கடந்த சில தினங்களாக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இனவெறியால் தூண்டப்பட்ட கேரள மக்கள்,தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு செல்லும் தமிழர்களையும்,வாகனங்களையும் தாக்கி வருகின்றனர்.இதனால் தமிழத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை தமிழக போலிசார் தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
”கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் தமிழக லாரிகளை மலையாள இனவெறியர்கள் தொடர்ந்து தாக்கினால், கேரளாவிற்கு சரக்குப்போக்குவரத்தை நிறுத்துவோம்”, என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களைத்தான் இந்த லாரிகள் ஏற்றிச்செல்கின்றன.இந்த சரக்குகள் அன்றாடம் கேரளாவிற்கு செல்லாவிட்டால் கேரளாவில் ஏழு மாவட்டங்கள் அன்றாட உணவுப் பொருட்கள் இன்றி தவித்துப்போகும்.
எனவே தமிழக லாரிகளை தாக்குவது என்பது தங்களின் தற்கொலை முயற்சி என்பதைக்கூட சிந்திக்க முடியாத அளவுக்கு கேரள மக்கள் இனவெறியூட்டப்பட்டப் பட்டிருக்கிறார்கள்.
மலையாள இனவெறிக்கு எதிராக தமிழகத்திலும் எதிர்வினையாற்ற தமிழக மக்கள் தூண்டப்படுகிறார்கள்.இதனால் தமிழகத்திலும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மலையாள இனவெறியால் இரு மாநில மக்களிடையே வளர்க்கப்படும் பகைமை உணர்வால், இரு மாநில மக்களுக்கும் எவ்விதமான லாபமும் இல்லை.இதன் மூலம் தமிழக மக்களைவிட கேரள மக்களுக்குதான் கடுமையான இழப்புகள் ஏற்படும்.
மலையாள இனவெறியின் மூலம் முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்கள்.ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைத்துவிட்டதால் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது.தேனி மாவட்டம் கம்பம் பகுதி மட்டுமே தற்போது
முல்லைபெரியாறு அணையால் பயன்பட்டு வருகிறது.
முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைத்தாலோ,புதிய அணை கட்டினாலோ கம்பம் பகுதியும் நீர் இன்றி வறண்டுவிடும்.எனவே இழப்பு என்பது ஏற்கனவே தமிழகத்திற்கு கேரளாவினால் உருவாக்கப்பட்டுவிட்டது.
ஆனால் கேரளாவிற்கு, தமிழகத்தினால் இதுவரை எந்தவிதமான இழப்பும் ஏற்படுத்தப்படவில்லை.இப்போதைய மலையாள இனவெறி நடவடிக்கைகள்,தமிழகத்திற்கு எதிராக தொடர்ந்தால்,அது கடும் விளைவுகளை மலையாள இனவெறியர்களுக்கு மட்டுமல்ல, கேரள மக்களுக்கும் ஏற்படுத்தும்.ஏனென்றால் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து அன்றாடம் செல்லாவிட்டால் கேரள மக்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குள்ளாகி விடும்.
அதே நேரத்தில் கேரளத்தினால் தமிழகத்திற்கு உண்டாக்கப்படும்,நீர் இழப்பை ஈடுகட்டுவதற்கான போதுமான வளம் தமிழகத்தில் உள்ளது.இந்த வளத்தை பயன்படுத்தாததே தமிழகத்தின் மிகப்பெரிய பலவீனம் ஆகும்.மக்கள் விரோத ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகள் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தும் வரை தமிழகத்தின் இந்த அவலநிலை தொடரவே செய்யும்.கேரளத்தினால் தமிழகத்திற்கு உருவாக்கப்படும்,இழப்பை விட இந்த ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் அலட்சியத்தினாலும்,அக்கறையின்மையினாலும் உண்டாக்கப்படும் இழப்பே பேரிழப்பாகும்.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் மழை நீரில் 10 சதவீத்த்தை கூட தமிழகம் தேக்கி பயன் படுத்துவதில்லை.வீணாக கடலில் கலக்கும் 90 சதவீதம் தண்ணீரை தேக்கினாலே தமிழகத்தின் நீர் தேவையை பெருமளவு ஈடுகட்ட முடியும்.எனவே,கேரளத்தின் அடாவடித்தனத்துக்கு எதிராக போராடுவதோடு,தமிழக ஆட்சியாளர்களின் சமூக அக்கறையின்மைக்கு எதிராகவும் தமிழக மக்கள் போராடுவது அவசர அவசிய தேவையாகும்.
கேரள ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் மட்டுமல்ல,தமிழகத்தில் உள்ள ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும் தமிழக மக்களை மலையாள இனவெறிக்கு எதிராக, தமிழகத்தில் இனவெறியைத்தூண்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக மக்களிடையே செல்வாக்கு பெறவே முயலுகின்றனர்.எனவே,தமிழக மக்கள் மலையாள இனவெறிக்கு எதிராக மட்டுமல்ல,தமிழக ஆட்சியாளர்கள்,ஓட்டுபொறுக்கி அரசியல் கட்சிகளின் அக்கறையின்மைக்கு எதிராகவும் போராடுவதுதான் தமிழகத்தில் உருவாக்கப்படும் வறட்சிக்கெதிரான,நீர் இன்மையால் மக்களுக்கு ஏற்படும் இழப்பையும்,சரிசெய்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.
மொத்த தமிழகத்தின் தண்ணீர் தேவையை வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதனால் பெருமளவு ஈடுகட்ட முடியும்.இதோடு மேற்குதொடர்ச்சி மலையில் தமிழ்நாட்டின் நீர்பிடிப்பு பகுதியின் அளவு 2588 ச.கி.மீ. ஆகும்.இந்தப் பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு 2641 மி.க.மீ நீர் உற்பத்தியாகிறது.இந்த நீர் அணைத்தும் கேரளாவின் பாரத புழா,சாலியாறு,சாலக்குடியாறு,பெரியாறு ஆகியவற்றில்தான் கலக்கிறது.இப்படி கலக்கும் மொத்த நீரும் கேரளத்திற்கு உபரி நீரேயாகும்.
ஆகவே,தமிழகப் பகுதியில் உற்பத்தியாகி, கேரள ஆறுகளின் வழியாக வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை, தமிழகத்தின் நீர் பிடிப்பு பகுதியிலேயே தடுத்து நிறுத்தி தமிழகத்திற்கு கொண்டுவருவதன் மூலமும்.தமிழகத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியும்.
இப்படி தமிழக நீர் பிடிப்பு பகுதியில் உருவாகி மேற்கு நோக்கி சரிவான பாதையில் ஓடும் நீரை அதன் இயல்பான ஓட்டத்திற்கு மாறாக தமிழகத்தின் மேடான பாதையைத்தாண்டி கொண்டுவர முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்.இதே வழிமுறையில்தான் முல்லை பெரியாறு அணையும் தொழிட்நுட்பம் வளராத 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது.இப்போது நவீன தொழிட்நுட்பமும்,ஆற்றலும் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமான ஒன்றுதான்.
இதற்கு தேவையானது எல்லாம் மக்கள் மீதான, நாட்டின் மீதான ஆட்சியாளர்களின் பற்றும்,அக்கறையுமே ஆகும்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளம் அப்பட்டமாக அடாவடித்தனம் செய்கிறது என்பது உச்சநீதி மன்றத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு 142 அடியாக தண்ணீரை உயர்த்திக்கொள்வதற்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தனது கால் தூசுக்கு சம்மாகக் கூட கேரளா மதிக்கவில்லை.கேரளத்தின் இந்த அடாவடித்தனத்தை கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம்,அதற்கு நேர்மாறாக மீண்டும் ஒரு நிபுணர் குழு அமைத்து பிரச்சனையை இழுத்தடித்துவருகிறது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்தில் நீர் இருப்பை குறைக்கச் சொன்னது கேரளம். இப்போது அணையையே உடைக்க வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கிறது.தனது அடாவடித்தனத்தை நிறைவேற்றிக்கொள்ள நன்கு திட்டமிட்டு கேரள மக்களிடையே பெரும் பீதியையும்,அச்சத்தையும் உருவாக்கி மலையாள இனவெறியை தூண்டிவருகிறது.
இதற்காக அணை உடைவது போன்று ஒரு குறும்படத்தையும்,இதே போன்று டேம் 999 என்ற திரைப்படத்தையும் எடுக்கவைத்து இவைகளை கேரள கிராமங்கள் தோறும் போட்டுக்காட்டி வருகிறது.
எனவே,டேம் 999 திரைப்படம் ஒரு தனி நபரால், தற்செயலாக எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல.அணையை உடைக்கும் கேரள அரசின் சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் இத்திரைப்படம் ஆகும்.
முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு அதற்கு பதிலாக தானே, தனது செலவில் புதிய அணைக்கட்டி தமிழகத்திற்கு தன்ணீர் தரப்போவதாக கேரள மற்றும் தமிழக மக்களை ஏய்த்துவருகிறது கேரள அரசு.கேரள அரசின் இந்த சதித்தனம் புரியாமல் தமிழகத்தில் உள்ள சிலரும் கேரள அரசின் இந்த பொய் பிரச்சாரத்துக்கு பலியாகின்றனர்.
முல்லை பெரியாறு அணையில் தற்போது தேக்கப்படும் நீரில் 104 ஆடி வரை உள்ள நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது.ஏனென்றால் அணைக்கட்டபட்டுள்ள இடத்தைவிட, தமிழக எல்லைப் பகுதி உயரமானதாகும்.இந்த உயரமான பகுதியில் சுரங்கப்பாதை அமைத்துதான் 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீர் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
கேரள அரசு கட்டத்தீர்மாணித்துள்ள புதிய அணை, முல்லை பெரியாறு அணையில் இருந்து 350 அடி தூர சரிவான கீழ்ப்பகுதியாகும்.இந்த இடத்தில் அணைக்கட்டினால் 149 அடிவரை உள்ள நீரை தமிழகம் பயன்படுத்த முடியாது.அணையின் உயரம் 150 அடிக்கு மேல் இருந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் வரும்.ஆனால் கேரளா கட்டதீர்மாணித்துள்ள அணையின் உயரமோ வெறுமனே 140 அடி மட்டுமேயாகும்.
எனவே புதிய அணைக்கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று கேரள அரசு கூறுவது அப்பட்டமான பித்தாலாட்டம் ஆகும்.
இவ்வளவு அடாவடித்தனம் செய்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளத்தின் செயலின் மூலம், கேரள மக்களுக்கும்,கேரளாவிற்கும் ஏதேனும் ஆதாயம் உண்டா என்றால் நிச்சயம் இல்லை.ஏனென்றால் கேரளாவில் விவசாயம் செய்யும் சமவெளிப்பகுதி மிகவும் குறைவாகும்.எனவே,கேரளாவின் விவசாயத்திற்கு இந்த தண்ணீர் பயன் படபோவதில்லை.நீர் மின் திட்டங்களுக்கும், தேவைக்கும் அதிகமாகவே நீர் உபரியாக உள்ளது. இப்படி உபரியாக உள்ள நீரை வீணாக அரபிக்கடலில் கொண்டு விடுவதன் மூலம் கேரளவிற்கு என்ன நன்மை ஏற்பட போகிறது? அப்படியானால் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளத்தின் நோக்கம்தான் என்ன?
தமிழத்திற்கு எதிராக இனவெறியை தூண்டி, கேரள மக்களை தமது பக்கம் கொண்டு வருவதுதான்,கேரள ஓட்டுச்சீட்டு அரசியல் கட்சிகளின் நோக்கமாகும்.ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் தமது பிழைப்பிற்காகத்தான் கேரள மக்களை பலிகடா ஆக்குகிறார்கள்.கேரளத்தில் உள்ள அனைத்து ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளும்,குறிப்பாக அகில இந்திய கட்சிகளான கங்கிரசு,போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்,பாரதிய ஜனதா ஆகியவை போட்டிப்போட்டுக்கொண்டு கேரள மக்களிடையே மலையாள இனவெறியை ஊட்டிவருகின்றனர்.
இப்படி கேரள மக்களிடையே இனவெறி ஊட்டுவதால்,கேரள ஓட்டுப்பொறுக்கி கட்சிகளுக்கு மட்டும்தான் ஆதாயமா? இதனால் ஆதாயம் அடைபவர்கள் வேறு யாரேனும் இருக்கிறார்களா?
முல்லை பெரியாறில் மட்டுமல்ல காவேரியிலும்,பாலாற்றிலும்,கேரளம்,கர்நாடகம்,ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிப்பதையும்,இப்படி வஞ்சிப்பதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயலும் இந்தியா என்ற கட்டமைப்பு உடைந்து சிதறி விடும் என்று கூறப்படும் கூற்று சரிதானா? ஆகிய வினாக்களுக்கான விடையை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!
தொடர்புடைய பதிவுகள்:
தொடர்புடைய பதிவுகள்:

2 comments:
இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்
அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்
இருவரும் சொல்வது :-
http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_09.html
உண்மை, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
Post a Comment