தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதியான, தீரமிக்க போராட்டம் கூடங்குளம் அணு
உலைக்கு எதிரான அப்பகுதி மக்களின் போராட்டமே ஆகும். எதிர்பார்த்தது போன்றே போராடும்
மக்கள், போலீசின் கடுமையான
தாக்குதலுக்கும், தொடர் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
4.கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.
போராட்டக்குழு தலைவர் திரு சுப.உதயக்குமார்
போலீசில் சரணடையப் போவதாக அறிவித்தார். ஆனால் மக்களோ அதை ஏற்காமல் தொடர்ந்து தமது
போராட்டத்திற்கு வழிகாட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சுப.உதயக்குமார் மற்றும் போராட்டக்குழுவினரை
கைது செய்ய இந்திய அரசால் உளவு விமானம் பயன்படுத்தப்படுகிறது. நிலத்தில் போலீசின் அதிரடிப்படை அவரைத்
தேடுகிறது. இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வராத, இந்திய கடலோர காவல்படை கூடங்குளம்
மக்களை தாக்குவதற்கு கடலில் முற்றகையிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அரசியல்
கட்சிகள், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு வகையான சமூக அமைப்புகள்,
தனிநபர்கள் அனைவரும் கூடங்குளம் மக்கள் மீதான போலீசின் தாக்குதலை கண்டித்துள்ளனர்.
தம்மை புரட்சிகர அமைப்பு என்றுக் கருதிக் கொள்ளும் சில அமைப்புகள் கூடங்குளத்தில்
முற்றுகையிட்டுள்ளன. சில இணையதளங்கள் கூடங்குளம் பகுதியின் நிலையை நேரடி வர்ணனை
செய்கின்றன.
போராட்டக்குழு தலைவர் தன்னை காந்தியவாதியாக அறிவிக்கிறார். போராட்டத்திற்கு
ஆதரவு தருமாறு அன்னா அசாரே குழுவிற்கு அவர்கள்
அழைப்பு விடுத்ததின் பேரில் அரவிந்த் கேஜ்ரிவால் கூடங்குளத்திற்கு நேரிடையாக வந்து
சென்றுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில் காந்தி
அறிவித்த எந்த ஒரு போராட்டமும் தவிர்க்க வியலாமல் ஆட்சியாளர்களின்
ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகும் போது, மக்கள் எதிர் தாக்குதல்
நடத்தினார்கள். இதனால் காந்தி மக்களின் செயலை வன்முறையாக சித்தரித்து போராட்டத்தை
திரும்ப பெற்றுக் கொண்டு, கைதாவது என்பது
வழமையான ஒன்றாக அமைந்தது. இதன் மூலம் காந்தியின் கைதே முக்கியமான நிகழ்வதாக
மாற்றப்பட்டு போராட்டம் திசை திருப்பப்பட்டது. இப்படி போராட்டம் திசை
திருப்பப்படுவதற்கு காந்திக்கும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கும் இடையே இணக்கமான ஒத்துழைப்பு
இருந்தது.
கூடங்குளத்திலும் மக்களின் அமைதியான
போராட்டத்தின் மீது போலீசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டபோது மக்கள்
எதிர்தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சுப.உதயகுமார் அவர்கள் கைதாக போவதாக
அறிவித்தார். ஆனால் மக்களோ அதை தடுத்து நிறுத்தியுள்ளனர்., போராட்டக் குழுவிற்கும்,அரசுக்கும்
இடையே இணக்கமான ஒத்துழைப்பு இல்லாமல் காந்தியை போன்று மக்களை வன்முறையாளர்களாக
காட்டி கைதாவது சாத்தியமில்லை என்றப் புரிதல் திரு சுப.உதயகுமாருக்கு இல்லை.
அவரின் இந்தச் செயல் காந்தியைப் பற்றிய அவரின் அறியாமையையே காட்டுகிறது, அதோடு
போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக தாம் நடத்தி வந்தப் போராட்டம் இப்போது
முட்டுச்சந்தில் சிக்கிக் கொண்டுவிட்டது
என்பதையும் தெளிவாக உணர்ந்ததாக தெரியவில்லை. இனி அணு உலைக்கு எதிரான சிறு முணு,
முணுப்பைக்கூட ஆட்சியாளர்கள் அனுமதிக்க
போவதில்லை. இதன் மூலம் போராட்டக் குழுவினர் இதுவரை கையாண்ட போராட்ட வடிவம் அதன்
உயர்ந்த வடிவத்தை எட்டிவிட்டது. இதற்கு மேலும் இப்போராட்டத்தை இதுவரை கடைபிடித்த
வழிமுறைகள் மூலம் கொண்டு செல்வதற்கான அடிப்படை ஏதுமில்லை.
இதற்கு மேல் ஆட்சியாளர்கள் எந்த ஒரு
போராட்டத்தையும் அனுமதிக்க போவதில்லை என்பதோடு மக்களும் போராட்டக் குழுவினர்
இதுவரை கையாண்ட வழிமுறையை தொடரப்
போதில்லை. சமரசமற்ற போராட்டத்தையே தமது அன்றாட வாழ்வாக கொண்டுள்ள மீனவமக்களின்
இந்தப் போராட்டம், அதே சமரசமற்ற
தன்மையைத்தான் கோருகிறது. கடல்
தாயை மட்டுமே காலம், காலமாக தமது வாழ்விற்கான ஆதாரமாக கொண்டுள்ள மக்கள், அந்த
தாயின் அழிவு, தமது அழிவு என்பதை உணர்ந்தே போராடுகின்றனர்.
போராடும் மக்களின் இந்த உணர்வை புரிந்து
கொள்ளாத, ஏற்காத யாரும் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்று வழிநடத்த முடியாது.
அதே நேரத்தில் இப்போராட்டம் கூடங்குளம்
வட்டார மக்களின், அதிலும் மீனவ மக்களின்
போராட்டம் என்ற அளவில் இருக்கும்வரை அடுத்தகட்ட வளர்ச்சியை, முடிவை எட்டவும்
முடியாது. போராட்டம் விரிவாக்கத்தில் தான் வெற்றிக்கான அடிப்படையை கொண்டுள்ளது.
ஆனால் கூடங்குளம் வட்டார போராடும் மக்களை
போன்றே, ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில்
நிறுத்தப்பட்டுள்ள நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளும்,நெசவாளிகளும்
அதற்கெதிராக புலம்பலை மட்டுமே வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமது வாழ்வாதாரம் பாதிக்கபடுவதற்கு எதிராக
இவர்களை அணிதிரட்ட இயலாமல் இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் தவிக்கினறன.
மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறை என்ன வென்று அறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.
இதன் காரணமாகவே இந்த அமைப்புகள் வலது,இடது சந்தர்ப்பவாத புதைக்குழிக்குள் வீழ்ந்து கிடப்பது
தொடர்கதையாகிப் போனது.மொத்தத்தில் இவர்கள்
தமது இயலாமையை, ”சமவெளிப்பகுதியில்
வாழும் மக்களை அணிதிரட்ட இயலவில்லை”,
என்கின்றனர்.
இந்தியாவிலுள்ள புரட்சிகர அமைப்புகள்
அனைத்துமே பழங்குடி மக்களிடம் மட்டுமே தம்மை
ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது. கூடங்குளம் போராட்டமும் மீனவ பழங்குடி மக்களிடம் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளது.
இந்திய நாட்டின் மக்களில் 90 விழுக்காட்டிற்கு
மேலானவர்களை உள்ளடக்கிய சமவெளி பகுதி மக்களை அணிதிரட்டுவதற்கான வழிமுறையை
உள்ளடக்கிய, சமூக மாற்றத்தை தமது இலக்காக கொணடிருக்கும் இயக்கங்களால் மட்டுமே
கூடங்குளம் போராட்டத்திற்கு இனி தலைமை ஏற்க இயலும். இப்போதைய சூழலில் இதற்கு
மாற்று ஏதுமில்லை.
ஏனென்றால் கூடங்குளம் அணு உலை என்பது
வங்கத்து சிங்கூர் போராட்டத்தை போன்று குறுகிய பொருளாதார வடிவிலான போராட்டம் அல்ல.
இதன் பயனாளிகள் டாடாவோ, டாடாவின் அரசியல் பிரதிநிதிகளான இந்திய அரசியல் கட்சிகளோ
மட்டுமல்ல. இது மேல்நிலை வல்லரசுகளின்
நலனை உள்ளடக்கியதாகும். அதாவது இந்திய நலன் என்ற வரம்பை தாண்டியதாகும்.
மேல்நிலை வல்லரசுகள் தமது நாடுகளில் இனியும் சோதித்து பார்க்க முடியாத அணு தொழில்
நுட்பத்தையும், அதிலிருந்து பெறப்படும் பலன்களையும் இந்தியா போன்ற தமது அடிமை
நாடுகளின் மூலமே பயன்படுத்தி ஆதாயமடைய முடியும்.
எனவே நாம் விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது பொருளாதார
போராட்டம் என்ற எல்லையை கடந்து அரசியல் போராட்ட உள்ளடக்கத்தை கொண்டதாகும்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்
உள்ளடக்கத்தில் மேல்நிலை வல்லரசுகளுக்கும் அதன் நலன்களுக்கும் எதிரானது. இதனால்தான் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக
ஆகிய கட்சிகள் அனைத்து விவகாரங்களிலும் எதிரும் புதிருமாக நின்றாலும், கூடங்குளம்
விவகாரத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாத கட்சிகள்
மட்டுமே கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதாக கூறுகின்றன. ஆனால் இவர்களும் உண்மையில்
மேல்நிலை வல்லரசுகளுக்கும், அதன் நலன்களுக்கும் எதிரானவர்கள் இல்லை.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற
ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஏதோ ஒரு வடிவில், வகையில் ஆதரிப்பவர்கள் அனைவரும்
மேல்நிலை வல்லரசுகளின் நலன்களை ஆதரிப்பவர்கள்தான். இதை இன்னமும் கூர்மையாக
பார்த்தால், நிலவுகிற இந்த சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஏற்பவர்கள் அனைவருமே அதன்
ஆதரவாளர்கள் தான். ஏனென்றால் நிலவுகிற இந்த சமூக அமைப்பு முழுக்கவே மேல்நிலை
வல்லரசுகளின் அவர்களின் நலனையே உள்ளடக்கிய அடிப்படையைக் கொண்டதுதான்.
எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான
போராட்டம் சமூக மாற்றத்தோடு இணைந்த ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின்
ஊடாகத்தான், அதன் ஒரு அங்கமாத்தான் கூடங்குளம் போராட்டத்தை இனி முன்னெடுத்து செல்ல
முடியும். எனவே இந்த அடிப்படையில் போராட்டத்தை எப்படி வளர்த்தெடுத்து விரிவாக்கம்
செய்வது,அதற்கான செயல்வடிவம் என்ன என்பதை அடுத்தத் தொடரில் பார்ப்போம்!
தொடர்புடைய கட்டுரைகள்:
1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!
4.கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.

0 comments:
Post a Comment