி குடிகாரர்கள் மீது போடப்பட்டாலும், தாம் குடிப்பதற்குரிய சமூக அடிப்படையை தாமே உருவாக்கிக்கொள்வதில்லை.அதை மதுவினால் ஆதாயம் அடையும் கும்பலே மிகவும் நயவஞ்சகமான முறையில் திட்டமிட்டு உருவாக்குகிறது.இப்படி உருவாக்கபடும் இந்த நயவஞ்சக சமூக அடிப்படை மொத்த சமூகத்தின் மீதும் திணிக்கப்படுகிறது.அதுவும் மக்களால் விரும்பி ஏற்கும் வகையில் அதன் செயல்பாடு அமைக்கபடுகிறது.
இந்த நயவஞ்சக முறையை உருவாக்குபவர்களும், சமூகத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களும் ஆக இவ்விரு பிரிவினர் மட்டுமே இதை அறிவர்.
இதனால் ஆதாயம் அடையக்கூடியவர்களான- மது உற்பத்தியாளர்கள்-ஆட்சியாளர்கள்- இவர்களிடம் அண்டி பிழைப்பவர்கள்-மட்டுமே குடிப்பதை அங்கீகரிக்கவும், நியாயப்படுத்தவும் முடியும்.
இரண்டாவது பிரிவினரான பொருள்முதல்வாதிகள் குடிப்பதற்கான சமூக இயங்கியலை வரையறுத்து,அதை களைவதற்கான வழிமுறைகளை மட்டுமே
பரிந்துரைக்கவும்,நடைமுறைப்படுத்தவும் முடியும்.
மேலே கண்ட இரு தரப்பினரில் தந்தை பெரியார் அவர்கள் பொருள்முதல்வாதம் என்ற சமூக விஞ்ஞானத்தை அறிந்திராவிட்டாலும் தமிழ் மக்கள் மீது தமக்கிருந்த காதலால் அவர்களின் நலன் என்ற வகையில் ஒரு பொருள்முதல்வாதியின் பாத்திரத்தை வகித்துள்ளார்.
ஆனால் ‘தமிழக புரட்சியாளர்கள்’ தம்மை பொருள்முதல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்கள் மதுவினால் ஆதாயம் அடையக்கூடியவர்களிடம் அண்டிப்பிழைக்கும் கும்பல் என்பதை தமது நிலைப்பாட்டின் மூலம் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது.
மேலும் இந்தக் கும்பல் முதலாவது பிரிவில் இருப்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு உதராணத்தையும் பார்ப்போம்.ஒரு மனிதனின் உயிர் பறிபோவதற்கு அரளி விதையை சாப்பிட்டாலும்,பாலிடாயிலை குடித்தாலும்,கத்தியை பயன்படுத்தினாலும்,துப்பாக்கியால் சுட்டாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான்.
நமது மரபு என்பதற்காக சாவதற்கு அரளிவிதையையும்,கத்தியையும், ஒருவன் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியுமா? அல்லது அதை பரிந்துரைக்கத்தான் முடியுமா?
உடல் வலியை போக்குவதற்கான வலி நிவாரணியாக நமது மரபான கொல்லை உயர்த்தி பிடித்தால் அதை நாம் வரவேற்கலாம்,பாராட்டலாம். ஆனால் அதற்கு மாறாக பாலிடாயிலை விட நஞ்சு குறைவு என்பதற்காக சாவதற்கு அரளி விதையை நமது மரபு என்று ஒருவர் பரிந்துரைப்பதற்கு உரிமை ஏதேனும் உண்டா? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியவர்கள் யார்?
கள் நமது மரபு என்று இந்தக் கும்பல் கூறுவது குடியை நியாயப்படுத்தும் செயல் மட்டுமல்ல. மரபு என்ற நமது பண்பாட்டை,நாகரிகத்தை ,விஞ்ஞான கண்டுபிடிப்புகளை கொச்சைப்படுத்தும் செயலுமாகும்.
இந்தக் கும்பல் யார் என்பதையும்,இந்த கும்பலின் நோக்கம் என்ன என்பதையும் அடுத்தத் தொடரில் பார்ப்போம்!.
தொடரும்.............
தொடர்புடைய கட்டுரைகள்:

0 comments:
Post a Comment