வடவாடி தாழ்த்தப்பட்ட மக்கள் 27.05.2010 அன்று விருத்தாசலம்-உளுந்துர்பேட்டை சாலையில் மாலை 3 மணியளவில் திடீர் சாலை மறியல் செய்தார்கள். இதைத் தடுக்கப்போன காவல் துறை உதவிஆய்வாளர் கல்லால் தாக்கப்பட்டார், மண்டை உடைந்தது என்று தொலைக்காட்சிகளிலும்,பத்திரிக்கைகளிலும் செய்தி வந்தது. நாங்கள் விசாரிக்க சென்றோம்.
நாங்கள் பேருந்தில் செல்லும் போது அருகிலிருந்த பயணியிடம் நடந்த சம்பவத்தை பற்றி பேச்சு கொடுத்தோம்.”அந்த சம்பவம் நடந்த போது நான் அங்கு இல்லை. ஆனால் காலனிக்காரர்கள் செய்வது அநியாயம். ஒன்னேகால் கோடி ரூபாய் கொடுத்து ரியல் எஸ்டேட் முதலாளி நிலத்தை வாங்கியுள்ளார்.(இவர் வாங்கிய நிலத்தில் ஒன்றறை ஏக்கர் மட்டுமே தனியாரிடம் வாங்கியது. மீதி 5.23 ஏக்கர் தரிசு நிலம்) அந்த இடத்தை இவர்கள் தங்களுக்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். இந்த நிலம் உள்ளுர் மற்றும் பக்கத்து ஊர் படையாட்சிகளிடம் இருந்த வரை, இவர்கள் அருகில்கூட வரவில்லை. இப்போது வெளியூர்காரர் வாங்கி அந்த இடத்தை வீட்டு மனைகளாக மாற்றும் போது தகராறு செய்கிறார்கள். அரசாங்க இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என்று சாலை மறியலும் செய்து போலீஸ் எஸ்.ஐ மண்டையை உடைத்து விட்டனர். இவர்களை அரசாங்கம் சும்மாவிடாது. ரியல் எஸ்டேட் முதலாளியும் சாதாரன ஆளில்லை. அவர் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ- வுக்கு சொந்தக்காரர், பெரிய கோடீஸ்வரர். அவர்களை, இவர்களால் எதுவுமே செய்ய முடியாது”, என்று அந்த சம்பவத்தை பற்றி எங்கள் அருகிலிருந்தவர் கூறினார்.
பின்னர் நாங்கள் ஊருக்குள் சென்று தாழ்த்தப்பட்ட மக்களிடமும்,முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும்,மணியமுமாக இருந்த திரு.சிவசங்கரன் மற்றும் பலரிடம் விசாரித்தோம். அந்த இடத்தில் 5.23 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை சக்கரவர்த்தி என்பவர் அனுபவித்து வந்தார். இதில் 3.35 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடியிருக்க 1982-ல் இவர் எழுதி தந்துள்ளார்.எஞ்சிய நிலத்தை இவரின் மகன்கள் செராமிக் கம்பெனி முதலாளியிடம் விற்றுவிட்டனர்.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சக்கரவர்த்தி படையாட்சி எழுதி தந்த 3.35 ஏக்கர் நிலத்தை பக்கத்து ஊர் எஞ்சினியர் ஒருவர் அதிகாரிகளின் ஆசியால் கைப்பற்ற முனைந்துள்ளார். இந்த நேரத்தில்தான் சக்கரவர்த்தி அந்த நிலத்தை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எழுதி தந்துள்ளார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை போன்று தாழ்த்தப்பட்ட மக்கள் இஞ்சினியரோடு மோதி தமக்கு கிடைத்த நிலத்தை தக்க வைத்துக் கொள்ளவில்லை. இதனால் இந்த நிலம் இஞ்சினியரின் கைக்கு மாறியது.
தாழ்த்தப்பட்ட மக்களை, வருவாய் துறை அதிகாரிகளின் செயல்தான் போராடாமல் தடுத்து விட்டது.பெரியவடவாடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்களில் நாற்பத்து ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் பட்டா வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தங்களுக்கு இடையே பிளவை உருவாக்குவதற்கான சதி என்பதை புரிந்து கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள்,கடந்த இருபத்து எட்டு ஆண்டுகளாக,தங்கள் அனைவருக்கும். அந்த இடத்தை இலவச மனைபட்டா வழங்குமாறு அரசிடம் கோரி வருகின்றனர்.இதற்கு இடையே அந்த தரிசு நிலம் ஆறு பேரிடம் கைமாறி உள்ளது.தற்போது இந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள ரியல் எஸ்டேட் கொள்ளையனுக்கு முன்பு இந்த இடம் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இரு ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
இப்போது திடீரென ரியல் எஸ்டேட் கொள்ளையன் கைகளுக்கு நிலம் கைமாறி உள்ளது.ரியல் எஸ்டேட் கொள்ளையன் தரிசு நிலத்திற்கு பின்புறம் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி, அதோடு சேர்த்து தரிசு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளான். இந்த செய்தியை பெரியவடவாடி தாழ்த்தப்பட்ட மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் 27.05.2010 அன்று காலை நேரில் தெரிவித்து உள்ளனர். இதை கேட்ட கோட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை அழைத்து குறிப்பிட்ட இடத்தை அளந்து,அந்த இடம் தரிசு நிலமாக இருந்தால்,அந்த நிலத்தை சமப்படுத்தும் இயந்திரத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்திரவிட்டுள்ளார். இதன்படி அந்த இடத்திற்கு சென்ற இரு அலுவலர்களுக்கும், எங்கிருந்தோ செல்போனில் தகவலும்,நேரிடையாக கவரும் வர, இருவரும் நிலத்தை அளப்பதை நிறுத்தி விட்டு கிளம்பியுள்ளனர்.ஏனென்று கேட்ட தாழ்த்தபட்ட மக்களிடம் இருவரும் “உங்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை”, என்று திமிராக பேசியுள்ளனர்.இதன்பிறகுதான் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த சாலையில் சிறுத்தை கொடி கட்டிய ஐந்து டாடாசுமோக்களிலும், காங்கிரஸ் கொடி கட்டிய இரண்டு கார்களில் அடியாட்களை சிதம்பரத்தில் இருந்து ரியல் எஸ்டேட் கொள்ளையன் அழைத்து வந்திருக்கிறான். தாழ்த்தபட்ட மக்களின் சாலைமறியல் போராட்டத்தின் வெப்பத்தை தாளமுடியாமல் விடுதலை சிறுத்தைகளின் அடியாட்கள் அனைவரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.இதன்பிறகுதான் அதிகாரிகள் வருகை பேச்சுவார்த்தை,போலீசு மிரட்டல்,மண்டைஉடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
எங்களோடு பேசிய பேருந்து பயணி மட்டுமல்ல,உள்ளுர் மற்றும் பக்கத்து ஊர் ஆதிக்க சாதியினரும்,பிரதான சாலைக்கு அருகில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியேருவதை விரும்பவில்லை. இதனால் தான், இவர்கள் அனைவரும் ரியல் எஸ்டேட் கொள்ளையனை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். விதிவிலக்காக பெரியவடவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. சிவசங்கரன் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களை ஆதரிக்கிறார்.இதனால் இவர் மீதும் போலீஸ் பொய்வழக்கு போட்டுள்ளது. பெரியவடவாடியில் அரசின் தரிசு நிலத்தை, தான் ஆக்கிரமிப்பதற்கு அரசு அதிகாரிகளின் அதிகார பலத்தை பணத்தின் மூலமும்,ஆதிக்க சாதியினரின் ஆதரவை சாதிவெறி என்ற தார்மீக பலத்தின் மூலமும் ரியல் எஸ்டேட் கொள்ளையன் தேவராஜ் பெற்றுள்ளான். இப்படி ஆதிக்க சாதிகள் ,அதிகாரிகள்,சிறுத்தைகளின் அடியாட்கள், ரியல் எஸ்டேட் கொள்ளையன் ஆகியோர் கொள்கை கூட்டணி அமைத்துக்கொண்டு, பெரியவடவாடி தாழ்த்தப்பட்ட மக்களை தனிமைப்படுத்தி தோற்கடிக்க முயலுகிறார்கள். இம்மக்களுக்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவு அளிப்பது அவசர,அவசிய தேவையாகும்!
திருப்பெயர்: ஏரிக்கரையின் கீழ்புறம், ஆதிக்க சாதி குடியிருப்பை ஒட்டி, அருள்மிகு சேவியப்பர் குல தெய்வக்கோயிலில் பளபளக்கும் வண்ணங்களில், நூறு பிரம்மாண்ட சாமிசிலைகள் மற்றும் குதிரைகள்,நாய்கள்,பாம்புகள்,.......! இவைகளுக்கு சற்று தூரத்தில் கழுத்தில் தமுக்கு மேளம் அடிக்கும் வெட்டியான்(பறையன்) சிலை தனியே..........! இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான கோயில் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?! ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். இதுமட்டுமா இன்னும் கேளுங்கள். 101 கோழிகள்,108 ஆடுகள்,250 மொட்டைகள்,350 பொங்கல் என கோலாகலமாக மே 24-ம் தேதி தாழ்த்தப்பட்ட மக்கள், தமது குல தெய்வத்திற்கு பார்ப்பானை வைத்து குடமுழுக்கு செய்துள்ளனர்!
சாலை அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வைக்க முயலும் உண்டியலும் ,சிலையும்
இந்தக்கோவில் சாலையிலிருந்து, ஏரிக்கரை வரை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பரந்து, விரிந்து கிடந்தாலும்,இதில் பாதி வரைதான் நாம் மேலே விவரித்துள்ள கோவில் அமைந்துள்ளது.குடமுழுக்கை ஒட்டி சாலைக்கு அருகே புதிதாக ஒரு உண்டியலையும்,அதை காவல் காக்க கையில் துப்பாக்கியுடன் ஒரு போலீஸ் சிலையையும் வைப்பதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் முயன்றுள்ளனர்.இந்த இடத்தில் இவற்றை வைக்ககூடாது என்று அவ்வூரின் ஆதிக்கசாதி குறும்பக்கவுண்டர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.இப்போது இதை மீறி உண்டியல் வைத்தால், குடமுழுக்குக்கு இடையூறு ஏற்படும். இதனால் குடமுழுக்கு முடிந்தபின் உண்டியலை வைக்க தாழ்த்தப்பட்ட மக்கள் முடிவு செய்துள்ளனர்.அதன்படி 28-05.2010, அன்று போலீஸ் சிலையை பாலித்தின் சாக்கால் மூடிவிட்டு உண்டியலை வைத்துள்ளனர்.இதை ஆதிக்க சாதியினர் எதிர்க்கவே இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் நடந்து, கைகலப்பாகியுள்ளது. இதை தடுப்பதற்கு பத்து போலீசும் வந்துள்ளது.வந்த போலீஸ் நமக்கேன் வம்பு என,சண்டையிடும் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க,ஆதிக்க சாதி பெண்கள் தமது வீட்டுமாடிகளிலிருந்து வீசிய மிளாகாய் தூள்,கற்கள் தாழ்த்தப்பட்டவர்களின் கண்களையும்,மண்டைகளை மட்டுமல்ல ஆதிக்க சாதி,மற்றும் போலீசையும் பதம்பார்த்துள்ளது. பின்னர் நூறு நாள் வேலைக்கு சென்ற ஆதிக்க சாதியினர்,கையில் மண்வெட்டி,கடப்பாறையுடன் களமிறங்க, தாக்குப்பிடிக்கமுடியாத தாழ்த்தப்பட்ட மக்கள் பின்வாங்கியுள்ளனர். இவைகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னர், திபுதிபுவென்று வந்த போலீசு இருதரப்பிலும் பன்னிரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
“சாலை அருகே போலீசு சிலையும் ,உண்டியலும் வைத்தால் அவற்றை பார்த்து எங்கள் பெண்கள் பயப்படுவார்கள், என்பதால்தான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி அவர்களுக்கும், எங்களுக்கும் வேறு எந்த முரண்பாடும் கிடையாது. அப்படி நாங்கள் நினைத்திருந்தால் இந்த கோயிலுக்கு இருபது ஆயிரம் ரூபாய் தந்திருப்போமா”?,என்று ஆதிக்கசாதியினர் தங்களின் நிலை யை கூறினர்.
“எங்க ஊரு பறையனுவ இந்த ஒரு விசயத்திலதாங்க இப்படி மோசமா நடந்துகிட்டானுவ; மத்தபடி அவனுவ எவ்வளவு தான் படிச்சிட்டு வேலையில இருந்தாலும் என்னல்லாம் பார்த்தா சிகரெட் புடிச்சிகிட்டிருந்தாலும், அத அப்படியே தூக்கி போட்ருவானுவ,உட்கார்ந்திருந்தாலும் எந்திருச்சி நிப்பானுவ! ஆனாலுங்க அதுல பத்துபய மரியாதை கெட்டபய இருக்கத்தான் செய்றானுவ. இவனுவலாலதாங்க இம்மாபெரிய தகராறு”, என்று தாழ்த்தப்பட்டவர்களோடு தங்களுக்குள்ள முரண்பாடற்ற(!) உறவைப்பற்றிய ஆதிக்க சாதி முக்கிய பிரமுகரின் வாக்குமூலம்தான் இது.
திருப்பெயர் ஆதிக்கசாதியினர் மட்டுமல்ல இந்தியா முழுக்க உள்ள அனைத்து ஆதிக்க சாதியினரும், தாழ்த்தப்பட்டோர் தங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதைத்தான், முரண்பாடற்ற உறவு என்று சித்தரிக்கிறார்கள். எப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த கட்டுப்பாட்டை மீற நினைக்கிறார்களோ,மீறுகிறார்களோ அப்போதெல்லாம் அதை அடக்குவதற்குத்தான் தாழ்த்தப்பட்டோர் மீது ஆதிக்கசாதி வெறியர்கள் வன்முறையை திணிக்கிறார்கள்.
இந்தியாவின் எந்தவொரு கிராமத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்சாதிகளின் குடியிருப்பு பகுதிகளில் குடியிருக்கவே முடியாது.
தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவுதான் பெரும்பான்மையாக இருந்தாலும்,கல்வி,பெருளாதாரத்தில்,உயர்ந்திருந்தாலும், எந்தவொரு கிராமத்திலும் ஆதிக்கசாதியினர் மிகக்குறைவாக இருந்தாலும்,தாழ்த்தப்பட்டமக்களை ஒவ்வெரு வினாடியும் நேரிடையாகவோ,மறைமுகமாகவோ இழிவுபடுத்துவதை தமது இயல்பான செயலாக செய்து வருகின்றனர்.
காலத்திற்கு ஏற்ப தவிர்க்கவியலாமல் ஆதிக்கசாதியினர் தமது சாதிவெறியின்,வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் சிந்தனை ரீதியாக தங்களை எப்போதுமே மேலானவர்களாகவே கருதுகிறார்கள்.ஆதிக்க சாதிகள் தமது ஆதிக்கசாதிவெறியின் வடிவத்தை மாற்றிக்கொள்வதையே தங்களிடம் சாதி வெறி இல்லை என்பதற்கான ஆதாரமாக கூறி பீற்றிக்கெள்கிறார்கள்.
பேருந்துகளில்,ரயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுடன் ஒன்றாக அமர்ந்து செல்வது.......
நகர்புற உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது,தொழிற்சாலைகளில் ஒன்றாக வேலைசெய்வது...........
இருசக்கர வாகனங்களில் தாழ்த்தப்பட்டோர் செல்வது, செருப்பணிந்து ஊருக்குள் நடப்பது,பள்ளி,கல்லுரிகளில்,தங்களது பிள்ளைகளுடன் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சேர்ந்து படிப்பது......
போன்றவற்றை காட்டி “இவை எல்லாம் தாங்களே விரும்பி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய உரிமைகள் என்று என்பது போன்ற மாயயை உருவாக்குகின்றனர். இப்போதெல்லாம் நாங்கள் சாதிபார்ப்பதே இல்லை”,என்றும் சாதிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவிக்கும் மேற்கண்ட உரிமைகள் அனைத்தையும் தமது ரத்தத்தையும்,உயிரையும் கொடுத்து போராடி பெற்றவைகள். மேற்கண்ட உரிமைகள் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போட்ட பிச்சையல்ல.தாங்கள் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதைத்தான் ஆதிக்கசாதியினரும்,அரசும் கலவரம் என்று கூறி,தமது ஆதிக்க சாதிவெறியையும்,தாழ்த்தப்பட்டமக்களின் உரிமைக்கான போரட்டத்தையும்,சமப்படுத்துகிறார்கள்.
“எனது தாத்தா, தான் ஆதிக்க சாதியால் தாக்கப்பட்டதைத்தான் அநீதியாக கருதினார்.என் அப்பா,ஆதிக்கசாதியினர் தன்னை சாதியை சொல்லி திட்டியதை அநீதியாக பார்த்தார்.இப்போது நான் ஆதிக்கசாதியினர் என்னை தனது கண்களால், இழிவாக பார்ப்பதையே அநீதியாக கருதுகிறேன்”.என்று ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞர் சாதிதீண்டாமை பற்றிய தனது கண்ணோட்டத்தை கூறினார்.
இப்போது சொல்லுங்கள் யாரிடம் ஜனநாயக உணர்வு வளர்ந்துள்ளது? ஆதிக்கசாதியினரிடமா,அல்லது தாழ்த்தப்பட்டோரிடமா?
திருப்பெயர் ஆதிக்கசாதியினர் “தங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களோடு முரண்பாடு ஏதுமில்லை”, என்று கூறினாலும்,தாழ்த்தப்பட்ட மக்களோடு ஆதிக்க சாதியினர் எப்படியெல்லாம் முரண்பட்டு வருகிறார்கள் என்பதை கீழே கண்டுள்ளவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
1.பள்ளிக்கட்டிடம்.
2.ஊராட்சி மன்றக்கட்டிடம்
3.மகளிர்மன்றக் கட்டிடம்
4.நூலகக்கட்டிடம்.
ஆகியவற்றை தாழ்த்தப்பட்டவர்கள் பகுதியில் கட்டுவதற்கு, ஆதிக்க சாதியினர் அதிகாரிகளுக்கு புகார் தந்து,தமது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்துள்ளனர்.ஆனால் இவர்கள் ஒருபோதும் வெற்றிபெற்றதேயில்லை. இதற்கு காரணம்........
அ.தாழ்த்தப்பட்டவர்கள் 50 -க்கும் மேற்ப்பட்டோர் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களாக பணியாற்றுவது......
ஆ.பட்டதாரிகள் 50- க்கும் மேற்ப்பட்டோர் உள்ளது.
மேலும் இவ்வூரில் மானாவாரி நிலங்கள் மட்டுமே உள்ளதாலும்,அதிலும் பெரும்பான்மை நிலங்களில் சவுக்கு தோப்புகளை நில உரிமையாளர்களான ஆதிக்க சாதியினர் வளர்ப்பதாலும், எஞ்சிய தாழ்த்தப்பட்ட மக்களும் பொருளாதார ரீதியாக ஆதிக்கசாதியினரை சார்ந்திராமல் நகர்புறங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். இவைகள் தான், தாழ்த்தப்பட்ட மக்களிடம் தாங்கள் எந்தவகையிலும் ஆதிக்கசாதிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை, என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.இதன் வெளிப்பாடுதான், நுற்றுக்கணக்கா சாமி சிலைகளாக,அவதாரம் எடுத்துள்ளன. இதைசகித்துக்கொள்ள முடியாத ஆதிக்கசாதிவெறிதான் உண்டியல் வைக்ககூடாது என்பதாய் வெளிப்படுகிறது.
சாலை அருகே ஆதிக்க சாதியினர் கட்டியுள்ள கோயிலும்,உண்டியலும்
மூடத்தனமாயினும் சிலை,உண்டியல் ஆகியவற்றை கண்டால் எங்கள் பெண்கள் பயப்படுவார்கள் என்று ஆதிக்கசாதியினர் கூறுவது உண்மையானால்.அதே சாலையில் சிறிது தூரத்தில், அதே ஏரிக்கரையின் கீழே, சாலைக்கும் அருகில் சாமி சிலைகளையும், உண்டியலையும் வைத்துள்ள ஆதிக்கசாதிகளின் செயல் எவ்வளவு மோசமான ஓரவஞ்சனை என்பதை எளிதில் யாரும் புரிந்து கொள்ள முடியும்.சாதிக்கொரு நீதி என்பதுதான் ஆதிக்கசாதி இருத்தலுக்கான அடித்தளம். இதை தக்கவைத்து கொள்வதற்குத்தான் இவர்கள் அனைத்து வகையானஇழிவான செயல்களையும் எவ்வித கூச்சமும் இன்றி, எப்போதுமே செய்து வருகிறார்கள்.இந்த இழிசெயலுக்காக இவர்கள் பெருமையும் பாராட்டிக்கொள்கிறார்கள்!
ஆண்டைமார்களின் மேற்கண்ட இழிசெயல்களை காப்பாற்றத்தான் ஆட்சியாளர்களும் ,அவர்களோடு கைகோர்த்து கொள்கிறார்கள். இது, மக்களின் வாழ்வை வெள்ளை ஆண்டைமார்களுக்கு அடகு வைக்க ஆட்சியாளர்களுக்கு சிறந்த துருப்புசீட்டாகவும் பயன்படுகிறது.
-மூடக்கிழவன்




4 comments:
மக்களின் பிரச்சனைகளை மக்களின் மொழியில் எழுதி இருக்கிறீர்கள் தோழர். இந்த எளிமை தான் நாம் அவர்களை சென்றடைய அவசியமானது என கருதுகிறேன். சரியான தீர்வை பற்றியும் அதற்கான போராட்டம் பற்றியும், //இம்மக்களுக்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவு அளிப்பது அவசர,அவசிய தேவையாகும்!// என்ன ஆதரவு அளித்தீர்கள் என்பது பற்றியும் இரண்டு வரி எழுதி இருக்கலாம்.
மேல்சாதி கீழ்சாதி என்று கூறாமல் ஆதிக்கசாதி என்று கூறியமைக்கு வாழ்துக்கள். உங்களின் கருத்து ஒரு விவாதம் போல் இருந்ததே தவிர விடையேதும் இருப்பதாய் தெரியவில்லை. 50 -க்கும் மேற்ப்பட்டோர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் 50 -க்கும் மேற்ப்பட்டோர் பட்டதாரிகள் என்று கூறிய தாங்கள் ஆண்டைமார்களின் இழிசெயல்களை காப்பாற்ற ஆட்சியாளர்களும் கைகோர்த்து கொள்கிறார்கள் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். வெறும் ஆசிரியர்களாகவும் பட்டதாரிகளாகவும் அல்லாமல் நாம் ஆட்சியாளர்களாய் மாற உங்களது அறிவுரை என்ன? your article should have some conclusions not only a message. but the way of writing is very nice and simple. all the best for your next article.
//உங்களின் கருத்து ஒரு விவாதம் போல் இருந்ததே தவிர விடையேதும் இருப்பதாய் தெரியவில்லை//
பாலா இதற்கான பதில் எமது அடுத்த கட்டுரையில் உள்ளது.link இதோ http://suraavali.blogspot.com/2010/06/blog-post_06.html
சாதி தீண்டாமையை கடைபிடிப்பவர்கள்,ஆதாயமடைபவர்கள் தங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பில் இயல்பாகவே உள்ளனர்.சமூக செல்வங்கள் அனைத்திற்கும் உரிமையாளர்களாகவும்,சகல அதிகாரம் படைத்தவர்களாகவும் உள்ளனர்.ஆகவே இதை எதிர்ப்பவர்களும் வலுப்படுத்தி கொள்ள வேண்டும்.ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒருங்கினைவது இதற்கு முதல் நிபந்தனை ஆகும்.அதற்கான முயற்சியை நோக்கிதான் எம்து பணி தொடர்கிறது.
Post a Comment