விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Monday, 12 September 2011

கவுரவக் கொலைகள்:சாராயம்-பிராந்தி இரண்டில் ஒன்றைக்குடி-II

உலக அளவில் நடைபெறும் கவுரவகொலைகள் பற்றியும்,அது இந்தியாவில் என்னென்ன காரணங்களுக்காக நடத்தப்படுகிறது என்பதைப்பற்றியும்,ஏகாதிபத்திய சந்தை நலன்களுக்காக பரப்பப்படும் சீரழிவுப் பண்பாட்டிற்கு பலியாகி மனிதனையும்,மிருகங்களையும் பிரித்துக்காட்டும் மிகத்தெளிவான உறவுமுறைகளை மீறுகிற, காம வெறிச்செயல்களையும்,சாதிமறுப்பு-தீண்டாமை மறுப்பு காதல்,கோத்திரம் மீறியக்காதல் ஆகியவற்றையும் ஒன்றாக்கி குழப்பும் உச்சநி(நீ)திமன்றம்,அரசு,பத்திரிக்கைகள்,தன்னார்வக்குழுக்கள் ஆகியவற்றின் நோக்கம்,தேவை என்ன என்பதை பற்றியும் சென்றத் தொடரில் பார்த்தோம்.சாதி-தீண்டாமை மறுப்பு காதல்.கோத்திரம் மீறிய காதல் ஆகியவற்றைப் பற்றியும், மற்றும் இவைகளின்  தேவை,அவசியம் ஆகியவைகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்கவியலாத தேவையாக உள்ளது.






        உலகில் உள்ள உயிரினங்களிலேயே, மனிதர்கள் மட்டுமே உறவுமுறைகளை வகுத்துக்கொண்டுள்ளார்கள்.இந்த உறவுமுறைகள் மிகவும் பழமையானது என்பதாலேயே இதை தேவையற்றது என்றதொரு தோற்றத்தை,கருத்தை நாகரீக போர்வையில் திரியும் மனிதமிருகங்கள் எற்படுத்தி வருகின்றன.மனித இனம் இன்று வரை அழிந்து போகாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று தான்,இந்த உறவுமுறைகள். இப்படியொரு உறவுமுறைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மை முறைப்படுத்திக்கொண்ட செயல், அவனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உள்ளதற்கான அடையாளம் ஆகும்.இந்த உறவுமுறைகள் தனிமனித விருப்பத்திலிருந்தோ,நல்லெண்ணத்திலிருந்தோ உருவாகவில்லை.மாறாக மனிதனின் வாழ்க்கை தேவையிலிருந்து தவிர்க்கவியலாமல் உருவானது.உலகில் பல கோடிக்கணக்கான உயிரினங்கள் இருந்தாலும்,அவைகளில் மனிதர்கள் மட்டுமே ஆறாவது அறிவு எனும் பகுத்தறிவை பெற்றிருக்கிறார்கள்.இந்த பகுத்தறிவுதான் மிருகங்களிலிருந்து மனிதர்களை மிகத்தெளிவாக இனம் பிரித்துக்காட்டுகிறது.இதனாலேயே மனிதன் மிருகங்களைப் போன்று ஒருபோதும் வாழமுடியாது என்ற நிர்ப்பந்ததை ஏற்படுத்திவிடுகிறது.
        மிருகங்களுக்கு மனம் என்பது இல்லை.ஆகவே காம உணர்வு அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே வருவதாகும். இனப்பெருக்கம் என்ற இயற்கை தேவைக்காக, அதாவது காம உணர்வு என்பது மிருகங்களுக்கு உடல் சார்ந்த தேவை மட்டுமேயாகும்.
        ஆனால் மனிதனுக்கோ காமம் உடல்சார்ந்த விடயம் மட்டுமல்ல.அது முக்கியமாக மனம் சார்ந்த விடயமாகும்.இதனால் காம உணர்வு மனிதர்களுக்கு ஆண்டு முழுவதும் உருவாகக் கூடியது.
        மனிதர்களாயினும்,மிருகங்களாயினும் ஆண்களிடையே.பெண்களை அடைவதற்கான போட்டியில் பொறாமை உணர்வை ஏற்படுத்துகிறது.இந்தப் பொறாமை உணர்வு மொத்த கூட்டத்திலும் அமைதி இன்மையை,ஒற்றுமை இன்மையை ஏற்படுத்தி விடுகிறது.இது மிருகங்களிடையே குறிப்பிட்ட காலப்பகுதியோடு முடிந்து விடுகிறது.பின்னர் ஆண் மிருகங்கள் தமக்கிடையிலான பகையையும் மறந்து விடுகின்றன.
        ஆனால் மனிதர்களிடையே இது ஆண்டு முழுவதும் ஒற்றுமை இன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்ல,ஆயுட்காலம் முழுக்க ஒருவரை ,ஒருவர் பழிவாங்கவும் தூண்டுகிறது.இதனால் மனித இனம் இயற்கையை எதிர்த்த தனது போராட்டத்தில் கவனம் கொடுக்க முடியாததாலும்,தமக்கிடையிலான சண்டையினாலும் இரட்டிப்பு அழிவை சந்தித்தது.இதை தவிர்ப்பதற்கு,தவிர்க்கவியலாத ஒரு தேவைதான் பாலியல் தேவையை முறைப்படுத்தும் உறவுமுறைகளாகும்.இதை மீற நினைப்பது மனித இனத்தை காட்டுமிராண்டிகளாக்கி அழிவுக்குள்ளாக்கும் செயலாகும்.ஆகவே இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்த போராட்டத்தை நாம் ஈவிரக்கமின்றி தான் நடத்தியாக வேண்டும்.
        உணவு தேடுவதை மட்டுமே வாழ்வின் இலக்காக  கொண்டிருக்கின்றன மிருகங்கள்.நுகர் பொருளை தேடுவது மட்டுமே மனித வாழ்வின் இலக்காக மாற்றுகின்றனர்,ஏகாதிபத்திய முதலாளிகளும்,அவர்களின் இந்தியக் கூட்டாளிகளும்.மனிதர்களை மனித மிருகங்களாக மாற்றும் இந்த இழிவுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியில் தான்,மனித வாழ்வும்,வளர்ச்சியும் அடங்கியுள்ளது.
        மனித வாழ்வை முறைப்படுத்தி,மேம்படுத்தி,வளர்த்து, வாழ வைத்த இந்த உறவு முறைகள்,மனித இனம் உள்ளவரை தவிர்க்கவியலாத, விஞ்ஞான பூர்வமான தேவையாகும்.ஆனால் சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகியவைகள் தேவையற்ற சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல, அவைகள் மனித குலத்தை அழிவுப்பாதையிலும் இட்டுச்செல்லும் பார்ப்பனிய பண்பாடுகளாகும்.மேற்கண்ட பிற்போக்குத் தனங்களை எதிர்த்து,மறுத்து நடைபெறும் காதல்,திருமணம் ஆகியவற்றை நாம் ஆதரிக்க வேண்டும்.இப்பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக விடாப்பிடியான,நீடித்தப்போராட்டங்களை நாம் நடத்தியாகவேண்டும்.
        அதே நேரத்தில் கோத்திரம் மீறிய காதல் அண்ணன்,தங்கைகிடையிலான நிகழ்வாக கூறப்படுவதால் இப்போது அதைப்பற்றி சிறிது பார்ப்போம்!
        கோத்திரம் மீறிய காதல் கொலைகளை தடுப்பது தான்,உச்சநி(நீ)திமன்றம் மற்றும் மைய அரசின் நோக்கம் என்பதை பகுதி I  ல் பார்ததோம்.இந்த கோத்திர வகைப்பாடு பார்ப்பனியப் பண்பாட்டின் ஒரு அங்கமாகும்.ஒரு சாதிக்குள்ளாகவே மக்களை கூறுபோடும் கோட்பாடு! மொத்த சாதியையும் குறிப்பிட்ட சில கோத்திரங்களாக வகைப்படுத்தி யார், யாரோடு திருமண உறவு கொள்ளவேண்டும் என்று எவ்வித நியாயமான தேவையும் இன்றி பார்ப்பனக் கும்பலால் உருவாக்கப்பட்டதாகும்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள உறவுமுறைகள் மனித இனத்தை முறைப்படுத்துவற்கு போதுமானவைகளாக இருக்கும் போது,கோத்திரம் தேவையற்ற ஒன்றாகும்.ரத்தவழி உறவு மற்றும் நெருக்கமான நட்பு என்ற அடிப்படையிலும், அண்ணன்,தங்கை உறவுமுறை என்பதற்கான அடிப்படை ஏதுமற்ற ஒரு பிற்போக்கு பார்ப்பனிய பண்பாடாகும் கோத்திரம்.இதை மீறுவதால் அவ்விடத்தில் வெற்றிடமோ,பாண்பாட்டு சிதைவோ தோன்றி விடுவதில்லை.அதே நேரத்தில் சிதறிக்கிடக்கும் மனிதர்களிடையே நெருக்கமான பிணைப்பையும்,உறவையும் ஏற்படுத்துகிறது என்ற சமூகவிஞ்ஞான அடிப்படையிலும் குறிப்பிட்ட வரம்புக்குள்-நெருங்கிய ரத்த உறவுக்குள்-திருமண உறவு கொள்வதால் ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பை தவிர்க்கும் என்ற உடற்கூறுவிஞ்ஞான அடிப்படையிலும் கோத்திரம் மீறிய காதல் மிகச்சரியான ஒன்றே ஆகும்.
        சாதி,மதம்,குலம்,கோத்திரம் ஆகிய பிற்போக்கு தனங்களுக்கும் முந்தைய காட்டுமிராண்டிதனந்தான் அண்ணன்,தங்கைக்கிடையிலான உறவு.இது மிருக காமவெறி உணர்வே அன்றி காதல் அல்ல.ஆகவே இது மனிதகுல நாகரீகத்தையும்,வளர்ச்சியையும் அழிவுப்பாதையில் தள்ளிவிடுகிறது.இந்த அழிவுப் பண்பாட்டின் கர்த்தாக்கள் தான் ஏகாதிப்பத்தியங்கள்.ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை இந்த அழிவை நம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மனித சமூகத்தின் மேம்பாட்டிலும்,வளர்ச்சியிலும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் ஏகாதிபத்தியத்திற்கும்,பார்ப்பனியத்திற்கும் எதிரான போராட்டத்தில் பங்கு பெறுவது தவிர்க்கவியலாத செயலாகும்.ஆகவே நாகரீக மனிதர்கள் அனைவரும் இவைகளை ஒழிப்பதற்கான  போராட்டங்களில் ஒன்றிணைவோம் வாரீர்!வாரீர்!!

குறிப்பு:11.08.10 அன்று சூறாவளியில் வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீள்பிரசுரம் செய்யப்படிகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்:


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments: