‘கவுரவக் கொலைகள்’ என்ற பெயரில் ஒரு ஆண்டுக்கு உலக அளவில் 5000 கொலைகள் நடப்பதாகவும்,இதில் 1000 கொலைகள் இந்தியாவில் நடப்பதாகவும் கடந்த சில மாதங்களாக செய்தி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ‘சக்திவாகிணி’ என்ற தன்னார்வ அமைப்பு தொடுத்த வழக்கில் மத்திய அரசையும்,எட்டு மாநில அரசுகளையும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநி(நீ)திமன்றம்.இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ‘கவுரவக் கொலைகள்’ நடைபெறுவதாக தன்னார்வக்குழுகள் செய்தி ஊடகங்களில் பரப்புரை செய்துவருகின்றன.
இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் 75 சதவீதமானவை சாதி கடந்து காதலிப்பதாலும் மூன்று சதவீத கொலைகள் கோத்திரம் மீறி காதலிப்பதாலும்,எஞ்சியவை கள்ளக்காதலால் நடைபெறுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.உண்மையில் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக் கொலை’களில் வெறுமனே 20 சதவீத கொலைகளே பதிவு செய்யப் படுவதாகவும்,ஏனையவை மூடிமறைக்கப்படுவதாகவும் இச்செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
மேலேக்கண்ட விவரங்கள் இப்போதுதான் புதிதாககண்டுபிடிக்கப் பட்டதை போன்று இவர்கள் நம்மிடையே பிரம்மிப்பை எற்படுத்துகின்றனர்.இவைகள் இந்தியாவில் காலம்காலமாக இந்து-சாதி-பெருமை என்ற பெயரில் நடைபெற்று வருபவைகள் தான். அப்போதல்லாம் இவற்றை சாதாரண கொலைகளாகவும், தனிநபர்களுக்கிடையிலான பிரச்சனைகளாகவும் பார்த்தவர்கள் இப்போது இதை சமூக விவகாரமாக உருவகப்படுத்துகின்றனர்.
1947-ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்கள் தொடுத்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த கொலைகளையும்,தாக்குதல்களையும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூட மறுத்துவரும் ஆட்சியாளர்கள், இப்போது ‘கவுரவக் கொலை’களை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவருவதாக ஆரவாரமாக அறிவித்துள்ளனர்.
தன்னார்வக்குழுக்கள்,நி(நீ)திமன்றங்கள்,ஊடகங்கள்,ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் ஒரே நேரத்தில் திடீரென வரிந்துக்கட்டிகொண்டு ‘கவுரவக்கொலை’களை தடுக்கப் போவதாக கூறுவது உண்மையான அக்கறையால் தானா? அப்படியானால் இத்தனையாண்டு காலம் இப்படிப்பட்ட கொலைகள் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாதா?இப்போது மட்டும் இவர்களுக்கு கரிசனம் வந்ததற்கான காரணம் என்ன? என்பதுபற்றி நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது.ஆதாயம் இல்லாத செட்டியார் ஆற்றைக்கட்டி ஊற்று இரைக்க மாட்டார் என்பது போல் இவர்களின் திடீர்கரிசனத்துக்கும் ஏதோ ஒரு காரணம் உள்ளது.
‘கவுரவக் கொலைகள்’ என்று கவுரவமாக பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இந்தக் கொலைகள் அனைத்துமே சாதியாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தான் நடத்தப்படுகிறது.சாதி மறுப்பு காதலர்களை கொலை செய்வதை அநீதியான செயலாக இவர்கள் கருதியிருந்தால் இப்போது காட்டும் அக்கறையை பலப்பத்தாண்டுகளுக்கு முன்னரே காட்டியிருக்க வேண்டும்.உச்சநி(நீ)திமன்றத்துக்கு உண்மையிலேயே இந்தக் கொலைகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை இருந்திருந்தால் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகளை மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளையும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவு போட்டிருக்க வேண்டும்.ஆனால் உச்சநி(நீ)திமன்றமோ கோத்திரம் மீறி காதலிப்பதால் கொலைகள் நடைபெறும் மாநில அரசுகளிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பதில் இருந்தே, இவர்களின் நோக்கம் கோத்திரக்கொலைகளை தடுப்பது மட்டுமே என்பது தெளிவாகிவிட்டது.
கோத்திரக் கொலைகள் மொத்த ‘கவுரவக்கொலை’களில் வெறுமனே 3 சதவீதமே ஆயினும்,இந்திய பொருளாதாரத்திலும்,சந்தையிலும்,ஆட்சியிலும் செல்வாக்கு செலுத்தும் ஏகாதிபத்திய முதலாளிகள் இவர்களின் இந்திய பிரதிநிதிகளான இந்திய முதலாளிகளும் தமது சந்தை நலன்களுக்காக பரப்பும் சீரழிவுப் பண்பாட்டுக்கு-மிருக உணர்வுக்கு- ஆட்பட்டவர்கள் இவர்கள். இதனால் தான் இவர்கள் இந்தக் கொலைகள் தமக்கு எதிரானது என்று கருதுகிறார்கள்.இதைத்தான் தன்னார்வக்குழுக்களும்,ஆட்சியாளர்களும்,நி(நீ)திமன்றங்களும்,ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.தமது செயலுக்கு முற்போக்கு முலாம்பூசுவதற்காகத்தான் சாதிமறுப்பு காதல் கொலைகளையும் இதனோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.
இதோடு கோத்திரம் மீறிகாதலிப்போர் பட்டியலில் அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வை ‘காதல்’ என்ற பெயரில் சேர்த்துவிடுவதன் மூலம் மொத்த சமூகத்தையும் குழப்பி,குழம்பியக்குட்டையில் இவர்கள் மீன்பிடிக்க பார்க்கிறார்கள்
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக எல்லா பிற்போக்குத் தனங்களும்,சமூகவிரோத செயல்களும் பார்ப்பனியத்தின் உதவியோடு தான் நடைபெற்று வருகிறது.எப்படிப்பட்ட பிற்போக்கு தனமாயினும் அது எங்கிருந்து வந்தாலும் மிகவும் இயல்பாக அதன் ஒரு பகுதியாக இணைந்து கொள்வதன் மூலம்தான் பார்ப்பனியமும்,பார்ப்பனர்களும் சுகமாக வாழ்ந்து வருகின்றனர்.கோத்திரம் மீறி காதலிப்பது தவறு என்று பார்ப்பனியமும்-பார்ப்பனர்களும்-கூறினாலும் இதை இவர்கள் என்றுமே கடைபிடித்ததில்லை. தமது சுகபோகத்திற்காக உறவுமுறைகளை மீறி திருமண உறவு வைத்துக்கொள்வது பார்ப்பனர்களுக்கு கைவந்தக்கலை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தில்லை தீட்சித பார்ப்பனர்கள்.இதனாலேயே இவர்கள் ஏனைய பார்ப்பனர்களை விட தாங்களே உயர்வானவர்கள்! என்று கூறிக்கொண்டு தில்லையின் எல்லைக்கு வெளியே திருமண உறவை வைத்துக்கொள்வதில்லை.இதன் காரணமாக அண்ணன்,தங்கை என்று கூட பாராமல் தங்களுக்குள்ளாகவே பல நூற்றாண்டுகளாக திருமண உறவு கொள்வதால், ஆரோக்கிய மற்ற சந்ததியினர் பிறந்தாலும், இதனால் இவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனாலும், இந்த மூடர்கள் இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
கடலைத்தாண்டுபவன்பார்ப்பானே அல்ல என்று மனுதர்மத்தில் எழுதிவைத்துள்ள பார்ப்பனக்கும்பல் தான் அமெரிக்காவிலும், அய்ரோப்பாவிலும் சுகபோகமாக வாழ்ந்து வருகிறது. பார்ப்பனர்களும், ஆதிக்கசாதியினரும் தாம் எழுதிவைத்துள்ள சாதிய சட்டங்களை என்றுமே மதித்ததில்லை.இவற்றை கீழ்சாதிகள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதிகள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்றுதான் இவர்கள் அன்று முதல் இன்று வரை வன்முறை மூலம் நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
ஆகவே பார்ப்பனியத்தின் – சாதியத்தின் – லட்சியமே உழைப்பாளர்களிடம் இருந்து உழைப்பின் பலன்களை அதாவது சமூக செல்வத்தை அபகரிப்பதுதான்.இதனால் தான் அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான அராபியர்கள்,மங்கோலியர்கள்,அய்ரோப்பியர்கள் ஆகிய அனைவரையும் வரவழைத்து,வரவேற்று,ஆதரித்து,காட்டிக்கொடுத்து, தமது வாழ்வை அன்று முதல் இன்று வரை தக்கவைத்து கொள்கின்றனர்.இன்றைய மறுகாலனியாக்கத்தை ஆதரிப்பதன் மூலம் தமது சுகபோக வாழ்வை மேலும் உத்தரவாதப் படுத்திக்கொண்டுள்ளனர்.பார்ப்பனக்கும்பல் காலத்திற்கு ஏற்ப எல்லாவித பிற்போக்கு தனங்களோடும் ஒன்று கலந்துவிடுவதும்,இந்த பிற்போக்குத் தனங்களை எதிர்த்து உருவாகும் முற்போக்கு சிந்தனை, செயல்பாடுகளில் ஊடுருவி அவற்றை குலைப்பதும், ஆதிக்கசாதிகளை பயன்படுத்தி அவற்றை அழித்துவிடும் செயலையும் எப்போதுமே செய்து வருகிறது.
இப்படித்தான் பவுத்தத்தையும்,சமணத்தையும்,வள்ளலாரையும் சீரழித்தனர், அழித்தொழித்தனர்.பார்ப்பனர்களின் இந்த நயவஞ்சகமான நடைமுறையை உடனடியாக புரிந்து கொண்டு தம்மை மாற்றிக்கொள்ள முடியாமல்தான் பார்ப்பனியத்தின் அடியாட்களான ஜாட்,வன்னியர்,தேவர் போன்ற சாதிகள் தங்களது சாதிப்பெருமையை காப்பது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மனித உயிர்களை ஈவிரக்கமின்றி ஆண்டுதோறும் காவுகொள்கின்றனர்.இதன் மூலம் பார்ப்பனக்கும்பல் பார்ப்பனியத்தை மீறுகின்றவர்களை,மீற நினைப்பவர்களை பீதியூட்டி பார்ப்பனியத்தை பாதுகாத்து கொள்ளும் அதே நேரத்தில்,இன்னொரு பக்கம் ஆட்சியாளர்கள் மூலம் ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு சட்டபூர்வ பாதுபாப்பையும் எற்படுத்திக்கொள்கின்றனர்.பார்ப்பனியம் சாதிக்கொரு நீதியையும்,இழிவையுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதை கடைபிடிப்பவர்களும் அப்படிப்பட்டவர்களாகவே மாறிவிடுகின்றனர்.
தமது வீடுகளிலும் கிராமத்திலும் தீண்டாமையை கடைபிடிக்கிற ஆதிக்கசாதிகள் ரயில்களிலும், பேருந்துகளிலும் அதை கடைபிடிப்பதில்லை.
தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் சாப்பிட மறுக்கும் இவர்கள் தாழ்த்தப்பட்டோர் பெருமளவில் வேலை செய்யும் நகர உணவகங்களில் சாப்பிட மறுப்பதில்லை. சாதிமறுப்பு திருமணங்களின் மூலம் ஏற்படும் ரத்தக்கலப்பை தடுக்க நினைக்கும் இவர்கள் ரத்தவங்கிகளில் ரத்தம் பெறுவதை மறுப்பதில்லை.கிராமப்புற கோவில்களில் தாழத்தப்பட்டோர் நுழைவதை தடுக்கும் இவர்கள், நகர கோவில்களில் அதை செய்வதில்லை, அங்கு தாழ்த்தப்பட்டோர் நுழைவதால் நாங்கள் அங்கு வரமாட்டோம் என்று கூறுவதுமில்லை.தம்மை மேல்சாதி என்று கருதிக்கொள்ளும் அனைவரும் இப்படித்தான் நேர்மையற்றவர்களாகவும், இழிகுணங்களின் இருப்பிடமாகவும், முரண்பாடுகளின் மூட்டைகளாகவும், இரட்டை வேடதாரிகளாகவுமே வாழ்கின்றனர்.
சாதியும், தீண்டாமையும் இறைவனால் படைக்கப்பட்டது . அதனால் அது புனிதமானது என்று கருதுவதற்குரிய அம்சங்கள் அனைத்தும் இல்லாது ஒழிந்துவிட்டது. இப்போது அது சுரண்டல். அடக்குமுறை, பாசிசம் ஆகியவற்றின் அப்பட்டமான வடிவமாகவும் ஏகாதிபத்தியம், மறுகாலனியாக்கம் ஆகியவற்றின் உற்றத் தோழனாகவும், அதன் பிரிக்கமுடியாதஅங்கமாகவும் திகழ்கிறது, ஆகவே ஆதிக்க சாதிகளின் ‘கவுரவக் கொலை’களும்,மறுகாலனியாக்கத்தை ஆதரித்துக்கொண்டே ‘கவுரவக்கொலை’களைத் தடுக்க வேண்டும் என்ற கூப்பாடுகளும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. இவைகள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.
பார்ப்பனிய பிற்போக்கு பண்பாட்டையும், ஏகாதிபத்திய சீரழிவு பண்பாட்டையும் இவற்றிற்கான சமூக அடிப்படையையும் எதிர்த்து முறியடிப்பதன் மூலம்தான் இந்தியாவில் நடைபெறும் ‘கவுரவக்கொலை’கள் உள்ளிட்ட அனைத்து விதமான அநீதிகளையுமம் நாம் முறியடித்து வெற்றிபெற முடியும். இதற்கு நாம் சாதி மறுப்பு காதல், கோத்திரம் மீறிய காதல், அண்ணன்,தங்கைக்கு இடையிலான மிருகக்காம உணர்வு ஆகியவைகள் பற்றியும் இவைகளுக்கு இடையிலான வேறுபாடுகளையும், இவைகள் சமூக வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவுகின்றனவா? அல்லது கேடுவிளைவிக்கின்றனவா? என்பதைப் பற்றி நாம் தரப்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் தான் இவைகளில் எவற்றை நாம் ஆதரிக்க வேண்டும் எவற்றை எதிர்க்க வேண்டும் என்பதையும், இவற்றைத் தடுப்பதற்கு எப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும். இப்படி அல்லாமல் இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று கூறுவது அயோக்கியத்தனம்! இதை ஏற்பது மூடத்தனம்!
-தொடரும்
தொடர்புடைய கட்டுரை
சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II

3 comments:
மேலும் ஏராளமான வாசர்களை உங்கள் பதிவுகள் சென்றடைய இந்த தளத்தில் பகிருங்கள்...http://writzy.com/tamil/
ஆலோசனைக்கு நன்றி.
மலைவாசி பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரங்கள் ! (ww.jeejix.com ) உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
Post a Comment